மதுரை திருவாப்புடையார் கோவில்
மர ஆப்பு சிவலிங்கமான அதிசயம்
மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் கோவிலுக்கு வடக்கே செல்லூர் எஎன்னும் இடத்தில் , வைகைக் கரைக்கு அருகில் தேவாரத்தலமான திருவாப்புடையார். கோவில் அமைந்திருக்கிறது. இறைவன் திருநாமம் திருவாப்புடையார். இறைவி சுகந்த குந்தளாம்பிகை.
சோழாந்தக மன்னன் என்பவன் மிகச்சிறந்த சிவபக்தன். அவன் எப்போதும் சிவபூஜை செய்ந பின்தான் சாப்பிடுவான். ஒரு முறை அவன் அருகிலிருந்த காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். காட்டில் வெகு நேரம் வேட்டையாடியதால் களைப்படைந்து பசியால் வாடினான். மன்னனுடன் சென்ற அமைச்சர், மன்னனின் சோர்வு நீங்க ஏதாவது சாப்பிடும்படி சொன்னார்கள். ஆனால் மன்னன், ' சிவபூஜை செய்த பின்பே உணவு சாப்பிடுவேன்' என்று சொல்லி மறுத்து விட்டான்.
அமைச்சர், மன்னன் சிவபூஜை செய்ய வேண்டும் என்பதற்காக, அந்தக் காட்டில் கிடைத்த மரத்துண்டு ஒன்றை எடுத்து, அதைத் தரையில் ஆப்பு போன்று அடித்து வைத்தார். பின்னர் அவர் மன்னனிடம் அந்த மரத்துண்டைக் காட்டி, ;அந்தச் சுயம்புலிங்கத்தை வழிபட்டுவிட்டுத் தாங்கள் சாப்பிடலாம்' என்று சொல்ல, சோர்வுடன் இருந்த மன்னன், அந்த ஆப்பைச் சிவலிங்கம் என நினைத்து வணங்கி விட்டு சாப்பிட்டான். அவனுக்குச் சோர்வு நீங்கிய பிறகு, தான் வணங்கியது சிவலிங்கம் அல்ல, அது மர ஆப்பு என்று தெரிந்தது.
அதை நினைத்து வருந்திய மன்னன், 'இறைவா! நான் இதுவரை உன்னை வழிபட்டு வந்தது உண்மையானால், நான் வணங்கிய இந்த ஆப்பில் இறைவனாக இருந்து அருள் புரிய வேண்டும்' என்று மனமுருக வேண்டினான். மன்னனின் பக்தியில் மகிழ்ந்த இறைவன், அந்த ஆப்பிலேயே இறைவனாகத் தோன்றினார். ஆப்பில் எழுந்தவர் என்பதால் அவருக்கு 'ஆப்புடையார்' என்னும் பெயர் ஏற்பட்டது. அந்த ஊரும் 'ஆப்பனூர்' என்றானது.
ஆற்று மணல் அன்னமாக மாறிய விநோதம்
இங்குள்ள இறைவனான ஆப்புடையார் மற்ற சுயம்பு லிங்கங்களை விடச் சிறப்பு மிக்கவர் என்றும், இவரை வணங்கினால், அனைத்துத் தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்று தலபுராணம் கூறுகிறது.
சோழாந்தகனின் மரபு வழியில் வந்த சுகுணபாண்டியன் என்பவனது ஆட்சியில் கடுமையான பஞ்சம் நிலவியது. அப்போது இக்கோவில் அர்ச்சகர், நெல்லுக்குப் பதிலாக, வைகை ஆற்று மணலைக் கொண்டு சமைத்தார். அப்போது அந்த மணல் அன்னமாக மாறியது என்றும், அதனால் இத்தல இறைவனுக்கு 'அன்னவிநோதன்' என்கிற பெயர் ஏற்பட்டது..
இத்தலத்தில் ஐப்பசி அன்னாபிஷேகம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பச்சரிசி சாதத்தை வடித்து, அதனை லிங்கத் திருமேனியில் சாற்றுவர். கருகுமணியால் காதணி, கழுத்தில் புடலங்காய் மாலை என லிங்கத் திருமேனியை அலங்கரிப்பார்கள். பூஜை முடிந்ததும் லிங்கத் திருமேனியின் சிரசில் உள்ள சாதத்தை எடுத்து வைகையில் கரைப்பார்கள். இதனால், அந்த நதி இன்னும் புண்ணியம் பெறுவதாக ஐதீகம். மீதமுள்ள சாதத்தைப் பிரசாதமாக வழங்குவர். இந்தப் பிரசாதத்தைச் சாப்பிட, வியாபாரம், விளைச்சல் பெருகும். குபேர யோகம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
கார்த்திகையில் திருவாப்புடையாரை வணங்கினால், சகல செல்வங்களும் வந்துசேரும். வீட்டின் தரித்திரம் விலகும். தடைப்பட்ட காரியங்கள் இனிதே நடந்தேறும் என்பது பக்தர்களின் நமபிக்கை.
தாத்தையங்கார்பேட்டை காசி விசுவநாத சுவாமி கோவில்
பஞ்ச முக பைரவர்
திருச்சி மாவட்டம் முசிறி வட்டத்தில் உள்ள தாத்தையங்கார்பேட்டை என்னும் தலத்தில் அமைந்துள்ளது காசி விசுவநாத சுவாமி கோவில்.
பொதுவாக சிவன் கோவில்களின் காவலராகக் கருதப்படும் பைரவர் நாய் வாகனத்துடன்தான் எழுந்தருளியிருப்பார். ஆனால் அவர் இத்தலத்தில் பஞ்ச முகங்களுடன், சம்ஹார மூர்த்தியாக சிம்ம வாகனத்தில் அருள் பாலிக்கிறார், அவருடைய இத்தகைய கோலத்தை நாம் வேறு எந்ந தலத்திலும் காண முடியாது.
திருமணத்தடை உள்ளவர்கள், தொழிலில் பாதிப்பு ஏற்பட்டவர்கள், ராகு திசை தோஷம் உடையவர்கள், எதிரிகளால் அல்லல் படுபவர்கள் போன்றவர்களுக்கு இவர் பரிகார தெய்வமாகத் திகழ்கிறார். மாதத்தின் வளர்பிறை, தேய்பிறை அஷ்டமி தினங்களில் பக்தர்கள் பூசணிக்காய், தேங்காய், மிளகு தீபமேற்றி வழிபட்டு தங்களது பரிகார பிரார்த்தனைகளை மேற்கொள்கின்றனர்.
இலம்பையங்கோட்டூர் தெய்வநாயகேசுவரர் கோயில்
யோக தெட்சிணாமூர்த்தியாக காட்சி தரும் தேவாரத் தலம்
காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 27 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம், திருஇலம்பையங்கோட்டூர்.
தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 13வது தலம். சுவாமியின் திருநாமம் தெய்வநாயகேசுவரர் , அரம்பேஸ்வரர்.
தேவகன்னியர்களான அரம்பையர்கள் வந்து வழிபட்டதால் அரம்பேஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார். அதனால் இத்தலம் 'அரம்பையங்கோட்டூர்' என்று வழங்கப்பட்டு, காலப்போக்கில் 'இலம்பையங்கோட்டூர்' என்று மருவியது.
அரம்பையர்களான (தேவலோக கன்னிகள்) ரம்பை, ஊர்வசி, மேனகை ஆகிய மூவரும் இத்தலத்திற்கு வந்து, தங்களது அழகு என்றும் குறையாது இருக்க அருளும்படி சிவனை வேண்டி தவம் இருந்தனர். அவர்களுக்கு சிவன் யோக தெட்சிணாமூர்த்தியாக காட்சி தந்து என்றும் இளமையாக இருக்கும்படியாக அருளினார்.
