தில்லை காளியம்மன் கோவில்
தில்லை காளியம்மன்
வெள்ளை புடவை மட்டுமே அணியும் காளியம்மன்
சிதம்பர நடராஜர் கோயிலில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தில்லை காளி கோவில். தமிழகத்தில் இருக்கும் அஷ்ட காளி கோவில்களில் தில்லை காளி கோவிலும் ஒன்றாகும். சிதம்பரத்தின் காவல் தெய்வமாக தில்லை காளியம்மனே திகழ்கிறார். சிவபெருமானை பிரிந்து, காளி தில்லை நகரத்தின் எல்லைக்குச் சென்று அமர்ந்ததன் பின்னணியில் ஒரு புராண நிகழ்ச்சி உள்ளது.
ஒரு சமயம் சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் தங்களுள் யார் பெரியவர் என்ற வாக்குவாதம் வந்தது. அப்போது பார்வதி தேவி, 'சக்தியில்லையேல் சிவனில்லை' என வாதாட, கோபமுற்ற சிவபெருமான் உக்கிர காளியாக உருமாறும்படி அவரை சபித்து விட்டார். இதனால் சாப விமோசனம் கேட்ட பார்வதி தேவியிடம், 'அசுரர்களை அழிக்கவே உன்னை உக்கிரகாளியாக மாற்றினேன். காளி உருவில் போரிட்டு அசுரர்களை அழிப்பாய். உன் கடமைகள் முடிந்த பிறகு தில்லை மரங்கள் சூழ்ந்த இடத்திலிருந்து என்னை நோக்கித் தவம் புரிவாயாக. தக்க தருணம் வரும்போது மீண்டும் என்னுடன் வந்து இணைவாய்' என்று உரைத்தார்.
காலங்கள் ஓடின. காளி தேவி அரக்கர்களை போரில் அழித்து வெற்றி பெற்றார். சிவபெருமானை அடையும் பொருட்டு கடுமையாக தவம் புரிந்தார். அதே நேரத்தில் சிதம்பரத்தில் பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத முனிவர்களுக்கு சிவபெருமான் ஆனந்தத் தாண்டவத்தை காட்டிக்கொண்டிருந்தார். இதனால் கோபம் கொண்ட காளி, 'இத்தனை காலமாக நான் தவம் புரிகிறேன். எனக்கு முதலில் காட்சி தராமல் உங்கள் பக்தர்களுக்குக் காட்சி தருவது என்ன நியாயம்? நானும் உங்களுடன் சேர்ந்து ஆடுகிறேன். யார் முதலில் ஆட்டத்தை நிறுத்துகிறார்களோ அவர்கள் தோல்வியுற்றவர்கள். அவர்கள் ஊர் எல்லையில் போய் அமர வேண்டும் என்று கூறி ஆடத் தொடங்கினர். தாண்டவத்தின்போது சிவபெருமானின் குண்டலம் கீழே விழ, அதை அவர் தனது கால்களில் எடுத்து தனது காதுகளில் மாட்டி ஊர்த்துவ தாண்டவத்தை ஆடினார்.
பெண் என்பதால் சக்தியால் இந்த நடனத்தை ஆட முடியவில்லை. அதனால் தோல்வியுற்று, உக்கிரமாக ஊர் எல்லையில் போய் அமர்ந்தார். அப்போது அனைத்து தேவர்களும் திருமாலும், பிரம்மாவும் அவரை சாந்தம் அடையும்படி கேட்டுக்கொண்டனர். பிரம்மா அவரை நான்கு வேதங்களை குறிக்கும் வகையில் நான்கு முகத்துடன் உருமாறிக்கொள்ள வேண்டினார். அதைப்போலவே காளி பிரம்மசாமுண்டேஸ்வரியாக பிரம்மனை போலவே நான்கு முகங்களுடன் காட்சியளிக்கிறார். இந்த கோயிலில் ஒரு சன்னிதியில் உக்கிரமாக எட்டு கைகளோடு காட்சியளிக்கிறார். இன்னொரு சன்னிதியில் சாந்தமாக பிரம்ம சாமுண்டீஸ்வரியாகவும் காட்சியளிக்கிறார்.
