மீமிசல் கல்யாண ராமசாமி கோவில்
கருப்பு உளுந்தை பிரசாதமாகத் தந்து குழந்தை பாக்கியம் அருளும் ராமர் கோவில்
புதுக்கோட்டை-அறந்தாங்கி-ஆவுடையார் கோயில் சாலையில் புதுக்கோட்டையிலிருந்து 68 கி.மீ. தொலைவில், கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ளது மீமிசல் கல்யாண ராமசாமி கோவில். கர்ப்பக் கிரகத்தில் ராமர், சீதை, லட்சுமணன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். அருகில் ஆஞ்சநேயரும் எழுந்தருளியிருப்பது தனிச்சிறப்பாகும்.
இலங்கையில் இருந்த சீதையை மீட்க வானரப்படை சகிதமாக ராம, லட்சுமணன் சென்றனர். அவர்கள் மீமிசல் பகுதிக்கு வந்தனர். அப்பகுதி மக்கள் ராமருக்கு உதவி செய்தனர். அதற்கு கைமாறாக சீதையை மீட்டு வரும் போது, மீமிசலில் திருமணக் கோலத்தில் ராமர், சீதை ஆகியோர் லட்சுமணனுடன் இங்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சனி பிஷ்ட ஆஞ்சநேயர்
சீதையை மீட்கும்போது ராவணனுடன் ஏற்பட்ட போரில் லட்சுமணன் மயக்கமடைந்து விட்டார். அவருக்கு மயக்கம் தெளிவிக்க மூலிகைகள் நிரம்பிய சஞ்சீவிமலையை எடுத்து வர ஆஞ்சநேயர் சென்றார்.
மலையை எடுத்து வரும் வழியில், சனிபகவான் ஆஞ்சநேயரிடம், உன்னை பிடிக்க வேண்டிய கால கட்டம் வந்ததால், உன்னுடைய சரீரத்தை (உடம்பை) பிடிக்க அனுமதிக்க வேண்டும், என்றார்.
தன்னுடைய காலை பிடித்து கொள் என்று ஆஞ்சநேயர் கூறியதால் அவருடைய காலை சனிபகவான் பற்றிக் கொண்டார். இதனால் இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் சனி பகவானின் பார்வை குறையும் என்ற நம்பிக்கையுள்ளது.
தோஷ பரிகாரத் தலம்
மீனவ சமுதாயத்தினர் தங்களுக்கும், தொழிலுக்கும் பங்கம் ஏற்படாமல் இருக்க கல்யாணராமரை வழிபாடு செய்கின்றனர் நாகதோஷம், செவ்வாய் தோஷம், கார்க்கோடகதோஷம், மாங்கல்ய தோஷம், பித்ருக்கள் தோஷம் நீங்க பரிகார பூஜைகள் நடக்கிறது.
இதற்காக பக்தர்கள் அருகிலுள்ள மீமிசல் கடலில் குளித்துவிட்டு, கோயில் வளாகத்தில் உள்ள கல்யாண புஷ்கரணியிலும் குளித்து ஈரத்துடன் கல்யாணராமர் சுவாமியை அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷங்கள் நிவர்த்தியாகிறது.
குழந்தை பாக்கியம் அருளும் தலம்
இங்கு வரும் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு, தானியமான கருப்பு உளுந்தை, முகுந்தமாலா என்று கூறப்படும் மந்திரத்தை உச்சரித்து 90 நாட்களுக்கு தேவையான அளவு பிரசாதமாகத் தருகின்றனர்.
இதனை 90 நாட்கள் சாப்பிடுவதன் மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அத்துடன் ராமர் சன்னதியில் தவழ்ந்த நிலையில் இருக்கும் ஐம்பொன்னால் செய்யப்பட்ட சந்தானகிருஷ்ணன் விக்ரகத்தை, குழந்தை பாக்கியம் கோரி வரும் பக்தர்கள் பூஜை செய்கின்றனர்.
சென்னை வில்லிவாக்கம் சௌமிய தாமோதரப் பெருமாள் கோவில்
மூலவர், உற்சவர் ஆகிய இருவரின் இடுப்பிலும், கயிறு அழுந்திய தடம் பதிந்திருக்கும் கிருஷ்ணன் கோவில்
சென்னை வில்லிவாக்கத்தில் அமைந்துள்ளது சௌமிய தாமோதரப் பெருமாள் கோவில். தாயாரின் திருநாமம் அமிர்தவல்லி. பல நூற்றாண்டுகள் பழமையானது இக்கோவில். மகாவிஷ்ணுவின் 12 சிறப்பு பெயர்களில் (துவாதச நாமம் ) ஒன்று தாமோதரன். அந்தப் பெயரில், பெருமாள் கோவில் அமைந்த ஒரு சில தலங்களில் இத்தலமும் ஒன்று.பக்தர்கள் இத்தலத்தில் பெருமாளை குழந்தை கண்ணனாகவே பார்க்கின்றனர்.
தலபுராணம்
கைலாய மலையில் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அகஸ்திய முனிவர் தென்திசையில் உள்ள இத்தலத்தில் சிவபூஜை செய்து கொண்டிருந்தார்.
துர்வர் மற்றும் அஸ்வமுகி ஆகியோருக்குப் பிறந்த இல்வலன் மற்றும் வாதாபி என்ற இரு அரக்கர்கள், உலகத்தையே துன்புறுத்தி, பல அப்பாவிகளையும் குறிப்பாகப் பிராமணர்களையும் கொன்று குவித்தனர்.
அந்த அரக்கர்களில் ஒருவன் பழத்தின் வடிவத்தை எடுப்பான்; மற்றவன் அப்பழத்தை அவ்வழியே செல்லும் அப்பாவி ஒருவரிடம் கொடுப்பான். அந்த நபர் பழத்தைச் சாப்பிட்டதும், வயிற்றைக் கிழித்துக்கொண்டு அந்த அரக்கன் வெளியே வருவான்.
இந்த அரக்கர்களைத் தனது தவ வலிமையால் அழிக்கும் பொறுப்பு அகஸ்திய முனிவருக்கு அமைந்தது. ஒரு நாள், அந்தச் சகோதரர்கள் அகஸ்தியரிடமும் அதே தந்திரத்தை முயன்றனர். அகஸ்தியர் அந்தப் பழத்தை உண்டார்; பின்னர் "வாதாபி ஜீர்ணோ பவ" (அதாவது, 'வாதாபி செரிமானமாகட்டும்') என்று கூறித் தன் வயிற்றைத் தடவினார்.
வெளியே வர முயன்ற மற்றொரு அரக்கனின் முயற்சி தோல்வியடைந்தது. தன் சகோதரன் செரிமானமாகிவிட்டான் என்றும், அவனை இனி உயிர்ப்பிக்க முடியாது என்றும் அகஸ்திய முனிவர் அந்த அரக்கனிடம் கூறினார்; இதன் மூலம் அவர்களின் வஞ்சகச் செயல் முடிவுக்கு வந்தது.
இங்குதான் அந்த அரக்கர்கள் அழிக்கப்பட்டனர்; அதனால் இப்பகுதி அக்காலத்தில் "கொன்னூர்" என்று அழைக்கப்பட்டது. 'வில்லிவாக்கம்' என்ற பெயர் இதற்குப் பிற்காலத்தில்தான் வந்தது. அகஸ்தியர் அவர்களைத் தனது தவ வலிமையால் கொன்றதால், 'பிரம்மஹத்தி தோஷம்' அவரைப் பற்றிக்கொண்டது.
இத்தலத்தில் சிவபெருமானும் விஷ்ணுவும் தமக்குக் காட்சி அளிக்க வேண்டும் என்று அகஸ்திய முனிவர் விரும்பினார். எனவே, இங்குள்ள சிவன் கோயிலில் அவர் 'அகஸ்தீஸ்வரர்' என்றும், விஷ்ணு கோயிலில் 'சௌம்ய தாமோதரன்' என்றும் அருள்பாலிக்கின்றனர்.
மூலவர், உற்சவர் ஆகிய இருவரின் இடுப்பிலும், கயிறு அழுந்திய தடம்
கோகுலத்தில் கண்ணன் தன் பால்ய வயதில் பல குறும்புகளை செய்தார் . வளர்ப்புத் தாயான யசோதை தன் மகன் கிருஷ்ணனை வெளியில் செல்லாதபடி. அவன் இடுப்பில் கயிற்றால் கட்டி அதை உரலில் கட்டி வைத்தாள். ஆனாலும் கிருஷ்ணன் உரலையும் சேர்த்து இழுத்துச் சென்று, இரண்டு அசுரர்களுக்கு சாப விமோசனம் கொடுத்தான். இவ்வாறு கயிற்றால் கட்டும்போது, கயிறு அழுத்தியதால் கிருஷ்ணனின் வயிற்றில் தழும்பு ஏற்பட்டது. எனவே, கிருஷ்ணன் தாமோதரன் என அழைக்கப்படுகிறான். 'தாமம்' என்றால் கயிறு, 'உதரம்' என்றால் வயிறு என்று பொருள். அழகாக, புன்னகை ததும்பக் காட்சி தருவதால் மூலவர், 'சௌமிய' தாமோதரப் பெருமாள் என அழைக்கப்படுகிறார்.
இத்தலத்தில் மூலவர், உற்சவர் ஆகிய இருவரின் இடுப்பிலும், கயிறு அழுந்திய தடம் இருப்பது ஒரு தனிச்சிறப்பாகும்.
ஊத்துக்காடு காளிங்க நர்த்தன கிருஷ்ணர் கோவில்
பார்ப்பவர்களை வியக்க வைக்கும் காளிங்க நர்த்தன கிருஷ்ணர் விக்கிரகம்
கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருக்கருகாவூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது ஊத்துக்காடு காளிங்க நர்த்தன கிருஷ்ணர் கோவில். இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. மூலவர் வேதநாராயணப் பெருமாள். உற்சவர் காளிங்க நர்த்தன கிருஷ்ணர்.
உற்சவர், காளிங்கன் மீது நர்த்தனமாடும் கோலத்தில் சேவை சாதிக்கிறார். ஐம்பொன்னால் ஆன இந்த உற்சவமூர்த்தி, கோவிலின் பின்புறமுள்ள காளிங்கன் மடு என்ற குளத்தில் கண்டெடுக்கப்பட்டு, இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதாக ஐதீகம்.
