
புஞ்சை (திருநனிபள்ளி) நற்றுணையப்பர் கோவில்
கையில் மான் மற்றும் சிங்கத்துடனும் காட்சி தரும் துர்க்கையின் அபூர்வ தோற்றம்
மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் புஞ்சை(திருநனிபள்ளி) நற்றுணையப்பர் கோவில். இத்தலத்தில் மலையான் மடந்தை மற்றும் பர்வத புத்திரி என்ற இரண்டு அம்பிகைகள் அருள் பாலிக்கின்றனர். காவிரிநதி இங்கு,கிழக்கு முகமாக வந்து மேற்கு முகமாக திரும்பி செல்கிறது. இதனை பஸ்வமாங்கினி என்பர்.
பொதுவாக சிவாலயங்களில் சுற்றுச்சுவரில் எழுந்தருளி இருக்கும் துர்க்கை அம்மன் எருமை தலை மீது நின்ற கோலத்தில் காட்சி தருவாள். ஆனால் இத்தலத்தில் துர்க்கை அம்மன் கையில் மான் மற்றும் சிங்கத்துடனும் காட்சி தருவது தனிச்சிறப்பாகும். இந்த துர்க்கையின் காலடியில் அரிக்கண்டன், நவக்கண்டன் என்னும் இரண்டு வீரர்கள் தங்கள் சிரசை துர்க்கைக்கு காணிக்கையாக செலுத்தும் நிலையில் காணப்படுகிறார்கள். இதனால் இந்த துர்க்கைக்கு பலி துர்க்கை என்ற பெயரும் உண்டு.

புஞ்சை (திருநனிபள்ளி) நற்றுணையப்பர் கோவில்
அகத்திய முனிவரின் கமண்டலத்தை கவிழ்த்த விநாயகரின் தோஷத்தை போக்கிய தேவார தலம்
மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் புஞ்சை(திருநனிபள்ளி) நற்றுணையப்பர் கோவில். இத்தலத்தில் மலையான் மடந்தை மற்றும் பர்வத புத்திரி என்ற இரண்டு அம்பிகைகள் அருள் பாலிக்கின்றனர். விநாயகர், அகத்தியர் இருவருக்குமே சிவபெருமான் தனது திருமண கோலத்தை காட்டியருளிய தலம் திருநனிபள்ளி.
புராணத்தின்படி, ஒரு காலகட்டத்தில் நாட்டில் பஞ்சத்தால் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். அகத்திய முனிவர் தனது கமண்டலத்தில் புனித நீர் கொண்டு வந்தார். அகத்திய முனிவரின் கமண்டலத்தில் இருந்த நீரை விநாயகர் காக உருவம் கொண்டு கவிழ்த்ததால் காவிரி நதி தோன்றியது. இந்த நீர் அகத்தியரின் கமண்டலத்தில் இருந்து வழிந்து ஓடி காவிரி நதியை சுமந்து, நிலங்களை வளப்படுத்தியது. கமண்டலத்தில் இருந்த புனித நீரை வீணாக்கியதால், அகத்திய மனித முனிவர் கோபமடைந்து விநாயகரை காகமாகவே இருக்க சபித்தார். அகத்தியரின் சாபத்திலிருந்து விடுபட விநாயகர் இந்தக் கோவிலுக்கு வந்து கோவில் குளத்தில் நீராடினார். குளத்தில் நீராடி எழுந்தவுடன் காக்கை வடிவில் இருந்த விநாயகரின் நிறம், பொன்னிறமாக மாறியது. எனவே இந்த இடம் பொன்செய் (பொன் - தங்கம், சேய் - மாற்றம்)என்று பெயர் பெற்றது. இப்பெயரே பின்னர் புஞ்சை என்று ஆனது. பொன்னிற காக்கை வடிவில் இருந்த விநாயகர், இத்தல இறைவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றார்.

புஞ்சை (திருநனிபள்ளி) நற்றுணையப்பர் கோவில்
நாகத்துடனும், மானுடனும் காட்சியளிக்கும் தட்சிணாமூர்த்தியின் அபூர்வ தோற்றம்
மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் புஞ்சை(திருநனிபள்ளி) நற்றுணையப்பர் கோவில்.இத்தலத்தில் மலையான் மடந்தை மற்றும் பர்வத புத்திரி என்ற இரண்டு அம்பிகைகள் அருள் பாலிக்கின்றனர். மூலத்தானத்திற்கே யானை வந்து வழிபட்ட தலம் என்பதால், இத்தலத்தின் கருவறை மிகவும் பெரியதாக அமைந்துள்ளது. இவ்வளவு பெரிய கருவறை இந்தியாவில் உள்ள எந்த சிவத்தலத்திலும் காண முடியாது.
கோவிலின் சுற்று பகுதியில் மிக பிரம்மாண்டமான தோற்றத்துடன் யோக தட்சிணாமூர்த்தி எழுந்தருளியுள்ளார்.தட்சிணாமூர்த்தியின் காலடியில் முயலகன் இருக்க, அவரது வலது புறம் இரண்டு சீடர்களும், இடது புறம் இரண்டு சீடர்களும் காட்சி அளிக்கிறார்கள்.அவர் எழுந்தருளி இருக்கும் பீடத்தின் கீழ் நாகமும், மானும் எழுந்தருளி இருப்பது, இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.இப்படி நாகத்துடனும், மானுடனும் காட்சியளிக்கும் தட்சிணாமூர்த்தியை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

சீர்காழி தாடாளப் பெருமாள் கோவில்
தவிட்டுப்பானையில் ஒளித்து வைக்கப்பட்ட தாடாளன் பெருமாள்
கட்டிடப்பணி சிறக்க நிலத்தின் மணலை வைத்து பூமி பூஜை செய்யப்படும் திவ்ய தேசம்
சீர்காழியிலுள்ள தாடாளப் பெருமாள் கோவில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இதை காழிச்சீராம விண்ணகரம் என்று கூறுவர். 'தாள்' என்றால் 'பூமி அல்லது உலகம்', 'ஆளன்' என்றால் 'அளந்தவன்' என்று பொருள். தன் திருவடியால் பெருமாள் மூன்று உலகங்களையும் அளந்தவர் என்பதால் இவருக்கு ஆண்டாள் இவருக்கு "தாளாளன்' என்ற பெயரை சூட்டினாள். பின்னாளில் அப்பெயர் தாடாளன் என்று மருவி விட்டது. ஒருசமயம் இத்தலம் அழிந்து போனது. அப்போது இந்தக் கோவிலில் இருந்த உற்சவ பெருமாள் விக்ரகத்தை, ஒரு மூதாட்டி தவிட்டுப்பானையில் வைத்து பாதுகாத்து வந்தார். எனவே இப்பெருமாளுக்கு தவிட்டுப்பானைத் தாடாளன் என்ற பெயர் ஏற்பட்டது. திருமங்கையாழ்வார் அம்மூதாட்டியிடம் இருந்து உற்சவ பெருமாள் விக்ரகத்தை பெற்று, மீண்டும் கோவிலில் சேர்த்தார்.
உற்சவமூர்த்தி தாடாளன் பெருமாள், மூலவர் பெருமாள் பூமியில் ஊன்றிய வலது பாதத்துக்கு முன்னே நிற்கின்றார். அதனால் மூலவர் பெருமாளின் வலது பாதத்தை நாம் தரிசிக்க முடியாது. வைகுண்ட ஏகாதசியன்று மட்டும், உற்சவரை அவருடைய இடத்திலிருந்து நகர்த்தி வைப்பார்கள். அன்றைய தினம் மட்டுமே, நாம் மூலவரின் வலது பாதத்தையும் தரிசிக்க முடியும். இந்த தரிசனம் கண்டவர்களுக்கு மறுபிறவி கிடையாதென்பது ஐதீகம்.
உலகையே ஒரு அடியில் அளந்த பெருமாள் என்பதால் இங்கு பூமி, வாஸ்து பூஜை செய்யும் முன்பு சுவாமியிடம் தங்களது நிலத்தின் மணலை வைத்து வேண்டிக்கொள்கின்றனர். இவ்வாறு செய்வதால் நிலம் சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை.

