கோவிலூர் மந்திரபுரீசுவரர் கோவில்
இரண்டு கைகளில் மாவிலைக் கொத்துக்களையும், துதிக்கையில் மாங்கனியையும் ஏந்திய சூதவன விநாயகர்
திருவாரூர் மாவட்டத்திலுள்ள முத்துபேட்டையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் கோவிலூர். இறைவன் திருநாமம் மந்திரபுரீசுவரர், இறைவியின் திருநாமம் பெரிய நாயகி. மாமரம் இத்தல விருட்சமாதலால் இத்தலத்திற்கு சூதவனம் என்ற பெயரும் உண்டு.
கருடன் ஒரு முறை அமுத கலசத்தை எடுத்துக் கொண்டு இத்தலம் மீது வந்து கொண்டிருந்தபோது, அமுதத் துளிகள் சிந்திய இடங்களில் மாமரங்கள் தோன்றின. இங்கே வீற்றிருக்கும் இறைவன் மீது அமிர்தம் சிந்தியதால் அவர் வெண்னம நிறமாக காட்சி தருகிறார்.
சூத வனம் என்றால் மாங்காடு. மாமரங்கள் சூழ்ந்த காட்டில் தோன்றியதால், இங்கேயுள்ள விநாயகருக்கு 'சூதவன விநாயகர்' என்று திருநாமம். இந்த விநாயகர் இரண்டு கைகளில் மாவிலைக் கொத்துக்களையும், துதிக்கையில் மாங்கனியையும் ஏந்தியபடி காட்சி தருகிறார் . இப்படி மாவிலை கொத்துக்களையும், மாங்கனியையும் ஏந்திய விநாயகரை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
ஆக்கூர் தான்தோன்றீசுவரர் கோவில்
அந்தணர் வேடத்தில் தோன்றி அரசனின் பிரச்சனையை தீர்த்த பொய்யாமொழி பிள்ளையார்
மயிலாடுதுறை – தரங்கம்பாடி சாலையில், மயிலாடுதுறையில் இருந்து கிழக்கே 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் ஆக்கூர். இறைவன் திருநாமம் தான்தோன்றீசுவரர். இறைவியின் திருநாமம் வாள் நெடுங்கன்னி அம்மன்.
இக்கோவில் தெற்கு குளக்கரையில் உள்ள ஒரு சன்னதியில் வீற்றிருக்கும் பிள்ளையார், பொய் சொல்லா பிள்ளையார் (பொய்யாமொழி பிள்ளையார்) என்று அழைக்கப்படுகிறார். இவர் அரசருக்கு அவருடைய பிரச்சனைக்குத் தீர்வு சொல்லும் வகையில் பிராமண வேடத்தில் தோன்றியவர், எனவே இவர் பொய்யாமொழி விநாயகர் என்றும் போற்றப்படுகிறார்.
இத்தலத்தில் கோச்செங்கட்சோழன் தான்தோன்றீசுவரர் கோவில் கட்டத் துவங்கினான். கோவில் பணிகள் நடக்கும் போது, முதலில் கோவிலுக்கான மதில் சுவரை எழுப்பினான். காலையில் கட்டப்பட்ட மதில் சுவர் இரவில் தானாக விழுந்து விடும். இப்படி பலமுறை நடந்தது. கோச்செங்கட்சோழனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. பொல்லாப் பிள்ளையார் அந்தண ரூபத்தில் வந்து மன்னனிடம் என்ன பிரச்னை என்று கேட்கிறார். அதற்கு மன்னன், சிவனுக்கு கோவில் கட்ட வேண்டும், ஆனால் மதில் சுவர் கட்டியவுடன் இடிந்து விழுந்து விடுகிறது என்றான். அதற்கு விநாயகர், நீ இங்குள்ள குளத்தில் மூன்றே முக்கால் நாழிகை மூழ்கி எழுந்து பார். உனக்கு எல்லாம் சரியாகும் என்றார். மன்னனுக்கோ, குளத்தில் மூழ்கினால் மதில் சுவர் எப்படி நிற்கும் என்று சந்தேகம். இதையறிந்த விநாயகர், காசியை விட இந்த குளத்திற்கு வீசம் அதிகம். நீ குளித்து எழுந்து பார் என்றார். அதன்படி கோச்செங்கட்சோழன் குளத்தில் மூழ்கி எழ, மதில் சுவரில் இருந்து கருவறை வரை எல்லாம் சரியாக அமைந்தது.
இப்படி கோச்செங்கட்சோழனுக்கு அருளிய பொல்லாப் பிள்ளையார் நம் அனைவர்களுக்கும் வேண்டியதை வேண்டியபடி தந்தருள்கிறார்.
உத்திரமேரூர் பாலசுப்பிரமணியன் கோவில்
மோதக அஸ்த விநாயகர்
ஐந்து கரங்களிலும் (தும்பிக்கை உட்பட) முஷ்டி லட்டுகம் ஏந்திய விநாயகரின் அபூர்வ தோற்றம்
காஞ்சிபுரத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது உத்திரமேரூர் பாலசுப்பிரமணியன் கோவில். இக்கோவில் 1400 வருடங்களுக்கு மேல் பழமையானது. இக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் இறைவன் திருநாமம் ஏகாம்பரநாதர். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி. இத்தலம் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்றது. இங்கு முருகப்பெருமான் பாலசுப்ரமணிய சுவாமி என்ற பெயருடன் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு சுயம்புவாக எழுந்தருளி இருக்கிறார். முருகப்பெருமான் சூரபத்மனை அழிப்பதற்காக வேல் வேண்டி இங்கு சிவபெருமானையும், பார்வதி தேவியையும் நோக்கி தவம் இருந்தார்.
இக்கோவிலில் கன்னிமூலையில் எழுந்தருளி இருக்கும் கணபதிக்கு மோதக அஸ்த விநாயகர் என்று பெயர். இவருக்கு வரசித்தி விநாயகர் என்ற பெயரும் உண்டு. இந்த மோதக அஸ்த விநாயகர் சற்று வித்தியாசமான தோற்றத்தில் காட்சி அளிக்கிறார். பொதுவாக விநாயகர் தனது நான்கு கரங்களில் தந்தம், பாசம், அங்குசம், மோதகம் ஆகியவற்றை ஏந்தி இருப்பார். ஆனால் இத்தலத்தில், மோதக அஸ்த விநாயகர் தனது ஐந்து கரங்களிலும் (தும்பிக்கை உட்பட) முஷ்டி லட்டுகம் (பிடி கொழுக்கட்டை) ஏந்தி உள்ளார். இப்படி ஐந்து கரங்களிலும் மோதகம் ஏந்திய விநாயகரை நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாது.