இங்குள்ள தட்சிணாமூர்த்தி சின்முத்திரையை அடியார்களுக்கு காண்பிப்பது போல் இல்லாமல், தமது இதயத்தில் வைத்திருப்பதுபோல் காட்சி தருவது சிறப்பு. கல்லால மரத்தின் அடியில் இடக்கரத்தில் ருத்ராட்ச மாலை, திரிசூலம் கொண்டு, வலது பாதம் மேல் நோக்கியும் இடது பாதம் முயலகன் மீதும் இருக்கும் நிலையில் யோக தட்சிணாமூர்த்தியாகக் காட்சி தருகின்றார்.
செய்யாறு வேதபுரீசுவரர் கோவில்
சர்ப்ப தோஷத்தை நீக்கும் பரிகாரத் தலம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ள தேவாரத் தலமான வேதபுரீஸ்வரர் கோவில், சர்ப்ப தோஷத்தை நீக்கும் பரிகார தலமாக விளங்குகிறது.
திருஞான சம்பந்தர் இத்தலத்திற்கு வந்த போது சேயாற்றை சுற்றியுள்ள சமணர்கள் ஒரு வேள்வி செய்து அதிலிருந்து கொடிய பாம்பை சம்பந்தர் மீது ஏவினர். சம்பந்தர் சிவனை குறித்து வேண்டினார். உடனே சிவன் பாம்பாட்டியாக வந்து அப்பாம்பினை பிடித்து மறைந்தார். இதனால் இத்தலத்தில் நாகலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
அபூர்வமான பதினொரு தலை நாகலிங்கம்
இக்கோவிலின் உட்பிரகாரத்தில் ஒரு உயரமான பீடத்தில் நாகலிங்கம் சன்னதி அமைந்துள்ளது. பதினொரு தலையுள்ள இதை சனிக்கிழமை இராகு காலத்தில் வழிபட்டால் தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. பீடத்தில் கீழே பூமாதேவி, அதற்கு மேல் மீன், அதன்மேல் ஆமை, அதற்கு மேல் பதினொரு யானைகள், அதன்மேல் பதினொரு நாகங்கள் தாங்க அதன் மேல் பதினொரு தலை நாகம் படம் விரித்துள்ளது. நாகத்தின் உடல் சுருள்களால் அமைந்த பீடம் மீது சிவலிங்கம் உள்ளது.
இந்த பதினொரு தலையுள்ள நாகநாத லிங்கத்தை சனிக்கிழமை தோறும் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் இராகு காலத்தில் வழிபாடு செய்தால் சர்ப்ப தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. இந்த நாகலிங்கத்தை அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கும். ஆமை தோஷமும் நிவர்த்தி ஆகிறது.
ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பன்றும் தலமரமான பனைமரத்துக்கும், நாகலிங்கத்துக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.
செட்டிகுளம் ஏகாம்பரேசுவரர் கோவில்
12 ராசிக்காரர்களுக்கான குபேர தலம்
பெரம்பலூர் - திருச்சி ரோட்டில் 15 கி.மீ. தூரத்தில் உள்ள ஆலத்தூரிலிருந்து, 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, செட்டிகுளம் ஏகாம்பரேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் காமாட்சி அம்மன்.
சிவபக்தனான குபேரன் செல்வத்தின் அதிபதியாவார். வடக்கு திசை அதிபதியாகவும் அஷ்டதிக் பாலகர்களில் ஒருவராகவும் வணங்கப்படுகிறார். கோவிலில் உள்ள தூண்களில் பன்னிரு ராசிகளுக்கும் உரிய குபேரர் உள்ளனர்.
குபேரனுக்குரிய வாகனம் மீன். எனவே, இங்குள்ள ஒவ்வொரு குபேரரும் மீன் மீது, ஒவ்வொரு கோலத்தில் காட்சி தருகின்றனர். ஏகாம்பரேஸ்வரர், காமாட்சி அம்பாள் சன்னதி முன் மண்டப தூண்கள் மற்றும் சிவன் சன்னதி கோஷ்டத்தில் இவர்களைத் தரிசிக்கலாம். தவிர, ராஜ கோபுரத்தில் மகாகுபேரர் இருக்கிறார். இவ்வாறு, ஒரே கோவிலில் 13 குபேரர்களை தரிசனம் செய்வது மிகவும் அரிது.
இந்த கோவிலில் காமாட்சி அம்மன் சன்னதிக்கு எதிரே மகா குபேரனுக்கு தனிச் சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் மகா குபேரர் சித்ரலேகாவுடன் தாமரை மலர்மேல் அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார்.
ஒரு முறை குபேரன் தன்னுடைய சக்திகளை இழந்து, செல்வங்களையும் பறிகொடுத்தான். பின்னர் இத்தலத்தில் உள்ள காமாட்சி அம்மனை வழிபட்டு இழந்த செல்வங்களை மீட்டெடுத்தான். குபேர தரிசனம் செல்வ சம்பத்துகளை அள்ளித்தரும்; தொழில் அபிவிருத்தியையும் முன்னேற்றத்தையும் உண்டாக்கும் என்கின்றன ஞானநூல்கள்.
பிரார்த்தனை
அவரவர் ராசிக்குரிய குபேரனை, தங்களது ஜனன நட்சத்திரத்தன்று வழிபடுவது நன்மை தரும். மேலும் குபேரனுக்கு உகந்த பச்சை வஸ்திரமும், பச்சை குங்குமமும் சாத்தி, நிவேதனம் செய்து வழிபட்டால், யோகம் பெருகி தொழிலில் விருத்தி ஏற்படும். செல்வச் செழிப்பு மிகுந்த வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம். குபேரன் காமாட்சி அம்மனை வழிபட்டு செல்வங்களை மீட்ட தினம் பூரட்டாதி நட்சத்திரமாகும். எனவே அந்த நட்சத்திரத்தன்று மகா குபேரனுக்கு இங்கு அபிஷேகங்களும், மகா குபேர ஹோமும் நடைபெறுகிறது. இந்த நாளில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து வழிபாட்டில் கலந்து கொள்கிறார்கள்.
குடும்பத்தில் செல்வம் பெருக, கடன் பிரச்னைகள் தீர தினமும் சுக்கிர ஓரை நேரத்திலும், வெள்ளிக்கிழமைகளிலும் தங்கள் ராசிக்குரிய குபேரனுக்கு பூஜை செய்து வழிபடுகிறார்க
பாப்பான்குளம் திருவெண்காடர் சிவன் கோவில்
சிவலிங்கத் திருமேனி வடிவில் சிறியதாகவும், பெரியதாகவும் மாறித் தோன்றும் அதிசயம்
திருநெல்வேலியிலிருந்து மேற்கே சுமார் 38 கி. மீ தூரத்தில் திருநெல்வேலி - பொட்டல்புதூர் சாலையில் பாப்பான்குளம் எனும் ஊரில் திருவெண்காடர் சிவன் கோவில் அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் திருவெண்காடர். இறைவி வாடாகலை நாயகி. வடக்கே வெண்பனி உறைந்த கயிலை மலையில் உறையும் ஈசனே இங்கு வந்து எழுந்தருளி இருப்பதால் இவருக்கு திருவெண்காடர் என்று பெயர்.
இந்தக் கோவிலின் சிவலிங்கத் திருமேனியானது சந்திரகாந்தக் கல் என்னும் அபூர்வமான கல்லைக் கொண்டு செய்யப் பட்டது ஆகும். கருவறைக்கு அருகில் இருந்து பார்த்தால் சிவலிங்கமானது சிறியதாகவும், கொடிமரத்திற்கு அருகில் இருந்து பார்த்தால் பெரிதாகவும் தெரிவது ஒரு அதிசயமாகும். மூலவர் சந்திரகாந்த கல்லில் செய்யப்பட்ட லிங்கத் திருமேனி என்பதால் குறிப்பிட்ட விநாடிக்கு ஒரு முறை சில நீர் துளிகள் சிவலிங்கத்தின் மீது விழுகிறது.