இத்தலத்தில் தேவலோகப் பசுவான காமதேனுவின் குழந்தைகளான நந்தினி, பட்டி என்கிற பசுக்களுக்கு, ஸ்ரீகிருஷ்ண பகவான் காளிங்க நர்த்தனத்தை மீண்டும் ஆடிக் காண்பித்தார். இந்த லீலையை ஸ்ரீ நாரத முனிவர் கண்ணாரக் கண்டுள்ளார்.
ஸ்ரீநாரதர் பிரார்த்தித்துக் கொண்டதற்கு இணங்கி, இந்த தலத்தில் ஸ்ரீகிருஷ்ணர் நமக்கெல்லாம் அருள் பாலித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம்.
உற்சவர் காளிங்க நர்த்தன கிருஷ்ணர் சிலை காண்பவர் வியக்கும் வண்ணம் உள்ளது. இந்த விக்கிரகத்தின் உயரம் சுமார் 30 அங்குலம். காளிங்கனின் தலை மீது கிருஷ்ணன் நடனமாடும் கோலத்தில் அமைந்துள்ளது.
இவ்விக்கிரகத்தில், கிருஷ்ணரின் இடது கால் காளிங்கனின் தலையைத் தொடவில்லை. கிருஷ்ணரின் இடது பாதத்திற்கும், காளிங்கனின் சிரசுக்கும் நூல் விட்டு எடுக்கும் அளவு இடைவெளி உள்ளது.
அவரது வலது கால் தூக்கியபடி, நர்த்தனக் கோலத்தில் காட்சி அளிக்கிறார். கிருஷ்ணரின் இடது கை கட்டை விரல் மட்டுமே தொட்டு இருக்கும்படியாக, காளிங்கனின் வாலை பிடித்தபடி காட்சி தருகிறார். இது இரண்டு உருவங்களுக்கிடையில் உள்ள ஒரே இணைப்பாகும்.
மற்ற நான்கு விரல்கள் பாம்பின் வாலைத் தொடவில்லை. மேலும் கட்டைவிரல் - பாம்பின் வாலுக்கும் இடையே உள்ள இணைப்பானது மட்டுமே, முழு சிலைக்கும், சமநிலையை வழங்குகிறது (இந்த சிலையானது இரண்டு பேர் சேர்ந்தால் தான் நகர்த்தக் கூடிய எடை உள்ளது). காளிங்கத்துடனான போரின் விளைவாக கிருஷ்ணரின் காலில் வடுக்கள் இருந்ததற்கான அறிகுறிகள் உள்ளன.
விக்கிரகத்தின் சிறப்பை உணர்த்த மத்திய அரசு வெளியிட்ட தபால் தலை
இந்த விக்கிரகத்தில், பாம்பின் வாலிலும் பிடிமானமில்லை. கால் பாதத்திலும், பாம்பின் தலையிலும் பிடிமானம் இல்லை. இந்த விக்கிரகத்தின் தனிச்சிறப்பினை உணர்த்த, மத்திய அரசாங்கம் 1982-ம் ஆண்டில் மூன்று ருபாய் மதிப்புள்ள தபால் தலையை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.
ரோகிணி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கண்ணன் கோவில்
உற்சவர் கண்ணனுக்கு கொலுசு சார்த்தி வழிபடும் தனிச்சிறப்பு
ரோகிணி நட்சத்திரக்காரர்கள் வணங்கி வழிபட வேண்டிய கோவில் இது. ரோகிணி நட்சத்திர நாளில் இந்தத் தலத்துக்கு வந்து பிரார்த்தித்தால், சகல ஐஸ்வரியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம். ராகு, கேது, சர்ப்ப தோஷம் நீங்குவதற்கான பரிகார தலம் இது.
தங்கள் குழந்தைகள் இசைத் துறையில் வல்லுநராக வேண்டும், பாடுவதில், ஆடுவதில், இசைக் கருவிகளை இசைப்பதில் பேரும் புகழும் பெற வேண்டும் என விரும்பும் பக்தர்கள், தங்கள் குழந்தைகளுடன் வந்து காளிங்க நர்த்தனரை பிரார்த்தித்துச் செல்கிறார்கள்.
பக்தர்கள் உற்சவரின் திருப்பாதத்துக்கு கொலுசு சார்த்தி வழிபடுவது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். ஆவணியின் ரோகிணி நட்சத்திர நன்னாளில், ஸ்ரீகிருஷ்ணரின் ஜெயந்தித் திருநாள் அன்று, சுமார் 800 லிட்டருக்கும் மேல் ஸ்ரீகிருஷ்ணருக்குப் பாலபிஷேகம் நடைபெறுவதைக் காணக் கண் கோடி வேண்டும்.
தமிழ்க்கவி ஊத்துக்காடு வேங்கடசுப்பையர்
கிருஷ்ணரைப் போற்றி பல நூறு பாடல்கள் இயற்றிய தமிழ்க்கவி ஊத்துக்காடு வேங்கடசுப்பையர். (1700 முதல் 1765) வாழ்ந்த தலம் இது. ‘அலைபாயுதே கண்ணா', 'தாயே யசோதா உந்தன் ஆயர் குலத் துதித்த' போன்ற, அவர் இயற்றிய பாடல்கள் இன்றளவும் மிகவும் பிரசித்தம்.
இத்தலத்து கிருஷ்ணனே, வேங்கடகவிக்கு இசையைப் பயிற்றுவித்ததாகச் சொல்வர். இதற்கு ஆதாரமாக வேங்கடகவியின், ஆபோகி ராகத்தில் அமைந்த 'குரு பாதாரவிந்தம் கோமளமு' எனும் பாடலைச் சொல்கிறார்கள்.
அதில் அவர் சொல்லும் கருத்து: 'நான் எந்த புராணங்களையோ, வரலாறுகளையோ படித்ததில்லை; படித்ததாக பாசாங்கும் செய்யவும் இல்லை. எனக்குத் தெரிந்த அனைத்துமே பகவான் ஸ்ரீகிருஷ்ணன் என்னைக் கடைக்கண்ணால் பார்த்து, எனக்கு அளித்த பிச்சை' என்கிறார்.
ஸ்ரீநாரத் முனிவரின் மறு அவதாரமாக ஸ்ரீவேங்கடகவி கருதப்படுகிறார். அவருக்கு இங்கு தனிச் சந்நிதி உள்ளது.
காசிபாளையம் ஸ்ரீ முத்துவேலாயுத சுவாமி கோவில்
மூன்று முகம் கொண்ட அபூர்வ முருகன்
முருகனின் முன்பு மயிலுக்கு பதிலாக சக்திவேல் நிறுவப்பட்டிருக்கும் தலம்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்திலிருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது காசிபாளையம் ஸ்ரீ முத்துவேலாயுத சுவாமி கோவில். குன்றின் மேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு செல்ல படிக்கட்டுகளுடன், சாலை வசதியும் உள்ளது. 700 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.
இக்கோவில் கருவறையில், மூன்று முகம் ஆறு கரங்களுடன் கூடிய முருகப்பெருமான், 'ஸ்ரீ முத்து வேலாயுதசுவாமி' என்கிற திருநாமத்துடன் சுமார் 3 அடி உயர கருங்கல் திருமேனியாக, வள்ளி தெய்வானை சமேதராக எழுந்தருளி இருக்கிறார். இப்படி மூன்று முகம் கொண்ட முருகனை, தமிழ்நாட்டில் வேறு எந்த கோவிலும் நாம் தரிசிக்க முடியாது. இந்த மூன்று முகங்கள் முருகனின் மூன்று சக்திகளான இச்சாசக்தி (விருப்பம்), கிரியாசக்தி (செயல்), மற்றும் ஞானசக்தி (அறிவு) ஆகியவற்றைக் குறிக்கின்றன.
ஸ்ரீ முத்து வேலாயுதசுவாமியின் வலதுபுறம் உள்ள மூன்று கரங்களில் வஜ்ராயுதம், அம்பு, சின்முத்திரையும் இடதுபுறம் உள்ள மூன்று கரங்களில் மான், வில், அபயக்கரத்துடன் பாம்பும், பின்புறம் மயிலும் காணப்படுகிறது. பொதுவாக முருகன் கோவில்களில் கருவறைக்கு முன்பு மயில் அமைந்திருக்கும். ஆனால் இக்கோவிலில், முருகன் முன்பு சக்திவேல் நிறுவப்பட்டுள்ளது. இவ்வேல் சூரபத்மனை வதம் செய்ய அன்னை பார்வதி தேவியால் வழங்கப்பட்டது. இவ்வேலின் ஒருபுறம் சரவணபவ சக்கரமும், மறுபுறம் 'ஓம்' என்ற பிரணவ எழுத்துடன், சூலாயுதமும் வஜ்ஜராயுதமும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த சக்தி வேலை வணங்கினால், செவ்வாய் தோஷம் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பேரங்கியூர் திருமூலநாதர் கோவில்
பத்ம பீடத்தில் எழுந்தருளியிருக்கும் விஷ்ணு துர்க்கையின் அபூர்வ கோலம்
விழுப்புரத்திலிருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் உள்ள பேரங்கியூர் என்னும் கிராமத்தில் மிகவும் தொன்மை வாய்ந்த கோவில் ஒன்று அமைந்துள்ளது. இத்தலத்து இறைவனின் திருநாமம் திருமூலநாதர் . இறைவியின் திருநாமம் அபிராமி அம்மை.
கி.பி. 10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த ஆலயத்தை, பராந்தகச் சோழன் கட்டியதாக கல்வெட்டுக் குறிப்புகள் சொல்கின்றன. இக்கோவிலில் முற்காலச் சோழர்களின் எழில்மிகு சிற்பங்கள் அமைந்துள்ளன. அவை தனிச்சிறப்புடையவை. அதனால், இக்கோவில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை பராமரிப்பின் கீழ், மரபுச் சின்னமாக உள்ளது.
