திருக்கோடிக்காவல் கோடீசுவரர் கோவில்
சனி பகவான் தலையில் சிவலிங்கம்
கும்பகோணத்துக்கு அருகில் திருக்கோடிக்காவல் கோடீசுவரர் கோவில் என்ற தேவாரப் பாடல் பெற்ற தலம் உள்ளது.இங்குள்ள சிவாலயத்தில் அமைந்துள்ள சனி பகவான் தலையில் சிவலிங்கம் ஒன்று உள்ளது.இந்த சனி பகவான் 'பால சனி' என்று அழைக்கப்படுகிறார். பொதுவாக சனி பகவானுக்கு காகம்தான் வாகனமாக இருக்கும். ஆனால் இங்குள்ள சனி பகவானுக்கு கருடன் வாகனமாக அமைந்திருக்கிறது.மூலவர் கோடீசுவரர் கருவறை செல்லும் வழியில் இருபுறமும் சித்தரகுப்தரும், எமதர்மனும் உள்ளனர். இக்கோவிலில் சனீஸ்வரனை எமதர்மன்பார்ப்பது போன்றும் எமதர்மனை சனீஸ்வரர் பார்ப்பது போன்றும் அமைந்து இருக்கின்றது. இங்கு சுவாமியின் இடப்புறமாக சித்திரகுப்தன் இருக்கிறார் சனிபகவான், எமதர்மராஜன், சித்திரகுப்தன் இவர்கள் மூவரையும் தரிசித்த பின்பு தான் மூலவரை தரிசிக்க முடியும்.சனி பகவானுடைய நீதிமன்றமாக திருக்கோடிக்காவல் அமையப் பெற்றுள்ளது.நமது பாவ புண்ணிய வரவு செலவு கணக்குப்படி, நமது பால்ய வயதில் அஷ்டமச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனி, மரணச் சனி என்ற அனைத்து சனி திசைகளுக்கும், இத்தலமே நிவர்த்தி செய்யும் இடமாகும். நமது பால்ய வயதில் ஏற்பட்ட பாவ புண்ணிய வரவு-செலவு கணக்குகளை சரி பார்க்க கூடிய இடம் திருக்கோடிக்காவல். உலகத்தின் நீதிபதியாகிய பால சனீஸ்வரர் நமது பாவ புண்ணிய வரவு செலவு கணக்குகளை ஆராய்ந்து, அதை சித்திரகுப்தன் சரி பார்த்து எமதர்மனிடம் தீர்ப்பு சொல்லப்படுகிறது. தீர்ப்புக்கான பரிகார நிவர்த்தி இத்தலத்தில் செய்யப்படுகிறது. சாதாரணமாக இத்தலத்தில் யாரும் வழிபட்டு விடமுடியாது யாருக்கு எந்த வயதில் இந்த ஊழ்வினை கர்மா தீர்க்கப்படுகிறதோ, அவர்கள் மட்டுமே இத்தலத்திற்கு சென்று வழிபட முடியும். சனீஸ்வரனின் மனைவியான ஜேஷ்டாதேவி, மகன் மாந்தி, மகள் மாந்தாவுடன் உள்ள சிலை உள்ளது. மாந்தாவின் கையில் தாமரை மலரும், மாந்தியின் முகம் ரிஷப முகமாயும், இம்மூன்றும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டு அற்புதமாய் காட்சியளிக்கிறது.
திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் கோவில்
சரும நோய்களைத் தீர்க்கும் அம்பிகை
தேவாரத் தலமான திருக்காரவாசல் இறைவன் பெயர் கண்ணாயிரநாதர். இறைவியின் பெயர் கைலாச நாயகி. கைலாசநாயகி. நின்ற கோலத்தில் ஒரு கையில் அக்கமாலையுடனும், மற்றதில் தாமரையுடனும் தெற்கு நோக்கி தரிசனம் தருகிறாள். இக்கோவிலில், ஓரிடத்தில் நின்று நேரே சிவபெருமானையும் வலதுபுறம் அம்பாளையும் தரிசிக்கும்படியாக சன்னதிகள் அமைந்துள்ளன.இத்தலத்து அம்பிகை "பஞ்ச்சதசா ஷர" சொரூபிணியாக விளங்குகிறாள் என்று புராணங்கள் கூறுகின்றன. இத்தலத்தில் அம்பிகைக்குத் தனிச் சிறப்பு உண்டு. மக்கள் செய்த பாவங்களால் உலகில் தலங்கள் மகிமை குன்றிய காலத்தில் பராசக்தியே இத்தலத்தை உயர்த்தினார் என்பது புராண வரலாறு. கைலாசநாயகிக்கு நடைபெறும் மாதாந்திர பௌர்ணமி அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதில் வைத்துத்தரும் சேஷ தீர்த்தத்தை ஒரு மண்டலம் சாப்பிட்டுவர தீராத நோய்களும் , முக்கியமாக சரும நோய்களும் தீர்கின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பாமணி நாகநாத சுவாமி கோவில்
நான்கு சிங்கங்களின் மேல் அமர்ந்து இருக்கும் தட்சிணாமூர்த்தி
மன்னார்குடிக்கு வடக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் பாமணி. இறைவன் திருநாமம் நாகநாத சுவாமி. இறைவியின் திருநாமம் அமிர்தநாயகி.
இத்தலத்தில் குருபகவான் நான்கு சிங்கங்களின் மேல் அமர்ந்து சிம்ம தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிப்பதால், இவரை வழிபடுபவர்களுக்கு சிம்ம குருவின் அருள் கிடைக்கும். ஒருமுறை தட்சிணாமூர்த்தியின் சீடர்கள் நால்வரும் விஷ்ணுவை தரிசிக்க வைகுண்டம் சென்றார்கள். அப்போது இவர்களை துவார பாலகர்கள் தடுத்தனர். கோபம் கொண்ட முனிவர்கள், அவர்களுக்கு சாபம் கொடுத்தனர். இதனால் முனிவர்களுக்கு தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் நீங்க பாமணி நாகநாதரையும், சிம்ம தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு தங்கள் தோஷம் நீங்கப் பெற்றனர்.
சிம்மம், கும்பம், கடகம், தனுசு, மேஷம், விருச்சிகம் ராசிக்காரர்களும், லக்னத்திற்குரியவர்களும் சிம்ம தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் சிறப்பான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை.
ஆவூர் பசுபதீஸ்வரர் கோவில்
பிதுர் தோஷத்தை நிவர்த்தி செய்யும் பஞ்ச பைரவர்கள்
கும்பகோணத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேவாரத் தலம் ஆவூர். இங்கு பசுபதீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இறைவன் திருநாமம் பசுபதீஸ்வரர். இத்தலத்தில் பங்கஜவல்லி , மங்களாம்பிகை என்ற திருநாமம் தாங்கி இரண்டு அம்பிகைகள் அருள் புரிகிறார்கள்.