சுவாமி திருவெண்காடர் சந்திரகாந்த லிங்கத் திருமேனியனாக இருப்பதனால் இவருக்குச் செய்யப்படும் அபிஷேகத் தீர்த்தம் நோய் தீர்க்கும் அருமருந்தாக விளங்குகிறது. ஒரு மண்டலம் இவரை வழிபட்டு அபிஷேகத் தீர்த்தத்தினைப் பருகிவர, அனைத்துவித நோய்களும் குணமாகிறது என்பது பக்தர்களின் அனுபவம்.
திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவில்
ராகு – கேது தோஷம் நீக்கும் தேவாரத் தலம்
மயிலாடுதுறை – திருவாரூர் சாலையில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 7 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருப்பாம்புரம். இத்தலத்து இறைவன் சேஷபுரீஸ்வரர், பாம்புரநாதர். இறைவி பிரமராம்பிகை.
ஆதிசேஷன் வழிபட்ட தலம்
கைலாயத்தில் ஒருமுறை விநாயகர் சிவபெருமானை வழிபடும் போது, இறைவன் கழுத்திலிருந்த பாம்பு விநாயகர் தன்னையும் வணங்குவதாக எண்ணி கர்வமடைந்தது. அதனால் கோபமடைந்த சிவன் நாக இனம் முழுவதும் தன் சக்தி அனைத்தும் இழக்கும்படி சாபமிட்டார். அதனால் உலகைத் தாங்கும் ஆதிசேஷனும், இராகு, கேது மற்ற நாக இனங்களும் தங்கள் சக்தி அனைத்தும் இழந்து அல்லல் பட்டன. சாப விமோசனம் வேண்டி ஈசனைத் துதிக்க இறைவனும் மனமிரங்கி பூவுலகில் சேஷபுரி எனப்படும் திருப்பாம்புரம் தலத்தில் சிவராத்திரி நாளன்று தம்மை தொழுதால் சாப விமோசனம் கிட்டும் என அருளினார்.
அவ்வாறே ஆதிசேஷன் தலைமையில் நாகங்கள் சிவராத்திரி முதல் சாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் சாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாதரையும், மூன்றாம் சாமத்தில் திருப்பாம்புரம் பாம்புர நாதரரையும், நான்காம் சாமத்தில் நாகூர் நாகநாதரையும் வழிபட்டு சாப விமோசனம் பெற்றனர்.
விஷம் தீண்டாப் பதி
ஆதிசேஷன் வழிபட்ட கோவில் ஆதலால் இன்றும் இக்கோவிலுக்கே உரிய அதிசயமாக வாரத்தின் மூன்று தினங்களில் கோவிலின் கர்ப்ப கிரகங்களில் நாக பாம்புகள் வந்து இறைவனை தரிசிப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.ஞாயிறு, செவ்வாய், வெள்ளிகிழமைகளில் திருப்பாம்புரம் கோவிலுக்குள் மல்லிகையின் மணமோ, தாழம்பூவின் மணமோ வீசுவதாகவும் அச்சமயம் பாம்பு கோவிலுக்குள் எங்கேனும் உலாவிக் கொண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. இத்தலத்தில் பாம்புகள் யாரையும் கடிப்பது இல்லை என்கிறார்கள். விஷம் தீண்டாப் பதி என்ற சிறப்பு இத்தலத்திற்கு உள்ளது.
ராகு கேது பரிகார தலம்
திருப்பாம்புரம் ஒரு ராகு கேது நிவர்த்தி தலம். குடந்தை, நாகூர், திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, கீழப்பெரும்பள்ளம் ஆகிய நாக தோஷ பரிகார தலங்கள் அனைத்தையும் தரிசித்த பலன் திருப்பாம்புரம் ஒன்றை மட்டும் தரிசித்தாலே போதும் என்கிறது தல மகாத்மியம். ராகுவும் கேதுவும் ஏக சரீரியாக அதாவது ஓருடலாக இருந்து தன் நெஞ்சில் சிவபெருமானை வைத்து வழிபட்டதால் இத்தலம் ராகு கேது பரிகாரத் தலமாக விளங்கிகிறது.
நாகதோஷத்தால் பாதிக்கப்பட்டு புத்திர பேறின்மை மற்றும் திருமணமாகா நிலையிலிருப்பவர்கள் இங்கு வந்து பூஜைகள் செய்து வழிபட அந்த தோஷங்கள் தீரும் அதோடு வாழ்வில் இருந்து வந்த காரிய தடைகள் விலகும். ஜாதகத்தில் ராகு- கேது கிரக நிலை சரியில்லாமல் இருப்பவர்கள், அந்த கிரகங்களின் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரே நாளில் காலையில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் வழிபட்டு, மதியம் திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலிலும், மாலை திருப்பாம்புரம் கோவிலில் வழிபட்டு, இரவு நாகூர் நாகேஸ்வரர் கோவிலில் தங்களின் வழிபாட்டை முடிக்க ராகு-கேது கிரகங்களால் தீமையான பலன்கள் ஏதும் ஏற்படாமல் காக்கும்.
போதை பழக்கம் விடுபட, வழிபட வேண்டிய தலம்
போதை பழக்கம் உள்ளவர்கள் ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 - 6 ராகு காலத்தில் இத்தல இறைவனுக்கு அர்ச்சனை செய்து வழிப்பட்டால் தீய பழக்கங்களில் இருந்து விடுபடலாம். இவ்வாறு செய்து வந்தால் 264 வகையான பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.
திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவில்
எமனுக்கே பாபவிமோசனம் கிடைக்கச் செய்த தேவாரத் தலம்
திருவாரூரிலிருந்து 15 கி.மீ. தூரத்திலுள்ள தேவாரத் தலம் ஸ்ரீவாஞ்சியம். இறைவன் திருநாமம் வாஞ்சிநாதர். இறைவி மங்களநாயகி.
ஒரு சமயம் எமதர்மராஜா, எத்தனையோ நல்ல பதவிகள் இருக்கும் போது, தனக்கு மட்டும் ஏன் உயிர்களை எடுக்கும் பதவியை சிவபெருமான் கொடுத்துள்ளார் என மிகவும் வருந்தினார். திருவாரூர் சென்று தியாகராஜரிடம் தனது குறைபாட்டை தெரிவித்தார். உயிர்வதை தொழிலை செய்யும் தனக்கு பிரம்மஹத்தி தோஷம் பீடித்துள்ளதாகவும், தன்னைக் கண்டு உயிர்கள் அனைத்தும் பயம் கொள்வதாகவும் திருவாரூர் தியாகராஜ பெருமானைக் கண்டுப் புலம்பினார். அதற்கு அப்பெருமான் ஸ்ரீவாஞ்சியம் சென்று வாஞ்சிநாதரை வழிபட்டு உனது தோஷத்தில் இருந்து விடுபட்டுக் கொள் எனக் கூறினார். அவ்வாறே எமதர்மன் ஸ்ரீவாஞ்சியம் தலத்திற்கு வந்து நெடுங்காலம் கடுந்தவம் புரிந்து வாஞ்சிநாதரை வழிபட்டு தனது தோஷத்தில் இருந்து விடுபட்டார். இங்கு எமதர்மராஜன் யோக நிலையில் காட்சி தருகிறார். ஸ்ரீவாஞ்சிநாதர் இத்தலத்தில் முதலில் எமதர்மராஜனை தரிசித்த பின்னரே தன்னை வந்து பக்தர்கள் தரிசிப்பர் எனும் பெரும்பேற்றை எமதர்மனுக்கு வழங்கினார். அதன்படியே இங்கு எமதர்மனுக்கே முதல் வழிபாடு நடைபெறுகிறது.
