வெங்கடாம்பேட்டை வேணுகோபாலசுவாமி கோயில்
குழலூதும் அழகிய ஶ்ரீவேணுகோபாலன்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, வெங்கடாம்பேட்டை. இத்தலத்திலுள்ள, வேணுகோபாலசுவாமி கோவிலில், பெருமாள் நின்ற திருக்கோலத்தில், ஶ்ரீபாமா ருக்மணி சமேத ஶ்ரீவேணுகோபாலனாக அருள்பாலிக்கிறார். சுமாா் 6 அடி உயரத்தில், இருக்கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியும், மற்ற இருக்கரங்களில் புல்லாங்குழல் பற்றி, வலது திருப்பாதத்தை சற்றே மடித்து, ஒய்யாரமாகக் காட்சி தரும் ஶ்ரீவேணுகோபாலனின் எழிற் கோலம் நம்மைப் பரவசப்படுத்தும்..மூங்கிலால் வேயப்பட்டதைப் போன்ற அழகிய புல்லாங்குழலில் வேணுகோபாலன் தன் விரல்களை லாவகமாக அதன் துளைகளில் பதித்து, கன்னங்கள் குவிய தன் திருப்பவளச் செவ்வாயால் குழலூதும் பேரழகுக் காட்சியைக் காண இரு கண்கள் போதாது.
ஊத்துக்காடு காளிங்க நர்த்தன கிருஷ்ணர் கோவில்
பார்ப்பவர்களை வியக்க வைக்கும் காளிங்க நர்த்தன கிருஷ்ணர் விக்கிரகம்
கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருக்கருகாவூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது ஊத்துக்காடு காளிங்க நர்த்தன கிருஷ்ணர் கோவில். இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. மூலவர் வேதநாராயணப் பெருமாள். உற்சவர் காளிங்க நர்த்தன கிருஷ்ணர்.
உற்சவர், காளிங்கன் மீது நர்த்தனமாடும் கோலத்தில் சேவை சாதிக்கிறார். ஐம்பொன்னால் ஆன இந்த உற்சவமூர்த்தி, கோவிலின் பின்புறமுள்ள காளிங்கன் மடு என்ற குளத்தில் கண்டெடுக்கப்பட்டு, இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதாக ஐதீகம்.
இத்தலத்தில் தேவலோகப் பசுவான காமதேனுவின் குழந்தைகளான நந்தினி, பட்டி என்கிற பசுக்களுக்கு, ஸ்ரீகிருஷ்ண பகவான் காளிங்க நர்த்தனத்தை மீண்டும் ஆடிக் காண்பித்தார். இந்த லீலையை ஸ்ரீ நாரத முனிவர் கண்ணாரக் கண்டுள்ளார்.
ஸ்ரீநாரதர் பிரார்த்தித்துக் கொண்டதற்கு இணங்கி, இந்த தலத்தில் ஸ்ரீகிருஷ்ணர் நமக்கெல்லாம் அருள் பாலித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம்.
உற்சவர் காளிங்க நர்த்தன கிருஷ்ணர் சிலை காண்பவர் வியக்கும் வண்ணம் உள்ளது. இந்த விக்கிரகத்தின் உயரம் சுமார் 30 அங்குலம். காளிங்கனின் தலை மீது கிருஷ்ணன் நடனமாடும் கோலத்தில் அமைந்துள்ளது.
இவ்விக்கிரகத்தில், கிருஷ்ணரின் இடது கால் காளிங்கனின் தலையைத் தொடவில்லை. கிருஷ்ணரின் இடது பாதத்திற்கும், காளிங்கனின் சிரசுக்கும் நூல் விட்டு எடுக்கும் அளவு இடைவெளி உள்ளது.
அவரது வலது கால் தூக்கியபடி, நர்த்தனக் கோலத்தில் காட்சி அளிக்கிறார். கிருஷ்ணரின் இடது கை கட்டை விரல் மட்டுமே தொட்டு இருக்கும்படியாக, காளிங்கனின் வாலை பிடித்தபடி காட்சி தருகிறார். இது இரண்டு உருவங்களுக்கிடையில் உள்ள ஒரே இணைப்பாகும்.
மற்ற நான்கு விரல்கள் பாம்பின் வாலைத் தொடவில்லை. மேலும் கட்டைவிரல் - பாம்பின் வாலுக்கும் இடையே உள்ள இணைப்பானது மட்டுமே, முழு சிலைக்கும், சமநிலையை வழங்குகிறது (இந்த சிலையானது இரண்டு பேர் சேர்ந்தால் தான் நகர்த்தக் கூடிய எடை உள்ளது). காளிங்கத்துடனான போரின் விளைவாக கிருஷ்ணரின் காலில் வடுக்கள் இருந்ததற்கான அறிகுறிகள் உள்ளன.