இந்தக் கோவிலின் முக்கிய சிறப்பம்சமாக பஞ்ச பைரவ மூர்த்திகள் உள்ளனர். ஐந்து பைரவர்களும் ஒரே பீடத்தில் வீற்றிருக்கிறார்கள். இக்கோவிலில் மங்களாம்பிகை அம்மனை பிரதிஷ்டை செய்யும்போது, ஹோமத்திலிருந்து பஞ்ச பைரவர்கள் வெளிப்பட்டனர். அவர்களையும் பிரதிஷ்டை செய்து ஆராதனைகள் செய்தால் பித்ருசாபம் நீங்கப் பெறும் என அசரீரி ஒலித்துள்ளது. அதன்படி பஞ்ச பைரவர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டனர். பஞ்ச பைரவர்களை வழிபட்டதன் மூலம் தசரத மன்னனின் பித்ரு சாபம் விலகியது. எனவே இத்தலம் பித்ரு சாப நிவர்த்தித் தலமாக விளங்குகின்றது.
பிதுர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பஞ்ச பைரவர்களை வழிபாடு செய்து வந்தால் உடனடியாக பலன் கிடைக்கும் .ஒரு சிலர் நிறைய சம்பாதிப்பார்கள். இருந்தாலும் கடன் தீராது. இன்னும் சிலருக்கு நல்ல திறமைகள் இருக்கும். ஆனால் சரியான வேலையும் வாய்ப்புகளும் அமையாமல் வருமானம் இன்றி இருப்பார்கள். பல பேர் அனைத்து செல்வங்களையும் பெற்று இருப்பார்கள். ஆனால் வாழ்வில் நிம்மதி இருக்காது. அப்படிப்பட்டவர்களின் அந்த நிலைக்கு பிதுர் தோஷம் தான் காரணம். அவர்கள் அனைவரும் இத்தல பஞ்ச பைரவர்களை வழிபட்டு பிதுர் தோஷத்தை போக்கி வாழ்வில் வளம் பெறலாம். இவர்களை தேய்பிறை அஷ்டமி தினத்தில் வழிபாடு செய்தால் அனைத்து துன்பங்களும் நீங்கும். குறைவான வருமானம் கடன் சிக்கல்கள், வேலைவாய்ப்பின்மை, திருமண சிக்கல்கள் போன்றவைகள் பிதுர் தோஷ காரணத்தினால் கூட ஏற்படலாம். அதனை இந்த தலத்தில் உள்ள பஞ்ச பைரவர்களை வழிபாடு செய்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
கீவளூர் கேடிலியப்பர் கோவில்
தேவாதி தேவர்கள் இன்னிசைக்க நடராஜர் வலது காலைத் தூக்கி ஆடும் அபூர்வக் காட்சி
பொதுவாக சிவாலயங்களில் நடராஜர் தன் இடது காலைத் தூக்கி ஆடும் தாண்டவக் கோலத்தைதான் நாம் தரிசிப்போம். ஆனால், நடராஜர் தன் வலது காலைத் காலைத் தூக்கி ஆடும் அபூர்வக் காட்சியை நாம் மதுரை மற்றும் கீவளூரில் மட்டுமே தரிசிக்க முடியும்.
தேவாரத் தலமான கீவளூர் கேடிலியப்பர் கோவில், நாகப்பட்டிணம்-திருவாரூர் சாலையில் 12 கீ.மீ. தொலைவில் உள்ளது.
நடராஜரின் அபூர்வத் தாண்டவக் கோலத்தின் பின்னணி நிகழ்ச்சி
ஒரு சமயம், பரமேசுவரன்-பார்வதி திருமணத்தைக் காண தேவர்கள், முனிவர்கள் முதலானோர் கைலாயத்தில் கூடினர். அதனால் உலகத்தின் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது.இதனை சரி செய்ய அகத்திய முனிவரை சிவபெருமான் தென் திசைக்கு அனுப்பினார். அகத்திய முனிவர் தென் திசை வந்து பஞ்சாட்சர மந்திரத்தை ஒதி வழிபட்டதும் உலகம் சமன் நிலையடைந்தது. தன் பணியை முடித்த அகத்திய முனிவருக்கு இறைவனின் திருமணக் கோலத்தைக் காண ஆசை ஏற்பட்டது. அதற்கு சிவபெருமான் அகத்திய முனிவர் விரும்பும் தலத்தில் தன் திருமணக் கோலத்தைக் காணலாம் என அருளினார். அதனபடி திருமறைக்காடு தலத்தில் அகத்திய முனிவர் சிவ பூஜை செய்து வேண்டியபோது தனது திருமணக் கோலத்தை சிவபெருமான் அவருக்கு காட்டி அருளினார். அதைக் கண்டு மனமகிழ்ந்த அகத்திய முனிவர், அடுத்து இறைவனின் வலது பாத தரிசனம் கிடைக்க வேண்டினார். அதற்கு சிவபெருமான், அகத்திய முனிவரை பத்ரிகாரண்யத் தலத்தில் (கீவளூரின் புராணக் காலப் பெயர்) தன்னை பூஜை செய்து வழிபடும்படியும், அங்கு அவருக்கு தன் விக்ஷேச வலது பாத தரிசனத்தைத் தருவதாகவும் அருளினார்.
அகத்திய முனிவர் கீவளூர் தலத்துக்கு வந்து சிவபெருமானை வழிபடலானார். சிவபெருமான்,ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று அகத்திய முனிவருக்கு கால் மாறி ஆடி, தன் வலது பாத தரிசனத்தைக் காட்டி அருளினார். அப்போது நடராஜப் பெருமானும், சிவகாமி அம்மையும் தாணடவமாட அதற்கு விநாயகரும், முருகப்பெருமானும் பாட்டுப் பாட, பிரம்மா தாளம் போட, சரஸ்வதி வீணை வாசிக்க, விஷ்ணு மத்தளம் வாசிக்க, மகாலஷ்மி கர தாளம் போட, இந்திரன் புல்லாங்குழல் வாசிக்க, வியாக்ரபாத முனிவர், பதஞ்சலி முனிவர் உடனிருக்க அகத்திய முனிவருக்குக் காட்சி தந்தார்.
ஆனித் திருமஞ்சனம்
இத்தல நடராஜப் பெருமானுக்கு ஆண்டுக்கு ஒரு முறை ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று காலைத் திருமஞ்சனமும், மாலை சுவாமி-அம்பாள் திருக்கல்யாணமும் நடைபெறும். இந்த ஆண்டு 22.6.2026 திங்கள் கிழமையன்று ஆனித் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.