மயிலாடுதுறை மயூரநாதர் கோவில்
அக்னி கிரீடம் தரித்த சனி பகவானின் அபூர்வ தோற்றம்
மயிலாடுதுறை மாவட்டத்தின் தலைநகரான மயிலாடுதுறையின் மையப்பகுதியில் அமைந்துள்ள தேவாரத் தலம் மயூரநாதர் கோவில். இறைவியின் திருநாமம் அபயாம்பிகை. அம்பிகை மயில் வடிவில் சிவபெருமானை வழிபட்ட தலம் இது.
பொதுவாக சிவாலயங்களில் நவக்கிரகங்கள் வேதப் பிரதிஷ்டை முறையில் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் ஒரு சில தலங்களில் மட்டும் தான் அவை வேத ஆகம விதிப்படி அமைக்கப்பட்டிருக்கும். நவக்கிரகங்கள் வேதாகம விதிப்படி அமைக்கப்பட்டிருக்கும் போது, சூரிய பகவான் நடுவில் எழுந்தருளி இருப்பார். பாவக்கிரகங்களான சனி ,செவ்வாய், ராகு, கேது ஆகிய நால்வரும் வெளிச்சுற்றில் நான்கு மூலைகளில் எழுந்தருளிப்பார்கள். சுபகிரகங்களான சந்திரன்,புதன், குரு, சுக்கிரன் ஆகிய நால்வரும் சூரிய பகவானுக்கும் பாவக்கிரகங்களுக்கும் நடுவில் எழுந்தருளி இருப்பார்கள். நவகிரகங்களில் சனி பகவான் தான் வழக்கமாக அணியும் ராஜ கிரீடத்திற்கு பதிலாக, 'ஜுவாலா கேசம்' (அக்னி கிரீடம்) அணிந்திருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். பொதுவாக மாரியம்மன் போன்ற உக்கிரக நிலையில் உள்ள தெய்வங்கள் தான் அக்னி கிரீடம் அணிந்து இருப்பார்கள். இப்படி அக்னி கிரீடம் தரித்த சனி பகவானை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

இலுப்பைபட்டு நீலகண்டேஸ்வரர் கோவில்
ஐந்து மூலவர்கள் இருக்கும் தேவார தலம்
பஞ்சபாண்டவர்கள் ஐந்து பேருக்கும் சிவபெருமான் தனித்தனியே காட்சி கொடுத்த தலம்
வைத்தீசுவரன்கோவில் – திருப்பனந்தாள் சாலையில் உள்ள மணல்மேடு என்ற ஊருக்கு வடக்கே ஒரு கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தேவாரத்தலம் இலுப்பைபட்டு. இத்தலத்தின் புராண பெயர் திருமண்ணிப் படிக்கரை. சிவபெருமான் ஆலகால விஷத்தை பருகியபோது பார்வதி தேவி, சிவபெருமானின் கழுத்தை தன் கரங்களால் அழுத்தி விஷத்தை தொண்டையிலேயே நிற்கச் செய்த கோவில் இது.
பொதுவாக சிவன் கோவில்களில் ஒரு மூலவர் மட்டும்தான் இருப்பார். அரிதாக சில சிவன் கோயில்களில் இரண்டு மூலவர்கள் இருப்பார்கள். ஆனால் இக்கோவிலில் ஐந்து மூலவர்கள் அருள் பாலிப்பது ஒரு தனி சிறப்பாகும். இதன் பின்னணியில் ஒரு புராண வரலாறு உள்ளது.
பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்தபோது, இத்தலத்தில் சில காலம் தங்கியிருந்தனர். சிவபூஜை செய்ய விரும்பிய அவர்கள், இங்கு தேடிப் பார்த்தும் சிவலிங்கம் எதுவும் கிடைக்க வில்லை. எனவே, அவர்கள் ஐந்து பேரும் ஒரு இலுப்பை மரத்தின் அடியில், இலுப்பைக்காயில் விளக்கேற்றி சிவனை மானசீகமாக வணங்கினர். சிவபெருமான் அவர்கள் ஐந்து பேருக்கும், தனித்தனி மூர்த்தியாக காட்சி தந்தார். அவர்கள் சிவபெருமானிடம், தங்களுக்கு அருளியதைப் போலவே இங்கிருந்து அனைவருக்கும் அருள் செய்ய வேண்டுமென வேண்டிக் கொண்டனர். சிவபெருமானும் ஐந்து மூர்த்திகளாக எழுந்தருளினார். தற்போதும் இக்கோவிலில் ஐந்து லிங்கங்கள் தனித்தனி சன்னதியில் இருக்கின்றது.
தர்மர் வழிபட்ட சிவன் நீலகண்டேஸ்வரர், அர்ஜுனன் வழிபட்ட சிவன் படிகரைநாதர், பீமனால் வழிபடப்பட்டவர் மகதீஸ்வரர், நகுலன் வழிபட்டவர் பரமேஸ்வரர், சகாதேவன் வழிபட்டவர் முத்துகிரீஸ்வரர் என்ற பெயர்களில் அருளுகின்றனர். இவர்களில் நீலகண்டேஸ்வரர், படிகரைநாதருக்கு அம்பிகை சன்னதி உண்டு. இவர்களில் நீலகண்டேஸ்வரர், படிகரைநாதருக்கு அம்பிகை சன்னதி உண்டு. படிகரைநாதர் சன்னதியிலேயே மங்களாம்பிகை தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். மற்றொரு அம்பிகையான அமிர்தகரவல்லி தனி சன்னதியில் எழுந்தருளி இருக்கிறாள். பீமன் வழிபட்ட சிவன், சோடச லிங்கமாக, 16 பட்டைகளுடன் இருக்கிறார். பதினாறு செல்வமும் பெற இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