தில்லை காளியம்மனுக்கு வெள்ளை புடவை மட்டுமே அணிவிக்கப்படுகிறது. தில்லை காளியன்னைக்கு தினமும் நல்லெண்ணையால் மட்டுமே அபிஷேகம் செய்கிறார்கள். வேறு அபிஷேகம் செய்தால் காளி குளிர்ந்து விடுவாளோ, அவள் குளிர்ந்தால் தீயவர்கள் பெருகிவிடுவார்களோ என்று அக்காலத்திலிருந்தே வேறெந்த அபிஷேகமும் செய்வதில்லை.உடம்பு முழுவதும் குங்குமம் காப்பிடுதல் செய்யப்படுகிறது. கண்கள் மட்டும் கருமை தீட்டப்பட்டுக் காட்சியளிக்கிறார். இந்த அம்மனை வழிபட்டால், நோய் நொடி தீரும், பிள்ளை வரம் கிட்டும், திருமணத்தடை விலகும். இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் செய்வினை, பில்லி சூனியத்தால் அவதிப்படுபவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள், கடன் தொல்லையிலிருந்து மீள்வார்கள், எதிரிகள் தரும் இன்னல்களிலிருந்து விடுபட வழி தெரியாமல் தவிப்பவர்களுக்கு விடுதலை கிடைக்கும் என்பது ஐதீகம்.
      
      சிதம்பரம் நடராஜர் கோவில்
சிதம்பரம் சிவகாம சுந்தரி அம்மன்
முப்பெரும் சக்தியாக விளங்கும் சிவகாமசுந்தரி அம்மன்
சிவ பக்தர்களுக்கு கோவில் என்றால் அது சிதம்பரம் நடராஜர் கோவில் தான். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலமாக விளங்கும் இக்கோவிலின் மூன்றாவது பிரகாரத்தில், சிவகாம கோட்டம் என்று அழைக்கப்படும் தனி கோவிலில் அன்னை சிவகாம சுந்தரி அம்மன் அருள் பாலிக்கின்றாள். சிவகாம சுந்தரி அம்மன் என்றால், 'சிவனது அழகிய காதலியானவள்' என்று பொருள்படும்.
சிவகாம சுந்தரி அம்மன், இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளின் மகா சக்தியாகக் காட்சி அளிக்கிறாள். இச்சா சக்தி (விருப்ப சக்தி): இது விருப்பங்களையும், ஆசைகளையும், படைப்பாற்றலையும் குறிக்கும் சக்தி ஆகும். ஞான சக்தி (அறிவு சக்தி): இது அறிவையும், ஞானத்தையும், விவேகத்தையும் குறிக்கும் சக்தி ஆகும். கிரியா சக்தி (செயல் சக்தி): இது செயல்களையும், இயக்கத்தையும், படைத்தலையும், அழித்தலையும் குறிக்கும் சக்தி ஆகும்.
இக்கோவில் கருவறையில், பேரழகுத் தோற்றத்தில், சமபங்கம் எனும் சிற்ப நிலையில், சுமார் ஆறடி உயரத்தில், திருமுடி தாங்கும் கிரீடத்துடன், என்றும் வற்றாத அருட்கடல் போன்ற இமைக்காத ஈடிணையற்ற திருக்கண்களும், எள் பூ போன்ற நாசியில் (மூக்கில்) நத்து, புல்லாக்கு, மூக்குத்தி ஆபரணங்கள் மின்ன, முக மண்டலமே முழு நிறைவு தந்திடும் வகையில் அமைந்திட, வலது மேல் கையில் ஜபமாலை, வலது கீழ் கையில் செங்கழுநீர்ப்பூ, இடது மேல் கையில் கிளி கொஞ்சிட, இடது கீழ்க்கை ஒய்யாரமாக தொடையின் மீது படும்படியாக அமைய, தேவர்களும், முனிவர்களும் தஞ்சமடைய வேண்டுகிற - பாடகமும், கொலுசும் அலங்கரிக்கும் திருப்பாதங்களும் கொண்டு சிவகாம சுந்தரி அம்பிகை, பக்தர்களுக்கு நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள்.
சிவகாம சுந்தரி அம்பிகையை வழிபட்டால் பதினாறு பேறுகள் கிடைக்கப் பெறலாம் என்பதை உணர்த்தும் வகையில் அம்பிகையின் கோவிலில் பதினாறு படிகள் அமைந்துள்ளன. அம்பிகையை மனதிற்குள் நினைத்து, குங்குமம், மஞ்சள், வளையல் அணிவித்து வழிபட்டு வந்தால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.
      
      சிதம்பரம் நடராஜர் கோவில்
நடராஜப் பெருமானின் குஞ்சிதபாதம்
தீராத வியாதிகளைத் தீர்க்கும் குஞ்சிதபாத தரிசனம்
சிதம்பரத்தில் நடராஜப் பெருமான், தனது இடது பாதத்தை வளைந்து தூக்கித் திருநடனம் ஆடும் கோலத்தில் நமக்கு காட்சி தருகிறார். நடராஜப் பெருமானின் தூக்கிய திருவடிக்கு குஞ்சிதபாதம் என்று பெயர்.
சிவபெருமான் தனது இடது பாகத்தை, தன் மனைவி பார்வதி தேவிக்கு கொடுத்து விட்டார். சிவபெருமானே, நடராஜர் என்னும் பெயரில் நடனம் ஆடுகிறார். அவர் நடனம் ஆடும் போது, மனைவிக்குரிய இடது பாதம், தரையில் பட்டால் அவளுக்கு வலிக்குமே என, இடது காலை உயர்த்திக் கொண்டார்.
எமதர்மராஜன், மார்க்கண்டேயனைத் துரத்திப் பாசக்கயிற்றை வீசிய போது மார்க்கண்டேயன், சிவலிங்கத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டான். அப்போது எமனின் பாசக்கயிறு சிவலிங்கத்தின் மேல் பட்டது. இதனால் சிவபெருமான் கோபம் அடைந்து, எமனை இடது காலால் எட்டி உதைத்தார். தாயும்-தந்தையுமான சிவ-சக்தியை மார்க்கண்டேயன் சரண் அடைந்ததால் சிவபெருமான், சக்தி தேவியின் அம்சமான தனது இடது பாகத்தில் உள்ள பாதத்தால் எமனை எட்டி உதைத்தார். அந்த இடது கால் சக்தி தேவியின் அம்சம் என்கிறது புராணம்.
அதனால் நடராஜப் பெருமானைத் தரிசிக்கும் போது கண்டிப்பாக அவரது இடது காலைத் தரிசிக்க வேண்டும். நடராஜப் பெருமானின் குஞ்சிதபாதத்தை தரிசனம் செய்தால், தீராத வியாதியும் நீங்கும். செய்வினை பாதிப்பு, சனீஸ்வரால் ஏற்படும் தொல்லை மற்றும் பொதுவாக ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள் நீங்கும். மோட்சம் கிடைக்கும். உடல் வலிமை பெறும் என்கிறது சாஸ்திரம்.
குஞ்சிதபாதம் என்பதற்கு மற்றொரு பொருளும் உண்டு. மூலிகை வேர்களால் செய்யப்பட்ட ஒரு மாலை நடராஜரின் தூக்கிய பாதத்திற்கு அணிவிக்கப்படும்போது, அந்த மாலைக்கு 'குஞ்சிதபாதம்' என்று பெயர். மேலும், இந்த மாலையை நடராஜரின் பாதங்களில் அணிவிப்பது ஒரு சிறப்பு பூஜையாக கருதப்படுகிறது.