இவருக்கு எதிரில், வழக்கமான இவருடைய வாகனமான மூஞ்சூறுடன், யானையும் உடன் இருப்பது மேலும் ஒரு தனிச்சிறப்பாகும்.
திருவாரூர் சர்க்கரை விநாயகர் கோவில்
மாமன்னன் ராஜராஜ சோழனும், அவரது சந்ததியனரும் வழிபட்ட விநாயகர்
திருவாரூர் கீழ வீதியில் அமைந்துள்ளது சர்க்கரை விநாயகர் கோவில். இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இந்த விநாயகர் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள் பாலிக்கிறார்.
தஞ்சையை ஆட்சி புரிந்த ராஜராஜ சோழன், இங்குள்ள விநாயகரை வழிபட்ட பிறகு தான் எல்லா காரியத்தையும் தொடங்கியுள்ளார். அவர் குடும்பத்திலும், அவரது வழியினர் குடும்பத்திலும்
குதூகலம் தழைத்தோங்கியது. முற்காலத்தில் இவரை வழிபட்டு பலன் அடைந்தவர்கள், இவருக்கு வெல்லம் படைத்து வழிபடலானார்கள். அதனால் இவருக்கு சர்க்கரை விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது. இவரை வணங்கிய மன்னனும், அவரது சந்ததியும் வெற்றி அடைந்ததால், பின்னாளில் சந்ததிகளை காக்கும் சர்க்கரை விநாயகர் என்று அழைக்கப்பட்டார். கோவில் மகா மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்து, விநாயகப் பெருமானை உற்று நோக்கினால் அவர் நம்மிடம் பேசுவது போன்று தெரியும்.
திருமண தடை நீங்கவும், புத்திர பாக்கியம் கிடைக்கவும், சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்கவும், நினைத்த காரியம் கை கூடவும் பக்தர்கள் இந்தக் கோவிலில் வேண்டிக் கொள்கின்றனர்.
புஞ்சை (திருநனிபள்ளி) நற்றுணையப்பர் கோவில்
அகத்திய முனிவரின் கமண்டலத்தை கவிழ்த்த விநாயகரின் தோஷத்தை போக்கிய தேவார தலம்
மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் புஞ்சை(திருநனிபள்ளி) நற்றுணையப்பர் கோவில். இத்தலத்தில் மலையான் மடந்தை மற்றும் பர்வத புத்திரி என்ற இரண்டு அம்பிகைகள் அருள் பாலிக்கின்றனர். விநாயகர், அகத்தியர் இருவருக்குமே சிவபெருமான் தனது திருமண கோலத்தை காட்டியருளிய தலம் திருநனிபள்ளி.
புராணத்தின்படி, ஒரு காலகட்டத்தில் நாட்டில் பஞ்சத்தால் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். அகத்திய முனிவர் தனது கமண்டலத்தில் புனித நீர் கொண்டு வந்தார். அகத்திய முனிவரின் கமண்டலத்தில் இருந்த நீரை விநாயகர் காக உருவம் கொண்டு கவிழ்த்ததால் காவிரி நதி தோன்றியது. இந்த நீர் அகத்தியரின் கமண்டலத்தில் இருந்து வழிந்து ஓடி காவிரி நதியை சுமந்து, நிலங்களை வளப்படுத்தியது. கமண்டலத்தில் இருந்த புனித நீரை வீணாக்கியதால், அகத்திய மனித முனிவர் கோபமடைந்து விநாயகரை காகமாகவே இருக்க சபித்தார். அகத்தியரின் சாபத்திலிருந்து விடுபட விநாயகர் இந்தக் கோவிலுக்கு வந்து கோவில் குளத்தில் நீராடினார். குளத்தில் நீராடி எழுந்தவுடன் காக்கை வடிவில் இருந்த விநாயகரின் நிறம், பொன்னிறமாக மாறியது. எனவே இந்த இடம் பொன்செய் (பொன் - தங்கம், சேய் - மாற்றம்)என்று பெயர் பெற்றது. இப்பெயரே பின்னர் புஞ்சை என்று ஆனது. பொன்னிற காக்கை வடிவில் இருந்த விநாயகர், இத்தல இறைவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றார்.
குன்றக்குடி தோகையடி விநாயகர் கோவில்
மயில் தோகை விரித்து அமர்ந்திருப்பது போல் இருக்கும் மலையடி வாரத்தில் அமர்ந்திருக்கும் விநாயகர்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது குன்றக்குடி முருகன் கோவில் . இங்குள்ள முருகன் கோவில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்திருப்பதால் குன்றக்குடி என்று அழைக்கப்படுகின்றது. இது பிரார்த்தனை தலங்களில் முதன்மையானது.
முருகப்பெருமானின் சாபத்தால் மயிலே, மலையாகிப் போனதாகவும், அந்த மலை மீதுதான் முருகப்பெருமான் வீற்றிருப்பதாகவும் தலபுராணம் கூறுகிறது.
குன்றக்குடி மலையின் நுழைவாயிலில் இருக்கும் விநாயகர் 'தோகையடி விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார். ஏனெனில், குன்றக்குடி மலையின் அமைப்பு மயில் தோகை விரித்து அமர்ந்திருப்பது போல் தோன்றுவதால், அந்த இடத்தில் இருக்கும் விநாயகர் இவ்வாறு அழைக்கப்படுகிறார். முருகப் பெருமானுக்கு முன் விநாயகப் பெருமானை வழிபடுவது மரபு என்பதால், பக்தர்கள் முருகனை தரிசிக்கச் செல்லும் முன், தோகையடி விநாயகரை வணங்கிவிட்டுச் செல்வார்கள். குன்றக்குடி முருகனையும், தோகையடி விநாயகரையும் தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
திருச்செந்தூர் தூண்டுகை விநாயகர் கோவில்
பக்தர்களுக்கு செந்தில் வேலவன் இருக்கும் இடத்தை காட்டும் தூண்டுகை விநாயகர்
முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடு திருச்செந்தூர் ஆகும். திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்லும் பாதையின் தொடக்கத்தில் தூண்டுகை விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலிலிருந்து முருகன் கோவில் இருநூறு மீட்டர் தொலைவில் உள்ளது.
