
புஞ்சை (திருநனிபள்ளி) நற்றுணையப்பர் கோவில்
அகத்திய முனிவரின் கமண்டலத்தை கவிழ்த்த விநாயகரின் தோஷத்தை போக்கிய தேவார தலம்
மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் புஞ்சை(திருநனிபள்ளி) நற்றுணையப்பர் கோவில். இத்தலத்தில் மலையான் மடந்தை மற்றும் பர்வத புத்திரி என்ற இரண்டு அம்பிகைகள் அருள் பாலிக்கின்றனர். விநாயகர், அகத்தியர் இருவருக்குமே சிவபெருமான் தனது திருமண கோலத்தை காட்டியருளிய தலம் திருநனிபள்ளி.
புராணத்தின்படி, ஒரு காலகட்டத்தில் நாட்டில் பஞ்சத்தால் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். அகத்திய முனிவர் தனது கமண்டலத்தில் புனித நீர் கொண்டு வந்தார். அகத்திய முனிவரின் கமண்டலத்தில் இருந்த நீரை விநாயகர் காக உருவம் கொண்டு கவிழ்த்ததால் காவிரி நதி தோன்றியது. இந்த நீர் அகத்தியரின் கமண்டலத்தில் இருந்து வழிந்து ஓடி காவிரி நதியை சுமந்து, நிலங்களை வளப்படுத்தியது. கமண்டலத்தில் இருந்த புனித நீரை வீணாக்கியதால், அகத்திய மனித முனிவர் கோபமடைந்து விநாயகரை காகமாகவே இருக்க சபித்தார். அகத்தியரின் சாபத்திலிருந்து விடுபட விநாயகர் இந்தக் கோவிலுக்கு வந்து கோவில் குளத்தில் நீராடினார். குளத்தில் நீராடி எழுந்தவுடன் காக்கை வடிவில் இருந்த விநாயகரின் நிறம், பொன்னிறமாக மாறியது. எனவே இந்த இடம் பொன்செய் (பொன் - தங்கம், சேய் - மாற்றம்)என்று பெயர் பெற்றது. இப்பெயரே பின்னர் புஞ்சை என்று ஆனது. பொன்னிற காக்கை வடிவில் இருந்த விநாயகர், இத்தல இறைவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றார்.

திருச்செந்தூர் தூண்டுகை விநாயகர் கோவில்
பக்தர்களுக்கு செந்தில் வேலவன் இருக்கும் இடத்தை காட்டும் தூண்டுகை விநாயகர்
முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடு திருச்செந்தூர் ஆகும். திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்லும் பாதையின் தொடக்கத்தில் தூண்டுகை விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலிலிருந்து முருகன் கோவில் இருநூறு மீட்டர் தொலைவில் உள்ளது.
இவ்விநாயகப் பெருமான் தம் தம்பியாகிய செந்தில் வேலவன் இருக்கும் இடத்தை பக்தர்களுக்குத் தூண்டிக் காண்பிக்கும் வகையில் எழுந்தருளியுள்ளதால் இப்பெயர் பெற்று விளங்குகின்றார். திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்கள் அனைவரும் முதலில் தூண்டுகை விநாயகரை வணங்கி தேங்காய் உடைத்து விட்டு, பின்பு முருகனை தரிசிப்பது என்பது வழக்கமாக உள்ளது. முருகனுக்கு பால்குடம் மற்றும் காவடி எடுக்கும் பக்தர்கள் தூண்டுகை விநாயகர் கோயிலில் இருந்துதான் பால்குடம் மற்றும் காவடி எடுத்து வருகின்றனர்.
திருச்செந்தூர் முருகன் கோவில் ராஜகோபுரம் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்தபோது, கட்டுமானத் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத அளவிற்கு நிதி தட்டுப்பாடு இருந்தது. எனவே கட்டுமானத் தொழிலாளர்களுக்கு, திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி பிரசாதத்தை பன்னீர் இலைகளில் வைத்து சம்பளமாக கொடுத்தனர். வேலை நாளின் முடிவில் தூண்டுகை விநாயகரிடம் பிரார்த்தனை செய்த பிறகு, தொழிலாளர்கள் பன்னீர் இலை விபூதி பொட்டலத்தைத் திறந்து பார்த்தால், அதில் இருக்கும் விபூதியானது அன்றைய தினம் அவர்கள் செய்த வேலைக்கு ஏற்ப தங்க நாணயங்களாக மாறி இருக்கும் அதிசயம் நிகழ்ந்தது.