      
      சிதம்பரம் வெள்ளந்தாங்கி அம்மன் கோவில்
யானையின் துதிக்கையில் அரவணைத்து இருக்கும் வெள்ளந்தாங்கி அம்மன்
சிதம்பரம் நடராசர் கோயிலைச் சுற்றி நான்கு திசைகளிலும் அமைந்துள்ள நான்கு காவல் தெய்வங்கள் எழுந்தருளி இருக்கிறார்கள். அவர்களில் தெற்கு திசையில் அமைந்துள்ள காவல் தெய்வம் வெள்ளந்தாங்கி அம்மன் ஆவார். சிதம்பரம் சபாநாயகர் தெருவில் இக் கோவில் அமைந்துள்ளது. இது ஒரு சிறிய கோயிலாகும். கருவறையில் வெள்ளந்தாங்கி அம்மன் மேற்கு நோக்கி உள்ளார். யானையின் துதிக்கையில் அரவணைத்து இருப்பதுபோல் அம்மனின் உருவம் உள்ளது. கருறையில் அம்மனின் வலப்பக்கம் சிவலிங்கமும், இடப்பக்கம் சபரி சாஸ்தாவும் உள்ளனர்.
அம்மனுக்கு வெள்ளந்தாங்கி அம்மன் என்ற பெயர் வந்த கதை
சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெய்த ஒரு பெருமழையில் சிதம்பரம் நகரம் பெரும் வெள்ளக்காடாக ஆனது. அப்போது ஒரு பெண் வெள்ளத்தில் நீந்தி வந்தாள். அவளை நோக்கியபடி யானை ஒன்று பிளிறியபடி சென்றது. அது அப்பெண்ணை தன் துதிக்கையால் தூக்கிச் சென்று தில்லை நடராசர் கோயிலின் தெற்குப் பகுதியில் விட்டுச் சென்றது. ஊர் மக்கள் அங்கு சென்று பார்த்தபோது அப்பெண் அங்கு இல்லை. ஆனால் யானையின் துதிக்கையில் ஒரு பெண் இருப்பது போன்ற சிலை ஒன்று இருந்தது. வெள்ளம் வடிந்த பிறகு ஊர் மக்கள் தில்லை அந்தணர்களிடம் நடந்த விசயத்தைக் கூறினர். அவர்களின் ஆலோசனையின்படி அச் சிலையை அங்கேயே பிரதிட்டை செய்து வெள்ளந்தாங்கி அம்மன் என்ற பெயரைச் சூட்டி வழிபடத் தொடங்கினர்.
இயற்கை சீற்றத்தில் இருந்து மக்களைக் காத்த வெள்ளந்தாங்கி அம்மனை விவசாயம் செய்யும் அனைவருமே பயபக்தியோடு வந்து தாங்கள் விதைக்கப் போகும் விதையை இங்கு வைத்து பூஜை செய்துவிட்டு பிறகுதான் அதை விதைக்கிறார்கள். அப்படிச் செய்வதால் இயற்கைப் பேரிடர்களில் இருந்து விவசாயத்தையும், தங்களையும் அம்மன் அரவணைத்து காப்பாற்றுவாள் என்று நம்புகிறார்கள்.
      
      சிதம்பரம் நடராஜர் கோவில்
ஆருத்ரா தரிசனத்தின் சிறப்புகள்
மார்கழி மாதம் பௌர்ணமியோடு, திருவாதிரை நட்சத்திரம் கூடி வரும் நாளன்று 'ஆருத்ரா தரிசனம்' திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மார்கழி திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும். ஆருத்ரா தரிசனம் கண்டால், எல்லா பாவங்களும் நீங்கி, நீங்கா புண்ணியம் பெற்றிடலாம்.
ஆருத்ரா தரிசனம் பற்றி புராணத்தில் கூறப்பட்ட சிறப்புகள்
ஆருத்ரா தரிசனம் அன்றுதான் பார்வதி தேவியின் தவத்தில் மகிழ்ந்து அவரை மணக்க சிவபெருமான் சம்மதம் கூறிய நாளாகக் கருதி, இன்றும் கன்னிப்பெண்கள் தங்களுக்கும் நல்ல கணவன் கிடைக்க வேண்டி நோன்பை அனுஷ்டிக்கிறார்கள்.
ஆருத்ரா தரிசனம் அன்றுதான் சிவபெருமான் தேவலோகப் பசுவான காமதேனுவுக்கு தரிசனம் தந்து அருள்புரிந்ததாக ஐதீகம்.
பதஞ்சலி முனிவரும் வியாகரபாதரும் சிதம்பரம் திருத்தலத்தில் திருவாதிரை நாளில் திருநடனத்தைக் கண்டனர்.