செம்பொனார் கோவில் சுவர்ணபுரீஸ்வரர் கோவில்
தாய்க்கு உபதேசம் செய்த முருகன்
தன் தாய் பார்வதிக்கு உபதேசம் செய்த முருகன், செம்பொனார் கோவிலில் அருள் பாலிக்கின்றார். இத்தலம் மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. மூலவர் சுவர்ணபுரீஸ்வரர், இறைவியின் திருநாமம் சுகந்த கும்பளாம்பிகை.ஒருமுறை சிவனின் பேச்சையும் மீறி பார்வதி, தன் தந்தையான தட்சன் நடத்திய யாகத்தில் பங்கேற்றாள். இதனால் சிவனின் கோபத்திற்கு ஆளானாள். குடும்ப நிம்மதிக்கு ஒற்றுமை அவசியம் என்பதை உணர்த்தும் விதத்தில் தாய் பார்வதிக்கு உபதேசித்தார் முருகன். மனம் திருந்திய அவள், அக்னியின் நடுவில் அமர்ந்து தன் குணத்தை மாற்ற தவமிருந்தாள். இதற்காக அவள் தேர்ந்தெடுத்த தலமே செம்பொனார் கோயில். செம்பொன் என்பதற்கு 'துாய தங்கம்' என்பது பொருள். தவத்தின் முடிவில் தங்கம் போல் மாசு மருவற்றவளாக வெளி வந்து சிவபெருமானுடன் இணைந்தாள். உபதேசித்ததை குறிக்கும் விதமாக முருகன் அட்சர மாலையுடன் இருக்கிறார்.சிறந்த கணவர் கிடைக்க பெண்கள் இங்கு வழிபடுகின்றனர். திருமாலை அடைய லட்சுமியும், மன்மதனை அடைய ரதியும் வழிபட்டனர். சித்திரை 7 முதல் 18 வரை சிவனை வழிபடும் விதத்தில் சூரியக்கதிர்கள் மூலவர் மீது விழுகிறது. இதனை 'சூரியத் திருவிழா' என்கின்றனர்.
திருக்களர் பாரிஜாதவனேசுவரர் கோவில்
நடராஜ பெருமானின் இரண்டாவது தாண்டவ தலம்
திருத்துறைப்பூண்டியில் இருந்து வடமேற்கே 10 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத்தலம் திருக்களர். இறைவன் திருநாமம் : களர்முளை நாதர், பாரிஜாதவனேசுவரர். இறைவி : இளங்கொம்பன்னாள், அமுதவல்லி, அழகேசுவரிதுர்வாச முனிவர், சிவபெருமானின் ஆனந்த தாண்டவ தரிசத்தைப் பெற விரும்பினார். திருக்களர் தலத்தின் மகிமையை உணர்ந்து தேவலோகத்தின் சிறந்த மலரான பாரிஜாதத்தை கொண்டு வந்து இங்கு வளர்க்கலானார். அது நாளடைவில் மிகவும் பெருகி பாரிஜாத வனமாயிற்று. பிறகு துர்வாச முனிவர் ஒரு சிவலிங்கம் அமைத்து பாரிஜாத மரத்தடியில் பிரதிஷ்டை செய்து பக்கத்தில் அம்மனையும் பிரதிஷ்டை செய்து, தேவதச்சன் மூலமாக இக்கோயிலை எடுப்பித்தார். இத்தலத்தில் துர்வாச முனிவருக்கு இறைவன் நடராஜர் பிரம்ம தாண்டவ தரிசனம் கொடுத்தருளியதால் துர்வாசர் இத்தலத்தில் எப்போதும் நடராஜ பெருமானின் பிரம்ம தாண்டவத்தை தரிசித்துக் கொண்டிருக்கிறார் என்பது ஐதீகம். இதன் அடையாளமாக இவ்வாலயத்தில் துர்வாசர் சந்நிதியும், நடராஜர் சந்நிதியும் எதிரெதிரே அமைந்துள்ளது. நடராஜ பெருமானின் 8 தாண்டவ தலங்களுள் இரண்டாவது தலமாக திருக்களர் தலம் அமைந்திருக்கிறது. சிவபெருமான் நர்த்தனக் கோலம் காட்டிய இடம் என்பதனால் களரி (நடன சபை) என இத்தலம் அழைக்கப்பட்டு, பின்பு களர் என மருவியது. இத்தலத்தில் வழிபாடு செய்தால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மோட்சம் கிடைக்கும். கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும் என்பதும் ஐதீகம்.
திருநெடுங்களம் நித்திய சுந்தரேசுவரர் கோவில்
நாகங்களை திருமேனியில் தரித்திருக்கும் அபூர்வ சர்ப்ப கால பைரவர்
திருச்சி – தஞ்சாவூர் சாலையில் அமைந்துள்ள துவாக்குடி என்ற ஊரிலிருந்து, நான்கு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் நெடுங்களம். இறைவன் திருநாமம் நித்திய சுந்தரேசுவரர், திருநெடுங்களநாதர், இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை, ஒப்பிலாநாயகி.
இந்தத் தலத்தில் சேத்திர பைரவர், சர்ப்ப கால பைரவர் என்று இரண்டு பைரவர்கள் அருள் பாலிக்கிறார்கள். சேத்திர பைரவர் வாகனத்துடனும், சர்ப்ப கால பைரவர் வாகனம் இல்லாமலும் எழுந்தருளி இருக்கிறார்கள். சர்ப்ப கால பைரவர் தனது கையில் ஒரு நாகத்தையும், வலது கால் மற்றும் இடது கால் இரண்டிலும் நாகங்கள் சுற்றத் தொடங்கி, திருமேனி முழுவதும் படர்ந்து இருக்கின்றன. இப்படி திருமேனி முழுவதும் சர்ப்பங்கள் பின்னி படர்ந்திருக்கும் காலபைரவரை வேறு தலத்தில் நாம் தரிசிப்பது அரிது.
இந்த சர்ப்ப கால பைரவரை வழிபட்டால், கால சர்ப்ப தோஷம், நாக தோஷம் முதலியவை விலகும். பாம்பு சம்பந்தப்பட்ட கெட்ட கனவுகள் நின்று விடும். தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாட்டுக்கு உகந்த நாள். அதிலும் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி, காலபைரவாஷ்டமி என்று போற்றப்படுகிறது. பைரவருக்கு சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து, செவ்வரளி மலர்கள் சமர்ப்பித்து, செவ்வாழைப் பழம் நைவேத்தியம் வைத்து, தேங்காய் அல்லது பூசணிக்காயில் நெய் தீபமேற்றி வழிபாடு செய்ய, துன்பங்கள் அனைத்தும் நீங்கி இன்பங்கள் பெருகும். பைரவரை வழிபட்டால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும், யம பயம் இருக்காது, திருமணத் தடை அகலும். சந்தான பாக்கியம் கிடைக்கும் என்கின்றன ஞான நூல்கள்.
