செழியநல்லூர் துர்கையம்மன் கோயில்
கிடந்த கோலத்தில் அருள்பாலிக்கும் துர்க்கை அம்மன்
பெரும்பாலும் துர்க்கையம்மனை ஆலயங்களில் கோஷ்ட தெய்வமாக சந்நிதி கொண்ட நிலையில், சிவதுர்கையாகவோ அல்லது விஷ்ணு துர்கையாகவோ தரிசிக்கலாம். அபூர்வமாக சில இடங்களில், தனிக்கோயிலிலும், அமர்ந்த கோலத்திலும் காணப்படுவது உண்டு. ஆனால் அந்த அம்மன் சயன கோலத்தில் அருள்பாலிக்கும் திருத்தலம் ஒன்று செழியநல்லூரில் உள்ளது. திருநெல்வேலிக்கு தெற்கே 25 கி.மீ. தொலைவில் (கங்கைகொண்டான் வழி) பராஞ்சேரி அருகில் உள்ளது செழியநல்லூர். மேலும் துர்க்கையம்மன், நாகராஜ பரிவார தேவதைகளுடன், தல விருட்சமாகிய வேப்பமரத்தின் அடியில், சயனக் கோலத்தில் வெட்ட வெளியில் மேலே வானத்தை பார்த்த நிலையில் பக்தர்களுக்கு காட்சி தருகிறாள். இந்த வேப்பமரத்தின் இலைகள் கசப்பதில்லை என்பது மற்றொரு சிறப்பு. இவற்றை உண்பவருக்கு நோய்கள் தீரும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில்
புற்றுநோயை குணப்படுத்தும் பாகம்பிரியாள்
புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுபவர்கள் சிவகங்கை மாவட்டம் திருவெற்றியூர் பாகம்பிரியாள் அம்மனை வழிபட்டால், நோய் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தலத்து இறைவன் திருநாமம் பழம் புற்றுநாதர். வாமன அவதாரம் எடுத்து, மகாபலிச் சக்கரவர்த்தியிடம் மகாவிஷ்ணு மூன்றடி மண் கேட்டார். மகாபலி அந்தத் தானத்தைக் கொடுக்க, தன் முதல் ஓரடியால் மண்ணுலகத்தையும், ஈரடியால் விண்ணுலகத்தையும் அளந்த மகாவிஷ்ணு, தனது மூன்றாவது அடியை மகாபலியின் தலையில் வைத்து, அவனை பாதாள லோகத்துக்கு அனுப்பினார். நீதி நெறி தவறாமல், தர்மத்தின்படி ஆட்சி செய்துவந்த மகாபலியை பாதாளத்துக்கு அனுப்பிய மகாவிஷ்ணுவைத் தொடர்ந்து வந்த தர்மதேவதை, அவரின் பாதத்தில் புற்றுநோய் ஏற்பட சாபம் தந்தாள். தர்மதேவதையால் சபிக்கப்பட்ட மகாவிஷ்ணு, தனது சாபம் தீர பூவுலகில் சிவாலய தரிசனம் செய்து, திருவாடானை ஆதிரத்தினேஸ்வரரை வணங்கி, பின் ஜெயபுரம் என்கிற வெற்றியூர் தலத்தை அடைந்தார். அங்கு வாசுகி தீர்த்தத்தில் நீராடி, இறைவன் பழம்புற்று நாதரை வழிபட்டு சாபவிமோசனம் அடைந்தார். பாதத்தில் ஏற்பட்டிருந்த புற்றுநோயும் தீர்ந்தது. புற்றுநோய் தீர வாசுகி தீர்த்தத்தில் நீராடி அம்பிகையை வணங்கி தீர்த்தம் வாங்கிக் குடித்து வர குணம் அடையலாம் என்று இப்பகுதி மக்கள் இன்றும் நம்பிக்கையுடன் இத்தலம் வந்து வழிபடுகின்றனர். மரணபயத்துடன் இங்கு வருவோர், புத்துணர்வு பெற்று நம்பிக்கையுடன் செல்கின்றனர்.
சிறுகரும்பூர் திரிபுராந்தக ஈஸ்வரர் கோவில்
நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் சுந்தர காமாட்சி அம்மன்
சென்னை-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஓச்சேரி என்னும் இடத்திலிருந்து 1.5 கி.மீ. தொலைவிலும், காவேரிப்பாக்கத்திலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் உள்ளது சிறுகரும்பூர் திரிபுராந்தக ஈஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் சுந்தரகாமாட்சி.
அம்பிகை சுந்தரகாமாட்சி பெயருக்கேற்றார்போல், அழகே உருவாய், அருளே வடிவாய் இங்கு ஆட்சிபுரிந்து வருகிறாள். பொதுவாக காமாட்சி அம்மனை நாம் அமர்ந்த கோலத்தில்தான் தரிசித்து இருப்போம். ஆனால் இத்தலத்தில், மங்கலங்களை அருளும் தேவியாய், மனதைக் கவரும் தெய்வீகத் தோற்றத்துடன் சாந்தம் தவழும் விழிகளால், மலர், பாசம் ஏந்தி அபய-வரத முத்திரை அருளி, குண்டலங்கள், ஹார வடங்கள், அணிந்தும் தாமரை மலரில் நின்ற திருக்கோலத்தில் ஒயிலுடன் காட்சி தருகிறாள். இப்படி நின்ற கோலத்தில் காமாட்சி அம்மன் அருள் புரிவது தனிச்சிறப்பாகும். அம்பாளின் எதிரில் ஸ்ரீசக்கரம் உள்ளது.