பொதுவாக சிவாலயங்களில் துர்கை அம்மன், மகிஷாசுரன் தலையின் மேல் நின்ற வண்ணம் காட்சி தருவாள். ஆனால் இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் விஷ்ணு துர்க்கை, மகிஷனற்று பத்ம பீடத்தில் நின்றவண்ணம், பின்னிரு கரங்களில் எறிநிலை சக்கரமும், சங்குமேந்தி முன்னிடக்கரம் தொடையிலிருத்தி வலது கரத்தில் அருள் புரியும் கோலத்தில் காட்சி தருகிறாள். இது விஷ்ணு துர்க்கையின் ஓர் அபூர்வ தோற்றமாகும்.
மான், மழு ஏந்திய விநாயகர்
இக்கோவிலின் அர்த்த மண்டப தென்புறக் கோட்டத்தில், தன் திருக்கரங்களில் மான், மழு ஏந்தியபடி தலை ஒருபுறமாக திரும்பிப் பார்க்கும் கோலத்தில் விநாயகர் சிற்பம் காணப்படுகிறது. இவரின் தலைக்கு மேல் குடையும், இருபுறமும் சாமரங்களும் காட்டப்பட்டுள்ளன.
பொதுவாக மான், மழு ஏந்தியபடி சிவபெருமான்தான் காட்சி அளிப்பார். ஆனால் இங்கு மான், மழு ஏந்தியபடி விநாயகர் காட்சியளிப்பது, நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாத காட்சியாகும்.
அதேபோல் தட்சிணாமூர்த்தி பகவான் வலது காலை தொங்க விட்டும், இடது காலை வலது காலின் மீது தூக்கி வைத்தும் , சின்முத்திரை காட்டியபடி, சற்றுச் சாய்வாக அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். இவரது இந்தக் கோலம் தனிச் சிறப்புடையதாகும்.
கருவறையின் மேற்குப் பக்க சுவரில் ஒரு அளவு கோல் பொறிக்கப்பட்டுள்ளது. சுமார் 365 சென்டிமீட்டர் நீளம் கொண்ட இந்த அளவையானது, சோழர்களின் ஆட்சி காலத்தில் நில அளவைக்காகப் பயன்படுத்தி இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
கோவிலில், முதலாம் பராந்தகன், ராஜராஜன், ராஜேந்திரன், ராஜாதி ராஜன், குலோத்துங்கன் ஆகிய சோழ மன்னர்களின் கல்வெட்டுகள் உள்ளன. குறிப்பாக ராஜராஜனின் அண்ணனான ஆதித்த கரிகாலனின் கல்வெட்டும் இங்குள்ளது, அரிய தகவலாகும்.
கங்கைகொண்ட சோழபுரம் கணக்க விநாயகர் கோவில்
அபிஷேகத்தின்போது பச்சை நிறமாக மாறும் விநாயகர்
அரியலூர் மாவட்டத்தில், யுனெஸ்கோ அமைப்பு உலக கலாச்சார சின்னமாக அறிவித்துள்ள கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தின் தென்மேற்கில், ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கணக்க விநாயகர் கோவில்.
கணக்க விநாயகரின் திருமேனி மரகதக் கல்லால் ஆனது. இந்த விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்யும்போது, இவரின் திருமேனி பச்சை நிறமாக மாறுவது தனிச் சிறப்பாகும்.
ராஜேந்திர சோழனுக்கு கோவில் செலவுக் கணக்கை சுட்டிக் காட்டிய விநாயகர்
கங்கை கொண்ட சோழபுரத்தை நிர்மாணம் செய்த போது ராஜேந்திர சோழன், தன் அரண்மனைக்கு முன் பச்சை நிறக் கல்லினால் ஆன விநாயகர் சிலையை நிர்மாணித்து வழிபட்டு வந்தான். இந்த விநாயகரை பக்தர்கள் கனக விநாயகர் என்று போற்றுவர்.
இந்த விநாயகர் இருக்கும் இடத்திலிருந்து வடகிழக்குப் பகுதியில் ராஜேந்திர சோழன் 180 அடி உயரம் கொண்ட பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்டினான். பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்டும் பணியை அமைச்சர் ஒருவர் கவனித்து வந்தார். திருப்பணிகளுக்குத் தேவையான பொன், பொருட்களை அரண்மனைக் கணக்கர் தினமும் அமைச்சரிடம் தருவார்.
அவற்றை அமைச்சர் இந்த கனக விநாயகர் திருமுன் வைத்து வணங்கிய பின்பே ஆலயத் திருப்பணிகளை ஆரம்பிப்பார். இப்படியே இடைவிடாமல் 16 ஆண்டுகள் அமைச்சர் தலைமையில் திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.
ஒரு நாள் ராஜேந்திர சோழன், 'பதினாறு ஆண்டுகளாக கட்டிக்கொண்டிருக்கும் இந்த ஆலயத்திற்கு இதுவரை எவ்வளவு பொருள் செலவாகியிருக்கும் என்று நாளைக் காலையில் கூறுங்கள்' என்று அமைச்சரிடம் கணக்கு சொல்லும்படி கேட்டான். திடீர் என்று மன்னன் கோயில் கட்டும் பணிக்கு ஆன செலவைக் கேட்டதில் ஒன்றும் புரியாமல் தவித்தார் அமைச்சர்.
அவரிடம் சரியான கணக்கு இல்லாததால் அரண்மனை வாசலில் முன் காட்சி தந்த விநாயகரிடம் 'எந்தக் கணக்கை சொல்வது? என்ன சொல்வது?' என்றும், இதற்குத் தகுந்த பதில் கூறுமாறும் விநாயகரிடம் வேண்டினார்.
அன்றிரவு அமைச்சர் கனவில் தோன்றிய விநாயகர், 'கவலை வேண்டாம். எத்து நூல் எட்டு லட்சம் பொன்' என்று சொல்லிவிட்டு மறைந்தார். மறு நாள் காலை அரசவைக்கு வந்து அமைச்சர் ஓலைச்சுவடி கட்டினைப் பிரித்து எத்து நூல் எட்டு லட்சம் பொன் என்று ஓலைச் சுவடியில் எழுதியதை கணக்காகச் சொன்னார்.
'ஓ! எத்து நூல் எட்டு லட்சம் பொன் ஆனதா? கோயில் கட்டுவதற்கு, சரியான அளவு பார்ப்பதற்கு மட்டும் வாங்கிய நூல், அதாவது எத்து நூல் மட்டுமே எட்டு லட்சம் பொன் என்றால், கோயில் மிகவும் சிறந்த முறையில்தான் உருவாகிறது' என்று மகிழ்ந்தான் சோழன். 'அமைச்சரே, எத்து நூல் மட்டும் எட்டு லட்சம் பொன் என்று எப்படி கணக்கிட்டீர்கள்' என்று தன் சந்தேகத்துக்கு பதில் கேட்டான்.
அமைச்சர் உண்மையை சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டார். 'மன்னா! உண்மையில் கோயில் கட்டும் பணியின் கணக்கை என்னால் சரியாகப் பராமரிக்க முடியவில்லை. கோயில் கட்டும் பணிக்கு காசாளரிடம் பொருள் வாங்கியதும் அந்தப் பொற்காசுகளை அரண்மனை வாசல் முன் அருள்புரியும் விநாயகர் முன் சமர்பித்து வணங்கிய பின் எடுத்துச் சென்று பணிகளை கவனிப்பேன்.
தாங்கள் கணக்கைக் கேட்டதும் அரண்மனை வாயிலில் அருள்புரியும் நமது கனக விநாயகரை வேண்டினேன். அவர்தான் நேற்று இரவு என் கனவில், எத்து நூல் எட்டு லட்சம் பொன் என்று கணக்கு சொன்னார்' என்றார். அமைச்சர் உண்மையை சொன்னதும் மன்னருக்கு மகிழ்ச்சி. விநாயகப் பெருமான் சொன்னதால் கணக்கு சரியாகத்தான் இருக்கும் என்று விநாயகருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடுகள் செய்தான்.
அன்றிலிருந்து இந்தக் கனக விநாயகர், கணக்கு விநாயகர் என்று அழைக்கப்பட்டார். மேலும் இந்த அற்புத விநாயகரை பிற்காலத்தில் எவரேனும் வேறு இடத்திற்கு மாற்றிவிடக்கூடாது என்று நினைத்த மன்னன், 4 அடி உயரம், 3 அடி அகலமுடைய இந்த விநாயகரின் சன்னிதி முன் மிகச்சிறிய நுழைவு வாசலைக் கட்டினான்.
கோயிலை இடித்து அகற்றினால்தான் இந்த சிலையை அகற்ற முடியும். அந்நியர் படையெடுப்பு நடந்தபோது, பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கும் இந்த கனக விநாயகர் ஆலயத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதற்கு இந்த கனக விநாயகரின் அருளே காரணமாகும்.
எத்து நூல்
அது என்ன எத்து நூல்? எத்து நூல் என்பது மரத்திலும், சுவரிலும் வளைவு வராமல் இருக்க, நேராக கட்டுமானப்பணி திகழ்வதற்காகப் பயன்படுத்தும் நூலை எத்து நூல் என்பார்கள். எத்து நூல் எண்பது லட்சம் பொன் என்றால் கல், மரம், மணல், சுண்ணாம்பு எவ்வளவு வாங்கப்பட்டிருக்கும் என்று அரசரையே யோசிக்க வைக்கும் கணக்கை சொன்னதால் இந்த பிள்ளையார் கணக்குப் பிள்ளையார் ஆனார்.
புதன் தோஷ நிவர்த்தி தலம்
நவக்கிரகங்களில் புதனுக்கு உரிய ரத்தினமாக மரகதம் கருதப்படுகிறது. ஞான காரக கேதுவின் அதிதேவதையான விநாயகர் இங்கு மரகத மூரத்தியாக விளங்குவதால், புதனால் ஏற்படும் தோஷங்களை நீக்குபவராக விளங்குகிறார்.
புதிதாக ஆலயம் கட்டும் முயற்சியில் ஈடுபடுவோர், ஏற்கனவே உள்ள ஆலயத்தை புதுப்பிக்க நினைப்போர், சொந்தமாக வீடு மற்றும் கட்டிடம் கட்டுபவர்கள் புதிதாக வணிகம் தொடங்குவோர், ஏற்கனவே செய்துவரும் வணிகத்தில் சரிவை சந்திப்பவர்கள், கல்வியில் மேன்மை பெற விரும்புபவர்கள், இந்த விநாயகரை வழிபட்டு பலன் பெறலாம்.