ஆமப்பள்ளம் பழநியாண்டீஸ்வரர் கோவில்
பழநி ஆண்டவர் கையில் தண்டத்திற்கு பதிலாக வேல் ஏந்தி இருக்கும் அபூர்வ தோற்றம்
சீர்காழியில் இருந்து 10 கி.மீ. தொலைவில், திருமுல்லைவாயில் செல்லும் வழியில் அமைந்துள்ளது ஆமப்பள்ளம் பழநியாண்டீஸ்வரர் கோவில். பல நூற்றாண்டுகள் பழமையானது இக்கோவில். கருவறையில் முருகன் பழனி ஆண்டவர் கோலத்தில் நமக்கு தரிசனம் தருகிறார். இக்கோவிலில் முருகன் மேற்கு நோக்கி எழுந்தருளி இருப்பது ஒரு சிறப்பாகும். மேலும் பழநி ஆண்டவர் கோலத்தில் இருக்கும் முருகனுக்கு கையில் தண்டத்துக்கு பதிலாக வேல் இருப்பது ஒரு தனி சிறப்பாகும்.
இத்தலத்தில் பழநி ஆண்டவர் கோலத்தில் முருகன் எழுந்தருளி இருப்பதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஆமப்பள்ளத்தில் ஒரு செல்வந்தர் வாழ்ந்து வந்தார். பழநி முருகன் மேல் பக்தி கொண்டிருந்த அவர் அடிக்கடி பழநி செல்லும் வழக்கம் கொண்டிருந்தார். பழநி முருகன் நம் ஊரில் இருந்தால், நாம் நினைத்த நேரத்தில் அவரை தரிசித்து அருள் பெறலாமே என்ற எண்ணம் ஒரு நாள் அவர் மனதில் தோன்றியது. செல்வந்தரான அவர் பழநி சென்று தங்கி, முருகன் சிலை வடிக்கச் செய்தார். சிலை உருவானது. அசப்பில் பழநி முருகன் போலவே சிலை அமைந்தது கண்டு மகிழ்ந்த அந்த செல்வந்தர், சிலையை தன் ஊரான ஆமப்பள்ளம் கொண்டு வந்தார். தனது சொத்துக்களை விற்று முருகனுக்கு ஓர் அழகிய ஆலயம் கட்டி, அதில் பழநி ஆண்டவர் சிலையை பிரதிஷ்டை செய்தார். முருகன் அன்றிலிருந்து பழநியாண்டீஸ்வரர் என்ற திருநாமத்துடன் ஆமப்பள்ளத்தில் அருள்புரியலானார்.
முருகனை ஆண்டி கோலத்தில் தரிசிப்பது, பல நன்மைகளைத் தரும். ஆண்டி கோலத்தில் தரிசனம் செய்வதால், வாழ்க்கையில் உள்ள தடைகள் விலகி, நன்மைகள் உண்டாகும்.
குடும்பத்தில் மனத்துயரங்கள் தீர இங்குள்ள முருகனை வேண்டிக் கொள்கிறார்கள். இக்கோவிலில் திருமணம், வீடுகட்டுவதற்கான தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டியும் பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். இத்தலத்தில் திருமண தடை நீங்க பெண்கள் 11 கார்திகை விரதமிருந்து முருக பெருமானை வழிபட்டு, சுமங்கலி பெண்களுக்கு வஸ்திரம் தானம் அளித்தால் உடனே திருமணம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கின்றது.

மேலத்திருமணஞ்சேரி லட்சுமிநாராயணப் பெருமாள் கோவில்
மைத்துனர் கோவில் என்றும் அழைக்கப்படும் பெருமாள் கோவில்
மடியில் லட்சுமியை அமர்த்தியபடி காட்சி தரும் பெருமாள்
மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருமணஞ்சேரி என்னும் தேவார தலத்திற்கு அருகில் அமைந்துள்ளது எதிர்கொள்பாடி லட்சுமிநாராயணப் பெருமாள் கோவில். கிழக்கில் விக்ரமன் என்னும் காவிரியாறும், மேற்கில் கிளை நதியான காளி வாய்க்காலும் அமைந்திருக்க நடுவில் அமைந்துள்ள தலம் தான் எதிர்கொள்பாடி என்று அழைக்கப்படும் மேலத்திருமணஞ்சேரி ஆகும். சோழநாட்டில் உள்ள திவ்யதேசங்களில் இத்தலம் அபிமானத்தலமாகத் திகழ்கிறது.
பார்வதி தேவி, சிவபெருமானை பூலோக முறைப்படி திருமணம் செய்ய வேண்டும் என்று விரும்பி, அவரை மணம் முடித்த தலம் தான் திருமணஞ்சேரி. திருமணஞ்சேரி தல புராணம், பார்வதி தேவி பசுவாகவும், அவளைக் கவனித்துக்கொள்வதற்காக பெருமாள் மூத்த சகோதரனாக அவளுடன் வந்ததையும் விவரிக்கின்றது. பின்னர், பார்வதி தேவி பரத முனிவரின் மகளாகப் பிறந்து சிவபெருமானை மணந்தார். அந்த திருமணத்தில் பார்வதி தேவியை கன்னிகாதானம் செய்து கொடுத்தவர் பெருமாள். அதனால் இக்கோவில் மைத்துனர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. சகோதரியின் திருமணத்துக்கு வந்திருந்த தேவர் பெருமக்களையும் முனிவர்களையும், திருமால் வரவேற்று உபசரித்த தலம் தான் எதிர்கொள்பாடி. இன்றும் வருடாந்திர கல்யாண உற்சவத்தின் போது, இக்கோவிலில் இருந்து சிவன் கோவிலுக்கு கல்யாண சீர் (திருமணப் பரிசுகள்) கொண்டு செல்லப்படுவதால் இந்த நம்பிக்கை வலுப்பெற்றது.
கருவறையில் மடியில் லட்சுமி தேவியை இருத்தியபடி பெருமாள் காட்சி தருவது ஒரு சிறப்பாகும். பெருமாள் உற்சவரின் திருநாமம் வரதராஜர்.பொதுவாக கோவில்களில் பெருமாள் கிழக்கு நோக்கி எழுந்தருளியிருப்பார். ஆனால், இங்கு பெருமாள் மேற்கு நோக்கி அருள்பாலிப்பது மேலும் ஒரு தனிச்சிறப்பாகும். இதற்கு காரணம் சிவன் பார்வதி திருமணம் நடந்தபோது, தம்பதிகளான கோகிலாம்பாளும், கல்யாண சுந்தரரும் கிழக்கு நோக்கி அமர்ந்திருந்தபோது, மைத்துனராக விஷ்ணு தன் தங்கையை திருமணம் செய்து கொடுத்ததால்,அவர்கள் முகமாக, அதாவது, மேற்கு நோக்கி அமர்ந்திருந்தார். தம்பதி சமேதராக இருந்து சிவ-பார்வதியும், ஸ்ரீ லட்சுமியும்-ஸ்ரீநாராயணரும் குடிகொண்டிருக்கும் அற்புதத் தலம் இதுவாகும்.
மடியில் லட்சுமியை அமர்த்தியபடி காட்சி தரும் லட்சுமி நாராயணரைத் தரிசித்தால் சகல பாவங்களும் பறந்தோடிவிடும் என்பது ஐதீகம்.

திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோவில்
சிவபெருமான் பார்வதி திருமணம் நடந்த தலம்
மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் திருமணஞ்சேரி. இறைவன் திருநாமம் உத்வாக நாதர். இறைவியின் திருநாமம் கோகிலாம்பாள். இத்தலத்து இறைவி கோகிலாம்பாள், கருவறையில் மணக்கோலத்தில், மணப்பெண்ணுக்குரிய நாணத்துடன் அமர்ந்து உள்ளார். திருமணஞ்சேரி என்றால் திருமணம் நடந்த இடம் என்று அர்த்தம். பூலோகத்தில் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நிகழ்ந்த இடம்தான் இந்த திருமணஞ்சேரி. சிவபெருமானுக்கு பார்வதி தேவியை கன்னிகாதானம் செய்து திருமணத்தை நடத்தி வைத்தவர் மகாவிஷ்ணு. திருமணத்திற்கு புரோகிதராக இருந்தவர் பிரம்மா.
சிவ பார்வதி திருமண நிகழ்ச்சிகள் நடந்த தலங்கள்
ஒரு சமயம் பார்வதி தேவி சிவபெருமானிடம், நாதா! தங்களை பூலோக முறைப்படி திருமணம் செய்ய என் மனம் விரும்புகிறது . அவ்விருப்பத்தை நிறைவேற்றி வைக்குமாறு வேண்ட சிவனும் சிறிது காலம் பொறுத்திருக்கும்படி கூறினார் .
தம் எண்ணம் நிறைவேற வெகுகாலம் ஆகுமென்ற எண்ணத்தில் பார்வதி சிவனிடம் அலட்சியமாக நடந்து கொள்ள, அதை கவனித்த சிவபெருமான்,நான் உன் விருப்பத்திற்கு சம்மதித்த போதும் காலம் கடக்கிறதென அலட்சியமாக நடப்பதால் எம்மைப் பிரிந்து நீ பூலோகத்தில் பசுவாக பிறப்பாய் என கட்டளையிட்டார் .
அம்பிகைக்கு பசு சாபம் கொடுக்கப்பட்ட தலம் தேரழந்தூர். திருமால் பசு மேய்ப்போனாக உருவெடுத்து, பசுக்களை பராமரித்து வந்த தலம் கோமல். ஈசனின் சாபத்தால் அம்பிகை பசுவாகி சிவனின் மீது பக்தி கொண்டு உலவி வந்தார் .அப்படி உலவி வந்தபோது, ஒரு இடத்தில் இருந்த லிங்கத்தின் மீது தினம் பாலைப் பொழிந்து அபிஷேகித்து வந்தார் . பசு உருவில் இருந்த அம்பிகையின் பாதக்குளம்புகள் பட்டு ஈசனின் உடல் மீது தழும்புகள் உண்டான ஊர் 'திருக்குளம்பம்'. பின் திருவாடுதுறையில் சிவனால் பசுவுக்கு முக்தி அளிக்கப்பட்டது.
திருந்துருத்தி எனப்படும் குத்தாலத்தில் பரத மகரிஷி பிரமாண்ட யாகவேள்வி நடத்த அந்த யாக வேள்வியில் சிவபெருமானின் அருளால் அம்பிகை தோன்றினார். தெய்வீகப் பெண் ஒருவர் வேள்வியில் வர ஆச்சர்யப்பட்டு பரத மகரிஷி நிற்க, சிவபெருமான் தோன்றி,மகரிஷியே வேள்வியில் வந்தவர் உமாதேவியே! அவரை உமது பெண்ணாக ஏற்று எமக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்யுங்கள். நான் எதிர் கொண்டு வருவேன் எனக்கூறி மறைந்தார் . இறை உத்திரவுப்படி திருமண யாகங்கள் புரிந்து மங்கள ஸ்நானமும் கங்கணதாரமும் செய்த இடம், திருவேள்விக்குடி.பின் பாலிகை ஸ்தாபனம் குருமுலைப்பாலையில் செய்யப்பட்டது.
அதன் பின்னர் மணமகளான உமாதேவியை அழைத்துக்கொண்டு சிவனை தேடி பரத மகரிஷி வர, இறைவன் மாப்பிள்ளை கோலத்தில் எதிர் கொண்டு காட்சி கொடுத்த இடமே 'திரு எதிர்கொள்பாடி' என அழைக்கபடுகிறது.
பின் மணமகனான சிவனையும் உமாதேவியையும் அழைத்துக்கொண்டு, பூலோக முறைப்படி கல்யாண வைபவம் நடந்த இடம் திருமணஞ்சேரி. திருமணத்தைகாண விண்ணவர்கள், தேவர்கள், நவகிரகங்கள் வந்தனர் . சிவபெருமானும், பார்வதி தேவியும் கைகோர்த்தபடி திருமணக் கோலத்தில் காட்சி தருவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
திருமண தடை நீக்கும் பரிகாரத் தலம்
திருமணஞ்சேரி நித்திய கல்யாண ஷேத்திரம் ஆகும். இங்கு சிவன் ஸ்ரீகல்யாண சுந்தரராக, ஸ்ரீ உத்வாக நாதராக எழுந்தருளி தன்னை நாடி வந்தோர் திருமணத்தை நடத்தி வைக்கிறார். அம்பிகை எப்படி தாம் விரும்பியவாறு சிவனை மணம் புரிந்து கொண்டாரோ, அதுபோல இங்கே வணங்குவோர்க்கு அவரவர் விருப்பம் போல திருமணம் நடைபெறுகிறது. திருமணஞ்சேரி கோவிலை தரிசித்தால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். நல்ல வரன் கிடைத்து, சிறப்பான இல்வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம்.

சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்
சனி பகவான் தன் மனைவி நீலாதேவியுடன் ராகுவின் சன்னதியில் இருக்கும் அபூர்வ காட்சி
சீர்காழியில், சிரபுரம் பகுதியில் அமைந்துள்ளது நாகேஸ்வரமுடையார் கோவில். இறைவியின் திருநாமம் பொன்நாகவள்ளி. இத்தலத்து இறைவனை வழிபட்டு ராகு பகவான் கிரக பதவி அடைந்தார்.இத்தலத்தில் ராகு பகவானுக்கும், கேது பகவானுக்கும் தனித்தனி சன்னதிகள் இருப்பது, ஒரு தனி சிறப்பாகும்.
சனிபகவான், ராகுவின் நண்பர் என்பதால், இக்கோவிலில் சனி பகவான் தன் மனைவி நீலாதேவியுடன் ராகுவின் சன்னதியில் எழுந்தருளி இருக்கிறார். இப்படி சனி பகவான் தன் மனைவியுடனும், ராகுவுடனும் இருப்பது, வேறு எந்த தலத்திலும் காணக் கிடைக்காத அபூர்வ காட்சி ஆகும்.
இக்கோவில் சிறந்த ராகு, கேது பரிகார தலமாகும். ஞாயிற்றுக்கிழமை ராகுகால நேரமான மாலை 4.30 மணியளவில் இக்கோவிலில் உள்ள விநாயகர், சுவாமி அம்பாள் ஆகியோரை வணங்கியபின், ராகுபகவானின் சன்னதியில் மாக்கோலமிட்டு தோல் நீக்காத முழு உளுந்து பரப்பி, அதன்மீது நெய்தீபம் ஏற்றி, அறுகம்புல் மற்றும் மந்தாரை மலர்களால் பூஜிக்க வேண்டும். அதோடு ராகுபகவானின் சன்னதியை வலமிருந்து இடமாக (அப்பிரதட்சணம்) ஒன்பது முறையும் அடிபிரதட்சணம் செய்து பதினொரு வாரங்கள் வழிபடவேண்டும். இதனால் ஜனனகால ஜாதகத்தில் ராகுபகவான் பாதகமான இடத்தில் அமைந்ததால் ஏற்படக்கூடிய திருமணத்தடை, களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம், நாகதோஷம், காலசர்ப்ப தோஷம் முதலிய தோஷங்கள் நீங்கி, நன்மைகள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோவில்
பள்ளியறை இல்லாத, பள்ளியறை பூஜை நடைபெறாத தேவார தலம்
சீர்காழியில் இருந்து 14 கி.மீ. தொலைவில் வங்கக் கடலோரம் அமைந்துள்ள தேவாரத் தலம், திருமுல்லைவாசல். இறைவன் திருநாமம் முல்லைவனநாதர், மாசிலாமணீசர். இறைவியின் திருநாமம் அணிகொண்ட கோதையம்மை. சத்தியானந்த சவுந்தரி.
எல்லா பெரிய சிவத்தலங்களிலும் பள்ளியறை உண்டு. தினமும் அதிகாலை வேளையிலும், இரவு வேளையிலும் பள்ளியறை பூஜை நடப்பது வழக்கம். ஆனால் இக்கோவிலில் பள்ளியறை இல்லை. பஞ்சாட்சர மந்திரம் பற்றி அறிந்து கொள்ள இங்குள்ள முல்லைவன நாதரை அம்பாள் வழிபட்டதால், சிவபெருமான் குருவாக இருந்து அம்பாளுக்கு உபதேசித்தார். எனவே இத்தலத்தில் சிவபெருமான் குருவாக வீற்றிருக்கிறார். உமாதேவி வழிபட்டுத் தட்சிணாமூர்த்தியிடம் ஐந்தெழுத்து உபதேசம் பெற்ற தலமாதலால், இங்கு பள்ளியறை பூஜையும் நடத்துவது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இது மற்ற சிவன் கோவிலில் இருந்து மாறுபட்ட நடைமுறையாகும். சூரிய, சந்திர கிரகணம், அமாவாசை காலங்களில் இங்கு வந்து பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபிப்பவர்களுக்கு மறு பிறப்பில்லை என்பது ஐதீகம்.