அம்பிகை சுந்தரகாமாட்சி மரகதப் பச்சைக்கல்லால் ஆனவள் என்கின்றனர். அம்பிகையின் கருவறை சுவர்களும் பச்சைக் கல்லால் ஆனது. பச்சை நிறம் குளிர்ச்சியை தரவல்லது. அதுபோல் பச்சைத் திருமேனி உடைய இந்த அம்மனும் தன்னுடைய பக்தர்களுக்கு வேண்டிய வரம் அளித்து அவர்களது மனதை குளிர்விக்கிறாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பிரார்த்தனை
இத்தலத்தில் வில்வ மரமும், வேப்ப மரமும் பின்னிப் பிணைந்து காணப்படுகின்றது. குழந்தைப்பேறு வேண்டுவோர், தம்பதியராக வந்து இந்த மரங்களுக்கு பூஜை செய்தால் மழலைச் செல்வம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தர்மபுரி கல்யாண காமாட்சி கோவில்
ஆடிமாதம் மூன்றாவது செவ்வாய் மட்டுமே சுயரூப காட்சி தரும் சூலினி ராஜ துர்க்காம்பிகை
தர்மபுரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது கல்யாண காமாட்சி கோவில். தருமர் வழிபட்டதால் இந்த தலத்திற்கு தருமபுரி என்று பெயர். இந்த கோவில், கோட்டை கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இறைவன் திருநாமம் மல்லிகார்ஜுனேஸ்வரர். இறைவியின் திருநாமம் கல்யாண காமாட்சி.
அம்பாள் கல்யாண காமாட்சி கருவறையின் அருகில், அர்த்தமண்டபத்தில் சிறிய தனிச்சன்னதியில் அம்பிகை சூலினியின் இராஜதுர்காம்பிகை வடிவம் கிழக்குநோக்கி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பஞ்சபாண்டவர்களில் மூத்தவரான தருமர், இருபத்தேழு மூல மந்திரங்களால் வழிபட்ட துர்க்கை இவள்.
துர்க்கை மகிஷாசுரனை வதம் செய்யும் கோலத்தில் எழுந்தருளி இருந்தால் அவளை சூலினி துர்க்கை என்பார்கள். இத்தலத்தில் துர்க்கை, சூலினி ராஜ துர்காம்பிகையாக சூலம் சங்கு ஏந்தி மகிஷாசுரனை வதம் செய்யும் தோற்றத்தில் அருள்பாலிக்கிறாள். கீழே விழுந்து கிடக்கும் மகிஷனின் கொம்பை இடதுகரத்தால் பிடித்துக்கொண்டு வலதுபாதத்தால் அவன் கழுத்தை மிதித்துக்கொண்டு, காரணம் , காரணி, அதன் பலன் என மூன்று வகையில் மூன்று வகை சூலங்களுடன், சம்கார தோற்றத்தில் காட்சி தருகிறாள். இது தமிழகத்தில் சூலினிக்கான ஒரே கோயிலாகும்.
சூலினி ராஜ துர்காம்பிகையின் முழு தரிசனம், வருடத்தில் ஒரு நாள் மட்டுமே நமக்குக் கிட்டும். மற்ற நாட்களில் திரையிடப்பட்டு திருமுக மண்டலத்தை மட்டுமே தரிசிக்க முடியும். சூலினி ராஜ துர்காம்பிகையின் சுய ரூபத்தை, முழு உருவை சந்தனக்காப்பு அலங்காரத்தில் , வருடத்தில் ஆடி மூன்றாவது செவ்வாய்க்கிழமை மதியம் 4.15 முதல் இரவு 9.15 வரை மட்டுமே தரிசிக்க முடியும்.
பிரார்த்தனை
சங்கு சக்ரம் ஏந்தி மகிஷனை வதைக்கும் கோபரூபத்தில் இவள் இருந்தாலும் நாடிவரும் அன்பருக்கு நலங்கள் பல சேர்ப்பவள். ராகு கிரக அதிதேவதையான ஸ்ரீ சூலினி ராஜ துர்கையை, கிருஷ்ணரின் ஆலோசனைப்படி வழிபட்டு தருமர் இழந்த ராஜ்ஜியத்தைப் பெற்றார். செவ்வாய் தோஷத்தை நிவர்த்தி செய்து அருளுகிறாள்.
ஸ்ரீரங்கம் காவேரி அம்மன் கோவில்
காவேரி அன்னைக்கு நன்றி செலுத்தும் ஆடிப்பெருக்கு விழா
ஆடி மாதம் 18ம் தேதியை ஆடிப் பதினெட்டாம் பெருக்கு என்று தமிழக மக்கள் விமரிசையாக கொண்டாடுகிறார்கள்.பதினெட்டு என்ற எண் வெற்றியைக் குறிக்கும். மகாபாரதத்தில் 18 பர்வங்கள், பகவத்கீதையில் 18 அத்தியாயங்கள், சபரிமலையில் 18 படிகள் முதலானவை எல்லாம் இந்த அடிப்படையிலேயே அமைந்தன.
தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டு வரும் விழாக்களில், காவிரிக்கென பிரத்யேகமான விழாவாக ஆடிப்பெருக்கு விழா உள்ளது. பயிர் செழிக்க வளம் அருளும் காவேரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில்தான் இந்த ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை ஆற்றங்கரை மற்றும் நீர்நிலைகளின் கரைகளில் மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
ஆடிப்பெருக்கன்று காவேரிக்கரையில் இளம் பெண்களும், புதுமண தம்பதிகள் மற்றும் திருமணமான பெண்கள் புத்தாடை உடுத்திக் கொண்டு பழங்கள், அவல், ஊறவைத்த இனிப்பு கலந்த அரிசி, புதிய மாங்கல்ய மற்றும் மஞ்சள் கயிறு, காதோலை கருகமணி ஆகியவற்றை வைத்து மஞ்சள் மற்றும் மணலால் உருவாக்கப்பட்ட பிள்ளையார் முன் படையல் செய்து வழிபடுவார்கள். தாலி பாக்கியம் நிலைக்க சுமங்கலி பெண்கள் ஆடிப்பெருக்கு அன்று புது தாலி மாற்றிக் கொள்வர். இந்த நன்னாளில் புதுமண பெண்ணிற்கு தாலி பிரித்து கோர்ப்பர் . எந்த ஒரு புது மற்றும் நல்ல காரியங்களை ஆடிப்பெருக்கு அன்று ஆரம்பித்தால் , அந்த காரியம் மேலும் மேலும் பெருகும் என்பது ஐதீகம்.
