புது அக்ரஹாரம் பட்டாபிராமர் கோவில்
மூலவர் மற்றும் உற்சவ விக்ரகங்கள் ஒரே கோலத்தில் இருக்கும் அரிய அமைப்பு
லட்சுமணன் தன்னுடைய வில்லோடு ராமருடைய வில்லையும் தாங்கி இருக்கும் அபூர்வ தோற்றம்
ஆஞ்சநேயர் ராமபிரானின் திருவடிகளை பிடித்தபடி இருக்கும் அரிய காட்சி
உற்சவர் ஆஞ்சநேயர் ஒரு கையில் ராமாயணத்தைப் பிடித்தபடியும், மற்றொரு கையை ஜபமாலை பிடித்திருப்பது போன்ற பாவனையிலும் காணப்படும் அபூர்வ காட்சி
தஞ்சை மாவட்டத்தில் கல்யாணபுரத்திற்கும் திருவையாற்றிற்கும் இடையில் அமைந்துள்ள கிராமம் புது அக்ரஹாரம். இந்த கிராமத்தில் அமைந்துள்ளது ஸத்குரு தியாகராஜர் வழிபாடு செய்த பட்டாபிராமன் கோவில். தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னனின் மகாராணியான மோகனாம்பாள் அமைத்த கோவில் இது. இதனால் இந்த கிராமத்திற்கு பஞ்சநத மோகனாம்பாள்புரம் என்ற பெயரும் இருந்தது.
மூலவராக ராமபிரான் வீராசனத்தில் அமர்ந்த திருக்கோலத்திலும், இடப்புறம் சீதாபிராட்டியும். வலது புறம் பரதன் குடை பிடிக்க, சத்ருக்னன் சாமரம் வீச, லட்சுமணர் ராமருடைய வில்லோடு தன் வில்லையும் தாங்கியவாறு காட்சி அளிக்கிறார்கள். லட்சுமணன் தன்னுடைய வில்லோடு ராமருடைய வில்லையும் தாங்கி இருப்பது ஒரு அபூர்வ தோற்றமாகும்.சீதா தேவி ஒரு கையில் தாமரை மலரை ஏந்தியபடியும், மற்றொரு கை ஐஸ்வர்ய தான ஹஸ்தமாக அமைந்தபடியும் காணப்படுகிறார். பொதுவாக, ராமபிரானின் வலது புறத்தில் சீதாபிராட்டி இருப்பது வழக்கம். இந்தத் தலத்தில் சீதாபிராட்டி ராமனின் இடதுபுறத்தில் காணப்படுவது ஒரு தனித்துவமான அம்சமாகும். ஆஞ்சநேயர் தனது இறைவனின் தாமரைத் திருவடிகளை ஒரு கையால் பிடித்தபடியும், மற்றொரு கை தனது வாயருகே தாச பாவத்தில் வைக்கப்பட்டபடியும் காணப்படுகிறார். இதுவும் நாம் எந்த கோவிலும் காண முடியாத அரிய காட்சியாகும்
இந்தக் கோவிலின் தனிச்சிறப்பு என்னவென்றால், மூலவரும் உற்சவ மூர்த்தியும் ஒரே கோலத்தில் இருப்பதுதான். பொதுவாக, மூலவர் மற்றும் உற்சவ விக்ரகங்கள் ஒரே கோலத்தில் இருக்கும் இந்த அமைப்பு, எந்தக் கோவிலிலும் காணப்படுவதில்லை. உற்சவ ஸ்ரீ ராமர், வீராசனத்தில் அமர்ந்து, தமது கையை 'தத்துவ ஞான' முத்திரையில் வைத்துக்கொண்டு, வியாக்கியானம் அருளும் கோலத்தில் காட்சியளிக்கிறார். அவரைச் சுற்றியுள்ள பரிவார மூர்த்திகளும் மேலே விவரிக்கப்பட்ட அதே கோலத்தில் காட்சியளிக்கின்றனர். இந்த பரிவாரத்தில், ஆஞ்சநேயர் இடதுபுறம் முன்புறத்தில் அமர்ந்த நிலையில் ஒரு கையில் ராமாயணத்தைப் பிடித்தபடியும், மற்றொரு கையை ஜபமாலை பிடித்திருப்பது போன்ற பாவனையிலும் வைத்திருக்கிறார். ஆஞ்சநேயரின் இந்த தோற்றமும் ஒரு அரிய காட்சியாகும்.
திருக்கோழம்பியம் கோழம்ப நாதர் கோவில்
அம்பிகை பசுவாக அவதரித்து தவம் செய்த தேவாரத் தலம்
சிவலிங்கத்தின் ஆவுடையார் மேல் பசுவாக வந்த அம்பிகையின் குளம்படி பதிந்த தலம்
மயிலாடுதுறை–கும்பகோணம் சாலையில் ஆடுதுறையிலிருந்து தெற்கே 8 கி.மீ. (திருவாவடுதுறையிலிருந்து கிழக்கே 5 கி.மீ) தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருக்கோழம்பியம். இறைவன் திருநாமம் கோழம்ப நாதர், கோகிலேஸ்வரர். இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி. 1800 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தலம் இது.
அம்பிகை உலகில் சிவபூஜையின் பெருமையை எடுத்துரைக்க, பசுவாக அவதரித்து தவம் செய்த இடம் என்பதே இந்தத் தலத்தின் சிறப்பு. இந்த நிகழ்ச்சியை சுட்டிக்காட்டும் வகையில், இங்குள்ள சிவலிங்கத்தின் ஆவுடையார் மேல் பசுவாக வந்த அம்பிகையின் குளம்படி பதிந்து இருக்கின்றது. இத்தலத்து சிவலிங்கத் திருமேனி நீண்ட பாணத்தை உடையதாக இருக்கின்றது. பிரம்மனுக்காக பொய் சாட்சி சொன்ன தாழம்பூ சாப விமோசனம் பெற்ற தலம் இது. அதனால் இங்கு தாழம்பூ, சிவபூஜைக்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பித்ரு தோஷ நிவர்த்திக்கு காசி, கயா போன்ற புண்ணிய தலங்களுக்கு ஈடான தலம் இது.
அம்பிகை சௌந்தர்ய நாயகி 5 1/2 அடி உயரத்தில் பத்ம பீடத்தில் நின்ற கோலத்தில், அபய வரத ஹஸ்தங்களுடன், அட்சர மாலை, கமண்டலத்தைத் தாங்கி தோற்றமளிக்கிறாள். திருமாலுடன் சொக்கட்டான் விளையாடிய தருணத்தில் சிவபெருமானுக்கு ஏற்பட்ட சந்தேகத்தில், பார்வதி தனது சகோதரனுக்காகப் பரிந்து பேசியதால், சிவபெருமானின் சாபத்துக்கு ஆளாகி பூமியில் பசுவாகப் பிறந்தார். சாப நிவர்த்திக்காக, திருவாவடுதுறை அருகே மேய்ந்த அந்தப் பசு அருகிலுள்ள திருக்கோழம்பியத்தில் சிவபெருமானை வழிபட்டது. அங்கு அதன் குளம்பு லிங்கத்தின் மீது தவறுதலாக இடறியது. அதன் அடையாளம் இன்றும் ஆவுடையார்மேல் பதிந்துள்ளதைக் காணலாம். தமிழில் 'குளம்பு' என்றால் 'கொழுமம்' என்று பொருள். அதன்பொருட்டு இத்தலத்துக்கு 'கோழம்பம்' என்றும், இறைவனுக்கு 'கோழம்பநாதர்' என்றும் பெயர் ஆயிற்று.