பொன்னூர் ஆபத்சகாயேஸ்வரர் கோவில்
காதுகளில் பெரிய கம்மலுடன் காட்சியளிக்கும் முருகனின் அபூர்வ தோற்றம்
மயிலாடுதுறையில் இருந்து (மயிலாடுதுறை -மணல்மேடு சாலையில்) 8 கி.மீ. தொலைவில், காவிரி நதியின் வடகரையில் அமைந்துள்ள தேவார தலம் பொன்னூர் ஆபத்சகாயேஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. முற்காலத்தில் இத்தலத்தின் பெயர் திருஅன்னியூர். சூரிய தோஷ பரிகாரங்களுக்கு பெயர் பெற்றது இந்தத் தலம்.
இக்கோவிலில் முருகப் பெருமான் வள்ளி, தெய்வயானை சமேதராக இரண்டு கரங்களுடன் அழகாகக் காட்சி தருகிறார். இவரது வடிவமானது திருப்பரங்குன்றத்து முருகனை போல் அமைந்திருக்கின்றது.இவரது காதுகளில் வட்ட வடிவமான பெரிய அளவில் கம்மலுடன் (தோடு) தோற்றமளிப்பது வித்தியாசமான தரிசனம் ஆகும். இப்படிப்பட்ட முருகப்பெருமானின் தோற்றத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
திருவார்ப்பு கிருஷ்ணன் கோவில்
தினம் இரண்டு நிமிடம் மட்டுமே மூடப்படும் கிருஷ்ணர் கோவில்
கேரளா மாநிலம் கோட்டயத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள திருவார்ப்பு எனும் ஊரில் அமைந்துள்ள கிருஷ்ணர் கோவில், தினமும் 23 மணி நேரம் 58 நிமிடங்கள் திறந்து இருக்கும். அதாவது இந்த கோயில் 2 நிமிடங்கள் மட்டுமே மூடப்படுகின்றது என்பது ஒரு அதிசயமாகும்.
எப்பொழுதும் பசியுடன் இருக்கும் கிருஷ்ணர்
இங்கு எழுந்தருளியிருக்கும் கிருஷ்ணர் எப்போதும் பசித்து இருப்பதால், ஒவ்வொரு நாளும் இரண்டு நிமிடங்கள் தவிர இந்த கோவில் மூடப்படுவதில்லை. கம்சனைக் கொன்ற பிறகு கிருஷ்ணர் மிக உஷ்ணமாக இருந்தார். அந்த நிலையில் இருந்த கிருஷ்ணரே, இக்கோவிலில் எழுந்து அருளி இருக்கிறார் என்று மக்கள் நம்புகின்றனர். அபிஷேகம் முடிந்தபின் மூலவரின் தலையை முதலில் உலர்த்தியபின், நைவேத்திம் அவருக்குப் படைக்கப்படும், பின்னர் அவருடைய உடல் உலர்த்தப்படும்.
மற்றொரு சிறப்பாக இந்த கோயில் அர்ச்சகர் கோயில் நடை சாற்றும் வேலையில் கையில் கோடாரி ஏந்தியபடி இருப்பார். கோயில் நடை மூடப்பட்டதும். தந்திரியிடம் கோடாரி கொடுக்கப்படுகிறது. கிருஷ்ணர் பசியை தாங்கிக் கொள்ள மாட்டார் என நம்பப்படுவதால், ஒரு வேளை இரண்டு நிமிடத்திற்குப் பிறகு கோயில் கதவு திறப்பதில் ஏதேனும் தடங்கல் வந்தால், கதவை உடைப்பதற்காக அந்த கோடாரி பயன்படுத்தலாம் என்பதற்காக அந்த கோடாரி தந்திரியிடம் கொடுக்கப்படுகிறது.
கிரகணத்தின் போதும் மூடப்படாத கோவில்
இந்த கோயிலின் இன்னொரு தனிச்சிறப்பு என்னவென்றால், கிரகணத்தின் போது கூட கோயில் மூடப்படுவதில்லை. அப்படி மூடினால் இந்தக் கிருஷ்ணர் பசி தாங்க மாட்டார் என்று மக்கள் நம்புகிறார்கள். ஒருமுறை கோயில் கிரகணத்தின் போது மூடப்பட்டது. கதவைத் திறந்தபோது ஆண்டவரின் இடுப்புப் பட்டை வீழ்ச்சியடைந்ததைக் கண்டார்கள். அந்த சமயத்தில் வந்த ஸ்ரீஆதிசங்கராச்சாரியார், கிருஷ்ணர் மிகவும் பசியாக இருப்பதால்தான் அவ்வாறு நடந்தது என்று சொன்னார். அப்போதிருந்து கிரகணத்தின் போதும், இக்கோவில் மூடப்படுவதில்லை. கிருஷ்ணா தூங்கும் நேரம் தினமும் இரவு 11.58 மணி முதல் 12 மணி வரை, வெறும் 2 நிமிடங்கள்தான்.
அதேபோல், இந்த கோவிலில் பிரசாதம் பெறாமல் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை. தினமும் இரவு 11.58 மணிக்கு பூசாரி சத்தமாக, "இங்கு யாராவது பசியாக உள்ளீர்களா?" என அழைப்பார். மற்றொரு முக்கிய விஷயம், நீங்கள் இக்கோவில் பிரசாதம் சுவைத்தால், அதன்பிறகு நீங்கள் பசியால் வாட மாட்டீர்கள். உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு உணவுப் பிரச்சனை இருக்காதாம்.
புள்ளமங்கை ஆலந்துறைநாதர்(பிரம்மபுரீஸ்வரர்) கோவில்
நுணுக்கமான, அழகான விரல் அளவு சிற்பங்கள் நிறைந்த கோவில்
மிக நேர்த்தியாகவும், நுட்பமாகவும் செதுக்கப்பட்ட சிற்பங்கள்
தஞ்சாவூர் - கும்பகோணம் நெடுஞ்சாலையில், தஞ்சாவூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் புள்ளமங்கை. இறைவன் திருநாமம் ஆலந்துறைநாதர்(பிரம்மபுரீஸ்வரர்). இறைவி அல்லியங்கோதை.
இக்கோவில் அக்காலத்திய கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக்கு ஒரு எடுத்துக் காட்டாகும். இக்கோவிலிலுள்ள பெரும்பாலான சிற்பங்கள் ஒரு அடி அளவுக்கு உள்பட்டு, மிக நுட்பமாகச் செதுக்கப்பட்டுள்ளன. மேலும், இச்சுவர்களில் தூண் போன்ற வடிவில் செதுக்கப்பட்டு, கையடக்க அளவில் பூவேலைப்பாடுகளும், ஆடல் மகளிர் சிற்பங்களும் நிறைய இடம்பெற்றுள்ளன. தூண் சிற்பங்கள், ஆடல் அணங்குகளின் சிற்பங்கள், இராமாயணச் சிற்பங்கள் போன்றவற்றைக் கொண்டு ஒரு கலைப்பெட்டகமாக, இக்கோவில் விளங்குகின்றது. நவீன தொழில்நுட்பங்கள் இல்லாத அக்காலத்தில் இவ்வளவு சிறிய அளவில் மிக நேர்த்தியாகவும், நுட்பமாகவும் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருப்பது வரலாற்று ஆய்வாளர்களிடையே மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் இக்கோவிலை பார்க்கத் தவறுவதில்லை.
கருவறை கோஷ்டத்தில் சீதை, இலக்குவனனுடன் ராமர் வனவாசம் ஏற்று படகில் கங்கையைக் கடந்து செல்லல் தொடங்கி ஜடாயு வதம் போன்ற ராமாயணக்காட்சிகள், கஜசம்ஹாரமூர்த்தி, காளியின் மகிஷ வதம், காலசம்ஹாரமூர்த்தி, வராகமூர்த்தி பூமாதேவியை மீட்டு வரல், ஆதிசேடன் மீது அரிதுயில் கொள்ளும் அனந்த சயனமூர்த்தி போன்ற பல நுட்பமான சிறிய அளவிலான சிற்பங்கள் உள்ளன.
உடுக்கை இடுப்புடையாள் என்பது போல பெண் சிற்பங்களில் இடுப்பு பகுதி உடுக்கை வடிவில் மிக நுணுக்கமாகச் செதுக்கப்பட்டுள்ளன. இதேபோல, கை, கால், கண் உள்ளிட்டவை செதுக்கப்பட்டுள்ள விதமும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
கோவில் திருச்சுற்றின் வலது புறத்திலுள்ள தட்சிணாமூர்த்தி சிலையின் மேலே கோபுரத்தில் பிச்சாடனர் சிற்பம் உள்ளது. இதில், காலில் காலணி, கையில் திருவோடு, கழுத்தணிகள், கையணிகள், காதுகளில் வளையங்கள் உள்ளிட்டவற்றுடன் நடக்கும் பாவனையில் நுட்பமாகச் செதுக்கப்பட்டுள்ளன.
அர்த்த மண்டபத்தில் உள்ள நான்கு தூண்களிலும் வேலைப்பாடுகள் வித்தியாசமாக உள்ளன. தூண்களிலும், சுற்றுச் சுவரிலும் ஏராளமான நடன மங்கை சிற்பங்கள் மிக நுணுக்கமாக ஆள்காட்டி விரல் அளவில் செதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிற்பங்களும் ஒரு காரணத்தைக் குறிப்பிடுகின்றது.
அர்த்த மண்டப புறச்சுவர்களின் தெற்குப்பகுதியில் பூதகணங்கள் சூழ காட்சியளிக்கும் கணபதி, வடக்குப்பகுதியில் மகிஷாமர்த்தினி உள்ளனர். விமான முதல் தள கோஷ்டங்களில் சிவனின் அழகு வடிவங்கள் அனைவரையும் ஈர்க்கின்றன. இவ்வாலய விமானத்தில் உள்ள ஆண் சிற்பத்தை முன் மாதிரியாகக்கொண்டே ஓவியர் மணியம், கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலின் கதாநாயகனான வந்தியத்தேவனை வரைந்தார் என்று கருதுகின்றனர்.
