புள்ளமங்கை ஆலந்துறைநாதர்(பிரம்மபுரீஸ்வரர்) கோவில்

நுணுக்கமான, அழகான விரல் அளவு சிற்பங்கள் நிறைந்த கோவில்

மிக நேர்த்தியாகவும், நுட்பமாகவும் செதுக்கப்பட்ட சிற்பங்கள்

தஞ்சாவூர் - கும்பகோணம் நெடுஞ்சாலையில், தஞ்சாவூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் புள்ளமங்கை. இறைவன் திருநாமம் ஆலந்துறைநாதர்(பிரம்மபுரீஸ்வரர்). இறைவி அல்லியங்கோதை.

இக்கோவில் அக்காலத்திய கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக்கு ஒரு எடுத்துக் காட்டாகும். இக்கோவிலிலுள்ள பெரும்பாலான சிற்பங்கள் ஒரு அடி அளவுக்கு உள்பட்டு, மிக நுட்பமாகச் செதுக்கப்பட்டுள்ளன. மேலும், இச்சுவர்களில் தூண் போன்ற வடிவில் செதுக்கப்பட்டு, கையடக்க அளவில் பூவேலைப்பாடுகளும், ஆடல் மகளிர் சிற்பங்களும் நிறைய இடம்பெற்றுள்ளன. தூண் சிற்பங்கள், ஆடல் அணங்குகளின் சிற்பங்கள், இராமாயணச் சிற்பங்கள் போன்றவற்றைக் கொண்டு ஒரு கலைப்பெட்டகமாக, இக்கோவில் விளங்குகின்றது. நவீன தொழில்நுட்பங்கள் இல்லாத அக்காலத்தில் இவ்வளவு சிறிய அளவில் மிக நேர்த்தியாகவும், நுட்பமாகவும் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருப்பது வரலாற்று ஆய்வாளர்களிடையே மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் இக்கோவிலை பார்க்கத் தவறுவதில்லை.

கருவறை கோஷ்டத்தில் சீதை, இலக்குவனனுடன் ராமர் வனவாசம் ஏற்று படகில் கங்கையைக் கடந்து செல்லல் தொடங்கி ஜடாயு வதம் போன்ற ராமாயணக்காட்சிகள், கஜசம்ஹாரமூர்த்தி, காளியின் மகிஷ வதம், காலசம்ஹாரமூர்த்தி, வராகமூர்த்தி பூமாதேவியை மீட்டு வரல், ஆதிசேடன் மீது அரிதுயில் கொள்ளும் அனந்த சயனமூர்த்தி போன்ற பல நுட்பமான சிறிய அளவிலான சிற்பங்கள் உள்ளன.

உடுக்கை இடுப்புடையாள் என்பது போல பெண் சிற்பங்களில் இடுப்பு பகுதி உடுக்கை வடிவில் மிக நுணுக்கமாகச் செதுக்கப்பட்டுள்ளன. இதேபோல, கை, கால், கண் உள்ளிட்டவை செதுக்கப்பட்டுள்ள விதமும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

கோவில் திருச்சுற்றின் வலது புறத்திலுள்ள தட்சிணாமூர்த்தி சிலையின் மேலே கோபுரத்தில் பிச்சாடனர் சிற்பம் உள்ளது. இதில், காலில் காலணி, கையில் திருவோடு, கழுத்தணிகள், கையணிகள், காதுகளில் வளையங்கள் உள்ளிட்டவற்றுடன் நடக்கும் பாவனையில் நுட்பமாகச் செதுக்கப்பட்டுள்ளன.

அர்த்த மண்டபத்தில் உள்ள நான்கு தூண்களிலும் வேலைப்பாடுகள் வித்தியாசமாக உள்ளன. தூண்களிலும், சுற்றுச் சுவரிலும் ஏராளமான நடன மங்கை சிற்பங்கள் மிக நுணுக்கமாக ஆள்காட்டி விரல் அளவில் செதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிற்பங்களும் ஒரு காரணத்தைக் குறிப்பிடுகின்றது.

அர்த்த மண்டப புறச்சுவர்களின் தெற்குப்பகுதியில் பூதகணங்கள் சூழ காட்சியளிக்கும் கணபதி, வடக்குப்பகுதியில் மகிஷாமர்த்தினி உள்ளனர். விமான முதல் தள கோஷ்டங்களில் சிவனின் அழகு வடிவங்கள் அனைவரையும் ஈர்க்கின்றன. இவ்வாலய விமானத்தில் உள்ள ஆண் சிற்பத்தை முன் மாதிரியாகக்கொண்டே ஓவியர் மணியம், கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலின் கதாநாயகனான வந்தியத்தேவனை வரைந்தார் என்று கருதுகின்றனர்.

வாசகர்களின் கவனத்திற்கு

இப்பதிவில் வரைபடத்திற்கு (Map) கீழ் இடம் பெற்றுள்ள 'நுணுக்கமான சிற்பம்' என்று குறி சொல்லை கிளிக் செய்தால், முந்தைய பதிவுகளில் வெளியான நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கோவில்களை பற்றிய தகவல்களைப் படிக்கலாம்.

விரல் அளவு சிற்பங்கள்

 
Previous
Previous

திருவார்ப்பு கிருஷ்ணன் கோவில்

Next
Next

திருமாணிகுழி வாமனபுரீசுவரர் கோவில்