எழுமேடு பச்சைவாழியம்மன் கோவில்
பச்சை நிற சேலை மட்டுமே அணியும் அம்மன்
சிலம்பு மற்றும் உடுக்கையை இசைத்தவாறு செய்யப்படும் பூஜை
கடலூர்-பண்ருட்டி சாலையில் சுமார் 16 கி.மீ தொலைவில் உள்ளது எழுமேடு கிராமம். இந்த கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அம்மனுக்கு எப்பொழுதும் பச்சை நிற சேலை மட்டுமே அணிவிக்கிறார்கள். மேலும் காணிக்கையாக பச்சை நிற சேலை மட்டுமே வழங்குகிறார்கள். இந்த அம்மன் இந்த கிராமத்தின் காவல் தெய்வமாக விளங்குவதால், பூஜை செய்யும்போது, அம்மனுக்கு மிகவும் பிடித்தமான சிலம்பு மற்றும் உடுக்கையை இசைத்தவாறு பூஜை செய்கிறார்கள். இப்படி இசைத்தவாறு பூஜை செய்வது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
திருமண பாக்கியம் கிடைக்கவும், பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேரவும் இங்கு வந்து வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அம்மனுக்கு பச்சை நிற புடவை சாத்தி தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
தில்லை காளியம்மன் கோவில்
தில்லை காளியம்மன்
வெள்ளை புடவை மட்டுமே அணியும் காளியம்மன்
சிதம்பர நடராஜர் கோயிலில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தில்லை காளி கோவில். தமிழகத்தில் இருக்கும் அஷ்ட காளி கோவில்களில் தில்லை காளி கோவிலும் ஒன்றாகும். சிதம்பரத்தின் காவல் தெய்வமாக தில்லை காளியம்மனே திகழ்கிறார். சிவபெருமானை பிரிந்து, காளி தில்லை நகரத்தின் எல்லைக்குச் சென்று அமர்ந்ததன் பின்னணியில் ஒரு புராண நிகழ்ச்சி உள்ளது.
ஒரு சமயம் சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் தங்களுள் யார் பெரியவர் என்ற வாக்குவாதம் வந்தது. அப்போது பார்வதி தேவி, 'சக்தியில்லையேல் சிவனில்லை' என வாதாட, கோபமுற்ற சிவபெருமான் உக்கிர காளியாக உருமாறும்படி அவரை சபித்து விட்டார். இதனால் சாப விமோசனம் கேட்ட பார்வதி தேவியிடம், 'அசுரர்களை அழிக்கவே உன்னை உக்கிரகாளியாக மாற்றினேன். காளி உருவில் போரிட்டு அசுரர்களை அழிப்பாய். உன் கடமைகள் முடிந்த பிறகு தில்லை மரங்கள் சூழ்ந்த இடத்திலிருந்து என்னை நோக்கித் தவம் புரிவாயாக. தக்க தருணம் வரும்போது மீண்டும் என்னுடன் வந்து இணைவாய்' என்று உரைத்தார்.
காலங்கள் ஓடின. காளி தேவி அரக்கர்களை போரில் அழித்து வெற்றி பெற்றார். சிவபெருமானை அடையும் பொருட்டு கடுமையாக தவம் புரிந்தார். அதே நேரத்தில் சிதம்பரத்தில் பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத முனிவர்களுக்கு சிவபெருமான் ஆனந்தத் தாண்டவத்தை காட்டிக்கொண்டிருந்தார். இதனால் கோபம் கொண்ட காளி, 'இத்தனை காலமாக நான் தவம் புரிகிறேன். எனக்கு முதலில் காட்சி தராமல் உங்கள் பக்தர்களுக்குக் காட்சி தருவது என்ன நியாயம்? நானும் உங்களுடன் சேர்ந்து ஆடுகிறேன். யார் முதலில் ஆட்டத்தை நிறுத்துகிறார்களோ அவர்கள் தோல்வியுற்றவர்கள். அவர்கள் ஊர் எல்லையில் போய் அமர வேண்டும் என்று கூறி ஆடத் தொடங்கினர். தாண்டவத்தின்போது சிவபெருமானின் குண்டலம் கீழே விழ, அதை அவர் தனது கால்களில் எடுத்து தனது காதுகளில் மாட்டி ஊர்த்துவ தாண்டவத்தை ஆடினார்.
பெண் என்பதால் சக்தியால் இந்த நடனத்தை ஆட முடியவில்லை. அதனால் தோல்வியுற்று, உக்கிரமாக ஊர் எல்லையில் போய் அமர்ந்தார். அப்போது அனைத்து தேவர்களும் திருமாலும், பிரம்மாவும் அவரை சாந்தம் அடையும்படி கேட்டுக்கொண்டனர். பிரம்மா அவரை நான்கு வேதங்களை குறிக்கும் வகையில் நான்கு முகத்துடன் உருமாறிக்கொள்ள வேண்டினார். அதைப்போலவே காளி பிரம்மசாமுண்டேஸ்வரியாக பிரம்மனை போலவே நான்கு முகங்களுடன் காட்சியளிக்கிறார். இந்த கோயிலில் ஒரு சன்னிதியில் உக்கிரமாக எட்டு கைகளோடு காட்சியளிக்கிறார். இன்னொரு சன்னிதியில் சாந்தமாக பிரம்ம சாமுண்டீஸ்வரியாகவும் காட்சியளிக்கிறார்.
தில்லை காளியம்மனுக்கு வெள்ளை புடவை மட்டுமே அணிவிக்கப்படுகிறது. தில்லை காளியன்னைக்கு தினமும் நல்லெண்ணையால் மட்டுமே அபிஷேகம் செய்கிறார்கள். வேறு அபிஷேகம் செய்தால் காளி குளிர்ந்து விடுவாளோ, அவள் குளிர்ந்தால் தீயவர்கள் பெருகிவிடுவார்களோ என்று அக்காலத்திலிருந்தே வேறெந்த அபிஷேகமும் செய்வதில்லை.உடம்பு முழுவதும் குங்குமம் காப்பிடுதல் செய்யப்படுகிறது. கண்கள் மட்டும் கருமை தீட்டப்பட்டுக் காட்சியளிக்கிறார். இந்த அம்மனை வழிபட்டால், நோய் நொடி தீரும், பிள்ளை வரம் கிட்டும், திருமணத்தடை விலகும். இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் செய்வினை, பில்லி சூனியத்தால் அவதிப்படுபவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள், கடன் தொல்லையிலிருந்து மீள்வார்கள், எதிரிகள் தரும் இன்னல்களிலிருந்து விடுபட வழி தெரியாமல் தவிப்பவர்களுக்கு விடுதலை கிடைக்கும் என்பது ஐதீகம்.
சிதம்பரம் நடராஜர் கோவில்
சிதம்பரம் சிவகாம சுந்தரி அம்மன்
முப்பெரும் சக்தியாக விளங்கும் சிவகாமசுந்தரி அம்மன்
சிவ பக்தர்களுக்கு கோவில் என்றால் அது சிதம்பரம் நடராஜர் கோவில் தான். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலமாக விளங்கும் இக்கோவிலின் மூன்றாவது பிரகாரத்தில், சிவகாம கோட்டம் என்று அழைக்கப்படும் தனி கோவிலில் அன்னை சிவகாம சுந்தரி அம்மன் அருள் பாலிக்கின்றாள். சிவகாம சுந்தரி அம்மன் என்றால், 'சிவனது அழகிய காதலியானவள்' என்று பொருள்படும்.