திருமாணிகுழி வாமனபுரீசுவரர் கோவில்
வாமன அவதாரத்தின் போது ஏற்பட்ட தோஷத்தை நீக்க, மகாவிஷ்ணு வழிபட்ட தலம்
எந்நேரமும் திரை போடப்பட்டிருக்கும் மூலவர் சன்னதி
சில விநாடிகள் மட்டுமே தரிசனம் தரும் வாமனபுரீசுவரர்
கடலூரிலிருந்து பண்ருட்டி செல்லும் வழியில் 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் திருமாணிகுழி. இறைவன் திருநாமம் வாமனபுரீசுவரர். இறைவியின் திருநாமம் அம்புஜாட்சி, மாணிக்கவல்லி.
மகாவிஷ்ணு பிரம்மசாரியாக வந்து மாகாபலியிடம் மூன்றடி மண் கேட்டு அவனையழித்தார். மகாபலியை தர்மத்திற்காக அழித்தாலும் அதற்குரிய பழி நீங்க, மகாவிஷ்ணு இங்கு வந்து சிவபெருமானை, ஒரு குழி போன்ற இடத்தில் அமர்ந்து வழிபட்டார் ஆகையால் இக்கோவில் மாணிகுழி என்று பெயர் பெற்றது. (மாணி என்றால் பிரம்மசாரி).
இந்த ஆலயத்தின் ஒரு சிறப்பம்சம், இங்கு மூலவர் வாமனபுரீசுவரரை நாம் நேரடியாக தரிசிப்பது இயலாது. ஏனெனில் எந்நேரமும் மூலவர் சன்னதியில் திரை போடப்பட்டிருக்கும். இறைவனும், இறைவியும் எப்போதும் சிவசக்தியாக சேர்ந்திருக்கும் தலமாக இது கருதப்படுவதால், அவர்களை தொந்தரவு செய்யாமல் இருக்கும் பொருட்டு திரையிடப்பட்டிருக்கிறது. இறைவன் எப்போதும் இறைவியுடன் இருப்பதாகச் சொல்லப்படுவதால், இத்தலத்தில் அர்த்தசாம பள்ளியறை வழிபாடு என்பது தனியே கிடையாது.
இங்கு இறைவனும் இறைவியும் இணைந்து கர்ப்பகிரகத்தில் அருள்புரிகிறார்கள். ஏனைய தலங்களில் போல் இங்கு இறைவனை ஆலயம் திறந்து இருக்கும்போது எல்லாம் தரிசனம் செய்ய முடியாது. பூஜை முடிந்தவுடன் சில விநாடிகள் மட்டுமே இறைவனை தரிசனம் செய்ய முடியும். இறைவனும் இறைவியும் கருவறையில் இணைந்து இருப்பதால், அவர்களுக்கு காவல் புரிய ருத்ரர்களில் ஒருவரான பீமருத்ரர், இறைவன் இறைவிக்கு முன் திரைசீலையாக உள்ளார். எனவே அவருக்கு தான் முதல் அர்ச்சனை, தீபாரதனை ஆகியவை நடைபெறுகின்றன.
திருக்காட்கரை காட்கரையப்பன் கோவில்
ஓணம் பண்டிகை முதன் முதலில் கொண்டாடப்பட்ட கோவில்
பெருமாளின் வாமன அவதாரத்திற்கு என்று அமைந்த வெகு சில கோவில்களில் இத்தலமும் ஒன்று
எர்ணாகுளத்தில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள மலையாள திவ்யதேசம் திருக்காக்கரை திருக்காட்கரையப்பன் கோவில் ஆகும். இக்கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் 67-வது திவ்யதேசம் ஆகும். பெருமாளின் தசாவதாரங்களில் ஒன்றான வாமன மூர்த்திக்கென்று வெகு சில கோவில்களே உள்ளன. அந்த வெகுசில கோவில்களில் ஒன்றுதான் திருக்காக்கரை திருக்காட்கரையப்பன் கோவில். இந்தியாவிலேயே வாமனருக்கு பிரத்யேகமாகக் கட்டப்பட்ட மிகவும் பழமையான கோவில்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது.
பெருமாள் தன் திருவடியால் உலகைத் தாவி அளந்த இடம் என்ற பொருள்பட திரு-கால்-கரை என்று இத்தலம் அழைக்கப்படுகிறது. இந்தத் தலத்தில் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்கிறார் வாமன அவதார பெருமாள். இவருக்குக் கதாயுதம் கிடையாது. தாயார் ஸ்ரீபெருஞ்செல்வநாயகி. தாயாருக்குத் தனிச் சன்னதி கிடையாது.
ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதின் பின்னணியில் உள்ள புராணம்
பெருமாளின் தசாவதாரத்தில் ஐந்தாவது அவதாரமான வாமனர் பிறந்த நாளான, ஆவணி மாத துவாதசியில் வரும் திருவோண நட்சத்திரம் அமைந்த நாள், ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் மகாபலிச்சக்கரவர்த்தி, இந்த நாளன்று திருக்காக்கரையில் உள்ள வாமனர் கோவிலில் அவரின் பிறப்பைக் கொண்டாட, பாதாள உலகத்திலிருந்து பூமிக்கு வருவதாக தலபுராணம் கூறுகின்றது.
மகாபலிச்சக்கரவர்த்தி என்பவன் கேட்டவர்க்கு கேட்டதை எல்லாம் கொடுப்பவன். இவன் அசுர குலத்தில் பிறந்தாலும் மிகவும் நல்லவன். ஆனால் தர்மம் செய்வதில் தன்னை விட தலை சிறந்தவர் யாருமில்லை என்ற அகந்தை அவனிடம் ஏற்பட்டு விட்டது. இதை உணர்ந்த மகாவிஷ்ணு, அவன் அகந்தையை வளரவிடாமல் தடுக்கவே குள்ள வடிவெடுத்து வந்தார். மகாபலியிடம் மூன்றடி நிலம் கேட்டார். தாங்கள் குள்ளமானவர். உங்கள் காலுக்கு மூன்றடி நிலம் கேட்கிறீர்களே. அது எதற்கும் பயன்படாதே, என்றான் மகாபலி. அவனது குல குரு சுக்ராச்சாரியார், வந்திருப்பது மகாவிஷ்ணு என்பதை அறிந்து தானம் கொடுப்பதை தடுத்தார். கேட்டவர்க்கு இல்லை என்று சொன்னால், இதுவரை செய்த தானம் பலனில்லாமல் போய்விடும் என நினைத்தான் மகாபலி. எனவே சம்மதித்தான். பெருமாள் விஸ்வரூபம் எடுத்தார். ஓரடியால் பூமியையும், இன்னொரு அடியால் ஆகாயத்தையும் அளந்த பெருமாள், மூன்றாவது அடிக்கு நிலம் எங்கே? என கேட்டார். அகந்தை கொண்டிருந்த மகாபலி பணிந்து, தலை வணங்கி நின்றான். பகவானே! இதோ என் தலை. இதைத்தவிர என்னிடம் வேறெதுவும் இல்லை என்றான். பெருமாள் அவனை அப்படியே பூமியில் அழுத்தி, தன்னோடு இணைத்து கொண்டார்.
வாமனர் மகாபலியைப் பாதாளத்திற்கு அனுப்புவதற்கு முன், மகாபலி ஒரு வரம் கேட்டான். வருடத்துக்கு ஒருமுறை தனது தேசத்து மக்களைச் சந்திப்பதற்கு அருள்செய்யுமாறு வேண்டிக்கொண்டான். விஷ்ணு பகவானும் ஏற்றுக்கொண்டார். பகவான் மகாபலிக்கு அருள்புரிந்தது ஆவணி மாதம் திருவோண நடசத்திரத் திருநாளில். இதை நினைவுகூரும் வகையில் கேரளாவில் ஓணம் பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மகாபலியும் தான் வேண்டிக் கொண்டபடி இந்த விழாவில் கலந்துகொண்டு குடிமக்களை வாழ்த்துவதாக ஐதீகம்.
இக்கோவிலின் நுழைவு வாயிலில் மகாபலியின் ஆஸ்தானம் இருந்துள்ளது. இந்த இடத்தில் தற்போது ஒரு சிம்மாசனம் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இவ்விடத்தில் விளக்கேற்றி மகாபலியை வழிபடுகின்றனர்.கேரளபாணியில் ஓடு வேய்ந்த வட்ட வடிவ கோயில் இது. முகப்பில் உள்ள மண்டபத்தில் பெருமாள் வாமனராக, குள்ள வடிவம் எடுத்து வரும் காட்சி மரத்தில் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. மூலஸ்தானத்தில் வாமன மூர்த்தி அருள்பாலிக்கிறார். இவரை மக்கள் திருக்காக்கரை அப்பன் என செல்லப் பெயரிட்டு அழைக்கிறார்கள்.
வாமனன் அவதரித்த நாளான ஆவணி-வளர்பிறை-துவாதசி-திருவோண நாளன்று, வாமனனை வழிபட்டால், அனைத்து வித நலன்களும் பெறலாம்.
மானூர் பெரியாவுடையார் கோவில்
முகம் வெள்ளை நிறத்திலும், உடல் கருப்பு நிறத்திலும் காட்சியளிக்கும் அபூர்வ நடராஜர்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மானூர் கிராமம். இந்த கிராமத்தில் அமைந்துள்ளது பெரியாவுடையார் கோவில். 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது இந்த கோவில்.
இத்தலத்து மூலவர் பெரியாவுடையாருக்கு பிரகதீஸ்வரர் என்ற திருநாமும் உண்டு. இறைவியின் திருநாமம் பெரியநாயகி. இத்தலத்து இறைவனை வழிபட்டால் ஏழு ஜன்மங்களின் பாவங்கள் கூட விலகும் என்பது ஐதீகம்.
கோவில் வரலாறு
விராட மன்னன் மான் வேட்டையாடச் சென்றபோது, இறைவன் அழகிய மான் வடிவில் தோன்றி மறைந்து புதருக்குள் சிவலிங்கமாக மாறினாராம்.
