திருவலம் வில்வ நாதேஸ்வரர் கோவில்
கனி வாங்கிய பிள்ளையார்
ராணிப்பேட்டையில் இருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத்தலம் திருவலம். விநாயகப் பெருமான் சிவபெருமான் பார்வதியை, வலம் வந்து மாங்கனியைப் பெற்றதனால் இவ்வூருக்கு திருவலம் என்ற பெயர் வழங்கப்படுகிறது. விநாயகர் மாங்கனி பெற்ற வரலாற்றை நினைப்பூட்டும் வகையில், துதிக்கையில் மாங்கனியுடன் காட்சி தருகிறார். அதனால், இவரை கனி வாங்கிய பிள்ளையார் என்கின்றனர்.
திருவேதிக்குடி வேதபுரீஸ்வரர் கோவில்
வேதம் கேட்கும் விநாயகர்
தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருவேதிக்குடி. பிரம்மன்(வேதி) வந்து தங்கி சிவபெருமானை வழிபட்டதால் இத்தலம், திருவேதிக்குடி என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமான் தன் நான்கு முகங்களால் நான்கு வேதங்களையும் அருளி செய்ததால்,அவருக்கு வேதபுரீஸ்வரர் என்னும் திருநாமம் ஏற்பட்டது. இத்தலத்து விநாயகர், இடது காலை உயர்த்திக் கொண்டு, உள்ளே வேதபுரீசுவரரால் அருளப்படும் நான்கு வேதங்களையும் செவிசாய்த்து கூர்மையாக கேட்டுக் கொண்டிருக்கும் தோரணையில் இருக்கின்றார். அதனால் இவர், வேத விநாயகர் என்பதோடு செவி சாய்த்த விநாயகர் என்றும் அழைக்கப்படுகின்றார்.
சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்
பெண் தோற்றத்தில் காட்சி தரும் விநாயகர்
பெண் தோற்றத்தில் காணப்படும் விநாயகரை விநாயகி, விக்னேஸ்வரி, கணேசினி, கணேஸ்வரி என்ற பெயர்களில் வழிபடுகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகிலுள்ள, சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்தில், ஒரு தூணில் விநாயகியின் சிற்பமுள்ளது. விநாயகி, அமர்ந்த கோலத்தில் வலக்காலை மடித்து, இடக்காலைத் தொங்கவிட்ட நிலையில் இருக்கின்றார். தலையில் வேலைப்பாடுடன் கூடிய அழகிய மகுடம் விளங்குகிறது. மேற்கைகளில் அங்குச, பாசம் உள்ளன. கீழ்க்கைகள் அபய, வரத ஹஸ்தங்களாக விளங்குகின்றன. கழுத்திற்குக்கீழ் பெண்ணுருவம் கொண்ட இவர், கழுத்தணியும், கால்களில் சிலம்புகளும், இடையில் புடவை அணிந்தும் காட்சி தருகிறார்.
திருவாரூர் சர்க்கரை விநாயகர் கோவில்
மாமன்னன் ராஜராஜ சோழனும், அவரது சந்ததியனரும் வழிபட்ட விநாயகர்
திருவாரூர் கீழ வீதியில் அமைந்துள்ளது சர்க்கரை விநாயகர் கோவில். இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இந்த விநாயகர் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள் பாலிக்கிறார்.
தஞ்சையை ஆட்சி புரிந்த ராஜராஜ சோழன், இங்குள்ள விநாயகரை வழிபட்ட பிறகு தான் எல்லா காரியத்தையும் தொடங்கியுள்ளார். அவர் குடும்பத்திலும், அவரது வழியினர் குடும்பத்திலும்
குதூகலம் தழைத்தோங்கியது. முற்காலத்தில் இவரை வழிபட்டு பலன் அடைந்தவர்கள், இவருக்கு வெல்லம் படைத்து வழிபடலானார்கள். அதனால் இவருக்கு சர்க்கரை விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது. இவரை வணங்கிய மன்னனும், அவரது சந்ததியும் வெற்றி அடைந்ததால், பின்னாளில் சந்ததிகளை காக்கும் சர்க்கரை விநாயகர் என்று அழைக்கப்பட்டார். கோவில் மகா மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்து, விநாயகப் பெருமானை உற்று நோக்கினால் அவர் நம்மிடம் பேசுவது போன்று தெரியும்.
திருமண தடை நீங்கவும், புத்திர பாக்கியம் கிடைக்கவும், சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்கவும், நினைத்த காரியம் கை கூடவும் பக்தர்கள் இந்தக் கோவிலில் வேண்டிக் கொள்கின்றனர்.
மதுரை மொட்டை விநாயகர் கோவில்
வியாபார விநாயகர்
மதுரை கீழ மாசி வீதியில் அமைந்திருக்கும் மொட்டை விநாயகர் கோவில் மிகவும் பிரபலமானது. பாண்டிய மன்னர்கள் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டது. மதுரையின் மையப்பகுதியில், வியாபாரம் சிறந்து விளங்கும் இடத்தில், இந்த பிள்ளையார் அமைந்துள்ளதால், இவரை வியாபார விநாயகர் என்றும் அழைக்கின்றனர்.
ஒரு சமயம், அந்நியர் படையெடுப்பின்போது, மீனாட்சியம்மன் ஆலயத்தை சேதப்படுத்த திட்டமிட்டனராம்.அப்போது, மொட்டை விநாயகர் கோயிலுக்கு சென்று விட்டு, விபூதி பூசிக்கொண்டு, வியாபாரிகள் தங்கள் கடைகளை திறப்பதைப் பார்த்து கோபமுற்ற அந்நிய தேசத்து மன்னன், பிள்ளையாரின் சிரசை துண்டாக்கி, ஆற்றில் தூக்கி வீசினான்.பிறகு சிவனாரின் பேரருளால் அந்த சிரசு மீண்டும் அதே இடத்துக்கு வந்ததைக்கண்டு ஆடிப்போன அவன், உடனடியாக அங்கிருந்து கிளம்பிச்சென்று விட்டான். அதனால், மதுரை மீனாட்சி அம்மனின் ஆலயத்தையே காப்பாற்றிய விநாயகர் இவர் எனப்போற்றுகின்றனர் பக்தர்கள், புதிதாக வியாபாரத்தில் அடியெடுத்து வைப்பவர்கள், கடை திறப்பவர்கள் இங்கு வந்து மொட்டை விநாயகருக்கு அபிஷேகம் செய்து 108 சிதறுகாய் உடைத்து வேண்டிச் சென்றால், வியாபாரம் செழிக்கும் என்பது ஐதீகம்.