சிவகாம சுந்தரி அம்மன், இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளின் மகா சக்தியாகக் காட்சி அளிக்கிறாள். இச்சா சக்தி (விருப்ப சக்தி): இது விருப்பங்களையும், ஆசைகளையும், படைப்பாற்றலையும் குறிக்கும் சக்தி ஆகும். ஞான சக்தி (அறிவு சக்தி): இது அறிவையும், ஞானத்தையும், விவேகத்தையும் குறிக்கும் சக்தி ஆகும். கிரியா சக்தி (செயல் சக்தி): இது செயல்களையும், இயக்கத்தையும், படைத்தலையும், அழித்தலையும் குறிக்கும் சக்தி ஆகும்.
இக்கோவில் கருவறையில், பேரழகுத் தோற்றத்தில், சமபங்கம் எனும் சிற்ப நிலையில், சுமார் ஆறடி உயரத்தில், திருமுடி தாங்கும் கிரீடத்துடன், என்றும் வற்றாத அருட்கடல் போன்ற இமைக்காத ஈடிணையற்ற திருக்கண்களும், எள் பூ போன்ற நாசியில் (மூக்கில்) நத்து, புல்லாக்கு, மூக்குத்தி ஆபரணங்கள் மின்ன, முக மண்டலமே முழு நிறைவு தந்திடும் வகையில் அமைந்திட, வலது மேல் கையில் ஜபமாலை, வலது கீழ் கையில் செங்கழுநீர்ப்பூ, இடது மேல் கையில் கிளி கொஞ்சிட, இடது கீழ்க்கை ஒய்யாரமாக தொடையின் மீது படும்படியாக அமைய, தேவர்களும், முனிவர்களும் தஞ்சமடைய வேண்டுகிற - பாடகமும், கொலுசும் அலங்கரிக்கும் திருப்பாதங்களும் கொண்டு சிவகாம சுந்தரி அம்பிகை, பக்தர்களுக்கு நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள்.
சிவகாம சுந்தரி அம்பிகையை வழிபட்டால் பதினாறு பேறுகள் கிடைக்கப் பெறலாம் என்பதை உணர்த்தும் வகையில் அம்பிகையின் கோவிலில் பதினாறு படிகள் அமைந்துள்ளன. அம்பிகையை மனதிற்குள் நினைத்து, குங்குமம், மஞ்சள், வளையல் அணிவித்து வழிபட்டு வந்தால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.
திருமாணிகுழி வாமனபுரீசுவரர் கோவில்
வாமன அவதாரத்தின் போது ஏற்பட்ட தோஷத்தை நீக்க, மகாவிஷ்ணு வழிபட்ட தலம்
எந்நேரமும் திரை போடப்பட்டிருக்கும் மூலவர் சன்னதி
சில விநாடிகள் மட்டுமே தரிசனம் தரும் வாமனபுரீசுவரர்
கடலூரிலிருந்து பண்ருட்டி செல்லும் வழியில் 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் திருமாணிகுழி. இறைவன் திருநாமம் வாமனபுரீசுவரர். இறைவியின் திருநாமம் அம்புஜாட்சி, மாணிக்கவல்லி.
மகாவிஷ்ணு பிரம்மசாரியாக வந்து மாகாபலியிடம் மூன்றடி மண் கேட்டு அவனையழித்தார். மகாபலியை தர்மத்திற்காக அழித்தாலும் அதற்குரிய பழி நீங்க, மகாவிஷ்ணு இங்கு வந்து சிவபெருமானை, ஒரு குழி போன்ற இடத்தில் அமர்ந்து வழிபட்டார் ஆகையால் இக்கோவில் மாணிகுழி என்று பெயர் பெற்றது. (மாணி என்றால் பிரம்மசாரி).
இந்த ஆலயத்தின் ஒரு சிறப்பம்சம், இங்கு மூலவர் வாமனபுரீசுவரரை நாம் நேரடியாக தரிசிப்பது இயலாது. ஏனெனில் எந்நேரமும் மூலவர் சன்னதியில் திரை போடப்பட்டிருக்கும். இறைவனும், இறைவியும் எப்போதும் சிவசக்தியாக சேர்ந்திருக்கும் தலமாக இது கருதப்படுவதால், அவர்களை தொந்தரவு செய்யாமல் இருக்கும் பொருட்டு திரையிடப்பட்டிருக்கிறது. இறைவன் எப்போதும் இறைவியுடன் இருப்பதாகச் சொல்லப்படுவதால், இத்தலத்தில் அர்த்தசாம பள்ளியறை வழிபாடு என்பது தனியே கிடையாது.
இங்கு இறைவனும் இறைவியும் இணைந்து கர்ப்பகிரகத்தில் அருள்புரிகிறார்கள். ஏனைய தலங்களில் போல் இங்கு இறைவனை ஆலயம் திறந்து இருக்கும்போது எல்லாம் தரிசனம் செய்ய முடியாது. பூஜை முடிந்தவுடன் சில விநாடிகள் மட்டுமே இறைவனை தரிசனம் செய்ய முடியும். இறைவனும் இறைவியும் கருவறையில் இணைந்து இருப்பதால், அவர்களுக்கு காவல் புரிய ருத்ரர்களில் ஒருவரான பீமருத்ரர், இறைவன் இறைவிக்கு முன் திரைசீலையாக உள்ளார். எனவே அவருக்கு தான் முதல் அர்ச்சனை, தீபாரதனை ஆகியவை நடைபெறுகின்றன.
சிதம்பரம் நடராஜர் கோவில்
நடராஜப் பெருமானின் குஞ்சிதபாதம்
தீராத வியாதிகளைத் தீர்க்கும் குஞ்சிதபாத தரிசனம்
சிதம்பரத்தில் நடராஜப் பெருமான், தனது இடது பாதத்தை வளைந்து தூக்கித் திருநடனம் ஆடும் கோலத்தில் நமக்கு காட்சி தருகிறார். நடராஜப் பெருமானின் தூக்கிய திருவடிக்கு குஞ்சிதபாதம் என்று பெயர்.
சிவபெருமான் தனது இடது பாகத்தை, தன் மனைவி பார்வதி தேவிக்கு கொடுத்து விட்டார். சிவபெருமானே, நடராஜர் என்னும் பெயரில் நடனம் ஆடுகிறார். அவர் நடனம் ஆடும் போது, மனைவிக்குரிய இடது பாதம், தரையில் பட்டால் அவளுக்கு வலிக்குமே என, இடது காலை உயர்த்திக் கொண்டார்.
எமதர்மராஜன், மார்க்கண்டேயனைத் துரத்திப் பாசக்கயிற்றை வீசிய போது மார்க்கண்டேயன், சிவலிங்கத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டான். அப்போது எமனின் பாசக்கயிறு சிவலிங்கத்தின் மேல் பட்டது. இதனால் சிவபெருமான் கோபம் அடைந்து, எமனை இடது காலால் எட்டி உதைத்தார். தாயும்-தந்தையுமான சிவ-சக்தியை மார்க்கண்டேயன் சரண் அடைந்ததால் சிவபெருமான், சக்தி தேவியின் அம்சமான தனது இடது பாகத்தில் உள்ள பாதத்தால் எமனை எட்டி உதைத்தார். அந்த இடது கால் சக்தி தேவியின் அம்சம் என்கிறது புராணம்.
அதனால் நடராஜப் பெருமானைத் தரிசிக்கும் போது கண்டிப்பாக அவரது இடது காலைத் தரிசிக்க வேண்டும். நடராஜப் பெருமானின் குஞ்சிதபாதத்தை தரிசனம் செய்தால், தீராத வியாதியும் நீங்கும். செய்வினை பாதிப்பு, சனீஸ்வரால் ஏற்படும் தொல்லை மற்றும் பொதுவாக ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள் நீங்கும். மோட்சம் கிடைக்கும். உடல் வலிமை பெறும் என்கிறது சாஸ்திரம்.