ஆருத்ரா தரிசனம் அன்றுதான் மாணிக்கவாசகரின் திருவெம்பாவை நிறைவுற்று அவர் ஈசனை தரிசித்தார்.
திருவாதிரைக்களியின் பின்னணி வரலாறு
திருவாதிரை அன்று நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும். இந்த திருநாளில் சிதம்பரத்திற்குச் சென்று நடராஜப் பெருமானை தரிசிப்பது விசேஷமாகும். திருவாதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப்படுகிறது. இதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது.
காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்து வந்த பட்டினத்தாரிடம் கணக்கு பிள்ளை, சேந்தனார் என்பவர். பட்டினத்தார் துறவறம்ஏற்றதும், அவரிடம் இருந்த சொத்துக்களை சேந்தனார் சூறைவிட்டார். இதை அறிந்த சோழ மன்னர், சேந்தனாரை சிறையிலடைத்தார். அதைக் கேள்விப்பட்ட பட்டினத்தார் சேந்தனாரை சிறையிலிருந்து விடுவிக்க சிவபெருமானிடம் வேண்டினார். உடனே சிறைக்கதவுகள் திறந்து சேந்தனார் விடுதலை பெற்றார்.
சிறையிலிருந்து விடுபட்ட சேந்தனார், சிதம்பரத்திற்கு வந்து அங்கு விறகு வெட்டி விற்று வாழ்க்கை நடத்தி வந்தார். அந்த வருவாயில் தினமும் ஒரு சிவனடியாருக்காவது ஒரு வேளை உணவளித்த பின்பே, தான் உண்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இப்படி இருக்கையில், சேந்தனாரின் பக்தியை சோதிக்க எண்ணினார் சிவபெருமான். ஒரு நாள் அளவுக்கதிகமாக மழை பெய்து விறகுகளை அனைத்தும் ஈரமாகியது. விறகுகள் ஈரமானதால், அதை வாங்குவதற்கும் யாரும் முன்வரவில்லை. இதனால் அன்றைய உணவுக்கு அரிசி வாங்குவதற்கு கூட கையில் பொருள் இல்லை. இதனால், வீட்டிலிருந்த கேழ்வரகில் களி செய்து சிவனடியாருக்காக காத்திருந்தார். நேரம் சென்றதே தவிர, சிவனடியார் யாரும் வருவதாக தெரியவில்லை.
சேந்தனாரின் பக்தியை உலகுக்கு வெளிப்படுத்த விரும்பிய சிவபெருமான், ஒரு சிவனடியார் வேடத்தில் நள்ளிரவு வேளையில் சேந்தானரின் வீட்டுக் கதவை தட்டினார். வந்திருப்பது சிவனடியார் என்பதை அறிந்து அகமகிழ்ந்து சேந்தனார், அவருக்கு கேழ்வரகு களியை விருந்தாக படைத்தார். சிவனடியாரும் அந்த களியை மிக்க மகிழ்ச்சியோடு உண்டதோடு, எஞ்சியிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவுக்கு தருமாறு கேட்டு வாங்கிச் சென்றார்.
இந்நிலையில், சோழ மன்னர் கண்டராதித்தர், தினசரி இரவு செய்யும் சிவபூஜையில் சிவபெருமானின் திருப்பாதச் சலங்கை ஒலி கேட்பது வழக்கம். ஆனால், அன்றிரவு, சேந்தனாரின் வீட்டுக்கு களி உண்ணச் சென்றதால் கண்டராதித்த சோழரின் சிவபூஜையில் நடராஜரின் திருப்பாதச் சலங்கை ஒலி கேட்கவில்லை. இதனால் மனம் நொந்த மன்னர், தன்னுடைய சிவ வழிபாட்டில் ஏதேனும் குறை இருக்குமோ என்று கலங்கியவாரு தூங்கச் சென்றார். கண்டராதித்த சோழ மன்னரின் கனவில் வந்த நடராஜ பெருமான், மன்னா! வருந்த வேண்டாம், இன்றிரவு யாம் சேந்தனாரது இல்லத்திற்கு களி உண்ணச் சென்றொம், அதனால் தான் உன்னுடைய சிவபூஜையில் சிலம்பு ஒலிக்கவில்லை. நாளைய தேர்த் திருவிழாவில் அந்த சேந்தனாரை நீ காண்பாயாக, என்று சொல்லிவிட்டு சென்றார்.