இவ்விநாயகப் பெருமான் தம் தம்பியாகிய செந்தில் வேலவன் இருக்கும் இடத்தை பக்தர்களுக்குத் தூண்டிக் காண்பிக்கும் வகையில் எழுந்தருளியுள்ளதால் இப்பெயர் பெற்று விளங்குகின்றார். திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்கள் அனைவரும் முதலில் தூண்டுகை விநாயகரை வணங்கி தேங்காய் உடைத்து விட்டு, பின்பு முருகனை தரிசிப்பது என்பது வழக்கமாக உள்ளது. முருகனுக்கு பால்குடம் மற்றும் காவடி எடுக்கும் பக்தர்கள் தூண்டுகை விநாயகர் கோயிலில் இருந்துதான் பால்குடம் மற்றும் காவடி எடுத்து வருகின்றனர்.
திருச்செந்தூர் முருகன் கோவில் ராஜகோபுரம் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்தபோது, கட்டுமானத் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத அளவிற்கு நிதி தட்டுப்பாடு இருந்தது. எனவே கட்டுமானத் தொழிலாளர்களுக்கு, திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி பிரசாதத்தை பன்னீர் இலைகளில் வைத்து சம்பளமாக கொடுத்தனர். வேலை நாளின் முடிவில் தூண்டுகை விநாயகரிடம் பிரார்த்தனை செய்த பிறகு, தொழிலாளர்கள் பன்னீர் இலை விபூதி பொட்டலத்தைத் திறந்து பார்த்தால், அதில் இருக்கும் விபூதியானது அன்றைய தினம் அவர்கள் செய்த வேலைக்கு ஏற்ப தங்க நாணயங்களாக மாறி இருக்கும் அதிசயம் நிகழ்ந்தது.
நல்லிசேரி ஜம்புநாத சுவாமி கோவில்
இரட்டை விநாயகர்கள் எழுந்தருளியுள்ள தலம்
இடையூறுகளை ஏற்படுத்தும் நிக்கிரக விநாயகரும், துன்பங்களை போக்கும் அனுகிரக விநாயகரும் அருகருகே இருக்கும் அரிய காட்சி
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நல்லிசேரி கிராமம். இத்தலத்து இறைவன் ஜம்புநாத சுவாமி. இறைவியின் திருநாமம் அலங்கார வல்லி. சப்த கன்னியரில் வைஷ்ணவி தேவி வழிபட்ட தலம் இது. ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இக்கோவில். ஒரு காலத்தில் ஊரைச் சுற்றிலும் வயல்கள், வாய்க்கால்கள் நிறைந்திருந்தன. ஊரைச் சுற்றிய அனைத்துப் பகுதி அறுவடை நெல்லும் இங்கு கொண்டுவந்து குவித்து வைக்கப்பட்டு இருந்துள்ளது. அதனால் இந்த ஊருக்கு நெல்லுச்சேரி என்ற பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில், அதுவே நல்லிச்சேரி என்று மருவியது.
கோவிலின் பிரதான தெற்கு வாசலில் உள்ளே நுழைந்ததும் நமக்கு இரட்டை விநாயகர்கள் காட்சி தருகிறார்கள். ஒருவர் நிக்கிரக விநாயகர், மற்றொருவர் அனுகிரக விநாயகர். நிக்கிரக விநாயகர் நமக்கு இடையூறுகளை, கஷ்டங்களை ஏற்படுத்தித் தருபவர். அனுகிரக விநாயகர் நம்முடைய துன்பங்களை, துயரங்களை நீக்குபவர். அதனால் இங்கு வரும் பக்தர்கள் மத்தியில் இந்த இரட்டை விநாயகருக்கு அதிக மதிப்பு உள்ளது. இனிமேல் எந்தக் கஷ்டத்தையும் தந்துவிடாதே என்று நிக்கரக விநாயகரிடமும், இதுவரை தந்துவரும் கஷ்டங்களைப் போக்கிவிடு என்று அனுக்கிரக விநாயகரிடமும் தோப்புக் கரணம் போட்டு பக்தர்கள் வேண்டிக் கொள்கிறார்கள்.
நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வரர் கோவில்
நாக தோஷம் போக்கும் நாகாபரண விநாயகர்
நாகப்பட்டினத்தில் உள்ள காயாரோகணேஸ்வரர் கோவிலின் நுழைவாசலில், நாகாபரண விநாயகர் தனிச் சன்னதி கொண்டு அருள் பாலிக்கிறார். ஆலயத்தின் முகப்பில் வீற்றிருக்கும் இந்த விநாயகர், உடலில் நாகத்தை ஆபரணமாக சூடி, தலைக்கு மேலே ஐந்து தலை நாகம் குடை பிடித்தபடி இருக்க அதன் கீழே காட்சி தருகிறார். இவர் நாகத்தையே தன்மார்பினில் பூணூலாகவும், இடையில் கடி சூத்திரமாகவும் அணிந்திருக்கிறார். இதன் காரணமாகவே இந்த விநாயகருக்கு, 'நாகாபரண விநாயகர்' என்று பெயர் வந்தது.
சர்ப்ப ராஜன் தனக்கிருந்த தோஷத்தை நிவர்த்தி செய்ய இத்தலத்து இறைவனை வழிபட வந்தபோது,முதலில் இந்த நாகாபரண பிள்ளையாரை பிரதிஷ்டை செய்து அவருக்கு பூஜை செய்தான். பின்னர் காயாரோகணரை வழிபட்டு தோஷ நிவர்த்தி அடைந்தான்.
சர்ப்ப ராஜனே பிரதிஷ்டை செய்து வணங்கிய விநாயகர் இவர் என்பதால், ராகு-கேது சம்பந்தப்பட்ட தோஷங்கள் அனைத்தும் இவரை வழிபடுவதால் விலகும். கால சர்ப்ப தோஷம், நாகதோஷம், களத்திர சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இவருக்கு, ராகு காலத்தில் பாலபிஷேகம் செய்வித்து வேண்டிக்கொண்டால், அந்த தோஷங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். ராகு- கேது பெயர்ச்சியின்போது இவருக்கு விசேஷ பூஜைகளும் நடக்கிறது.
சாத்தூர் வன்னி விநாயகர் கோவில்
வன்னிமரத்தினை மேற்கூரையாகக் கொண்டு இருக்கும் விநாயகர்
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற தலம்
சாத்தூர்-கன்னியாகுமரி நெஞ்சலைச்சாலையில், சாத்தூரில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது வன்னிவிநாயகர் கோவில். 400 ஆண்டுகள் பழமையானது இக்கோவில். இருக்கன்குடி மாரியம்மன் கோவில் அடுத்து ஸ்ரீ வன்னி விநாயகர் கோவில் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற தலம் ஆகும்.
