தக்கோலம் ஜலநாதீசுவரர் கோவில்
அபூர்வக் கோலத்தில் காட்சி தரும் தக்கோலம் தட்சிணாமூர்த்தி
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் தக்கோலம். இறைவன் திருநாமம் ஜலநாதீசுவரர். இறைவி கிரிராஜ கன்னிகை.
பொதுவாக தட்சிணாமூர்த்தி ஒருகாலை மற்றொரு காலின் மீது மடித்து வைத்திருக்கும் திருக்கோலத்தை பார்த்திருப்போம். ஆனால், இங்கு அமர்ந்த நிலையில்(உத்குடிகாசனம் / உத்கடி ஆசனம்) வேறு எங்கும் காண முடியாத உத்கடி ஆசன திருக்கோலத்தில் தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கின்றார். கல்லால மரத்தின் கீழ் வலக்காலைத் தொங்கவிட்டு, இடக்காலைக் குத்துக்காலிட்டு அபூர்வமாகக் காட்சி தருகின்றார். மனதைக் கட்டுப்படுத்தும் இந்த ஆசனம், மனம் அலைபாயும் மாணவர்களுக்கு கல்வி மேன்மை தரும். தலையை இடதுபுறம் சாய்த்த வண்ணம் ஒரு கையில் ருத்ராட்ச மாலையும், மற்றொரு கையில் தாமரையும்கொண்டும், காலடியில் முயலகன் இல்லாமலும் அருள்பாலிக்கிறார். வலது பின் கையில் அக்க மாலையுடன், சீடர்களை ஆட்கொண்டருளும், அடக்கியாளும், கண்டிப்போடு ஆசிரியர் போன்ற பாவனையில் இருக்கிறார்.
கல்வியில் நாட்டம் தரும் தட்சிணாமூர்த்தி
இவரை மஞ்சள் நிற மலர்களால் வியாழக்கிழமைகளில் அர்ச்சித்து வழிபடுவது விசேஷமானது. வியாழக்கிழமை தினங்களில் இவருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து அதை வாங்கி வந்து தினமும் தலையில் தடவிவந்தால் மாணவர்களுக்குக் கல்வியில் நாட்டம் பெருகும், நினைவாற்றல் கூடும் என்பது ஐதீகம். வியாழக்கிழமை தோறும் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறந்த பலனைத் தரும்.
ஆவூர் பசுபதீஸ்வரர் கோவில்
பிதுர் தோஷத்தை நிவர்த்தி செய்யும் பஞ்ச பைரவர்கள்
கும்பகோணத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேவாரத் தலம் ஆவூர். இங்கு பசுபதீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இறைவன் திருநாமம் பசுபதீஸ்வரர். இத்தலத்தில் பங்கஜவல்லி , மங்களாம்பிகை என்ற திருநாமம் தாங்கி இரண்டு அம்பிகைகள் அருள் புரிகிறார்கள்.
இந்தக் கோவிலின் முக்கிய சிறப்பம்சமாக பஞ்ச பைரவ மூர்த்திகள் உள்ளனர். ஐந்து பைரவர்களும் ஒரே பீடத்தில் வீற்றிருக்கிறார்கள். இக்கோவிலில் மங்களாம்பிகை அம்மனை பிரதிஷ்டை செய்யும்போது, ஹோமத்திலிருந்து பஞ்ச பைரவர்கள் வெளிப்பட்டனர். அவர்களையும் பிரதிஷ்டை செய்து ஆராதனைகள் செய்தால் பித்ருசாபம் நீங்கப் பெறும் என அசரீரி ஒலித்துள்ளது. அதன்படி பஞ்ச பைரவர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டனர். பஞ்ச பைரவர்களை வழிபட்டதன் மூலம் தசரத மன்னனின் பித்ரு சாபம் விலகியது. எனவே இத்தலம் பித்ரு சாப நிவர்த்தித் தலமாக விளங்குகின்றது.
பிதுர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பஞ்ச பைரவர்களை வழிபாடு செய்து வந்தால் உடனடியாக பலன் கிடைக்கும் .ஒரு சிலர் நிறைய சம்பாதிப்பார்கள். இருந்தாலும் கடன் தீராது. இன்னும் சிலருக்கு நல்ல திறமைகள் இருக்கும். ஆனால் சரியான வேலையும் வாய்ப்புகளும் அமையாமல் வருமானம் இன்றி இருப்பார்கள். பல பேர் அனைத்து செல்வங்களையும் பெற்று இருப்பார்கள். ஆனால் வாழ்வில் நிம்மதி இருக்காது. அப்படிப்பட்டவர்களின் அந்த நிலைக்கு பிதுர் தோஷம் தான் காரணம். அவர்கள் அனைவரும் இத்தல பஞ்ச பைரவர்களை வழிபட்டு பிதுர் தோஷத்தை போக்கி வாழ்வில் வளம் பெறலாம். இவர்களை தேய்பிறை அஷ்டமி தினத்தில் வழிபாடு செய்தால் அனைத்து துன்பங்களும் நீங்கும். குறைவான வருமானம் கடன் சிக்கல்கள், வேலைவாய்ப்பின்மை, திருமண சிக்கல்கள் போன்றவைகள் பிதுர் தோஷ காரணத்தினால் கூட ஏற்படலாம். அதனை இந்த தலத்தில் உள்ள பஞ்ச பைரவர்களை வழிபாடு செய்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
திருக்கண்டியூர் பிரம்மசிரகண்டீசுவரர் கோவில்
பிரம்மாவும் அவருடைய மனைவி சரஸ்வதியும் தம்பதி சமேதராக எழுந்தருளி இருக்கும் அபூர்வ காட்சி
திருவையாற்றில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலை வழியில் சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் திருக்கண்டியூர். திருவையாறு மற்றும் அதைச் சுற்றியுள்ள சப்த ஸ்தான கோவில்களில் இத்தலமும் ஒன்று. சிவபெருமானின் அட்டவீரட்டானத் தலங்களில் முதலாவது தலம் இது. இறைவன் திருநாமம் பிரம்மசிரகண்டீசுவரர். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை. இங்கு பிரம்மதேவரின் அகந்தையை அகற்ற சிவபெருமான் அவரின் தலையை அகற்றி தண்டித்ததால், ‘சீரகண்டீஸ்வரர்’ என்ற திருநாமம் பெற்றார்.
இக்கோவிலில் பிரம்மதேவர் தவமிருந்து சிவனிடம் சாப விமோசனம் பெற்றார். இங்கு சரஸ்வதியுடன் பிரம்மாவிற்கு சன்னதி உள்ளது.மற்ற கோவில்களில் பிரம்மாவிற்கு தனி சந்நிதி அல்லது கோஷ்டத்தில் வீற்றிருக்கும் நிலையில், இங்கு பிரம்மாவும் அவருடைய மனைவி சரஸ்வதியும் ஒன்றாக தம்பதி சமேதராகக் காட்சியளிப்பது, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத காட்சியாகும். பிரம்மா சரஸ்வதியுடன் தம்பதி சமேதராக, புன்னகை தவழும் கோலத்தில் காட்சியளிக்கிறார், அவரது கரங்களில் பூ மற்றும் ஜெபமாலைகள் இருக்கின்றன.