மறுநாள் காலையில் வழக்கம்போல், தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் நடராஜர் கோவில் கருவறையைத் திறந்தனர். அங்கு நடராஜப் பெருமானை சுற்றிலும் களிச் சிதறல்கள் இருந்தன. இந்த செய்தியை உடனடியாக அரசருக்கு தெரியப்படுத்தினர். அரசரும் முதல் நாளிரவு தான் கண்ட கனவை எண்ணி மகிழ்ந்தார். கனவில் நடராஜப் பெருமான் தான் சேந்தனாரின் வீட்டுக்கு களி உண்ண சென்றிருந்தை தெரிவித்திருந்தார். அதன்படியே, அரசரும் சேந்தனாரை கண்டுபிடிக்குமாரு அமைச்சருக்கு கட்டளையிட்டார். ஆனால், சேந்தனாரோ தில்லையில் நடைபெற்ற நடராஜப் பெருமானின் தேர்த் திருவிழாவிற்கு சென்றுவிட்டார். எம்பெருமான் நடராஜப் பெருமானை தேரில் அமர்த்திய உடன் அரசர் உள்பட அனைவரும் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆனால், மழையின் காரணமாக சேற்றில் தேர் சக்கரம் அழுந்தியதால், தேர் நகரவில்லை.
அந்த சமயத்தில், சேந்தனாரின் பாடச்சொல்லி அசரீரியாக ஒரு குரல் ஒலித்தது. உடனே சேந்தனாரோ, ஒன்றும் அறியாத யான் எப்படிப் பாடுவேன் என்று நடராஜரை துதித்தார். எம்பெருமானும் அதற்கு அருள் புரிய சேந்தானர் இறைவன் அருளால், ‘மன்னுகதில்லை வளர்க் நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல‘ என்று தொடங்கி பல்லாண்டு கூறுதுமே என்று முடித்து 13 திருப்பல்லாண்டு பாடல்களை பாடினார். உடனே, தேர் அசைந்தோடி சுற்றி வந்து நிலை பெற்று நின்றது.
இதைப் பார்த்த அரசரும், தில்லை வாழ் அந்தணர்களும் சேந்தனாரின் கால்களில் விழுந்து வணங்கினர். அரசரும் தன்னுடைய கனவில் இறைவன் வந்ததை சேந்தனாருக்கு தெரிவித்தார். சேந்தனார் வீட்டுக்கு நடராஜப் பெருமான் களி உண்ணச் சென்ற அந்த நாள் சிவபெருமானின் நட்சத்திரமான மார்கழி திருவாதிரை நாள் என்றும், இன்றைக்கும் திருவாதிரை நாளில் நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப்படுவதால் திருவாதிரைக்களி என்றும் சொல்லப்படுகிறது. அதனால் தான் ஆருத்ரா தரிசன நாளன்று சிவபெருமானுக்கு களி அமுது படைத்து உண்கிறோம்.
எனவே 'திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி' என்ற சொலவடையே ஏற்பட்டது.
      
      சிதம்பரம் நடராஜர் கோவில்
நமது தேசிய கொடி கோபுரத்தில் ஏற்றப்படும் ஒரே தலம்
ஒவ்வொரு வருடமும் இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட்15 அன்று கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒரு விசேஷம் உண்டு. இந்தியாவிலேயே, தில்லை சிதம்பரத்தில் மட்டும் தான் சுதந்திர தினத்தில் நமது தேசிய கொடி கோவிலின் கோபுரத்தின் மீது ராஜ கம்பீரத்துடன் ஏற்றப்படுகிறது.
