திருக்காட்கரை காட்கரையப்பன் கோவில்

ஓணம் பண்டிகை முதன் முதலில் கொண்டாடப்பட்ட கோவில்

பெருமாளின் வாமன அவதாரத்திற்கு என்று அமைந்த வெகு சில கோவில்களில் இத்தலமும் ஒன்று

எர்ணாகுளத்தில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள மலையாள திவ்யதேசம், திருக்காட்கரை திருக்காட்கரையப்பன் கோவில் ஆகும். இக்கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் 67-வது திவ்யதேசம் ஆகும். பெருமாளின் தசாவதாரங்களில் ஒன்றான வாமன மூர்த்திக்கென்று வெகு சில கோவில்களே உள்ளன. அந்த வெகுசில கோவில்களில் ஒன்றுதான் திருக்காக்கரை திருக்காட்கரையப்பன் கோவில். இந்தியாவிலேயே வாமனருக்கு பிரத்யேகமாகக் கட்டப்பட்ட மிகவும் பழமையான கோவில்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது.

பெருமாள் தன் திருவடியால் உலகைத் தாவி அளந்த இடம் என்ற பொருள்பட திரு-கால்-கரை என்று இத்தலம் அழைக்கப்படுகிறது. இந்தத் தலத்தில் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்கிறார் வாமன அவதார பெருமாள். இவருக்குக் கதாயுதம் கிடையாது. தாயார் ஸ்ரீபெருஞ்செல்வநாயகி. தாயாருக்குத் தனிச் சன்னதி கிடையாது.

ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதின் பின்னணியில் உள்ள புராணம்

பெருமாளின் தசாவதாரத்தில் ஐந்தாவது அவதாரமான வாமனர் பிறந்த நாளான, ஆவணி மாத துவாதசியில் வரும் திருவோண நட்சத்திரம் அமைந்த நாள், ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் மகாபலிச்சக்கரவர்த்தி, இந்த நாளன்று திருக்காக்கரையில் உள்ள வாமனர் கோவிலில் அவரின் பிறப்பைக் கொண்டாட, பாதாள உலகத்திலிருந்து பூமிக்கு வருவதாக தலபுராணம் கூறுகின்றது.

மகாபலிச்சக்கரவர்த்தி என்பவன் கேட்டவர்க்கு கேட்டதை எல்லாம் கொடுப்பவன். இவன் அசுர குலத்தில் பிறந்தாலும் மிகவும் நல்லவன். ஆனால் தர்மம் செய்வதில் தன்னை விட தலை சிறந்தவர் யாருமில்லை என்ற அகந்தை அவனிடம் ஏற்பட்டு விட்டது. இதை உணர்ந்த மகாவிஷ்ணு, அவன் அகந்தையை வளரவிடாமல் தடுக்கவே குள்ள வடிவெடுத்து வந்தார். மகாபலியிடம் மூன்றடி நிலம் கேட்டார். தாங்கள் குள்ளமானவர். உங்கள் காலுக்கு மூன்றடி நிலம் கேட்கிறீர்களே. அது எதற்கும் பயன்படாதே, என்றான் மகாபலி. அவனது குல குரு சுக்ராச்சாரியார், வந்திருப்பது மகாவிஷ்ணு என்பதை அறிந்து தானம் கொடுப்பதை தடுத்தார். கேட்டவர்க்கு இல்லை என்று சொன்னால், இதுவரை செய்த தானம் பலனில்லாமல் போய்விடும் என நினைத்தான் மகாபலி. எனவே சம்மதித்தான். பெருமாள் விஸ்வரூபம் எடுத்தார். ஓரடியால் பூமியையும், இன்னொரு அடியால் ஆகாயத்தையும் அளந்த பெருமாள், மூன்றாவது அடிக்கு நிலம் எங்கே? என கேட்டார். அகந்தை கொண்டிருந்த மகாபலி பணிந்து, தலை வணங்கி நின்றான். பகவானே! இதோ என் தலை. இதைத்தவிர என்னிடம் வேறெதுவும் இல்லை என்றான். பெருமாள் அவனை அப்படியே பூமியில் அழுத்தி, தன்னோடு இணைத்து கொண்டார்.

வாமனர் மகாபலியைப் பாதாளத்திற்கு அனுப்புவதற்கு முன், மகாபலி ஒரு வரம் கேட்டான். வருடத்துக்கு ஒருமுறை தனது தேசத்து மக்களைச் சந்திப்பதற்கு அருள்செய்யுமாறு வேண்டிக்கொண்டான். விஷ்ணு பகவானும் ஏற்றுக்கொண்டார். பகவான் மகாபலிக்கு அருள்புரிந்தது ஆவணி மாதம் திருவோண நடசத்திரத் திருநாளில். இதை நினைவுகூரும் வகையில் கேரளாவில் ஓணம் பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மகாபலியும் தான் வேண்டிக் கொண்டபடி இந்த விழாவில் கலந்துகொண்டு குடிமக்களை வாழ்த்துவதாக ஐதீகம்.

இக்கோவிலின் நுழைவு வாயிலில் மகாபலியின் ஆஸ்தானம் இருந்துள்ளது. இந்த இடத்தில் தற்போது ஒரு சிம்மாசனம் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இவ்விடத்தில் விளக்கேற்றி மகாபலியை வழிபடுகின்றனர்.கேரளபாணியில் ஓடு வேய்ந்த வட்ட வடிவ கோயில் இது. முகப்பில் உள்ள மண்டபத்தில் பெருமாள் வாமனராக, குள்ள வடிவம் எடுத்து வரும் காட்சி மரத்தில் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. மூலஸ்தானத்தில் வாமன மூர்த்தி அருள்பாலிக்கிறார். இவரை மக்கள் திருக்காக்கரை அப்பன் என செல்லப் பெயரிட்டு அழைக்கிறார்கள்.

வாமனன் அவதரித்த நாளான ஆவணி-வளர்பிறை-துவாதசி-திருவோண நாளன்று, வாமனனை வழிபட்டால், அனைத்து வித நலன்களும் பெறலாம்.

 
Previous
Previous

திருமாணிகுழி வாமனபுரீசுவரர் கோவில்

Next
Next

மானூர் பெரியாவுடையார் கோவில்