இந்த தலத்தில் தரிசனம் செய்தால் பிரம்மா தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. தலையெழுத்து சரியில்லை என வருந்துவோர் பிரம்மாவிற்கும், படிப்பில் சிறப்பிடம் பெற விரும்புவோர் சரஸ்வதிக்கும் வெண்ணிற ஆடை அணிவித்து, தாமரை மலர் வைத்து வழிபடுகிறார்கள். பிரம்மா, நவக்கிரகங்களில் கேதுவிற்கு அதிபதி, குரு பகவானுக்கு ப்ரீத்தி தேவதையாகத் திகழ்கிறார். குரு பலன் இருந்தால்தான் திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கேது பலன் நன்றாக இருந்தால் ஞானம் உண்டாகும். எனவே, இந்த பலன்கள் கிடைக்க பிரம்மா சன்னதியில் நெய் தீபமேற்றி வேண்டிக் கொள்கிறார்கள்.
திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோவில்
'ப' என்ற தமிழ் எழுத்து வடிவ அமைப்பில் எழுந்தருளி இருக்கும் நவக்கிரகங்களின் அரிய தோற்றம்
திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில், 22 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருக்கொள்ளிக்காடு. இறைவன் திருநாமம் அக்னீஸ்வரர். இறைவியின் திருநாமம் பஞ்சின் மெல்லடியம்மை, மிருதுபாத நாயகி.
இத்தலத்தில் சனி பகவான் அனுக்கிரக மூர்த்தியாக இரண்டாவது அவதாரம் எடுத்து, பொங்கு சனீஸ்வரராக அருள்பாலிக்கிறார். அதனால் இங்கு சனி பகவான் தன்னை வழிபடுபவர்களுக்கு வெறும் நற்பலன்களை மட்டுமே வாரி வழங்குகின்றார். அவரைப் போலவே மற்ற நவக்கிரகங்களும், இத்தலத்தில் தங்களுடைய காரகப் பலன்களை அளிக்காமல் சிவ தியானத்தில் இருக்கின்றன. இந்த காரணத்தினால் இத்தலத்தில் நவக்கிரகங்கள் மாறுபட்ட அமைப்பில் எழுந்தருளி இருக்கிறார்கள். இங்கு அவர்கள் 'ப' என்ற தமிழ் எழுத்து வடிவ அமைப்பில் காட்சி அளிக்கிறார்கள். இத்தகைய வடிவமைப்பில் நவக்கிரகங்கள் எழுந்தருளி இருப்பதை நாம் வேறு எந்த கோவிலிலும் தரிசிக்க முடியாது.
நவக்கிரகங்களின் இந்த 'ப' எழுத்து வடிவமைப்பில், சூரியன், சந்திரன், அங்காரகன் ஆகிய மூவரும் பின்புறம் இருக்கிறார்கள். சந்திர பகவானுக்கு வலது புறம் குருபகவான், சனி பகவான், புதன் பகவான் ஆகிய மூவரும் இருக்கிறார்கள். அங்காரகனுக்கு இடது புறம் சுக்கிர பகவான், ராகு பகவான், கேது பகவான் ஆகியோர் இருக்கின்றார்கள்.
தென்குடி திட்டை வசிஸ்டேஸ்வரர் கோவில்
மாங்கல்ய பலம் அருளும் மங்களாம்பிகை
அம்பிகை சன்னிதிக்கு எதிரே மேல் கூரையில் 12 ராசிகளுக்குரிய சின்னங்கள் இருக்கும் அரிய வடிவமைப்பு
கிரக தோஷங்களை நீக்கும் அம்பிகை
தஞ்சாவூரிலிருந்து மெலட்டூர் செல்லும் வழியில் 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் தென்குடி திட்டை . இறைவன் திருநாமம் வசிஸ்டேஸ்வரர். இறைவியின் திருநாமம் சுகந்த குந்தளாம்பிகை. பெண்களுக்கு மங்கள வாழ்வளிப்பதால் அம்பாள் மங்களாம்பிகை எனப் போற்றப்படுகிறாள்.
அன்னை சுகந்த குந்தளாம்பிகை தெற்கு நோக்கி நின்ற வடிவில் வசிஷ்டேஸ்வரருக்கு இணையாக உயர்ந்த பீடத்தில் உள்ளார் . பரம்பொருளுக்கு நிகரானவள் சக்தி என்பதால் தான், இறைவனுக்கு நிகரான உயர்ந்த பீடத்தில் அம்பாளும் வீற்றிருக்கிறார்.மகாப்பிரளய காலத்தில் உலகைக் காக்க இறைவனுடன் ஓடம் ஏறி வந்ததால், இத்தலத்தில் உள்ள இறைவியை லோகநாயகி என்றும், சகல மங்களங்களையும் தருவதால் மங்களாம்பிகை என்றும் அழைக்கிறார்கள்.
கும்பகோணத்தில் சோமநாதன் என்பவர் குடும்பத்துடன் தனது வாழ்ந்து வந்தார். ஒரு நாள் இவரது வீட்டுக்கு வந்த ஜோதிடர் ஒருவர், 'உங்கள் மகள் மங்களா 16-வது வயதில் விதவையாகி விடுவாள்’' எனக் கூறினார். அதைக் கேட்டு சோமநாதன் வருந்தினார். சிறிது காலத்தில் தஞ்சைக்கு அருகே உள்ள திட்டையில் உள்ள ஒருவருக்கும், மங்களாவிற்கும் திருமணம் நடைபெற்றது. திட்டைக்கு வந்த நாள் முதல் மங்களா, தனது கணவன் நீண்டநாட்கள் வாழ வேண்டும் என திட்டையில் உள்ள லோகநாயகி அம்மனை வணங்கி வந்தாள். ஒரு பவுர்ணமி தினத்தன்று மங்களா, லோகநாயகி அம்மனை சரணடைந்து, 'எமனிடம் இருந்து என் கணவனின் உயிரை காப்பாற்றி, எனக்கு மாங்கல்ய பிச்சை கொடு' என கண்ணீர் மல்க வேண்டினாள். அவளது பிரார்த்தனைக்கு மனம் இரங்கிய லோகநாயகி, மங்களாவின் கையில் விபூதியை கொடுத்து 'இதை எமன் மீது இடு. உன் கணவன் நீண்ட ஆயுளுடன் இருப்பான். நீயும் நீண்ட நாட்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வாய்' என ஆசி கூறி மறைந்தார். மங்களாவும், இறைவியின் ஆணைப்படியே செய்தாள். வந்த எமன் மறைந்தான். மாங்கல்ய பிச்சை கொடுத்ததால் இத்தலத்தில் அன்னை மங்களாம்பிகா, மங்களேஸ்வரி என அழைக்கப்படுகிறார்.