விக்கிரகத்தின் சிறப்பை உணர்த்த மத்திய அரசு வெளியிட்ட தபால் தலை
இந்த விக்கிரகத்தில், பாம்பின் வாலிலும் பிடிமானமில்லை. கால் பாதத்திலும், பாம்பின் தலையிலும் பிடிமானம் இல்லை. இந்த விக்கிரகத்தின் தனிச்சிறப்பினை உணர்த்த, மத்திய அரசாங்கம் 1982-ம் ஆண்டில் மூன்று ருபாய் மதிப்புள்ள தபால் தலையை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.
ரோகிணி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கண்ணன் கோவில்
உற்சவர் கண்ணனுக்கு கொலுசு சார்த்தி வழிபடும் தனிச்சிறப்பு
ரோகிணி நட்சத்திரக்காரர்கள் வணங்கி வழிபட வேண்டிய கோவில் இது. ரோகிணி நட்சத்திர நாளில் இந்தத் தலத்துக்கு வந்து பிரார்த்தித்தால், சகல ஐஸ்வரியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம். ராகு, கேது, சர்ப்ப தோஷம் நீங்குவதற்கான பரிகார தலம் இது.
தங்கள் குழந்தைகள் இசைத் துறையில் வல்லுநராக வேண்டும், பாடுவதில், ஆடுவதில், இசைக் கருவிகளை இசைப்பதில் பேரும் புகழும் பெற வேண்டும் என விரும்பும் பக்தர்கள், தங்கள் குழந்தைகளுடன் வந்து காளிங்க நர்த்தனரை பிரார்த்தித்துச் செல்கிறார்கள்.
பக்தர்கள் உற்சவரின் திருப்பாதத்துக்கு கொலுசு சார்த்தி வழிபடுவது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். ஆவணியின் ரோகிணி நட்சத்திர நன்னாளில், ஸ்ரீகிருஷ்ணரின் ஜெயந்தித் திருநாள் அன்று, சுமார் 800 லிட்டருக்கும் மேல் ஸ்ரீகிருஷ்ணருக்குப் பாலபிஷேகம் நடைபெறுவதைக் காணக் கண் கோடி வேண்டும்.
தமிழ்க்கவி ஊத்துக்காடு வேங்கடசுப்பையர்
கிருஷ்ணரைப் போற்றி பல நூறு பாடல்கள் இயற்றிய தமிழ்க்கவி ஊத்துக்காடு வேங்கடசுப்பையர். (1700 முதல் 1765) வாழ்ந்த தலம் இது. ‘அலைபாயுதே கண்ணா', 'தாயே யசோதா உந்தன் ஆயர் குலத் துதித்த' போன்ற, அவர் இயற்றிய பாடல்கள் இன்றளவும் மிகவும் பிரசித்தம்.
இத்தலத்து கிருஷ்ணனே, வேங்கடகவிக்கு இசையைப் பயிற்றுவித்ததாகச் சொல்வர். இதற்கு ஆதாரமாக வேங்கடகவியின், ஆபோகி ராகத்தில் அமைந்த 'குரு பாதாரவிந்தம் கோமளமு' எனும் பாடலைச் சொல்கிறார்கள்.
அதில் அவர் சொல்லும் கருத்து: 'நான் எந்த புராணங்களையோ, வரலாறுகளையோ படித்ததில்லை; படித்ததாக பாசாங்கும் செய்யவும் இல்லை. எனக்குத் தெரிந்த அனைத்துமே பகவான் ஸ்ரீகிருஷ்ணன் என்னைக் கடைக்கண்ணால் பார்த்து, எனக்கு அளித்த பிச்சை' என்கிறார்.