தீவனூர் பொய்யாமொழி பிள்ளையார் கோவில்
லிங்கத்தில் காட்சி தரும் விநாயகர்
திண்டிவனத்திலிருந்து 13 கி.மீ. தொலைவில், செஞ்சி செல்லும் சாலையில் உள்ள தலம் தீவனூர். இங்கு கோயில் கொண்டிருக்கும் பொய்யாமொழி பிள்ளையார் லிங்க ரூபத்தில் காட்சி தருகிறார். அதனால் இவருக்கு கணபதி லிங்கம் என்ற பெயரும் உண்டு. தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற விநாயகர்களில் இவரும் ஒருவர.பல நூறு ஆண்டுகளுக்கு முன், ஆடுமேய்க்கும் சிறுவர்கள் நெல் குத்த கல் தேடிய போது, யானைத்தலை வடிவில் ஒரு கல் கிடைத்தது. அது விநாயகரின் உருவம் போல் தெரியவே, அதை விநாயகராகக் கருதி பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தனர். பால் அபிஷேகம் செய்யும் போது லிங்கத்தில் படிந்திருக்கும் விநாயக வடிவைத் தரிசிக்கலாம். இவருக்கு மூன்று வாகனங்கள் இருக்கின்றன. லிங்க ரூபத்தில் இருப்பதால் நந்தி ஒரு வாகனம், வழக்கமான மூஞ்சூறு இரண்டாவது வாகனமாகவும், யானை தலையர் என்பதால் யானை மூன்றாவது வாகனமாகவும் உள்ளன. விநாயகர் கோயிலுக்கு பின்புறம் ஒன்றோடு ஒன்று இணைந்தபடி, மூன்று விழுதில்லாத ஆலமரங்கள் உள்ளன. இவற்றை பிரம்மா, விஷ்ணு, சிவன் என கூறுகின்றனர். திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இந்த மரங்களைச் சுற்றி வழிபடுகின்றனர். இத்தலத்தோடு தொடர்புடைய அதிசய நிகழ்ச்சிகள் ஏராளம். அவற்றில் சில
கொம்பு முளைத்த தேங்காய்
ஒருசமயம் இக்கோவிலுக்கு வந்து கொண்டிருந்த பக்தர் ஒருவர், மரக்காணத்தில் இருந்த தென்னந்தோப்பில் பொய்யாமொழி பிள்ளையாருக்கு உடைக்க என்று ஒரு தேங்காய் கேட்டிருக்கிறார். அப்போது அங்கிருந்த தோப்புக்காரர்கள் 'பிள்ளையாருக்குத் தேங்காய் கொடுக்காவிட்டால் அவற்றுக்கு என்ன கொம்பா முளைத்துவிடும்' என்று பரிகாசம் செய்து அனுப்பிவிட்டனர். மறுநாளே தோப்பில் இருந்த எல்லாத் தேங்காய்களுக்கும் தும்பிக்கை போன்ற கொம்பு நிஜமாகவே முளைத்துவிட்டதாம். இதனால் பயந்துபோன தோப்பின் சொந்தக்காரர்கள் இந்தப் பிள்ளையாரை வேண்டி வணங்கித் தேங்காய்களை வழிபாட்டுக்குக் கொடுத்தார்களாம். கொம்பு முளைத்த தேங்காய்களில் ஒரு குலை இன்றும் இங்கு கட்டப்பட்டுள்ளது.
மிளகு உளுந்தாகிய அதிசயம்
மிளகு வணிகர் ஒருவர், பொதி மாடுகளின் மீது மிளகு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு இக்கோயிலின் வழியே சந்தைக்குச் சென்றார். அப்போது இந்த கோயில் நிர்வாகிகள் விநாயகருக்குப் பொங்கல் நிவேதனம் செய்வதற்காக அவரிடம் கொஞ்சம் மிளகு கேட்டனர். அதற்கு வணிகர், 'மூட்டையில் உளுந்துதான் இருக்கிறது. என்னிடம் மிளகு இல்லை' என்று பொய் சொல்லிவிட்டுப் போய்விட்டார். அவர் சொன்னபடியே மூட்டைகளை அவிழ்த்துப் பார்த்தால் மிளகுக்கு பதில் உளுந்துதான் இருந்தது. வணிகர் கதறி அழுது விநாயகரிடம் மன்னிப்பு கேட்டதும் மீண்டும் மிளகாகி விட்டது.
திருவேள்விக்குடி கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில்
தன்னைத்தானே சங்கல்பம் செய்து கொண்ட விநாயகர்
மயிலாடுதுறை அருகிலுள்ள திருவேள்விக்குடித் தலத்தில் சங்கல்ப விநாயகர் அருள் புரிகின்றார். ஒரே பீடத்தில் இரண்டு விநாயகர்கள் அருகருகே அமர்ந்து காட்சி கொடுக்கிறார்கள். ஒரு சமயம், பார்வதி தேவி சிவபெருமானப் பிரிந்து தனியாகத் தவம் செய்ய நேரிட்டது. அப்போது விநாயகர் தன்னைப் போலவே ஒரு வடிவத்தை தன்னருகே உருவாக்கி, அந்தத் திருவுருவத்தையே அதாவது தன்னையே சங்கல்பம் செய்து கொண்டு, பிரிந்த தன் பெற்றோர் விரைவில் ஒன்று சேர பிரார்த்தித்தார். அதனால் இவருக்கு சங்கல்ப விநாயகர் என்ற பெயர் வந்தது. மேலும் இவர் ஆதி இரட்டை விநாயகர் என்றும் போற்றப்படுகிறார்.இரட்டை பிள்ளையாருக்கு தேய்பிறை சதுர்த்தியில், அறுகம்புல் மாலை அணிவித்து அர்ச்சித்து வழிபட்டால், செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் தீமைகள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சேரன்மாதேவி மிளகு பிள்ளையார் கோவில்
மழையை வரவழைக்க பிள்ளையாருககுச் செய்யப்படும் மிளகு அபிஷேகம்
திருநெல்வேலியில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சேரன்மாதேவியில் அமைந்துள்ளது மிளகு பிள்ளையார் கோவில்.
திருநெல்வேலி மாவட்டத்தின் நீர் ஆதாரமான தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பல்வேறு அணைக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த அணைக்கட்டுகளில் இருந்து தண்ணீரை கொண்டு செல்ல பல்வேறு கால்வாய்களும் வெட்டப்பட்டு உள்ளன. அவற்றுள் முக்கியமானது கன்னடியன் கால்வாய். இந்த கன்னடியன் கால்வாய் வறண்டு போகும் போது மிளகுப் பிள்ளையாருக்கு மிளகரைத்து அபிஷேகம் செய்தால் மழை பெய்து கால்வாய் நிரம்பும் எஎன்பது ஐதீகம்.
மிளகுப் பிள்ளையாருக்கும் கன்னடியன் கால்வாய்க்கும் உள்ள தொடர்பின் பின்னணியில் ஒரு சுவாரசியமான வரலாறு உள்ளது.
கேரள மன்னனின் முன் ஜென்ம பலன்
முன்னொரு காலத்தில், கேரள மன்னன் ஒருவனுக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டது. எவ்வளவு சிகிச்சை அளித்தும் பலனில்லை. ஒருநாள் மன்னரைக் காண ஒரு ஜோதிடர் வந்தார். ஜோதிடர் மன்னனின் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்து அவனுடைய முன் ஜென்ம பயனால் தான் இந்த வயிற்று வலி உண்டாகி வேதனைப் படுத்துகிறது என்றார். அதற்கு ஜோதிடர் பரிகாரமாக மன்னன் உருவம் போன்ற அமைப்பில் எள்ளு தானியத்தால் ஒரு பொம்மை செய்து அதனை அந்தணர் ஒருவருக்கு தானம் செய்தால் மன்னனுடைய முன் ஜென்ம பலன் அவருக்குச் சென்றுவிடும் என்று கூறினார்.