மும்பை சித்தி விநாயகர் கோவில்
நெற்றியில் கண் உள்ள விசித்திர விநாயகர்
மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையின் பிரபாதேவி பகுதியில் அமைந்துள்ளது சித்தி விநாயகர் கோவில். இக்கோவில் 1801-ம் ஆண்டு நிறுவப்பட்டது. சித்தி விநாயகர் என்றால் கேட்டதை, வேண்டியதை அப்படியே அருளும் விநாயகர் என்பது பொருள். மும்பை சுற்றுலாவின் தவிர்க்க முடியாத ஒரு இடம் சித்தி விநாயகர் கோவில்.
இந்த கோவிலில் உள்ள சித்தி விநாயகர் ஒற்றை கருங்கல்லால் ஆனவர். அவர் 2 அடி 6 அங்குல உயரமும், 2 அடி அகலமும் கொண்டவர். மற்ற விநாயகர் கோவிலில் உள்ளது போன்று இல்லாமல், இந்த சித்தி விநாயகர், தனது தும்பிக்கையை இடது பக்கம் வைத்திருப்பதற்கு பதிலாக, வலது பக்கம் வைத்திருப்பது மிகவும் சிறப்பு. இந்த விநாயகரின் வலது கையில் தாமரையும், இடது கையில் கோடரியும் தாங்கி இருக்கின்றார். கீழே உள்ள இடது கையில் ஒரு கிண்ணம் நிறைய மோதகம் உள்ளது. வலது கீழ் கையில் ஜெப மாலை வைத்துள்ளார். விநாயகர் பூணூலை ஒத்த, ஒரு பாம்பு உருவம் பூணல் போன்று பொறிக்கப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் விட விநாயகரின் நெற்றியில் கண் உள்ளது மிகவும் விசித்திரமாக பார்க்கப்படுகின்றது. சித்தி விநாயகரின் காலடியில் பளிங்கால் ஆன இரண்டு தேவியர் உள்ளனர். விநாயகரின் இருபுறமும் சித்தி மற்றும் ரித்தி(புத்தி) என்ற இரு பெண் தெய்வங்கள் உள்ளன. இவர்கள் விநாயகரின் பின் பகுதியிலிருந்து முளைத்து இருப்பது போன்றும், வளைந்து முன்பகுதியில் காட்சியளிக்கும் வண்ணம் விக்கிரகம் அமைந்துள்ளது. இரு பெண் தெய்வங்களுடன் காட்சி அளிப்பதால் இந்த விநாயகர் சித்தி விநாயகர் என அழைக்கப்படுகின்றார். இவரை மராட்டியில் நவசாக கணப்தி, நவச பவனார கணபதி என அழைக்கின்றனர்.
இக்கோவில் மிக நவீன பாணியில் கட்டப்பட்டுள்ளது. தூரத்தில் இருந்தாலும் கோவிலின் கோபுரம் தெரியும் வகையில், மிக உயரமாக, 5 அடுக்கு கட்டிடமாக கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில் உள்ள மடப்பள்ளியில் தயாரிக்கப்படும் பிரசாதம், பிரத்தியேக லிஃப்ட் மூலம் கருவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அர்ச்சகர்களால் கணபதிக்கு படைக்கப்படுகின்றது.
சித்தி விநாயகர் கோவிலின் மிக முக்கியமான நாள் செவ்வாய்க் கிழமை. செவ்வாய்க்கிழமைகளில் இக்கோவிலில் கூட்டம் அலை மோதும். செவ்வாய்க்கிழமைகளில் அதிகாலை 3:30 மணிக்கு கோவில் நடை திறந்து விடுவார்கள். அடுத்த நாள் புதன்கிழமை அதிகாலை 12.30 மணி வரை நடை திறந்திருக்கும். ஒரு வருடத்தில் இரண்டு முறை மட்டுமே செவ்வாய் கிழமைகளில் சங்கடஹர சதுர்த்தி வரும். இதை அங்காரக சதுர்த்தி என்பர். அந்த நாளில் விநாயகரை தரிசிக்க லட்சக்கணக்கில் பக்தர்கள் கூட்டம் குவிவது வழக்கம்.
பிரார்த்தனை
குழந்தை வரம் தரும் சக்தி வாய்ந்தவராக இந்த சித்தி விநாயகர் திகழ்கின்றார். வேண்டியது நிறைவேறினால், கோயிலுக்கு வந்து விளக்கேற்றி, எருக்கம்பூ, இலை மாலையை அணிவித்து பிரார்த்தனை செய்கிறார்கள். இந்தக் கோவிலுக்கு ஒரு முறை சென்று வந்தால் பணக்காரராக மாறிவிடுவார்கள் என்று நம்புகிறார்கள். இந்தியாவின் மிக பணக்கார கோவில்களில் இந்த கோவிலும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.