இக்கோவிலில் 27 நாட்களுக்கு ஒருமுறை நடைபெறும் 'வ்யதிபாதயோக' பூஜை ஹோமங்களில் பங்கேற்றால் திருமணத் தடைகள் நீங்கும், புத்திரப் பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
திருநறையூர் சித்தநாதேசுவரர் கோவில்
தட்சிணாமூர்த்தி மேற்கு நோக்கி அருள்பாலிக்கும் அரிய காட்சி
நவக்கிரக தோஷத்தை நிவர்த்திக்கும் தட்சிணாமூர்த்தி
கும்பகோணம்- குடவாசல் பாதையில் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள, தேவாரப் பாடல் பெற்ற தலம் திருநறையூர். இறைவன் திருநாமம் சித்தநாதேசுவரர். இறைவி சௌந்தர நாயகி. இந்த ஊரின் புராண பெயர் நரபுரம், குபேரபுரம், பிரமபுரம், சுகந்தவனம், திருநறையூர்ச்சித்திரம். சித்தர்கள் வழிபட்டதால் சித்த நாதேஸ்வரர் எனவும், தேவர்கள் வழிபட்டதால் தேவேஸ்வரர் என்றும், சித்தர்கள் இங்கு கோயில் கொண்டிருப்பதால் இப்பகுதி சித்தீஸ்வரம் எனவும் அழைக்கப்படுகிறது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான நாச்சியார்கோவில் என்ற வைணவத்தலம், சித்தநாதேசுவரர் ஆலயத்தில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் இருக்கிறது.
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அதுபோல இக்கோவிலில், வழக்கமாக தெற்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தி அதற்கு மாறாக, மேற்கு நோக்கி எழுந்தருளி இருப்பது ஒரு அரிய காட்சியாகும். இந்த தட்சிணாமூர்த்திக்கு எதிரே நவக்கிரக சன்னதி இருக்கிறது. கிரக தோஷம் உள்ளவர்கள் தட்சிணாமூர்த்தியையும், கிரகங்களையும் வழிபடுகிறார்கள்.
வல்லம் ஏகௌரியம்மன் கோவில்
இரண்டு திருமுகங்கள் கொண்ட அபூர்வ அம்மன்
தஞ்சையில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வல்லம் என்ற ஊரில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஏகௌரியம்மன் கோவில் உள்ளது. சோழ மன்னர்களின் வழிபாட்டு தெய்வமாக விளங்கியவள். இந்த தேவி அக்னி கிரீடம் அணிந்து, எட்டு திருக்கரங்களுடன், பத்மபீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். ஒன்றன்மீது ஒன்றாக அமைந்த இரண்டு திருமுகங்களுடன் காட்சி தருகிறாள். ஒரு தலை கோரைப் பல்லுடன் உக்கிரமாக உள்ளது. இதற்கு மேலுள்ள மற்றொரு தலை அமைதியே வடிவமாக உள்ளது. தீயவர்களை அழிக்க உக்கிரமுடன் ஒரு முகம், வழிபடும் அடியவர்களின் துயர் நீக்க சாந்தமுடன் மற்றொரு முகத்துடனும் காட்சி அளிக்கிறாள். எட்டு கைகளில் சூலம், கத்தி, உடுக்கை, நாகம், கேடயம், மணி, கபாலமும், பார்வதியின் அம்சத்தை உணர்த்தும் விதமாக கிளியும் உள்ளது. இப்படி ஒன்றன் மேல் ஒன்றாக இரண்டு இரண்டு திருமுகங்கள் அமைந்திருப்பது ஒரு அபூர்வமான தோற்றமாகும்.
அம்மனுக்கு ஏகௌரி என்ற பெயர் வந்த வரலாறு
முன்னொரு காலத்தில் தஞ்சன் என்ற அரக்கன் சிவனை நினைத்து கடும் தவம் புரிந்து, ஒரு பெண்ணை தவிர யாராலும் தன்னை வெல்ல முடியாது என்ற வரத்தை பெற்றான். பின்னர் தஞ்சன், ஆணவத்தால் முனிவர்களையும், தேவர்களையும் மிகவும் கொடுமைப் படுத்தினான். தேவர்கள் சிவபெருமானிடம் தஞ்சனின் கொடுமைகள் குறித்து முறையிட்டனர். சிவபெருமான் பார்வதி தேவியை அழைத்து அரக்கனை அழிக்க ஆணையிட்டார். ஈசனின் ஆணையை ஏற்ற பார்வதி தேவி சிம்ம வாகன மேறி எட்டுக்கரங்களிலும் ஆயுதம் ஏந்தி புறப்பட்டாள். தேவிக்கும், தஞ்சனுக்கும் கடும்போர் ஏற்பட்டது.
போரின் இறுதியில், தஞ்சன் எருமைக் கடாவாக மாறி தேவியைத் தாக்கினான். தேவி எருமைக் கடாவாக வந்த அரக்கனை வாளால் தலை வேறு, உடல் வேறு என இரண்டு துண்டாக்கினாள்.
உயிர் பிரியும் நேரத்தில் தஞ்சன் தேவியைப் பணிந்து, இந்த பகுதி எனது பெயரால் தஞ்சாபுரி என்று அழைக்கப்பட வேண்டும் என்று வேண்டினான். தேவி, அவன் கேட்ட வரத்தை வழங்கினாள் . அரக்கனை வதைத்த பின்னும், அம்மனின் ஆக்ரோஷம் அடங்கவில்லை. அதே உக்கிரத்துடன் வல்லத்தில் அலைந்து திரிந்தாள். இதனால் நாடெங்கும் வறட்சி உண்டாயிற்று. நாடெங்கும் பஞ்சம், பசி, பட்டினி என மக்கள் தவித்தனர். நிலைமையை உணர்ந்த சிவபெருமான் பார்வதியை ;ஏ கவுரி; சாந்தம் கொள் என்று கேட்டுக்கொண்டார். அம்மையின் கோபம் சற்று தணிந்தது. நெல்லிப்பள்ளம் என்ற குளத்தில் மூழ்கினாள். அப்போது பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து அங்கேயே எழுந்தருளவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இங்கு ஏகௌரி அம்மனாக அருள்புரிந்து வருகிறாள். அம்மன் அரக்கனை வதம் செய்தது ஆடிமாத கடைசி வெள்ளிக்கிழமை ஆகும். எனவே அன்றைய தினம் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து, தீ மிதித்து அம்மனை சாந்தப் படுத்துகின்றனர்.
குழந்தை பாக்கியத்திற்கு எலுமிச்சை பழச்சாறு பிரசாதம் தரும் நடைமுறை
குழந்தை வரம் வேண்டி இத்தலத்துக்கு வரும் பெண்களுக்கு எலுமிச்சம் பழத்திற்கு பதிலாக எலுமிச்சை பழச்சாறை பிரசாதமாகத் தருகிறார்கள். வேறு எந்த தலத்திலும் இப்படி ஒரு நடைமுறை இல்லை.
ஏகௌரி அம்மனின் இருபுறமும் ராகு கேது எழுந்தருளி இருக்கிறார்கள். அதனால் இத்தலம் கால சர்ப்ப தோஷம் , களத்திர தோஷம், திருமணத்தடை போன்ற பிரச்சினைகளுக்கு சிறந்த பரிகார தலமாக இருக்கிறது.
தில்லைஸ்தானம் (திருநெய்த்தானம்) சீனிவாசப் பெருமாள் கோவில்
அமிர்த கலசம் ஏந்திய ஆஞ்சநேயரின் அபூர்வ தோற்றம்
திருவையாற்றிலிருந்து 2 கி.மீ. தொலைவில், காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள தில்லை ஸ்தானம் (திருநெய்த்தானம்) என்ற கிராமத்தில் அமைந்துள்ள வைணவத் தலம் சீனிவாசப் பெருமாள் கோவில். கருவறையில் சீனிவாசப் பெருமாள் ஸ்ரீதேவி - பூதேவியுடன், நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார்.