ஸ்ரீநாரத் முனிவரின் மறு அவதாரமாக ஸ்ரீவேங்கடகவி கருதப்படுகிறார். அவருக்கு இங்கு தனிச் சந்நிதி உள்ளது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
ஸ்ரீரங்கநாதரின் பாதணிகள்
ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கு, ஆறு மாதத்திற்கு ஒருமுறை பாதணிகள் மாற்றப்படுகின்றன. இந்த பாதணிகள் ஒவ்வொன்றும் சுமார் இரண்டிலிருந்து மூன்று அடி நீளம் உள்ளது. இவை சுமார் 30-40 அடி உயரம் கொண்ட ஒரு மனிதருக்கானதைப் போன்று இருக்கும். இந்த பாதணிகள் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிரத்யேகமாகச் செய்யப்படுகின்றன. வலது பாதணி ஒருவரிடமும், இடது பாதணி மற்றொருவரிடம், செய்யக் கொடுப்பார்கள். இருவரும், ஒரே ஊரில் இல்லாமல், வெவ்வேறு ஊர்களில் இருப்பவர்கள். 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு பாதணிகளைச் செய்வார்கள்.
ஆறு மாதத்திற்கு ஒருமுறை பழைய பாதணிகளை ஸ்ரீரங்கநாதரின் திருவடிகளை விட்டு கழட்டிவிட்டு, புதிய பாதணிகளை மாற்றிவிடுவார்கள். அதிசயமான விஷயம் என்னவென்றால், திருவடிகளை விட்டு, எடுத்துள்ள, பழைய பாதணிகள் இரண்டிலும், பாத பகுதிகளில், தேய்மானம் இருக்கும். இவ்வாறு, மாற்றியுள்ள, தேய்மானம் அடைந்த, ஸ்ரீ ரங்கநாதர் பாதணிகள் ஸ்ரீரங்கம் திருக்கொட்டாரத்தில் தூணில் மாட்டி வைக்கப்படும்.ஸ்ரீரங்கம் கோவில் சென்றால்,,இந்த அரங்கன் அணிந்து, தேய்மானம் கண்டுள்ள, பழைய பாதணிகளை, கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம்.
திருத்தங்கல் நின்ற நாராயணன் கோயில்
அமிர்த கலசத்துடனும் பாம்புடனும் காட்சி தரும் கருட ஆழ்வார்
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருத்தங்கல் தலத்தில், கருடாழ்வாா் தனது வலது திருக்கையில் அமிா்தகலசத்துடனும், இடது திருக் கையில் வாசுகி நாகத்துடனும், இரண்டு கைகளைக் கூப்பியவாறு அஞ்சலி ஹஸ்தத்துடன் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருவது மிக மிக அரிதான தரிசனமாகும். தனக்கு எதிரியான வாசுகி பாம்பை நண்பனாக ஏற்று, தன் கையில் ஏந்தியிருப்பது இத்தலத்தின் சிறப்பு. எதிரிகளால் துன்பப்படுபவர்கள் இவரை வழிபட்டால், அவர்கள் நண்பர்களாகி விடுவார்கள் என்பது நம்பிக்கை
இத்தலம் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
திருக்கண்ணமங்கை பக்தவத்சல பெருமாள் கோவில்
தாயார் சன்னதியில் அமைந்திருக்கும் தேன்கூடு
திருவாரூரிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திவ்ய தேசம், திருக்கண்ணமங்கை. இத்தலத்து தாயார், கண்ணமங்கை நாயகி சன்னதியில் இரு ஜன்னல்கள் உள்ளன. இதில் தேனீக்கள் கூடு கட்டுகின்றன. தை மாதம் முதல் ஆனி மாதம் வரை தேனீக்கள் வலப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. ஆடி மாதம் முதல் மார்கழி வரை இடப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. இந்த அதிசயத்தை இன்றும் காணலாம்.
பெருமாளையும் தாயாரையும் கல்யாண கோலத்திலேயே தரிசிக்க வேண்டுமென்று, இத்தலத்திற்கு வந்த தேவர்களும் மகரிஷிகளும் விரும்பியதால், அவர்கள் தேனீக்கள் வடிவில் இங்கே தங்கியிருக்கிறார்கள் என்று தல புராணம் கூறுகிறது.
உறையூர் அழகிய மணவாளர் கோவில்
தாயார் மட்டும் பரமபதவாசல் கடக்கும் திவ்ய தேசம்
பெருமாள் தலங்களில் வைகுண்ட ஏகாதசியின்போது, சுவாமி சொர்க்கவாசல் கடப்பார். ஆனால், திருச்சியில் இருக்கும் திவ்ய தேசமான உறையூர் அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயிலில், தாயார் கமலவல்லி மட்டும் தனியே சொர்க்கவாசல் கடக்கிறாள். இக்கோயிலில், வைகுண்ட ஏகாதசியின்போது சொர்க்கவாசல் திறக்கப்படுவது இல்லை.