குஞ்சிதபாதம் என்பதற்கு மற்றொரு பொருளும் உண்டு. மூலிகை வேர்களால் செய்யப்பட்ட ஒரு மாலை நடராஜரின் தூக்கிய பாதத்திற்கு அணிவிக்கப்படும்போது, அந்த மாலைக்கு 'குஞ்சிதபாதம்' என்று பெயர். மேலும், இந்த மாலையை நடராஜரின் பாதங்களில் அணிவிப்பது ஒரு சிறப்பு பூஜையாக கருதப்படுகிறது.
திருவந்திபுரம் தேவநாத பெருமாள் கோவில்
ஆதிசேஷன் தன் வாலால் தரையில் அடித்து உருவாக்கிய தீர்த்தம்
உப்பு, மிளகு , வெல்லம் போட்டு பிரார்த்தனை செய்தால் வியாதிகளை குணப்படுத்தும் சேஷ தீர்த்தம்
கடலூா் நகரத்திலிருந்து பண்ருட்டி செல்லும் சாலையில் 3 கி.மீ. தூரத்தில் உள்ள திவ்ய தேசம் திருவந்திபுரம். பெருமாள் திருநாமம் தேவ நாதன்,தெய்வநாயகன்.தாயார் திருநாமம் வைகுண்ட நாயகி, ஹேமாம்புஜ வல்லித்தாயார்(பார்க்கவி). உற்சவர் திருநாமம் அச்சுதன், மூவராகிய ஒருவன்.
தேவர்களுக்கு தலைமை தாங்கியதால் பெருமாளுக்கு இங்கு தேவநாதன் என்ற திருநாமம் உண்டாயிற்று. இத்தலத்திலே ஸ்ரீமந்நாராயணன் நித்ய வாசம் செய்ய இருப்பதை அறிந்த ஆதிசேசன் இங்கு ஒரு நகரத்தை உண்டு பண்ணினான். அதுதான் திரு அஹீந்த்ர(ஆதிசேஷ)புரம் என பெயர் பெற்று விளங்கியது.
ஒரு சமயம் பெருமாளுக்கு தீர்த்த தாகம் ஏற்பட்டபோது அங்கிருந்த கருடாழ்வாரிடம் தீர்த்தம் கொண்டு வரப் பணித்தார். அவர் எடுத்து வர தாமதம் ஆனதால், ஆதிசேஷனிடம் நீர் கொண்டு வருமாறு பணித்தார். ஆதிசேஷன் தன் வாலால் தரையில் அடித்து பெருமாளுக்கு தீர்த்தம் தந்தார். அதனால் அதற்கு சேஷ தீர்த்தம் என்று பெயர் வந்தது. இது ஒரு பிரார்த்தனை கிணறு ஆகும். இது கோவிலின் உள்ளே தெற்கு பிரகாரத்தில் உள்ளது. இதில் உப்பு, மிளகு , வெல்லம் போட்டு பிரார்த்தனை செய்தால் வியாதிகள் குணமாகும். கட்டி,பால் உண்ணி ஆகியவை மறையும். சர்ப்ப தோசம் உள்ளவர்கள் இங்குள்ள சர்ப்பத்தை வழிபட்டால் தோசம் நீங்கும்
நெல்லிக்குப்பம் பூலோக நாதர் கோவில்
மண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் தலம்
சிவன் கோவிலில் பிரசன்ன வெங்கடாசலபதியும், தாயாரும் எழுந்தருளி இருக்கும் தனிச்சிறப்பு
கடலூரில் இருந்து 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நெல்லிக்குப்பம் பூலோக நாதர் கோவில். இறைவியின் திருநாமம் புவனாம்பிகை. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது.
மண்ணுக்கு அதிபதி பூலோகநாதர் என்பதால் மண் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் எதுவானாலும் இந்த கோவில் மண்ணை எடுத்துச் சென்று வழிபட்டால் எளிதில் பிரச்னைகள் நீங்கும் என நம்பப்படுகிறது. மேலும் தடைபட்ட கட்டுமான பணிகள் எதுவாகினும் இங்கு வந்த பூஜை நடத்தினால் அந்த கட்டிடம் நிவர்த்தி அடையும். வீடு கட்ட விரும்புவோர் இந்த ஆலயத்தில் கற்களை அடுக்கி வேண்டிக் கொண்டால் உடனே வீடு கட்டும் பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பூமி தோஷம், பில்லி, சூனியம், ஏவல், எந்திரம், தந்திரம், மந்திரம், தென் மூலை உயரம், வடமூலை உயரம், சொத்து பாகப் பிரச்சினை, ஜென்ம சாப பாவ தோஷம், வாஸ்து தோஷம், கண் திருஷ்டி தோஷம் உள்ளிட்ட 16 விதமான தோஷங்களையும் இக்கோவிலில் உள்ள பூலோகநாதர் நீக்குவதாக பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இறைவி புவனாம்பிகை நாயகி முன் அமர்ந்து எந்த வரம் வேண்டினாலும் அது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அஷ்டோத்திர நாமவளி உச்சரித்து குங்குமம் அர்ச்சனை செய்தால் நினைத்த காரியம் கூடும். திருமணத்தடை, குழந்தைபேறு உண்டாகுதல், குடும்பத்தில் உள்ள அனைத்து விதமான சங்கடங்கள் தீர்ந்து நல்வழி பெருகும் என்பது நம்பிக்கை.
சைவ வைணவ ஒற்றுமையை விளக்கும் வகையில், இக்கோவிலில் தனிச்சன்னதியில் பிரசன்ன வெங்கடாசலபதியும், ஸ்ரீ அலமேலு மங்கை தாயாரும் எழுந்தருளி இருக்கிறார்கள். இங்கு ஒரே இடத்தில் நின்று சிவனையும் பெருமாளையும் தரிசிப்பது தனிச்சிறப்பாகும். அலமேலு தாயாருக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கும்.
திருவந்திபுரம் தேவநாத பெருமாள் கோவில்
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூா்த்திகளை உள்ளடக்கிய பெருமான்
மும்மூர்த்திகளின் அடையாளமான தாமரை மலர், சங்கு சக்கரம்,நெற்றிக்கண் கொண்ட உற்சவ பெருமாள்
கடலூா் நகரத்திலிருந்து பண்ருட்டி செல்லும் சாலையில் 3 கி.மீ. தூரத்தில் உள்ள திவ்ய தேசம் திருவந்திபுரம். பெருமாள் திருநாமம் தேவ நாதன்,தெய்வநாயகன்.தாயார் திருநாமம் வைகுண்ட நாயகி, ஹேமாம்புஜ வல்லித்தாயார்(பார்க்கவி). உற்சவர் திருநாமம் அச்சுதன், மூவராகிய ஒருவன்.
திருவந்திபுரத்தில் அருளும் தேவநாதப் பெருமாள் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூா்த்திகளையும் உள்ளடக்கிய பெருமானாகத் திருக்காட்சியளிக்கின்றாா். முன் ஒரு காலத்தில் அசுரா்களிடமிருந்து தேவா்களைக் காக்க பெருமான் எடுத்த திருக்கோலமே மூம்மூா்த்தி வடிவம். இதனால் இப்பெருமான் 'த்ரிமூா்த்தி” என்றும் “மூவராகிய ஒருவன்” என்றும் வணங்கப்படுகின்றாா்.
தேவா்களுக்குத் தலைவனாக (நாதனாக) இருந்து எம்பெருமான் போா் புரிந்ததால் இவருக்கு தெய்வநாயகன் மற்றும் தேவநாதன் என்ற திருநாமங்கள் வழங்கலாயிற்று. தேவா்களுக்கு மும்மூா்த்திகள் வடிவில் காட்சி தந்ததால் இத்தலத்தின் உற்சவ மூா்த்திக்கு மூவராகிய ஒருவன் என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது. பிரம்மனுக்கு அடையாளமான தாமரை மலரைத் தனது திருக்கரத்திலும் மஹா விஷ்ணுவிற்கு அடையாளமான சங்கு, சக்கரங்களைத் தாங்கியும் சிவபெருமானுக்கு அடையாளமான நெற்றிக்கண்ணும் சடா முடியும் தரித்து தேவநாதப் பெருமான் திருக்காட்சி கொடுப்பதால் 'த்ரிமூா்த்தி' என்றும் 'மூவராகிய ஒருவன்' என்றும் வணங்கப்படுகின்றாா்.கருவறை விமானத் தின் கீழ், கிழக்கு திசையில் பெருமாளும், தெற்கில் ஈசனின் வடிவமான ஶ்ரீதெட்சிணாமூா்த்தியும் மேற்கு திசையில் ஶ்ரீநரசிம்மரும் வடக்கில் ஶ்ரீபிரம்மனும் அமைந்துள்ளது இத்தல பெருமான் 'மூவராகிய ஒருவன்' எனும் கூற்றினை மெய்ப்பிக்கும் வண்ணம் உள்ளது. இத்தலத்து எம்பெருமானை வழிபாடு செய்ய, மும்மூா்த்திகளையும் ஒருங்கே வழிபட்ட பேறு அன்பா்களுக்குக் கிட்டும்.
திருமலைக்கு நோ்ந்து கொண்டு செல்லமுடியாதவா்கள் தேவநாதப் பெருமானுக்கு அந்தக் காணிக்கையைச் செலுத்துகின்றனா்.
தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில்
சிவபெருமான் பக்தனுக்காக வயலில் விவசாய வேலை பார்த்த தலம்
கடலூரில் இருந்து சுமார் 18 கி.மீ. தூரத்திலுள்ள தேவாரத்தலம் திருத்திணை சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில். தற்போது இந்தத் தலம், தீர்த்தனகிரி என்று அழைக்கப்படுகிறது. இறைவியின் திருநாமம் நீலாம்பிகை, ஒப்பிலா நாயகி.
முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த ஒரு விவசாய தம்பதியினரான பெரியான் என்னும் பள்ளனும் அவன் மனைவியும் சிவபெருமான் மீது தீவிர பக்தியுடன் இருந்தனர். அவர்கள் தினமும் தாங்கள் உணவு அருந்துவதற்கு முன் யாராவது ஒருவருக்காவது உணவு அளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்கள்.
ஒருநாள் சிவபெருமான் அவர்களது பக்தியை சோதிப்பதற்காக எவரும் அத் தம்பதியரின் வீட்டுக்கு செல்லாதபடி செய்துவிட்டார். அதனால், விவசாயி தன் வயலில் வேலை செய்யும் பணியாளர்கள் யாருக்காவது உணவு அளிக்கலாம் என்று நினைத்து, தன் மனைவியுடன் வயலுக்குச் சென்றார். அங்கும் பணியாளர்கள் யாரும் இல்லை. அப்போது, சிவபெருமான் முதியவர் வடிவம் தாங்கி அங்கே வந்தார். விவசாயி அவரிடம், தான் கொடுக்கும் உணவை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். முதியவர் அவரிடம், 'நான் உழைக்காமல் எதுவும் சாப்பிட மாட்டேன். எனவே, உன் வயலில் எனக்கு ஏதாவது வேலை கொடுத்தாள், அதற்கு கூலியாக வேண்டுமானால் சாப்பிடுகிறேன்' என்றார். விவசாயியும் ஒப்புக்கொண்டு, தன் வயலை உழும்படி கூறினார். முதியவர் வயலில் இறங்கி உழுதார்.
தம்பதியர் இருவரும் வீட்டிற்கு சென்று, உணவை எடுத்துக்கொண்டு வயலுக்குத் திரும்பினர். அப்போது, வயலில் விதைக்கப்பட்டிருந்த தினைப்பயிர் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. நிலத்தை உழுத உடனேயே இத்தனை பயிர் விளைந்ததை கண்டு ஆச்சரியமடைந்த விவசாயி, சந்தேகத்துடன் முதியவருக்கு அருகிலிருந்த கொன்றை மரத்தின் அடியில் சாதம் பரிமாறினார். முதியவர் சாப்பிட்ட பின்பு, அவரிடம் 'ஒரே நாளில் பயிர் விளைந்தது எப்படி?' எனத் தன் சந்தேகத்தைக் கேட்டார். சிரித்த முதியவர் சிவனாக சுயரூபம் காட்டி அத்தம்பதியருக்கு முக்தி கொடுத்து, இத்தலத்தில் சிவலிங்கமாக எழுந்தருளினார். அதிசயமாக ஒரே நாளில் தினை விளைந்ததால் இத்தலம் தினைநகர் என்று பெயர் பெற்றது.
சிவபெருமான், சுயம்புலிங்கமாக சதுர பீடத்துடன் காட்சி தருகிறார். வயலில் வேலை செய்ததால் சிவபெருமான், 'விவசாயி' என்றும் பெயர் பெற்றார்.அவர் நிலத்தை உழ ஏர் மற்றும் நீர் இறைக்கும் கலம் ஆகியவற்றைப் பயன்படுத்தினார் என்பதால், அவையும் கோவிலில் வைக்கப்பட்டுள்ளன.
நடராஜரின் தாண்டவத்திற்கு இசைக்கும் திருமால், பிரம்மா
இத்தலத்தில் தனிச் சன்னதியில் எழுந்தருளி இருக்கும் நடராஜரின் திருவடிக்கு கீழே, திருமால் சங்கு ஊதியபடியும், பிரம்மா மத்தளம் வாசித்தபடியும் இருக்கின்றனர். திருமால், பிரம்மா இருவரது இசைக்கேற்ப சிவன் நடனமாடும் இக்காட்சியை காண்பது மிகவும் அபூர்வம். திருமாலும் பிரம்மாவும் இசைத்துக் கொண்டிருப்பதால், இவர்கள் இருவரையும் 'இசையமைப்பாளர்' என்று அழைக்கும் வழக்கமும் இருக்கிறது. நடனம், இசை பயில்பவர்கள் இவருக்கு பூஜை செய்து வேண்டிக்கொண்டால், கலையில் சிறப்பிடம் பெறலாம் என்பது நம்பிக்கை.
விலங்கல்பட்டு சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகப்பெருமானின் நெற்றியில் சிவலிங்கம் அமைந்திருக்கும் அரிய காட்சி
கடலூருக்கு மேற்கே 12 கி.மீ. தொலைவில், கடலூர் -திருக்கோவலூர் மாவட்ட நெடும் பாதையை ஒட்டிக் கெடிலம் ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது விலங்கல்பட்டு.
அதிகமாக மலைத்தொடர்கள் இல்லாத கடலூர் மாவட்டத்தில், கூடலூர் குன்று என்ற மலை தொடரில் அமைந்துள்ளது விலங்கல்பட்டு சிவசுப்ரமணியர் கோவில். விலங்கல் என்றால் மலை என பொருள். 100 அடி உயரமுள்ள இந்த சிறிய குன்றின் மேலே ஏறுவதற்கு சரிவு படிக்கட்டுகளும், சரிவான ஒரு சாலையும் உள்ளன.