கிடாத்தலைமேடு துர்காபுரீஸ்வரர் கோவில்
மூக்குத்தி அணிய சிற்பியிடம் சிலையில் திருத்தம் செய்ய சொன்ன துர்க்கை அம்மன்
மயிலாடுதுறையிலிருந்து சுமார் 16. கி.மீ. தொலைவிலும், திருமணஞ்சேரியில் இருந்து 3.கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது, கிடாத்தலைமேடு துர்காபுரீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் காமுகாம்பாள். ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது இக்கோவில். கிடாத்தலையோடு கூடிய மகிஷாசுரன் தேவர்களைக் கொடுமைப்படுத்தியபோது, அவர்கள் வந்து அபயம் அடையவே துர்க்கை அம்மன், அவனுடைய தலையை வெட்டினாள். அந்தத் தலை விழுந்த இடம் கிடாத்தலைமேடு என்றழைக்கப்படுகிறது.
துர்க்கை அம்மன், மகிஷாசுரனை வதம் செய்த பிறகு தனக்கேற்பட்ட தோஷத்தைப் போக்கிக்கொள்ள இந்தத் தலத்திலுள்ள சிவபெருமானை வழிபாடு செய்தார். துர்க்கை அம்மனின் தோஷத்தைப் போக்கியதால், இந்தத் தலத்து இறைவனுக்கு துர்காபுரீஸ்வரர் என்னும் திருநாமம் ஏற்பட்டது.
இத்தலத்தில் தனி சன்னிதியில், துர்க்கை அம்மன், கிடா வடிவிலுள்ள மகிஷனின் தலை மீது நின்ற திருக்கோலத்தில், சிம்ம வாகனத்தில் எட்டு கரங்களுடன் காட்சியளிக்கிறாள். இரண்டு கரங்களில் வரத அபய முத்திரையும், ஐந்து கரங்களில் சக்கரம், பானம், கத்தி உள்ளிட்டவற்றை கேடயமாக தரித்தும் ஓர் இடது கரத்தை தொடையில் பதித்த ரூபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.
மூக்குத்தி அணியும் துர்க்கை அம்மன்
இங்கு எழுந்தருளியுள்ள துர்க்கைக்கு அழகான மூக்குத்தி ஒன்று அணிவிக்கப்படுகிறது. இந்த மூக்குத்தி அணிவதற்கென்று துர்கை அம்மனின் இடது நாசியில், ஒரு சிறு துவாரம் ஒன்று காணப்படுகிறது. இதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான கதை உள்ளது. துர்கையம்மனை பிரதிஷ்டை செய்ய தீர்மானித்து, சிற்பியிடம் ஒரு துர்க்கை அம்மனின் திருவுருவ சிலை ஒன்றை வடிவமைக்க சொன்னார்கள்.
சிற்பியும் அழகான துர்க்கை சிலையை வடிவமைத்தார். ஒரு நாள் இரவில், சிற்பியின் கனவில் தோன்றிய துர்க்கை அம்மன், 'எனக்கு ஒரு அழகான மூக்குத்தியினை அணிவிக்க வேண்டும். அதற்கு ஏற்றவாறு சிலையில் நாளை ஒரு திருத்தம் செய்' என்று அம்பாள் சொன்னதும், திடுக்கிட்ட சிற்பி, 'வேலைகள் அனைத்தும் பூர்த்தி ஆகி விட்டதே. இந்த நேரத்தில் நாசியில் நான் உளியை வைத்தால் சிலை பின்னமாகிவிடாதா?' என்று நடுக்க குரலில் சிற்பி கேட்டான்.
துர்க்கை அம்மன் மெல்லிய சிரிப்புடன் 'வருந்தாதே.. என் நாசியின் மீது உன் உளியை மட்டும்வை. பிறகு எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொல்லி மறைந்தாள். மறுநாள் காலையில், துர்க்கை அம்மன் கூறியதை போலவே, அம்மன் சிலையில் இருக்கும் நாசி பகுதியில் உளியை வைத்தான். என்ன அற்புதம்! அடுத்த கணமே தானாகவே அங்கு மிகச் சிறிய ஒரு துவாரம் ஏற்பட்டது. நடந்த எல்லாவற்றையும் ஊர் பெரியோர்களிடம் சிற்பி தெரிவித்தார். அன்று முதல் துர்க்கை அம்மனுக்கு மூக்குத்தி அணிவிக்கும் வழக்கம் ஏற்பட்டது.
துர்க்கை அம்மனின் திருமுகத்தில் அரும்பும் வியர்வைத் துளிகள்
இன்னொரு ஆச்சரியமான தகவல் என்னவென்றால், விழாக் காலங்களில் துர்க்கை அம்மனின் திருமுகத்தில் வியர்வைத் துளிகள் அரும்புகின்றன. அதே போல், துர்கைக்கு நேர் எதிரே சுமார் 20 அடி உயரத்தில் சூலம் ஒன்றும் உள்ளது. சூலத்தின் அடிபாகம் 20 அடி ஆழம் வரை பூமிக்கு அடியில் செல்கிறது. துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் நடக்கும் போதெல்லாம், இந்த சூலத்திற்கும் அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன.
இவை தவிர, ஐந்தடி நீளத்தில் ஒரு சூலமும், ஒரு அடி நீளத்தில் மற்றுமொரு சூலமும் உள்ளன. இதனை ஸ்ரீ சாமுண்டேஸ்வரியின் வடிவமாக பார்க்கப்படுகிறது. எலுமிச்சை பழத்தில் சிறிதளவு தேனை தடவி இந்த சூலத்தில் குத்தி வழிபட்டு வந்தால், ஏவல், பில்லி, சூனியம் விலகும். மேலும், சூலத்திற்கு அபிஷேகங்கள் செய்து வழிபட்டால், கால்நடைகளுக்கு ஏற்பட்டிருக்கும் கொடிய நோய்கள் அகன்றுவிடும்.
சுவாசினி பூஜைக்கு சுமங்கலியாக வந்த துர்க்கை அம்மன்
1990-ல், 300 சுமங்கலியை அழைத்து 'சுவாசினி பூஜை' நடத்த துர்க்கை சந்நதியில் ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆனால், 299 சுமங்கலிகள் மட்டுமே பூஜைக்கு வந்திருந்தனர். மனமுருகி துர்க்கையிடம் வேண்டிக் கொண்டனர் விழாவின் ஏற்பாட்டாளர். சரியாக பூஜைகளை ஆரம்பிக்கும் முன்பாக, ஒரு வயதான சுமங்கலியாக வந்திருந்து பூஜைகளில் கலந்து கொண்டு, மங்கள பொருட்களை பெற்றுக் கொண்டு, உணவை உண்டு அதன் பின் மறைந்துவிட்டார்.
விழா ஏற்பாட்டாளர்கள் எங்கு தேடியும், அந்த வயதான சுமங்கலியை காணவில்லை. திடீர் என்று ஒரு பக்தைக்கு அருள் வரவே 'அந்த வயதான சுமங்கலி பெண்ணாக வந்தது நான்தான்’ (துர்க்கை) என்றும், விழா திருப்தியாக இருந்ததாகவும் கூற, அனைவரும் மெய்சிலிர்த்து போனார்கள்.
தோஷங்களை நிவர்த்தி செய்யும் துர்க்கை அம்மன்
கன்னி தோஷம், காள தோஷம், நாக தோஷம், திருமண ஸ்தான தோஷம் போன்ற தோஷங்களை நிவர்த்தி செய்து அருள்கிறாள் இந்த துர்க்கை அம்மன்.