இந்த அம்பிகையின் சன்னிதிக்கு எதிரே மேல் கூரையில் 12 ராசிகளுக்குரிய சின்னங்கள் செதுக்கப்பட்டுள்ளது. இப்படி அம்மன் சன்னதி எதிரில் 12 ராசிக்குரிய கட்டங்கள் செதுக்கப்பட்டிருப்பதை நாம் வேறு எந்த தலத்திலும் பார்க்க முடியாது. பக்தர்கள் தங்கள் ராசிக்குரிய கட்டத்தின் கீழ் நின்று அம்பிகையை பிரார்த்தனை செய்து கொண்டால், கிரக தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.
திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோவில்
சனி பகவான் பொங்கு சனீஸ்வரராக இரண்டாவது அவதாரம் எடுத்த தலம்
கைகளில் ஏர் கலப்பை, காகக் கொடி ஏந்திய சனி பகவானின் அரிய தோற்றம்
திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில், 22 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருக்கொள்ளிக்காடு. இறைவன் திருநாமம் அக்னீஸ்வரர். இறைவியின் திருநாமம் பஞ்சின் மெல்லடியம்மை, மிருதுபாத நாயகி. சனி பகவானின் தந்தையான சூரிய பகவான் இத்தலத்து இறைவன் அக்னீஸ்வரரை வழிபட்டு தோஷ நிவர்த்தி பெற்றான்.
சனி பகவான் உலகத்திற்கே நீதிபதியாக இருந்து, பாரபட்சம் பார்க்காமல் நமது பாவ புண்ணிய வரவு செலவு கணக்குப்படி, நமக்கு நற்பலன்களையோ அல்லது தண்டனையோ அளிப்பார். நமது பூர்வ ஜென்ம ஜென்ம புண்ணியம் மிகுந்திருந்தால் அளவற்ற நன்மைகளையும், சிறந்த முன்னேற்றத்தையும் அளிப்பார். செய்த பாவம் அதிகமாக இருந்தால், நாம் செய்யும் தவறுகளுக்கு தகுந்தபடி தண்டனை கொடுப்பார்.இப்படி கொடுக்கப்படும் தண்டனை மூலம் நமது பாவத்தைப் போக்கி புண்ணியம் கிடைத்திட வழிவகுப்பார்.ஆனால் நமது பாவத்தினால் ஏற்பட்ட துன்பங்களுக்கு சனி தோஷம் தான் காரணம் என்று சனிபகவானை குறிப்பிடுவது அவருக்கு மிகுந்த மன உளைச்சலை கொடுத்தது.
சனி பகவான் தனது அவப் பெயரை போக்கிக் கொள்வதற்காக, தனது தந்தை சூரிய பகவான் வழிபட்ட இத்தலத்திற்கு வந்து சிவபூஜை செய்தார். சிவன் அருளால் சனி பகவான் இத்தலத்தில் அனுக்கிரக மூர்த்தியாக, இரண்டாவது அவதாரம் எடுத்தார். இங்கு நற்பலன்களை மிகுந்து அளிப்பதால் அவருக்கு பொங்கு சனீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. இந்த பொங்கு சனீஸ்வரர் நிறைந்த செல்வங்களையும், நீண்ட ஆயுளையும் தந்து அருளுகின்றார்
இங்கு பொங்கு சனீஸ்வரர் தனி சன்னதியில் கைகளில், ஏர் கலப்பை, காகத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி, அபய ஊரு முத்திரையுடன் காட்சி தருகிறார். உழைப்பின் பெருமையை உணர்த்துவதற்காக அவர் தனது கையில் ஏர் கலப்பையை ஏந்தி இருக்கிறார். இப்படி கைகளில் ஏர் கலப்பை, காகக் கொடி ஏந்திய சனி பகவானை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
நவக்கிரக மண்டலத்தில் சனியின் திசை மேற்கு. அதே போல் இத்தலமும் மேற்கு பார்த்து அமைந்துள்ளது. சனி சம்பந்தப்பட்ட தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து அக்னீஸ்வரரை வழிபாடு செய்து, சனி பகவானை வழிபட்டால் தோஷம் விலகும் என்பது ஐதீகம்.
திருக்கோழம்பியம் கோழம்ப நாதர் கோவில்
அம்பிகை பசுவாக அவதரித்து தவம் செய்த தேவாரத் தலம்
சிவலிங்கத்தின் ஆவுடையார் மேல் பசுவாக வந்த அம்பிகையின் குளம்படி பதிந்த தலம்
மயிலாடுதுறை–கும்பகோணம் சாலையில் ஆடுதுறையிலிருந்து தெற்கே 8 கி.மீ. (திருவாவடுதுறையிலிருந்து கிழக்கே 5 கி.மீ) தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருக்கோழம்பியம். இறைவன் திருநாமம் கோழம்ப நாதர், கோகிலேஸ்வரர். இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி. 1800 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தலம் இது.
அம்பிகை உலகில் சிவபூஜையின் பெருமையை எடுத்துரைக்க, பசுவாக அவதரித்து தவம் செய்த இடம் என்பதே இந்தத் தலத்தின் சிறப்பு. இந்த நிகழ்ச்சியை சுட்டிக்காட்டும் வகையில், இங்குள்ள சிவலிங்கத்தின் ஆவுடையார் மேல் பசுவாக வந்த அம்பிகையின் குளம்படி பதிந்து இருக்கின்றது. இத்தலத்து சிவலிங்கத் திருமேனி நீண்ட பாணத்தை உடையதாக இருக்கின்றது. பிரம்மனுக்காக பொய் சாட்சி சொன்ன தாழம்பூ சாப விமோசனம் பெற்ற தலம் இது. அதனால் இங்கு தாழம்பூ, சிவபூஜைக்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பித்ரு தோஷ நிவர்த்திக்கு காசி, கயா போன்ற புண்ணிய தலங்களுக்கு ஈடான தலம் இது.
அம்பிகை சௌந்தர்ய நாயகி 5 1/2 அடி உயரத்தில் பத்ம பீடத்தில் நின்ற கோலத்தில், அபய வரத ஹஸ்தங்களுடன், அட்சர மாலை, கமண்டலத்தைத் தாங்கி தோற்றமளிக்கிறாள். திருமாலுடன் சொக்கட்டான் விளையாடிய தருணத்தில் சிவபெருமானுக்கு ஏற்பட்ட சந்தேகத்தில், பார்வதி தனது சகோதரனுக்காகப் பரிந்து பேசியதால், சிவபெருமானின் சாபத்துக்கு ஆளாகி பூமியில் பசுவாகப் பிறந்தார். சாப நிவர்த்திக்காக, திருவாவடுதுறை அருகே மேய்ந்த அந்தப் பசு அருகிலுள்ள திருக்கோழம்பியத்தில் சிவபெருமானை வழிபட்டது. அங்கு அதன் குளம்பு லிங்கத்தின் மீது தவறுதலாக இடறியது. அதன் அடையாளம் இன்றும் ஆவுடையார்மேல் பதிந்துள்ளதைக் காணலாம். தமிழில் 'குளம்பு' என்றால் 'கொழுமம்' என்று பொருள். அதன்பொருட்டு இத்தலத்துக்கு 'கோழம்பம்' என்றும், இறைவனுக்கு 'கோழம்பநாதர்' என்றும் பெயர் ஆயிற்று.