300 வருடங்களுக்கு மேல் பழமையான இக்கோவிலின் கருவறையில், மூலவர் சிவசுப்பிரமணியர் வள்ளி தெய்வானை சகிதமாக எழுந்தருளி இருக்கிறார். இங்குள்ள மூலவர் சிவசுப்பிரமணிய சுவாமி சிலையின் நெற்றியில் சிவலிங்கம் அமைந்து இருப்பது, இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இப்படி முருகப்பெருமானின் நெற்றியில் சிவலிங்கம் அமைந்திருக்கும் தோற்றத்தை, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாது.
சிதம்பரம் வெள்ளந்தாங்கி அம்மன் கோவில்
யானையின் துதிக்கையில் அரவணைத்து இருக்கும் வெள்ளந்தாங்கி அம்மன்
சிதம்பரம் நடராசர் கோயிலைச் சுற்றி நான்கு திசைகளிலும் அமைந்துள்ள நான்கு காவல் தெய்வங்கள் எழுந்தருளி இருக்கிறார்கள். அவர்களில் தெற்கு திசையில் அமைந்துள்ள காவல் தெய்வம் வெள்ளந்தாங்கி அம்மன் ஆவார். சிதம்பரம் சபாநாயகர் தெருவில் இக் கோவில் அமைந்துள்ளது. இது ஒரு சிறிய கோயிலாகும். கருவறையில் வெள்ளந்தாங்கி அம்மன் மேற்கு நோக்கி உள்ளார். யானையின் துதிக்கையில் அரவணைத்து இருப்பதுபோல் அம்மனின் உருவம் உள்ளது. கருறையில் அம்மனின் வலப்பக்கம் சிவலிங்கமும், இடப்பக்கம் சபரி சாஸ்தாவும் உள்ளனர்.
அம்மனுக்கு வெள்ளந்தாங்கி அம்மன் என்ற பெயர் வந்த கதை
சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெய்த ஒரு பெருமழையில் சிதம்பரம் நகரம் பெரும் வெள்ளக்காடாக ஆனது. அப்போது ஒரு பெண் வெள்ளத்தில் நீந்தி வந்தாள். அவளை நோக்கியபடி யானை ஒன்று பிளிறியபடி சென்றது. அது அப்பெண்ணை தன் துதிக்கையால் தூக்கிச் சென்று தில்லை நடராசர் கோயிலின் தெற்குப் பகுதியில் விட்டுச் சென்றது. ஊர் மக்கள் அங்கு சென்று பார்த்தபோது அப்பெண் அங்கு இல்லை. ஆனால் யானையின் துதிக்கையில் ஒரு பெண் இருப்பது போன்ற சிலை ஒன்று இருந்தது. வெள்ளம் வடிந்த பிறகு ஊர் மக்கள் தில்லை அந்தணர்களிடம் நடந்த விசயத்தைக் கூறினர். அவர்களின் ஆலோசனையின்படி அச் சிலையை அங்கேயே பிரதிட்டை செய்து வெள்ளந்தாங்கி அம்மன் என்ற பெயரைச் சூட்டி வழிபடத் தொடங்கினர்.
இயற்கை சீற்றத்தில் இருந்து மக்களைக் காத்த வெள்ளந்தாங்கி அம்மனை விவசாயம் செய்யும் அனைவருமே பயபக்தியோடு வந்து தாங்கள் விதைக்கப் போகும் விதையை இங்கு வைத்து பூஜை செய்துவிட்டு பிறகுதான் அதை விதைக்கிறார்கள். அப்படிச் செய்வதால் இயற்கைப் பேரிடர்களில் இருந்து விவசாயத்தையும், தங்களையும் அம்மன் அரவணைத்து காப்பாற்றுவாள் என்று நம்புகிறார்கள்.
ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில்
நம் முன்னோர்களின் சிற்பத் திறனுக்கும், பொறியியல் வல்லமைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் கோவில்
ஸ்ரீமுஷ்ணம், கடலூர் மாவட்டத்தில், விருத்தாசலத்தில் இருந்து 24 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. பெருமாள் திருநாமம் பூவராகப் பெருமாள். தாயார் திருநாமம் அம்புஜவல்லி. பெருமாள் தானாகவே, விக்கிரக வடிவில் தோன்றிய எட்டு ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்களில் ஒன்று இத்தலம்.
பல நூறு ஆண்டுகள் பழமையான கோவில் இது. இக்கோவிலில் சிறந்த சிற்ப வேலைகள் கொண்ட புருஷசூக்த மண்டபம் எனப்படும் பதினாறு கால் மண்டபம் உள்ளது. சிற்ப அழகு மிளிரும் நல்ல நுணுக்க வேலைப்பாடுகள் நிறைந்த தூண்கள் இம்மண்டபத்தைத் தாங்கி நிற்கின்றன. 72 பரதநாட்டிய நிலைகளுக்கான சிற்பங்கள் நுழைவு வாயில் மற்றும் கோவில் வளாகத்தின் பிற இடங்களில் கற்களில் செதுக்கப்பட்டுள்ளன. தூண்களில் காணப்படும் பெண்களின் நீளமாகப் பின்னலிட்ட ஜடையும், ராக்கொடி, ஜடை பில்லை, குஞ்சலம் போன்ற அலங்கார அணிகலன்களின் அழகும், நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகளும் நம்மை பிரம்மிக்க வைக்கும். நம் முன்னோர்களின் சிற்பத் திறனுக்கும், பொறியியல் வல்லமைக்கும் இக்கோவில் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.
சிவபுரி உச்சிநாதர் கோவில்
குழந்தைகளுக்கு முதன் முறையாக சோறு ஊட்டப்படும் தேவாரத்தலம்
சிதம்பரத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் தேவாரத்தலம் சிவபுரி உச்சிநாதர் கோவில். இறைவியின் திருநாமம் கனகாம்பிகை என்ற உச்சிநாயகி. ஒரு காலத்தில் நெல் வயல்கள் சூழ்ந்து இருந்ததால் இத்தலத்திற்கு திருநெல்வேலியில் என்ற பெயரும் உண்டு. அகத்திய முனிவருக்கு திருமண கோலத்தில் காட்சி அளித்த தலம் என்பதால் கருவறையில் சிவனும் பார்வதியும் திருமண கோலத்தில் எழுந்தருளி இருக்கிறார்கள்.
இத்தல இறைவனுக்கு மத்யானேஸ்வரர் என்ற திருநாமமும் உண்டு. அதன் பின்னணியில் ஒரு சுவையான நிகழ்ச்சி உள்ளது. தேவாரம் பாடிய மூவரில் ஒருவரான ஞானக்குழந்தை திருஞானசம்பந்தருக்கு 12 வயதில் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. திருமணம் சீர்காழிக்கு அருகில் இருந்த ஆச்சாள்புரத்தில் நடைபெற இருந்தது. அப்போது திருமண ஏற்பாடுகளுக்காக, திருஞானசம்பந்தரும் அவரது உறவினர்களும் ஒரு குழுவாக ஆச்சள்புரம் நோக்கி புறப்பட்டு வந்தனர். அப்போது நல்ல மதிய வேளை. சம்பந்தரின் திருமணத்திற்கு வந்தவர்கள் பசியில் இருக்கிறார்கள் என்பதை அறிந்த சிவபெருமான், கோவில் பணியாளர் வடிவில் வந்து, வந்திருந்த அனைவருக்கும் உணவளித்தார்.
