ஆமப்பள்ளம் பழநியாண்டீஸ்வரர் கோவில்
பழநி ஆண்டவர் கையில் தண்டத்திற்கு பதிலாக வேல் ஏந்தி இருக்கும் அபூர்வ தோற்றம்
சீர்காழியில் இருந்து 10 கி.மீ. தொலைவில், திருமுல்லைவாயில் செல்லும் வழியில் அமைந்துள்ளது ஆமப்பள்ளம் பழநியாண்டீஸ்வரர் கோவில். பல நூற்றாண்டுகள் பழமையானது இக்கோவில். கருவறையில் முருகன் பழனி ஆண்டவர் கோலத்தில் நமக்கு தரிசனம் தருகிறார். இக்கோவிலில் முருகன் மேற்கு நோக்கி எழுந்தருளி இருப்பது ஒரு சிறப்பாகும். மேலும் பழநி ஆண்டவர் கோலத்தில் இருக்கும் முருகனுக்கு கையில் தண்டத்துக்கு பதிலாக வேல் இருப்பது ஒரு தனி சிறப்பாகும்.
இத்தலத்தில் பழநி ஆண்டவர் கோலத்தில் முருகன் எழுந்தருளி இருப்பதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஆமப்பள்ளத்தில் ஒரு செல்வந்தர் வாழ்ந்து வந்தார். பழநி முருகன் மேல் பக்தி கொண்டிருந்த அவர் அடிக்கடி பழநி செல்லும் வழக்கம் கொண்டிருந்தார். பழநி முருகன் நம் ஊரில் இருந்தால், நாம் நினைத்த நேரத்தில் அவரை தரிசித்து அருள் பெறலாமே என்ற எண்ணம் ஒரு நாள் அவர் மனதில் தோன்றியது. செல்வந்தரான அவர் பழநி சென்று தங்கி, முருகன் சிலை வடிக்கச் செய்தார். சிலை உருவானது. அசப்பில் பழநி முருகன் போலவே சிலை அமைந்தது கண்டு மகிழ்ந்த அந்த செல்வந்தர், சிலையை தன் ஊரான ஆமப்பள்ளம் கொண்டு வந்தார். தனது சொத்துக்களை விற்று முருகனுக்கு ஓர் அழகிய ஆலயம் கட்டி, அதில் பழநி ஆண்டவர் சிலையை பிரதிஷ்டை செய்தார். முருகன் அன்றிலிருந்து பழநியாண்டீஸ்வரர் என்ற திருநாமத்துடன் ஆமப்பள்ளத்தில் அருள்புரியலானார்.
முருகனை ஆண்டி கோலத்தில் தரிசிப்பது, பல நன்மைகளைத் தரும். ஆண்டி கோலத்தில் தரிசனம் செய்வதால், வாழ்க்கையில் உள்ள தடைகள் விலகி, நன்மைகள் உண்டாகும்.
குடும்பத்தில் மனத்துயரங்கள் தீர இங்குள்ள முருகனை வேண்டிக் கொள்கிறார்கள். இக்கோவிலில் திருமணம், வீடுகட்டுவதற்கான தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டியும் பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். இத்தலத்தில் திருமண தடை நீங்க பெண்கள் 11 கார்திகை விரதமிருந்து முருக பெருமானை வழிபட்டு, சுமங்கலி பெண்களுக்கு வஸ்திரம் தானம் அளித்தால் உடனே திருமணம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கின்றது.