இந்திய சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ஆம் தேதி காலையில், சிதம்பரம் நடராசர் கோவிலில் நம் தேசியக் கொடியை ஒரு வெள்ளித் தட்டில் வைத்து, அதை நடராசர் முன் வைத்து பூஜை செய்வார்கள். பின் அக்கொடியை அர்ச்சகர் எடுத்து வர மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று 138 அடி உயரம் உள்ள கோவில் கிழக்கு கோபுரத்தில், ஆலய தீட்சிதர் அக்கொடியை ஏற்றுவார். அப்போது கோவிலுக்கு வருவோர் அனைவரும் தேசியக் கொடிக்கு மரியாதை செய்வார்கள். இது வேறெந்த வழிபாட்டுத் தலத்திலும் இல்லாத சிறப்பாகும். பின்னர் கோவிலுக்கு வரும் பொதுமக்களுக்கு லட்டு உள்ளிட்ட இனிப்புகள் வழங்கப்படும்.
      
      சிதம்பரம் நடராஜர் கோவில்
சிதம்பரம் நடராஜர் ஆனித் திருமஞ்சனம்
அபிஷேகப் பிரியரான நடராஜருக்கு மார்கழி திருவாதிரை, ஆனி உத்திரம், சித்திரை திருவோணம், ஆவணி வளர்பிறை சதுர்த்தசி, புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி, மாசி வளர்பிறை சதுர்த்தசி ஆகிய நாட்கள் என வருடத்திற்கு ஆறு முறை அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறுகின்றன. இந்த ஆறு நாட்களில் மார்கழி திருவாதிரையும், ஆனி உத்திரமும் சிறப்பு வாய்ந்தவை.
இந்த ஆறு அபிஷேகங்களில், மூன்று அபிஷேகங்கள் திதி அடிப்படையிலும், ஏனைய மூன்று அபிஷேகங்கள் நட்சத்திரங்களின் அடிப்படையிலும் நடைபெறும். மானுடர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் என்பது கணக்கு. இதன் வகையில், ஒருநாளைக்கு பெருமானுக்கு ஆறு கால பூஜைகள் செய்து தேவர்கள் மகிழ்கின்றனர் என்ற அடிப்படையில், நடராஜருக்கு வருடத்திற்கு ஆறு அபிஷேகங்கள் செய்யப் பெறுகின்றன.
பொதுவாக சந்தியா காலங்களில் செய்யப்பெறும் வழிபாடுகளுக்கு சிறப்பான பலன்கள் உண்டு. இதில் ஆனி மாதம் என்பது தேவர்களுக்கு மாலைப் பொழுதாகும். எனவே, இந்த மாதத்தில் செய்யப்பெறும் அபிஷேகம் தேவர்களின் மாலைநேரத்திய வழிபாட்டினை ஒட்டியதாக அமைவதால், `ஆனித் திருமஞ்சனம்' மிகவும் சிறப்பித்துச் சொல்லப்பட்டிருக்கிறது.
விரதம் இருந்து ஆனித் திருமஞ்சன தரிசனத்தைக் காண்பதால், பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பார்கள். தம்பதிகளுக்கு சுகமான வாழ்வு கிடைக்கும். கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும். நாடெல்லாம் நல்ல மழை பெய்து விவசாயம் சிறக்கவும் இந்த விழா நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு ஆனித் திருமஞ்சனம் 26.06.2023 திங்கட்கிழமையன்று நடைபெறுகின்றது.
      
      தில்லை காளி கோவில்
பெண் உருவில் தட்சிணாமூர்த்தி
சிதம்பரம் தில்லை காளி ஆலயத்தில் தட்சிணாமூர்த்தி பெண் உருவத்தில் கடம்பவன தக்ஷணரூபிணி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். விரிந்த கூந்தலுடன் கல்லால மரத்தடியில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். அருகில் சனகர், சனந்தனர், சனவாதனர், சனத்குமாரர் என்ற முனிவர்கள் வீற்றிருக்கின்றனர். கல்வியில் சிறப்பு பெற மாணவர்கள் இவரை வியாழனன்று நெய் தீபமேற்றி வழிபடுகின்றனர்.