மன்னனிடமிந்து பொம்மையை தானம் பெற்ற கன்னட பிரம்மச்சாரி
மன்னனும் ஜோதிடர் கூறியபடியே எள்ளு தானியத்தால் தனது உருவ அமைப்பில் ஒரு பொம்மையைச் செய்து அதனை தானம் அளிக்கத் தகுந்த அந்தணரைத் தேடிக் கொண்டிருந்தான். ஆனால் அதனை தானம் பெற்றால் மன்னனுடைய முன் வினைப் பயனால் அவனைச் சேர்ந்த பாவமும் தங்களை சேர்ந்துவிடும் எனப் பயந்து யாரும் தானம் பெற முன் வரவில்லை. இதனால் மன்னன் தன்னிடம் தானம் பெறும் அந்தணருக்குப் பல பொன்னும் பொருளும் நிறைந்த முடிப்பை பரிசாகத் தருவதாக கூறி அறிவிப்பு செய்தான். இந்நிலையில் இது பற்றி அறிந்த கன்னட பிரம்மச்சாரி அந்தணன் ஒருவன், மன்னனை சந்தித்து தான் அந்த பொம்மையை பெற்றுக் கொள்வதாகக் கூறினான். இதனால் மன்னனை பிடித்திருந்த முன் ஜென்ம பாவ வினைகள் நீங்கியது. மன்னனும் தான் அறிவித்த பரிசுகளை கொடுத்தான்.
கன்னட பிரம்மச்சாரி உருவாக்கிய கால்வாய்
பிரம்மசாரியின் கைக்கு வந்தவுடன் அந்த பொம்மை உயிர் பெற்றது. தனக்கு அந்த பிரம்மசாரி செய்திருந்த பூஜையின் பலனில் ஒரு பகுதியைக் கேட்டது. 'அப்படி கொடுத்து விட்டால் வியாதி உன்னை அண்டாது' என்றும் அந்த பொம்மை சொன்னது. இதனைக்கேட்ட அந்த பிரம்மசாரி பொம்மை கேட்டபடி பூஜையின் பலனில் ஒரு பகுதியை கொடுத்து விட்டான்.
ஆனால் தானம் கொடுத்த பின்னர் அவனது மனது துன்பம் அடைந்தது. 'வியாதியால் அவதிப்படுவோம் என்ற பயத்தில், சுயநலம் கருதி தர்மத்துக்கு மாறாக பூஜையின் பலனை தானம் செய்து விட்டோமே' என்று அவன் கலங்கினான். இதற்கு பிராயச்சித்தமாக தனக்கு கிடைத்த மதிப்பு மிக்க பொருட்களை பொது நலன் கருதி செலவழிப்பது என்று அவன் முடிவெடுத்தான்.
பொது மக்களுக்கு என்ன நன்மை செய்யலாம் என யோசனைக் கேட்பதற்காக பொதிகை மலையில் வசித்து வரும் தன் குருவான அகத்திய முனிவரிடம் சென்றான்.
அகத்தியர் அவனிடம், 'தானத்தில் தலை சிறந்தது தண்ணீர் தானம் தான். நீ மலையில் இருந்து திரும்பி செல்லும்போது, வழியில் ஒரு பசுவை காண்பாய். அது போகும் வழிப்படி ஒரு கால்வாய் வெட்டு. பசு சாணம் போடும் இடத்தில் மதகு ஏற்படுத்து. அது கோமியம் பெய்யும் இடங்களில் மறுகால் ஏற்படுத்து. பசு படுக்கும் இடங்களில் ஏரி தோண்டு. ஒரு குறிப்பிட்ட இடத்தில் பசு மறைந்து விடும். அங்கே கால்வாய் பணியை முடித்து மீதி தண்ணீர் அங்கே சேரும்படியாக ஒரு குளம் தோண்டு' என்றார்.
அந்த இளைஞன் பசுவை கண்ட இடம்தான் சேரன்மாதேவி. அகத்திய முனிவரே அந்த பசுவாக மாறி வந்து நின்றதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. பசு சென்ற பாதையில் மதகு, ஏரிகளை அமைத்தான் இளைஞன். கடைசியாக பிராஞ்சேரி என்ற ஊரில் பசு மறைந்து விட்டது. அங்கே மிகப் பெரிய ஏரியை தோண்டினான். இப்போதும் மழை வெள்ள காலங்களில் நீர் நிறைந்து காணப்படும் இந்த ஏரியை பார்த்தால், கடல் போல் காட்சியளிக்கும்.
கன்னடியன் கால்வாய்
அந்த இளைஞனின் பெயர் இன்றுவரை யாருக்கும் தெரியாது. அவனது மொழியின் பெயராலே அந்த கால்வாய்க்கு 'கன்னடியன் கால்வாய்' என்று பெயர் வைத்து விட்டனர்.
பிள்ளையாருககு மிளகு அபிஷேகம்
அந்த இளைஞன் கால்வாய் வெட்டியதோடு நின்று விடவில்லை. அந்த கால்வாயில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வரவேண்டுமே என்று கவலைப் பட்டான். அவன் கவலைப் பட்டது போலவே, ஒரு சமயம் மழை பொய்த்ததால் கால்வாய் காய்ந்து போய் விட்டது.
உடனே அவன் ஒரு விநாயகரை பிரதிஷ்டை செய்து, அவரது உடலில் மிளகை அரைத்துத் தேய்த்து அபிஷேகம் செய்தான். அந்த அபிஷேக நீர், கால்வாய்க்குள் விழும்படி செய்தான். என்ன ஆச்சரியம்! உடனே மழை கொட்டி தீர்த்தது.
தமிழக அரசு கெஜட்டில் மிளகு பிள்ளையார் வழிபாடு
இப்போதும் மழை இல்லாத காலங்களில் சேரன்மாதேவி பகுதி விவசாய சங்கத்தினர் இந்த வழிபாட்டை செய்கின்றனர்.
1916-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தமிழக அரசு கெஜட்டின், 367 வது பக்கத்தில் இந்த மிளகு பிள்ளையார் வழிபாடு பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலக்கடம்பூர் அமிர்தகடேசுவரர் கோவில்
இந்திரனின் ஆணவத்தை போக்கிய விநாயகர்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில், எய்யலூர் சாலையில் அமைந்துள்ள தேவாரத் தலம் மேலக்கடம்பூர். இறைவன் திருநாமம் அமிர்தகடேசுவரர். இறைவி வித்யூஜோதிநாயகி.
தேவர்கள், பாற்கடலில் கிடைத்த அமுதத்தை விநாயகரை வணங்காமல் பருக சென்றதால், விநாயகர் தேவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணி, அமுதகலசத்தை எடுத்து செல்லும்போது ஒரு துளி அமுதம் கடம்பவனமாக இருந்த இந்த ஊரில் விழுந்தது. அந்த இடத்தில் சிவன் சுயம்பு லிங்கமாக உள்ளார். இந்திரனும் தேவர்களும் தங்கள் தவறை உணர்ந்து விநாயகரிடம் மன்னிப்பு கேட்டு அமுதகலசத்தை திரும்பி கேட்டனர். விநாயகர் சிவனிடம் வேண்டும்படி கூறினார். சிவன் இந்திரனுக்கு அமுதகலசத்தை கொடுத்து அமிர்தகடேஸ்வரர் என்ற திருநாமத்துடன் எழுந்தருளி உள்ளார்.