திருஞானசம்பந்தர் சிறு குழந்தையாக இருந்தபோது பார்வதிதேவி ஞானப்பால் ஊட்டினார். அவரது திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு சிவபெருமான் மதிய உணவு படைத்தார். வந்து உணவளித்தது இறைவன் தான் என்பதை அறிந்த சம்பந்தர், மதிய வேளையில் தோன்றியதால் உச்சிநாதர் என்று அழைத்து போற்றினார். அதனாலேயே இக்கோவில் மூலவருக்கு உச்சிநாதர், மத்தியானேஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது.
இதனால், இந்த கோவிலில் குழந்தைகளுக்கு முதன் முறையாக சோறு ஊட்டும் வைபவம் நடைபெறுவது விஷேசமாக கருதப்படுகிறது. பல்வேறு இடங்களில் இருந்தும் இங்கு வந்து குழந்தைக்கு முதல் உணவு ஊட்டுகின்றனர். இக்கோவிலில், குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டினால், காலம் முழுமைக்கும் அந்தக் குழந்தையின் வாழ்வில் உணவுப் பிரச்னை வராது என்ற நம்பிக்கை இருக்கிறது.
திருமணம் விரைவில் கைகூட இங்கு வழிபடுகிறார்கள்.
காட்டுமன்னார்கோவில் அனந்தீஸ்வரர் கோவில்
காலசர்ப்ப தோஷம் நீங்க தரப்படும் தீர்த்தப் பிரசாதம்
சிதம்பரத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள காட்டுமன்னார்கோவிலில் அமைந்துள்ளது அனந்தீஸ்வரர் கோவில் . இறைவியின் திருநாமம் சவுந்தரநாயகி. இக்கோவிலில் உள்ள சோமாஸ்கந்தர் தன் கையில் பாம்பை பிடித்தபடி காட்சி அளிக்கிறார். இத்தலத்து இறைவனை அஷ்டநாகங்களும், அதன் தலைவனான அனந்தனின் தலைமையில் வழிபட்டு பேறு பெற்றுள்ளன. அதனால் தான் இத்தல இறைவனுக்கு அனந்தீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது. எனவே இத்தல இறைவனை வழிபட்டால், ராகு-கேது தோஷம், காலசர்ப்ப தோஷம், நாகதோஷம் ஆகியவை நீங்கும். காலசர்ப்ப தோஷம் நீங்க அனந்தீஸ்வரருக்கும். அம்பாள் சவந்தரநாயகிக்கும் அபிஷேகம் செய்து தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது. இது இயலாதவர்கள் வெள்ளியிலோ, பிற உலோகங்களாலே ஆன நாக வடிவிலான உருவங்களை காணிக்கை செலுத்தலாம்.
தீராத நோயால் அவதிப்படுபவர்களும், அறுவை சிகிச்சை செய்ய இருப்பவர்களும் சுவாமி, அம்பாளிடம் வேண்டிக் கொண்டால் குணம ஆவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவிலில் வரவாற்று சிறப்பு மிக்க கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ஆதித்த கரிகாலன் கொலையுண்ட வரலாறு உள்ளிட்ட தகவல்கள் இதில் உள்ளன.
நல்லாத்தூர் பொன்னம்பலநாதர் கோவில்
சாளரத்தின் வழியாக மட்டுமே தரிசனம் தரும் சிவபெருமான்
கடலூர் மாவட்டம் நல்லாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது பொன்னம்பலநாதர் என்கிற சொர்ணபுரீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம். இக்கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சாளரக் கோவில் வகையைச் சேர்ந்தது. இத்தகைய கோவில்களில் கருவறைக்கு எதிரில் வாசல் கிடையாது. மூலவரை பலகணி என்னும் கருங்கல் ஜன்னல் (சாளரம்) வழியாகத்தான் தரிசிக்க முடியும். சாளர சக்கரத்திற்கு கீழ் 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், 9 கிரகங்கள் உள்ளடக்கிய சர்ப்ப யந்திரம் உள்ளது. துவாரபாலகர்களை எந்த ஒரு கோவிலிலும் வலம் வர முடியாது. ஆனால், இங்கே வலம் வரலாம். மகாமண்டபமான சொக்கட்டான் மண்டபத்தில் 24 இதழ்களுடன் கூடிய மூன்றடுக்கு தாமரை கவிழ்ந்த நிலையில் அமைந்திருப்பது சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றது.
பலகணி வழியாகப் பார்க்கின்ற சிவலிங்கங்கள், அக்னியின் சொரூபம் என்று சொல்லப்படுகிறது. இவரை நேரடியாக தரிசிப்பதற்கான உடல் வலிமை பக்தனுக்கு இருக்காது. எனவே பலகணி வழியாக வழிபாடு செய்தால், அவரவர் உடல் நிலைக்கு தகுந்தாற் போல் தீக்கதிர்கள் இறைவனிடமிருந்து வெளிப்பட்டு உடல் பலமும் மனபலமும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
ஆங்கிலேய கலெக்டர், தன் மகளுக்கு கண்பார்வை கிடைத்ததற்கு, காணிக்கையாக கொடுத்த ஆலயமணி
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், 120 ஆண்டுகளுக்கு முன்னர், கடலூர் (அப்போதை தென்னாற்காடு மாவட்டம்) கலெக்டராக பணிபுரிந்தவர் பகோடா என்பவர். அவரது மகள் கண்பார்வையற்று இருந்தார். இவ்வாலயத்தில் தரிசனம் செய்ததால் அந்த சிறுமிக்கு கண்பார்வை கிடைத்தது. இதனால் மகிழ்ந்த ஆங்கிலேய கலெக்டர் பகோடா நஞ்சை நிலங்களை ஆலயத்திற்கு வழங்கினார். பின்னர் இங்கிலாந்து நாட்டில் உருவாக்கப்பட்ட அற்புத ஓசையுடன் கூடிய ஆலயமணியை 1907ம் ஆண்டு இந்த கோவிலுக்கு வழங்கினார். இந்த மணியின் ஓசை குறைந்தது 3 கி.மீ தொலைக்கு கேட்கும் என்பது கூடுதல் சிறப்பு.
பிரார்த்தனை
இத்தலத்தில் 5 நிமிடம் வழிபாடு செய்தால் பல்லாண்டு வழிபட்ட பலன் கிடைக்கும். சுவாசம் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தட்சிணாயண (ஆடி), உத்ராயண (தை) புண்ய காலங்களில் சூரியனுக்குரிய ஆரஞ்சு நிற ஆடை, கோதுமை வகை உணவுகளை தானமாக கொடுத்து வழிபடுவது நல்ல பலன் தரும். பிதுர் தோஷத்திற்கான பரிகார தலம் இது.
சிதம்பரம் நடராஜர் கோவில்
ஆருத்ரா தரிசனத்தின் சிறப்புகள்
மார்கழி மாதம் பௌர்ணமியோடு, திருவாதிரை நட்சத்திரம் கூடி வரும் நாளன்று 'ஆருத்ரா தரிசனம்' திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மார்கழி திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும். ஆருத்ரா தரிசனம் கண்டால், எல்லா பாவங்களும் நீங்கி, நீங்கா புண்ணியம் பெற்றிடலாம்.
ஆருத்ரா தரிசனம் பற்றி புராணத்தில் கூறப்பட்ட சிறப்புகள்
ஆருத்ரா தரிசனம் அன்றுதான் பார்வதி தேவியின் தவத்தில் மகிழ்ந்து அவரை மணக்க சிவபெருமான் சம்மதம் கூறிய நாளாகக் கருதி, இன்றும் கன்னிப்பெண்கள் தங்களுக்கும் நல்ல கணவன் கிடைக்க வேண்டி நோன்பை அனுஷ்டிக்கிறார்கள்.
