திருமாணிகுழி வாமனபுரீசுவரர் கோவில்

வாமன அவதாரத்தின் போது ஏற்பட்ட தோஷத்தை நீக்க, மகாவிஷ்ணு வழிபட்ட தலம்

எந்நேரமும் திரை போடப்பட்டிருக்கும் மூலவர் சன்னதி

சில விநாடிகள் மட்டுமே தரிசனம் தரும் வாமனபுரீசுவரர்

கடலூரிலிருந்து பண்ருட்டி செல்லும் வழியில் 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் திருமாணிகுழி வாமனபுரீஸ்வரர். இறைவன் திருநாமம் வாமனபுரீசுவரர். இறைவியின் திருநாமம் அம்புஜாட்சி, மாணிக்கவல்லி.

மகாவிஷ்ணு பிரம்மசாரியாக வந்து மாகாபலியிடம் மூன்றடி மண் கேட்டு அவனையழித்தார். மகாபலியை தர்மத்திற்காக அழித்தாலும் அதற்குரிய பழி நீங்க, மகாவிஷ்ணு இங்கு வந்து சிவபெருமானை, ஒரு குழி போன்ற இடத்தில் அமர்ந்து வழிபட்டார் ஆகையால் இக்கோவில் மாணிகுழி என்று பெயர் பெற்றது. (மாணி என்றால் பிரம்மசாரி).

இந்த ஆலயத்தின் ஒரு சிறப்பம்சம், இங்கு மூலவர் வாமனபுரீசுவரரை நாம் நேரடியாக தரிசிப்பது இயலாது. ஏனெனில் எந்நேரமும் மூலவர் சன்னதியில் திரை போடப்பட்டிருக்கும். இறைவனும், இறைவியும் எப்போதும் சிவசக்தியாக சேர்ந்திருக்கும் தலமாக இது கருதப்படுவதால், அவர்களை தொந்தரவு செய்யாமல் இருக்கும் பொருட்டு திரையிடப்பட்டிருக்கிறது. இறைவன் எப்போதும் இறைவியுடன் இருப்பதாகச் சொல்லப்படுவதால், இத்தலத்தில் அர்த்தசாம பள்ளியறை வழிபாடு என்பது தனியே கிடையாது.

இங்கு இறைவனும் இறைவியும் இணைந்து கர்ப்பகிரகத்தில் அருள்புரிகிறார்கள். ஏனைய தலங்களில் போல் இங்கு இறைவனை ஆலயம் திறந்து இருக்கும்போது எல்லாம் தரிசனம் செய்ய முடியாது. பூஜை முடிந்தவுடன் சில விநாடிகள் மட்டுமே இறைவனை தரிசனம் செய்ய முடியும். இறைவனும் இறைவியும் கருவறையில் இணைந்து இருப்பதால், அவர்களுக்கு காவல் புரிய ருத்ரர்களில் ஒருவரான பீமருத்ரர், இறைவன் இறைவிக்கு முன் திரைசீலையாக உள்ளார். எனவே அவருக்கு தான் முதல் அர்ச்சனை, தீபாரதனை ஆகியவை நடைபெறுகின்றன.

தகவல், படங்கள் உதவி : திரு.நடராஜன் குருக்கள், ஆலய அர்ச்சகர்

திரைசீலையாக உள்ள பீமருத்ரர்

Previous
Previous

புள்ளமங்கை ஆலந்துறைநாதர்(பிரம்மபுரீஸ்வரர்) கோவில்

Next
Next

திருக்காட்கரை காட்கரையப்பன் கோவில்