இக்கோவில் விழாக்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் விழாக்களையொட்டி நடக்கிறது.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் மார்கழியில் வைகுண்டவாசல் கடந்தபின்பு, மாசியில் வரும் ஏகாதசியன்று தாயார் கமலவல்லி சொர்க்கவாசல் வழியே செல்கிறாள்.
கும்பகோணம் சாரங்கபாணி கோவில்
பெருமாள் வில்லுடன் இருக்கும் திவ்ய தேசம்
பொதுவாக பெருமாள் சங்கு, சக்கரத்துடன் மட்டும் காட்சி தருவார். ஆனால் கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில்,பெருமாள் சார்ங்கம் என்னும் வில்லும் வைத்திருக்கிறார். மூலஸ்தானத்தில் இருக்கும் சுவாமி, உற்சவர் இருவருமே சார்ங்கம் வைத்திருப்பது விசேஷம். இதன் பெயராலேயே இவர், சார்ங்கபாணி என்று அழைக்கப்பட்டார். மூலவரிடம் இருக்கும் சார்ங்கத்தை பார்க்க முடியாது.
திருக்கண்ணமங்கை பக்தவத்சல பெருமாள் கோவில்
தாயார் சன்னதியில் அமைந்திருக்கும் தேன்கூடு
திருவாரூரிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திவ்ய தேசம், திருக்கண்ணமங்கை. இத்தலத்து தாயார், கண்ணமங்கை நாயகி சன்னதியில் இரு ஜன்னல்கள் உள்ளன. இதில் தேனீக்கள் கூடு கட்டுகின்றன. தை மாதம் முதல் ஆனி மாதம் வரை தேனீக்கள் வலப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. ஆடி மாதம் முதல் மார்கழி வரை இடப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. இந்த அதிசயத்தை இன்றும் காணலாம்.
பெருமாளையும் தாயாரையும் கல்யாண கோலத்திலேயே தரிசிக்க வேண்டுமென்று, இத்தலத்திற்கு வந்த தேவர்களும் மகரிஷிகளும் விரும்பியதால், அவர்கள் தேனீக்கள் வடிவில் இங்கே தங்கியிருக்கிறார்கள் என்று தல புராணம் கூறுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவில்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழா
108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள், பெரியாழ்வார் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரியது. மகாலட்சுமியின் அம்சமாகிய ஸ்ரீ ஆண்டாள் மானிட ரூபமாக அவதரித்து, ஸ்ரீரங்க மன்னருக்கு பாமாலை சூட்டி பின் பூமாலை சூட்டிய பெருமை வாய்ந்த தலம்தான் இந்த ஸ்ரீவில்லிபுத்தூர்.
இங்கு ஆண்டாள் கோவிலில், ஆண்டுதோறும் ஆண்டாளின் அவதார தினமான ஆடி மாத பூரம் நட்சத்திரத்தன்று நடைபெறும் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த தேரோட்ட விழாவானது மொத்தம் பத்து நாட்கள் நடைபெறும். திருவிழாவின் ஐந்தாம் நாள், ஐந்து கருட சேவையும், ஏழாம் நாள் ஆண்டாள் திருமடியில் ரெங்கமன்னார் சயனிக்கும் சயன சேவையும், அதனை தொடர்ந்து விழாவின் முக்கிய அம்சமான திருவாடிப்பூர தேரோட்டம் பூர நட்சத்திரதன்று நடைபெறுகிறது.
துளசி மாடத்தில் அவதரித்து தன்னையே நினைத்து தன்னையே மணந்த ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆண்டுதோறும் ஆடிப்பூர நாளில் பட்டு வஸ்திரம் பரிசளிப்பது சிறப்பம்சமாகும். அந்த பட்டு வஸ்திரங்களை ஆண்டாள் அணிந்து, ரங்கமன்னாருடன் இணைந்து ஆடிப்பூர தேரோட்டத்தில் எழுந்தருளி வலம் வருவார். இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
வேதநாராயணபுரம் வேதநாராயண பெருமாள் கோவில்
வேதங்களை தலையணையாக வைத்து படுத்திருக்கும் பெருமாள்
திருச்சி முசிறி சாலையில், தொட்டியத்திற்கு அருகில் (திருச்சியில் இருந்து 52 கிலோ மீட்டர்) அமைந்துள்ளது வேதநாராயணபுரம்.இத்தலத்தில் இருக்கும், வேதநாராயண பெருமாள் கோவிலில், ஸ்ரீவேதநாராயண பெருமாள்,நான்கு வேதங்களையும் தலையணையாகக் கொண்டு, ஆதிசேஷன்மீது பள்ளிக் கொண்டபடி, நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மதேவருக்கு வேத உபதேசம் செய்கிறார். பெருமாளின் திருவடியில் ஸ்ரீதேவியும் ஸ்ரீபூதேவியும் இருக்கிறார்கள். கீழே பிரகலாதன் இருக்கிறார்.