வன்னிமரத்தினை மேற்கூரையாக கொண்டு விநாயகர் இங்கு எழுந்தருளி இருக்கிறார்.பஞ்சபாண்டவர்கள் வனவாசம் மேற்க் கொண்ட போது தங்கள் ஆயுதம் மற்றும் கவச உடைகளை வன்னிமரத்தின் பொந்தில் பாதுகாப்பாக வைத்து விட்டு, வன வாசம் காலம் முடிந்த பின்னர் அவற்றை எடுத்து போரிட, வெற்றி பெற்றதாக புராணம் கூறுகிறது.
வன்னி என்றால் வெற்றி என பொருள். வன்னிமரம் வலம் வந்து வேண்டிக்கொண்டால் நினைத்த காரியம் வெற்றிபெறும், திருமணத்தடை நீங்கும், குழந்தைபேறு கிடைக்கும், வியாபாரம் செழிக்கும்,நவக்கிரகதோஷம் நீங்கி வளம் பெருகி, நலம் உண்டாகும். இதன் இலை, காய், சிறிய கிளையை பயணத்தின் விபத்து ஏற்படாமல் காக்கும் கவசமாக இருக்கும் என்றும் கிராம பகுதியில் நம்பிக்கை உள்ளது.நினைத்த காரியத்தை வெற்றிகரமாக முடித்து வைப்பதால் ஏராளமான பக்தர்கள் இந்த விநாயகரை வழிபட்டு செல்கின்றனர். இருக்கன்குடி மாரியம்மன் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் தவறாமல் இங்கு வந்து தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். மாதம் தோறும் வரும் சங்கடஹரசதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, தை முதல் நாள், ஆங்கில புத்தாண்டு தினங்களில் பக்தர்கள் அலைஅலையாக வந்து தரிசனம் செய்வர்.
திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோவில்
நீடித்த ஆயுளும், நல்ல ஆரோக்கியமும் அருளும் கள்ள வாரண பிள்ளையார்
மயிலாடுதுறையில் இருந்து 23 கி.மீ .தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருக்கடையூர். இறைவன் திருநாமம் அமிர்தகடேசுவரர். இறைவியின் திருநாமம் அபிராம வல்லி.
இத்தலத்தில் அமிர்தகடேசுவரர் சன்னதி வலதுபுறம், நந்திக்கு அருகே வெளிப்பிரகாரத்தில், கள்ள வாரண விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. கள்ள வாரண விநாயகர் சன்னதி, விநாயகரின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடாகும்.
கள்ள வாரண விநாயகர் தனது தும்பிக்கையில் அமிர்த கலசம் வைத்தபடி காட்சியளிக்கிறார். இவருடைய தோற்றத்திற்கு பின்னணியில் ஒரு புராண கதை உள்ளது. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது விநாயகரை வழிபட மறந்தனர் . இதனால் விநாயகப் பெருமான் அமிர்த குடத்தை எடுத்து இத்தலத்தில் ஒளித்து வைத்தார். எனவே இத்தலத்து விநாயகர் கள்ள வாரண பிள்ளையார் எனப்படுகிறார். இவரை சமஸ்கிருதத்தில் சோர கணபதி என்பார்கள். விநாயகர் ஒளித்து வைத்த அமிர்த குடம், லிங்கமாக மாறி அமிர்தகடேசுவரர் ஆனது.
சிவபெருமான் விநாயகரை வழிபட்டு, அமிர்தம் பெறுமாறு தேவர்களுக்கு வழி காட்டினார். அதன்படி தேவர்கள் திருக்கடவூரில் கணபதியை வழிபட்டு அமிர்தம் கிடைக்கப் பெற்றனர். இந்தத் தலத்தில் விநாயகப் பெருமானை வணங்கினால் அமிர்தம் அருந்தாமலேயே நீடித்த ஆயுளைப் பெறலாம் என்பது ஐதீகம். இவரை மனம் உருகி வழிபட்டால் இழந்த செல்வங்கள் அனைத்தும் திரும்ப கிடைக்கும்.
திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் கோவில்
சிற்ப நுட்ப, கலைத் திறன் கொண்ட கருங்கல் பலகணி
கருங்கல்லால் ஆன வேலைப்பாடுடன் கூடிய உயரமான குத்துவிளக்குகள்
கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் அமைந்துள்ள திருவலஞ்சுழி என்னும் சிற்றூரில் அமைந்துள்ள வலஞ்சுழிநாதர் கோவில் என்று அழைக்கப்படுகின்ற, தேவாரப்பாடல் பெற்ற, சிவன் கோவில் வளாகத்தில் வெள்ளை விநாயகர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் கடல் நுரையாலான வெள்ளை நிற பிள்ளையார் எழுந்தருளி உள்ளார். வெள்ளை நிற பிள்ளையார் சன்னதி தேர் வடிவில் அமைந்துள்ளது. தேர்ச்சக்கரம் சற்றே புதைந்த நிலையில் காணப்படுகிறது. அந்த வாயிலின் மேலே விதானத்தில் கருங்கல்லால் ஆன வேலைப்பாடு அழகாக உள்ளது. சுற்றிவரும்போது வேலைப்பாடுடன் கூடிய கொடுங்கையைக் காணமுடியும்.
வெள்ளை விநாயகர் கோவிலின் தூண் மண்டபமும், கருவறையும் அழகான வேலைப்பாடுகளுடன் காண்போரைக் கவரும் வகையில் அமைந்துள்ளன. சித்திரத் தூண்களும், கல்குத்துவிளக்கும் கொண்ட அழகான மண்டபமாக இது விளங்குகிறது.இந்த சன்னதியில் உள்ள சிற்பத் தூண்களும், சிற்ப நுணுக்கம் மிகுந்த அடைவுகளும் உலகச் சிறப்பு வாய்ந்தன. தூண்களின் அமைப்பு வித்தியாசமாகக் காணப்படுகிறது. தூண்களைக் கடந்து உள்ளே போகும்போது கருங்கல்லால் ஆன வேலைப்பாடுடன் கூடிய உயரமான குத்துவிளக்குகள் காணப்படுகின்றன. இந்த குத்துவிளக்குகள் இச்சன்னதியின் தனித்துவங்களில் ஒன்றாகும்.