திருமறைக்காடர் கோவில்
சரஸ்வதி தவக்கோலத்தில் இருக்கும் அபூர்வ காட்சி
நாகப்பட்டினத்தில் இருந்து தெற்கே சுமார் 50 கி.மீ. தொலைவில் தேவாரத் தலமான வேதாரண்யம் உள்ளது. இறைவர் திருப்பெயர் திருமறைக்காடர்.
இத்தலத்து அம்பாளின் பெயர் வேதநாயகி எனவும் தமிழில் யாழைப் பழித்த மொழியாள் என்றும் வடமொழியில் வீணாவாத விதூஷணி எனவும் வழங்கப்படுகிறது.அம்பிகையின் குரல் சரசுவதியின் வீணை நாதத்தை விட இனிமையாக இருந்ததால் அம்பிகைக்கு இங்கே இப்பெயர்.அதனால் பொதுவாக கையில் வீணையுடன் காட்சியளிக்கும் சரஸ்வதி இத்தலத்தில் வீணையில்லாமல் தவக்கோலத்தில் சுவடியைக் கைக் கொண்டு இருப்பதைக் காணலாம். சரஸ்வதியின் இந்த கோலத்தை நாம் வேறு எந்தத் தலத்திலும் காண முடியாது.
திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் கோவில்
கடுக்காய் பிள்ளையார்
திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலை வழியில் திருவாரூரில் இருந்து 13 கி.மீ. தெற்கே தேவாரத் தலமான திருக்காரவாசல் உள்ளது. இறைவன் திருநாமம் கண்ணாயிரநாதர். இறைவியன் திருநாமம் கைலாசநாயகி. இத்தலம் சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகும். இத்தலத்து தியாகராஜர் ஆதிவிடங்கர் எனப்படுகிறார்.
கோவிலுக்கு வெளியே அமைந்துள்ள பிரம்ம தீர்த்தக் கரையில், கடுக்காய் பிள்ளையர் தனிச் சன்னதியில் இருந்து அருள்பாலிக்கிறார். இவருக்கு கடுக்காய்ப் பிள்ளையார் என்று பெயர் வர ஒரு தனி வரலாறு உள்ளது.
வணிகன் ஒருவன, தன் வியாபாரத்திற்காக வெளியூர் செல்லும் வழியில் இத்தலத்தில் இளைப்பாறினான். அவனுடன் வந்த வண்டியில் ஜாதிக்காய் மூட்டைகள் இருந்தன. அவனிடம் திருவிளையாடல் புரிய நினைத்து விநாயகர் ஒரு சிறுவனாக வணிகன் முன்வந்து மூட்டைகளில் என்ன இருக்கிறது என்று கேட்டார். வணிகன் கடுக்காய இருக்கிறது என்று வேண்டுமென்றெ பொய் சொன்னான். விநாயகர் அவன் பதிலை கேட்டு புன்னகை புரிந்து விட்டு சென்றுவிட்டார். வணிகன் தான் சேர வேண்டிய இடம் வந்ததும் மூட்டைகளைப் பிரித்துப் பார்க்க அவைகளில் கடுக்காய் இருக்கக் கண்டு திடுக்கிட்டான். ஏதோ தெய்வ குற்றம் செய்து விட்டோம் என்று உணர்ந்த அவன் இறைவனிடம் முறையிட்டு பிழை பொறுத்தருள வேண்டினான். விநாயகப் பெருமான் அவன் முன் காட்சி கொடுத்து கடுக்காயை ஜாதிக்காய்களாக மாற்றி அருள் புரிந்தார். அது முதல் இத்தலத்து விநாயகர் கடுக்காய் பிள்ளையார் என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார்.
புரட்டாசி மாதம் பௌர்ணமி நாளில், இந்திரன், இத்தலத்து சேஷ தீர்த்தத்தில் நீராடி விநாயகரான கடுக்காய் பிள்ளையாரை பூஜிப்பதாக ஐதீகம்.
வடகுரங்காடுதுறை தயாநிதீசுவரர் கோவில்
சிவன் கோவிலில் விஷ்ணு துர்க்கை
அபிஷேகத்தின் போது நீல நிறமாக மாறும் பால்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் வடகுரங்காடுதுறை. மக்கள் வழக்கில் ஆடுதுறை பெருமாள் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இறைவன் திருநாமம் தயாநிதீசுவரர். இறைவி அழகுசடைமுடி அம்மை.
பொதுவாக சிவாலயத்தில் இருக்கும் துர்க்கையை சிவதுர்க்கை என்றே அழைப்பார்கள். ஆனால், இத்தலத்தில் எழுந்தருளியுள்ள துர்க்கை, கையில் சங்கு- சக்கரத்துடன் பெருமாள் அம்சமாகத் திகழ்வதால், ஸ்ரீவிஷ்ணுதுர்க்கை என்று போற்றப்படுகிறாள். எட்டுத் திருக்கரங்களுடன் அற்புதமாகக் காட்சி தரும் ஸ்ரீவிஷ்ணு துர்க்கைக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. இந்தத் துர்க்கைக்குப் பாலபிஷேகம் செய்யும்போது, அந்தப் பாலானது நீலநிறத்தில் காட்சியளிக்கும் அதிசயத்தை இன்றைக்கும் தரிசிக்கலாம்.
நவராத்திரி காலத்தில் இந்த அதிசய துர்க்கையை வழிபடுவதன் மூலம் மனதில் தைரியம் அதிகரிக்கும்.
வடகுரங்காடுதுறை தயாநிதீசுவரர் கோவில்
கர்ப்பிணிப் பெண் உயிரை காப்பாற்றிய சிவபெருமான்
கும்பகோணத்திலிருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் வடகுரங்காடுதுறை. இறைவன் திருநாமம் தயாநிதீசுவரர். இறைவி அழகுசடைமுடி அம்மை.