இங்கு எமதர்மராஜன் யோக நிலையில் காட்சி தருகிறார். அதனால் இங்கு வந்து தரிசனம் செய்பவர்களுக்கு மரண பயம் நீங்கும். தெற்கு நோக்கிய சன்னதியில் எமதர்மன் நான்கு கரஙகளுடன் பாசம், கதை, சூலம் ஏந்தி இடது காலை மடித்து வலது காலைத் தொங்கவிட்டு பாதக்குறடுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இங்கு எமதர்மனுக்கு வடை மாலை சாற்றி வழிபடுவது சிறப்பு. எமதர்மனை சாந்தி செய்யும் விதத்தில், இங்கு ஆயுள் ஹோமம், சஷ்டியப்தபூர்த்தி செய்து வழிபட்டால் நீண்ட ஆயுள் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தென்திருப்பேரை கைலாசநாதர் கோவில்
மூன்று கொம்புகள் முளைத்த அதிசயத் தேங்காய்
திருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 35 கி. மீ தொலைவில் உள்ளது தென்திருப்பேரை. சுவாமி கைலாசநாதர். இறைவி அழகிய பொன்னம்மை. சோழ தேசத்தில் திருச்சி அருகில் திருப்பேரை என்ற தலம் உள்ளது. அதே போல் தெற்கே பாண்டியநாட்டில் இருந்த இந்தத் தலமான திருப்பேரை 'தென்திருப்பேரை' என்று அழைக்கப்பட்டது. இத்தலம் நவ கைலாயங்களுள் ஏழாவது தலமாகும்.
மூன்று கொம்புகள் முளைத்த தேங்காய்
அம்பாள் சன்னிதியில் கொம்பு முளைத்த தேங்காய் ஒன்று இருக்கிறது. முற்காலத்தில் ஆங்கிலேய கலெக்டராக இருந்த கேப்டன் துரை என்பவர் ஒரு சமயம், இந்தத் தென்திருப்பேரை பகுதிக்கு வந்தார். தனக்கு குடிக்க இளநீர் கொண்டு வரச் சொல்லித் தன் சேவகர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். கலெக்டரின் உத்தரவை ஏற்றச் சேவகர், அருகில் உள்ள ஒரு தென்னந்தோப்பிற்கு சென்று இளநீர் பறிக்க முற்பட்டார். அங்கிருந்த விவசாயியோ அந்தத் தோப்பில் விளையும் இளநீர் சுவாமி கைலாசநாதரின் அபிஷேகத்திற்கு பயன்படுத்தக்கூடியது என்று சொல்லி இளநீரை பறிக்க விடாமல் தடுத்தார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட கேப்டன் துரை கோபத்துடன் தோப்பிற்கு வந்து, 'இந்தத் தோப்பிலுள்ள இளநீருக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு? இப்போ பறிச்சு போடப்போறியா இல்லையா' என்று விவசாயியை அதட்டினார். கலெக்டரின் உத்தரவைத் தட்ட முடியாத விவசாயி, ஒரு இளநீரை பறித்துப் போட்டார். என்ன ஆச்சர்யம்! அந்த இளநீரில் மூன்று கொம்புகள் முளைத்திருந்தன. அதனை கண்ட கலெக்டர் பயந்து விட்டார். உடனே கோயிலுக்குச் சென்று இறைவனிடம் மன்னிப்பு கேட்டதோடு மட்டும் அல்லாமல், தினசரி பூஜைக்காக, ஆறரை துட்டு என்று அழைக்கப்பட்ட 26 சல்லி பைசாவை காணிக்கையாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இந்த முக்கொம்பு தேங்காய், ஒரு கொம்பு ஒடிந்து, தற்போது இரண்டு கொம்புகளுடன் மட்டுமே காட்சித் தருகிறது.
சுவாமி கைலாசநாதரை வணங்கினால் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று வாழலாம்.
கிழக்கு நோக்கிய தனி கருவறையில் அழகிய பொன்னம்மை ஒரு கரத்தில் மலர் ஏந்தியும், மற்றொரு கரத்தைக் கீழே தொங்கவிட்டபடியும் நின்ற கோலத்தில் காட்சித் தருகிறாள். இந்த அம்மையை வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
தேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரக கோவில்
ராமபிரான் கடலின் நடுவே நவக்கிரக பூஜை செய்த தலம்
ராவணன் சீதையை கவர்ந்து சென்று அசோகவனத்தில் சிறை வைத்தான். இதை அறிந்த ராமன் சீதையை மீட்பதற்காக தென்திசை நோக்கி வந்தார். தேவசாஸ்திரங்களிலே குறிப்பிட்டது போல் எந்த ஒரு காரியம் செய்வதற்கும் முன்பாக பிள்ளையார் பூஜை, நவக்கிரக பூஜை செய்வது வழக்கம். அதன்படி ராமபிரானும் உப்பு படிவங்கள் நிறைந்த இடத்தில் விநாயகரை பூஜை செய்தார். அதுவே தற்போது ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள உப்பூர் வெயிலுகந்த விநாயகரானது.
பின்பு 15 கி.மீ. தொலைவிலுள்ள தேவிபட்டினம் வந்த ராமபிரான் தமது கையால் கடலின் நடுவே ஒன்பது பிடி மணலால் நவக்கிரங்களை பிரதிஷ்டை செய்து நவக்கிரக பூஜை செய்தார். புராண காலம் தொட்டு இத்தலத்தில் ஆரவாரமில்லாத கடலின் நடுவே 9 கல் சிலைகளாக நவக்கிரகங்கள் அமைந்த அற்புத காட்சி ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது.
நவக்கிரகங்களும் நவபாஷாணக் கற்களால் (ஒன்பது வகையான நச்சுப் பொருட்கள் மூலம் பஸ்பமாக்கப்பட்டு உருவாக்கப்பட்ட கல்) ஆனவை. இதில் 9 கிரகங்களும் சூர்யன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு மற்றும் கேது என வரிசையாக உள்ளன.
இத்தலத்திலே பார்வதியும், பரமேஸ்வரனும் சௌந்தர்ய நாயகி சமேத திலகேஸ்வரராக எழுந்தருளி, இராமபிரானுக்கு ஆசிகள் வழங்கினார்கள். மேலும் ராமபிரானுக்கு சனி தோஷத்தை நிவர்த்தி செய்த தலம் இதுவேயாகும்.
பாவங்கள் தீர, பிதுர்கடன் கழிக்க அருளும் தலம்
முன்ஜென்ம பாவங்கள் தீர, பிதுர்கடன் கழிக்க, தர்ப்பணம், ஸ்ரார்த்தம் முதலியவை இத்தலத்தில் செய்யலாம். நவக்கிரக தோஷங்கள் விலக இங்கு வழிபடலாம். இவை தவிர குழந்தை பாக்கியம், ஆயுள் , கல்வி, செல்வம் பெருகவும் இங்கு பிரார்த்தனை செய்யலாம். அனைவரும் இங்குள்ள நவக்கிரகங்களை தொட்டு அவரவர் கைகளாலேயே அபிஷேகம், அர்ச்சனை செய்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.
ஆடி அமாவாசை திருவிழா
இத்தலத்தில் நடைபெறும் ஆடி அமாவாசை பத்து நாள் திருவிழாவின்போது, நாடு முழுவதும் இருந்து 1 லட்சம் பேர் தீர்த்தம் ஆட கூடுவது வெகு சிறப்பு. தை அமாவாசை அன்றும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவர்.