புகழ்பெற்ற கருங்கல் பலகணி
வெள்ளை விநாயகர் சன்னதியின் எதிரில், புகழ்பெற்ற திருவலஞ்சுழி கருங்கல் பலகணி (கருங்கல் ஜன்னல்) இங்கே உள்ளது. கோஷ்டங்களில் காணப்படும் கருங்கல்லால் ஆன ஜன்னல்களும் பார்ப்பவர் மனதை ஈர்க்கும் வகையில் உள்ளன. அக்காலத்தில் கோவில் கட்டுவதற்கு சிற்பிகள் எழுதித்தரும் ஒப்பந்தப் பத்திரத்திற்கு முச்சிளிக்கா என்று பெயர். அதில் அவர்கள் முக்கிய நிபந்தனையாக விதிப்பது என்னவென்றால், திருவலஞ்சுழி கோவில் பலகணி, ஆவுடையார் கோயில் கொடுங்கை, கடாரம் கொண்டான் கோவில் மதில், தஞ்சைப் பெரிய கோபுரம், திருவீழிமிழலை கோவிலுள் உள்ள வௌவால்நத்தி மண்டபம் போன்ற வேலைப்பாடுகள் தவிர, வேறு எந்த வேலைப்பாடும் செய்து தர முடியும் என்று குறிப்பிடுவார்களாம். இவ்வாறாக நிபந்தனை விதிக்கும் அளவு மிகவும் நுட்பமான வேலைப்பாடுகளைக் கொண்டதாக அந்த வேலைப்பாடுகள் அமைந்திருக்கின்றன.
சிற்ப நுட்ப, கலைத் திறன் கொண்ட திருவலஞ்சுழி கருங்கல் பலகணி 9 அடி உயரமும், 7 அடி அகலமும் கொண்டுள்ளது. இந்த கருங்கல் பலகணி மிகச் சிறந்த தத்துவங்களை உள்ளடக்கியது. இந்தப் பலகணியில் 4 தூண்களும், 111 கண்களும், 49 மலர்களும், 24 கர்ண துவாரங்களும், 10 யாளிகளும் உள்ளன. மூன்று பாகங்களாக குறுக்குவாட்டில் ஒரே கல்லினாலும், நெடுக்குவாட்டில் ஒன்றன் மீது ஒன்றாக மூன்று கற்களினாலும் அமைக்கப்பட்டுள்ளது.
நெடுக்குவாட்டு கற்கள் மும்மூர்த்திகளையும், மூன்று தத்துவங்களையும், 4 தூண்கள் 4 யுகங்களையும், 111 கண்கள் மந்திரங்களையும், 49 மலர்கள் ஆகமங்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றையும், 24 கர்ண துவாரங்கள் அஷ்ட மூர்த்திகள், அஷ்ட ஐஷ்வர்ய சித்திகள் மற்றும் எட்டு வசுக்களையும், 10 யாளிகள் எட்டு திசைகளுடன் பாதாளம் மற்றும் ஆகாசம் என 10 திக்கு நாயகர்களையும் குறிப்பதாக உள்ளன.
மயிலாப்பூர் வெள்ளீசுவரர் கோவில்
ஒரே கருவறையில் விநாயகர் நின்ற கோலத்திலும், அமர்ந்த கோலத்திலும் இருக்கும் அரிய காட்சி
திருமணத்தடை நீக்கும் மாப்பிள்ளை சுவாமி விநாயகர்
சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ளது வெள்ளீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் காமாட்சி அம்மன். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலை சுற்றி அமைந்துள்ள சப்த விடங்க சிவ தலங்களில் இக்கோவிலும் ஒன்று . அசுரகுரு சுக்கிராச்சாரியாருக்கு கண் பார்வை கொடுத்த தலம் இது என்பதால், மூலவருக்கு வெள்ளீசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது. அதனால், இக்கோவில் கண் சம்பந்தமான நோய்களை தீர்க்கும் தலமாக விளங்குகிறது .
இக்கோவிலில், தெற்கு நோக்கிய தனிச் சன்னிதியில் விநாயகப் பெருமான் சித்தி, புத்தி சமேதராக நின்ற கோலத்தில் அருள்கிறார். இவருக்கு மாப்பிள்ளை சுவாமி என்ற பெயரும் உண்டு. அவருக்கு முன்பாக செல்வ விநாயகர் அமர்ந்த கோலத்தில் தெற்கு நோக்கி இருக்கிறார். இப்படி ஒரே கருவறையில் விநாயகர் நின்ற கோலத்திலும் அமர்ந்த கோலத்திலும் காட்சி தருவது இந்த ஒரு தலத்தில் மட்டும்தான்.
இந்த மாப்பிள்ளை சாமிக்கு நான்கு மாலைகள் கொண்டு வந்து பூஜை செய்து, ஒரு மாலையை பிரசாதமாக வீட்டிற்கு கொண்டு சென்றால் திருமண தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
தின்னக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் கோவில்
சிவலிங்கத் திருமேனியில் எழுந்தருளியிருக்கும் அபூர்வ விநாயகர்
திருச்சி மாவட்டம் முசிறியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, தின்னக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் கோவிந்தவல்லி.
இத்தலத்தில் தனிச் சன்னதியில் எழுந்தருளி இருக்கும் லிங்கோத்பவ வலம்புரி விநாயகரின் தோற்றமானது அபூர்வமான ஒன்றாகும். இவர் சிவலிங்க உருவம் கொண்டு, அதில் நான்கடி உயர திருமேனியுடன், புடைப்புச் சிற்பமாக வலம் சுழித்த துதிக்கையுடன் காட்சி தருகிறார். அதனால்தான் இவர் லிங்கோத்பவ வலம்புரி விநாயகர் என அழைக்கப்படுகிறார். இப்படி சிவலிங்கத் திருமேனியில் எழுந்தருளியிருக்கும் விநாயகரை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
திருப்பனையூர் சௌந்தரேஸ்வரர் கோவில்
துணையிருந்த விநாயகர் (கரிகால சோழன், தன் அரசினை மீட்க உதவிய விநாயகர்)
திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் உள்ள ஆண்டிப்பந்தலில் இருந்து கிழக்கே 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருப்பனையூர். இறைவன் திருநாமம் சௌந்தரேஸ்வரர், அழகியநாதர். இறைவியின் திருநாமம் பெரியநாயகி.
