சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்

சனி பகவான் தன் மனைவி நீலாதேவியுடன் ராகுவின் சன்னதியில் இருக்கும் அபூர்வ காட்சி

சீர்காழியில், சிரபுரம் பகுதியில் அமைந்துள்ளது நாகேஸ்வரமுடையார் கோவில். இறைவியின் திருநாமம் பொன்நாகவள்ளி. இக்கோவில் 1100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. ராகு பகவான் இத்தலத்து இறைவனை வழிபட்டுத் தனது தோஷங்களை நீக்கிக் கொண்டதாகப் புராணங்கள் கூறுகின்றன.

ராகு பகவான் கேது பகவான் தோன்றிய கதை (newly added)

இந்து புராணங்களின்படி, பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்தை அசுரர்களின் தலைவனான ஸ்வர்பானு தேவர்கள் வடிவில் வந்து திருடினான். இதைச் சூரியனும் சந்திரனும் பெருமாளிடம் கூற, அவர் மோகினி அவதாரத்தில் வைத்திருந்த அகப்பையால் அசுரனின் தலையில் அடித்தார்.

பெருமாள் அடித்த வேகத்தில் அந்த அசுரனின் கழுத்து துண்டிக்கப்பட்டு, தலை `சிரபுரம்’ என்ற தற்போதைய சீர்காழியிலும், உடல் `செம்பாம்பின் குடி`யிலும் விழுந்தது.

தலைவேறு, உடல்வேறாக துண்டிக்கப்பட்டாலும், அவன் அமிர்தத்தை அருந்தியிருந்ததால் அவன் இறக்கவில்லை. பெருமாளின் அருளால் அந்தத் தலைப்பகுதி ராகு பகவானாகவும், உடல் பகுதி கேது பகவானாகவும் மாறின.

இரு அரவங்களும் சிவபெருமானைத் தியானித்துத் தவமியற்றின. காற்றை மட்டுமே உணவாகக்கொண்டு கடும் தவம் புரிய, இறைவன் மனமிறங்கி பார்வதி சமேதராய் இடப வாகனத்தில் எழுந்தருளினார்.

அப்போது அரவங்கள் சிவபெருமானிடம் சூரிய, சந்திரனை விழுங்கும் சக்தியையும், அகில உலகையும் ஆட்டிப் படைக்கும் வலிமையையும் தங்களுக்கு அருளுமாறு வேண்டின.

‘சூரிய, சந்திரர்கள் உங்களுக்குப் பகைவர்கள்தான். ஆனால், அவர்கள் அகில உலகிற்கும் இன்றியமையாதவர்கள். எனவே, அமாவாசை, பவுர்ணமி நாள்களில் நீங்கள் அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்தலாம்’ என்று இறைவன் அவர்களுக்கு வரம் அளித்தார். 

மேலும் இறைவன் அருளால் மனிதத் தலையும் பாம்பு உடலும் கொண்டு ‘ராகு’வும், பாம்புத் தலையும் மனித உடலும் கொண்டு ‘கேது’வும் உருமாறினர். அதுவரை இருந்த ஏழு கிரகங்களுடன் சேர்ந்து ஒன்பது கிரகங்களாக அவர்கள் விளங்கும்படி சிவபெருமான் வரமருளினார்.

 சனி பகவான் தன் மனைவி நீலாதேவியுடன் ராகுவின் சன்னதியில் இருக்கும் அபூர்வ காட்சி (newly added)

இத்தலத்து இறைவனை வழிபட்டுத்தான் ராகு பகவான் கிரக பதவி அடைந்தார். இத்தலத்தில் ராகு பகவானுக்கும், கேது பகவானுக்கும் தனித்தனி சன்னதிகள் இருப்பது, ஒரு தனி சிறப்பாகும்.

பொதுவாக எந்த சிவன் கோவிலிலும் இல்லாதவாறு, இங்கு ராகு பகவான் சன்னதியில் சனி பகவான் தனது மனைவி நீலாதேவியுடன் காட்சி தருவது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.

சனிபகவான், ராகுவின் நண்பர் என்பதால், இக்கோவிலில் சனி பகவான் தன் மனைவி நீலாதேவியுடன் ராகுவின் சன்னதியில் எழுந்தருளி இருக்கிறார்.  இப்படி சனி பகவான் தன் மனைவியுடனும், ராகுவுடனும் இருப்பது, வேறு எந்த தலத்திலும் காணக் கிடைக்காத அபூர்வ காட்சி ஆகும்.

ராகு, கேது பரிகார தலம் (newly added)

 இக்கோவில் சிறந்த ராகு, கேது பரிகார தலமாகும். ஞாயிற்றுக்கிழமை ராகுகால நேரமான மாலை 4.30 மணியளவில் இக்கோவிலில் உள்ள விநாயகர், சுவாமி, அம்பாள் ஆகியோரை முதலில் வணங்க வேண்டும்.

பின்னர் ராகுபகவானின் சன்னதியில் மாக்கோலமிட்டு தோல் நீக்காத முழு உளுந்து பரப்பி, அதன்மீது நெய்தீபம் ஏற்றி, அறுகம்புல் மற்றும் மந்தாரை மலர்களால் பூஜிக்க வேண்டும்.

அதோடு ராகுபகவானின் சன்னதியை வலமிருந்து இடமாக (அப்பிரதட்சணம்) ஒன்பது முறை அடிபிரதட்சணம் செய்து பதினொரு வாரங்கள் வழிபடவேண்டும்.

இதனால் ஜனனகால ஜாதகத்தில் ராகுபகவான் பாதகமான இடத்தில் அமைந்ததால் ஏற்படக்கூடிய திருமணத்தடை, களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம், நாகதோஷம், காலசர்ப்ப தோஷம் முதலிய தோஷங்கள் நீங்கி, நன்மைகள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

 

சீர்காழியில், சிரபுரம் பகுதியில் அமைந்துள்ளது நாகேஸ்வரமுடையார் கோவில்.

Previous
Previous

காஞ்சிபுரம் ஐராவதேசர் கோவில்

Next
Next

இரங்காபுரம் அஷ்டபுஜ காலகண்ட பைரவர் கோவில்