இக்கோவிலில் 27 நாட்களுக்கு ஒருமுறை நடைபெறும் 'வ்யதிபாதயோக' பூஜை ஹோமங்களில் பங்கேற்றால் திருமணத் தடைகள் நீங்கும், புத்திரப் பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில்
'ட' என்ற தமிழ் எழுத்து வடிவில் நவக்கிரகங்கள் அமைந்திருக்கும் அபூர்வ வடிவமைப்பு
சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில், சுமார் 15 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத் தலம் திருவெண்காடு. இறைவன் திருநாமம் சுவேதாரண்யேசுவரர். இறைவியின் திருநாமம் பிரம்ம வித்யாம்பிகை, பெரியநாயகி.
பொதுவாக சிவன் கோவில்களில் நவக்கிரகங்கள் ஒரு பீடத்தின் மேல் சதுர வடிவில், அவரவர் அவரவர்க்குரிய திசையை நோக்கிய வண்ணம் எழுந்தருளி இருப்பார்கள். ஆனால் இந்த கோவிலில் நவக்கிரகங்கள் சதுர வடிவில் அமைந்திராமல், 'ட' என்ற தமிழ் எழுத்து வடிவில் அமைந்திருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். நவக்கிரகங்களின் இந்த 'ட' வடிவ அமைப்பை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில்
இடுப்பில் குழந்தையை தாங்கிய வடிவில் உள்ள அம்பிகையின் அரிய தோற்றம்
சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில், சுமார் 15 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத் தலம் திருவெண்காடு. இறைவன் திருநாமம் சுவேதாரண்யேசுவரர். இறைவியின் திருநாமம் பிரம்ம வித்யாம்பிகை, பெரியநாயகி.
திருஞான சம்பந்தர் திருவெண்காட்டின் வட எல்லைக்கு வந்த போது அவருக்கு ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தோன்றின. ஆதலின், இத்தலத்தை மிதித்தற்கஞ்சி 'அம்மா' என்று அழைத்தார். அது கேட்டுப் பெரியநாயகி அம்மை அங்கு தோன்றி திருஞானசம்பந்தரை இடுப்பில் வைத்துக்கொண்டு கோவிலுக்கு அழைத்து வந்தார். பிள்ளையைத் தம் இடுப்பில் தாங்கிய வடிவில் உள்ள அம்பாளின் சிலை பிரம்ம வித்தியாம்பிகை கோவிலின் மேற்கு உட்பிரகாரத்தில் உள்ளது. சம்பந்தர் அம்பாளைக் கூப்பிட்ட இடத்திலுள்ள குளத்தைக் 'கூப்பிட்டான் குளம்' என்பர். அது இன்று 'கேட்டான் குளம்' என்று வழங்குகிறது. அங்குள்ள விநாயகர், ஞானசம்பந்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
திருப்பூந்துருத்தி புஷ்பவனநாதர் கோவில்
நந்தியம்பெருமான் இறைவனின் நேர் எதிரில் இல்லாமல் சற்று விலகி இருக்கும் தேவாரத் தலம்
தஞ்சாவூரில் இருந்து திருக்கண்டியூர் வழியாக 13 கி.மீ. தூரத்திலுள்ள தேவாரத் தலம் திருப்பூந்துருத்தி. இறைவன் திருநாமம் புஷ்பவனநாதர். இறைவி சௌந்தர்யநாயகி. இரண்டு ஆறுகளுக்கு நடுவே அமைந்துள்ள ஊர் ஆனது துருத்தி என அழைக்கப்படுகிறது. இத்தலமானது காவிரிக்கும், குருமுருட்டிக்கும் இடையில் அமைந்துள்ளதால் திருப்பூந்துருத்தி எனப்பெயர் பெற்றது.
அப்பர் பெருமான் தனது வாழ்நாள் முழுவதும், பல சிவாலயங்களுக்குச் சென்று, புதர் மண்டிக் கிடந்த பகுதிகளை சுத்தம் செய்து, கோவில்களைப் பேணிப் பாதுகாக்கும் பணியை மேற்கொண்டார். அவர் உழவாரத் தொண்டு செய்த தலங்களில் இதுவும் ஒன்று. திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவனை தரிசிக்க வந்தபோது, இக்கோவில் அப்பர் உழவாரத் தொண்டு செய்த தலம் என்பதால், இத்தலத்தை காலால் மிதிக்க அஞ்சினார். திருஞானசம்பந்தருக்கு தனது தரிசனத்தை தர விரும்பிய இறைவன், தன் எதிரில் இருந்த நந்தியை சற்றே விலகி இருக்கச் செய்தார். அதனால்தான் இத்தலத்தில் நந்தியம்பெருமான், மற்ற தலங்களை போல் இறைவனின் நேர் எதிரில் இல்லாமல் சற்று விலகி இருக்கிறார்.
புள்ளமங்கை ஆலந்துறைநாதர்(பிரம்மபுரீஸ்வரர்) கோவில்
நுணுக்கமான, அழகான விரல் அளவு சிற்பங்கள் நிறைந்த கோவில்
மிக நேர்த்தியாகவும், நுட்பமாகவும் செதுக்கப்பட்ட சிற்பங்கள்
தஞ்சாவூர் - கும்பகோணம் நெடுஞ்சாலையில், தஞ்சாவூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் புள்ளமங்கை. இறைவன் திருநாமம் ஆலந்துறைநாதர்(பிரம்மபுரீஸ்வரர்). இறைவி அல்லியங்கோதை.
இக்கோவில் அக்காலத்திய கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக்கு ஒரு எடுத்துக் காட்டாகும். இக்கோவிலிலுள்ள பெரும்பாலான சிற்பங்கள் ஒரு அடி அளவுக்கு உள்பட்டு, மிக நுட்பமாகச் செதுக்கப்பட்டுள்ளன. மேலும், இச்சுவர்களில் தூண் போன்ற வடிவில் செதுக்கப்பட்டு, கையடக்க அளவில் பூவேலைப்பாடுகளும், ஆடல் மகளிர் சிற்பங்களும் நிறைய இடம்பெற்றுள்ளன. தூண் சிற்பங்கள், ஆடல் அணங்குகளின் சிற்பங்கள், இராமாயணச் சிற்பங்கள் போன்றவற்றைக் கொண்டு ஒரு கலைப்பெட்டகமாக, இக்கோவில் விளங்குகின்றது. நவீன தொழில்நுட்பங்கள் இல்லாத அக்காலத்தில் இவ்வளவு சிறிய அளவில் மிக நேர்த்தியாகவும், நுட்பமாகவும் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருப்பது வரலாற்று ஆய்வாளர்களிடையே மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் இக்கோவிலை பார்க்கத் தவறுவதில்லை.
கருவறை கோஷ்டத்தில் சீதை, இலக்குவனனுடன் ராமர் வனவாசம் ஏற்று படகில் கங்கையைக் கடந்து செல்லல் தொடங்கி ஜடாயு வதம் போன்ற ராமாயணக்காட்சிகள், கஜசம்ஹாரமூர்த்தி, காளியின் மகிஷ வதம், காலசம்ஹாரமூர்த்தி, வராகமூர்த்தி பூமாதேவியை மீட்டு வரல், ஆதிசேடன் மீது அரிதுயில் கொள்ளும் அனந்த சயனமூர்த்தி போன்ற பல நுட்பமான சிறிய அளவிலான சிற்பங்கள் உள்ளன.
உடுக்கை இடுப்புடையாள் என்பது போல பெண் சிற்பங்களில் இடுப்பு பகுதி உடுக்கை வடிவில் மிக நுணுக்கமாகச் செதுக்கப்பட்டுள்ளன. இதேபோல, கை, கால், கண் உள்ளிட்டவை செதுக்கப்பட்டுள்ள விதமும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
கோவில் திருச்சுற்றின் வலது புறத்திலுள்ள தட்சிணாமூர்த்தி சிலையின் மேலே கோபுரத்தில் பிச்சாடனர் சிற்பம் உள்ளது. இதில், காலில் காலணி, கையில் திருவோடு, கழுத்தணிகள், கையணிகள், காதுகளில் வளையங்கள் உள்ளிட்டவற்றுடன் நடக்கும் பாவனையில் நுட்பமாகச் செதுக்கப்பட்டுள்ளன.
அர்த்த மண்டபத்தில் உள்ள நான்கு தூண்களிலும் வேலைப்பாடுகள் வித்தியாசமாக உள்ளன. தூண்களிலும், சுற்றுச் சுவரிலும் ஏராளமான நடன மங்கை சிற்பங்கள் மிக நுணுக்கமாக ஆள்காட்டி விரல் அளவில் செதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிற்பங்களும் ஒரு காரணத்தைக் குறிப்பிடுகின்றது.
அர்த்த மண்டப புறச்சுவர்களின் தெற்குப்பகுதியில் பூதகணங்கள் சூழ காட்சியளிக்கும் கணபதி, வடக்குப்பகுதியில் மகிஷாமர்த்தினி உள்ளனர். விமான முதல் தள கோஷ்டங்களில் சிவனின் அழகு வடிவங்கள் அனைவரையும் ஈர்க்கின்றன. இவ்வாலய விமானத்தில் உள்ள ஆண் சிற்பத்தை முன் மாதிரியாகக்கொண்டே ஓவியர் மணியம், கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலின் கதாநாயகனான வந்தியத்தேவனை வரைந்தார் என்று கருதுகின்றனர்.
தக்கோலம் ஜலநாதீசுவரர் கோவில்
அர்ச்சகர்கள் சிவலிங்கத்தை தொடாமல் அபிஷேகம் செய்யும் தேவாரத் தலம்
உத்தராயண காலத்தில் செந்நிறமாகவும், தட்சிணாயன காலத்தில் வெண்மை நிறமாகவும் மாறும் அபூர்வ லிங்கம்
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் தக்கோலம். இறைவன் திருநாமம் ஜலநாதீசுவரர். இறைவி கிரிராஜ கன்னிகை.
ஒரு முறை இப்பகுதியில் வெள்ளம் வந்த போது பார்வதிதேவி இங்குள்ள சிவனை அணைத்து காப்பாற்றியதன் அடையாளமாக லிங்கத்திருமேனியில் பள்ளம் இருப்பதையும், அதையும் தாண்டி வெள்ளம் அரித்தது போல் லிங்கத்தின் கீழ்ப்பகுதியில் வரிவரியாக மணல் கோடுகள் இருப்பதை இன்றும் காணலாம். பார்வதிதேவி இந்த லிங்கத்தை அணைத்திருப்பதாக ஐதீகம் இருப்பதால் இங்கு பூஜை செய்யும் சிவாச்சாரியார்கள் இந்த லிங்கத்தை தொடாமல் தான் இன்றும் கூட அபிஷேகம் செய்கிறார்கள். இது இத்தலத்தின் மாபெரும் சிறப்பம்சமாகும்.
இது தவிர இன்னொரு அதிசயத்தையும் இத்தலத்து மூலவர் ஜலநாதீசுவரரின் சிவலிங்கத் திருமேனியில் காணலாம். உத்தராயண காலத்தில் இந்த சிவலிங்கம் செந்நிறமாக காட்சி தரும். அப்போது நல்ல மழை பொழிந்து பயிர் செழிக்கும். தட்சிணாயன காலத்தில் இதே சிவலிங்கம் வெண்மையாக மாறும். அப்போது வறட்சி ஏற்பட்டு நிலம் காய்ந்து விடும்.
திருக்கள்ளில் சிவாநந்தீஸ்வரர் கோவில்
பைரவருக்கு மிளகாய் பொடி அபிஷேகம் செய்யும் வித்தியாசமான நடைமுறை
சென்னை - பெரியபாளயம் சாலையிலுள்ள கன்னிப்புத்தூர் (கன்னிகைப்பேர்) என்ற கிராமத்திலிருந்து 4 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத் தலம் திருக்கள்ளில். இத்தலத்தை தற்போது திருகண்டலம் என்று அழைக்கிறார்கள். இறைவன் திருநாமம் சிவாநந்தீஸ்வரர். இறைவி திருநாமம் ஆனந்தவல்லி அம்மை.
இக்கோவிலில் பைரவருக்கு மிளகாய் பொடி அபிஷேகம் செய்வது ஒரு வித்தியாசமான நடைமுறையாகும். காணாமல் போன பொருட்களை திரும்பப் பெறவும், திருமணத் தடைகள் நீங்கவும் இந்த அபிஷேகம் செய்யப்படுகிறது. மிளகாய் பொடி அபிஷேகம் என்பது ஒரு சக்தி வாய்ந்த சடங்காகும். இது எதிர்மறை சக்திகளை நீக்கி, கிரகங்களின் செல்வாக்கை எதிர்த்து, பக்தர்களுக்கு பாதுகாப்பை வழங்குகின்றது. பொருட்கள் கிடைத்தவுடன், பைரவருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். இந்த நடைமுறை பைரவரின் அருளைப் பெறவும், தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றவும் செய்யப்படுகிறது.
திருக்கோட்டூர் கொழுந்துநாதர் கோவில்
தனி சன்னதியில் மூலவராக எழுந்தருளி இருக்கும் பிரதோஷ மூர்த்தி
மன்னார்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் 16 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருக்கோட்டூர். இறைவன் திருநாமம் கொழுந்துநாதர். இறைவியின் திருநாமம் தேனாம்பிகை. இந்திரன் பூஜித்ததால் இத்தலத்திற்கு இந்திரபுரி என்ற பெயர் உண்டு. இந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற யானையும் இத்தல இறைவனை வழிபட்டது. கோடு என்றால் யானை. அதனால் இத்தலம் கோட்டூர் எனப் பெயர் பெற்றது.