மன்னன் எய்த அம்பு லிங்கத்தின் மீதுபட்டு இரத்தம் கசிந்ததாகவும், பின்னர் மன்னன் தவறை உணர்ந்து மன்னிப்புப் கோரி இக்கோவிலைக் கட்டியதாகவும் வரலாறு கூறுகிறது. அபிஷேகத்தின் போது லிங்கத்தில் அம்பு பட்ட தழும்பு தெரியும் என்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.
இறைவன் மானாக (மான் + ஊர் = மானூர்) உருவெடுத்ததால் இப்பகுதி மானூர் எனப் பெயர் பெற்றது.
இறைவன், இறைவிக்கான பெயர் காரணம்
கைலாயத்தில் ஞானப்பழம் முருகனுக்கு கிடைக்காததால், கோபம் கொண்ட முருகன் பழனி மலைக்கு வந்து விடுகிறார். முருகனைத் தேடிக்கொண்டு சிவனும் சக்தியும் பூலோகத்தில் பழனி மலைக்கு அருகில் வந்து இறங்குகிறார்கள். அப்படி இறங்கிய இடத்தின் இயற்கை எழிலை கண்ட பரமேஸ்வரன் அங்கேயே வீற்றிருந்து அருள்பாலிக்க நினைத்துவிட்டார்.
ஆனால் உமையவளோ தன் மகன் முருகனை காண பழனிக்கே செல்ல அனுமதிக்கும்படி சிவனிடம் வேண்ட சிவனும் சம்மதிக்கிறார். பிரிய மனமில்லாமல் நாயகி விடைபெற்றதால் அன்னை பிரியா நாயகி என்று பெயர் பெற்றார்.
விடை கொடுக்க மனமில்லாமல் சிவன் விடை கொடுத்ததால், இறைவன் பிரியா விடையார் என்று அழைக்கப்பட்டார். இதுவே காலப்போக்கில் மருவி பெரியாவுடையார், பெரியநாயகி என்று ஆனது.
முகம் வெள்ளை நிறத்திலும், உடல் கருப்பு நிறத்திலும் காட்சியளிக்கும் அபூர்வ நடராஜர்
இக்கோவிலில் எழுந்தருளியுள்ள நடராஜர் மிகவும் சிறப்பு வாய்ந்தவராக விளங்குகின்றார். எப்படியென்றால், அவரது உடல் மட்டும் முழுக்க கருப்பு நிறத்திலும், முகம் மட்டும் வெள்ளை வண்ணத்திலும் கூடிய நிலையில் கல்லால் அமைந்திருக்கின்றது.
இப்படி இருவேறு வண்ண நிறத்தில் காட்சியளிக்கும் நடராஜர் சிலையை வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாது. இந்த நடராஜரின் அருகில் சிவகாமி அம்பாளும் கிடையாது. இவர் தனித்தே அருள்பாலிக்கிறார்.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில்
விநாயகர் சதுர்த்தி திருவிழா
ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே விநாயகருக்கு செய்யப்படும் சந்தனகாப்பு அலங்காரம்
முக்குறுணி கொழுக்கட்டை படையல்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்கோவில் . இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா, வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றது.
பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் ஒன்பதாம் நாள் தேர் திருவிழா நடைபெறுகின்றது. 10-ஆம் நாள் விநாயகர் சதுர்த்தி அன்று கற்பக விநாயகருக்கு ராட்சதக் கொழுக்கட்டை
படைக்கப்படுகின்றது. விழா நாட்களில் தினமும் காலையில் கேடகத்திலும், மாலையில் சிம்மம், பூதம், கமலம், ரிஷபம், மயில், குதிரை உள்ளிட்ட வாகனங்களிலும் விநாயகர் எழுந்தருளி, வீதியுலா நடைபெறும்.
ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே செய்யப்படும் சந்தனகாப்பு அலங்காரம்
விநாயகருக்கு தேர்த்திருவிழா நடைபெறும் ஒரு சில கோவில்களில் பிள்ளையார்பட்டியும் ஒன்று. விநாயகருக்கும், சண்டிகேசுவரருக்குமாக இரண்டு தேர்கள் இழுக்கப்படும்
பிள்ளையார் தேரில் இரண்டு வடங்களில் ஒன்றை பெண்களும், மற்றொரு வடத்தை ஆண்களும் இழுத்துச் செய்வார்கள். சண்டிகேசுவரருக்கான தேரை பெண்களும் குழந்தைகளும் மட்டுமே இழுத்துச் செல்வார்கள்.
தேரோடும் வீதியில் வேண்டுதல் நிமித்தமாக பக்தர்கள் அங்கப் பிரதட்சணம் செய்வார்கள். தேரோட்டம் நடைபெறும் அதே நேரத்தில் மூலவர் கற்பக விநாயகருக்கு சுமார் 80 கிலோ சந்தனத்தால் காப்பு சாத்தப்படும்.
ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே இந்த சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுவதால், அக்காட்சியை காண பக்தர்கள் கூட்டம் அதிகமிருக்கும். மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை சந்தனகாப்பு அலங்கார தரிசனம் நிகழ்ச்சி நடைபெறும்.
முக்குறுணி கொழுக்கட்டை படையல்
விநாயகர் சதுர்த்தியன்று உச்சிகால பூஜையின் போது விநாயகருக்கு முக்குறுணி அரிசியால் செய்யப்பட்ட பெரிய அளவிலான ராட்சத கொழுக்கட்டை தயாரித்து, நைவேத்யம் செய்வார்கள்.
18 படி அரிசியை மாவாக்கி, எள் 2 படி, கடலைப்பருப்பு 6 படி, தேங்காய் 50, பசுநெய் 1 படி, ஏலம் 100 கிராம், வெல்லம் 40 கிலோ ஆகியவற்றை சேர்த்து ஒரே கலவையாக்கி, உருண்டை சேர்த்து அதனை துணியால் கட்டி, மடப்பள்ளியில் அன்னக் கூடையில் வைப்பார்கள்.
அன்னக் கூடையில் வைத்து அந்தப் பெரிய உருண்டையை கொதிக்கும் தண்ணீர் உள்ள அண்டாவின் நடுவே தொங்கவிட்டுப் பல மணி நேரம் தொடர்ச்சியாக வேகவைப்பார்கள்.
பின்னர் இந்த வேக வைத்த கொழுக்கட்டையை, உலக்கை போன்ற கம்பில் கட்டி பலர் சேர்ந்து காவடி போல தூக்கி வந்து, மூலவருக்கு உச்சிகால பூஜையில் நிவேதனம் செய்வார்கள். மறுநாள் கொழுக்கட்டை சூடு ஆறிய பின்னர், நகரத்தார். ஊரார்கள் மற்றும் பணியாளர்களுக்கு பிரித்து பிரசாதமாகக் கொடுப்பர்கள்.
பொன்னூர் ஆபத்சகாயேஸ்வரர் கோவில்
திருமணத் தடை நீங்க ஆவணி மூலம் அன்று வளையல் கட்டி அம்பாளுக்கு பிரார்த்தனை
இரண்டு தட்சிணாமூர்த்திகள் எழுந்தருளி உள்ள தேவார தலம்
மயிலாடுதுறையில் இருந்து (மயிலாடுதுறை -மணல்மேடு சாலையில்) 8 கி.மீ. தொலைவில், காவிரி நதியின் வடகரையில் அமைந்துள்ள தேவார தலம் பொன்னூர் ஆபத்சகாயேஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. முற்காலத்தில் இத்தலத்தின் பெயர் திருஅன்னியூர்.
ரதி வழிபட்டதால் ரதீசுவரர் என்றும், பாண்டவர்கள் வழிபட்டுள்ளதால் பாண்டதவேசுவரர் என்றும், அக்னிதேவன் வழிபட்டுள்ளதால் அக்னீஸ்வரர் என்றும் மற்ற பெயர்களும் இத்தல இறைவனுக்கு உண்டு.
தீரா வெண்குஷ்டத்தால் அவதியுற்ற ஹரிச்சந்திர மகாராஜா இத்தலத்தில் நீராடி, இறைவனின் கட்டளைப்படி வைகாசி விசாக நன்னாளில் தயிர் சாதம் நிவேதனம் செய்து, ஆபத்சகாயரை வணங்கி, வழிபட்டு விமோசனம் பெற்றுள்ளார். வெண்குஷ்ட நோய் உள்ளவர்கள் இத்தலம் வந்து வழிபட நிவாரணம் கிடைக்கும்.
ஆடிப்பூரம், ஆவணி மூலம் நட்சத்திரத்தன்று திருமணத்தடை உள்ள பெண்கள், பெரியநாயகி அம்பாளுக்கு வளையல் கட்டி பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். இதனால், விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
ரதிதேவி சிவனால் எரிக்கப்பட்ட தன் கணவன் மீண்டும் உயிர் பெற்று வரவேண்டும் என்பதற்காக இத்தலத்தில் சிவனை எண்ணி தவமிருந்து வழிபட்டாள். மன்மதன் மீண்டும் உயிர்பெற்ற பிறகு இங்கு ரதியுடன் சேர்ந்து வழிபட்டான். எனவே பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்க, மனக்குறைகள் நீங்க இத்தலத்தில் வேண்டிக் கொள்கிறார்கள்.
இரண்டு தட்சிணாமூர்த்திகள் எழுந்தருளி உள்ள தேவார தலம்
பொதுவாக சிவாலயங்களில் கருவறை சுற்றுச்சுவரில் ஒரு தட்சிணாமூர்த்தி எழுந்தருளி இருப்பார். ஆனால் இக்கோவிலில் அருகருகே இரண்டு தட்சிணாமூர்த்திகள் எழுந்தருளி இருப்பது ஒரு தனிச்சிறப்பாகும்.
இதில் மேதா தட்சிணாமூர்த்திக்கு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இவரது காலுக்கு கீழே நந்தியும் இருக்கிறது. இவரிடம் வேண்டிக்கொண்டால் கல்வி, கேள்விகளில் சிறக்கலாம் என்பது நம்பிக்கை. புதிதாக பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பவர்கள், இவ்விரு தட்சிணாமூர்த்திக்கு விசேஷ பூஜைகள் செய்து வழிபட்டால் குழந்தைகளின் கல்வி சிறக்கும் என்பது ஐதீகம்.