காவேரித் தாயாருக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் அளிக்கும் சீர்வரிசைகள்
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் அமைந்துள்ளது காவேரி அம்மன் கோவில். இங்குதான் கீழ் இரு கரங்களில் புனித கலசம் தாங்கி, மேலிரு கரங்களில் அக்கமாலையும் மலர்ச் செண்டும் தாங்கி நின்ற கோலத்தில் அருளுகிறாள் காவேரி அன்னை.
காவேரி அன்னை, ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் தங்கையாக கருதப்படுகிறாள். ஆடியில் காவேரித்தாய் கருவுற்றிருப்பதாக ஐதீகம். எனவேதான் தனது தங்கையான காவேரி யை காண ஸ்ரீரங்கம் ரங்கநாதர், சீர்வரிசையுடன் ஆடிப்பெருக்கு அன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உள்ள படித்துறைக்கு எழுந்தருள்வார். அன்று ஸ்ரீரங்கம் கோவிலிலிருந்து காவேரித் தாயாருக்கு சீர்வரிசைகளை யானைமீது கொண்டு வருவார்கள். அந்தச் சீர்வரிசைகளில் விதவிதமான மங்கலப் பொருட் கள், மாலைகள், புதிய ஆடைகள் ஆகியவற்றுடன் தாலிப்பொட்டு ஒன்றும் இருக்கும். இதனை அங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாள் முன்னிலையில் அங்குள்ள காவேரித் தாயாருக்குப் படைத்து, காவேரி நதியில் சமர்ப்பிப்பார்கள்.
காவேரிக்கு பெருமாள் சீர்வரிசை அளிக்கும் காட்சியைக் கண்டால் `கோடி புண்ணியம்' கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்பின், பெருமாள் பல்லக்கில் ஏறி கோவிலை நோக்கிச் செல்வது வழக்கம். அன்று அம்மா மண்டபம் காவேரிப் படித்துறை விழாக்கோலம் காணும். பெருமாள் கோவிலில் நுழையும்போது, வெளியில் உள்ள ஆண்டாள் சந்நிதிக்கு முன் எழுந்தருள்வார். அங்கே ஸ்ரீஆண்டாளும் பெருமாளும் மாலை மாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த அற்புதமான காட்சியை ஆடிப் பதினெட்டு அன்று ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும்பொழுது, தம்பதியர் தரிசித்தால் வாழ்வில் வசந்தம் வீசும். கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
ராமபிரான் அசுரர்களை வதம் செய்த பாவம் நீங்க, காவேரியில் நீராடிய நாள் ‘ஆடிப்பெருக்கு' என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
பவானி கூடுதுறையில் ஆடிப்பெருக்கு விழா
தென்னிந்தியாவில் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது, பவானி கூடுதுறை. இங்குள்ள சங்கமேஸ்வரர் கோவில் ஆடிப்பெருக்கு அன்று அதிகாலையில் திறக்கப்படும். கூடுதுறையில் நீராடிவிட்டு பக்தர்கள், இறைவனை வழிபடுவார்கள். அம்மனுக்கு தேங்காய், பழம், பூ, காதோலை கருகமணி படைத்து ஆராதனை செய்வார்கள். பூஜையில் வைத்த மஞ்சள் சரடினை பெண்கள் கழுத்திலும், ஆண்கள் வலது கை மணிக்கட்டிலும் அணிந்து கொள்வர். இதனால் வீட்டில் மங்கள காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை.
அட்சய திரிதியை தினத்தை விட, ஆடிப்பெருக்கு சிறப்பான நன்னாளாகும். இந்நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம். ஒருவர் செய்யும் நற்செயல்களால், எவ்வாறு புண்ணியம் பெருகுகிறதோ, அதுபோல் இந்த நாளில் தொடங்கும் எந்தக் காரியமும் நன்மை அளிக்கும் வகையிலேயே நிறைவு பெறும் என்பது நம்பிக்கை.
சிதம்பரம் தில்லை காளி கோவில்
பெண் உருவில் தட்சிணாமூர்த்தி
சிதம்பரம் தில்லை காளி ஆலயத்தில் தட்சிணாமூர்த்தி பெண் உருவத்தில் கடம்பவன தக்ஷணரூபிணி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். விரிந்த கூந்தலுடன் கல்லால மரத்தடியில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். அருகில் சனகர், சனந்தனர், சனவாதனர், சனத்குமாரர் என்ற முனிவர்கள் வீற்றிருக்கின்றனர். கல்வியில் சிறப்பு பெற மாணவர்கள் இவரை வியாழனன்று நெய் தீபமேற்றி வழிபடுகின்றனர்.
திருச்சி காளிகா பரமேஸ்வரி கோவில்
திருமேனியில் தாலிச் சரடுடன் காட்சிதரும் அம்மன்
திருச்சி நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது காளிகா பரமேஸ்வரி கோவில். இந்த அம்மன் அமர்ந்த நிலையில் தன் நான்கு கரங்களில் டமருகம், பாசம், சூலம், கபாலம் ஆகியவற்றை ஏந்தி காட்சி தருகிறாள். அம்மனின் கழுத்தில் திருமாங்கல்யம் துலங்குவது மிகவும் சிறப்பான அம்சமாகும். விக்கிரகத்தின் அமைப்பிலேயே தாலிச் சரடு இருப்பது வேறு எங்கும் காண இயலாத அற்புத அமைப்பாகும்.