இக்கோவிலின் வடக்குப் பகுதியில் அனுமன் கையில் அமிர்த கலசத்தை ஏந்தியபடி அருள்புரிகிறார். அனுமனின் இந்த தோற்றமானது ஒரு அரிய காட்சியாகும். இதன் பின்னணியில் ராமாயண நிகழ்ச்சி ஒன்று உள்ளது. சீதாதேவி வனவாசத்தின் போது ஒரு நாள் மயக்கமடைய, அனுமன் கலசத்தில் இருந்த அமிர்தத்தை சீதைக்கு தர, சீதையின் மயக்கம் தெளிந்ததாம். சீதையின் நோய் தீர்த்த அமிர்த கலசத்துடன் கூடிய இந்த அனுமனை வேண்டுவதால் நோய்கள் குணமாவதாக பக்தர்களின் நம்பிக்கை.
வியாபாரம் பெருகவும், திருமணம் விரைந்து நடக்கவும், நோய்கள் தீரவும் அனுமனிடம் வேண்டிக் கொள்ளும் பக்தர்கள், தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் அனுமனுக்கு அபிஷேகம் செய்து வெண்ணெய் காப்பிட்டு, தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.
திருவையாறு சப்தஸ்தானத் தலங்களில் இத்தலமும் ஒன்று.
பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில்
பக்தர்களின் உயிர்நாடியாக இருக்கும் அம்மன்
தஞ்சாவூருக்குத் தென்கிழக்கே 47 கிமீ தொலைவில் பட்டுக்கோட்டையில் அமைந்துள்ளது, நாடியம்மன் கோவில். தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வைப்பதாலும், தன் பக்தர்களின் உயிர்நாடியாக இருப்பதாதாலும் அவளை இப்பெயரிட்டு அழைக் கிறார்கள். கருவறையில் தீ ஜுவாலை, கிரீடம் நான்கு கரங்களில் கத்தி, சூலம், கேடயம், கபாலம் ஏந்தி ஆயுதபாணியாகக் காட்சி தருகிறாள். மூன்று குதிரைகள் காவலுக்கு நிற்கின்றன. அம்மன் சன்னதியின் முன்பாக சிம்மம் உள்ளது. கி.பி. 1600 ஆம் ஆண்டு இப்பகுதியை ஆட்சி செய்தவர் பட்டு மழவராய நாயக்கர். அவர் பெயரால் விளங்கி வந்த கோட்டை இருந்த இடத்தின் பெயர் பட்டு மழவராயர் கோட்டை. அது நாளடைவில் சுருங்கி பட்டுக்கோட்டை ஆகிவிட்டது. மழவராயர் ஒருமுறை வேட்டைக்குச் சென்றார். அங்கே தெய்வீகக் களையோடு ஒரு பெண்மணி நிற்பதைக் கண்டார். அரசரைப் பார்த்ததும் அந்த பெண் ஓட, அரசரும் அவளைத் துரத்திக் கொண்டு ஓடினார். அவள் ஓடிச் சென்று ஒரு புதரில் மறைந்து விட்டாள். புதர் அருகே சென்று பார்த்தபோது, அங்கே ஓர் அழகான அம்மன் சிலை இருந்தது. பட்டு மழவராயர், தங்களை நாடி வந்த அம்மனுக்கு அங்கு கோவிலை எழுப்பினார்.இப்பகுதியில் பிறக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கு 'நாடி' என்கிற பெயர் சூட்டப்படுகிறது. பௌர்ணமி பூஜை செய்து இங்குள்ள நாகலிங்க மரத்தில் சரடு கட்டினால் எப்படிப்பட்ட தோஷம் இருந்தாலும் விலகி மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். மேலும் பல்லாயிரக்கணக்கானோர், ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூடி பெருந்திருவிழாவாக மாவிளக்கு போடும் அதிசயம் நடப்பது இந்த கோவிலில் மட்டும்தான்.
திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில்
திருநாகேஸ்வரம் கிரிகுஜாம்பிகை அம்மன்
தினமும் குழந்தை, இளம்பெண், பெண் என மூன்று வித தோற்றங்களில் காட்சி தரும் அம்பிகை
சரஸ்வதியுடனும், லட்சுமி தேவியுடனும் காட்சி அளிக்கும் அம்பிகை
கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருநாகேஸ்வரம். இறைவன் திருநாமம் நாகநாதசுவாமி. இத்தலத்தில் கிரிகுஜாம்பிகை மற்றும் பிறையணிவாள் நுதல் அம்மை என இரண்டு அம்மன்கள் அருள்பாலிக்கிறார்கள்.
கிரிகுஜாம்பாள் அம்பிகை தனிச் சன்னதியில் தவக்கோலத்தில் காட்சியளிக்கின்றாள். கிரிகுஜாம்பிகையின் வலதுபுறம் வீணையைக் கையில் தாங்கி சரஸ்வதியும், இடதுபுறம் கரங்களில் தாமரை மலரைத் தாங்கி லட்சுமிதேவியும் இருக்கின்றனர் . கிரிகுஜாம்பிகை காலையில் சிறுமியாகவும், மதியத்தில் இளம் பெண்ணாகவும், மாலையில் தேவியாக, பெண்ணாகவும் அலங்கரிங்கப்படுகிறார்.
கிரிகுஜாம்பிகையின் திருவடிவம் சுதையால் ஆனது என்பதால் அபிஷேகம் செய்வதில்லை. புனுகுச் சட்டம் மட்டுமே சார்த்துகிறார்கள். மார்கழி மாதத்தில் 48 நாட்கள் புனுகு சட்டம் மட்டுமே சாற்றுவது வழக்கம். அந்நாட்களில் அம்பிகையை தரிசிக்க முடியாது. இந்நாட்களில் அம்பிகையின் சன்னதி முன்புள்ள திரைச்சீலைக்கே பூஜை நடக்கிறது. தை மாதத்தில் அம்பாளுக்கு, புனுகு காப்புத் திருவிழா நடைபெறும். தை கடைசி வெள்ளியன்று அம்மனது சன்னதி முன்மண்டபத்தில் அன்னம், காய்கறி, பழங்கள் போன்றவற்றை படைத்து சிறப்பு பூஜை நடைபெறும்.
இங்கு முத்தேவியரை வணங்கி, இவர்களை வழிபட குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது நம்பிக்கை. இத்தலம் ராகுவிற்கான பரிகார தலமாகவும் விளங்குகிறது.
திருக்கோடிக்காவல் கோடீசுவரர் கோவில்
திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி அம்மன்
வெங்கடாஜலபதியாகக் காட்சி தரும் திரிபுரசுந்தரி அம்மன்
திருக்கோடிக்காவல் எனும் தேவாரத்தலம் கும்பகோணம், ஆடுதுறைக்கு அருகேயுள்ள சூரியனார் கோவிலிலிருந்து 5 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் கோடீசுவரர். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி அம்மன்.
ஒரு சமயம், ஆழ்வார்கள், வெங்கடாஜலபதியின் தரிசனத்திற்காக, திருப்பதி சென்றார்கள். அங்கு வெங்கடாஜலபதி, அவர்களுக்கு காட்சி தரவில்லை, மாறாக, திருக்கோடிக்காவில் திரிபுரசுந்தரி அம்மன், நீங்கள் விரும்பும் தரிசனம் கொடுப்பாள், அங்கே செல்லுங்கள்' என்று அசரீரியாக உத்தரவு பிறந்தது. ஆழ்வார்களும், ஆவலுடன் புறப்பட்டு, திருக்கோடிக்காவை அடைந்தனர். ஊரை நெருங்கியபோது, காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதைக்கடந்து வரமுடியாமல் ஆழ்வாராதிகள் சிரமப்பட்டபோது, அகத்திய முனிவர், அவர்கள் முன் தோன்றி, ஆலயத்திலுள்ள கரையேற்று விநாயகரை, மனதில் பிரார்த்தித்துக் கொள்ளும் படி கோரினார். அவர்களும் அவ்வாறே செய்ய, காவிரியில் வெள்ளம் குறைந்தது. ஆழ்வாராதிகள், கரையைக் கடந்து ஆலயத்தினுள் வர, அங்கு அம்பாள் அவர்களுக்கு வெங்கடாஜலபதியாக தரிசனம் தந்தருளினாள்.