இக்கோவிலுக்கு அருகில் உள்ள தேவாரத் தலங்கள்
மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் - பொன்னூரிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ள பிரசித்தி பெற்ற பாடல் பெற்ற தலம்.
திருவாளப்புத்தூர் ரத்தினபுரீஸ்வரர் கோவில் - பொன்னூருக்கு அருகில் உள்ள காவிரியின் வடகரைத் தேவாரத் தலம்.
நீடூர் ஆபத்சகாயேஸ்வரர் கோவில்: பொன்னூர் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள மற்றொரு புகழ்பெற்ற தேவார வைப்புத் தலம்.
திருக்கருக்குடி வீராட்டேஸ்வரர் கோவில் (திருக்குறுக்கை): மன்மதன் எரிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பாடல் பெற்ற தலம் பொன்னூருக்கு அருகில் அமைந்துள்ளது.
திருநனிப்பள்ளி நற்றுணையப்பர் கோவில் - கிடாங்கொண்டான் பகுதியில் பொன்னூரைச் சுற்றியுள்ள மார்க்கத்தில் அமைந்துள்ளது.
தக்கோலம் ஜலநாதீசுவரர் கோவில்
அர்ச்சகர்கள் சிவலிங்கத்தை தொடாமல் அபிஷேகம் செய்யும் தேவாரத் தலம்
உத்தராயண காலத்தில் செந்நிறமாகவும், தட்சிணாயன காலத்தில் வெண்மை நிறமாகவும் மாறும் அபூர்வ லிங்கம்
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் தக்கோலம். இறைவன் திருநாமம் ஜலநாதீசுவரர். இறைவி கிரிராஜ கன்னிகை.
ஒரு முறை இப்பகுதியில் வெள்ளம் வந்த போது பார்வதிதேவி இங்குள்ள சிவனை அணைத்து காப்பாற்றியதன் அடையாளமாக லிங்கத்திருமேனியில் பள்ளம் இருப்பதையும், அதையும் தாண்டி வெள்ளம் அரித்தது போல் லிங்கத்தின் கீழ்ப்பகுதியில் வரிவரியாக மணல் கோடுகள் இருப்பதை இன்றும் காணலாம்.
பார்வதிதேவி இந்த லிங்கத்தை அணைத்திருப்பதாக ஐதீகம் இருப்பதால் இங்கு பூஜை செய்யும் சிவாச்சாரியார்கள் இந்த லிங்கத்தை தொடாமல் தான் இன்றும் கூட அபிஷேகம் செய்கிறார்கள். இது இத்தலத்தின் மாபெரும் சிறப்பம்சமாகும்.
இது தவிர இன்னொரு அதிசயத்தையும் இத்தலத்து மூலவர் ஜலநாதீசுவரரின் சிவலிங்கத் திருமேனியில் காணலாம். உத்தராயண காலத்தில் இந்த சிவலிங்கம் செந்நிறமாக காட்சி தரும். அப்போது நல்ல மழை பொழிந்து பயிர் செழிக்கும். தட்சிணாயன காலத்தில் இதே சிவலிங்கம் வெண்மையாக மாறும். அப்போது வறட்சி ஏற்பட்டு நிலம் காய்ந்து விடும்.
அபூர்வக் கோலத்தில் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி
பொதுவாக சிவாலயங்களில் தட்சிணாமூர்த்தி ஒருகாலை மற்றொரு காலின் மீது மடித்து வைத்திருக்கும் திருக்கோலத்தை பார்த்திருப்போம். ஆனால், இக்கோவிலில் அமர்ந்த நிலையில் எங்கும் காண முடியாத உத்கடி ஆசன திருக்கோலத்தில் தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கின்றார்.
கல்லால மரத்தின் கீழ் வலக்காலைத் தொங்கவிட்டு, இடக்காலைக் குத்துக்காலிட்டு அபூர்வமாகக் காட்சி தருகின்றார். மனதைக் கட்டுப்படுத்தும் இந்த ஆசனம், மனம் அலைபாயும் மாணவர்களுக்கு கல்வி மேன்மை தரும்.
தலையை இடதுபுறம் சாய்த்த வண்ணம் ஒரு கையில் ருத்ராட்ச மாலையும், மற்றொரு கையில் தாமரையும்கொண்டும், காலடியில் முயலகன் இல்லாமலும் அருள்பாலிக்கிறார். வலது பின் கையில் அக்க மாலையுடன், சீடர்களை ஆட்கொண்டருளும், அடக்கியாளும், கண்டிப்போடு ஆசிரியர் போன்ற பாவனையில் இருக்கிறார்.
கல்வியில் நாட்டம் தரும் தட்சிணாமூர்த்தி
இவரை மஞ்சள் நிற மலர்களால் வியாழக்கிழமைகளில் அர்ச்சித்து வழிபடுவது விசேஷமானது. வியாழக்கிழமை தினங்களில் இவருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்வது நற்பலனைத் தரும்.
அபிஷேகம் செய்த நல்லெண்ணையை வாங்கி வந்து தினமும் தலையில் தடவிவந்தால் மாணவர்களுக்குக் கல்வியில் நாட்டம் பெருகும், நினைவாற்றல் கூடும் என்பது ஐதீகம். வியாழக்கிழமை தோறும் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறந்த பலனைத் தரும்.
முறப்பநாடு கைலாசநாதர் கோவில்
இரட்டை பைரவர்கள் அருள் பாலிக்கும் தலம்
திருநெல்வேலி - தூத்துக்குடி சாலையில், 15 கி.மீ தொலைவில் உள்ள தலம் முறப்பநாடு. இறைவன் திருநாமம் கைலாசநாதர். இறைவியின் திருநாமம் சிவகாமி அம்மன். முறப்பநாடு, நவகைலாய தலங்களில் ஐந்தாவது இடத்தை (நடுக் கைலாயம்) பெறுகின்றது. நவகைலாய தலங்களில் இக்கோவில் குரு தலம் ஆகும்.
இந்தியாவில் கங்கை நதியும், முறப்பநாடு தலத்தில் தாமிரபரணி நதியும் மட்டுமே வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடுகின்றது. இதனால் இவ்விடம் தட்சிண கங்கை என்று போற்றப்படுகிறது. முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் குளித்தால், காசியில் குளித்த புண்ணியம் கிட்டும்.
பொதுவாக சிவாலயங்களில் ஒரு பைரவர் எழுந்தருளி இருப்பார். ஆனால் இக்கோவிலின் வடகிழக்கு பகுதியில், தனிச்சந்நிதியில் இரண்டு பைரவர்கள் அருள்பாலிக்கின்றனர். நாய் வாகனத்துடன் காட்சி தரும் பைரவர் கால பைரவர் என்றும், வாகனம் இன்றி காட்சி தரும் மற்றொரு பைரவர் வீர பைரவர் என்றும் அழைக்கின்றனர். இது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் கோவில்
கஞ்சனூருக்கு இணையான சுக்கிர பரிகாரத் தலம்
தூத்துகுடி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் ஆத்தூர் என்ற ஊரில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் சேர்ந்தபூமங்கலம் உள்ளது. தூத்துகுடியில் இருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவிலும் திருச்செந்தூரில் இருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இறைவன் திருநாமம். கைலாசநாதர் இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி அம்மன். தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள நவ கயலாய தலங்களில் இத்தலம் ஒன்பதாவது தலமாகும். இத்தலம் சுக்கிரனின் ஆட்சிப் பெற்ற கோவிலாகும்.
இத்தல இறைவனை வழிபடுவது கஞ்சனூர் என்ற ஊரில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை வணங்குவதற்கு சமமாகும். சுக்கிரன் தலமாதலால் இங்கு வழிபடுவோருக்கு சுக்கிர தோஷம் நீங்கி தீமைகள் விலகும். திருமணம் நல்லபடி அமையும், இல்லறம் சுகம் பெறும், உடல் ஆரோக்கியம், மனநிம்மதி பெற்று மரண பயம் நீங்கி நன்மக்கட் பேறு பெற்று, என்றும் இன்பமாக வாழலாம்.
தூத்துகுடி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் ஆத்தூர் என்ற ஊரில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் சேர்ந்தபூமங்கலம் உள்ளது. தூத்துகுடியில் இருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவிலும் திருச்செந்தூரில் இருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இறைவன் திருநாமம். கைலாசநாதர் இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி அம்மன். தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள நவ கயலாய தலங்களில் இத்தலம் ஒன்பதாவது தலமாகும். இத்தலம் சுக்கிரனின் ஆட்சிப் பெற்ற கோவிலாகும்.
இத்தல இறைவனை வழிபடுவது கஞ்சனூர் என்ற ஊரில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை வணங்குவதற்கு சமமாகும். சுக்கிரன் தலமாதலால் இங்கு வழிபடுவோருக்கு சுக்கிர தோஷம் நீங்கி தீமைகள் விலகும். திருமணம் நல்லபடி அமையும், இல்லறம் சுகம் பெறும், உடல் ஆரோஅகியம், மனநிம்மதி பெற்று மரண பயம் நீங்கி நன்மக்கட் பேறு பெற்று என்றும் இன்பமாக வாழலாம்.
குபேர பகவான் இத்தலத்து இறைவனை வழிபட்டு பொன்னும் பொருளும் பெற்றார். பிரதான கருவறைக்கு மேலே உள்ள விமானத்தில், செல்வத்தின் அதிபதியான குபேர பகவான், தனது துணைவியார்களான சங்க நிதி மற்றும் பதும நிதியுடன், யானை மீது சவாரி செய்யும் சிலை செதுக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் மட்டுமே காணப்படும் குபேர பகவானின் அரிய சிலை இது. சிவபெருமானை பிரார்த்தனை செய்த பிறகு, செல்வத்தையும் செழிப்பையும் வேண்டி பக்தர்கள் கோபுரத்தில் இருக்கும் இந்த குபேர பகவானை இந்த இறைவனை வழிபடுவது வழக்கம்.