இக்கோவிலில் தனிச்சன்னதியில் துணை இருந்த விநாயகர் எழுந்தருளி இருக்கிறார். இந்த விநாயகர் இப்பெயரை பெறுவதற்கு பின்னால், சோழ நாட்டு வரலாற்று நிகழ்ச்சி ஒன்று உள்ளது.
முற்காலச் சோழர்களில் மிகவும் புகழ் பெற்றவன் கரிகாலச் சோழன். இவன் சிறியவனாக இருக்கும்போது தாயாதிகளின் சூழ்ச்சியால் அவனது தந்தை கொல்லப்பட்டார். தந்தையை கொன்ற தாயாதிகள் கரிகாலனையும் கொன்று சோழ நாட்டைக் கைப்பற்ற முனைந்தபோது. அவனது தாய்மாமன் 'இரும்பிடர்த்தலையார்' என்னும் சங்கப் புலவர், பிறர் அறியாமல், குழந்தையையும் தாயையும் பனையூருக்கு அனுப்பிவைத்தார். அரசி, தன் மகனுடன் இவ்வூருக்கு வந்து, இங்கு அமைந்துள்ள சௌந்தரேஸ்வரர் கோவிலில் அடைக்கலம் புகுந்து, இத்தலத்து விநாயகரிடம் முறையிட, விநாயகரின் துணையால் கரிகாலன் எட்டு ஆண்டுகள் இத்தலத்தில் பாதுகாப்பாக இருந்தான்.
பங்காளிகளுக்குப் பயந்து தன் தாயோடு இளவயதில் இவ்வூரில் தலைமறைவாகத் தங்கி வளர்ந்து வந்த கரிகால் சோழனுக்குத் துணையாய் இருந்து அருளி அவனைப் பேரரசனாக்கினார். கரிகாலச் சோழனுக்குத் துணையிருந்ததனால், இத்தல விநாயகர் 'துணையிருந்த விநாயகர்' என்னும் பெயர் பெற்றார்.
உத்தமதானபுரம் கைலாசநாதர் கோவில்
ஆலயத்துளிகள் இணையதளத்தின் 1250ஆம் நாள் பதிவு
மும்மூர்த்திகளின் அம்சமாக விளங்கும் மூன்று விநாயகர்கள்
வேண்டுதல் நிறைவேற செய்யப்படும் நிறை பணி வழிபாடு
தஞ்சாவூருக்கும் கும்பகோணத்துக்கும் இடையே அமைந்துள்ள பாபநாசம் என்ற ஊரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது உத்தமதானபுரம். இத்தலத்து இறைவன் திருநாமம் கைலாசநாதர். இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி. பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடித்தேடி அலைந்து பெற்று, அச்சிட்டுப் பதிப்பித்த, தமிழ்த் தாத்தா எனச் சிறப்பிக்கப்பட்ட உ. வே. சாமிநாதையர் பிறந்த ஊர் இது.
இக்கோவிலில் சிவன் மூலவராக இருந்தாலும், இங்கே முக்கியமானவரும், விசேஷமானவரும். வரப்பிரசாதியாகவும் விளங்குபவர் விநாயகர் தான். இக்கோவிலில் மூன்று விநாயகர்கள் ஒரே வரிசையில் எழுந்தருளி இருக்கிறார்கள். இவர்கள் மூவரும் பிரம்மா, விஷ்ணு சிவபெருமான். அம்சமாக விளங்குவதால் இவர்களுக்கு மும்மூர்த்தி விநாயகர்கள் என்று பெயர். பக்தர்கள், தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற வேண்டும் என்று இந்த மூன்று விநாயகர்களுக்கு செய்யும் நிறை பணி வழிபாடு என்பது இக்கோவிலில் மிகவும் பிரசித்தம். உத்தியோகம் கிடைக்க, திருமணம் கைகூட, விவசாயம் சிறக்க, தொழில் வளர்ச்சி அடைய போன்ற பிரார்த்தனைகளை பக்தர்கள் மனதில் வைத்து அபிஷேகங்கள் செய்து ஒரு தேங்காய் அளவுக்கு 108 கொழுக்கட்டைகள் செய்து, படைத்து வேண்டிக் கொண்டால், நினைத்ததை விரைவில் நிறைவேற்றி அருளுகிறார்கள் இந்த மும்மூர்த்தி விநாயகர்கள். வேண்டுதல் நிறைவேற செய்யப்படும் இந்த வழிபாட்டிற்கு, 'நிறை பணி வழிபாடு' என்று பெயர்.
திருவையாறு அபிஷ்ட வரத மகா கணபதி கோவில்
பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் அபிஷ்ட வரத மகா கணபதி
தஞ்சாவூரில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ள திருவையாறில் அமைந்துள்ளது அபிஷ்ட வரத மகா கணபதி கோவில். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவில் புராணச் சிறப்பு உடையது. பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றி தருவதால், இவருக்கு அபிஷ்ட மகா கணபதி என்ற பெயர் ஏற்பட்டது. அபிஷ்டம் என்ற சொல்லுக்கு, 'கோரிக்கை' என்று பொருள். இவருக்கு காரிய சித்தி விநாயகர் என்ற பெயரும் உண்டு.
இத்திருக்கோயிலின் முன்புறம் அமைந்துள்ள திருக்குளத்தில் மூழ்கி எழுந்த பின்தான் அப்பர் சுவாமிகளுக்கு சிவபெருமான் திருகைலாயக் காட்சி கொடுத்தார் என்று தலபுராணம் கூறுகிறது. அப்பர் பெருமானுக்கு இக்கோவிலில் தனிச்சந்ததி உள்ளது.
திருவையாறு வழியாக வந்த காவேரி அவ்வூரின் அழகு கண்டு அங்கேயே தங்கி விட்டாள். காவிரியை மணக்க விரும்பிய சமுத்திரராஜன், இத்தலத்து அபிஷ்ட வரத மகா கணபதியை பூஜித்தார். அவருடைய கோரிக்கையை ஏற்ற கணபதி, அவருக்கு காவேரியை திருமணம் செய்து வைத்தார். அதனால் இக்கணபதியை தரிசித்தால், திருமணத் தடை நீங்கி விடும் என்பது நம்பிக்கை. திருமணம் அல்லது வேறு எந்தச் செயலிலும் தடைகள் ஏற்பட்டாலும், இவருடைய ஆசீர்வாதத்தால் கடக்க முடியும் என்பது ஐதீகம்.
இந்தக் கோவிலுக்குச் சென்று, 'காரிய சித்தி மாலை' பாராயணம் செய்வது நன்மைகளையும் செழிப்பையும் தரும்.