இந்த அம்மனிடம் வேண்டிக்கொள்ளும் பெண்களுக்கு திருமணப்பேறு விரைவில் கிடைக்கிறது. திருமணம் நிச்சயம் ஆனதும் மணமகளின் தாலியை அன்னையின் பாதத்தில் வைத்து, அர்ச்சனை செய்து பெற்றுக் கொள்ளும் வழக்கம் இங்கு உள்ளது.
திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவில்
பசுவாய் தோன்றிய பார்வதிக்கு விமோசனம் தந்த தலம்
மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தேவாரத்தலம் திருவாவடுதுறை. இறைவன் : கோமுத்தீசுவரர். இறைவி: ஒப்பிலா முலையம்பிகை.ஒருசமயம் கைலாயத்தில் சிவனும், பார்வதியும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிவனே தொடர்ந்து வெற்றி பெற்றதாக தன்னை அறிவித்துக் கொண்டார். அம்பாள் கோபம் கொள்ளவே, சிவன் அவளை பசுவாக பிறக்கும்படி சபித்து விட்டார். அவள் தன் வடிவம் நீங்கி மன்னிப்புத் தரும்படி சிவனிடம் வேண்டினாள். இத்தலத்தில் தம்மை வழிபட்டு வர சாபம் நீங்கப்பெறும் என்றார் சிவன். அதன்படி அம்பாள் பசுவின் வடிவில் இங்கு வந்து, சிவனை வேண்டி தவமிருந்தாள்.சிவன் அவளுக்கு காட்சி தந்து, தன்னுடன் அணைத்துக் கொண்டு, விமோசனம் கொடுத்தார். “கோ’வாகிய பசுவிற்கு விமோசனம் தந்தவர் என்பதால், “கோமுக்தீஸ்வரர்’ என்று பெயர் பெற்றார்.
திருந்துதேவன்குடி ஸ்ரீகற்கடேஸ்வரர் கோவில்
அம்பிகை நண்டு வடிவத்தில் வழிபட்ட தலம்
கும்பகோணம் - பூம்புகார் சாலையில், கும்ப கோணத்திலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத்தலம் திருந்து தேவன்குடி.முற்காலத்தில் ஈசனின் சாபத்தினால் நண்டாக மாறிய அம்பிகை, திருந்து தேவன்குடித் தலத்துக்கு வந்து ஈசனை தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு வந்தாள். அதேநேரம், தான் கொண்ட ஆணவத்தின் காரணமாக இந்திர பதவியை இழந்த தேவேந்திரனும் குருபகவானின் ஆலோசனை யின்படி இந்தத் தலத்துக்கு வந்து, தினமும் 1,008 தாமரை மலர்களால் இறைவனை அர்ச்சித்து வழிபட்டு வந்தான்.இந்த நிலையில், தான் வளர்த்து வந்த தாமரை மலர்களை நண்டு ஒன்று பறித்து வந்து இறைவனை அர்ச்சிப்பதைக் கண்டு, இந்திரன்கோபம் கொண்டான் . தனது வாளால் அந்த நண்டை வெட்டத் துணிந்தான். அவனது வாளின் முனை சிவலிங்கத்தின் மீது பட்டது. அப்போது, சிவலிங்கத்தின் உச்சியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்திய சிவபெருமான், நண்டின் வடிவத்தில் இருந்த அம்பிகையை தம்முள் ஐக்கியப்படுத்திக் கொண்டார்.நண்டின் வடிவத்தில் வந்தது அம்பிகையே என்பதை உணர்ந்த இந்திரன், தனது தவற்றுக்கு வருந்தி இறைவனிடம் மன்னிப்பு கேட்டான். அதன் காரணமாக இந்தத் தலத்துக்கு திருந்து தேவன்குடி என்ற பெயர் ஏற்பட்டது.. சிவலிங்கத் திருமேனியில் வெட்டுத் தழும்புகளையும், லிங்கத் திருமேனியின் உச்சியில் நண்டு ஐக்கியமான துளையையும் இன்றும் காணலாம். கடக ராசி, ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குச் சிறப்பான பரிகாரத் தலம் இது. ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள், தங்களின் பிறந்த நட்சத்திரத்தில் அல்லது தேய்பிறை அஷ்டமி நாளில் இங்கு வந்து இறைவனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வழிபட்டால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில்
திருஞான சம்பந்தரை இடுப்பில் தாங்கி நிற்கும் அம்மன்
சீர்காழியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருவெண்காடு ஆகும். திருஞானசம்பந்தர், இத்தலத்திற்கு வந்தபோது ஊரெல்லாம் சிவலிங்கமாகத் தெரிய, காலால் மிதிக்க அஞ்சி நின்றார். இதைக் கண்ட அம்பிகை, பெண் உருவெடுத்து வந்து சம்பந்தரை தமது இடுப்பில் தாங்கி கோயிலுக்குள் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதனால் அம்பிகை 'இடுக்கி அம்மன்' என்று அழைக்கப்பட்டாள். அம்மன் பிரகாரத்தின் இடது மூலையில் சம்பந்தரை இடுப்பில் இருத்தியபடி உள்ள இடுக்கி அம்மன் சன்னதி உள்ளது.
இக்கோவிலில் உள்ள மூன்று குளத்திலும் நீராடி பிள்ளைஇடுக்கி அம்மனை வழிபட்டால் நிச்சயம் குழந்தைபேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை..
ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில்
தேன் அபிஷேகத்தின்போது சிவலிங்கத்தில் தெரியும் அம்மன்
விழுப்புரத்தையடுத்த ரிஷிவந்தியத்திலுள்ள முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் மூலவரான லிங்கத்திற்கு தேனாபிஷேகம் நடைபெறும்போது லிங்க பாணத்தை நன்கு கவனித்துப் பார்த்தால், அம்மன் தன் கையில் கிளி வைத்துக் கொண்டு இடை நெளித்து நிற்பது போன்ற தோற்றத்தைக் காணலாம். மற்ற நேரங்களில் லிங்கம் சாதாரணமாகத்தான் தெரியும்.தேவர்களின் தலைவனான இந்திரன் தினமும் இத்தல இறைவனுக்கு 108 குடம் பால் அபிஷேகம் செய்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தான். ஆனால், அம்மனை வழிபடாமல் சென்று விடுவான். தன்னை வழிபடாத இந்திரனுக்கு பாடம் புகட்ட நினைத்த பார்வதி ஒருமுறை அபிஷேகக் குடங்களை மறைத்து வைத்து விட்டாள். பால் குடங்களைக் காணவில்லையே என வருந்திய இந்திரன், அங்கிருந்த பலிபீடத்தில் தலையை மோதி உயிர் விட முயற்சித்தான். அப்போது ஈசன் தோன்றி, இனிமேல் பார்வதிக்கும் சேர்த்து அபிஷேகம் செய்யும்படியாக பணித்தார். அத்துடன் தினமும் நடக்கும் தேனபிஷேக பூஜையில் அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுப்பதாக கூறி மறைந்தார். இதன்படி இன்றும் கூட தினசரி நடக்கும் தேனபிசேக பூசையில் சுயம்புலிங்கத்தில் அர்த்தநாரி ஈஸ்வரனாக காட்சி தருகிறார். மற்ற அபிசேகம் நடக்கும் போது இலிங்க வடிவம் மட்டுமே தெரியும்.
திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவில்
மருத்துவச்சியாய் சென்று பிரசவம் பார்த்த திருப்புகலூர் அம்பாள் கருந்தார்குழலி
நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 24 கிலோமீட்டர் தொலைவில், நன்னிலத்திற்கு அருகிலுள்ள தேவாரத்தலம் ,திருப்புகலூர்.இறைவன் : அக்னீஸ்வரர். இறைவி: கருந்தார் குழலி.
ஒரு சமயம், திருப்புகலூர் அருகில் உள்ள போலகம் கிராமத்தில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை காப்பாற்ற அவரின் தாய் திருப்புகலூர் அம்பாள் கருந்தார்குழலியை வேண்ட, அம்பாளே வெள்ளைப் புடவை அணிந்து மருத்துவச்சியாய் சென்று சுகப்பிரசவம் செய்து கொடுத்ததால், சூளிகாம்பாள் என்று அழைக்கப்படுகிறார். அதற்காக அக்குடும்பத்தினர் கோயிலுக்கு காணிக்கையாக கொடுத்த நிலம் இன்றும் மருத்துவ காணி நிலம் என்று அழைக்கப்படுகிறது. இன்று வரை இப்பகுதியில் பிரசவத்தால் யாரும் இறந்ததில்லை என்பதிலிருந்து அம்பாளின் அருள் விளங்கும்.அதனால் இங்குள்ள சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள திருமருகல், இராமநந்தீஸ்வரம், திருசெங்காட்டங்குடி மற்றும் இத்தலத்தில் உள்ள அம்மனுக்கும் 'சூலிகாம்பாள்' என்னும் திருநாமம் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாது பிரசவம் பார்த்து இரவு தாமதமாகச் சென்றதால் அம்பாள் கோவில் உள்ளே செல்லாமல் வெளியிலேயே நின்று விட்டாள். அதனால் இந்த நான்கு கோயிலிலும் அம்மன் சன்னதி வெளியிலேயே உள்ளது. எனவே, அர்த்தஜாம பூஜையின்போது அம்பிகைக்கு சம்பா அரிசி, மிளகு, சீரகம், உப்பு, நெய் கலந்த சாதம் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது
வல்லம் ஏகௌரியம்மன் கோவில்
இரண்டு திருமுகங்கள் கொண்ட அபூர்வ அம்மன்
தஞ்சையில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வல்லம் என்ற ஊரில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஏகௌரியம்மன் கோவில் உள்ளது. சோழ மன்னர்களின் வழிபாட்டு தெய்வமாக விளங்கியவள். இந்த தேவி அக்னி கிரீடம் அணிந்து, எட்டு திருக்கரங்களுடன், பத்மபீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். ஒன்றன்மீது ஒன்றாக அமைந்த இரண்டு திருமுகங்களுடன் காட்சி தருகிறாள். ஒரு தலை கோரைப் பல்லுடன் உக்கிரமாக உள்ளது. இதற்கு மேலுள்ள மற்றொரு தலை அமைதியே வடிவமாக உள்ளது. தீயவர்களை அழிக்க உக்கிரமுடன் ஒரு முகம், வழிபடும் அடியவர்களின் துயர் நீக்க சாந்தமுடன் மற்றொரு முகத்துடனும் காட்சி அளிக்கிறாள். எட்டு கைகளில் சூலம், கத்தி, உடுக்கை, நாகம், கேடயம், மணி, கபாலமும், பார்வதியின் அம்சத்தை உணர்த்தும் விதமாக கிளியும் உள்ளது. இப்படி ஒன்றன் மேல் ஒன்றாக இரண்டு இரண்டு திருமுகங்கள் அமைந்திருப்பது ஒரு அபூர்வமான தோற்றமாகும்.
