காஞ்சிபுரம் ஐராவதேசர் கோவில்

ஐராவதம் என்னும் வெள்ளையானை வழிபட்டு தலைமை பதவி பெற்ற தலம்

சோடச தாராலிங்கம் அமைந்த கோவில்

காஞ்சிபுரம் 'ஆயிரம் கோயில்களின் நகரம்' என்று அழைக்கப்படுகிறது. இங்கு எண்ணற்ற சிவத்தலங்கள் உள்ளன. குறிப்பாக, காஞ்சிபுரத்தில் புராண முக்கியத்துவம் வாய்ந்த 108 சிவாலயங்கள் அமைந்துள்ளன.

காஞ்சிபுரம் இராஜவீதியும், நெல்லுக்காரத் தெருவும் கூடுமிடத்தில் கச்சபேஸ்வரர் கோவிலுக்கு அருகில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது ஐராவதேசர் கோவில்.  காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 1.5 - 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

காஞ்சி புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 108 சிவன் கோவில்களில் ஒன்றாக இந்த கோவில் கருதப்படுகிறது.  இக்கோவில், எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான பல்லவ காலக் கோயிலாகும்.

ஐராவதம் என்னும் வெள்ளையானை வழிபட்டு தலைமை பதவி பெற்ற தலம்

 தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்த காலத்தில், அக்கடலில் தோன்றியதுதான் நான்கு தந்தங்களையுடைய ஐராவதம் என்னும் வெள்ளையானை.

இத்தலத்தில் ஐராவதம் என்னும் அந்த வெள்ளையானை, சிவலிங்கம் நிறுவி ஐராவதேசர் என்னும் அப்பெருமானைப் பூஜை செய்து வழிபட்டு, யானைகட்குத் தலைமையாகவும், இந்திரனைத் தாங்குதற்குகான வாகனம் என்னும் நிலைமையையும் பெற்றது.

இக்கோவில் கருவறை மற்றும் அர்த்தமண்டபம் மிகவும் நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டு இருக்கின்றது. சுவர்கள் முழுவதும் தேவர்கள் சிவபெருமானை வணங்கும் புராதன சிற்பங்கள் காணப்படுகின்றன.

சோடச தாராலிங்கம் அமைந்த கோவில்

சிவலிங்கத்தில் உள்ள பாணப்பகுதியில் பட்டைகள் அமைந்துள்ள சிவலிங்கம் 'தாராலிங்கம்' என்று கூறப்படுகின்றது.  தாராலிங்கங்கள் ஐந்து வகைப்படும். அவை 4, 8, 16, 32, 64 என்ற விகிதத்தில் பட்டைகள் அதாவது தாரைகள் அமைந்திருக்கும்.

இத்தலத்து மூலவர் பாணப்பகுதியில் 16 பட்டைகள் காணப்படுகின்றன. 16 பட்டைகள் கொண்ட லிங்கம் 'சோடச தாராலிங்கம்' என்று அழைக்கப்படுகின்றது. 

இக்கோவில் கருவறை மற்றும் அர்த்தமண்டபம் மிகவும் நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டு இருக்கின்றது. சுவர்கள் முழுவதும் தேவர்கள் சிவபெருமானை வணங்கும் புராதன சிற்பங்கள் காணப்படுகின்றன. 

நேர்த்தியான சிற்பங்கள் நிறைந்த கோவில்

அர்த்த மண்டபத்தில் லிங்கத்தை வழிபடும் விஷ்ணுவின் அரிய சிற்பம் மற்றும் துவாரபாலகர்கள் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் சக்கரதான மூர்த்தி, ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி, திரிபுராந்தகர் என அழகிய புடைப்பு சிற்பங்கள் மணற்கல்லால் செதுக்கப்பட்டுள்ளது.

இக்கோவில் குழந்தை பாக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்திற்காக பிரார்த்தனை செய்ய உகந்த இடமாக நம்பப்படுகிறது. 

இக்கோவிலுக்கு அருகில் உள்ள மற்ற முக்கிய கோவில்கள்

காஞ்சி காமாட்சி அம்மன் கோவில், ஏகாம்பரநாதர் கோவில், குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமி கோவில், சித்ரகுப்தர் கோவில் முதலிய கோவில்கள் இக்கோவிலுக்கு மிக அருகாமையில் உள்ள மற்ற முக்கிய தலங்கள் ஆகும்.  

 

காஞ்சிபுரம் ராஜா தெருவில், கச்சபேஸ்வரர் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது ஐராவதேசர் கோவில்.

Previous
Previous

தஞ்சாவூர் கலியுக வெங்கடேசப்பெருமாள் கோவில்

Next
Next

சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்