ஆலகிராமம் எமதண்டீஸ்வர சுவாமி கோவில்
பிரதோஷ நாளில் மூச்சு விடும் நந்தி
திண்டிவனம்- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், இடையில் உள்ளது கூட்டேரிப்பட்டு. இங்கிருந்து மேற்கே சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் ஆலகிராமம் எமதண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இறைவன் திருநாமம் எமதண்டீஸ்வரர். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி.
இக்கோவிலில், மூலவரான எமதண்டீஸ்வரர் கிழக்கு நோக்கிய கருவறையில் சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார். செவ்வக வடிவ ஆவூடையாரில், இங்கு மூலவராக ஈசன் எழுந்தருளியிருப்பது அபூர்வமானதாகக் கருதப்படுகிறது. மூலவர் கருவறையினுள்ளே, பூசனைகள் செய்யும் போது, யாரோ நீரினுள்ளிருந்து வித்தியாசமான மூச்சு விடும் ஒலியைப் போல, ஓர் ஒலியை மக்கள் கேட்டுள்ளார்கள்.
பிரதோஷ நாளில் இக்கோவில் நந்தி விடும் மூச்சுக் காற்று கேட்பதாகப் பொதுமக்கள் கூறுகிறார்கள். அதை நீருபிக்கும் விதமாக நந்தியின் நாசித துவாரங்கள் அமைந்திருப்பதை
அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். பிரதோஷ அபிஷேகத்தின்போது காற்றுக் குமிழ்கள் நந்தியின் நாசித் துவாரத்திலிருந்து வெளியேறுவதையும் குறிப்பிடுகிறார்கள்.
இந்தத் தலத்தில் திருமணம் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இது தவிர சஷ்டியப்தப் பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், போன்றவை இங்குச் செய்வது விசேஷமாகக் கருதப்படுகிறது.
இத்தலத்து சிவன் கால அனுக்கிரக மூர்த்தி ஆதலால் காலசர்ப்ப பரிகாரம் செய்வதற்கு ஏற்ற இடமாகும்.
சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்
சிற்பத்தின் ஒரு காதிலிருந்து மறு காது வரை மிக நுண்ணிய துளை அமைந்திருக்கும் அதிசயம்!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகிலுள்ள, சுசீந்திரத்தில் அமைந்துள்ளது தாணுமாலயன் கோவில். இக்கோவிலில் பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் அருள்பாலிக்கிறார்கள். இந்து மதத்தின் முக்கியமான தெய்வங்கள் அனைவருக்கும் இங்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இக்கோவில் ஒன்பதாம் நூற்றாண்டில் சோழ வம்சத்தால் கட்டப்பட்டது. பின்னர் திருமலை நாயக்கர் மற்றும் திருவிதாங்கூர் மன்னர்களால் விரிவாக்கங்கள் செய்யப்பட்டன. மதுரை, ஆவுடையார் கோவில், திருநெல்வேலி, கிருஷ்ணாபுரம் கோவில்களைப் போல, இக்கோவிலின் கட்டிடக் கலையும், சிற்பக் கலையும் மிகவும் நுணுக்கமும், அற்புத அழகும் வாய்ந்தவை.
இக்கோவிலில் கலை வேலைப்பாடுகள் மிகுந்த சில மண்டபங்கள் உள்ளன. அவை
1. கலைநயத்துடனான சிற்பங்களுடன் கூடிய செண்பகராமன் மண்டபம்.
2. இசைத்தூண்கள் கொண்ட குலசேகர மண்டபம்.
3. திருக்கல்யாணம் நடக்கும் ஊஞ்சல் மண்டபம்.
4. வேனிற்காலத்தில் மும்மூர்த்திகள் ஓய்வெடுக்கும் வசந்த மண்டபம்.
5. பல இறை வடிவ சிற்பங்களை கொண்ட சித்திர சபை.
கோவிலின் மிகவும் கவர்ச்சிகரமான அம்சங்களில் ஒன்று ஒரே கல்லில் செதுக்கப்பட்ட நான்கு இசைத்தூண்கள் ஆகும். 1035 நுணுக்கமாக செதுக்கப்பட்ட தூண்களைக் கொண்ட நடன மண்டபமும் உள்ளது. இம்மண்டபத்து தூண்களில் ஒரே மாதிரியாக வடிவமைக்கப்பட்டுள்ள பாவை விளக்கு சிற்பங்கள் உள்ளன. இப்பாவை விளக்கு சிற்பங்களில் தான் அந்த காலங்களில்,இரவு நேரங்களில் விளக்குகள் ஏற்ற பயன்படுத்தப்பட்டது.
முருகன் சன்னதி மண்டபத்தில் உள்ள தூணில் அமைந்துள்ள தர்மராஜா சிற்பம், அதி அற்புதமான அழகுடனும், நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுடனும், ஆச்சரியமும் பிரமிப்பும் அடைய வைக்கும் நம் முன்னோர்களின் விஞ்ஞான தொழில்நுட்பத் திறனையும் விளக்குவதாக அமைகின்றது. இச்சிற்பத்தில் நம்மை வியக்க வைக்கும் அம்சம் என்னவென்றால், ஒரு 0.5 மி.மீ. விட்டமுள்ள சிறிய குச்சியை ஒரு காதின் வழியே நுழைத்தால் அது மறு காது வழியாக வெளியே வருகின்றது. இவ்வளவு மிகச் சிறிய துளையை, சிலையின் முக அகலத்திற்கு ( சுமார் ஒரு அடி) எந்த உபகரணத்தை கொண்டு அமைத்தார்கள் என்பது இன்றுவரை விடை கிடைக்காத கேள்வியாக உள்ளது.
திருச்சேறை செந்நெறியப்பர் கோவில்
கடன் தொல்லைகள் தீர்க்கும் திருச்சேறை ருண விமோசனர்
கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் திருவாரூர் வழியில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருச்சேறை. இறைவன் திருநாமம் செந்நெறியப்பர்.
இங்கு தனி சன்னதியில் 'ருண விமோசனராய்' அருள்பாளிக்கிறார் பரமேஸ்வரன். தொடர்ந்து 11 திங்கட்கிழமைகள் அர்ச்சனை செய்து, 11 வது வாரம் அபிஷேக ஆராதனை செய்ய, அனைத்து வித கடன் தொல்லைகளும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இச்சன்னதியின் முன் நின்று"கூறை உவந்தளித்த கோவே யென்று அன்பர் தொழச் சேறை உவந்திருந்த சிற்பரமே" என மனமுருக 11 முறை பாராயணம் செய்தால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும்.
ஒருவர் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் அடுத்த்தடுத்த பிறவிகளில் தொடர்கிறது. முன்வினைப் பயன்கள் அனைத்தும் பிறவிக் கடன்களாகின்றன. முற் பிறவி தீவினைகள் நீங்கவும், இப் பிறவியின் கடன்கள் தீரவும், வறுமை நீங்கி சுபிட்சமான வாழ்க்கை கிடைத்திடவும் வணங்க வேண்டிய இறைவன், திருச்சேறையில் செந்நெறியப்பர் ஆலயத்தில், தனி சந்நதி கொண்டுள்ள 'ருணவிமோசன லிங்கேஸ்வரர்'. ருணவிமோசனரை 11 திங்கட்கிழமைகள் அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, பின்னர் மகாலஷ்மியையும், ஜேஷ்டா தேவியையும், பைரவரையும் வணங்கினால், வழிபடுபவரது வறுமையும், கடன்களும் தீரும்.