அம்மனுக்கு ஏகௌரி என்ற பெயர் வந்த வரலாறு
முன்னொரு காலத்தில் தஞ்சன் என்ற அரக்கன் சிவனை நினைத்து கடும் தவம் புரிந்து, ஒரு பெண்ணை தவிர யாராலும் தன்னை வெல்ல முடியாது என்ற வரத்தை பெற்றான். பின்னர் தஞ்சன், ஆணவத்தால் முனிவர்களையும், தேவர்களையும் மிகவும் கொடுமைப் படுத்தினான். தேவர்கள் சிவபெருமானிடம் தஞ்சனின் கொடுமைகள் குறித்து முறையிட்டனர். சிவபெருமான் பார்வதி தேவியை அழைத்து அரக்கனை அழிக்க ஆணையிட்டார். ஈசனின் ஆணையை ஏற்ற பார்வதி தேவி சிம்ம வாகன மேறி எட்டுக்கரங்களிலும் ஆயுதம் ஏந்தி புறப்பட்டாள். தேவிக்கும், தஞ்சனுக்கும் கடும்போர் ஏற்பட்டது.
போரின் இறுதியில், தஞ்சன் எருமைக் கடாவாக மாறி தேவியைத் தாக்கினான். தேவி எருமைக் கடாவாக வந்த அரக்கனை வாளால் தலை வேறு, உடல் வேறு என இரண்டு துண்டாக்கினாள்.
உயிர் பிரியும் நேரத்தில் தஞ்சன் தேவியைப் பணிந்து, இந்த பகுதி எனது பெயரால் தஞ்சாபுரி என்று அழைக்கப்பட வேண்டும் என்று வேண்டினான். தேவி, அவன் கேட்ட வரத்தை வழங்கினாள் . அரக்கனை வதைத்த பின்னும், அம்மனின் ஆக்ரோஷம் அடங்கவில்லை. அதே உக்கிரத்துடன் வல்லத்தில் அலைந்து திரிந்தாள். இதனால் நாடெங்கும் வறட்சி உண்டாயிற்று. நாடெங்கும் பஞ்சம், பசி, பட்டினி என மக்கள் தவித்தனர். நிலைமையை உணர்ந்த சிவபெருமான் பார்வதியை ;ஏ கவுரி; சாந்தம் கொள் என்று கேட்டுக்கொண்டார். அம்மையின் கோபம் சற்று தணிந்தது. நெல்லிப்பள்ளம் என்ற குளத்தில் மூழ்கினாள். அப்போது பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து அங்கேயே எழுந்தருளவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இங்கு ஏகௌரி அம்மனாக அருள்புரிந்து வருகிறாள். அம்மன் அரக்கனை வதம் செய்தது ஆடிமாத கடைசி வெள்ளிக்கிழமை ஆகும். எனவே அன்றைய தினம் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து, தீ மிதித்து அம்மனை சாந்தப் படுத்துகின்றனர்.
குழந்தை பாக்கியத்திற்கு எலுமிச்சை பழச்சாறு பிரசாதம் தரும் நடைமுறை
குழந்தை வரம் வேண்டி இத்தலத்துக்கு வரும் பெண்களுக்கு எலுமிச்சம் பழத்திற்கு பதிலாக எலுமிச்சை பழச்சாறை பிரசாதமாகத் தருகிறார்கள். வேறு எந்த தலத்திலும் இப்படி ஒரு நடைமுறை இல்லை.
ஏகௌரி அம்மனின் இருபுறமும் ராகு கேது எழுந்தருளி இருக்கிறார்கள். அதனால் இத்தலம் கால சர்ப்ப தோஷம் , களத்திர தோஷம், திருமணத்தடை போன்ற பிரச்சினைகளுக்கு சிறந்த பரிகார தலமாக இருக்கிறது.
திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் கோவில்
சரும நோய்களைத் தீர்க்கும் அம்பிகை
தேவாரத் தலமான திருக்காரவாசல் இறைவன் பெயர் கண்ணாயிரநாதர். இறைவியின் பெயர் கைலாச நாயகி. கைலாசநாயகி. நின்ற கோலத்தில் ஒரு கையில் அக்கமாலையுடனும், மற்றதில் தாமரையுடனும் தெற்கு நோக்கி தரிசனம் தருகிறாள். இக்கோவிலில், ஓரிடத்தில் நின்று நேரே சிவபெருமானையும் வலதுபுறம் அம்பாளையும் தரிசிக்கும்படியாக சன்னதிகள் அமைந்துள்ளன.இத்தலத்து அம்பிகை "பஞ்ச்சதசா ஷர" சொரூபிணியாக விளங்குகிறாள் என்று புராணங்கள் கூறுகின்றன. இத்தலத்தில் அம்பிகைக்குத் தனிச் சிறப்பு உண்டு. மக்கள் செய்த பாவங்களால் உலகில் தலங்கள் மகிமை குன்றிய காலத்தில் பராசக்தியே இத்தலத்தை உயர்த்தினார் என்பது புராண வரலாறு. கைலாசநாயகிக்கு நடைபெறும் மாதாந்திர பௌர்ணமி அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதில் வைத்துத்தரும் சேஷ தீர்த்தத்தை ஒரு மண்டலம் சாப்பிட்டுவர தீராத நோய்களும் , முக்கியமாக சரும நோய்களும் தீர்கின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கதிராமங்கலம் வனதுர்கா பரமேஸ்வரி அம்மன் கோவில்
கம்பருக்கு அருளிய துர்க்கை
மயிலாடுதுறையில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது கதிராமங்கலம் வன துர்க்கை அம்மன் கோவில். கதிராமங்கலம் தலத்துக்கு அருகில் அமைந்திருக்கிறது தேரழுந்தூர். கம்பர் வசித்த ஊர் இது. தேரழுந்தூரில் வாழ்ந்து வந்த கவிச்சக்கரவர்த்தி கம்பர் அன்னை வனதுர்க்கையின் மேல் அளவு கடந்த பக்தி கொண்டவர். இவளை வழிபடாமல் எந்த ஒரு செயலையும் துவங்குவதில்லை. ஒருநாள் மழைக் காலத்தில் கம்பர் வீட்டுக் கூரை சிதைந்தது. வீட்டுக்குள் மழை நீர் கொட்டியது. அப்போது கம்பர் மனமுருகி, "அம்மா! அடைமழை இடைவிடாது பெய்கிறதே. ஒரு கூரைகூட இல்லாமல் நீயே நனைந்தபடி நிற்கிறாய்! உன் அருள் மழை என்றும் என்னைக் காக்கும்' என்று மழையைப் பொருட்படுத்தாது ஆழ்ந்த உறக்கத்தில் ஈடுபட்டார். காலை விழித்தெழுந்து பார்த்தபோது அவர் வீட்டுக் கூரை நெற்கதிர்களால் வேயப்பட்டு இருந்ததைக் கண்டு வியந்து, "கதிர்தேவி, கதிர்வேய்ந்த மங்களநாயகி' என பாடிப் பரவினார். கதிர் வேய்ந்த மங்கள நாயகி இருக்குமிடம் கதிர் வேய்ந்த மங்களம் என்று அழைக்கபடலாயிற்று. பின்னர், கதிர் வேய்ந்த மங்களம் என்பதே கதிராமங்கலம் என மருவியது.