தேவர்களின் தாயான அதிதி, அமுதம் அளித்த சிவனை தினமும் வணங்கி வந்தார். இவர் தினமும் இங்கு வருவதை விரும்பாத இந்திரன் இந்த சிவனை கோயிலோடு இந்திரலோகம் எடுத்து செல்ல விரும்பி கோயிலை தேர் வடிவில் மாற்றி இழுத்து செல்ல முயன்றான். விநாயகர் தன காலால் தேர் சக்கரத்தை மிதித்து கொள்ள, இந்திரனால் ஒரு அடிகூட நகர்த்த முடியவில்லை. இந்திரன் விநாயகரிடம் வழி விடும்படி வேண்ட விநாயகர் இந்திரனிடம் கோடி லிங்ககளை பிரதிஷ்டை செய்தால் தேரை கொண்டு செல்லலாம் என்று கூறினார். இந்திரன் ஆணவத்துடன் லிங்கங்கள் செய்ய அனைத்தும் பின்னப்பட்டன, தவறை உணர்ந்த இந்திரன் அமிர்தகடேஸ்வரரை வேண்ட அவர் ஆயிரம் முறை தன் பெயரை சொல்லி ஒரு லிங்கம் செய்யும்படி பணித்தார். அதன்படி இந்திரன் ருத்ரகோடிஸ்வர லிங்கத்தை உருவாக்கினான். சிவன் அவனுக்கு காட்சி தந்து தான் இங்கேயே இருக்க விரும்புவதால் அதிதிக்கு பதில் இந்திரனே தினமும் வழி படலாம் என கூறினார். இந்திரனும் மன்னிப்பு கேட்டான் . தினமும் இந்திரன் பூஜை செய்வதாக ஐதிகம்.
இந்திரனின் ஆணவத்தை போக்கிய விநாயகர் தனிச் சன்னதியில் அருள் பாலிக்கிறார். இவருக்கு ஆரவார விநாயகர் என்று பெயர். அமிர்த கலசத்தை தூக்கிச் சென்றும், தேர் சக்கரத்தை மிதித்தும் ஆரவாரம் செய்ததால் இவருக்கு இந்த பெயர் வந்தது. இவர் தலையை இடது புறமாக சாய்த்தபடி கோப முகத்துடன் காட்சி தருகிறார். தேர் சக்கரத்தை மிதத்ததின் அடையாளமாக, தேர் போல் அமைந்த இக்கோவிலின் இடது பக்க சக்கரம் பூமியில் பதிந்து காணப்படுகிறது.
காரைக்குடி நூற்றியெட்டு பிள்ளையார் கோவில்
ஒரே கோவிலில், பல கோலங்களில் காட்சிதரும் நூற்றியெட்டு பிள்ளையார்கள்
சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி நகரத்தில் அமைந்துள்ளது நூற்றியெட்டு பிள்ளையார் கோயில். இக்கோவிலில் 108 பிள்ளையார் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 54 பிள்ளையார் விக்ரகங்கள் மேல் வரிசையிலும், மீதி 54 விக்கிரகங்கள் கீழ் வரிசையிலும் அமைந்துள்ளன. இது இந்து சமயக் கோட்பாட்டின்படி 12 ராசிகள் மற்றும் 9 நவகிரகங்களின் (12x9=108) அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. மேல் வரிசையில் உள்ள பிள்ளையார்களின் தும்பிக்கை இடது பக்கம் சுழித்தும், கீழ் வரிசையில் உள்ள பிள்ளையார்களின் தும்பிக்கை வலது பக்கம் சுழித்தும் இருக்கின்றன.
தாமரை மலர் மேல் நிற்கும் பிள்ளையார், வல்லப கணபதி, மகா கணபதி, சித்தி புத்தி விநாயகர், மூஷிக கணபதி, சிம்ம வாகனத்தின் மேல் வீற்றிருக்கும் ஹேரம்ப கணபதி, சங்கு சக்கரம் ஏந்திய விநாயகர், நர்த்தன விநாயகர் ஆகியவை இங்கு எழுந்தருளி இருக்கும் விநாயகரின் சில கோலங்கள் ஆகும். நூற்றியெட்டு பிள்ளையார்களை ஒரு சேர தரிசிக்க முடியும் என்பதால், பல வெளியூர் மக்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றார்கள்.
ஒரு கோவிலில் 108 பிள்ளையாளர்களை ஒரு சேர தரிசிப்பது என்பது ஒரு அரிய காட்சியாகும். இப்படி 108 பிள்ளையார்கள் இங்கே எழுந்தருளி இருப்பதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது..சிவகங்கையை ஆண்ட ராணி ஒருத்தி, தனது பிரார்த்தனை நிறைவேறினால் 108 பிள்ளையார் கோவில்களுக்கு சென்று வழிபடுவதாக வேண்டிக் கொண்டாள். ஆனால் விநாயகர் பிரதான தெய்வமாக இருக்கும் ஒவ்வொரு கோவிலையும் கண்டுபிடித்து வழிபட காலம் அதிகம் பிடிக்கும் என்பதால், இங்கு 108 விநாயகர்களை கொண்ட ஒரு கோவில் கட்டி, அந்த கோவிலில் வழிபட்டு தன்னுடைய பிரார்த்தனையை நிறைவேற்றினாள்.
பிள்ளையார், அவரை வழிபடுவோரின், வாழ்வில் வரக்கூடிய அனைத்து இன்னல்களையும், தீர்க்கவல்லவர் என்று நம்பப்படுவதால், இங்கு உள்ளூர் மக்களும் அதிக அளவில் வருகின்றனர். அதனால், மக்கள் புது முயற்சிகள் எதுவும் எடுப்பதற்கு முன், இங்கு வந்து பிள்ளையாரை பிரார்த்தித்து விட்டு, அதற்குப் பின்பே ஆரம்பிக்கின்றனர். புது முயற்சிகள் ஆரம்பிப்பதற்கு முன் பிள்ளையாரை வழிபட்டால், அம்முயற்சிகள் தடங்கல்கள் ஏதுமின்றி, நல்ல பலனைக் கொடுக்கும் என்று பெரிதும் நம்பப்படுகிறது.
இங்கு பிள்ளையாரை குளிர்விப்பதற்கு, பக்தர்கள், அவருக்கு மிக விருப்பமான லட்டு மற்றும் மோதகம் ஆகியவைகளை காணிக்கையாகப் படைக்கின்றனர்.