அப்போது திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி அம்மன் கைகளில் இருந்த பாசமும் அங்குசமும் மறைந்து, சங்கும் சக்கரமும் இருந்தது. திருமாங்கல்யம் மறைந்து போய் கவுஸ்துப மணியாக மாறிப் போனது. மார்பினில் திருமகளும் நிலமகளும் குடி கொண்டு விட்டார்கள். செந்நிற பட்டாடை மறைந்து போய் பீதாம்பரம் மிளிறியது. அம்மன் நெற்றியில் மின்னும் குங்குமப் பொட்டுக்கு மாறாக கஸ்தூரி திலகம் பளிச்சிட்டது. மொத்தத்தில் பக்தனுக்காக அம்மன் திருப்பதி பெருமாளாக மாறி விட்டாள்.
இந்த வைபவம் இன்றும் திருக்கோடிக்காவலில் ஒவ்வொரு புரட்டாசி சனிக்கிழமையிலும் நடக்கிறது. அன்று நம் அனைவருக்கும் திரிபுரசுந்தரி வெங்கடாஜலபதியாகக் காட்சி தருகிறாள்.
திருக்கருக்காவூர் முல்லைவனநாதர் கோவில்
திருக்கருக்காவூர் கர்ப்பரட்சாம்பிகை
கருவை பாதுகாத்து சுகப்பிரசவம் அருளும் அம்பிகை
தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பாபநாசம் என்ற ஊரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் (தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் ஆகிய இரு இடங்களிலிருந்தும் 20 கிலோமீட்டர்) அமைந்துள்ள தேவார தலம் திருக்கருக்காவூர். இறைவன் திருநாமம் முல்லைவனநாதர். இறைவியின் திருநாமம் கர்ப்பரட்சாம்பிகை. இத்தலத்து அம்பிகையை வணங்கினால் வயிற்றில் இருக்கும் கருவுக்கு பாதுகாப்பாக இருந்து கருசிதைவு ஏற்படாமல் காத்திடுவாள். அதுமட்டுமல்ல பல வருடம் குழந்தை செல்வம் இல்லாத ,டாக்டர்கள் கைவிரித்த தம்பதிகளுக்கும் குழந்தை செல்வம் அருளுபவள் இத்தல அம்பிகை. எனவே இந்த அம்பிகைக்கு 'கரு காத்த நாயகி' என்று பெயர். வடமொழியில் 'கர்ப்பரட்சாம்பிகை' எனப் பெயர். சுருங்கச் சொன்னால், இத்தலம் கரு,கருகாத ஊர் ஆகும்.
நிருத்துருவமுனிவரின் பத்தினி வேதிகை, கர்ப்பகாலத்தில் நேர்ந்த அயர்ச்சியால், அங்கு வந்த ஊர்த்துவபாத முனிவரை உபசரிக்க இயலாமல் போகவே, கோபம் கொண்ட முனிவர், அவளது கர்ப்பம் சிதையுமாறு சபித்தார். அதனால் துயரமுற்ற தம்பதியர்,இத்தலத்து இறைவனையும் இறைவியையும் சரணடைந்து துதிக்கவே, வேதிகையின் கரு சிதையாமல் அம்பாள் காத்து ரட்சித்தபடியால் கர்ப்பரட்சாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள். கருச்சிதைவுற்று மகப்பேறின்றி இருப்போர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு மகப்பேறு அடைகின்றனர். அம்பாள் கர்ப்பரட்சாம்பிகையிடம் திருமணம் கூடிவர, குழந்தைப் பாக்கியம் உண்டாக, சுகப்பிரசவம் ஏற்பட பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள்.
குழந்தைப் பாக்கியம் கிடைக்க செய்யப்படும் பிரார்த்தனை
இத்திருக்கோவில் அம்பாள் சன்னதியில், நெய்யினால் படிமெழுகி கோலமிட்டு மீதமுள்ள நெய்யை அம்பாள் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து கொடுப்பார்கள். இந்த நெய் பிரசாதத்தை 1/2 கிலோ நெய்யுடன் கலந்து தம்பதியர் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். இக்கோயில் சோமாஸ்கந்தர் அமைப்பில் உள்ளதால், இத்திருக்கோயில் பிரகாரத்தை ஒரு சேர மூன்று முறை வலம் வரும் தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது வரலாறு.
சுகப்பிரசவம் ஏற்பட
கர்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவம் அடைவதற்காக அம்பாள் திருவடியில் வைத்து, மந்திரித்து விளக்கெண்ணெய் தரப்படுகிறது. பிரசவ வலியேற்படும் காலத்தில் இதை வயிற்றில் தடவிவர, எந்தவிதமான கோளாறும் இல்லாமல் சுகப்பிரசவமாகும். கர்ப்பம் அடைந்தவர்களுக்கு எப்போதாவது அசாதாரண வலி தோன்றினால், அப்போது மந்திரித்த விளக்கெண்ணெய்யை வயிற்றில் தடவினால் வலி நின்று நிவாரணம் கிடைக்கும்.
தங்கத் தொட்டில் பிரார்த்தனை
குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கும், குழந்தைப் பேறு பெற்றவர்களுக்கும் நாட்டிலேயே முதல் முறையாக தங்கத் தொட்டில் பிரார்த்தனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தை வரம் வேண்டுபவர்கள் நெய் மந்திரிக்கும்போது அம்பாள் பாதத்தில் உள்ள ஸ்கந்தரை தம்பதியர் பெற்றுத் தங்கத் தொட்டிலில் இடுவதும், குழந்தை வரம் பெற்றவர்கள் தங்கள் குழந்தையைத் தங்கத் தொட்டிலில் இடுவதும் இங்கு முக்கிய பிரார்த்தனையாகும்.
திருப்பந்துறை சிவானந்தேசுவரர் கோவில்
தலையில் குடுமியுடன், தியான நிலையில் உள்ள முருகன்
வாய் பேச முடியாதவர்கள் வழிபட வேண்டிய கோவில்
கும்பகோணத்திலிருந்து எரவாஞ்சேரி வழியாக மயிலாடுதுறை செல்லும் வழியில் 12 கி.மீ. தொலைவில் உள்ள தேவார தலம் திருப்பேணுபெருந்துறை. தற்போது 'திருப்பந்துறை' என்று அழைக்கப்படுகிறது. இறைவன் திருநாமம் சிவானந்தேசுவரர். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை. இத்தலத்தில் முருகன் தான் சிறப்புக்கு உரியவர். ஆடி கிருத்திகை இத்தலத்தில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.
இக்கோவிலில் சுவாமி சன்னிதியின் முன்பு முருகப்பெருமான் தண்டாயுதபாணி என்னும் திருநாமத்துடன், சின் முத்திரையுடன், கண் மூடி நின்ற நிலையில் தியானம் செய்யும் கோலத்தில் இருக்கின்றார். அவரது காது நீளமாக வளர்ந்திருக்கிறது. தலையில் குடுமி இருக்கிறது. தலையில் குடுமியுடன் தியான நிலையில் உள்ள முருகனை வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாது.