கதிராமங்கலம் வனதுர்கா பரமேஸ்வரி கோயில்
முன்புறம் துர்க்கையாகவும் பின்புறம் சர்ப்ப தோற்றத்திலும் காட்சி தரும் வனதுர்கா பரமேஸ்வரி.
மயிலாடுதுறையில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது கதிராமங்கலம் வன துர்க்கை அம்மன் கோவில். கதிராமங்கலம் தலத்தில் அருள்பாலிக்கும் அன்னை வனதுர்கா பரமேஸ்வரி, முன்புறம் துர்க்கையாகவும் பின்புறம் சர்ப்ப தோற்றத்திலும் காட்சி தருகிறாள். இன்றும் அம்பிகையின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடியில் இந்த சர்ப்ப தரிசனத்தை காணலாம்.
சிவ பூஜைக்காக மலர் பறிக்க வந்த ராகுவே வனதுர்கா பரமேஸ்வரியை அடையாளம் கண்டு முதலில் பூஜித்திருக்கிறார். ராகுவே அன்னையை இங்கு ஸ்தாபித்தாக ஐதீகம். அதனாலேயே இது ராகு பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. வனதுர்கா பரமேஸ்வரிக்கு அர்ச்சனை செய்யும் போது அவளது வலது உள்ளங்கையில் வியர்வை முத்துக்கள் வெளிப்படுகின்றன.இது இன்றும் நடக்கும் அதிசயமான நிகழ்வாகும்.
திருமறைக்காடர் கோவில்
சரஸ்வதி தவக்கோலத்தில் இருக்கும் அபூர்வ காட்சி
நாகப்பட்டினத்தில் இருந்து தெற்கே சுமார் 50 கி.மீ. தொலைவில் தேவாரத் தலமான வேதாரண்யம் உள்ளது. இறைவர் திருப்பெயர் திருமறைக்காடர்.
இத்தலத்து அம்பாளின் பெயர் வேதநாயகி எனவும் தமிழில் யாழைப் பழித்த மொழியாள் என்றும் வடமொழியில் வீணாவாத விதூஷணி எனவும் வழங்கப்படுகிறது.அம்பிகையின் குரல் சரசுவதியின் வீணை நாதத்தை விட இனிமையாக இருந்ததால் அம்பிகைக்கு இங்கே இப்பெயர்.அதனால் பொதுவாக கையில் வீணையுடன் காட்சியளிக்கும் சரஸ்வதி இத்தலத்தில் வீணையில்லாமல் தவக்கோலத்தில் சுவடியைக் கைக் கொண்டு இருப்பதைக் காணலாம். சரஸ்வதியின் இந்த கோலத்தை நாம் வேறு எந்தத் தலத்திலும் காண முடியாது.
வடகுரங்காடுதுறை தயாநிதீசுவரர் கோவில்
சிவன் கோவிலில் விஷ்ணு துர்க்கை
அபிஷேகத்தின் போது நீல நிறமாக மாறும் பால்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் வடகுரங்காடுதுறை. மக்கள் வழக்கில் ஆடுதுறை பெருமாள் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இறைவன் திருநாமம் தயாநிதீசுவரர். இறைவி அழகுசடைமுடி அம்மை.
பொதுவாக சிவாலயத்தில் இருக்கும் துர்க்கையை சிவதுர்க்கை என்றே அழைப்பார்கள். ஆனால், இத்தலத்தில் எழுந்தருளியுள்ள துர்க்கை, கையில் சங்கு- சக்கரத்துடன் பெருமாள் அம்சமாகத் திகழ்வதால், ஸ்ரீவிஷ்ணுதுர்க்கை என்று போற்றப்படுகிறாள். எட்டுத் திருக்கரங்களுடன் அற்புதமாகக் காட்சி தரும் ஸ்ரீவிஷ்ணு துர்க்கைக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. இந்தத் துர்க்கைக்குப் பாலபிஷேகம் செய்யும்போது, அந்தப் பாலானது நீலநிறத்தில் காட்சியளிக்கும் அதிசயத்தை இன்றைக்கும் தரிசிக்கலாம்.
நவராத்திரி காலத்தில் இந்த அதிசய துர்க்கையை வழிபடுவதன் மூலம் மனதில் தைரியம் அதிகரிக்கும்.