மணிமங்கலம் தர்மேசுவரர் கோவில்
நான்கு விநாயகர்கள் ஒரே வரிசையில் அமர்ந்திருக்கும் அரிய காட்சி
நான்கு வேதங்கள் வந்து வழிபட்ட விநாயகர்
சென்னை தாம்பரத்தில் இருந்து 9 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது மணிமங்கலம் தர்மேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் வேதநாயகி. இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
அரிதாக சில சிவன் கோவில்களில், ஒரே சன்னதியில் இரண்டு அல்லது மூன்று விநாயகர்கள் அடுத்தடுத்து இருப்பார்கள். ஆனால் இவ்வூரில் ஒரே சன்னதியில் வரிசையாக நான்கு விநாயகர்களைத் தரிசிக்கலாம். ரிக், யஜுர், சாமம் மற்றும் அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களும், இங்கு விநாயகரை வழிபட்டதாக ஐதீகம். இதன் அடிப்படையில் இக்கோவிலில் இருந்து சற்று தூரத்தில், ஒரே சன்னதியில் நான்கு விநாயகர்கள், அடுத்தடுத்து காட்சி தருகின்றனர். இவர்கள் சதுர் வேத விநாயகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.நான்கு விநாயகருக்கும் பொதுவாக எதிரில் ஒரு யானை வாகனம் இருக்கிறது.
கோவில் பிரகாரத்தில் பின்புறம் இரண்டு திசைகளிலும், இரண்டு விநாயகர்கள் இருக்கின்றனர். இதில் ஒருவருக்கு வெண்ணிற வஸ்திரம், மற்றொருவருக்கு காவி நிறத்தில் வஸ்திரம் அணிவிப்பது தனிச்சிறப்பாகும்.
கோவிலூர் மந்திரபுரீசுவரர் கோவில்
இரண்டு கைகளில் மாவிலைக் கொத்துக்களையும், துதிக்கையில் மாங்கனியையும் ஏந்திய சூதவன விநாயகர்
திருவாரூர் மாவட்டத்திலுள்ள முத்துபேட்டையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் கோவிலூர். இறைவன் திருநாமம் மந்திரபுரீசுவரர், இறைவியின் திருநாமம் பெரிய நாயகி. மாமரம் இத்தல விருட்சமாதலால் இத்தலத்திற்கு சூதவனம் என்ற பெயரும் உண்டு.
கருடன் ஒரு முறை அமுத கலசத்தை எடுத்துக் கொண்டு இத்தலம் மீது வந்து கொண்டிருந்தபோது, அமுதத் துளிகள் சிந்திய இடங்களில் மாமரங்கள் தோன்றின. இங்கே வீற்றிருக்கும் இறைவன் மீது அமிர்தம் சிந்தியதால் அவர் வெண்னம நிறமாக காட்சி தருகிறார்.
சூத வனம் என்றால் மாங்காடு. மாமரங்கள் சூழ்ந்த காட்டில் தோன்றியதால், இங்கேயுள்ள விநாயகருக்கு 'சூதவன விநாயகர்' என்று திருநாமம். இந்த விநாயகர் இரண்டு கைகளில் மாவிலைக் கொத்துக்களையும், துதிக்கையில் மாங்கனியையும் ஏந்தியபடி காட்சி தருகிறார் . இப்படி மாவிலை கொத்துக்களையும், மாங்கனியையும் ஏந்திய விநாயகரை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
ஆக்கூர் தான்தோன்றீசுவரர் கோவில்
அந்தணர் வேடத்தில் தோன்றி அரசனின் பிரச்சனையை தீர்த்த பொய்யாமொழி பிள்ளையார்
மயிலாடுதுறை – தரங்கம்பாடி சாலையில், மயிலாடுதுறையில் இருந்து கிழக்கே 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் ஆக்கூர். இறைவன் திருநாமம் தான்தோன்றீசுவரர். இறைவியின் திருநாமம் வாள் நெடுங்கன்னி அம்மன்.
இக்கோவில் தெற்கு குளக்கரையில் உள்ள ஒரு சன்னதியில் வீற்றிருக்கும் பிள்ளையார், பொய் சொல்லா பிள்ளையார் (பொய்யாமொழி பிள்ளையார்) என்று அழைக்கப்படுகிறார். இவர் அரசருக்கு அவருடைய பிரச்சனைக்குத் தீர்வு சொல்லும் வகையில் பிராமண வேடத்தில் தோன்றியவர், எனவே இவர் பொய்யாமொழி விநாயகர் என்றும் போற்றப்படுகிறார்.
இத்தலத்தில் கோச்செங்கட்சோழன் தான்தோன்றீசுவரர் கோவில் கட்டத் துவங்கினான். கோவில் பணிகள் நடக்கும் போது, முதலில் கோவிலுக்கான மதில் சுவரை எழுப்பினான். காலையில் கட்டப்பட்ட மதில் சுவர் இரவில் தானாக விழுந்து விடும். இப்படி பலமுறை நடந்தது. கோச்செங்கட்சோழனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. பொல்லாப் பிள்ளையார் அந்தண ரூபத்தில் வந்து மன்னனிடம் என்ன பிரச்னை என்று கேட்கிறார். அதற்கு மன்னன், சிவனுக்கு கோவில் கட்ட வேண்டும், ஆனால் மதில் சுவர் கட்டியவுடன் இடிந்து விழுந்து விடுகிறது என்றான். அதற்கு விநாயகர், நீ இங்குள்ள குளத்தில் மூன்றே முக்கால் நாழிகை மூழ்கி எழுந்து பார். உனக்கு எல்லாம் சரியாகும் என்றார். மன்னனுக்கோ, குளத்தில் மூழ்கினால் மதில் சுவர் எப்படி நிற்கும் என்று சந்தேகம். இதையறிந்த விநாயகர், காசியை விட இந்த குளத்திற்கு வீசம் அதிகம். நீ குளித்து எழுந்து பார் என்றார். அதன்படி கோச்செங்கட்சோழன் குளத்தில் மூழ்கி எழ, மதில் சுவரில் இருந்து கருவறை வரை எல்லாம் சரியாக அமைந்தது.
இப்படி கோச்செங்கட்சோழனுக்கு அருளிய பொல்லாப் பிள்ளையார் நம் அனைவர்களுக்கும் வேண்டியதை வேண்டியபடி தந்தருள்கிறார்.
உத்திரமேரூர் பாலசுப்பிரமணியன் கோவில்
மோதக அஸ்த விநாயகர்
ஐந்து கரங்களிலும் (தும்பிக்கை உட்பட) முஷ்டி லட்டுகம் ஏந்திய விநாயகரின் அபூர்வ தோற்றம்
காஞ்சிபுரத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது உத்திரமேரூர் பாலசுப்பிரமணியன் கோவில். இக்கோவில் 1400 வருடங்களுக்கு மேல் பழமையானது. இக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் இறைவன் திருநாமம் ஏகாம்பரநாதர். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி. இத்தலம் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்றது. இங்கு முருகப்பெருமான் பாலசுப்ரமணிய சுவாமி என்ற பெயருடன் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு சுயம்புவாக எழுந்தருளி இருக்கிறார். முருகப்பெருமான் சூரபத்மனை அழிப்பதற்காக வேல் வேண்டி இங்கு சிவபெருமானையும், பார்வதி தேவியையும் நோக்கி தவம் இருந்தார்.
இக்கோவிலில் கன்னிமூலையில் எழுந்தருளி இருக்கும் கணபதிக்கு மோதக அஸ்த விநாயகர் என்று பெயர். இவருக்கு வரசித்தி விநாயகர் என்ற பெயரும் உண்டு. இந்த மோதக அஸ்த விநாயகர் சற்று வித்தியாசமான தோற்றத்தில் காட்சி அளிக்கிறார். பொதுவாக விநாயகர் தனது நான்கு கரங்களில் தந்தம், பாசம், அங்குசம், மோதகம் ஆகியவற்றை ஏந்தி இருப்பார். ஆனால் இத்தலத்தில், மோதக அஸ்த விநாயகர் தனது ஐந்து கரங்களிலும் (தும்பிக்கை உட்பட) முஷ்டி லட்டுகம் (பிடி கொழுக்கட்டை) ஏந்தி உள்ளார். இப்படி ஐந்து கரங்களிலும் மோதகம் ஏந்திய விநாயகரை நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாது.