செட்டிப்பெண் என்ற பெயர் கொண்ட கர்ப்பிணிப் பெண் ஒருத்தி தாகம் தாளாமல் இக்கோயில் வழியே நடந்து வந்து கொண்டிருந்தாள். அவள் தாகத்தால் இறந்து விடுவாளோ என்ற நிலைமை ஏற்பட்டது. சுற்றிலும் எங்கும் தண்ணீர் இல்லை. அவள் உயிர் போகும் தருணத்தில் இத்தலத்து இறைவனை வணங்கினாள். சிவபெருமானே அங்கு தோன்றி அருகிலிருந்த தென்னைமரத்தை வளைத்து இளநீரை பறித்துக் கொடுத்தார். அந்தப்பெண் தாகம் நீங்கினாள். எனவே இறைவனுக்கு 'குலைவணங்கிநாதர்' என்ற பெயரும் உள்ளது.
சிட்டுக்குருவியொன்று இத்தலத்திற்கு அருகேயுள்ள நீர்நிலையிலிருந்து அலகால் நீர் கொணர்ந்து இறைவனுக்கு அபிசேகம் செய்துள்ளது. அதனால் மகிழ்ந்த இறைவன் அக்குருவிக்கு முக்தியளித்தார். இதனால் இறைவனுக்கு சித்தலிங்கேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. இத்தலத்தில் வாலி வணங்கியமையால் வடகுரங்காடுதுறை என்று அழைக்கப்படுகிறது
ஆலய விமானத்தில் வாலி இறைவனை வழிபடும் சிற்பமும், ஈசன் கர்ப்பிணிப் பெண்ணிற்கு தென்னங்குலை வளைத்த சிற்பமும் மிக அழகாக வடிக்கப்பட்டுள்ளது. கருவறையில் சற்று குட்டையான பாணத்துடன் காட்சி தருகிறார் குலைவணங்குநாதர். அம்மன் சந்நிதியில் இறைவி அழகுசடைமுடி அம்மை சிரத்தில் உயர்ந்த சடாமுடியுடன் அழகுடன் காட்சி தருகிறாள். பௌர்ணமி நாட்களில் அம்மன் அலங்காரம் மிகவும் அழகுடன் இருக்கும். பௌர்ணமி அன்று மாலை வேளையில் ஒன்பது மஞ்சள் கொண்டு மாலை தொடுத்து அம்மனுக்கு அணிவிப்பது எல்லா தோஷங்களையும் நீக்கும் என்று பக்தர்களின் நம்பிக்கை.
இக்கோயிலுக்கு முக்கியமாக கர்ப்பிணிப் பெண்களே வருகிறார்கள். இக்கோயிலில் சிவபெருமான் கர்ப்பிணிக்கு அருள் செய்ததால் இந்த தலத்திற்கு வந்தால் சுகமான பிரசவம் நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. பங்குனி உத்திர திருவிழா, நவராத்திரி பத்து நாள் விழா ஆகியவை சிறப்பாக நடக்கிறது. கார்த்திகையில் அம்பிகையை பெண்கள் 1008 முறை சுற்றி வருவது விசேஷ அம்சமாகும்.
திருநறையூர் சித்தநாதேசுவரர் கோவில்
மகாலட்சுமி மழலையாய் அவதரித்த தேவாரத்தலம்
கும்பகோணம்- குடவாசல் பாதையில் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள, தேவாரப் பாடல் பெற்ற தலம் திருநறையூர். இறைவன் திருநாமம் சித்தநாதேசுவரர். இறைவி சௌந்தர நாயகி. இந்த ஊரின் புராண பெயர் நரபுரம், குபேரபுரம், பிரமபுரம், சுகந்தவனம், திருநறையூர்ச்சித்திரம். சித்தர்கள் வழிபட்டதால் சித்த நாதேஸ்வரர் எனவும், தேவர்கள் வழிபட்டதால் தேவேஸ்வரர் என்றும், சித்தர்கள் இங்கு கோயில் கொண்டிருப்பதால் இப்பகுதி சித்தீஸ்வரம் எனவும் அழைக்கப்படுகிறது. துர்வாச முனிவரால் பறவை உருமாறி, சாபம் பெற்ற நரன் இங்கு வழிபட்டதால் இத்தலத்திற்கு நரபுரம் என்ற பெயரும் உண்டு. கோரக்க சித்தர் என்பவர் தனக்கு ஏற்பட்ட தோல் வியாதி நீங்க இத்தலத்தில் இறைவனை வழிபட்டார். இறைவன் அவருக்கு அருள் புரிய, சித்தர் தனது நோய் நீங்கப் பெற்றார். சித்தருக்கு அருளியதால் இறைவன் பெயர் சித்தநாதேஸ்வரர் என்றும் ஆலயம் சித்தீச்சரம் என்றும் வழங்குகிறது.
மகாலட்சுமி அவதரித்த தலம்
மகாவிஷ்ணுவை திருமணம் செய்வதற்காகவே மகாலட்சுமி மனித உருவில் முனிவரின் மகளாக அவதரித்த தலம்தான் திருநறையூர்.. இத்தலத்தில் மகாலட்சுமிக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இவளது அவதார தலமென்பதால் இவள், குழந்தை வடிவில் காட்சி தருகிறாள். எனவே, ‘மழலை மகாலட்சுமி’ என்றழைக்கப்படும் இவளுக்கு பாவாடை, சட்டை அணிவித்து அலங்காரம் செய்கிறார்கள். மேதாவி மகரிஷி என்பவர் இத்தலத்தில் இறைவனை வணங்கி வந்தார். மஹாவிஷ்ணுவை இந்த மகரிஷி வணங்காமல் இருந்தாலும் அவர் பத்தினி மகாலட்சுமி தனக்கு மகளாகப் பிறக்க அருள் செய்ய வேண்டும் என்று சிவபெருமானை வேண்டி தவம் இருந்தார். சிவன் திருமாலிடம் மேதாவி மகரிஷியின் விருப்பத்தை நிறைவேற்றும்படி கேட்டுக் கொண்டார். மஹாவிஷ்ணு கூறியதின் பேரில் மகாலட்சுமியும் ஒரு பங்குனி மாத, உத்திர நட்சத்திரத்தில் தடாகத்தின் தாமரை மலரில் அவதரித்தாள். அவளுக்கு 'வஞ்சுளாதேவி' எனப்பெயரிட்டு மேதாவி மகரிஷியும் வளர்த்தார்.அவளை வளர்த்து திருமணப் பருவத்தில் மஹாவிஷ்ணுவிற்கு திருமணம் செய்து கொடுக்க ஆசைப்பட்டார். அவ்வாறே சிவன், பார்வதி இருவரும் முன்னின்று மஹாவிஷ்ணுவிற்கு திருமணம் செய்து கொடுத்தனர். இங்கு அவதரித்த மகாலட்சுமி, திருமாலை திருமணம் செய்து அருகிலுள்ள நாச்சியார்கோயிலில் அருளுகிறாள். மேலும் மகாலட்சுமிக்கு பிறந்த ஊராக திருநறையூர் தலமும், புகுந்த வீடாக அருகில் உள்ள நாச்சியார்கோவில் வைணவத்தலமும் கருதப்படுகிறது.எனவே, இவளுக்கு தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் பட்டுப்புடவை, சீயக்காய், எண்ணெய், பொங்கல்பானை, வெல்லம் என இங்கிருந்து பிறந்த வீட்டு சீர் கொடுக்கின்றனர். வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் இங்கிருந்து சிவன், அம்பிகை இருவரும் நாச்சியார் கோயிலுக்கு செல்கின்றனர். அதனால் இந்த கோவில் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது
இத்தலத்தில் பௌர்ணமி தினங்களிலும், வெள்ளிக்கிழமைகளிலும் மகாலட்சுமி யாகம் செய்து வழிபட்டால் அரசாளும் யோகம் வரும் என்பது நம்பிக்கை. மாசி மகம் புனித நீராடி விரதம் இருந்தால் புத்திரபாக்கியம் கிடைக்கும்...பித்ரு தோஷம் நீங்கும்
இராமேஸ்வரம் இராமநாதர் கோவில்
அபிஷேகம் செய்தாலும் கரையாத உப்பு லிங்கம்
இராமபிரான் ராவணனை வதம் செய்த தோஷம் விலக ராமேஸ்வரத்தில் சிவலிங்க பூஜை செய்ய விரும்பினார். லிங்கப் பிரதிஷ்டை செய்வதற்காக அனுமனை காசித் தலத்திற்கு அனுப்பி சிவலிங்கத் திருமேனியை எடுத்து வரச் செய்ய, அனுமன் வருவதற்கு தாமதமாகவே சீதாதேவி மணலால் பிடித்து வைத்த லிங்கத்திற்கு இராமபிரான் பூஜைகள் செய்தார். அந்த மணலால் ஆன சிவலிங்கத் திருமேனிதான் தற்போது இராமநாதர் என்ற திருநாமத்துடன் கருவறையில் அருள் பாலிக்கிறார் என்பது ஐதீகம்.
இராமநாதர் சன்னிதிக்கு பின்புறம் உப்புக்கல்லால் செய்யப்பட்ட ஒரு பழமையான லிங்கம் உள்ளது. பல வருடங்களாக அந்த உப்புக்கல்லால் செய்யப்பட்ட உப்பு லிங்கம் கரையாமல் அப்படியே உப்புக்கல்லாகவே இருப்பது மிகவும் அதிசயமாகும்.
இந்த லிங்கம் உருவானதற்கு ஒரு சுவையான பின்னணி உள்ளது. ஒரு முறை சிலர்,இராமேஸ்வரம் கோவிலில் உள்ள லிங்கம் மணலால் ஆனது அல்ல என்றும், அப்படி மணலால் செய்யப்பட்டது என்றால், அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்றும் வாதம் செய்தார்கள்.
அந்த நேரத்தில் பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர், தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து, அதற்கு அபிஷேகம் செய்தார். ஆனால் அந்த லிங்கம் கரையவில்லை.
அம்பாளை வணங்கும் சாதாரண மனிதனான தன்னால் பிரதிஷ்டை செய்யபட்ட லிங்கமே கரையாதபோது, காக்கும் கடவுளின் மனைவியான சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாமல் இருப்பதில் என்ன அதிசயம் இருக்கிறது என்று கூறினார். அவர் செய்த உப்பு லிங்கத்தை இப்போதும் நாம் தரிசனம் செய்யலாம்.
நாகப்பட்டினம் காயாரோகணர் கோவில்
சிம்ம வாகனத்துடன் காட்சி தரும் பைரவர்
நாகப்பட்டினம் நகரத்தில் அமைந்துள்ள தேவார தலம் காயாரோகணர் கோவில். இறைவியின் திருநாமம் நீலாயதாட்சி அம்மன். இது சப்தவிடங்க தலங்களில் 'சுந்தரவிடங்க' தலமாகும்.
பொதுவாக சிவபெருமானின் அம்சமான பைரவர் நாய் வாகனத்துடன், கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி எழுந்தருளி நமக்கு காட்சி அளிப்பார்.
ஆனால் நாகப்பட்டினம் காயாரோகணர் கோவில் குளக்கரையில்(புண்டரீக தீர்த்தம்), தெற்கு திசை நோக்கி தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கும் பைரவர், சிம்ம வாகனத்துடன் காட்சி தருகிறார். இப்படிப்பட்ட பைரவரின் கோலத்தை நாம் காண்பது அரிது. இங்கு சிம்ம வாகன பைரவர் உக்கிர மூர்த்தியாக விளங்கியதால், இவருக்கு எதிரில் இரட்டை பிள்ளையார் பிரதிஷ்டை செய்து இவரை சாந்தப்படுத்தி இருக்கிறார்கள். இவருக்கு அருகில் இருக்கும் புண்டரீக தீர்த்தமானது மார்கழியில் கங்கையாக மாறி விடுவதாக ஐதிகம். அதனால் சிம்ம வாகன பைரவர், காசி காலபைரவருக்கு இணையானவர் என்று கருதப்படுகிறார்.
தோஷங்களை நீக்கி சந்தோஷத்தைத் தந்தருளும் மகாசக்தி கொண்டவர் பைரவர். சுக்கிர தோஷத்தை நீக்குபவராகவும் பைரவர் திகழ்கிறார். அஷ்டமி நாளில் இவரை வணங்கினால் எண்ணியது நடக்கும். தடைகள் அனைத்தும் தவிடு பொடியாகும். சுக்கிர தோஷம் விலகும்.
தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபடுவது மிகுந்த பலத்தைத் தரும். எதிர்ப்புகள் தவிடு பொடி யாகும். வழக்கில் வெற்றி கிடைக்கும். பைரவரை, தேய்பிறை அஷ்டமி நாளில், வணங்கி னால், அஷ்டமத்து சனி உள்ளவர்களும், ஏழரைச் சனியால் பீடித்திருப்பவர்களும் கிரக தோஷம் அனைத்தும் நீங்கப் பெறுவார்கள்.
தெரு நாய்களுக்கு உணவளிப்பது நமக்கு பைரவரின் அருளைப் பெற்றுத் தரும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
பில்லி முதலான சூனியங்கள் அனைத்தும் விலகும். வீட்டின் வாஸ்து குறைபாடுகளும் நீங்கப் பெற்று, நிம்மதியும் முன்னேற்றமும் பெறலாம்.