முத்தாலங்குறிச்சி முக்குறுணி அரிசி விநாயகர் கோவில்
பிரம்மாண்டமான முக்குறுணி அரிசி விநாயகர்
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள முத்தாலங்குறிச்சியில், தாமிரபரணி நதிக்கரையில் மிகவும் பழமையான, பிரம்மாண்டமான முக்குறுணி அரிசி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. மிகவும் பிரம்மாண்டமான தோற்றத்துடன் காட்சி அளிக்கும் இவர் ஐந்தரை அடி உயர திருமேனி உடையவர் முப்புரி நூல் அணிந்து, பேழை வயிற்றுடன் அமர்ந்து இருக்கிறார். கூரையில்லாமல் வேப்பமரத்தடியில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் இந்த விநாயகருக்கு கூரை போட முயற்சிக்கையில் பல தடங்கல்கள் ஏற்பட்டன. அதனால் கூரை போடுவதற்கு அமைக்கப்பட்ட நான்கு கல் தூண்கள் அப்படியே இன்றளவும் உள்ளன. இந்தப் பிள்ளையாருக்கு எண்ணெய்க் காப்பு செய்ய வேண்டும் என்றால் பத்து லிட்டர் எண்ணெய் தேவைப்படும். வஸ்திரம் அணிவிக்க எட்டுமுழ வேஷ்டி வேண்டும். இரண்டு பேர் சேர்ந்துதான் வஸ்திரம் சாத்துவார்கள்.
விநாயகர் சதுர்த்தி அன்று இந்த விநாயகருக்கு, முக்குறுணி (18 படி) அளவு அரிசியை மாவாக்கி, பெரிய அளவில் ஒரே ஒரு மோதகம் செய்து படைப்பார்கள்.
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில்
கிணற்றின் மேல் எழுந்தருளி உள்ள விநாயகர்
விநாயகரை கடலில் தூக்கி போட்டாலும், மீண்டும் தானாக வந்து கோவிலில் அமர்ந்த அதிசயம்
புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது மிகவும் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில். தொண்டை மண்டலத்தில் வேதபுரி அகஸ்தீசபுரம், வேதபுரம் எனும் பெயர்களோடு இருந்தது இந்த புதுச்சேரி. பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில், பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரிக்கு வருவதற்கு முன்பிருந்து, அதாவது 1666 ஆம் ஆண்டுக்கும் முன்பேயுள்ள ஒரு கோவில் ஆகும். மணல் குளத்து விநாயகர் என்ற பெயர் தான் மருவி, மணக்குள விநாயகர் ஆனது.
தற்போது மூலவரான மணக்குளத்து விநாயகர் இருக்கும் பீடம் ஒரு கிணறு அல்லது குளத்தின் மீதுதான் அமைந்திருக்கின்றது. பீடத்தின் இடப்பக்கம் மூலவருக்கு மிக அருகில் அரை அடி விட்டத்தில் ஒரு ஆழமான குழி செல்லுகிறது. அதில் இப்போதும் நீர் சுரந்து கொண்டிருக்கிறது. இதன் ஆழம் கண்டுபிடிக்க முடியவிலலை. இதில் வற்றாத நீர் எப்போதும் உள்ளது. இது முன்காலத்தில் ஒரு குளமாவும் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறுகிறார்கள்.
ஒயிட் டவுன் எனப்படும் இந்தப் பகுதியின் அருகில் ஒரு குளம் உண்டு; மணற் குளம் சென்று அதற்கு பெயர். இதன் அருகில் கோவில் கொண்டதால், 'மணற்குள விநாயகர்' எனப் பெயர் பெற்றார். 1688-ஆம் வருடம் பிரெஞ்சுக்காரர்கள் இங்கு ஒரு கோட்டை கட்ட திட்டமிட்டனர். அந்தக் கோட்டையின் பின்புறம் மணக்குள விநாயகர் ஆலயம் இருந்தது. அந்தக் காலத்தில் இந்தப் பகுதியில் வாழ்ந்த இந்துக்கள் இந்த விநாயகருக்குத் தினமும் அபிஷேக ஆராதனைகளுடன் அவ்வப்போது உற்சவங்களையும் நடத்தி வந்தனர். பிரெஞ்சு ஆட்சியாளர்களால் இதனை சகித்துக்கொள்ள முடியவில்லை. இதையடுத்து, ஈஸ்டர் காலம் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுவாமி உற்சவம் போன்ற வைபவங்களை நடத்தக்கூடாது என்று அப்போதைய பிரெஞ்சு கவர்னர் தடை உத்தரவு பிறப்பித்தார். இதனால் கோபம் அடைந்த அந்தப் பகுதியில் வாழ்ந்த தொழிலாளர் குடும்பத்தினர் எவரும் வேலைக்குச் செல்லாமல் இருந்ததுடன், ஊரைவிட்டே வெளியேறவும் முற்பட்டனர். அப்படி நிகழ்ந்தால், வேலை செய்ய ஆட்கள் இல்லாது திண்டாட நேரிடுமே என்ற அச்சத்தில், அவர்களின் போராட்டத்துக்குப் பணிந்தார் கவர்னர். தடை உத்தரவு வாபஸ் ஆனது.
ஆனாலும், மணக்குள விநாயகர் ஆலயத்தை அங்கிருந்து அகற்ற, பிரெஞ்சுக்காரர்கள் திட்டமிட்டனர். கோவிலுக்கு அருகில், பிரெஞ்சுக்காரர் 'மொம்பரே என்பவரின் பூங்கா இருந்தது. அவருக்கும், விநாயகர் கோவிலுக்கு அதிகமான பக்தர்கள் வந்து செல்வது பிடிக்கவில்லை. இதையடுத்து, எவரும் அறியாத வண்ணம் இரவோடு இரவாக விநாயகர் சிலையை எடுத்துக் கடலில் போடுமாறு தனது ஆட்களை ஏவினார் மொம்பரே. அவ்வாறே விநாயகர் சிலை கடலில் போடப்பட்டது. ஆனால், மறுநாள் அந்த அதிசயம் நிகழ்ந்தது. கோவிலில் எந்த இடத்தில் அந்தச் சிலை வைக்கப்பட்டு இருந்ததோ, அதே இடத்தில் மறுபடியும் இருந்தது. மொம்பரே அதிர்ச்சி அடைந்தார். தான் அனுப்பிய ஆட்கள் மீதே அவருக்குச் சந்தேகம் எழுந்தது. மறுபடியும், விநாயகர் சிலையை கடலில் கொண்டு போய் போடும்படி உத்தரவிட்டவர், அந்தமுறை தானும் உடன் சென்றார். மொம்பரேயின் ஆட்கள் சிலையைப் பெயர்த்தெடுத்துக் கடலில் போட முயன்றபோது, திடீரென கண்பார்வை இழந்தார் மொம்பரே. மணக்குள விநாயகரின் மகிமையை உணர்ந்தார். தனது செயலுக்காக வருந்தியதுடன், தன்னுடைய தவறுக்குப் பரிகாரமாக கோவிலை அபிவிருத்தியும் செய்தார். வெள்ளைக்காரருக்கு மனமாற்றம் தந்ததால் இவரை, 'வெள்ளைக்காரப் பிள்ளையார்' என்றும் அழைக்கிறார்கள்.