பிரகலாதன் இரணிய வதம் முடிந்ததும், பெருமாளிடம் அவரின் சாந்த ரூப தரிசனம் காண வேண்டும் எனப் பிரார்த்தித்தார். பெருமாள் அதைப் பிரகலாதனுக்கு திருநாராயணபுரத்தில் காண்பிப்பதாக வரமளித்தார். அதனால்தான், மூலவர் பெருமாளின் கீழே, பிரகலாதன் மூன்று வயதுக் குழந்தை வடிவில் காட்சித் தருகிறார்.
சிறுபுலியூர் கிருபா சமுத்திரப் பெருமாள் கோவில்
பெருமாளுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்யப்படும் திவ்யதேசம்
சிறுபுலியூர் என்னும் சோழநாட்டு திவ்ய தேசம் மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் அமைந்துள்ள கொல்லுமாங்குடி என்னும் இடத்தில் இருந்து, கிழக்கே சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.இந்த ஆலயத்தின் தல விருட்சம் வில்வ மரமாகும்.அதனால் இத்தலத்துப் பெருமாளுக்கும் தாயாருக்கும் வில்வத்தால் அர்ச்சனை செய்வது சிறப்பானதாகும்.
ஸ்ரீவைகுண்டம் வைகுண்டநாதர் கோவில்
ஆதிசேஷன் பெருமாளுக்கு குடைபிடிக்கும் திவ்ய தேசம்
பொதுவாக பெருமாள் ஆதிசேஷன் மேல் சயனித்தபடி இருப்பார். ஆனால் பாண்டிய நாட்டு திவ்ய தேசங்களில், நவ திருப்பதிகளில் ஒன்றான ஸ்ரீவைகுண்டத்தில், ஆதிசேஷன் குடைபிடிக்க, பெருமாள் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். இது ஒரு அரிதான காட்சியாகும். சித்திரை மாதம் ஆறாம் நாள் மற்றும் ஐப்பசி மாதம் ஆறாம் நாள், இந்த இரண்டு நாட்களிலும் மூலவர் வைகுண்ட நாதர் திருமேனி மீது சூரிய கதிர்கள், கோபுரம் வழியாக பொன்னொளி பரப்புவதைக் காணலாம். மூலவரின் திருமேனியில் தங்க கவசம் சாற்றப்பட்டு, சூரியக்கதிரில் பெருமாள் தகதகவென ஒளி வீசுவார். இந்த காட்சி சூரியனே பெருமாளை தரிசித்து அபிஷேகம் செய்வது போலிருக்கும்.திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில், 28-வது கிலோ மீட்டர் தூரத்தில் ஸ்ரீவைகுண்டம் உள்ளது. .
சேரன்மகாதேவி பக்தவத்சல பெருமாள் கோவில்
பெரிய சிங்கத்தின் வாயிலிருந்து சிறிய சிங்கம் வெளியே வருவது போன்ற அதி அற்புதமான வேலைப்பாடு உள்ள கோமுகம்
திருநெல்வேலியில் இருந்து 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சேரன்மகாதேவி பக்தவத்சல பெருமாள் கோவில். இக்கோவில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
பக்தர்களால் அதிகம் அறியப்படாத இக்கோவில் நம் முன்னோர்களின் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை திறனுக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. கோவில் சுற்றுச்சுவரில் அமைந்துள்ள தூண்களும், சிற்பங்களும், கலை நயம் மிக்க வடிவமைப்புகளும் நம்மை பிரமிக்க வைக்கும். சிம்ம முகம் கொண்ட தூண்கள், நரசிம்மரின் திருவுருவம், அந்த காலத்து நாகரிகத்தின் படி ஆடை, அணிகலன்கள் அணிந்த பெண்மணி முதலில் சிற்பங்களின் அழகு பார்ப்பவர்களின் எண்ணத்தை விட்டு அகலாது. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல, கருவறை அபிஷேக நீர் வெளியேறும் கோமுகத்தின் வடிவமைப்பு நம் முன்னோர்களின் ஈடு இணை இல்லாத கற்பனைத் திறனை வெளி காட்டுகின்றது.
கோமுகமானது ஒரு சிறிய சிங்கத்தின் உடல் அமைப்பை கொண்டதாக இருக்கின்றது. இந்த சிங்கமானது கருவறை சுவரை தொட்டுக் கொண்டிருக்கும் ஒரு பெரிய சிங்கத்தின் வாயிலிருந்து வெளியே வருகின்றது. கோமுகத்தின், மூக்கின் வெளிப்புற முனையின் கீழே ஒன்றன் பின் ஒன்றாக இரட்டை தாமரை மலர்கள் உள்ளன. இந்த தாமரை மலர்கள் சிறிய சிங்கத்தின் வாயிலிருந்து தொங்கிக் கொண்டிருக்கின்றன. சிறிய சிங்கத்தின் அலங்காரங்கள், தலைக்கவசம், பிடரி மற்றும் கூர்மையான பற்கள் கொண்ட சிறிய சிங்கத்தின் நான்கு கால்கள் அனைத்தும் நுணுக்கமான வேலைப்பாட்டுடனும், மிக்க அழகுடனும் செய்யப்பட்டுள்ளன.
திருவெள்ளறை புண்டரீகாட்சன் கோவில்
இரண்டு வாசல்கள் கொண்ட திவ்ய தேசம்
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே அமைந்துள்ளது 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவெள்ளறை புண்டரீகாட்சன் கோவில் .இந்த திருத்தலம் ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலை விட மிகவும் பழமையானது. அதனால் ஆதிவெள்ளறை என்றும் அழைக்கப்படுகிறது. எந்த கோயிலிலும் இல்லாத வகையில் இங்கு உத்தராயண வாசல் (வடக்கு வாசல்), தட்சிணாய வாசல் (தெற்கு வாசல்) என இரு வாசல்கள் உண்டு. தை முதல் ஆனி வரை உத்தராயண வாசல் வழியாகவும், ஆடி முதல் மார்கழி வரை தட்சினாய வாசல் வழியாக பெருமாளை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.பொதுவாகவே பெருமாளைத் தரிசித்துவிட்டு அதன் பின்னரே தாயாரின் சந்நிதிக்குச் செல்வது போல் ஆலயங்களின் அமைப்பு இருக்கும். வழிபாடுகளும் அப்படித்தான் இருக்கும். ஆனால், திருவெள்ளறையில் நாச்சியாரை முதலில் தரிசித்த பின்னரே பெருமாளைத் தரிசிக்கும்படியான அமைப்பு உள்ளது. அதேபோல், திருவிழாக்களின்போது திருப்பல்லக்கில் பவனி வரும் வைபவத்தில், தாயார் பல்லக்கில் முன்னே செல்வார். பிறகு தாயாரை அடியொற்றி பெருமாள் பின் தொடர்ந்து செல்வார். இது வேறு எந்தத் தலத்திலும் காணக்கிடைக்காத ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோவில்
ராமபிரான் சயன கோலத்தில் இருக்கும் அபூர்வ காட்சி
ராமநாதபுரத்துக்குத் தென்கிழக்கே 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திவ்யதேசம் திருப்புல்லாணி. இத்தலத்து பெருமாளின் திருநாமம் ஆதிஜெகநாத பெருமாள். தாயார் திருநாமம் கல்யாணவல்லி.
இக்கோவில் மிகவும் புராதனமானது. ராமாயண காலத்துக்கு முற்பட்ட தலம் இது.
ராமபிரான் சேது கடலில் பாலம் கட்டி இலங்கைக்குச் சென்று ராவணனை வெல்ல இத்தலப் பெருமாளைச் சேவித்து கோதண்டம் பெற்றதாகத் தலபுராணம் கூறுகின்றது. மூலவர் ஆதிஜெகநாத பெருமாள் சன்னிதிக்கு வடகிழக்கே தர்ப்ப சயனப் பெருமாள் (ராமபிரான்) சன்னிதி விளங்குகிறது. வழக்கமாகப் பள்ளி கொண்ட பெருமாளாக அரங்கநாதரும், பத்மநாபரும், ஆதிகேசவரும் மற்ற கோவில்களில் இருக்கும் போது, இங்கே ராமபிரான் இடுப்பில் உடைவாளோடு தர்ப்பைப் புல்லின் மீது படுத்து துயில் கொள்வது வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாத காட்சியாகும்.
