திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில்
வைகுண்ட ஏகாதசியன்று திருப்பதி வெங்கடேசுவர பெருமாளுக்கு திருஷ்டி பொட்டாக வைக்கப்படும் திருவண்ணாமலை மகாதீப முதல் மை
திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபம், சிவன் அக்னி பிழம்பாக நின்றதை நினைவுபடுத்தும் வகையில் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், 2668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படும் பெரும் தீபமாகும். இது திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாய் சிவன் காட்சியளித்ததைச் சிறப்பிக்கிறது,
ஐந்து அடி உயரமும், 250 கிலோ எடையும் கொண்ட கொப்பரையில் 3,500 லிட்டர் நெய் ஊற்றப்பட்டு, 1500 மீட்டர் காடா துணியால் ஆன திரியின் மூலம் இந்த மகாதீபம் ஏற்றப்படும். இந்த மகாதீபம் தொடர்ந்து பதினோரு நாட்கள் எரியும். திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றும் உரிமை பெற்றவர்கள் பர்வதராஜ குலத்தினர். இந்தப் பர்வத ராஜ குலத்தினரே மகாதீபம் அணைந்த பின் தீபக் கொப்பரையை மலையிலிருந்து இறக்கி கோவில் வசம் ஒப்படைப்பார்கள். இந்தக் கொப்பரையில் இருந்து எடுக்கப்படும் முதல் மை, வைகுண்ட ஏகாதசி அன்று திருப்பதி வெங்கடேசுவர பெருமாளுக்கும், மலையப்ப சுவாமிக்கும் திருஷ்டி பொட்டாக வைக்கப்படுகின்றது. மார்கழி ஆருத்ரா தரிசனத்தன்று திருவண்ணாமலை நடராஜப் பெருமானுக்கும் சாற்றப்படுகின்றது.
தகவல் உதவி : திரு.B. சம்பத்குமார், சென்னை