ஆருத்ரா தரிசனம் அன்றுதான் சிவபெருமான் தேவலோகப் பசுவான காமதேனுவுக்கு தரிசனம் தந்து அருள்புரிந்ததாக ஐதீகம்.
பதஞ்சலி முனிவரும் வியாகரபாதரும் சிதம்பரம் திருத்தலத்தில் திருவாதிரை நாளில் திருநடனத்தைக் கண்டனர்.
ஆருத்ரா தரிசனம் அன்றுதான் மாணிக்கவாசகரின் திருவெம்பாவை நிறைவுற்று அவர் ஈசனை தரிசித்தார்.
திருவாதிரைக்களியின் பின்னணி வரலாறு
திருவாதிரை அன்று நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும். இந்த திருநாளில் சிதம்பரத்திற்குச் சென்று நடராஜப் பெருமானை தரிசிப்பது விசேஷமாகும். திருவாதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப்படுகிறது. இதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது.
காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்து வந்த பட்டினத்தாரிடம் கணக்கு பிள்ளை, சேந்தனார் என்பவர். பட்டினத்தார் துறவறம்ஏற்றதும், அவரிடம் இருந்த சொத்துக்களை சேந்தனார் சூறைவிட்டார். இதை அறிந்த சோழ மன்னர், சேந்தனாரை சிறையிலடைத்தார். அதைக் கேள்விப்பட்ட பட்டினத்தார் சேந்தனாரை சிறையிலிருந்து விடுவிக்க சிவபெருமானிடம் வேண்டினார். உடனே சிறைக்கதவுகள் திறந்து சேந்தனார் விடுதலை பெற்றார்.
சிறையிலிருந்து விடுபட்ட சேந்தனார், சிதம்பரத்திற்கு வந்து அங்கு விறகு வெட்டி விற்று வாழ்க்கை நடத்தி வந்தார். அந்த வருவாயில் தினமும் ஒரு சிவனடியாருக்காவது ஒரு வேளை உணவளித்த பின்பே, தான் உண்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இப்படி இருக்கையில், சேந்தனாரின் பக்தியை சோதிக்க எண்ணினார் சிவபெருமான். ஒரு நாள் அளவுக்கதிகமாக மழை பெய்து விறகுகளை அனைத்தும் ஈரமாகியது. விறகுகள் ஈரமானதால், அதை வாங்குவதற்கும் யாரும் முன்வரவில்லை. இதனால் அன்றைய உணவுக்கு அரிசி வாங்குவதற்கு கூட கையில் பொருள் இல்லை. இதனால், வீட்டிலிருந்த கேழ்வரகில் களி செய்து சிவனடியாருக்காக காத்திருந்தார். நேரம் சென்றதே தவிர, சிவனடியார் யாரும் வருவதாக தெரியவில்லை.
சேந்தனாரின் பக்தியை உலகுக்கு வெளிப்படுத்த விரும்பிய சிவபெருமான், ஒரு சிவனடியார் வேடத்தில் நள்ளிரவு வேளையில் சேந்தானரின் வீட்டுக் கதவை தட்டினார். வந்திருப்பது சிவனடியார் என்பதை அறிந்து அகமகிழ்ந்து சேந்தனார், அவருக்கு கேழ்வரகு களியை விருந்தாக படைத்தார். சிவனடியாரும் அந்த களியை மிக்க மகிழ்ச்சியோடு உண்டதோடு, எஞ்சியிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவுக்கு தருமாறு கேட்டு வாங்கிச் சென்றார்.
இந்நிலையில், சோழ மன்னர் கண்டராதித்தர், தினசரி இரவு செய்யும் சிவபூஜையில் சிவபெருமானின் திருப்பாதச் சலங்கை ஒலி கேட்பது வழக்கம். ஆனால், அன்றிரவு, சேந்தனாரின் வீட்டுக்கு களி உண்ணச் சென்றதால் கண்டராதித்த சோழரின் சிவபூஜையில் நடராஜரின் திருப்பாதச் சலங்கை ஒலி கேட்கவில்லை. இதனால் மனம் நொந்த மன்னர், தன்னுடைய சிவ வழிபாட்டில் ஏதேனும் குறை இருக்குமோ என்று கலங்கியவாரு தூங்கச் சென்றார். கண்டராதித்த சோழ மன்னரின் கனவில் வந்த நடராஜ பெருமான், மன்னா! வருந்த வேண்டாம், இன்றிரவு யாம் சேந்தனாரது இல்லத்திற்கு களி உண்ணச் சென்றொம், அதனால் தான் உன்னுடைய சிவபூஜையில் சிலம்பு ஒலிக்கவில்லை. நாளைய தேர்த் திருவிழாவில் அந்த சேந்தனாரை நீ காண்பாயாக, என்று சொல்லிவிட்டு சென்றார்.
மறுநாள் காலையில் வழக்கம்போல், தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் நடராஜர் கோவில் கருவறையைத் திறந்தனர். அங்கு நடராஜப் பெருமானை சுற்றிலும் களிச் சிதறல்கள் இருந்தன. இந்த செய்தியை உடனடியாக அரசருக்கு தெரியப்படுத்தினர். அரசரும் முதல் நாளிரவு தான் கண்ட கனவை எண்ணி மகிழ்ந்தார். கனவில் நடராஜப் பெருமான் தான் சேந்தனாரின் வீட்டுக்கு களி உண்ண சென்றிருந்தை தெரிவித்திருந்தார். அதன்படியே, அரசரும் சேந்தனாரை கண்டுபிடிக்குமாரு அமைச்சருக்கு கட்டளையிட்டார். ஆனால், சேந்தனாரோ தில்லையில் நடைபெற்ற நடராஜப் பெருமானின் தேர்த் திருவிழாவிற்கு சென்றுவிட்டார். எம்பெருமான் நடராஜப் பெருமானை தேரில் அமர்த்திய உடன் அரசர் உள்பட அனைவரும் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆனால், மழையின் காரணமாக சேற்றில் தேர் சக்கரம் அழுந்தியதால், தேர் நகரவில்லை.
அந்த சமயத்தில், சேந்தனாரின் பாடச்சொல்லி அசரீரியாக ஒரு குரல் ஒலித்தது. உடனே சேந்தனாரோ, ஒன்றும் அறியாத யான் எப்படிப் பாடுவேன் என்று நடராஜரை துதித்தார். எம்பெருமானும் அதற்கு அருள் புரிய சேந்தானர் இறைவன் அருளால், ‘மன்னுகதில்லை வளர்க் நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல‘ என்று தொடங்கி பல்லாண்டு கூறுதுமே என்று முடித்து 13 திருப்பல்லாண்டு பாடல்களை பாடினார். உடனே, தேர் அசைந்தோடி சுற்றி வந்து நிலை பெற்று நின்றது.
இதைப் பார்த்த அரசரும், தில்லை வாழ் அந்தணர்களும் சேந்தனாரின் கால்களில் விழுந்து வணங்கினர். அரசரும் தன்னுடைய கனவில் இறைவன் வந்ததை சேந்தனாருக்கு தெரிவித்தார். சேந்தனார் வீட்டுக்கு நடராஜப் பெருமான் களி உண்ணச் சென்ற அந்த நாள் சிவபெருமானின் நட்சத்திரமான மார்கழி திருவாதிரை நாள் என்றும், இன்றைக்கும் திருவாதிரை நாளில் நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப்படுவதால் திருவாதிரைக்களி என்றும் சொல்லப்படுகிறது. அதனால் தான் ஆருத்ரா தரிசன நாளன்று சிவபெருமானுக்கு களி அமுது படைத்து உண்கிறோம்.