பிரம்மாவுக்கு பிரணவத்தின் பொருள் தெரியாததால், முருகப்பெருமான், அவரை சிறையில் அடைத்தார். அதனால் ஏற்பட்ட தோஷத்தினால் முருகப்பெருமானுக்கு பேசும் திறன் குறைந்தது. தோஷம் நீங்குவதற்கு முருகப்பெருமான், இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றார். எனவே வாய்பேசமுடியாதவர்கள், திக்கு வாய் உள்ளவர்கள் கோவில் எதிரே உள்ள மங்கள தீர்த்தத்தில் நீராடி, முருகனுக்கு 45 நாட்கள் தேனபிஷேகம் செய்து, சிவனுக்கு அர்ச்சனை செய்தால் விரைவில் பேச்சு வரும் என்பது நம்பிக்கை.
நல்லிசேரி ஜம்புநாத சுவாமி கோவில்
இரட்டை விநாயகர்கள் எழுந்தருளியுள்ள தலம்
இடையூறுகளை ஏற்படுத்தும் நிக்கிரக விநாயகரும், துன்பங்களை போக்கும் அனுகிரக விநாயகரும் அருகருகே இருக்கும் அரிய காட்சி
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நல்லிசேரி கிராமம். இத்தலத்து இறைவன் ஜம்புநாத சுவாமி. இறைவியின் திருநாமம் அலங்கார வல்லி. சப்த கன்னியரில் வைஷ்ணவி தேவி வழிபட்ட தலம் இது. ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இக்கோவில். ஒரு காலத்தில் ஊரைச் சுற்றிலும் வயல்கள், வாய்க்கால்கள் நிறைந்திருந்தன. ஊரைச் சுற்றிய அனைத்துப் பகுதி அறுவடை நெல்லும் இங்கு கொண்டுவந்து குவித்து வைக்கப்பட்டு இருந்துள்ளது. அதனால் இந்த ஊருக்கு நெல்லுச்சேரி என்ற பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில், அதுவே நல்லிச்சேரி என்று மருவியது.
கோவிலின் பிரதான தெற்கு வாசலில் உள்ளே நுழைந்ததும் நமக்கு இரட்டை விநாயகர்கள் காட்சி தருகிறார்கள். ஒருவர் நிக்கிரக விநாயகர், மற்றொருவர் அனுகிரக விநாயகர். நிக்கிரக விநாயகர் நமக்கு இடையூறுகளை, கஷ்டங்களை ஏற்படுத்தித் தருபவர். அனுகிரக விநாயகர் நம்முடைய துன்பங்களை, துயரங்களை நீக்குபவர். அதனால் இங்கு வரும் பக்தர்கள் மத்தியில் இந்த இரட்டை விநாயகருக்கு அதிக மதிப்பு உள்ளது. இனிமேல் எந்தக் கஷ்டத்தையும் தந்துவிடாதே என்று நிக்கரக விநாயகரிடமும், இதுவரை தந்துவரும் கஷ்டங்களைப் போக்கிவிடு என்று அனுக்கிரக விநாயகரிடமும் தோப்புக் கரணம் போட்டு பக்தர்கள் வேண்டிக் கொள்கிறார்கள்.
சாக்கோட்டை (கலயநல்லூர்) அமிர்தகலசநாதர் கோவில்
வலக் கரத்தினை உச்சி மீது வைத்து ஒற்றை காலில் தவமிருக்கும் தபசு அம்மன்
மூன்று பௌர்ணமி தினங்களில் வழிபட்டால் திருமணத் தடை நீங்கும்
கும்பகோணம் - நீடாமங்கலம் சாலையில், கும்பகோணத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் சாக்கோட்டை . இறைவன் திருநாமம் அமிர்தகலசநாதர். இறைவியின் திருநாமம் அமிர்தவல்லி. அம்மன் அமிர்தவல்லி இறைவனை நோக்கி நின்று திரும்பியுள்ள காட்சி ஒரு தனிச்சிறப்பாகும்.
இத்தலத்தை குறித்து மூன்று புராண வரலாறுகள் உள்ளது. ஒன்று ஊழிக் காலத்தில் உயிர்களை அடக்கிய கலசம் இங்கு தங்கியது அதனால் இத்தலம் கலயநல்லூர் என்று வழங்கபடுகிறது. இரண்டாவது பிரம்மன் இங்கு இறைவனை பூஜித்து பேறு பெற்றான். மூன்றாவது இறைவன் உமையம்மையின் தவத்தினை கண்டு அம்மைக்கு வரம் கொடுத்து திருமணம் புரிந்து கொண்டார்.
அம்பிகையின் தபசு கோலத்தை நாம் ஒரு தனி சன்னதியில் காணலாம். தவக்கோலத்தில் இருக்கும் இந்த தபசு அம்மன், வலது காலை மட்டும் தரையில் ஊன்றி இடக்காலை மடக்கி வலது தொடையில் ஏற்றி பொருந்திட மடக்கி பதிந்து பாதம் மேல் நோக்கிட நிற்கிறாள். வலக் கரத்தினை உச்சி மீது உள்ளங்கை கவிழ வைத்து இடக் கரத்தினை திருவயிற்றின் கீழ் அங்கை (உள்ளங்கை) மேல் நோக்க வைத்து நேராக நின்று தவமிருக்கின்றார். இந்த கோவிலில் இந்த சன்னதி தனி சிறப்பு கொண்டு விளங்குகிறது. தபசு அம்மனுக்கு, மூன்று பௌர்ணமி தினங்களில் 48 அகல் விளக்குகள் ஏற்றி, அர்ச்சனை செய்து வழி பட வேண்டும். இதனால் தாமதமாகும் திருமணங்கள் விரைவில் நடந்தேறும் என்பது ஐதீகம். பல வெளியூர் பக்தர்கள் இங்கு வந்து திருமணத் தடை நீங்க வழிபடுகிறார்கள். மேலும் இக்கோவில் அறுபதாம் திருமணத்திற்கும் உகந்த தலம் ஆகும்.
தாராசுரம் ஐராவதேசுவரர் கோவில்
யானை, சிங்கம், ஆடு, மான், முதலை முதலிய மிருகங்களின் உருவக் கலவையை கொண்ட வினோத விலங்கு சிற்பம்
கும்பகோணத்திற்கு மேற்கே 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தாராசுரம் ஐராவதேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் வேதநாயகி.
உலகெங்கும் அமைந்துள்ள கலைப் பொக்கிஷங்களைத் தேர்ந்தெடுத்துப் பாதுகாத்துவரும் UNESCO நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட கோவில் இது. இக்கோவிலில் நிரம்பி வழியும் சிற்பங்களும், அவற்றின் பேரழகும், நுணுக்கங்களுமே, இக்கோவிலை சிற்பிகளின் கனவு என்று போற்றப்பட வைக்கின்றது. இந்த தலம் முழுவதும் மிகவும் நுணுக்கமான சிறிய மற்றும் பெரிய சிற்பங்களால் நிறைந்துள்ளது. அடிக்கு 1000 சிற்பங்கள் என்ற புகழ் மொழியையும் கொண்ட கோவில் இது.
கோயிலின் மகாமண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றிலும் நான்கு புறங்களிலும் பல புராணக் கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. மகாமண்டபத்தின் நுழைவாயிலில் காணப்படும் கண்ணப்ப நாயனார் மெல்லிய செருப்பு அணிந்திருக்கிறார். காட்டில் அலைந்து திரியும் வேடனான அவர் அணிந்திருக்கும் காலணியின் தோற்றம், காட்டில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு செய்த வடிவமைப்பைக் கொண்டிருப்பது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
கோவில் தூண்களில் யானை, குதிரை, யாளி போன்ற விலங்குகளின் உருவங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால், ஐராவதேசுவரர் சன்னதியின் முன்புறம் அமைந்துள்ள மண்டபத்தின் தூண்களில், ஒரு வினோத மிருகம் அந்த மண்டபத்தையே தாங்கிக் கொண்டுள்ளது போன்ற அமைப்பில் காணப்படுகின்றது. அந்த மிருகம், யானையின் தந்தம், தும்பிக்கை, சிங்கத்தின் தலை, பற்களுடன் கூடிய முக அமைப்பு, செம்மறி ஆட்டின் கொம்பு, மாடு அல்லது மான் இவற்றின் காது, முதலையின் கால் அவற்றின் நக அமைப்பு என நிறைய மிருகங்கள் ஒன்று சேர்ந்து அமைந்த வினோத உருவமாக, இந்தச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இத்தகைய, பல மிருகங்களின் உருவக் கலவையை கொண்ட வினோத விலங்கின் சிற்பத்தை வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாது.
இக்கோவிலின் சிற்பக்கலை சிறப்பிற்காகவே, நாம் அனைவரும் அவசியம் சென்று தரிசிக்க வேண்டிய தலம் இது.
திருஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோவில்
பாவங்களை நீக்கும், திருமண வரம் அருளும் மோட்சத் தூண்கள்
கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தூரத்திலும் ,சுவாமிமலையிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள திவ்ய தேசம் திருஆதனூர். பெருமாளின் திருநாமம் ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன். தாயாரின் திருநாமம் பார்க்கவி.
கருவறையில் ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நாபிக்கமலத்தில் பிரம்மாவுடன் பள்ளிக்கொண்ட கோலத்தில் அருள்பாலிக்கிறார். மரக்காலை தலைக்கு வைத்து, இடது கையில் எழுத்தாணி மற்றும் ஏடுடன் அருள்பாலிக்கிறார். பெருமாளின் பாதத்தருகே காமதேனு,காமதேனுவின் மகள் நந்தினி, சிவபெருமான், பிருகு மகரிஷி, திருமங்கையாழ்வார் உள்ளனர்.
கைகளில் ஏடு (ஓலைச் சுவடி), எழுத்தாணி, தலைக்கு மரக்காலை வைத்து, ஜீவாத்மாக்களின் நல்ல மற்றும் தீய செயல்களை கணக்கிட்டு அவர்களை ஆள்வதால், திருமால் 'ஆண்டு அளக்கும் ஐயன்' என்று அழைக்கப்படுகிறார். தன்னை நாடி வருவோரின் தகுதிக்கேற்ப, அளந்து அருள் வழங்கும் வள்ளலாக வீற்றிருப்பதால், இத்தல இறைவனுக்கு 'ஆண்டளக்கும் ஐயன்' என்பதே திருநாமமாக விளங்குகிறது. திருமாலை வேண்டி காமதேனு (ஆ) தவம் செய்த ஊர் என்பதால் (ஆ,தன்,ஊர்) ஆதனூர் என்ற பெயர் இவ்வூருக்கு கிட்டியது.
இக்கோவிலில், கருவறைக்கு முன்புறம் அர்த்தமண்டபத்தில் பெருமாளின் பாதம், தலைக்கு நேரே இரண்டு தூண்கள் உள்ளன. இந்தத் தூண்களை வலம் வந்து, அவற்றைப் பிடித்துக் கொண்டு, பெருமாளின் பாதம், முகத்தை தரிசனம் செய்தால் மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம். இத்தூண்கள் மோட்சத் தூண்கள் என்று அழைக்கப்படுகின்றன. பரமபதத்தில் இருக்கும் மகாவிஷ்ணுவிற்கு முன்புறம் இரண்டு தூண்கள் இருக்கும். ஜீவன்கள் மேலே செல்லும்போது, இந்த தூண்களைத் தழுவிக் கொண்டால் பாவங்களில் இருந்து விடுபட்டு மோட்சம் கிடைக்கும். அதே போல இத்தலத்து மோட்சத் தூண்களை இரட்டைப்படை எண்ணிக்கையில் வலம் வந்து, இந்த தூண்களை பிடித்துக்கொண்டு சுவாமியின் திருமுகம் மற்றும் திருப்பாதத்தை தரிசனம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்பதும், திருமணமாகாதவர்கள் தூண்களை தழுவி வணங்கினால் அப்பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. பெருமாள் கோவில்களில், இத்தலத்திலும் ஸ்ரீரங்கத்திலும் தான் மோட்சத் தூண்களைக் நாம் காண முடியும்.
வைணவ நவக்கிரக தலங்களில் இத்தலம் குரு பரிகார தலமாகக் கருதப்படுகிறது.
திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோவில்
மகாசிவராத்திரி வழிபாடு பிறந்த தேவாரத்தலம்
கும்பகோணம் திருவையாறு சாலையில் சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருவைகாவூர். இறைவன் திருநாமம் வில்வவனேசுவரர். இறைவி வளைக்கைநாயகி.
திருக்காளத்தி, திருக்கோகர்ணம், ஸ்ரீசைலம், இராமேஸ்வரம் போல மகாசிவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படும் தலம், திருவைகாவூர் ஆகும். சிவராத்திரி வழிபாடு பிறந்தது இத்தலத்தில்தான் என்பது ஐதீகம். வேதங்கள் வில்வ மரமாக இருந்து வழிபட்டதால் இத்தலத்துக்கு வில்வ ஆரண்யம் என்றும் சுவாமிக்கு 'வில்வவனேசுவரர்' என்றும் பெயர் வந்தது. பெருமாள், பிரம்மா இருவரும், இறைவன் சன்னதியில் துவார பாலகர்களாக உள்ளனர். அதனால் இத்தலம் மும்மூர்த்திகள் தலம் என்று போற்றப்படுகிறது.
தவநிதி என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருக்கையில் மான் ஒன்றைத் துரத்திக்கொண்டு வேடன் வந்தான். மானுக்கு முனிவர் அபயமளித்ததால் கோபம் கொண்ட வேடன் முனிவர் மீது அம்பெய்த முற்பட்டான். உடனே சிவபெருமான் புலிவடிவமெடுத்து, வேடனைத் துரத்தினார். வேடன் பயந்தோடி அருகிலிருந்த ஒரு வில்வ மரத்தில் ஏறிக்கொண்டான். புலியும் மரத்தடியிலேயே நின்றது. வேடன் வேறுவழியின்றி மரத்திலேயே இரவு முழுதும் தங்கியிருந்தான். இரவில் தூக்கம் வந்து கீழே விழுந்துவிடுவமோ என்று நினைத்த வேடன் ஒவ்வொரு இலையாக பறித்து கீழே போட்டுக் கொண்டிருக்க அவை புலி வடிவிலிருந்த சிவபெருமான் மீது விழுந்து கொண்டிருந்தன.
அன்று மகா சிவராத்திரி நாள். ஊன் உறக்கம் இன்றி சிவபெருமானை வழிபட்ட புண்ணியம் வேடனுக்கு அவனையறியாமல் கிட்டியதால் இறைவன் காட்சி தந்து மோட்சம் தந்தார். அன்று அதிகாலையில் அவனது ஆயுள் முடிவதாக இருந்ததால் யமன் அங்கு வந்தான். நந்தி தேவன் இதை பொருட்படுத்தவில்லை. சிவபெருமான் தட்சிணாமூர்த்தி வடிவில் கையில் கோல் ஏந்தி விரட்டினார். யமனை உள்ளே விட்ட குற்றத்திற்காக நந்தி மீது கோபம் கொண்டார். அவருக்கு பயந்து நந்தி யமனை தன் சுவாசத்தால் கட்டுப்படுத்தி நிறுத்தி விட்டார். பின் யமன் சிவனை வணங்க அவன் விடுவிக்கப்பட்டான். யமன் மறுபடி உள்ளே வராமல் இருப்பதற்காக, இங்குள்ள நந்தி இறைவனை நோக்கி இல்லாமல், வாசலைப் பார்த்தபடி இருப்பதாக ஐதீகம்.
சிவராத்திரி விழா, சிவனுக்கு சிறப்பு பூஜைகளுடன் இங்கு விமரிசையாக நடக்கும். மறுநாள் அமாவாசையன்று கோபுரத்தின் கீழே வேடனை நிறுத்தி, கருவறையில் சிவனுக்கும், அதன்பின் வேடனுக்கும் தீபாராதனை காட்டுவர். வேடன், மோட்சம் பெற்றதை நினைவுபடுத்தும் வகையில் இவ்வாறு செய்கின்றனர். பின், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுடன், வேடன், வேடுவச்சியும் புறப்பாடாவர்.
கல்யாண வரம், குழந்தை வரம், தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம்.
திருலோக்கி ஸ்ரீக்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாள் கோவில்
பெருமாளுக்கு வித்தியாசமாக வில்வத்தால் அர்ச்சனை செய்யப்படும் தலம்
கும்பகோணம் - அணைக்கரை வழியில் திருப்பனந்தாள் அருகில் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருலோக்கி ஸ்ரீக்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாள் கோவில். தாயார் திருநாமம் ஷீரநாயகித்தாயார்,ரங்கநாயகித்தாயார். இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. கோவில் தல விருட்சம் வில்வம். அதனால் இத்தலத்தில் வித்தியாசமாக பெருமாளுக்கு,சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையால் அர்ச்சனை செய்யப்படுகிறது.
மூலவர் ஸ்ரீக்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாள், திருப்பாற்கடலில் (க்ஷீராப்தி என்றால் சமஸ்கிருதத்தில் பால் என்று பொருள்) எழுந்தருளியுள்ள கோலத்தில், காட்சி அளிக்கிறார். அவர் சயன கோலத்தில் தெற்கு நோக்கியும், வடக்கு நோக்கிய பாதங்களுடன் மற்றும் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார். – ஆதிசேஷன். ஸ்ரீதேவி மற்றும் பூதேவி முறையே அவரது தலை மற்றும் பாதங்களில் அமர்ந்துள்ளனர், மேலும் பிரம்மா அவரது தொப்புளிலிருந்து வெளிப்படுவதைக் காணலாம். அவரது திருமேனி மணல், புனுகு, ஜவ்வாது, சாம்பிராணி மற்றும் பல மூலிகைப் பொருட்களால் செய்யப்பட்ட உருவமாகும். அதனால் அவருக்கு திருமஞ்சனம் செய்யப்படுவதில்லை, தைல காப்பு (சிறப்பு எண்ணெய்) மட்டுமே பூசப்படும்.
தம்பதிகளுக்கு இடையே நெருக்கத்தை ஏற்படுத்தும் கோவில்
ஒருமுறை, விஷ்ணு பகவான் தனது பக்தர்களுக்காக, மகாலட்சுமியைத் தனியாக விட்டுவிட்டு, சிறிது நேரம் பூலோகத்திற்கு வந்தார். விஷ்ணு இல்லாமல் மகாலட்சுமி ஒரு நொடி கூட தனியாக இருக்க முடியாது. எந்த நேரத்திலும் தனிமையில் விடப்படாததற்காக, அவள் வருத்தமடைந்து இந்த இடத்தில் தவம் செய்தாள். இந்த தலத்து தீர்த்தத்தில் மகாலட்சுமி நீராடி, வில்வ மரத்தடியில் தவம் செய்து இறைவனின் மார்பில் நிரந்தரமாக வசிக்கும் வரம் பெற்றாள்.
தம்பதிகளுக்கு இடையே நெருக்கத்தை ஏற்படுத்த, இக்கோவில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.திருமணமான தம்பதிகளுக்கு இடையே ஏதேனும் தவறான புரிதல்கள் (அல்லது) அவர்களுக்கு இடையே ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்க பக்தர்கள் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். எனவே, திருமணமான தம்பதியினருக்குள் ஏதேனும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலோ அல்லது பிரிந்திருந்தாலோ, தாயாரை இங்கு வழிபடுவதன் மூலம் பிரச்சனைகள் நீங்கும்.
கும்பகோணம் ராமசாமி கோவில்
காண்போரை அசரவைக்கும் ஆளுயர சிற்பங்கள்
தென்னக அயோத்தி என சிறப்பு பெற்ற ராமசாமி கோவில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ளது. மூலவர் ராமரும், சீதையும் பீடத்தில் அமர்ந்திருக்க, பரதன் குடை விரிக்க, இலக்குவன் அஞ்சலி பந்தத்துடன் நிற்க, சத்ருகனன் வெண்சாமரம் வீச, அனுமன் கையில் வீணையையும், சுவடியையும் ஏந்தியிருக்கிறார்.
இக்கோவில், கி.பி.1600 முதல் கி.பி.1645 வரை தஞ்சாவூரை ஆட்சி செய்த ரகுநாத நாயக்க மன்னரால் கட்டப்பட்டது. இக்கோவில் மகா மண்டபத்தில் உள்ள அனைத்து தூண்களிலும் இருக்கும் சிற்பங்கள் காண்போரை பிரம்மிக்க வைக்கும். இந்த மகாமண்டபத்தில் காணப்படும் சிற்பங்கள் ஆளுயர சிற்பங்களாக உள்ளன. இந்த மண்டபத்தில் உள்ள 64 தூண்களிலும் செய்யப்பட்ட சிற்ப வேலைப்பாடுகள் நம்மை அசரடிக்கின்றன. இப்போது போல் எவ்வித தொழில்நுட்ப வசதிகளோ, இயந்திரங்களோ இல்லாத போதும் இங்கு செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களின் கலை நுணுக்கமும், வடிவமைப்பும் நம் முன்னோர்களின் கலைத்திறனை உலகிற்கு பறைசாற்றுகின்றது. பல நூற்றாண்டுகள் ஆனாலும் அழியாத பெருமையை கொண்டுள்ளது இக்கோவில் சிற்பங்கள்.
இந்த மண்டபத்து தூண்களில் திருமாலின் பல அவதாரங்கள், மீனாட்சி கல்யாணம்,இராமர், சீதை, லட்சுமணர், அனுமார், சுக்ரீவன் பட்டாபிஷேகம், ரதி, மன்மதன் போன்ற நெஞ்சத்தை கொள்ளை கொள்ளும் சிற்பங்கள் அமைந்துள்ளன.
இராமாயண ஓவியம்
இக்கோவிலின் உள் பிரகாரத்தில் இராமாயணம் முழுவதும் மூன்று வரிசைகளில், 219 சுவர் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது. இப்பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்தால் இராமாயணம் முழுவதையும் சித்திரத்தில் கண்டு களிக்கலாம். ஒவ்வொரு முறை வலம் வரும்போது, ஒவ்வொரு வரிசை என்ற நிலையில் சித்திர இராமாயணம் முழுவதையும் பார்த்து, படித்து அறிந்து கொள்ளலாம். இந்த சித்திர இராமாயணம் நாயக்கர் கால ஓவியக்கலைக்கு ஒரு சான்றாகும்.
சுருங்கச் சொன்னால், கும்பகோணத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக இந்த கோவிலும், இதில் உள்ள கலை நுணுக்கம் மிகுந்த சிற்பங்களும், இராமாயண ஓவியங்ககளும் வெகுவாக கவர்கின்றது.
ஏரகரம் கந்தநாதசுவாமி கோவில்
முருகன் சிவபெருமானைப் பூசித்து சூரசம்ஹாரத்திற்கு அஸ்திரங்கள் பெற்ற திருப்புகழ் தலம்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலிருந்து 8 கிமீ தொலைவில் அமைந்துள்ள தேவார வைப்புத்தலம் ஏரகரம் கந்தநாதசுவாமி கோவில். இறைவனின் திருநாமம் ஸ்கந்த நாதர், சங்கரநாதர். இறைவியின் திருநாமம் சங்கரநாயகி அம்மன். இக்கோவில் முருகனின் நான்காம் படை வீடான சுவாமிமலைக்கு அருகில் உள்ளது. இத்தலம் அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் பெற்றது.
ஒரு சமயம் அசுரர்களால், முனிவர்களின் தவத்திற்கு இடையூறு ஏற்பட்டது. அப்போது சிவபெருமான் முருகனை அழைத்து முனிவர்களைக் காத்திடும்படிக் கூறியதோடு, ஒரு அஸ்திரத்தையும் வழங்கி அதனை செலுத்தும் இடத்தை அவருடைய அகமாக அமைத்துக்கொள்ளும்படி அருளியுள்ளார். முருகனின் அஸ்திரம் பூமியில் பாய்ந்த இடம் ஏரகம்.
இத்தலத்து இறைவன் சன்னதியின் பின்புறம் முருகன், ஆதிகந்தநாதசுவாமி திருநாமத்தோடு எழுந்தருளி உள்ளார். இச்சன்னதியில் முருகன் ஒரு முகம், நான்கு கரங்கள் கொண்டு நின்ற நிலையில் ராஜகோலத்தில் உள்ளார். பின் கரங்களில் வஜ்ர சக்தியும் திரிசூலமும் கொண்டுள்ளார். முன் வலக்கரத்தால் அபயம் காட்டியும் இடக் கரத்தை இடுப்பில் ஊன்றியபடியும் அருள்பாலிக்கிறார்.
இத்தலத்தில் தான் முருகன் சிவபெருமானைப் பூசித்து சூரசம்ஹாரத்திற்குப் பல அஸ்திரங்களைப் பெற்றார். இக்கோவிலில் ஐப்பசி மாதம் நடைபெறும் கந்தசஷ்டி விழாவில், முருகன் சங்கரியம்மையிடம் சக்திவேல் பெற்று சூரசம்ஹாரத்திற்கு செல்லும் வைபவம் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
பிரார்த்தனை
இத்தலத்து முருகனை சஷ்டி விரதம் இருந்து வழிபட்டால், திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.
சாக்கோட்டை (கலயநல்லூர்) அமிர்தகலசநாதர் கோவில்
சூரிய பிரபை போன்ற தலை முடியுடன் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி
கும்பகோணம் - நீடாமங்கலம் சாலையில், கும்பகோணத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் சாக்கோட்டை . இறைவனின் திருநாமம் அமிர்தகலசநாதர். இறைவியின் திருநாமம் அமிர்தவல்லி. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான தலம் இது. ஊழிக்காலத்தில் உயிர்களை அடக்கிய கலயம் பிரளயத்தில் மிதந்து வந்து இங்குத் தங்கியதால் கலயநல்லூர் என்று பெயர் வந்ததாக தலவரலாறு கூறுகிறது. கும்பகோணம் தலபுராணத்துடன் தொடர்புடைய இத்தலம் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலின் சப்த ஸ்தானத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இங்குள்ள தட்சிணாமூர்த்தி சற்று வித்தியாசமான தோற்றத்தில் காட்சி தருகிறார். இவர் தனது வலது மேற்கையில் ருத்ராட்ச மாலையும், இடது மேற்கையில் அக்கினியும், வலக்கையில் சின் முத்திரையும், இடக்கையில் சுவடியும் ஏந்தி இருக்கிறார். இடது காலை மடித்து வைத்துக் கோண்டு வலது காலை முயலகன் மீது வைத்தபடி காட்சி தருகிறார். இவரது தலைமுடி சூரிய பிரபை போன்ற அமைப்பில் இருப்பது, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத அரிய காட்சியாகும்.
வைரவன் கோயில் காலபைரவர் கோவில்
காசிக்கு நிகரான காலபைரவர் தலம்
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே கும்பகோணம் சாலையில் 5 கி.மீ. தொலைவில் வைரவன்கோயிலில் அமைந்துள்ள காலபைரவர் கோவில், காசி காலபைரவருக்கு இணையான தலமாகப் போற்றப்படுகின்றது. இத்தலத்தில் காலபைரவர் எழுந்தருளி இருப்பதின் பின்னணியில் ஒரு புராண வரலாறு உள்ளது.
முருகப்பெருமானிடம் உபதேசம் பெற கயிலையில் இருந்து வந்த சிவபெருமானுடன் அனைத்து தேவர்களும் வந்தனர். இவர்களில் பைரவர் மட்டும் சிவபெருமானின் ஆணைப்படி வைரவன் கோவில் எனும் இடத்தில்,காவியியின் வடகரையில் தென்முகமாக அமர்ந்து கொண்டார். அவர் நோக்கிய இடத்தில் ஒரு மயானமும் உள்ளது. இது காசிக்கு நிகரான பெருமை கொண்ட தலம். காசியில் உள்ள காலபைரவரின் அத்தனை அம்சங்களையும் இவரும் கொண்டிருக்கிறார். இங்கு பைரவரை பிரதிஷ்டை செய்த ஈசன் தங்கிய இடம் ஈசன் குடியாகி, அதுவே ஈச்சங்குடியானது. தேவர்கள் நின்று வழிபட்ட இடம் தேவன்குடியானது. கணபதி பூஜித்த இடம் கணபதி அக்ரஹாரம் ஆனது. தேவி உமையாள் புரத்திலும், நந்தி மதகிலும், கங்கை கங்காபுரத்திலும் நின்று பைரவரை வழிபட்டார்கள் என்கிறது தலபுராணம்.
இத்தனை பெருமைகள் கொண்ட இத்தலத்தில் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி நாளிலும் நடைபெறும் பைரவ ஆராதனைகள் விசேஷமானவை. இரவில் 7 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு வரை நடைபெறும் இந்த பூஜையில் கலந்து கொண்டால் வேண்டியவை யாவும் நிறைவேறும்; தடைகள் யாவும் தகரும் என்பது நம்பிக்கை.
காலபைரவரை வணங்குவதால் வியாதிகள் தீரும், பணத்தட்டுப்பாடு நீங்கும், திருமணத் தடை விலகும், புத்திர பாக்கியம் கிட்டும், சனியினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் விலகும், இழந்த பொருள்கள் மீண்டும் கிடைக்கும். பகை நீங்கும், நினைத்த காரியம் வெற்றிகரமாக முடியும். மேலும், அஷ்டமி திதி, திருவாதிரை நட்சத்திரம், ஞாயிறு, வியாழக்கிழமை நாள்களில் உச்சிக்காலத்தில் வணங்குவது நல்ல பலனைத் தரும். ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய நாள்களில் ராகு காலத்தில் வணங்குவது மிகவும் சிறந்த பலனைத்தருகிறது. இந்தத் தலத்தில் நவகிரகங்களையும் தன் நெஞ்சுப் பகுதியில் தாங்கி இருக்கும் ஶ்ரீகாலபைரவரை பூஜிப்பது. நவகிரக தோஷங்களின் நிவர்த்திக்காக தனித்தனியே நவகிரகங்களை பூஜிப்பதற்கு நிகரானது. இங்கு ஶ்ரீகாலபைரவரை பூஜை செய்து வணங்கினால், நவகிரகங்களின் தோஷங்கள் நிவர்த்தி செய்யப்படும்.
சனி பகவானுக்கு குரு பைரவர். ஆகவே இவரை வழிபடுவதால் அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டமச் சனியின் பாதிப்பு விலகி நல்லவையே நடக்கும்.