புதுவையில் 1908 முதல் 1918 வரை பத்து ஆண்டுகள் தங்கி இருந்த தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் , இந்த விநாயகரை போற்றி; 'நான்மணிமாலை' என்ற தலைப்பில் 40 பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 'பொன்னால் உனக்கொரு கோயில் புனைவேன் மனமே! எனை நீ வாழ்த்திடுவாய்!’ என்ற பாரதியின் கனவுப்படி இந்தக் கோவில் கருவறை விமானம் பொன்னால் வேயப்பட்டுள்ளது.
அகில இந்திய அளவில் விநாயகருக்கு கோபுரம் முழுக்கவே தங்கத்தால் வேயப்பட்ட கோவில் இந்த கோவில் மட்டுமே.
பிரார்த்தனை
இக்கோவிலில், இந்து மதம் என்றில்லாமல் முஸ்லிம், கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர்களும், வெளிநாட்டினரும் பெருமளவில் வந்து வழிபடுகிறார்கள். திருமணம், குழந்தை பாக்கியம், தொழில் முன்னேற்றம் இவற்றிற்காக இங்கு வழிபடுகிறார்கள். 'பொன்னால் உனக்கொரு கோயில் புனைவேன் மனமே! எனை நீ வாழ்த்திடுவாய்!’ என்ற
திருவிழா
விநாயகர் சதுர்த்தி இத்தலத்தில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். அது தவிர ஜனவரி முதல் தேதி அன்றுதான் இத்தலத்தின் பிரமாண்டமான அளவில் பக்தர்கள் கூடுவர்கள். இது தவிர மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி தினத்தின் போது ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்வர்
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில்
விநாயகர் சதுர்த்தி திருவிழா
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா, வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றது. 10 நாட்கள்
நடைபெறும் திருவிழாவில் ஒன்பதாம் நாள் தேர் திருவிழா நடைபெறுகின்றது. 10-ஆம் நாள் விநாயகர் சதுர்த்தி அன்று கற்பக விநாயகருக்கு ராட்சதக் கொழுக்கட்டை
படைக்கப்படுகின்றது. விழா நாட்களில் தினமும் காலையில் கேடகத்திலும், மாலையில் சிம்மம், பூதம், கமலம், ரிஷபம், மயில், குதிரை உள்ளிட்ட வாகனங்களிலும் விநாயகர் எழுந்தருளி, வீதியுலா நடைபெறும்.
ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே செய்யப்படும் சந்தனகாப்பு அலங்காரம்
விநாயகருக்கு தேர்த்திருவிழா நடைபெறும் ஒரு சில கோவில்களில் பிள்ளையார்பட்டியும் ஒன்று. விநாயகருக்கும், சண்டிகேசுவரருக்குமாக இரண்டு தேர்கள் இழுக்கப்படும்
பிள்ளையார் தேரில் இரண்டு வடங்களில் ஒன்றை பெண்களும், மற்றொரு வடத்தை ஆண்களும் இழுத்துச் செய்வார்கள். சண்டிகேசுவரருக்கான தேரை பெண்களும் குழந்தைகளும் மட்டுமே இழுத்துச் செல்வார்கள். தேரோடும் வீதியில் வேண்டுதல் நிமித்தமாக பக்தர்கள் அங்கப் பிரதட்சணம் செய்வார்கள். தேரோட்டம் நடைபெறும் அதே நேரத்தில் மூலவர் கற்பக விநாயகருக்கு சுமார் 80 கிலோ சந்தனத்தால் காப்பு சாத்தப்படும். ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே இந்த சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுவதால், அக்காட்சியை காண பக்தர்கள் கூட்டம் அதிகமிருக்கும். மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை சந்தனகாப்பு அலங்கார தரிசனம் நிகழ்ச்சி நடைபெறும்.
முக்குறுணி கொழுக்கட்டை படையல்
விநாயகர் சதுர்த்தியன்று உச்சிகால பூஜையின் போது விநாயகருக்கு முக்குறுணி அரிசியால் செய்யப்பட்ட பெரிய அளவிலான ராட்சத கொழுக்கட்டை தயாரித்து, நைவேத்யம் செய்வார்கள். 18 படி அரிசியை மாவாக்கி, எள் 2 படி, கடலைப்பருப்பு 6 படி, தேங்காய் 50, பசுநெய் 1 படி, ஏலம் 100 கிராம், வெல்லம் 40 கிலோ ஆகியவற்றை சேர்த்து ஒரே கலவையாக்கி, உருண்டை சேர்த்து அதனை துணியால் கட்டி, மடப்பள்ளியில் அன்னக் கூடையில் வைத்து சுட்டுவார்கள். தண்ணீர் நிரப்பப்பட்ட அண்டாவினுள் இறக்கி அதன் அடிப்பகுதியில் படாதவாறு தொங்கவிட்டு, மடப்பள்ளி முகட்டில் கயிற்றால் கட்டி விடுவார்கள். பின்னர் அது, அந்த பெரிய அளவிலான பாத்திரத்தில் 2 நாள் தொடர்ச்சியாக வேக வைக்கப்படும். பின்னர் இது உலக்கை போன்ற கம்பில் கட்டி பலர் சேர்ந்து காவடி போல தூக்கி வந்து, மூலவருக்கு உச்சிகால பூஜையில் நிவேதனம் செய்வார்கள். மறுநாள் கொழுக்கட்டை சூடு ஆறிய பின்னர், நகரத்தார். ஊரார்கள் மற்றும் பணியாளர்களுக்கு பிரித்து பிரசாதமாகக் கொடுப்பர்கள்.