கீழசூரியமூலை சூரியகோடீசுவரர் கோவில்
சூரிய பகவான் அனுதினமும் தன் ஒளிக்கதிர்களால் சிவபெருமானை ஆராதனை செய்யும் தலம்
கும்பகோணத்தில் இருந்து, கஞ்சனூர், திருலோகி கிராமங்களை அடுத்து 15.கி.மீ தொலைவில், சூரியனார் கோவிலுக்கு அருகே அமைந்துள்ளது கீழசூரியமூலை என்ற தலம். இறைவன் திருநாமம் சூரியகோடீசுவரர். இறைவி பவளக்கொடி. கருவறையில் ஈசுவர லிங்கத்திற்கு மேல் ஓராயிரத்திற்கு மேலான 'ஏகமுக'
சூரிய பகவான் அனுதினமும் தன் ஒளிக்கதிர்களால் சிவபெருமானை ஆராதனை செய்யும் தலம்
கும்பகோணத்தில் இருந்து, கஞ்சனூர், திருலோகி கிராமங்களை அடுத்து 15.கி.மீ தொலைவில், சூரியனார் கோவிலுக்கு அருகே அமைந்துள்ளது கீழசூரியமூலை என்ற தலம். இறைவன் திருநாமம் சூரியகோடீசுவரர். இறைவி பவளக்கொடி. கருவறையில் ஈசுவர லிங்கத்திற்கு மேல் ஓராயிரத்திற்கு மேலான 'ஏகமுக' ருத்திராட்சத்தினால் ஆன பந்தல் உள்ளது.
சூரியனுக்கு மூலாதார சக்தியை கொடுத்ததால் சூரிய மூலை என இத்தலம் அழைக்கப்பட்டது. சூரியனார் கோவிலில் தன் குஷ்ட நோய் நீங்கப் பெற்ற சூரியன், இத்தலத்தில் தன் முழு சக்தியையும் பெற்றார்
சூரிய கோடீஸ்வரரை காலை முதல் மாலை வரை சூரியபகவான் தனது பொற்கரங்களால் ஆராதனை செய்வதாக ஐதீகம். அதற்கு ஏற்ப காலை சூரிய உதயம் முதல், மாலை சூரிய அஸ்தமனம் வரை மூலவரின் நிழல் சுவரில் தெரியும். மற்ற நேரங்களில் தெரிவதில்லை. பல ஆலயங்களில் கருவறை இறைவன் மீது ஓர் ஆண்டில் சில நாட்கள் மட்டுமே சூரிய ஒளி படரும். இப்படி ஒளி படுவதை சூரியன் செய்யும் சிவபூஜை எனக் கூறுவர். ஆனால், இந்த ஆலய இறைவன் மீது தினம் தினம் கதிரவனின் பொற் கதிர்கள் சில நிமிடங்களாவது படர்ந்து செல்வது அற்புதம் ஆகும்.
சூரிய பகவான் பிரதோஷ வழிபாட்டின் பலனைப் பெற்ற தலம்
ஒரு சமயம் சூரிய பகவானுக்கு அனைத்து உலகங்களிலும் உள்ளவர்கள் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு பயன் அடைவதைக் கண்டு, தன்னால் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம் ஏற்பட்டது. பிரதோஷ நேரம் என்பது தினசரி மாலைப் பொழுது. சூரியன் மறையும் நேரம் அது என்பதால் சூரியனால் அந்த வழிபாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை. மேலும் பிரதோஷ நேரம் தன்னுடைய பணி நேரம் என்பதால், அந்த வழிபாட்டில் தன்னால் நிரந்தரமாக எப்போதுமே கலந்து கொள்ள முடியாமல் போய்விடுமே என எண்ணி வேதனை அடைந்தார். தன் வேதனையையும் வருத்தத்தையும் தன் சீடனான யக்ஞவல்கிய மாமுனியிடம் எடுத்துரைத்தார் சூரிய பகவான்.
சூரியபகவானிடமிருந்து வேதங்களைக் கற்றவர் யக்ஞவல்கியர். சூரிய பகவானின் வருத்தத்தைக் கேட்ட மாமுனி அவருக்கு ஆறுதல் கூறினார். பின், தான் தினந்தோறும் வழிபடுகின்ற இறைவனான சூரியகோடீஸ்வரரிடம் தன் குருவின் கவலையை எடுத்துரைத்து, தன் குருவின் வேதனையை தீர்த்து வைக்கும்படி வேண்டினார். சூரிய பகவானிடமிருந்து தான் கற்றுக் கொண்ட வேதங்கள் அனைத்தையும் பாஸ்கரச் சக்கர வடிவில் செய்து அவற்றின் பலன்களைப் பொறித்து சூரிய கோடீஸ்வரருடைய பாதங்களில் காணிக்கையாகச் அர்ப்பணித்தார். அப்படி அவர் சமர்பித்த வேதமந்திர சக்திகள் ஒன்று சேர்ந்து இலுப்பை மரமாக வளர்ந்து, பின்னர் அந்த இடமே இலுப்பை மரக் காடாகியது. மாமுனிவர் இலுப்பை மர விதைகளிலிருந்து எண்ணெய் எடுத்து மாலை வேளைகளில் கோடி தீபங்கள் ஏற்றி சூரியகோடீசுவரரை வழிபட ஆரம்பித்தார்.
பிரதோஷ காலத்தில் ஏற்றி வைத்த தீபங்கள் அப்படியே சுடர்விட்டுக் கொண்டடிருக்க, மறுநாள் காலையில் உதித்தெழுந்த சூரியபகவான் அந்த கோடி தீபங்களைக் கண்டு வணங்கி பிரதோஷ வழிபாட்டின் பலனைப் பெற்றார்.
கண் பார்வை பாதிக்கப்பட்டவர்கள் வழிபட வேண்டிய தலம்
சூரிய தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள இறைவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்தால் தோஷம் நீங்கும். நிம்மதி கிடைக்கும். ஒரு கண் பார்வை, மாறுகண் பார்வை, மங்கலான கண் பார்வை, பார்வை இழப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இத் தலத்திற்கு வந்து சூரிய கோடீஸ்வரரை வழிபட்டால் பலன் பெறுவது கண்கூடான நிஜம். இக்கோயிலில் அன்னதானம் செய்தால், முன்னோர்களுக்கு நாம் செய்த பாவங்களும், அதனால் ஏற்பட்ட தோஷங்களும் விலகும்.
மேலக்கடம்பூர் அமிர்தகடேசுவரர் கோவில்
சனி பகவான் கழுகு வாகனத்துடன் இருக்கும் அபூர்வக் காட்சி
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில், எய்யலூர் சாலையில் அமைந்துள்ள தேவாரத் தலம் மேலக்கடம்பூர். இறைவன் திருநாமம் அமிர்தகடேசுவரர். இறைவி வித்யூஜோதிநாயகி.
பொதுவாக சனி பகவான் காக வாகனத்துடன்தான் காட்சி தருவார். ஆனால் இத்தலத்தில் கருட வாகனத்துடன் அவர் இருப்பது ஒரு அரிய காட்சியாகும்.
சனி பகவானுக்கு ஆரம்ப காலத்தில் கழுகுதான் வாகனமாக இருந்தது. ராமரின் தந்தையான தசரதர், அவருக்கு கழுகுக்கு பதிலாக காகத்தை கொடுத்தார். இங்குள்ள சனி பகவான் கழுகு வாகனத்துடன் காட்சி தருகிறார். எனவே, இவர் ராமாயண காலத்திற்கும் முற்பட்டவர் என்கிறார்கள்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது.
திருவாரூர் தியாகராஜர் கோவில்
எழுந்து நிற்கும் நிலையில் காட்சி தரும் நந்தி
பொதுவாக சிவாலயங்களில் அமர்ந்த நிலையில் காட்சி தரும் நந்தி, சிவபெருமானின் முன்பு அமர்ந்திருப்பார். ஆனால் திருவாரூர் தியாகராஜர் கோவிலில், தியாகராஜப் பெருமானுக்கு முன்பு உள்ள நந்தியோ நின்ற கோலத்தில் உள்ளார், இதற்கு பின்னால் ஒரு சுவாரசியமான காரணம் உள்ளது.