திருப்பனந்தாள் செஞ்சடையப்பர் கோவில்
பக்தையின் சங்கடத்தை தவிர்க்க தலை சாய்த்த சிவபெருமான்
கும்பகோணம் சென்னை சாலையில் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் திருப்பனந்தாள். இறைவன் திருநாமம் செஞ்சடையப்பர்.
அசுரகுல மகளான தாடகை என்பவள் சிறந்த சிவ பக்தை. தினமும் பூமாலை ஏந்தி திருப்பனந்தாள் மூலவர் செஞ்சடையப்பரை வணங்கி வந்தாள். ஒரு நாள் அவள் பூமாலையுடன் இறைவனை வணங்க வரும்போது, அவளுடைய மேலாடை நழுவியது. ஆடையைச் சரி செய்ய பூமாலையைக் கீழே வைக்க வேண்டும் இல்லாவிடில் மேலாடை சரிந்து நழுவி அவள் பலர் முன்னிலையில் மானம் இழக்க நேரிடும். இந்த நிலையில் அவளின் இறை வழிபாட்டை மெச்சி இறைவன் அவள் தனக்கு எளிதாக மாலை அணிவிக்கும் வகையில் தலை தாழ்த்திக் கொடுத்தார். இந்நிகழ்ச்சி மூலம் தாடகையின் பக்தியை உலகறியச் செய்தார். இதனால் இத்தலத்திற்கு தாடகைஈச்சரம் என்ற பெயரும் ஏற்பட்டது.
தாடகைக்காக தலை தாழ்த்திய பிறகு சிவலிங்கத்தை நேரே நிமிர்த்த முயற்சி செய்தார்கள். முடியவில்லை. இந்தச் செய்தி நாடெங்கும் பரவியது. செய்தி அறிந்த சோழ மன்னன், தன் யானை, குதிரைப் படையுடன் வந்து, சிவலிங்கத்தின் மேல் கயிற்றைக் கட்டி யானையைக் கொண்டு இழுக்கச் செய்தான். யார் இழுத்தாலும் சிவலிங்கம் நிமிரவில்லை.
63 நாயன்மார்களில் ஒருவரான குங்கிலியக் கலயர் செய்தியை கேள்விப்பட்டு திருப்பணந்தாள் வந்தடைந்தார். சிவலிங்கத்தில் ஒரு மணிக் கயிற்றைக் கட்டி மறு நுனியை தன் கழுத்தில் கட்டிக்கொண்டு இழுத்தார். இறைவனும் கலயனாருடைய தூய்மையான பக்திக்குக் கட்டுப்பட்டு தன் தலையை மேலே நிமிர்த்தினார். சாய்ந்த சிவலிங்கம் மறுபடியும் பழைய நிலையை அடைந்தது.
கீழப்பெரும்பள்ளம், காளகஸ்தி, திருநாகேஸ்வரம் ஆகியவை ஆண் நாகம் வழிபாடு செய்த தலமாகும். திருப்பனந்தாள் பெண் நாகம் (நாககன்னி) வழிபாடுசெய்த தலமாகும்.
சர்ப்பதோஷம், நாக தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இத்தலத்தில் வழிபடுவது சிறப்பாகும். குறிப்பாக பெண்களுக்கான தோஷ நிவர்த்தி தலம் இதுவாகும்.
திருவதிகை வீரட்டானேசுவரர் கோவில்
சிவபெருமான் நின்ற கோலத்தில் இருக்கும் அபூர்வக் காட்சி
கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருவதிகை. இத்தலத்து . இறைவன் திருநாமம் வீரட்டானேசுவரர். இறைவி பெரியயநாயகி. சிவபெருமான் வீரச் செயல் புரிந்த அட்ட வீரட்ட திருத்தலங்களில் மூன்றாவது திருத்தலம் திருவதிகை. முப்புரத்தை எரித்து சிவபெருமான் தேவர்களைக் காப்பாற்றி அருளிய திருத்தலம் திருவதிகை.
பொதுவாக சிவாலயங்களில் சிவபெருமான் லிங்க ரூபத்தில் தான் தரிசனம் தருவார்.சில சிவத்தலங்களில் உள்ள கருவறைகளில் அதுபோன்ற சிவலிங்கத்திற்கு பின்னால் ஈசனின் திருமணக் கோலம் அல்லது ஈசனின் ஏதேனும் ஒரு திருவிளையாடல் ஓவியமாக தீட்டப்பட்டிருக்கும் .ஆனால் திருவதிகை திருதலத்தில் மட்டும் ஈசனை, நின்ற கோலத்தில் தனிச் சன்னதியயில் தரிசிக்கலாம் .மேருவை வில்லாகவும் வாசுகியை நானாகவும் கொண்டு நின்ற நிலையில் மூன்று அசுரர்களின் மீது அம்பு எய்தி வதம் செய்யும் திரிபுர சம்ஹார மூர்த்தியாக சிவபெருமான் அங்கு காட்சி தருகிறார். சிவபெருமானின் இந்த அபூர்வ கோலத்தை நாம் வேறு எங்கும் தரிசிக்க முடியாது்.
மதுரை திருவாப்புடையார் கோவில்
மர ஆப்பு சிவலிங்கமான அதிசயம்
மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் கோவிலுக்கு வடக்கே செல்லூர் எஎன்னும் இடத்தில் , வைகைக் கரைக்கு அருகில் தேவாரத்தலமான திருவாப்புடையார். கோவில் அமைந்திருக்கிறது. இறைவன் திருநாமம் திருவாப்புடையார். இறைவி சுகந்த குந்தளாம்பிகை.
சோழாந்தக மன்னன் என்பவன் மிகச்சிறந்த சிவபக்தன். அவன் எப்போதும் சிவபூஜை செய்ந பின்தான் சாப்பிடுவான். ஒரு முறை அவன் அருகிலிருந்த காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். காட்டில் வெகு நேரம் வேட்டையாடியதால் களைப்படைந்து பசியால் வாடினான். மன்னனுடன் சென்ற அமைச்சர், மன்னனின் சோர்வு நீங்க ஏதாவது சாப்பிடும்படி சொன்னார்கள். ஆனால் மன்னன், ' சிவபூஜை செய்த பின்பே உணவு சாப்பிடுவேன்' என்று சொல்லி மறுத்து விட்டான்.
அமைச்சர், மன்னன் சிவபூஜை செய்ய வேண்டும் என்பதற்காக, அந்தக் காட்டில் கிடைத்த மரத்துண்டு ஒன்றை எடுத்து, அதைத் தரையில் ஆப்பு போன்று அடித்து வைத்தார். பின்னர் அவர் மன்னனிடம் அந்த மரத்துண்டைக் காட்டி, ;அந்தச் சுயம்புலிங்கத்தை வழிபட்டுவிட்டுத் தாங்கள் சாப்பிடலாம்' என்று சொல்ல, சோர்வுடன் இருந்த மன்னன், அந்த ஆப்பைச் சிவலிங்கம் என நினைத்து வணங்கி விட்டு சாப்பிட்டான். அவனுக்குச் சோர்வு நீங்கிய பிறகு, தான் வணங்கியது சிவலிங்கம் அல்ல, அது மர ஆப்பு என்று தெரிந்தது.