சீதையை மீட்க இலங்கை செல்லவிருந்த ராமபிரான், கடலில் பாலம் அமைப்பதற்காக சமுத்திரராஜனிடம் அனுமதி கேட்டு மூன்று நாட்கள் காத்திருந்தார். அப்போது, ராமபிரான் புல்லையே தலையணையாகக் கொண்டு படுத்து உறங்கியதால், இது திருப்புல்லணை என அழைக்கப்பட்டது. இங்கு ராமபிரான், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து, அதில் சயனிக்கும் கோலத்தில் காட்சி தருகிறார். சீதையை மீட்கச் செல்லும் முன் தங்கிய தலமென்பதால், ராமருடன் சீதை இல்லை. லட்சுமணனின் வடிவமாக ஆதிசேஷன் இருப்பதால், லட்சுமணனும் இல்லை; அனுமன் மட்டும் உள்ளார். கருவறை சுவரில் பாலம் அமைக்க ஆலோசனை செய்த காட்சியில் சூரியன், சந்திரன், தேவர்கள் இருக்கின்றனர்., விபீஷணன் ராமபிரானிடம் இவ்வூரில்தான் சரணடைந்ததாக சொல்லப்படுகிறது.
அம்பாசமுத்திரம் புருஷோத்தம பெருமாள் கோவில்
நித்திய கருட சேவை சாதிக்கும் பெருமாள்
திருநெல்வேலி – பாபநாசம் மாநில நெடுஞ்சாலை சாலையில், 35 கி.மீ தூரத்தில் உள்ள அம்பாசமுத்திரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது புருஷோத்தம பெருமாள் கோவில். தாயார் திருநாமம் அலர்மேல் மங்கை. இத்தலத்தில் பெருமாள் ஒரு தாயாருடன் காட்சி தருவதால், 'புருஷோத்தமர்' என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு, 'ஏகபத்தினி விரதர்' என்றும் பெயருண்டு.
பொதுவாக பெருமாள் திருவிழா காலங்களில் தான் கருடன் மீது எழுந்தருளி காட்சி தருவார். ஆனால், இக்கோவிலில், மூலஸ்தானத்திலேயே பெருமாள் கருட சேவை சாதிக்கிறார். கருவறையின் நடுவில் சதுர பீடமும், அதன் மத்தியில் மலர்ந்த தாமரை மலரும் அதன்மேல் ஆதிசேஷனின் அடிபாகமும், அதில் கருட பகவான் ஒருகாலை மடித்து, மறுகாலை ஊன்றித் திகழ, அவரின் ஒரு கை பெருமாளின் வலது திருப்பாதத்தைத் தாங்கியவாறும், மற்றொரு கை மலர்ந்த தாமரை மலரை கையில் கொண்டும் இருக்கிறது. கருடன் தோளின்மேல் உள்ள பீடத்தில் ஸ்ரீபுருஷோத்தம பெருமாள் இடதுகாலை மடித்து, வலது காலை கருட பகவானின் கையில் வைத்தவாறும், பிராட்டியை தன் இடது மடியில் அமர்த்தி, ஆதிசேஷன் ஏழு தலைகளுடன் குடைபிடிக்க, வரதஹஸ்தம் கொண்டு அமர்ந்த திருக்கோலத்தில், நித்திய கருட சேவை சாதிக்கிறார். தாயார் இடது கையில் தாமரை மலருடன், கருடனின் கையில் உள்ள தாமரை மலர் மீது திருப்பாதங்கள் வைத்து மலர்ந்த முகத்துடன் தரிசனம் தருகிறார். இந்த சிலை ஒரே கல்லில் வடிக்கப்பட்டுள்ளது என்பது தனிச்சிறப்பு. பெருமாள் அஷ்ட திருக்கரங்களுடன் எழுந்தருளியிருப்பதால், இவரை அஷ்டபுயகரப்பெருமாள் என கூறுகின்றனர். பெருமாளின் இந்த நித்திய கருட சேவை இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
இரண்டு சங்கு இரண்டு சக்கரம் ஏந்திய அபூர்வ பெருமாள்
பொதுவாக பெருமாள் எல்லாத் தலங்களிலும் ஒரு சங்கு, ஒரு சக்கரம் ஏங்கிய நிலையில்தான் காட்சி தருவார். ஆனால் மூலவர் புருஷோத்தம
பெருமாள் கைகளில் இரண்டு சங்கு இரண்டு சக்கரம் ஏந்தி அருள் பாலிக்கிறார். இந்த அமைப்புடன் பெருமாளை தரிசிப்பது அபூர்வம் ஆகும்.