கிடாத்தலைமேடு துர்காபுரீஸ்வரர் கோவில்
மன்மதனுக்கு கரும்பு வில்லையும், புஷ்ப பானங்களையும் மீண்டும் வழங்கிய காமுகாம்பாள்
கணவன் மனைவி ஒற்றுமைக்கு வேண்டிக் கொள்ளும் தலம்
மயிலாடுதுறையிலிருந்து சுமார் 16. கி.மீ. தொலைவிலும், திருமணஞ்சேரியில் இருந்து 3.கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது, கிடாத்தலைமேடு துர்காபுரீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் காமுகாம்பாள். ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது இக்கோவில்.
ஒரு சமயம் கயிலாயத்தில் தவத்திலிருந்த சிவபெருமானின் கவனத்தை பார்வதி தேவியின் பக்கம் திருப்புவதற்காக, சிவபெருமான் மீது காமதேவனாகிய மன்மதன் மலர்க்கணையை ஏவினான். இதனால் தவம் கலைந்து கோபமுற்ற சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணால் மன்மதனை அங்கேயே எரித்து சாம்பலாக்கினார். தனது கணவனுக்கு ஏற்பட்ட கதியைப் பார்த்து வருந்திய ரதி தேவி, பொன்னூர் என்னும் இடத்தில் ஒரு தவச்சாலை அமைத்து தவமிருந்தார். பிறகு சிவபெருமான் திருமணக் கோலத்தில் அருளும் திருமணஞ்சேரிக்கு வந்து அவரை தரிசித்த ரதி தேவி தனது கணவனை உயிர்ப்பிக்க வேண்டி சிவபெருமானிடம் மன்றாடினாள்.
ரதி தேவியின் பக்திக்கு இரங்கிய சிவபெருமான், மன்மதனை உயிர்ப்பிக்கிறார். சிவனால் உயிர்ப்பிக்கப்பட்ட மன்மதன் இந்த துர்காபுரீஸ்வரர் தலத்தில் உறையும் ஈசனை கண்டு வணங்கி, பார்வதி தேவியையும் வழிபடுகிறான். மன்மதனின் பக்தியைக் கண்டு மனம் இரங்கிய பார்வதி தேவி, அவனுக்குக் தன் கையில் இருந்த கரும்பு வில்லையும், புஷ்ப பானங்களையும் மீண்டும் வழங்குகிறார். காமனாகிய மன்மதனுக்கு அருள்பாலித்ததால் இந்தத் தலத்தில் அம்பாளுக்கு ஸ்ரீ காமுகாம்பாள் என்னும் திருநாமம் ஏற்பட்டது. எல்லோருடைய காமமான துன்பத்தை போக்குவதாலும் இந்தப் பெயர் ஏற்பட்டது. மேலும், ரதிதேவிக்கு மாங்கல்ய பாக்கியத்தை அளித்தவள் இந்த ஸ்ரீகாமுகாம்பாள் அம்பிகை.
மன்மதனுக்கு அருள்பாலித்த தலமாதலால் இது கணவன் மனைவி ஒற்றுமைக்கு வேண்டிக் கொள்ளும் தலமாகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோவில்
பெருமாள் தாயார் திருக்கோலத்திலும், தாயார் பெருமாள் திருக்கோலத்திலும் காட்சி தரும் 'மாற்றுத் திருக்கோலம்' சேவை
மயிலாடுதுறை நகரில் அமைந்துள்ள திவ்யதேசம் திருஇந்தளூர். பெருமாள் திரு நாமம் பரிமளரங்கநாதர்.தாயாரின் திருப்பெயர் பரிமளரங்கநாயகி, சந்திரசாபவிமோசனவல்லி. பஞ்சரங்க தலங்களில், இத்தலம் பஞ்சரங்கம் என்று அழைக்கப்படுகிறது. காவிரி நதிக்கரையில் அமைந்துள்ள ஐந்து மேடான நதித்தீவுகள் அல்லது நதித்திட்டுகள் பஞ்சரங்க தலங்கள் சென்று அழைக்கப்படுகின்றன. ரங்கம் என்றால் ஆறு பிரியும் இடத்தில் உள்ள மேடான பகுதி என்று பொருள்.
திருஇந்தளூர் பரிமள ரங்கநாதருக்கு தை அமாவாசையன்று பரிமள ரங்கநாதருக்கு தாயாரைப் போலவும், தாயாரான சந்திர சாப விமோசனவல்லிக்கு பெருமாளைப் போலவும் அலங்காரம் செய்வார்கள். இதனை 'மாற்றுத் திருக்கோலம்' என்று அழைப்பார்கள்.
'மாற்று திருக்கோலம்' என்பது, பெருமாள் மற்றும் நாச்சியார் ஆகியோரின் திருக்கோலம் ஆகும். இது, பெருமாள் நாச்சியார் திருக்கோலம் அல்லது தாயார் பெருமாள் திருக்கோலம் என்றும் அழைக்கப்படுகிறது.

மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கோவில்
சிவப்பு நிற சேலை உடுத்தும் அபூர்வ சிவலிங்கம்
மயிலாடுதுறையில் அமைந்துள்ள தேவாரத்தலம் மாயூரநாத சுவாமி கோவில். அம்பிகையின் திருநாமம் அபயாம்பிகை. அம்பிகை இறைவனை மயில் வடிவில் வழிபட்டதாலும், மயில் வடிவாகவே ஆடியதாலும் இத்தலம் மயிலாடுதுறை என்றாயிற்று.
அம்பாள் அபயாம்பிகை சன்னதிக்கு வலப்புறத்தில் அனவித்யாம்பிகை' என்ற பெண் பெயர் கொண்ட ஒரு சிவலிங்கம் இருக்கிறது. இந்த சிவலிங்கத்திற்கு சிவப்பு நிற சேலைதான் கட்டுகின்றனர். இதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி உள்ளது.
முன்னொரு காலத்தில் திருவையாறில் நாதசர்மா, அனவித்யாம்பிகை எனும் தம்பதியர் வசித்து வந்தனர். இவர்கள் தீவிர சிவ பக்தர்கள். இவர்களுக்கு நீண்ட காலமாக, காவிரிக்கரையிலுள்ள, மயிலாடுதுறை மாயூரநாத சுவாமியைத் தரிசிக்க வேண்டும் என்பது ஆசை. அங்கே ஐப்பசி மாதம் முழுவதும் நடைபெறும் துலா ஸ்நானம் விழாவில் கலந்து கொண்டு காவிரியில் நீராட வேண்டும் என்பது அவர்களின் விருப்பம். ஆனால் அவர்கள் வருவதற்குள் ஐப்பசி 30ம் நாள் ஸ்நானம் முடிந்து விட்டது. எனவே வருத்தத்துடன் மயிலாடுதுறையில், மாயூரநாத சுவாமியை வேண்டி தங்கினர். அன்றிரவில் நாதசர்மாவின் கனவில் தோன்றிய சிவபெருமான், மறுநாள் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு நீராடினாலும், பாவம் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்றார் அதன்படியே மறுநாள் அத்தம்பதியர் காவிரியில் மூழ்கி பாவம் நீங்கப் பெற்றனர். இதன் அடிப்படையில் கார்த்திகை முதல்நாளன்று அதிகாலையிலும் இங்கு நீராடும் வழக்கம் இருக்கிறது தம்பதியர்களுக்காக சிவபெருமான் வழக்கமான நேரத்தை முடக்கி வைத்ததால் இதனை ‘முடவன் முழுக்கு' என்கின்றனர்.
அத்தம்பதியர் இக்கோவிலில் சிவபெருமானுடன் ஐக்கியமாயினர். நாதசர்மா ஐக்கியமான லிங்கம் மேற்கு பார்த்தபடி, நாதசர்மா என்ற அவரது பெயரிலேயே இருக்கிறது. அவரது மனைவி ஐக்கியமான லிங்கம், அம்பாள் சன்னதிக்கு வலப்புறத்தில் ‘அனவித்யாம்பிகை’ என்ற பெயரில் இருக்கிறது. பொதுவாக, சிவலிங்கத்துக்கு வேட்டி அணிவிப்பதே வழக்கம். ஆனால், அனவித்யாம்பிகை லிங்கத்திற்கு சிவப்பு நிற சேலைதான் கட்டுகின்றனர். இது ஒரு வித்தியாசமான நடைமுறையாகும். ஆணும், பெண்ணும் சமம் என்பதை இந்த வடிவம் உணர்த்துவதாக சொல்கிறார்கள்.

சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் கோவில்
சீர்காழி திரிபுரசுந்தரி அம்மன்
திரிபுரசுந்தரி என்பது, மூவுலகிலும் பேரழகி என்றும், அரசர்க்கெல்லாம் அரசி என்றும் பொருள்படும். இந்த அம்மனின் மற்ற திருநாமங்கள் திருநிலைநாயகி, ஸ்திரநாயகி, பெரியநாயகி. எத்தகைய துன்பத்திலும் சிக்கலிலும் நம்மை நிலைகுலைய விடாமல், நமக்கு ஸ்திரதன்மையை தருபவர் என்று பொருள்.
தேவாரம் பாடிய மூவரில் ஒருவரான திருஞானசம்பந்தர். 7-ம் நூற்றாண்டில் இந்த தலத்தில் சிவபாத இருதயருக்கும் பகவதியம்மைக்கும் மகனாக அவதரித்தவர். குழந்தை சம்பந்தருக்கு மூன்று வயது இருக்கும்போது ஒரு நாள், சிவபாத இருதயர் குழந்தை சம்பந்தருடன் இக்கோவில் பிரம்மதீர்த்தக் குளத்திற்கு நீராட வந்தார். குளக்கரையில் சம்பந்தரை விட்டுவிட்டு நீராடச் சென்றார். வெகு நேரமாகி தந்தை வராததாலும் பசியினாலும் குழந்தை சம்பந்தர் அழத் தொடங்கினார். அதைக் கண்ட சிவபெருமான் குழந்தையின் பசியாற்றும்படி உமாதேவியை பணித்தார். சிவபெருமான் விரும்பியபடி, உமாதேவி சிவஞானத்தை அமுதமாகக் குழைத்து பாலாகக் கொடுக்க, அதை உண்ட ஞானசம்பந்தர் இறையருள் பெற்றார். குழந்தையின் வாயில் பால் வழிவதைக் கண்ட தந்தை, பால் கொடுத்தது யார் என்று வினவினார்.
'தோடுடைய செவியன்' என்று தொடங்கும் பதிகத்தை சம்பந்தர் பாடி, பாலூட்டியது உமாதேவியென்றும் தான் இறையருள் பெற்றதையும் கூறினார். சம்பந்தரின் முதல் தேவாரப் பதிகம் இதுதான்.
சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு,குழந்தை சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டிய வரலாற்றை நினைவு படுத்தும் விதமாக, சீர்காழியில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள் திருவிழா, திருமுலைப்பால் உற்சவம் என்று கொண்டாடப்படுகிறது. இந்த உற்சவம் திருவாதிரை நட்சத்திரத்தன்று, பிரம்ம தீர்த்தத்தின் கரையில் நடக்கிறது. அன்றைய தினம் ஞானசம்பந்தருக்கு நைவேத்யம் செய்த பாலை பிரசாதமாக சாப்பிட்டால் மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம்.

திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில்
உடலில் காயங்களுடன் காட்சியளிக்கும் நந்திதேவர்
சீர்காழியில் இருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருவெண்காடு. இறைவன் திருநாமம் சுவேதாரண்யேசுவரர், திருவெண்காடர். இறைவியின் திருநாமம் பிரம்ம வித்யாம்பிகை. நவகிரக தலங்களில் இது புதனுக்குரிய தலமாகும்.
இத்தலத்தில் சுவேதாரண்யேசுவரர் சுவாமி சன்னதி முன் உள்ள நந்தி, உடலில் காயங்களுடன் காட்சி அளிக்கிறார். அவர் உடலில் ஏற்பட்ட காயங்கள், மருத்துவாசுரன் என்னும் அரக்கனால் ஏற்பட்டது.
மருத்துவாசுரன் என்னும் அசுரன் பிரம்ம தேவரிடம் பெற்ற வரத்தால், தேவர்களுக்கு பல துன்பம் விளைவித்தான். சிவபெருமான் அருளியபடி தேவர்கள் திருவெண்காட்டில் வேற்றுருவில் வாழ்ந்து வந்தனர். மருத்துவாசுரன், திருவெண்காட்டிற்கும் வந்து போர் செய்ய, வெண்காட்டீசர் முதலில் நந்தியை ஏவினார். அசுரன் நந்தியிடம் தோற்றுப் பின், சிவபெருமானை நோக்கித் தவமிருந்து, சூலாயுதத்தை வேண்டிப் பெற்று மீண்டும் போருக்கு வந்து நந்தியை சூலத்தால் தாக்கி காயங்களை ஏற்படுத்தினான். நந்தியை அந்த அசுரன் ஒன்பது இடங்களில் ஈட்டியால் குத்தியதாக வரலாறு உள்ளது. இது பற்றி நந்தி, திருவெண்காடரிடம் முறையிட, அவர் கோபம் கொண்டார். அப்போது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றிலிருந்து அகோரமூர்த்தி தோன்றினார். அகோர உருவைக் கண்ட மாத்திரத்திலேயே மருத்துவாசுரன் சரணாகதி அடைந்தான். சரணடைந்த மருத்துவாசுரனை அகோரமூர்த்தியின் காலடியில் காணலாம். காயம் பட்ட நந்திதேவரை சுவேதாரண்யேசுவரர் ஆட்கொண்டார்.
நந்திதேவர் உடம்பில் ஒன்பது இடங்களில், ஈட்டியால் குத்துப்பட்ட துளைகளை நாம் இன்றும் நந்திக்கு அபிஷேகம் நடைபெறும் போது பார்க்க முடியும்.

திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில்
எந்த சிவாலயத்திலும் காண முடியாத அகோரமூர்த்தி எழுந்தருளி இருக்கும் தேவார தலம்
சீர்காழியில் இருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருவெண்காடு. இறைவன் திருநாமம் சுவேதாரண்யேசுவரர், திருவெண்காடர். இறைவியின் திருநாமம் பிரம்ம வித்யாம்பிகை. நவகிரக தலங்களில் இது புதனுக்குரிய தலமாகும்.
திருவெண்காடு தலத்தின் தனிச்சிறப்பு அகோரசிவன் மூர்த்தியாவர். இந்தியாவில் வேறு எந்த சிவாலயத்திலும் இத்தகைய அகோர மூர்த்தியை காண இயலாது. சிவபெருமானின் 64 வித உருவங்களில் இது 43 வது உருவம் ஆகும். சரணடைந்தவர்களைக் காப்பதில் இவருக்கு நிகர் இவரே என்பதால் அகோரமூர்த்தி எனப்படுகிறார். இவர் மருத்துவாசுரனை அடக்குவதற்காக சிவபெருமானின் ஈசானிய முகத்திலிருந்து தோன்றியவர். இக்கோவிலின் மேலை பிரகாரத்தில் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இவர் கரிய திருமேனி உடையவர். இடது காலை முன்வைத்து வலது கால் காட்டை விரலையும் அடுத்த விரலையும் ஊன்றி நடக்கிற கோலத்தில் உள்ளார். எட்டுக்கரங்களும் ஏழு ஆயுதங்களும் உடைய வீரக்கோலம் பூண்டுள்ளார். கைகளில் வேதாளம், கத்தி, உடுக்கை, கபாலம், கேடயம், மணி, திரிசூலம் ஆகிய ஆயுதங்களை தாங்கியுள்ளார். சிவந்த ஆடைகளை அணிந்தும், தீப்பிழம்பு போன்ற எரிசிகைகளுடன், நெற்றிக்கண் நெருப்பைக் கக்க, கோரைப்பற்களுடன், பதினான்கு நாகங்கள் திருமேனியில் பூண்டு, மணிமாலை அணி செய்யக் கம்பீரமாகக் காட்சி தருகிறார்.
இவரை அடுத்துள்ள சன்னதியில் இவரது உற்சவ திருமேனியைக் காணலாம். மூலவரைப் போலவே உற்சவரும், நடப்பவர் ஒருவர் இடது காலை முன்வைத்து எப்படி வலது காலைப் பெயர்த்து அடியெடுத்து வைக்க முனைவாரோ அதே போல் தன் நடையழகைக் காட்டும் விதமாக உள்ளார் என்பது சிறப்பு.
மாசி மாதம் கிருஷ்ணபட்சம் பிரதமை திதி, பூர நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமை இரவு 12.00 மணிக்கு அகோரமூர்த்தி தோன்றினார். இதே காலத்தில் ஆண்டுதோறும் அகோரமூர்த்தி மருத்துவாசுரனை அடக்கும் ஐந்தாம் திருவிழாவாக நடைபெறுகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவிலும் அகோரமூர்த்தி பூஜை நடைபெற்று வருகின்றது.
இவரை வணங்கினால் முன் ஜென்ம வினைகள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.

மயிலாடுதுறை வதாரண்யேசுவரர் கோவில்
தட்சிணாமூர்த்தி முன் நந்திதேவர் அமர்ந்திருக்கும் அபூர்வ கோலம்
மயிலாடுதுறை நகரில் அமைந்துள்ள வதாரண்யேசுவரர் கோவில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவத்தலங்களில் ஒன்று. இக்கோவில் வள்ளலார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை. இக்கோவில் பிரசித்தி பெற்ற ஒரு குரு பரிகாரத் தலமாகும்.
இக்கோவிலில், ரிஷபத்தின் மீது அமர்ந்து ஞானம் உபதேசிக்கும் தட்சிணாமூர்த்தியைக் காணலாம். இந்த வடிவை மேதா தட்சிணாமூர்த்தி என்பர். பொதுவாக சிவன் கோவில்களில் நந்தி, மூலவரான லிங்கத்திருமேனி முன்பு அமர்ந்திருப்பார். ஆனால் இக்கோவிலில் தட்சிணாமூர்த்திக்கு முன்பாக நந்தி காணப்படுவது தனிச்சிறப்பாகும். .இந்த தட்சிணாமூர்த்தி, மேதா தட்சிணாமூர்த்தி எனப்படுகிறார்.
ஒரு சமயம், ரிஷப தேவர் தன்னைப் பற்றி மிகவும் பெருமிதம் கொண்டார், சிவபெருமானை சுமந்து செல்வதால் தான் மற்றவர்களை விட உயர்ந்தவர் என்று கர்வம் கொண்டார். சிவபெருமான் அவருக்கு பாடம் கற்பிக்க முடிவு செய்து, ரிஷப தேவரின் முதுகில் தன்னுடைய சடையின் ஒரு முடியை வைத்தார். ரிஷப தேவர் அந்த ஒரு முடியின் எடையைத் தாங்க முடியாமல், தனது முட்டாள்தனத்தை உணர்ந்தார். சிவபெருமானை வணங்கி மன்னிப்புக் கோரினார். சிவபெருமான் அவரை மன்னித்தது மட்டுமல்லாமல், தெய்வீக அறிவையும் அவருக்கு அருளினார். இங்குள்ள இறைவன் தம் பக்தர்களுக்கு அறிவு, செல்வம், ஆரோக்கியம் ஆகியவற்றை அருளுவதால் வள்ளலார் என்று அழைக்கப்படுகிறார். தமிழ் மொழியில், வள்ளல் என்றால் மிகுதியாக கொடுப்பவர் என்று பொருள். இறைவன் நந்தியின் மீது அமர்ந்து, தன் எதிரில் அமர்ந்திருக்கும் ரிஷப தேவருக்கு அறிவை அருளுகிறார். ரிஷபதேவர், தர்மத்தின் வடிவம். தர்மத்தின் பொருளை உபதேசிக்கும் மேதா தட்சிணாமூர்த்தியுடன், ரிஷப தேவரையும் சேர்த்து வழிபடுவது சிறப்பு. மேதா என்றால் அறிவு அல்லது ஞானம். இந்த கோவிலில், மேதா தட்சிணாமூர்த்தி தனது வலது கையில் 'சின் முத்திரை' மற்றும் இடது கையில் புத்தகம் ஏந்தியவாறு காட்சியளிக்கிறார். குருபகவான் இங்குள்ள தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பக்தர்களுக்கு வரம் அருளும் ஆற்றல் பெற்றதால் இத்தலம் குரு பரிகாரத் தலமாக விளங்குகின்றது. அதனால் குருபெயர்ச்சி இங்கு ஒரு முக்கியமான திருவிழாவாகும். குருபெயர்ச்சியின் போது தொலைதூர மற்றும் வெளியூர்களில் இருந்து பக்தர்கள் இங்கு திரளுவார்கள்
காவிரியில் நந்தி நீராடிய இடம், ரிஷப தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. ஆற்றின் நடுவே நந்திக் கோவில் உள்ளது. இங்கு நீராடினால் கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, தாமிரபரணி ஆகிய ஆறுகளில் நீராடிய பலன் கிடைக்கும். அவ்வாறே குருசேத்திரம்,பிரயாகை ஆகிய இடங்களில் தானம் செய்ததற்கு நிகரான பலன் கிடைக்கும்.

திருநாங்கூர் மதங்கீசுவரர் கோவில்
கருவறையில் ஊஞ்சலில் ஆடும் காளியம்மன்
சீர்காழியில் இருந்து 10 கி.மீ.தொலைவில் உள்ளது திருநாங்கூர் மதங்கீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் 'ராஜமாதங்கீசுவரி,
இக்கோவில் பிரகாரத்தின் வடக்கு புறத்தில் 'ஆனந்த வடபத்ரமாகாளியம்மன்' தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். மரத்தினால் ஆன திருமேனி உடையவள். தனது எட்டு கைகளிலும் வெவ்வேறு ஆயுதங்களை ஏந்தியபடி அருளுகிறாள். கருவறையில் இவள் ஊஞ்சல் மீது அமர்ந்தபடி காட்சி தருகிறாள். இப்படி கருவறையில் ஊஞ்சலில் அமர்ந்து காட்சி தரும் அம்மனை வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாது. ஊஞ்சலில் ஆடும்போது இந்தக் காளியம்மனின் தரிசனம் பெறுவது விசேஷம். பவுர்ணமியில் காளி சன்னதியில் மாவிளக்கு ஏற்றி, சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம் படைத்து வணங்குகின்றனர். பத்ரகாளி அம்மனின் மூலவர் விக்கிரகமே விழாக்காலங்களில், வீதி உலாவிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.