மயிலாப்பூர் வெள்ளீசுவரர் கோவில்

ஒரே கருவறையில் விநாயகர் நின்ற கோலத்திலும், அமர்ந்த கோலத்திலும் இருக்கும் அரிய காட்சி

திருமணத்தடை நீக்கும் மாப்பிள்ளை சுவாமி விநாயகர்‍ ‍

சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ளது வெள்ளீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் காமாட்சி அம்மன். கி.பி. 10ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது இந்த வெள்ளீசுவரர் சிவன் கோவில்.

சென்னையின் மயிலாப்பூர் பகுதியில் 7 சிவ தலங்கள் உள்ளன, இந்த கோவில்கள் அனைத்தும் திருமயிலை சப்த ஸ்தானம் என்று அழைக்கப்படுகின்றன. 

‍மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலை சுற்றி அமைந்துள்ள சப்த சிவ தலங்களில் வெள்ளீசுவரர்  கோவிலும் ஒன்று.  மற்ற சிவத்தலங்கள் காரணீசுவரர் கோயில், திருவல்லிக்கேணி தீர்த்தபாலீசுவரர் கோயில், விருபாட்சீசுவரர் கோயில், வாலீசுவரர் கோயில்,  மல்லீசுவரர் கோயில் ஆகியவை ஆகும்.

தலபுராணம் (newly added)

மகாபலி சக்கரவர்த்தி மிகப்பெரிய யாகமும், தானமும் செய்தார். அதனால் தன்னுடைய பதவிக்கு ஆபத்து வருமோ என்று அஞ்சிய இந்திரன், திருமாலிடம் வேண்டினான். இதையடுத்து வாமன அவதாரம் எடுத்த திருமால், மகாபலியிடம் வந்து மூன்றடி மண் தானமாக கேட்டார். வந்திருப்பது திருமால் என்பதை அறிந்த அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியார், மகாபலியை தானம் கொடுக்க விடாமல் தடுக்க முயன்றார்.

ஆனால் அதையும் மீறி மகாபலி தானம் செய்ய கமண்டல நீரை எடுத்தார். அப்போது சுக்ராச்சாரியார், வண்டு உருவம் எடுத்து கமண்டலத்திற்குள் சென்று, நீர் வரும் பாதையை அடைத்தார். இதையறிந்த திருமால், தர்ப்பை புல் ஒன்றை எடுத்து நீர் வரும் பாதையை குத்தி விட, அதில் சுக்ராச்சாரியாரின் ஒரு கண் பார்வை பறிபோனது.

இழந்த கண் பார்வை திரும்ப கிடைப்பதற்காக, சிவபெருமானை வேண்டி தவம் செய்தார், சுக்ராச்சாரியார். குருந்த மரத்தின் கீழே சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபனம் செய்து அவர் தவம் செய்த இடம் தற்போதைய மயிலாப்பூர் ஆகும். அவரது தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான், சுக்ராச்சாரியாருக்கு கண் பார்வையை மீண்டும் வழங்கி அருள்புரிந்தார்.

அசுரகுரு சுக்கிராச்சாரியாருக்கு கண் பார்வை கொடுத்த தலம் இது என்பதால், மூலவருக்கு வெள்ளீசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது. அதனால், இக்கோவில் கண் சம்பந்தமான நோய்களை தீர்க்கும் தலமாக விளங்குகிறது.

ஒரே கருவறையில் விநாயகர் நின்ற கோலத்திலும், அமர்ந்த கோலத்திலும் இருக்கும் அரிய காட்சி (newly added)

‍இக்கோவிலில், தெற்கு நோக்கிய தனிச் சன்னிதியில் விநாயகப் பெருமான் சித்தி, புத்தி சமேதராக நின்ற கோலத்தில் அருள்கிறார். இவருக்கு மாப்பிள்ளை சுவாமி என்ற பெயரும் உண்டு. அவருக்கு முன்பாக  செல்வ விநாயகர் அமர்ந்த கோலத்தில் தெற்கு நோக்கி  இருக்கிறார்.

‍ இப்படி ஒரே கருவறையில் விநாயகர் நின்ற கோலத்திலும் அமர்ந்த கோலத்திலும் காட்சி தருவது இந்த ஒரு தலத்தில் மட்டும்தான். இந்த மாப்பிள்ளை சாமிக்கு நான்கு மாலைகள் கொண்டு வந்து பூஜை செய்து, ஒரு மாலையை பிரசாதமாக வீட்டிற்கு கொண்டு சென்றால் திருமண தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.‍ ‍

 
Previous
Previous

அத்திமுகம் ஐராவதேஸ்வரர் கோவில்

Next
Next

திருலோக்கி ஸ்ரீக்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாள் கோவில்