திருவானைக்கோயில் திருவாலீஸ்வரர் கோவில்
மூக்குத்தி, காது தோடு ஆகியவற்றை திருகாணியோடு அணிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட அம்பிகையின் திருமேனி
காஞ்சிபுரம் மாவட்டத்தில், திருக்கழுக்குன்றம் வட்டத்தில், செங்கல்பட்டில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது திருவானைக்கோயில் என்னும் கிராமம். இத்தலத்து இறைவன் திருநாமம் வாலீஸ்வரர். இறைவியின் திருநாமம் பன்மொழியம்மை. பல நூற்றாண்டுகள் பழமையானது இக்கோவில். வானரங்களின் அரசனான வாலி வழிபட்டதால் இத்தலத்து இறைவனுக்கு வாலீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.
இத்தலத்து அம்பிகை பன்மொழியம்மையின் திருமேனி, பெண்கள் அணியும் அணிகலன்கள் அனைத்தையும் அணிவிக்கும் வகையில் அமைந்துள்ளது ஒரு தனி சிறப்பாகும். அம்பிகையின் காதுகளில், காது தோடை திருகாணியோடு அணிவிக்கும் வகையில் காதுகளில் துவாரங்கள் அமைந்துள்ளன. அதுபோல் மூக்குத்தியும் திருகாணியோடு அணிவிக்கும் வகையில், அம்மனின் நாசியில் துவாரம் இருக்கின்றது. மேலும் அம்மனின் கால்களில் திருகாணியோடு கூடிய கொலுசும், இரு கைகளில் வளையல்களும் அணிவிக்க முடியும். இத்தகையே திருமேனி வடிவமைப்புடைய அம்பிகையை நாம் தரிசிப்பது அரிது.
கடையநல்லூர் நீலமணிநாத சுவாமி கோவில்
பெருமாள் கோவிலில் தட்சிணாமூர்த்தி எழுந்தருளி இருக்கும் அரிய காட்சி
இரட்டை சிம்ம வாகனத்தில் அருள்பாலிக்கும் சக்கரத்தாழ்வார்
தென்காசியில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள கடையநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது நீலமணிநாத சுவாமி கோவில். 500 முதல் 1000 ஆண்டுகள் வரை பழமையானது இக்கோவில். கருவறையில் நீலமணிநாத சுவாமி என்ற கரியமாணிக்கப்பெருமாள் ஸ்ரீ பூமி, நீளா தேவியருடன் நின்ற கோலத்தில் இருக்கிறார்.
திருப்பதி வெங்கடாஜலபதியைப் போன்ற கோலத்தில் இவர் காட்சி தருவது சிறப்பு. திருப்பதியில் வேண்டுதல்களை நிறைவேற்ற முடியாதவர்கள் இங்கு முடிக்காணிக்கை செலுத்தி, நேர்த்திக் கடன்களை நிவர்த்தி செய்து கொள்கிறார்கள்.
திருமண, புத்திர தோஷம் இருப்பவர்கள் சுவாமிக்கு, திருவோண நட்சத்திர தினத்தில் கறிவேப்பிலை சாதம், பாயாசம் நைவேத்யமாக படைத்து வழிபடுகின்றனர். இவ்வாறு செய்வதால் தோஷங்கள் நீங்குவதாக நம்புகின்றனர்.
பெருமாள் கோவிலாக இருந்தாலும், சிவ அம்சமான தட்சிணாமூர்த்தியும் இங்கு எழுந்தருளி இருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். நீலமணிநாத சுவாமி பெருமாளின் கருவறை விமானத்தின் தென்புறத்தில் இருக்கும் இந்த தட்சிணாமூர்த்தி, மற்ற கோவில்களில் இருப்பது போல் அல்லாமல் இரண்டே சீடர்களுடன் இருக்கிறார்.
இவரது அமைப்பும் வித்தியாசமானது. மற்ற கோயில்களில் ஒரு காலை மடக்கி, ஒரு காலை தொங்கவிட்டு முயலகனை மிதித்தது போல் இருப்பார். இங்கோ, இடது கையை தரையில் ஊன்றி, ஒரு காலை ஐயப்பனுக்குரியது போல், மடக்கி வைத்து காட்சி தருகிறார். வலதுபக்கமாக முகம் வைத்திருக்க வேண்டிய முயலகன், இடது பக்கம் திரும்பியிருப்பது மற்றொரு சிறப்பம்சம்.
இரட்டை சிம்ம வாகனத்தில் அருள்பாலிக்கும் சக்கரத்தாழ்வார்
இக்கோயிலில் உள்ள சக்கரத்தாழ்வார் தனி சன்னதியில் 16 கைகளுடன் இருக்கிறார். இவரது பீடத்திற்கு கீழே இரண்டு சிங்கங்கள் சக்கரத்தாழ்வாரையும், அவருக்கு பின்புறம் இருக்கும் யோக நரசிம்மரையும் தாங்கியபடி இருக்கிறது.
நரசிம்மருக்கு கீழே ஐந்து தலை நாகம் ஒன்று இருக்கின்றது. சக்கரத்தாழ்வாரின் இந்தத் தோற்றம் மற்ற இடங்களில் இல்லாத அபூர்வக் கோலமாகும். சக்கரத்தாழ்வாரின் இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது. இவருக்கு சுதர்சனஹோமம் செய்து வழிபட்டால், பயம் நீங்கி, எடுத்த செயல்களில் வெற்றி உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இடையாற்றுமங்கலம் மாங்கலீசுவரர் கோவில்
திருமண தடை நீக்கும் தலம்
திருமண அழைப்பிதழில் கையில் மாலைகளுடன் தேவதைகள் பறப்பது போல் படங்கள் இருப்பதற்கான காரணம்
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அமைந்துள்ளது இடையாற்றுமங்கலம். இறைவன் திருநாமம் மாங்கலீசுவரர். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை. திருமண பாக்கியத்தைக் கொடுக்கிற கோயில் இது. அதனால்தான் சுவாமிக்கு மாங்கலீசுவரர் என்றும் அம்பாளுக்கு மங்கலாம்பிகை என்றும் திருநாமம் அமைந்தது என்கிறது தல புராணம். மாங்கல்யேசுவரர் என்பதுதான் மாங்கலீசுவரர் என மருவியது.
மாங்கல்ய மகரிஷி என்பவர் இத்தலத்து சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தார். மாங்கல்ய மகரிஷி வேண்டுகோளுக்கு இணங்க, இங்கே தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு சிவபெருமான், திருமண பாக்கியத்தை அருளுகிறார். இத்தலத்தில் மாங்கல்ய மகரிஷிக்கு தனி சந்நிதி இருக்கிறது. அவருடைய நட்சத்திரம் உத்திரம்.
பொதுவாகவே, உத்திர நட்சத்திரம் என்பது மாங்கல்ய வரம் தந்தருளக்கூடியது. அதனால்தான் பங்குனி உத்திரத்தில் பல தெய்வங்களுக்கு திருமண வைபவங்கள் நடந்திருக்கின்றன என்கிறது புராணம். மாங்கல்ய மகரிஷியும் உத்திர நட்சத்திரக்காரர் என்பதால், இந்தத் தலம் கல்யாண வரம் தரும் தலமாகப் போறப்படுகிறது.
திருமண அழைப்பிதழில் கையில் மாலைகளுடன் தேவதைகள் பறப்பது போல் படங்கள் இருப்பதற்கான காரணம்
நமது கல்யாண சம்பிரதாயங்களில், திருமண அழைப்பிதழில் கையில் மாலைகளுடன் தேவதைகள் பறப்பது போல் படங்கள், இரண்டு பக்கமும் அச்ச்சிட்டிருப்பார்கள். அந்த தேவதைகளை திருமண வைபவத்துக்கு அனுப்புபவர் மாங்கல்ய மகரிஷி என்றும் திருமணமாகும் தம்பதிக்கு ஆசியும் அருளும் வழங்குகிறார் என்பது ஐதீகம்.
பிரார்த்தனை
மாங்கலீசுவரர் கோவிலில், எந்த நாளில் வந்து வேண்டுமானாலும் வேண்டிக்கொள்ளலாம். என்றாலும் உத்திர நட்சத்திர நாளில் வந்து, மாங்கல்ய மகரிஷியையும் மாங்கலீசுவரரையும் மங்களாம்பிகையும் தரிசித்து வேண்டிக் கொண்டால், தடைப்பட்ட திருமண வரம் விரைவில் நடந்தேறும்.
அதேபோல், உத்திர நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபட வேண்டிய திருக்கோயில் இது. உத்திர நட்சத்திரக்காரர்கள் இங்கே வந்து வணங்கினால், முன் ஜென்ம தோஷம் உள்ளிட்டவை கூட நீங்கிவிடும் என்பது ஐதீகம்.
தவம் செய்யும் கோலத்தில் காட்சி தரும் மாங்கல்ய மகரிஷியை நெய் விளக்கேற்றி வழிபட்டு, சிவனாரையும் அம்பாளையும் மனதாரப் பிரார்த்தித்தால், சீக்கிரமே கல்யாண மாலை தோள் சேரும். மகரிஷியின் திருப்பாதத்தில் ஜாதகத்தை வைத்து வேண்டிக்கொள்வதும் இங்கே வழக்கமாக இருக்கிறது.
திருமணம் நடந்தேறியதும் இங்கு வந்து சிவனாருக்கும் அம்பாளுக்கும் மாங்கல்ய மகரிஷிக்கும் மாலைகள் சார்த்தி, இனிப்பு வகைகள், தேங்காய் முதலானவற்றை வழங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர் பக்தர்கள்.
இங்கு பிரார்த்தனை செய்து கொண்டால், குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள். கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ்வார். மாங்கல்ய பலம் பெருகும். கன்னியரின் கண்கண்ட தெய்வமாகப் போற்றப்படுகிறார் மாங்கல்ய மகரிஷி.
மாங்கலீசுவரர், மங்களாம்பிகை, மாங்கல்ய மகரிஷி மூவருக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்து, சீப்பு, கண்ணாடி, புடவை அல்லது ரவிக்கை துண்டு, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு என மங்கலப் பொருட்களை சுமங்கலிகளுக்கு வழங்கி வேண்டிக்கொண்டால், சகல தோஷங்களும் விலகி, திருமணம் விரைவில் நடைபெறும்.