எனவே 'திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி' என்ற சொலவடையே ஏற்பட்டது.
திருவதிகை சரநாராயண பெருமாள் கோவில்
கைகளை கட்டிக்கொண்டு சேவகம் செய்யும் நிலையில் இருக்கும் கருடாழ்வாரின் அபூர்வ தோற்றம்
பண்ரூட்டியின் அருகில் சுமார் மூன்று கி.மீ. தொலைவில் உள்ள திருவதிகையில், 2000 வருட பழமையான சரநாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நரசிம்மர் சயன (படுத்திருக்கும் ) கோலத்தில் தாயாருடன் காட்சி தருகிறார். பெருமாள் கோவில்களில், நரசிம்மர் சயன கோலத்தில் காட்சி தரும் ஒரே தலம் இதுதான் என்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
பொதுவாக எல்லா பெருமாள் கோவில்களிலும் கருடாழ்வார், கைகளைக் கூப்பி வணங்கிய நிலையில் அஞ்சலி முத்திரையுடன் காட்சி அளிப்பார். ஆனால் இக்கோவிலில் கருடாழ்வார் இரு கைகளையும் கட்டிக்கொண்டு சேவகம் செய்யும் நிலையில் காட்சி தருவது ஒரு அபூர்வமான தோற்றமாகும். பெருமாள் இந்த கருடாழ்வாருக்கு, சங்கு சக்கரத்தை திரிபுர சம்ஹாரத்தின் போது கொடுத்தார் என்று புராணம் கூறுகின்றது.
மேலக்கடம்பூர் அமிர்தகடேசுவரர் கோவில்
சிவபெருமான் ரிஷபத்தின் மேல் தாண்டவமாடும் அபூர்வ கோலம்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில், எய்யலூர் சாலையில் அமைந்துள்ள தேவாரத் தலம் மேலக்கடம்பூர். இக்கோவில் சுமார் 1000-2000 ஆண்டுகள் பழமையானது. இறைவன் திருநாமம் அமிர்தகடேசுவரர். இறைவியின் திருநாமம் வித்யூஜோதிநாயகி.
பிரதோஷத்தின் போது மட்டுமே தரிசனம் தரும் தசபுஜ ரிஷப தாண்டவமூர்த்தி
இத்தலத்தில் சிவபெருமான் ரிஷப தாண்டவமூர்த்தி என்னும் பெயரோடு, நந்தி மீது நடமாடும் அபூர்வ கோலத்தில், 10 கைகளுடன் உற்சவராக இருக்கிறார். செவ்வக பீடத்தில் மையமாக உள்ள தாமரை பீடத்தில் மேல்நோக்கி நிற்கும் காளையின் மேல் சதுர தாண்டவ கோலத்தில், வீசிய பத்து கரங்களில் வீரவெண்டயம், பிரம்மகபாலம், கேடயம், சூலம், அரவம், கட்டங்கம், தண்டம், குத்தீட்டி, ஏந்திட, வலக்கை கஜஹஸ்த அமைப்பிலும், இடக்கை பிரபஞ்சம் தாங்கியும், சிவபெருமான் நின்றாடுகிறார். அவர்காலடியில் திருமால் மத்தளமிசைக்க வீரபத்திரர் சூலமாட, பைரவர், கணங்கள், விநாயகர், பார்வதி, பிருங்கி, காரைக்கால் அம்மையார், மகாகாளர், நந்தி, நாட்டிய பெண்கள் சேர்ந்தாட முருகன் மயில் மேல் பறக்க, கந்தர்வர்கள் மலரிட, அனைத்தும் சேர்ந்திட்ட அற்புத கலைப்படைப்பு. திருவாசியில் அக்கினிக்குப் பதிலாக, இங்கே போதி இலைகள் காணப்படுகின்றன. தலைக்குப் பின்புறத்தில் ஒளிவட்டமும் மணிமுடியும் வங்க தேச பாணியில் உள்ளது. இவருக்கு பிரதோஷத்தின் போது சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அன்று ஒருநாள் மட்டுமே இவரை தரிசிக்க முடியும்.
திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோவில்
கபால பூணூலும், சர்ப்ப அரைஞாணும் அணிந்த காசிக்கு ஈடான பைரவர்
சிதம்பரத்திற்கு தென்கிழக்கே 5 கி.மீ. தொலைவில் உள்ள தேவார தலம் திருக்கழிப்பாலை. இறைவன் திருநாமம் பால்வண்ணநாதர். இறைவியின் திருநாமம் வேதநாயகி. இத்தலத்தின் சிவலிங்கப் பெருமான் வெண்ணிறமுடையவராக விளங்கிறார், அதனாலேயே இறைவன் பால்வண்ணநாதர் என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் அருட்காட்சி தருகிறார்.
இங்குள்ள பைரவர் காசியில் உள்ளது போல நாய் வாகனம் இல்லாமல், 27 மண்டை ஓட்டுடன் பூணூல் அணிந்து, சர்ப்பத்தை அரைஞாண் அணிந்து, ஜடாமுடி, சிங்கப்பல்லுடன் தனிக்கோயிலில் அருளுகிறார். காசி பைரவரை செதுக்கிய அதே சிற்பியால் இவரும் செய்யப்பட்டதாக நம்பப் பெறுகிறது .இத்தல பைரவரை வணங்கினால் காசி பைரவரை வணங்கிய பலன் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன. இத்தலத்தின் மூலவர் பால்வண்ண நாதர் என்றாலும், இக்கோவிலில் கால பைரவர் மிகவும் பிரசித்தி பெற்றவர் என்பதால் இப்பகுதி மக்கள் இத்தலத்தை பைரவர் கோயில் என்றே அழைக்கின்றனர். தேய்பிறை அஷ்டமி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ராகு கால பூஜைகள் விமர்சையாக நடைபெறுகிறது. அஷ்டமி நாட்களிலும், பௌர்ணமி இரவிலும்) இவரை வழிபடுவது விசேஷமாகக் கருதப் பெறுகிறது.
திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோவில்
நடராஜப் பெருமான் தன் சடாமுடியை அள்ளி முடிந்த கோலத்தில் இருக்கும் அரிய காட்சி
சிதம்பரத்திற்கு தென்கிழக்கே 5 கி.மீ. தொலைவில் உள்ள தேவார தலம் திருக்கழிப்பாலை. இறைவன் திருநாமம் பால்வண்ணநாதர். இறைவியின் திருநாமம் வேதநாயகி. இத்தலத்தின் சிவலிங்கப் பெருமான் வெண்ணிறமுடையவராக காட்சி தருவது, வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாத அரிய காட்சியாகும்.
பொதுவாக சிவாலயங்களில், நடராஜப் பெருமான் தன் சடா முடியை விரித்த நிலையில், ஆனந்த தாண்டவ கோலத்தில் நமக்கு காட்சி அளிப்பார். ஆனால் இக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் நடராஜ பெருமான் , வேறு எங்கும் இல்லாத வகையில், தன் சடாமுடியை அள்ளி முடிந்த கோலத்தில் இருப்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பு அம்சமாகும். நடராஜரின் இத்தகைய கோலம் நாம் காண முடியாத அரிய காட்சியாகும். இவர் அருகே சிவகாமி அம்பாள் அவர்தம் தோழிகளான விஜயா, சரஸ்வதியோடு காட்சி தருவதும் ஒரு சிறப்பான அம்சமாகும்.