      
      காயத்ரிதேவி அம்மன் கோவில்
மூன்று அம்பிகைகளின் அம்சமாகத் திகழும் காயத்ரிதேவி அம்மன்
காயத்ரிதேவி அம்மனுக்கு முதன்முதலாக கோவில் எழுப்பப்பட்ட தலம் சிதம்பரம் ஆகும். இக்கோவிலில் மூலவர் காயத்ரிதேவி அம்மன் சன்னதிக்கு வலதுபுறம் விநாயகரும், இடதுபுறம் முருகனும் தனிச்சன்னதிகளில் எழுந்தருளியிருக்கிறார்கள். இவர்களுக்கு நடுவில் காயத்ரிதேவி அம்மன் ஐந்து முகங்களுடனும், பத்து திருக்கரங்களுடனும் தாமரை மலர் மேல் அமர்ந்து இருக்கிறாள். அவரது கரங்களில் கதை, அங்குசம், சங்கு, சக்கரம், தாமரைமலர், சாட்டை, கிண்ணம் ஆகியவற்றை ஏந்தியுள்ளார். பிரம்மா, விஷ்ணு, சிவன், காயத்ரி, சாவித்ரி ஆகிய ஐந்து கடவுளர்களின் வடிவமாக காயத்ரிதேவி அம்மன் திகழ்கிறாள். இவள் காலையில் காயத்ரி, மதியம் சாவித்திரி, மாலையில் சரஸ்வதியாக அருள்பாலிக்கிறாள் என்பது ஐதிகம். காயத்ரிதேவி அம்மனை வழிபட்டால் குழந்தைகளின் கல்வி சிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தில்லை நடராசர் கோயில்
சிவன், விஷ்ணு, பிரம்மா மூவரையும் ஒருசேர தரிசிக்கக் கூடிய தலம்
சிதம்பரம் நடராஜர் கோயிலில், மும்மூர்த்திகளான பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மூவரும் எழுந்து அருளி இருக்கிறார்கள். இவர்கள் மூவரையும், நாம் ஒரே இடத்தில் நின்றபடியே தரிசிக்க முடியும். இந்த மாதிரி அமைப்பு வேறு எந்தத் தலத்திலும் இல்லை. இந்த ஆலயம், தேவாரப்பாடல் பெற்ற திருத்தலமாகவும், திவ்ய தேசமாகவும் விளங்குவது மற்றுமொரு தனிச்சிறப்பாகும். இத்தகைய தனிச்சிறப்பு பெற்ற மற்றுமொரு ஆலயம். காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலாகும். சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள தில்லை கோவிந்தராஜன் பெருமாள் சன்னதியும், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள நிலாத்திங்கள் துண்டம் பெருமாள் சன்னதியும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள் ஆகும்
      
      தில்லை நடராசர் கோயில்
சிதம்பரத்து பொன்னம்பலத்திற்கும் நமது உடலுக்கும் உள்ள ஒற்றுமைகள்
சைவ உலகில் கோவில் என்றால் அது சிதம்பரத்தைத்தான் குறிக்கும். சிவபெருமானின் ஐந்து சபைகளுள் ஒன்றான பொற்சபை உள்ள தலம்.
பஞ்ச பூதத் தலங்களுள் ஆகாயத் தலம்.பொன்னம்பலத்தில் சிவபெருமான் நடராசர் திருக்கோலத்துடன் காட்சி தருகிறார்.
இந்த பொன்னம்பலத்திற்கும் நமது உடலுக்கும் ஒற்றுமைகள் உள்ளன. பொன்னம்பலத்தின் மேலே உள்ள ஒன்பது தங்கக் கலசங்கள் 9 சக்திகளைக் குறிக்கின்றன. இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள 64 மரத்துண்டுகள் 64 கலைகளையும், இதில் வேயப்பட்டுள்ள 21,600 ஓடுகள் ஒரு நாளில் நாம் உள்ளிழுக்கும் மூச்சுக்காற்றினையும், இவற்றில் அடிக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகள் நம் உடலில் உள்ள நரம்புகளின் எண்ணிக்கையையும் குறிக்கும். இக்கோயிலில் மட்டும் கருவறை இடதுபுறம் உள்ளது. அதேபோல் நமது உடம்பில் இதயம் இடப்புறத்தில்தான் உள்ளது.