இவருக்கு எதிரில், வழக்கமான இவருடைய வாகனமான மூஞ்சூறுடன், யானையும் உடன் இருப்பது மேலும் ஒரு தனிச்சிறப்பாகும்.
கங்கைகொண்ட சோழபுரம் கணக்க விநாயகர் கோவில்
அபிஷேகத்தின்போது பச்சை நிறமாக மாறும் விநாயகர்
அரியலூர் மாவட்டத்தில், யுனெஸ்கோ அமைப்பு உலக கலாச்சார சின்னமாக அறிவித்துள்ள கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தின் தென்மேற்கில், ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கணக்க விநாயகர் கோவில்.
கணக்க விநாயகரின் திருமேனி மரகதக் கல்லால் ஆனது. இந்த விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்யும்போது, இவரின் திருமேனி பச்சை நிறமாக மாறுவது தனிச் சிறப்பாகும்.
ராஜேந்திர சோழனுக்கு கோவில் செலவுக் கணக்கை சுட்டிக் காட்டிய விநாயகர்
கங்கை கொண்ட சோழபுரத்தை நிர்மாணம் செய்த போது ராஜேந்திர சோழன், தன் அரண்மனைக்கு முன் பச்சை நிறக் கல்லினால் ஆன விநாயகர் சிலையை நிர்மாணித்து வழிபட்டு வந்தான். இந்த விநாயகரை பக்தர்கள் கனக விநாயகர் என்று போற்றுவர்.
இந்த விநாயகர் இருக்கும் இடத்திலிருந்து வடகிழக்குப் பகுதியில் ராஜேந்திர சோழன் 180 அடி உயரம் கொண்ட பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்டினான். பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்டும் பணியை அமைச்சர் ஒருவர் கவனித்து வந்தார். திருப்பணிகளுக்குத் தேவையான பொன், பொருட்களை அரண்மனைக் கணக்கர் தினமும் அமைச்சரிடம் தருவார்.
அவற்றை அமைச்சர் இந்த கனக விநாயகர் திருமுன் வைத்து வணங்கிய பின்பே ஆலயத் திருப்பணிகளை ஆரம்பிப்பார். இப்படியே இடைவிடாமல் 16 ஆண்டுகள் அமைச்சர் தலைமையில் திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.
ஒரு நாள் ராஜேந்திர சோழன், 'பதினாறு ஆண்டுகளாக கட்டிக்கொண்டிருக்கும் இந்த ஆலயத்திற்கு இதுவரை எவ்வளவு பொருள் செலவாகியிருக்கும் என்று நாளைக் காலையில் கூறுங்கள்' என்று அமைச்சரிடம் கணக்கு சொல்லும்படி கேட்டான். திடீர் என்று மன்னன் கோயில் கட்டும் பணிக்கு ஆன செலவைக் கேட்டதில் ஒன்றும் புரியாமல் தவித்தார் அமைச்சர்.
அவரிடம் சரியான கணக்கு இல்லாததால் அரண்மனை வாசலில் முன் காட்சி தந்த விநாயகரிடம் 'எந்தக் கணக்கை சொல்வது? என்ன சொல்வது?' என்றும், இதற்குத் தகுந்த பதில் கூறுமாறும் விநாயகரிடம் வேண்டினார்.
அன்றிரவு அமைச்சர் கனவில் தோன்றிய விநாயகர், 'கவலை வேண்டாம். எத்து நூல் எட்டு லட்சம் பொன்' என்று சொல்லிவிட்டு மறைந்தார். மறு நாள் காலை அரசவைக்கு வந்து அமைச்சர் ஓலைச்சுவடி கட்டினைப் பிரித்து எத்து நூல் எட்டு லட்சம் பொன் என்று ஓலைச் சுவடியில் எழுதியதை கணக்காகச் சொன்னார்.
'ஓ! எத்து நூல் எட்டு லட்சம் பொன் ஆனதா? கோயில் கட்டுவதற்கு, சரியான அளவு பார்ப்பதற்கு மட்டும் வாங்கிய நூல், அதாவது எத்து நூல் மட்டுமே எட்டு லட்சம் பொன் என்றால், கோயில் மிகவும் சிறந்த முறையில்தான் உருவாகிறது' என்று மகிழ்ந்தான் சோழன். 'அமைச்சரே, எத்து நூல் மட்டும் எட்டு லட்சம் பொன் என்று எப்படி கணக்கிட்டீர்கள்' என்று தன் சந்தேகத்துக்கு பதில் கேட்டான்.
அமைச்சர் உண்மையை சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டார். 'மன்னா! உண்மையில் கோயில் கட்டும் பணியின் கணக்கை என்னால் சரியாகப் பராமரிக்க முடியவில்லை. கோயில் கட்டும் பணிக்கு காசாளரிடம் பொருள் வாங்கியதும் அந்தப் பொற்காசுகளை அரண்மனை வாசல் முன் அருள்புரியும் விநாயகர் முன் சமர்பித்து வணங்கிய பின் எடுத்துச் சென்று பணிகளை கவனிப்பேன்.
தாங்கள் கணக்கைக் கேட்டதும் அரண்மனை வாயிலில் அருள்புரியும் நமது கனக விநாயகரை வேண்டினேன். அவர்தான் நேற்று இரவு என் கனவில், எத்து நூல் எட்டு லட்சம் பொன் என்று கணக்கு சொன்னார்' என்றார். அமைச்சர் உண்மையை சொன்னதும் மன்னருக்கு மகிழ்ச்சி. விநாயகப் பெருமான் சொன்னதால் கணக்கு சரியாகத்தான் இருக்கும் என்று விநாயகருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடுகள் செய்தான்.
அன்றிலிருந்து இந்தக் கனக விநாயகர், கணக்கு விநாயகர் என்று அழைக்கப்பட்டார். மேலும் இந்த அற்புத விநாயகரை பிற்காலத்தில் எவரேனும் வேறு இடத்திற்கு மாற்றிவிடக்கூடாது என்று நினைத்த மன்னன், 4 அடி உயரம், 3 அடி அகலமுடைய இந்த விநாயகரின் சன்னிதி முன் மிகச்சிறிய நுழைவு வாசலைக் கட்டினான்.
கோயிலை இடித்து அகற்றினால்தான் இந்த சிலையை அகற்ற முடியும். அந்நியர் படையெடுப்பு நடந்தபோது, பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கும் இந்த கனக விநாயகர் ஆலயத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதற்கு இந்த கனக விநாயகரின் அருளே காரணமாகும்.
