திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில்
இடுப்பில் குழந்தையை தாங்கிய வடிவில் உள்ள அம்பிகையின் அரிய தோற்றம்
மழலைச் செல்வம் அருளும் தலம்
சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில், சுமார் 15 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத் தலம் திருவெண்காடு. இறைவன் திருநாமம் சுவேதாரண்யேசுவரர். இறைவியின் திருநாமம் பிரம்ம வித்யாம்பிகை, பெரியநாயகி.
திருஞான சம்பந்தர் திருவெண்காட்டின் வட எல்லைக்கு வந்த போது அவருக்கு ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தோன்றின. ஆதலின், இத்தலத்தை மிதித்தற்கஞ்சி 'அம்மா' என்று அழைத்தார். அது கேட்டுப் பெரியநாயகி அம்மை அங்கு தோன்றி திருஞானசம்பந்தரை இடுப்பில் வைத்துக்கொண்டு கோவிலுக்கு அழைத்து வந்தார். சிறு பிள்ளையான சம்பந்தரைத் தன் இடுப்பில் தாங்கி கோவிலுக்கு எடுத்து வந்ததால், இந்த அம்பிகைக்கு பிள்ளை இடுக்கி அம்மன் என்று பெயர். பிள்ளையைத் தம் இடுப்பில் தாங்கிய வடிவில் உள்ள அம்பாளின் சிலை பிரம்ம வித்தியாம்பிகை கோவிலின் மேற்கு உட்பிரகாரத்தில் உள்ளது. சம்பந்தர் அம்பாளைக் கூப்பிட்ட இடத்திலுள்ள குளத்தைக் 'கூப்பிட்டான் குளம்' என்பர். அது இன்று 'கேட்டான் குளம்' என்று வழங்குகிறது. அங்குள்ள விநாயகர், ஞானசம்பந்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
திருஞானசம்பந்தர் தன்னுடைய தேவாரப் பதிகத்தில், இந்த தலத்திற்கு வந்து வழிபட்டால் மழலைச் செல்வம் உண்டாகும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதனால் ஏராளமான பக்தர்கள் இத்தலத்திற்கு வந்து, பிள்ளை இடுக்கி அம்மனுக்கு தொட்டில் கட்டி மழலைச் செல்வம் வேண்டி பிரார்த்தித்துக் கொள்கிறார்கள்.
தகவல், படங்கள் உதவி : திரு. பாபு குருக்கள், ஆலய அர்ச்சகர்
பிள்ளை இடுக்கி அம்மன்