பிரார்த்தனை
இத்தலத்து பெருமாள் ஏகபத்தினி விரதர் என்பதால், புதுமணத் தம்பதியர்கள், தாயாரையும் பெருமாளையும் வணங்கினால் வாழ்க்கை முழுவதும் இணைபிரியாமல் இருப்பர் என்பது நம்பிக்கை. கடன் தொல்லை உள்ளவர்கள் இப்பெருமாளை வழிபட்டால் நிவாரணம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கும்பகோணம் சாரங்கபாணி கோவில்
பக்தனுக்கு சிரார்த்தம் செய்யும் பெருமாள்
ஒருசமயம் கும்பகோணத்தில் லட்சுமி நாராயணசாமி என்னும் பெருமாள் பக்தர் வாழ்ந்து வந்தார். இவர் கும்பகோணம் சாரங்கபாணி மீது தீராத பக்தி கொண்டிருந்தார்.இவர்தான் கும்பகோணம் சாரங்கபாணி கோவில் கோபுரத்தைக் கட்டியவர்.ஒரு தீபாவளியன்று லட்சுமி நாராயணசாமி பெருமாளின் திருவடியை அடைந்தார். சிரார்த்தம் செய்ய குழந்தைகள் இல்லாமல் போனால், நரகம் செல்ல வேண்டி வரும் என்பதால், தனக்கு சேவை செய்த தன் பக்தருக்கு தானே மகனாக இருந்து, இறுதிச்சடங்குகள் செய்தார் சாரங்கபாணி. இது நடந்த மறுநாள் கோயிலை திறந்து பார்த்த போது, பெருமாள் ஈரவேட்டியுடனும், மாற்றிய பூணூலுடனும், தர்ப்பைகளுடனும் காரியம் செய்து வந்த கோலத்தில் காட்சியளித்தார். அதாவது பெருமாளே தன்பக்தனுக்கு ஈமக்கிரியை செய்துவைத்து கருணைக்கடலாக விளங்கினார். தீபாவளியன்று உச்சிக்காலத்தில் அந்த பக்தருக்கு சாரங்கபாணி, திதி கொடுக்கும் நிகழ்ச்சி இப்போதும் நடக்கிறது. ஆனால், அதை பக்தர்கள் பார்க்க முடியாது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
தேங்காய்க்கு பதிலாக தேங்காய் துருவல் படைக்கப்படும் திவ்யதேசம்
ஸ்ரீரங்கத்து கோவிலில், ஸ்ரீரங்கநாதப்பெருமாள் பாம்பணையில் துயில் கொண்டிருப்பதால் தேங்காய் உடைக்கும் வழக்கம் இல்லை. தேங்காய் உடைக்கும் சப்தம் கேட்டு பெருமாளின் அறிதுயில் கலைந்து விடக்கூடாது என்பதால் தேங்காயைத் துருவலாகவே படைக்கப்படுகிறது.
கள்ளழகர் கோயில்
பஞ்ச ஆயுதங்களோடு பெருமாள் காட்சி தரும் திவ்ய தேசம்
மதுரைக்கு வடக்கில் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திவ்ய தேசம், திருமாலிருஞ்சோலை. மூலவர் பரமசுவாமி. கருவறையில் இவர் சங்கு, சக்கரம், கதை, வில், வாள் ஆகிய பஞ்சாயுதம் தாங்கிய நிலையில், நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்
திருவதிகை சரநாராயண பெருமாள் கோவில்
சயனகோலத்தில் நரசிம்மர்
பண்ரூட்டியின் அருகில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவதிகையில், 2000 வருட பழமையான சரநாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நரசிம்மர் சயன (படுத்திருக்கும் ) கோலத்தில் தாயாருடன் காட்சிதருகிறார். திருமாலின் கோவில்களில் இந்தக்கோவிலில்தான் நரசிம்மர் சயன கோலத்தில் இருக்கிறார். இந்த சயன நரசிம்மர் திருவக்கரையில் வக்ரா சூரனை அழித்து விட்டு அதன் பரிகாரத்துக்காக இத்தலத்தில் வந்து சயனித்துள்ளார். தாயாருடன் எழுந்தருளியதால் இது போக சயனம் ஆகும் . சிவனுக்கு பிரதோஷம் நடைபெறுவது போல் இவருக்கும் பிரதோஷம் அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. சிங்கர்குடி ,பூவரசன்குப்பம் ,பரிக்கல் ஆகிய நேர்கோட்டில் உள்ள நரசிம்மர் தலங்களை வணங்கும்போது, இத்தலத்திற்கு வந்து இவரையும் வணங்குவது சிறப்பாகும் .