எத்து நூல்
அது என்ன எத்து நூல்? எத்து நூல் என்பது மரத்திலும், சுவரிலும் வளைவு வராமல் இருக்க, நேராக கட்டுமானப்பணி திகழ்வதற்காகப் பயன்படுத்தும் நூலை எத்து நூல் என்பார்கள். எத்து நூல் எண்பது லட்சம் பொன் என்றால் கல், மரம், மணல், சுண்ணாம்பு எவ்வளவு வாங்கப்பட்டிருக்கும் என்று அரசரையே யோசிக்க வைக்கும் கணக்கை சொன்னதால் இந்த பிள்ளையார் கணக்குப் பிள்ளையார் ஆனார்.
புதன் தோஷ நிவர்த்தி தலம்
நவக்கிரகங்களில் புதனுக்கு உரிய ரத்தினமாக மரகதம் கருதப்படுகிறது. ஞான காரக கேதுவின் அதிதேவதையான விநாயகர் இங்கு மரகத மூரத்தியாக விளங்குவதால், புதனால் ஏற்படும் தோஷங்களை நீக்குபவராக விளங்குகிறார்.
புதிதாக ஆலயம் கட்டும் முயற்சியில் ஈடுபடுவோர், ஏற்கனவே உள்ள ஆலயத்தை புதுப்பிக்க நினைப்போர், சொந்தமாக வீடு மற்றும் கட்டிடம் கட்டுபவர்கள் புதிதாக வணிகம் தொடங்குவோர், ஏற்கனவே செய்துவரும் வணிகத்தில் சரிவை சந்திப்பவர்கள், கல்வியில் மேன்மை பெற விரும்புபவர்கள், இந்த விநாயகரை வழிபட்டு பலன் பெறலாம்.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில்
விநாயகர் சதுர்த்தி திருவிழா
ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே விநாயகருக்கு செய்யப்படும் சந்தனகாப்பு அலங்காரம்
முக்குறுணி கொழுக்கட்டை படையல்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்கோவில் . இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா, வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றது.
பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் ஒன்பதாம் நாள் தேர் திருவிழா நடைபெறுகின்றது. 10-ஆம் நாள் விநாயகர் சதுர்த்தி அன்று கற்பக விநாயகருக்கு ராட்சதக் கொழுக்கட்டை
படைக்கப்படுகின்றது. விழா நாட்களில் தினமும் காலையில் கேடகத்திலும், மாலையில் சிம்மம், பூதம், கமலம், ரிஷபம், மயில், குதிரை உள்ளிட்ட வாகனங்களிலும் விநாயகர் எழுந்தருளி, வீதியுலா நடைபெறும்.
ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே செய்யப்படும் சந்தனகாப்பு அலங்காரம்
விநாயகருக்கு தேர்த்திருவிழா நடைபெறும் ஒரு சில கோவில்களில் பிள்ளையார்பட்டியும் ஒன்று. விநாயகருக்கும், சண்டிகேசுவரருக்குமாக இரண்டு தேர்கள் இழுக்கப்படும்
பிள்ளையார் தேரில் இரண்டு வடங்களில் ஒன்றை பெண்களும், மற்றொரு வடத்தை ஆண்களும் இழுத்துச் செய்வார்கள். சண்டிகேசுவரருக்கான தேரை பெண்களும் குழந்தைகளும் மட்டுமே இழுத்துச் செல்வார்கள்.
தேரோடும் வீதியில் வேண்டுதல் நிமித்தமாக பக்தர்கள் அங்கப் பிரதட்சணம் செய்வார்கள். தேரோட்டம் நடைபெறும் அதே நேரத்தில் மூலவர் கற்பக விநாயகருக்கு சுமார் 80 கிலோ சந்தனத்தால் காப்பு சாத்தப்படும்.
ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே இந்த சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுவதால், அக்காட்சியை காண பக்தர்கள் கூட்டம் அதிகமிருக்கும். மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை சந்தனகாப்பு அலங்கார தரிசனம் நிகழ்ச்சி நடைபெறும்.
முக்குறுணி கொழுக்கட்டை படையல்
விநாயகர் சதுர்த்தியன்று உச்சிகால பூஜையின் போது விநாயகருக்கு முக்குறுணி அரிசியால் செய்யப்பட்ட பெரிய அளவிலான ராட்சத கொழுக்கட்டை தயாரித்து, நைவேத்யம் செய்வார்கள்.
18 படி அரிசியை மாவாக்கி, எள் 2 படி, கடலைப்பருப்பு 6 படி, தேங்காய் 50, பசுநெய் 1 படி, ஏலம் 100 கிராம், வெல்லம் 40 கிலோ ஆகியவற்றை சேர்த்து ஒரே கலவையாக்கி, உருண்டை சேர்த்து அதனை துணியால் கட்டி, மடப்பள்ளியில் அன்னக் கூடையில் வைப்பார்கள்.
அன்னக் கூடையில் வைத்து அந்தப் பெரிய உருண்டையை கொதிக்கும் தண்ணீர் உள்ள அண்டாவின் நடுவே தொங்கவிட்டுப் பல மணி நேரம் தொடர்ச்சியாக வேகவைப்பார்கள்.
பின்னர் இந்த வேக வைத்த கொழுக்கட்டையை, உலக்கை போன்ற கம்பில் கட்டி பலர் சேர்ந்து காவடி போல தூக்கி வந்து, மூலவருக்கு உச்சிகால பூஜையில் நிவேதனம் செய்வார்கள். மறுநாள் கொழுக்கட்டை சூடு ஆறிய பின்னர், நகரத்தார். ஊரார்கள் மற்றும் பணியாளர்களுக்கு பிரித்து பிரசாதமாகக் கொடுப்பர்கள்.
திருச்செந்தூர் தூண்டுகை விநாயகர் கோவில்
பக்தர்களுக்கு செந்தில் வேலவன் இருக்கும் இடத்தை காட்டும் தூண்டுகை விநாயகர்
முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடு திருச்செந்தூர் ஆகும். திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்லும் பாதையின் தொடக்கத்தில் தூண்டுகை விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலிலிருந்து முருகன் கோவில் இருநூறு மீட்டர் தொலைவில் உள்ளது.
இவ்விநாயகப் பெருமான் தம் தம்பியாகிய செந்தில் வேலவன் இருக்கும் இடத்தை பக்தர்களுக்குத் தூண்டிக் காண்பிக்கும் வகையில் எழுந்தருளியுள்ளதால் இப்பெயர் பெற்று விளங்குகின்றார். திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்கள் அனைவரும் முதலில் தூண்டுகை விநாயகரை வணங்கி தேங்காய் உடைத்து விட்டு, பின்பு முருகனை தரிசிப்பது என்பது வழக்கமாக உள்ளது. முருகனுக்கு பால்குடம் மற்றும் காவடி எடுக்கும் பக்தர்கள் தூண்டுகை விநாயகர் கோயிலில் இருந்துதான் பால்குடம் மற்றும் காவடி எடுத்து வருகின்றனர்.
திருச்செந்தூர் முருகன் கோவில் ராஜகோபுரம் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்தபோது, கட்டுமானத் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத அளவிற்கு நிதி தட்டுப்பாடு இருந்தது. எனவே கட்டுமானத் தொழிலாளர்களுக்கு, திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி பிரசாதத்தை பன்னீர் இலைகளில் வைத்து சம்பளமாக கொடுத்தனர். வேலை நாளின் முடிவில் தூண்டுகை விநாயகரிடம் பிரார்த்தனை செய்த பிறகு, தொழிலாளர்கள் பன்னீர் இலை விபூதி பொட்டலத்தைத் திறந்து பார்த்தால், அதில் இருக்கும் விபூதியானது அன்றைய தினம் அவர்கள் செய்த வேலைக்கு ஏற்ப தங்க நாணயங்களாக மாறி இருக்கும் அதிசயம் நிகழ்ந்தது.