பொதுவாக சிவாலயங்களில் பிரதோஷ காலங்களில், கோவில் பிராகாரத்தில் வலம் வருவதற்காக அமைந்துள்ள உற்சவமூர்த்தியே பிரதோஷ நாயகர் என்று அழைக்கப்படுகின்றார். உமாதேவியை தனது இடக்கரத்தால் அணைத்திருப்பதால் இவருக்கு அணைத்தெழுந்த நாதர் என்ற பெயரும் உண்டு. இவர் ஒன்றரை அடி உயரத்தில் சிறிய உருவத்துடன் காணப்படுவார். ஆனால் இந்த பிரதோஷ மூர்த்தி, இக்கோவிலில் பெரிய உருவத்துடன் தனி சன்னதியில் மூலவராக எழுந்தருளி இருக்கிறார். இப்படி மூலவராக காட்சி அளிக்கும் பிரதோஷ மூர்த்தியை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
ஆக்கூர் தான்தோன்றீசுவரர் கோவில்
ஆயிரம் அந்தணர்களில் ஒருவராக அன்னதானத்தில் கலந்து கொண்ட சிவபெருமான்
கையில் தண்டு ஊன்றிய நிலையில் காட்சியளிக்கும் சிவபெருமானின் அபூர்வ தோற்றம்
மயிலாடுதுறை – தரங்கம்பாடி சாலையில், மயிலாடுதுறையில் இருந்து கிழக்கே 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் ஆக்கூர் தான்தோன்றீசுவரர் கோவில். மாடம் என்னும் பெயர் கொண்ட தேவார திருத்தலங்கள் இரண்டு. ஒன்று நடுநாட்டுத் தலமான பெண்ணாகடத்தில் உள்ள தூங்கானை மாடம். மற்றொன்று காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றான ஆக்கூர் தான்தோன்றி மாடமாகும். யானை ஏறமுடியாத படிக்கட்டுகளை உடைய உயரமான தளத்தில் இறைவன் கருவறை அமையப்பெற்ற கோவில்கள் மாடக்கோயில் என்று பெயர் பெற்றன.
இக்கோவில் இறைவியின் திருநாமம் வாள்நெடுங்கன்னி. உற்சவர் திருநாமம் ஆயிரத்துள் ஒருவர். இவர் கையில் தண்டு ஊன்றிய நிலையில் நின்ற வண்ணமாக காட்சியளிக்கிறார். சிவபெருமானின் இத்தகைய உற்சவமூர்த்தி கோலத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. இதன் பின்னணியில் ஒரு சுவையான வரலாற்று நிகழ்ச்சி உள்ளது.
கோச்செங்கட்சோழன் யானை ஏற முடியாத 70 மாட கோவில்களை கட்டியவன். ஒரு முறை கோச்செங்கண்ணனுக்கு வயிற்றில் குன்ம நோய் ஏற்படுகிறது. இதனால் மன்னன் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறான். இந்த நோயை தீர்க்க வேண்டுமானால், மூன்று தல விருட்சங்கள் எங்கு இருக்கிறதோ அங்கு கோவில் கட்டினால் நோய் தீரும் என்று அசரீரி கூறுகிறது. மன்னனும் பல கோவில்கள் கட்டி வரும் போது, ஆக்கூர் என்ற இத்தலத்திற்கு வருகிறான். அப்போது அசரீரி வாக்கின் படி கொன்றை, பாக்கு, வில்வம் என்று மூன்று தலவிருட்சங்களை ஒரே இடத்தில் பார்க்கிறான்.
உடனே இந்த இடத்தில் ஒரு சிவாலயம் கட்டுகிறான். அப்படி கோவில் கட்டும்போது ஒருநாள் கட்டிய சுவர் மறுநாள் கீழே விழுந்து விடும். இது எதனால் கீழே விழுகிறது என சிவனிடம் மன்றாடி கேட்கிறான். அதற்கு இறைவன் ஆயிரம் அந்தணர்களுக்கு அன்னதானம் செய்தால் குறைபாடு நீங்கி, கோவிலை சிறப்பாக கட்டலாம் என்று கூறுகிறார். அதன்படி 48 நாள் அன்னதானம் நடக்கிறது. இதில் ஒவ்வொருநாளும் ஆயிரம் இலை போட்டால் 999 பேர் தான் சாப்பிடுவார்கள். ஒரு இலை மீதம் இருந்து கொண்டே இருக்கும். மன்னன் மிகுந்த வருத்தத்துடன் இறைவனிடம் சென்று, ஏன் இந்த சோதனை, 48 நாட்களும் ஆயிரம் பேர் அன்னதானம் சாப்பிட்டால் தானே கோவில் கட்டுவது சிறப்பாக அமையும். ஆனால் தினமும் ஒரு ஆள் குறைகிறார்களே. இதற்கு தாங்கள் தான் ஒரு வழி சொல்ல வேண்டும் என்று கெஞ்சுகிறான்.
மன்னனின் குரலுக்கு செவி சாய்த்து விட்டார் இறைவன். 48வது நாள் ஆயிரம் இலை போடப்பட்டது. ஆயிரம் இலையிலும் ஆட்கள் அமர்ந்து விட்டார்கள். ஆயிரமாவது இலையில் 'ஆயிரத்தில் ஒருவராக' அமர்ந்திருந்த வயதான அந்தணரிடம் சென்ற மன்னன், 'ஐயா, தங்களுக்கு எந்த ஊர்' என்று கேட்டான். அதற்கு வயதான அந்தணர் 'யாருக்கு ஊர்' என்று மறுகேள்வி கேட்கிறார். (இதனாலேயே இந்த ஊருக்கு யாருக்கு ஊர் என்பது மருவி ஆக்கூர் ஆனது). மன்னனை எதிர் கேள்வி கேட்ட அந்த வயதானவரை அடிப்பதற்காக சிப்பாய்கள் விரட்டுகின்றனர்.
ஓடி சென்ற வயதானவர் நெடுங்காலமாக அங்கிருந்த புற்றுக்குள் விழுந்து விட்டார். புற்றை கடப்பாறையால் விலக்கி பார்த்த போது உள்ளேயிருந்து சுயம்பு மூர்த்தியாக 'தான்தோன்றீசுவரர்' தோன்றுகிறார். கடப்பாறையால் புற்றை குத்தியபோது கடப்பாறை லிங்கத்தின் மீது பட்டு விடுகிறது. கடப்பாறை பட்டதில் அடையாளமாக இன்றும் கூட லிங்கத்தின் தலைப்பகுதியில் பிளவு இருப்பதைக் காணலாம்.
