ஆக்கூர் தான்தோன்றீசுவரர் கோவில்

அந்தணர் வேடத்தில் தோன்றி அரசனின் பிரச்சனையை தீர்த்த பொய்யாமொழி பிள்ளையார்

மயிலாடுதுறை – தரங்கம்பாடி சாலையில், மயிலாடுதுறையில் இருந்து கிழக்கே 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் ஆக்கூர். இறைவன் திருநாமம் தான்தோன்றீசுவரர். இறைவியின் திருநாமம் வாள் நெடுங்கன்னி அம்மன்.

இக்கோவில் தெற்கு குளக்கரையில் உள்ள ஒரு சன்னதியில் வீற்றிருக்கும் பிள்ளையார், பொய் சொல்லா பிள்ளையார் (பொய்யாமொழி பிள்ளையார்) என்று அழைக்கப்படுகிறார். இவர் அரசருக்கு அவருடைய பிரச்சனைக்குத் தீர்வு சொல்லும் வகையில் பிராமண வேடத்தில் தோன்றியவர், எனவே இவர் பொய்யாமொழி விநாயகர் என்றும் போற்றப்படுகிறார்.

இத்தலத்தில் கோச்செங்கட்சோழன் தான்தோன்றீசுவரர் கோவில் கட்டத் துவங்கினான். கோவில் பணிகள் நடக்கும் போது, முதலில் கோவிலுக்கான மதில் சுவரை எழுப்பினான். காலையில் கட்டப்பட்ட மதில் சுவர் இரவில் தானாக விழுந்து விடும். இப்படி பலமுறை நடந்தது. கோச்செங்கட்சோழனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. பொல்லாப் பிள்ளையார் அந்தண ரூபத்தில் வந்து மன்னனிடம் என்ன பிரச்னை என்று கேட்கிறார். அதற்கு மன்னன், சிவனுக்கு கோவில் கட்ட வேண்டும், ஆனால் மதில் சுவர் கட்டியவுடன் இடிந்து விழுந்து விடுகிறது என்றான். அதற்கு விநாயகர், நீ இங்குள்ள குளத்தில் மூன்றே முக்கால் நாழிகை மூழ்கி எழுந்து பார். உனக்கு எல்லாம் சரியாகும் என்றார். மன்னனுக்கோ, குளத்தில் மூழ்கினால் மதில் சுவர் எப்படி நிற்கும் என்று சந்தேகம். இதையறிந்த விநாயகர், காசியை விட இந்த குளத்திற்கு வீசம் அதிகம். நீ குளித்து எழுந்து பார் என்றார். அதன்படி கோச்செங்கட்சோழன் குளத்தில் மூழ்கி எழ, மதில் சுவரில் இருந்து கருவறை வரை எல்லாம் சரியாக அமைந்தது.

இப்படி கோச்செங்கட்சோழனுக்கு அருளிய பொல்லாப் பிள்ளையார் நம் அனைவர்களுக்கும் வேண்டியதை வேண்டியபடி தந்தருள்கிறார்.

இந்தக் கோவிலை பற்றிய முந்தைய பதிவுகள்

1. அம்பிகை சுயம்வர பார்வதி மந்திரம் ஜபம் செய்த இடம் (25.04.2025)

https://www.alayathuligal.com/blog/akkur25042025

2. ஆயிரம் அந்தணர்களில் ஒருவராக அன்னதானத்தில் கலந்து கொண்ட சிவபெருமான் (21.04.2025)

கையில் தண்டு ஊன்றிய நிலையில் காட்சியளிக்கும் சிவபெருமானின் அபூர்வ தோற்றம்

https://www.alayathuligal.com/blog/akkur21042025

தகவல், படங்கள் உதவி : திரு. பாஸ்கர் பிள்ளை, ஆக்கூர்

பொல்லாப் பிள்ளையார் சன்னதி

பொல்லாப் பிள்ளையார்

 
Next
Next

திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில்