புது அக்ரஹாரம் பட்டாபிராமர் கோவில்

மூலவர் மற்றும் உற்சவ விக்ரகங்கள் ஒரே கோலத்தில் இருக்கும் அரிய அமைப்பு

லட்சுமணன் தன்னுடைய வில்லோடு ராமருடைய வில்லையும் தாங்கி இருக்கும் அபூர்வ தோற்றம்

ஆஞ்சநேயர் ராமபிரானின் திருவடிகளை பிடித்தபடி இருக்கும் அரிய காட்சி

உற்சவர் ஆஞ்சநேயர் ஒரு கையில் ராமாயணத்தைப் பிடித்தபடியும், மற்றொரு கையை ஜபமாலை பிடித்திருப்பது போன்ற பாவனையிலும் காணப்படும் அபூர்வ காட்சி

தஞ்சை மாவட்டத்தில் கல்யாணபுரத்திற்கும் திருவையாற்றிற்கும் இடையில் அமைந்துள்ள கிராமம்  புது அக்ரஹாரம். இந்த கிராமத்தில் அமைந்துள்ளது ஸத்குரு தியாகராஜர் வழிபாடு செய்த பட்டாபிராமன் கோவில். தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னனின் மகாராணியான மோகனாம்பாள் அமைத்த கோவில் இது. இதனால் இந்த கிராமத்திற்கு பஞ்சநத மோகனாம்பாள்புரம் என்ற பெயரும் இருந்தது.

மூலவராக ராமபிரான் வீராசனத்தில் அமர்ந்த திருக்கோலத்திலும், இடப்புறம் சீதாபிராட்டியும். வலது புறம் பரதன் குடை பிடிக்க, சத்ருக்னன் சாமரம் வீச, லட்சுமணர் ராமருடைய வில்லோடு தன் வில்லையும் தாங்கியவாறு காட்சி அளிக்கிறார்கள். லட்சுமணன் தன்னுடைய வில்லோடு ராமருடைய வில்லையும் தாங்கி இருப்பது ஒரு அபூர்வ தோற்றமாகும்.சீதா தேவி ஒரு கையில் தாமரை மலரை ஏந்தியபடியும், மற்றொரு கை ஐஸ்வர்ய தான ஹஸ்தமாக அமைந்தபடியும் காணப்படுகிறார். பொதுவாக, ராமபிரானின் வலது புறத்தில் சீதாபிராட்டி இருப்பது வழக்கம். இந்தத் தலத்தில் சீதாபிராட்டி ராமனின் இடதுபுறத்தில் காணப்படுவது ஒரு தனித்துவமான அம்சமாகும். ஆஞ்சநேயர் தனது இறைவனின் தாமரைத் திருவடிகளை ஒரு கையால் பிடித்தபடியும், மற்றொரு கை தனது வாயருகே தாச பாவத்தில் வைக்கப்பட்டபடியும் காணப்படுகிறார். இதுவும் நாம் எந்த கோவிலும் காண முடியாத அரிய காட்சியாகும்

இந்தக் கோவிலின் தனிச்சிறப்பு என்னவென்றால், மூலவரும் உற்சவ மூர்த்தியும் ஒரே கோலத்தில் இருப்பதுதான். பொதுவாக, மூலவர் மற்றும் உற்சவ விக்ரகங்கள் ஒரே கோலத்தில் இருக்கும் இந்த அமைப்பு, எந்தக் கோவிலிலும் காணப்படுவதில்லை. உற்சவ ஸ்ரீ ராமர், வீராசனத்தில் அமர்ந்து, தமது கையை 'தத்துவ ஞான' முத்திரையில் வைத்துக்கொண்டு, வியாக்கியானம் அருளும் கோலத்தில் காட்சியளிக்கிறார். அவரைச் சுற்றியுள்ள பரிவார மூர்த்திகளும் மேலே விவரிக்கப்பட்ட அதே கோலத்தில் காட்சியளிக்கின்றனர். இந்த பரிவாரத்தில், ஆஞ்சநேயர் இடதுபுறம் முன்புறத்தில் அமர்ந்த நிலையில் ஒரு கையில் ராமாயணத்தைப் பிடித்தபடியும், மற்றொரு கையை ஜபமாலை பிடித்திருப்பது போன்ற பாவனையிலும் வைத்திருக்கிறார். ஆஞ்சநேயரின் இந்த தோற்றமும் ஒரு அரிய காட்சியாகும்.

 
Next
Next

தக்கோலம் ஜலநாதீசுவரர் கோவில்