சிதம்பரம் நடராஜர் கோவில்
சிவகாமசுந்தரி அம்பிகை ஐப்பசி பூர உற்சவம்
நடராஜரிடம் ஆசீர்வாதமும், பட்டு வஸ்திரமும் பெறும் சிவகாமசுந்தரி அம்பிகை
உலக உயிர்கள் அனைத்தும் நலம் பெற வாழ நடத்தப்படும் பூர சலங்கை உற்சவம்
பொதுவாக, அம்பிகை இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என மூன்று சக்திகளாகத் தனித்தனியே வெவ்வேறு தலங்களில் காட்சி தருவாள். சிதம்பரம் தலத்தில், இந்த மூன்று சக்திகளும் ஒன்றாக இணைந்து மகா சக்தியாக சிவகாமசுந்தரி அம்மன் வடிவத்தில் அருள்பாலிக்கிறாள்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவகாமசுந்தரி அம்பிகைக்காக நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது ஐப்பசி பூரம் உற்சவம் ஆகும். பத்து நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த ஐப்பசி பூர திருவிழாவில் அம்பிகையை குழந்தையாக பாவித்து, பின்னர் பருவமடைந்த பெண்ணிற்கான சடங்குகள் செய்வித்து, திருவிழாவின் இறுதியாக அம்பிகைக்கு இறைவனுடன் திருக்கல்யாணம் நடைபெறும். திருவிழாவின் முதல் எட்டு நாட்களில் அம்பிகை பலவித வாகனங்களிலும், ஒன்பதாம் நாள் தேரிலும் ஏறி வீதி உலா வருவாள்.
பத்தாம் நாள், ஐப்பசி பூரத்தன்று அம்பிகைக்கு பருவம் அடைந்ததற்கான சடங்குகள் நடத்தப்படும். அன்று காலையில் சிவகாமசுந்தரி அம்பிகையின் சன்னதியில், உற்சவ மூர்த்தியான சிவகாமசுந்தரி அம்மனுக்கு மஹாபிஷேகம் நடைபெறும். பின்னர் சிவகாமசுந்தரி அம்பிகை சர்வ அலங்காரத்துடன் நடராஜப் பெருமான் சன்னதிக்கு எழுந்தருளி அங்கு நடராஜரிடமிருந்து முதன் முதலில் பட்டு வஸ்திரங்களை யும், திருவருளையும் பெறுவார். இந்த நிகழ்ச்சி பட்டு வாங்கும் நிகழ்ச்சி என்று அழைக்கப்படுகிறது. எம்பெருமான் நடராஜரிடம் இருந்து பட்டு வஸ்திரங்களை பெற்றுக் கொண்ட பின்னர் அம்பிகை நான்கு பிரகாரங்களிலும், வலம் வந்து மக்கள் அளிக்கும் பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக, சீராக ஏற்றுக் கொள்வார்.
ஐப்பசி பூரத்தன்று மாலை 7:00 மணி அளவில் அம்பிகைக்கு பூரச் சலங்கை எனும் பருவமடைந்த பெண்ணிற்கு நடத்தப்படும் சடங்குகள் செய்யப்படும். அப்போது அம்மனின் மடியில் நெல், அவல் ,முளைப்பயிறு, அரிசி ஆகியவற்றை ஒரு சிறு மூட்டையாக கட்டி விடுவார்கள். உலக உயிர்கள் யாவும் அன்னையின் மடியில் முளைப்பயறாக உருவாவதைக் குறிப்பிடும் வகையில் அம்பாள் மடியில் இவற்றை வைத்து கட்டுவார்கள். பக்தர்களுக்கு இந்த முறைப் பயறு மற்றும் நெல்,அரிசி,அவல் பிரசாதமாக வழங்கப்படும். குழந்தை வரம் வேண்டுபவர்கள் இந்த உற்சவத்தில் கலந்துகொண்டு முளைப்பயறு பிரசாதம் வாங்கி உண்ண, விரைவில் மகப்பேறு உண்டாகும். மேலும் திருமணம் தடை நீங்கி திருமணம் கைகூடும். உலகத்தில் உள்ள 72,000 கோடி ஜீவ ராசிகளும் விவசாயம் செழித்து நலமுடன், வளமுடன் வாழ வேண்டும் என்பது தான் இந்த சம்பிரதாயத்தின் நோக்கமாகும்.
மறுநாள் ஐப்பசி உத்திரத்தன்று, காலை அன்னை சிவானந்தநாயகி அம்மன் தபசுக் காட்சி நடைபெறும். மாலையில் கீழவீதி, தேரடியில் ஓட்டம் பிடித்து விளையாடும் வைபவமும், மாலை மாற்றல், கன்னூஞ்சல், பூர்வாங்க கலச பூஜை, காப்பு கட்டி சிறப்பு ஹோமம், திருமாங்கல்ய தாரணம் ஆகியனவும் நடைபெறும். இதைத் தொடர்ந்து பக்தர்கள் தெய்வத் தம்பதியின் ஆசி வேண்டி வணங்குவர்.
தகவல் உதவி : திரு உ.சாம்ப நடேச தீக்ஷிதர் .சிதம்பரம் ஸ்ரீ ஸபாநாயகர் கோயில் பரம்பரை அறங்காவலர் மற்றும் பூஜா ஸ்தானிகர்