இந்தக் கோவிலின் கும்பாபிஷேக திருப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
சீர்காழி சட்டைநாதசுவாமி கோவில்
காசிக்கு இணையான அஷ்ட பைரவர் தலம்
காசியில் பாதி காழி
சிதம்பரம் மயிலாடுதுறை நெடுஞ்சாலையில், சிதம்பரத்திற்கு தெற்கு 19 கி.மீ. தொலைவிலும் மயிலாடுதுறைக்கு வடக்கே 20 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள தேவார தலம் சீர்காழி சட்டைநாதசுவாமி கோவில். இறைவியின் திருநாமம் திருநிலை நாயகி.
இக்கோவிலில் காசிக்கு அடுத்தபடியாக அஷ்டபைரவர்கள் இத்தலத்தில் அருள் பாலிக்கிறார்கள். எனவேதான் காசியில் பாதி காழி என்பர். சட்டைநாதர் சன்னதிக்கு கீழே தென்திசையில் அமைந்துள்ள வலம்புரி மண்டபத்தில் சண்டபைரவர், சம்ஹாரபைரவர், ருதுபைரவர், குரோதனபைரவர், அசிதாங்கபைரவர், உன்மத்தபைரவர், கபாலபைரவர், வீபிஷ்ணபைரவர் ஆகிய அஷ்ட பைரவர்கள் யோக நிலையில் காட்சியளிக்கிறார்கள்.
இங்கு வெள்ளிக்கிழமை மாலையிலும், தேய்பிறை அட்டமியிலும் சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த அஷ்ட பைரவர் கோவிலில் உள்ள ஊஞ்சல்,முட்குறடுகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்தக் கோவிலில் ஆண்கள் சட்டை அணியாமலும், பெண்கள் மலர்களை அணியாமலும் செல்ல வேண்டும். இங்கு நெய்தீப ஆராதனை மட்டும் நடைபெற்று வருகிறது.
அஷ்ட பைரவர் பூஜையில் தொடர்ந்து எட்டு வாரம் பங்கேற்றால் கண் திருஷ்டி, வியாபாரத்தில் அல்லது தொழிலில் நஷ்டம் போன்றவை நீங்கும் என்பது நம்பிக்கை. பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும்.
பைரவரை செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து, தேன், அவல் பாயசம், தயிர்சாதம், செவ்வாழை ஆகியவற்றை நைவேத்தியம் செய்து வழிபட, மனதில் ஏற்படும் பயம், கடன் தொல்லை நீங்கும், திருமணம், வீடு கட்டுதல், வேலை வாய்ப்பு, வியாபார முன்னேற்றமும் ஏற்படும். எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். பைரவருக்கு உகந்தது வெள்ளை வஸ்திரம். தயிர் அன்னம், தேங்காய் போன்ற வெண்ணிற உணவுகள். எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுபட பைரவர் வழிபாடு சிறந்தது.
சாக்கோட்டை (கலயநல்லூர்) அமிர்தகலசநாதர் கோவில்
வலக் கரத்தினை உச்சி மீது வைத்து ஒற்றை காலில் தவமிருக்கும் தபசு அம்மன்
மூன்று பௌர்ணமி தினங்களில் வழிபட்டால் திருமணத் தடை நீங்கும்
கும்பகோணம் - நீடாமங்கலம் சாலையில், கும்பகோணத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் சாக்கோட்டை . இறைவன் திருநாமம் அமிர்தகலசநாதர். இறைவியின் திருநாமம் அமிர்தவல்லி. அம்மன் அமிர்தவல்லி இறைவனை நோக்கி நின்று திரும்பியுள்ள காட்சி ஒரு தனிச்சிறப்பாகும்.
இத்தலத்தை குறித்து மூன்று புராண வரலாறுகள் உள்ளது. ஒன்று ஊழிக் காலத்தில் உயிர்களை அடக்கிய கலசம் இங்கு தங்கியது அதனால் இத்தலம் கலயநல்லூர் என்று வழங்கபடுகிறது. இரண்டாவது பிரம்மன் இங்கு இறைவனை பூஜித்து பேறு பெற்றான். மூன்றாவது இறைவன் உமையம்மையின் தவத்தினை கண்டு அம்மைக்கு வரம் கொடுத்து திருமணம் புரிந்து கொண்டார்.
அம்பிகையின் தபசு கோலத்தை நாம் ஒரு தனி சன்னதியில் காணலாம். தவக்கோலத்தில் இருக்கும் இந்த தபசு அம்மன், வலது காலை மட்டும் தரையில் ஊன்றி இடக்காலை மடக்கி வலது தொடையில் ஏற்றி பொருந்திட மடக்கி பதிந்து பாதம் மேல் நோக்கிட நிற்கிறாள். வலக் கரத்தினை உச்சி மீது உள்ளங்கை கவிழ வைத்து இடக் கரத்தினை திருவயிற்றின் கீழ் அங்கை (உள்ளங்கை) மேல் நோக்க வைத்து நேராக நின்று தவமிருக்கின்றார். இந்த கோவிலில் இந்த சன்னதி தனி சிறப்பு கொண்டு விளங்குகிறது. தபசு அம்மனுக்கு, மூன்று பௌர்ணமி தினங்களில் 48 அகல் விளக்குகள் ஏற்றி, அர்ச்சனை செய்து வழி பட வேண்டும். இதனால் தாமதமாகும் திருமணங்கள் விரைவில் நடந்தேறும் என்பது ஐதீகம். பல வெளியூர் பக்தர்கள் இங்கு வந்து திருமணத் தடை நீங்க வழிபடுகிறார்கள். மேலும் இக்கோவில் அறுபதாம் திருமணத்திற்கும் உகந்த தலம் ஆகும்.
திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோவில்
முருகன் வலது கையில் கல்லான வேலையும், இடது கையில் சேவலையும் பிடித்திருக்கும் அபூர்வ காட்சி
முருகனின் தோளுக்கு மேல் வேல் அமைந்திருக்கும் அபூர்வமும், சக்தியும் வாய்ந்த அமைப்பு
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகரின் தென் கிழக்குப் பகுதியில் மலை மீது அமைந்துள்ளது, அர்த்தநாரீசுவரர் கோவில். இம்மலை, ஒருபுறம் இருந்து பார்த்தால் ஆண் போன்ற தோற்றமும், வேறு ஒரு புறம் இருந்து பார்த்தால் பெண் போன்ற தோற்றமும் அளிப்பது சிறப்பாகும். 2000 ஆண்டுகள் பழமையான இம்மலை கோவிலுக்கு செல்ல 1200 படிக்கட்டுகள் உள்ளன. வாகனங்கள் செல்ல சாலை வசதியும் உண்டு. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
இக்கோவிலில் அர்த்தநாரீசுவரர், செங்கோட்டு வேலவர், ஆதிகேசவப் பெருமாள் என மூன்று தெய்வங்களின் சன்னிதிகள் இருக்கின்றது.
சிவத்தலமாகயிருப்பினும், இது முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த தலம். பொதுவாக எல்லா கோவில்களிலும் முருகனின் கையிலிருக்கும் வேல் தனியாக செய்யப்பட்டு பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் திருச்செங்கோட்டில், செங்கோட்டு வேலவர் தனது வலது கையில் கல்லாலான வேலைப் பிடித்தபடி இருப்பது நாம் வேறு எங்கும் காண முடியாத காட்சியாகும். இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், முருகன் கையில் சேவற்கொடியைப் பிடித்தபடி இருப்பார். ஆனால் இக்கோவிலில், செங்கோட்டு வேலவர் தன்னுடைய இடது கையில் சேவலையே பிடித்திருப்பார். அபிஷேக நேரத்திலேதான் நாம் இந்தக் காட்சியைத் தெளிவாகப் பார்க்க முடியும். முருகனின் தோளுக்கு மேல் வேல் அமைந்திருப்பது மிக அபூர்வமும், சக்தி வாய்ந்ததும் ஆகும்.
செங்கோட்டு வேலவரை அருணகிரிநாதர் தனது திருப்புகழ், கந்தர் அலங்காரம் மற்றும் கந்தரனுபூதியிலும் பாடியுள்ளார்.
திருப்பரங்குன்றம் சத்யகிரீஸ்வரர் கோவில்
பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டியபடி இருக்கும் அபூர்வ அமைப்பு
சிவனுக்கு நேரே மகாவிஷ்ணு இருக்கும் அபூர்வ காட்சி
நந்தி, மூஞ்சூறு, மயில் ஆகிய மூன்று வாகனங்கள் அருகருகே இருக்கும் அரிய காட்சி
மதுரைக்கு தென்மேற்கில் 8 கி.மீ.தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருப்பரங்குன்றம் சத்யகிரீஸ்வரர் கோவில். இது ஒரு குகைக்கோவிலாகும். கருவறையில் ஐந்து குகைகள் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. சுப்ரமணியசுவாமி சந்நிதி, துர்க்கையம்மன் சந்நிதி, கற்பக விநாயர் சந்நிதி, சத்தியகிரீஸ்வரர் சந்நிதி, பவளக்கனிவாய்ப் பெருமாள் சந்நிதி ஆகிய ஐந்து சந்நிதிகள் இங்கு உள்ளன.
பொதுவாக சிவன் கோவில்களில், விநாயகர், முருகன், துர்க்கை, பெருமாள் ஆகியோர் பிரகார தெய்வங்களாகவே இருப்பர். ஆனால், திருப்பரங்குன்றத்தில் சத்தியகிரீஸ்வரர் (சிவன்), பவளக்கனிவாய் பெருமாள், கற்பகவிநாயகர், சுப்பிரமணியர், துர்க்கையம்மன் என பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டியே அருளுகின்றனர். இத்தகைய அமைப்பை காண்பது அபூர்வம்.
துர்க்கையம்மன் காலுக்கு கீழே மகிஷாசுரனுடன் நின்றகோலத்தில் இருக்கிறாள். இவளுக்கு இடப்புறத்தில் கற்பக விநாயகர் கையில் கரும்பு ஏந்திக்கொண்டு தாமரை மலர் மீது அமர்ந்து வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறார். இவரைச் சுற்றி பல ரிஷிகள் வணங்கியபடி இருக்கின்றனர். துர்க்கைக்கு வலது புறம் தெய்வானையை மணம் முடித்த கோலத்தில் சுப்பிரமணியர் வடக்கு நோக்கி இருக்கிறார். இவருக்கு அருகில் நாரதர், இந்திரன், பிரம்மா, நின்றகோலத்தில் வீணையில்லாத சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும் உள்ளனர்.சத்யகிரீஸ்வரர் கிழக்கு பார்த்து தனிக்கருவறையில் இருக்கிறார். இவருக்கு நேரே மகாவிஷ்ணு, பவளக்கனிவாய் பெருமாளாக மகாலட்சுமியுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். அருகில் மதங்க மகரிஷியும் இருக்கிறார். பொதுவாக சிவனுக்கு நேரே நந்தி இருக்கவேண்டிய இடத்தில் மகாவிஷ்ணு இருக்கிறார். இது அபூர்வமான அமைப்பாகும். எனவே இக்கோயிலை 'மால்விடை கோயில்' (மால் - திருமால், விடை - நந்தி) என்கின்றனர். பெருமாள் தன் மைத்துனராகிய சிவபெருமானுக்கு சேவை செய்வதற்காக நந்தியின் இடத்தில் இருக்கிறார். மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணத்தின்போது, இவரே பார்வதியை தாரை வார்த்துக் கொடுக்கச் செல்கிறார்.
சிவன் கோவில்களில் நந்தி, விநாயகர் சன்னதியில் மூஞ்சூறு, முருகன் சன்னதியில் மயில் என அந்தந்த சுவாமிகளுக்குரிய வாகனங்கள்தான் சுவாமி எதிரில் இருக்கும். ஆனால் இத்தலத்தில் சிவபெருமான், விநாயகர், முருகன் ஆகிய மூவருக்குமான வாகனங்கள் கொடிமரத்திற்கு அருகில் அமைந்திருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். ஒரு பீடத்தின் நடுவில் நந்தியும், வலதுபுறத்தில் மூஞ்சூறும், இடப்புறம் மயில் வாகனமும் இருக்கிறது. இம்மூன்று வாகனங்களும் தெற்கு நோக்கி இருப்பது மேலும் ஒரு சிறப்பாகும்.
சாக்கோட்டை (கலயநல்லூர்) அமிர்தகலசநாதர் கோவில்
சூரிய பிரபை போன்ற தலை முடியுடன் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி
கும்பகோணம் - நீடாமங்கலம் சாலையில், கும்பகோணத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் சாக்கோட்டை . இறைவனின் திருநாமம் அமிர்தகலசநாதர். இறைவியின் திருநாமம் அமிர்தவல்லி. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான தலம் இது. ஊழிக்காலத்தில் உயிர்களை அடக்கிய கலயம் பிரளயத்தில் மிதந்து வந்து இங்குத் தங்கியதால் கலயநல்லூர் என்று பெயர் வந்ததாக தலவரலாறு கூறுகிறது. கும்பகோணம் தலபுராணத்துடன் தொடர்புடைய இத்தலம் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலின் சப்த ஸ்தானத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இங்குள்ள தட்சிணாமூர்த்தி சற்று வித்தியாசமான தோற்றத்தில் காட்சி தருகிறார். இவர் தனது வலது மேற்கையில் ருத்ராட்ச மாலையும், இடது மேற்கையில் அக்கினியும், வலக்கையில் சின் முத்திரையும், இடக்கையில் சுவடியும் ஏந்தி இருக்கிறார். இடது காலை மடித்து வைத்துக் கோண்டு வலது காலை முயலகன் மீது வைத்தபடி காட்சி தருகிறார். இவரது தலைமுடி சூரிய பிரபை போன்ற அமைப்பில் இருப்பது, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத அரிய காட்சியாகும்.