சிவபெருமானின் நண்பரும், தேவாரம் பாடிய மூவர்களில் ஒருவருமான சுந்தரர் திருவாரூரில் வசித்து வந்த பரவை நாச்சியார் என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். அதற்காக அவர் சிவபெருமானை பரவை நாச்சியாரிடம் தனக்காக தூது செல்ல வேண்டினார். சுந்தரரின் காதலியிடம் துாது சென்றார் சிவபெருமான். அப்போது தன் வாகனமான நந்தி மீது செல்லாமல், திருவாரூர் வீதிகளில் நடந்தே போனார். இதனால் வருத்தமடைந்த நந்தி, இதன் பின் யாருக்காகவும், எதற்காகவும் சிவபெருமானை நடக்க விடக் கூடாது என்றும், அவர் அழைத்தால் உடனே புறப்படவும் தயாராக இருக்க வேண்டும் என்றும் நந்தி முடிவு செய்தார். இதுவே இங்கு நந்தி நின்ற நிலையில் காட்சியப்பதற்கான காரணமாகும்.
பொதுவாக நந்தியின் வடிவமானது கருங்கல்லால் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இத்தலத்தில் உலோகத்தினால் நந்தி உருவாக்கப்பட்டிருப்பது தனிச் சிறப்பாகும். மேலும் திருவாரூரைச் சுற்றியுள்ள மற்ற சப்த விடங்கத்தலங்களிலும் நந்தி நிற்கும் நிலையில் இருப்பதும், உலோகத்தினால் செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நந்தியை வழிபட்டால் செய்த பாவங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்பது நம்பிக்கை.இவரை தரிசித்தால் தடைகள் அகன்று சுபவிஷயங்கள் நடந்தேறும்.
திருச்சி வெளிகண்டநாத சுவாமி கோவில்
சூரியன்,சந்திரனின் அபூர்வக் கோலம்
திருச்சி மாநகரம் மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தூரத்திலுள்ள பாலக்கரை பகுதியில் அமைந்துள்ளது வெளிகண்டநாத சுவாமி கோவில். இறைவி சுந்தரவல்லி.
பொதுவாக எல்லா சிவாலயங்களிலும் சூரியன்,சந்திரன் உள்பட எல்லா நவக்கிரகங்களும் நின்ற நிலையில் எழுந்தருளியிருப்பார்கள். ஆனால் இத்தலத்தில் வெளிகண்டநாத சுவாமி கருவறைக்கு நேர் எதிர் திசையில் சூரியனும், சந்திரனும் அமர்ந்த கோலத்தில் எழுந்தருளியிருக்கிறார்கள். இவர்களின் இந்தக் கோலம் மிகவம் விசேடமானது என்று தலபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சூரிய பூஜை வழிபாடு என்பது எல்லா சிவாலயங்களிலும், தமிழ் மாதங்களில், குறிப்பிட்ட மூன்று நாட்கள்தான் நடைபெறுவது வழக்கம். ஆனால் இக்கோவிலில் மாசி மற்றும் ஐப்பசி மாதம் முழுவதும் சூரிய பூஜை நடைபெறுவது தனிச் சிறப்புடையதாகும்.
ஏரிக்குப்பம் யந்திர சனீஸ்வரர் கோவில்
லிங்க வடிவில் காட்சி தரும் யந்திர சனீஸ்வரர்
நவகிரகங்களில் முக்கியத்துவம் வாய்ந்த சனி பகவான் சூரிய பகவானுக்கும், சாயா தேவிக்கும். புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையன்று பிறந்தார். இவர், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி-சந்தவாசல் சாலையில் 10 கி.மீ. தொலைவில் உள்ள ஏரிக்குப்பம் ஊருக்குத் தெற்கே 1 கி.மீ. தொலைவில் உள்ள காரிகைக் குப்பம் என்ற சிற்றூரில் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். கோயில் சுருவறையில், வேறெங்கும் காண இயலாத வகையில், லிங்க வடிவில் சனீஸ்வரன் காட்சியளிப்பது இந்த கோயிலின் தனிச் சிறப்பு
மூலவர் சனீஸ்வரரின் மேனியில் யந்திரம் பொருத்தப்பட்டுள்ளதால் லிங்க வடிவில் காட்சி தரும் அவரை யந்திர சனீஸ்வரர் என்றும் கூறுகின்றனர். ஆறடி உயரமும், இரண்டரை அடி அகலமும் உள்ள அந்த யந்திர சனீஸ்வரர் தாமரைப் பீடத்தில் நின்று கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார் என்பதும் அந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு. யந்திர சனீஸ்வரர் நின்றிருக்கும் பீடத்தில் மகாலட்சுமி யந்திரமும், ஆஞ்சநேயர் யந்திரமும், சனியின் தாயாரான சாயா தேவியின் யந்திரமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. கண்களைக் குறிக்கும் வகையில் வலதுபுறம் சூரியனும், இடதுபுறம் பிறைச் சந்திரனும் பொறிக்கப்பட்டுள்ளனர். சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் சனீஸ்வர பகவானின் வாகனமான காகத்தின் உருவம் உள்ளது.
சனீஸ்வரரின் மார்பு பகுதியில் அறுகோண யந்திரமும், நீர், நெருப்பு சம்பந்தப்பட்ட யந்திரமும் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் சிவன், ஆஞ்சநேயர், சனீஸ்வரன் ஆகியோருக்கான பீஜாட்சர மந்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஒரு கண்ணாடியை இந்த யந்திரத்தின் முன் வைத்து பார்த்தால், எழுத்துக்கள் நேராகத் தெரியும்படி அமைந்துள்ளது. இதுபோன்றதொரு அமைப்புடைய சிலை வடிவத்தை, அதிலும் சனீஸ்வர அம்ச சிலாரூபத்தை ஏரிக்குப்பம் தவிர வேறு எங்கும் காண்பதரிது.
பொதுவாக சனி பகவான் சன்னதி மேற்கு நோக்கி இருக்கின்ற நிலையில் இங்கு மட்டும் யந்திர சனீஸ்வரர் கிழக்கு நோக்கி திறநத வெளியில் காட்சியளிக்கிறார்.
யந்திர சனீஸ்வரர் கோவில் வரலாறு
சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை ஆண்ட சம்புவராய மன்னர்களால் இக்கோவில் கட்டப்பட்டது. சம்புவராய மன்னரின் படைத்தளபதி ஒருவர் இந்த வழியாக சென்றபோது விபத்தில் பலத்த காயமடைந்தார். சனிதோஷம் இருப்பதால் இந்த விபந்து ஏற்பட்டதாகவும் அதன் பாதிப்பில் இருந்து விலகிட இந்த இடத்தில் சனீஸ்வரர் சிலையை மூல மந்திரத்துடன் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டும்படி படை தளபதிக்கு அசரீரி கூறியது. அதையடுத்து மன்னரின் அனுமதியுடன் லிங்க வடிவில்,மூல மந்திரத்துடன் சனீஸ்வரர் சிலையை தளபதி பிரதிஷ்டை செய்தார்.
நாசா விண்வெளிக் கழக நிபுணர்கள் கண்டுபிடிப்பு
சனி பகவானின் சிறப்பு குறித்து நாசா விண்வெளிக் கழக நிபுணர்கள் கூறுகையில் சனி கிரகத்தின் வடதுருவமும், யந்திர சனீஸ்வரரின் மூல மந்திர பிரதிஷ்டையும் நேர்கோட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்
சனி தோஷ நிவர்த்தி தலம்
கண்டகச் சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி இவை மூன்றும் கோச்சாரத்தில் இருக்கும்போது நவக்கிரக ஹோமமும், சனிபகவானுக்கு சாந்தியும் செய்வது அவசியம். இத்தோஷம் உடையவர்கள் இவரை வழிபடுவதால் நிவாரணம் பெறலாம்.