நல்லிசேரி ஜம்புநாத சுவாமி கோவில்
இரட்டை விநாயகர்கள் எழுந்தருளியுள்ள தலம்
இடையூறுகளை ஏற்படுத்தும் நிக்கிரக விநாயகரும், துன்பங்களை போக்கும் அனுகிரக விநாயகரும் அருகருகே இருக்கும் அரிய காட்சி
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நல்லிசேரி கிராமம். இத்தலத்து இறைவன் ஜம்புநாத சுவாமி. இறைவியின் திருநாமம் அலங்கார வல்லி. சப்த கன்னியரில் வைஷ்ணவி தேவி வழிபட்ட தலம் இது. ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இக்கோவில். ஒரு காலத்தில் ஊரைச் சுற்றிலும் வயல்கள், வாய்க்கால்கள் நிறைந்திருந்தன. ஊரைச் சுற்றிய அனைத்துப் பகுதி அறுவடை நெல்லும் இங்கு கொண்டுவந்து குவித்து வைக்கப்பட்டு இருந்துள்ளது. அதனால் இந்த ஊருக்கு நெல்லுச்சேரி என்ற பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில், அதுவே நல்லிச்சேரி என்று மருவியது.
கோவிலின் பிரதான தெற்கு வாசலில் உள்ளே நுழைந்ததும் நமக்கு இரட்டை விநாயகர்கள் காட்சி தருகிறார்கள். ஒருவர் நிக்கிரக விநாயகர், மற்றொருவர் அனுகிரக விநாயகர். நிக்கிரக விநாயகர் நமக்கு இடையூறுகளை, கஷ்டங்களை ஏற்படுத்தித் தருபவர். அனுகிரக விநாயகர் நம்முடைய துன்பங்களை, துயரங்களை நீக்குபவர். அதனால் இங்கு வரும் பக்தர்கள் மத்தியில் இந்த இரட்டை விநாயகருக்கு அதிக மதிப்பு உள்ளது. இனிமேல் எந்தக் கஷ்டத்தையும் தந்துவிடாதே என்று நிக்கரக விநாயகரிடமும், இதுவரை தந்துவரும் கஷ்டங்களைப் போக்கிவிடு என்று அனுக்கிரக விநாயகரிடமும் தோப்புக் கரணம் போட்டு பக்தர்கள் வேண்டிக் கொள்கிறார்கள்.
நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வரர் கோவில்
நாக தோஷம் போக்கும் நாகாபரண விநாயகர்
நாகப்பட்டினத்தில் உள்ள காயாரோகணேஸ்வரர் கோவிலின் நுழைவாசலில், நாகாபரண விநாயகர் தனிச் சன்னதி கொண்டு அருள் பாலிக்கிறார். ஆலயத்தின் முகப்பில் வீற்றிருக்கும் இந்த விநாயகர், உடலில் நாகத்தை ஆபரணமாக சூடி, தலைக்கு மேலே ஐந்து தலை நாகம் குடை பிடித்தபடி இருக்க அதன் கீழே காட்சி தருகிறார். இவர் நாகத்தையே தன்மார்பினில் பூணூலாகவும், இடையில் கடி சூத்திரமாகவும் அணிந்திருக்கிறார். இதன் காரணமாகவே இந்த விநாயகருக்கு, 'நாகாபரண விநாயகர்' என்று பெயர் வந்தது.
சர்ப்ப ராஜன் தனக்கிருந்த தோஷத்தை நிவர்த்தி செய்ய இத்தலத்து இறைவனை வழிபட வந்தபோது,முதலில் இந்த நாகாபரண பிள்ளையாரை பிரதிஷ்டை செய்து அவருக்கு பூஜை செய்தான். பின்னர் காயாரோகணரை வழிபட்டு தோஷ நிவர்த்தி அடைந்தான்.
சர்ப்ப ராஜனே பிரதிஷ்டை செய்து வணங்கிய விநாயகர் இவர் என்பதால், ராகு-கேது சம்பந்தப்பட்ட தோஷங்கள் அனைத்தும் இவரை வழிபடுவதால் விலகும். கால சர்ப்ப தோஷம், நாகதோஷம், களத்திர சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இவருக்கு, ராகு காலத்தில் பாலபிஷேகம் செய்வித்து வேண்டிக்கொண்டால், அந்த தோஷங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். ராகு- கேது பெயர்ச்சியின்போது இவருக்கு விசேஷ பூஜைகளும் நடக்கிறது.
சாத்தூர் வன்னி விநாயகர் கோவில்
வன்னிமரத்தினை மேற்கூரையாகக் கொண்டு இருக்கும் விநாயகர்
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற தலம்
சாத்தூர்-கன்னியாகுமரி நெஞ்சலைச்சாலையில், சாத்தூரில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது வன்னிவிநாயகர் கோவில். 400 ஆண்டுகள் பழமையானது இக்கோவில். இருக்கன்குடி மாரியம்மன் கோவில் அடுத்து ஸ்ரீ வன்னி விநாயகர் கோவில் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற தலம் ஆகும்.
வன்னிமரத்தினை மேற்கூரையாக கொண்டு விநாயகர் இங்கு எழுந்தருளி இருக்கிறார்.பஞ்சபாண்டவர்கள் வனவாசம் மேற்க் கொண்ட போது தங்கள் ஆயுதம் மற்றும் கவச உடைகளை வன்னிமரத்தின் பொந்தில் பாதுகாப்பாக வைத்து விட்டு, வன வாசம் காலம் முடிந்த பின்னர் அவற்றை எடுத்து போரிட, வெற்றி பெற்றதாக புராணம் கூறுகிறது.
வன்னி என்றால் வெற்றி என பொருள். வன்னிமரம் வலம் வந்து வேண்டிக்கொண்டால் நினைத்த காரியம் வெற்றிபெறும், திருமணத்தடை நீங்கும், குழந்தைபேறு கிடைக்கும், வியாபாரம் செழிக்கும்,நவக்கிரகதோஷம் நீங்கி வளம் பெருகி, நலம் உண்டாகும். இதன் இலை, காய், சிறிய கிளையை பயணத்தின் விபத்து ஏற்படாமல் காக்கும் கவசமாக இருக்கும் என்றும் கிராம பகுதியில் நம்பிக்கை உள்ளது.நினைத்த காரியத்தை வெற்றிகரமாக முடித்து வைப்பதால் ஏராளமான பக்தர்கள் இந்த விநாயகரை வழிபட்டு செல்கின்றனர். இருக்கன்குடி மாரியம்மன் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் தவறாமல் இங்கு வந்து தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். மாதம் தோறும் வரும் சங்கடஹரசதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, தை முதல் நாள், ஆங்கில புத்தாண்டு தினங்களில் பக்தர்கள் அலைஅலையாக வந்து தரிசனம் செய்வர்.