அதை நினைத்து வருந்திய மன்னன், 'இறைவா! நான் இதுவரை உன்னை வழிபட்டு வந்தது உண்மையானால், நான் வணங்கிய இந்த ஆப்பில் இறைவனாக இருந்து அருள் புரிய வேண்டும்' என்று மனமுருக வேண்டினான். மன்னனின் பக்தியில் மகிழ்ந்த இறைவன், அந்த ஆப்பிலேயே இறைவனாகத் தோன்றினார். ஆப்பில் எழுந்தவர் என்பதால் அவருக்கு 'ஆப்புடையார்' என்னும் பெயர் ஏற்பட்டது. அந்த ஊரும் 'ஆப்பனூர்' என்றானது.
ஆற்று மணல் அன்னமாக மாறிய விநோதம்
இங்குள்ள இறைவனான ஆப்புடையார் மற்ற சுயம்பு லிங்கங்களை விடச் சிறப்பு மிக்கவர் என்றும், இவரை வணங்கினால், அனைத்துத் தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்று தலபுராணம் கூறுகிறது.
சோழாந்தகனின் மரபு வழியில் வந்த சுகுணபாண்டியன் என்பவனது ஆட்சியில் கடுமையான பஞ்சம் நிலவியது. அப்போது இக்கோவில் அர்ச்சகர், நெல்லுக்குப் பதிலாக, வைகை ஆற்று மணலைக் கொண்டு சமைத்தார். அப்போது அந்த மணல் அன்னமாக மாறியது என்றும், அதனால் இத்தல இறைவனுக்கு 'அன்னவிநோதன்' என்கிற பெயர் ஏற்பட்டது..
இத்தலத்தில் ஐப்பசி அன்னாபிஷேகம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பச்சரிசி சாதத்தை வடித்து, அதனை லிங்கத் திருமேனியில் சாற்றுவர். கருகுமணியால் காதணி, கழுத்தில் புடலங்காய் மாலை என லிங்கத் திருமேனியை அலங்கரிப்பார்கள். பூஜை முடிந்ததும் லிங்கத் திருமேனியின் சிரசில் உள்ள சாதத்தை எடுத்து வைகையில் கரைப்பார்கள். இதனால், அந்த நதி இன்னும் புண்ணியம் பெறுவதாக ஐதீகம். மீதமுள்ள சாதத்தைப் பிரசாதமாக வழங்குவர். இந்தப் பிரசாதத்தைச் சாப்பிட, வியாபாரம், விளைச்சல் பெருகும். குபேர யோகம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
கார்த்திகையில் திருவாப்புடையாரை வணங்கினால், சகல செல்வங்களும் வந்துசேரும். வீட்டின் தரித்திரம் விலகும். தடைப்பட்ட காரியங்கள் இனிதே நடந்தேறும் என்பது பக்தர்களின் நமபிக்கை.
திருமெய்ஞானம் (திருமயானம்) பிரம்மபுரீஸ்வரர் கோவில்
முருகப்பெருமான் கையில் வில்லும், அம்பும் ஏந்தியிருக்கும் அபூர்வ கோலம்
மயிலாடுதுறையில் இருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ள திருக்கடையூரிலிருந்து 2 கி.மீ. தொலைவில், தேவாரத் தலமான திருக்கடவூர் மயானம் உள்ளது. இறைவர் திருப்பெயர் பிரம்மபுரீஸ்வரர். இறைவி மலர்க்குழல் மின்னம்மை.
இத்தலத்தில் முருகப்பெருமான் சிங்காரவேலர் என்ற திருநாமத்துடன் தென்திசை நோக்கி அருள் புரிகிறார். சிங்காரவேலர் போருக்குச் செல்லும் கோலத்தில் ஒரு கையில் வேலும், மற்றொரு கையில் வில்லும், அம்பும் கொண்டு, கழுத்தில் ருத்ராட்ச மாலையும், காலில் பாதக் குறடு(காலணி) அணிந்தும் காட்சியளிப்பது இவ்வாலயத்தின் தனிச்சிறப்பாகும். இவர் வில்லேந்திய இராமனைப் போல நளினமாக சற்றே இடப்பறம் சாய்ந்திருக்கும் கோலம் நம்மை பரவசமடையச் செய்யும். முருகன் சிவனின் அம்சம் என்றாலும், இத்தலத்தில் இராமனின் சிலை போல வளைந்து காட்சி தருவதால், இவரை திருமாலின் அம்சமாகக் கருதுகின்றனர். மாமனைப் போல் மருமகன் என்றுகொண்டாடுகின்றனர்.
வில்லேந்திய சிங்கார வேலரை வழிபட்டால் எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.
திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோவில்
நாள் பட்ட சரும நோய்களைத் தீர்க்கும் அம்பிகை
திருவையாற்றில் இருந்து வடமேற்கே 13 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தவம் திருமழபாடி. இறைவன் திருநாமம் வைத்தியநாதசுவாமி. இத்தலத்தில் சுந்தராம்பிகை மற்றும் பாலாம்பிகை என்ற இரண்டு அம்பிகைகள் அருள் பாலிக்கிறார்கள்.
இறைவி சுந்தராம்பிகை, அழகம்மை என்று அழகு தமிழிலும் அழைக்கப்படுகிறார். சரும நோய்களைப் போக்கும் வரப்பிரசாதி இந்த சுந்தராம்பிகை. நாள்பட்ட சரும நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், பங்குனி மாதம் நான்கு அல்லது ஐந்து செவ்வாய்க்கிழமைகள் இந்தத் தலத்துக்கு வந்து, ஆற்றிலும் கோயில் தீர்த்தத்திலும் நீராடிவிட்டு, ஈர உடையுடன் ஒன்பது முறை அம்பாளை வலம்வந்து, உப்பும் மிளகும் போட்டு வேண்டிக் கொண்டால், நாள்பட்ட சரும நோய்களும் அதனால் ஏற்பட்ட சங்கடங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
குழந்தை பாக்கியம் வேண்டும் பக்தர்கள், கோயிலில் உள்ள சோமாஸ்கந்தருக்கு வெள்ளை வஸ்திரமும் ரோஜாப்பூ மாலையும் சாத்தி, 11 நெய்தீபம் ஏற்றி வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.