புதிய தொழில் தொடங்குபவர்கள்,நீதிமன்ற வழக்குகளால் அவதிப்படுபவர்கள், வீடு கட்டுபவர்கள் ஆகியோர் இக்கோவிலுக்கு வந்து அதன் ஆவணங்களை யந்திர சனீஸ்வரரின் மடியில் வைத்து வணங்குவது சிறப்பாகும். மேலும் கடன் பிரச்சனை, குழந்தைப்பேறு, பில்லி சூனியம் போக்குதல், விவசாயம் ஆகியவற்றுக்கும் இவரை வணங்கினால் நல்லபலன்கள் கிடைக்கும்.
வாரம்தோறும் சனிக்கிழமைகளில் ஏரிக்குப்பம் கிராமம் திருவிழாக்கோலம் பூண்டுவிடுகிறது. பல்வேறு ஊர்களிலிருந்து வரும் பக்தர்கள் ஏரிக்குப்பம் சனீஸ்வர பகவானை வணங்கி அவரது அருள் பெற்று தோஷம் நீங்கிச் செல்கிறார்கள்.
சிவபுரம் சிவகுருநாதசுவாமி கோவில்
காலடியில் ராகுவுடன் இருக்கும் தட்சிணாமூர்த்தியின் அபூர்வக் கோலம்
கும்பகோணம் - திருவாரூர் நெடுஞ்சாலையில் சாக்கோட்டை சென்று, சாக்கோட்டையிலிருந்து சிவபுரி கிளைப் பாதையில், 2 கி. மீ. சென்றால் தேவாரத் தலமான சிவபுரத்தை அடையலாம். இறைவன் திருநாமம் சிவகுருநாதசுவாமி. இறைவியின் திருநாமம் ஆர்யாம்பாள், சிங்காரவல்லி.
இத்தலத்தில், பூமிக்கடியில் ஓர் அடிக்கு ஒரு சிவலிங்கம் இருப்பதாக ஐதீகம். இதனாலேயே ஞானசம்பந்தர் முதலியோர் இத்தலத்தில் நடக்காமல், அங்கப்பிரதட்சணம் செய்து சுவாமியை தரிசித்துப் பின்பு ஊர் எல்லைக்கு அப்பால் தள்ளி நின்று பெருமானைப் பாடியதாக வரலாறு. அவ்வாறு பாடிய இடம் இன்று 'சுவாமிகள் துறை ' என்றழைக்கப்படுகிறது. சிவாலயங்களில் அங்கப்பிரதட்சணம் செய்யக்கூடிய சிறப்புமிக்க தலம் இது ஒன்றேயாகும்.
பொதுவாக சிவாலயங்களில், சுற்று சுவற்றில் காட்சி தரும் தட்சிணாமூர்த்தியின் காலடியில் முயலகன் இருப்பார். ஆனால் இத்தலத்தில் காலடியில் முயலகன் மட்டுமின்றி ராகுவும் இருப்பது ஒரு விசேடமான அம்சமாகும். இவரை வழிபட குரு, நாகதோஷம் நீங்கும். தட்சிணாமூர்த்திக்குப் பக்கத்து சுவரில் திருமால் வெண் பன்றியாக இருந்து தாமரை மலர்களைக் கொண்டு வழிபடும் ஐதீக சிற்பம் உள்ளது.
சிவசைலம் சிவசைலநாதர் கோவில்
சடைமுடியோடு காட்சியளிக்கும் சிவபெருமான்
திருநெல்வேலியிலிருந்து மேற்கே சுமார் 57 கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ள தேவார வைப்புத் தலமான சிவசைலத்தில் அமைந்துள்ளது சிவசைலநாதர் கோவில். இக்கோவிலின் புராணப் பெயர் 'அத்தீச்சுவரம்' ஆகும்.இறைவன் திருநாமம் சிவசைலநாதர். இறைவியின் திருநாமம் பரமகல்யாணி. இத்தலம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கடனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இத்தலத்தில் உறையும் மூலவர் சிவசைலநாதரை நான்கு திசைகளில் இருந்தும் வழிபடலாம். மேற்கு திசையில் கருவறை வாயில் வழியாகவும், மற்ற மூன்று திசைகளில் சுற்றுச்சுவரில் உள்ள சாளரங்களின் வழியாகவும் சுவாமியை தரிசிக்கலாம். இப்படி கருவறையின் மூன்று சுற்று சுவர்களிலும் சாளரம் உள்ள சிவாவயத்தை காண்பது அரிது.
சிவசைலம் திருக்கோவிலை கட்டியவன் சுதர்சன பாண்டிய மன்னன். பிற்காலத்தில் ஒர் நாள் சிவசைலநாதரை தரிசிக்க சுதர்சன பாண்டிய மன்னன் கோவிலுக்கு வர, அப்போது கடனை ஆற்றில் வெள்ளம் பெருக்கு எடுத்து ஓடியது. இதனால் மன்னன் ஆற்றை கடந்து கோவிலுக்கு செல்ல முடியவில்லை. அதற்குள் இருட்டி விடவே அர்த்தசாம வழிபாடு முடிந்து கோவில் நடை சாத்தப்படுகிறது. எனவே மன்னனுக்கு, சுவாமிக்கு சாற்றிய பூ மாலை மற்றும் பிரசாதங்களை அர்ச்சகர் கொண்டு வந்து தருகிறார். அதனை பெற்று மகிழ்ந்த மன்னன் மாலையை கண்களில் ஒற்றிக் கொள்ள முற்பட்ட போது அதில் பெண்ணின் நீள தலை முடி ஒன்று இருப்பதை கண்டு சினம் கொள்கிறார். சுவாமிக்கு சாற்றிய மாலையில் கூந்தல் முடி எப்படி வந்தது என ஆவேசமாக கேட்க, செய்வதறியாத அர்ச்சகர் அது சிவசைலநாதரின் தலையில் உள்ள சடைமுடியே என கூறிவிடுகிறார். என்ன சுவாமியின் தலையில் சடைமுடியா? அந்த அதிசயத்தை நாளை எனக்கும் காட்ட வேண்டும் எனக் கூறி சென்று விடுகிறார். மறுநாள் கோவில் திறக்கப்பட மீண்டும் மன்னன் தன் படைகளுடன் திருக்கோவிலுக்கு வருகிறார். தான் கூறிய பொய்யை நினைத்து பயந்து சிவசைலநாதரிடம் மன்னிப்பு கேட்டு தன்னை காத்து அருளும் படி அர்ச்சகர் மனதினுள் வேண்டிக் கொண்டே, மன்னன் முன்னிலையில் சுவாமி மீது சாத்தப்பட்டிருந்த நாகாபரணத்தை விலக்கி காட்டிட, என்ன அதிசயம் சிவசைலநாத லிங்கத் திருமேனி சடை முடியோடு காட்சியளித்ததாம். இதனைக் கண்டு அதிசயித்த மன்னன் சிவபெருமானை போற்றி துதித்து, அர்ச்சகருக்கும் வெகுமதி வழங்கி சிறப்பு செய்தான்.
இங்குள்ள இறைவன் சிவசைலநாதர் சுயம்பு மூர்த்தி ஆவார். இவர் கருவறையில் சற்றே சாய்ந்த லிங்கத் திருமேனியாய் மேற்கு திசை நோக்கி காட்சியளிக்கிறார். இவர் அர்ச்சகரை காக்க சடைமுடியோடு காட்சியளித்ததால், இன்றும் இந்த லிங்கத் திருமேனியின் பின்புறம் சடைமுடிகளின் ரேகைகள் உள்ளன. இதனை நாம் பிரகார சுற்றுச்சுவரில் உள்ள சாளரம் வழியாக தரிசிக்கலாம்.