திருக்கழுக்குன்றம் பக்தவத்சலேஸ்வரர் கோவில்
அம்பாளுக்கு வருடத்தில் மூன்று நாட்கள் மட்டுமே அபிஷேகம் செய்யப்படும் தேவாரத் தலம்
பக்தவத்சலேஸ்வரர் செங்கல்பட்டு- மாமல்லபுரம் சாலையில் சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்கழுக்குன்றம். மலைமேல் உள்ள கோவிலில் வேதகிரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். ஊரில் அமைந்துள்ள கோவிலில் எழுந்தருளியுள்ள ஈசனின் திருநாமம் பக்தவத்சலேஸ்வரர். இறைவி திரிபுரசுந்தரி.
அம்பாள் திரிபுரசுந்தரி சுயம்பு திருமேனியுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அம்பாள் மார்பில் ஸ்ரீ சக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டுள்ளது. ஆண்டில் ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், நவராத்தியில் வரும் நவமி ஆகிய மூன்று நாட்களில் மட்டுமே அம்பாளுக்கு முழு அபிஷேகம் செய்யப்படுகின்றது. நாடொறும் பாத பூஜை மட்டுமே நடக்கின்றது. மற்ற நாட்களில் தினசரி நடைபெறும் அபிஷேகம், அம்பாளின் பாதத்திற்கு மட்டுமே செய்யப்படுகிறது
கோயம்புத்தூர் தண்டுமாரியம்மன் கோவில்
திப்பு சுல்தான் படை வீரர்களின் அம்மை நோய் தீர்த்த அம்மன்
கோயம்புத்தூர் உப்பிலிபாளையத்தில் அமைந்துள்ளது தண்டு மாரியம்மன் கோவில். இந்த அம்மன் திப்பு சுல்தான்படை வீரர்களின் அம்மை நோயை குணப்படுத்தியதாக வரலாற்று நிகழ்ச்சி ஒன்று உண்டு.
ஒரு சமயம், திப்பு சுல்தான் தனது படைவீரர்களை கோவை கோட்டை மதில்களுக்கிடையில் ஓர் கூடாரத்தில் தங்க வைத்திருந்தார். அங்கு தங்கியிருந்த வீரர்களில் ஒருவன் அம்மனை தினமும் வழிபடுபவன். அப்போது,ஒருநாள் அவனது கனவில் தோன்றிய மாரியம்மன், தான் வீரர்கள் குடியிருக்கும் பகுதியில், வேப்பமரங்களுக்கும் காட்டுக் கொடிகளுக்கும் இடையே இருக்கும் நீர்ச்சுனைக்கு அருகில் நீண்ட காலமாக வசித்து வருவதை உணர்த்தி, தன்னை அங்கேயே வழிபடும்படி கட்டளையிட்டாள்.
கனவில் மாரியம்மனை தரிசித்த அவ்வீரன், மறுநாள் காலையில், அம்மன் உணர்த்திய இடத்திற்கு சென்று வேப்ப மரங்களின் இடையே தேடினான். அப்போது அங்கே கனவில் கண்ட அம்மன் வீற்றிருந்தாள். அங்கேயே அம்மனை வணங்கிய அவன் சக படைவீரர்களுக்கும், கனவில் தோன்றி அருள்புரிந்த அம்மன் வீற்றிருந்த இடத்தை காண்பித்தான். பின், படை வீரர்கள் அனைவரும் ஒன்று கூடி இவ்விடத்தில் ஆதியில் சிறிய மேடை போல அமைத்து வழிபட்டு, , காலப் போக்கில் பெரிய கோயிலாக எழுப்பினர். 'தண்டு' என்றால் 'படை வீரர்கள் தங்கும் கூடாரம்' என்று பொருள். படைவீரர்கள் தங்கும் இடத்தில் கிடைத்த அம்மன் என்பதால் இந்த அம்மன் 'தண்டுமாரியம்மன்' என்று அழைக்கப்பட்டாள். தண்டு என்பதற்கு 'தங்கு' என்பது பொருள். தங்கும் (தண்டு) இடமாக இருந்ததால் அம்மனுக்கு 'தண்டு மாரியம்மன்' என பெயர் உண்டானது. ஆங்கிலத்தில் 'டென்ட்' என்பது கூடாரத்தை குறிப்பதால் 'டென்ட்' மாரியம்மன் என்றும் பெயருண்டு.
படை வீரர்கள் தண்டு மாரியம்மனை வணங்கி வந்த நேரத்தில், ஒரு சமயம், பெரும்பாலான வீரர்களுக்கு அம்மை நோய் தோன்றியது. அவர்கள் அம்மை விலக அம்மனை வணங்கி, தண்டுக்கீரை சாறால் அபிஷேகம் செய்து வழிபட்டு, அத்தீர்த்தத்தைப் பருகிட, அனைவருக்கும் ஒரே நேரத்தில் அம்மை நோய் குணமான அதிசயம் நிகழ்ந்தது. இந்த நிகழ்ச்சியும் அம்மனுக்கு 'தண்டு மாரியம்மன்' என்ற பெயர் ஏற்பட காரணமாயிற்று.
தண்டு மாரியம்மன்: கருவறையில் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். உற்சவரின் பெயர், அகிலாண்ட நாயகி. தினமும் மாலையில் தங்கத்தேர் பவனி நடக்கிறது. ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடக்கும். திருமணம் நிறைவேற கன்னிப்பெண்கள் ஆடி வெள்ளியில் அடிப்பிரதட்சணம் செய்கின்றனர். சித்திரை மாதத்தில் அக்னி (பூ) சட்டி ஊர்வலம் நடக்கும்.
அம்மை நோய் குணமாக, தொழில் விருத்தியடைய, குடும்பம் சிறக்க, தீராத பிணிகள் தீர்ந்திட இந்த அம்மனை பிரார்த்தித்துக் கொள்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் அம்மனுக்கு பால் அபிசேகம் செய்து பால்குடம், அக்னிசட்டி எடுத்தும் அங்க பிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடன் செய்கின்றனர்.