சாக்கோட்டை (கலயநல்லூர்) அமிர்தகலசநாதர் கோவில்

சூரிய பிரபை போன்ற தலை முடியுடன் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி

சாக்கிய நாயனார் சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து வழிபாடு செய்த தலம்

கும்பகோணம் - நீடாமங்கலம் சாலையில், கும்பகோணத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் சாக்கோட்டை. இறைவனின் திருநாமம் அமிர்தகலசநாதர். இறைவியின் திருநாமம் அமிர்தவல்லி. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான தலம் இது.

ஊழிக்காலத்தில் உயிர்களை அடக்கிய கலயம் பிரளயத்தில் மிதந்து வந்து இங்குத் தங்கியதால் கலயநல்லூர் என்று பெயர் வந்ததாக தலவரலாறு கூறுகிறது. கும்பகோணம் தலபுராணத்துடன் தொடர்புடைய இத்தலம், கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலின் சப்த ஸ்தானத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இங்குள்ள தட்சிணாமூர்த்தி சற்று வித்தியாசமான தோற்றத்தில் காட்சி தருகிறார். இவர் தனது வலது மேற்கையில் ருத்ராட்ச மாலையும், இடது மேற்கையில் அக்கினியும், வலக்கையில் சின் முத்திரையும், இடக்கையில் சுவடியும் ஏந்தி இருக்கிறார்.

இடது காலை மடித்து வைத்துக் கோண்டு வலது காலை முயலகன் மீது வைத்தபடி காட்சி தருகிறார். இவரது தலைமுடி சூரிய பிரபை போன்ற அமைப்பில் இருப்பது, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத அரிய காட்சியாகும்.

சாக்கிய நாயனார் சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து வழிபாடு செய்த தலம்

சாக்கிய நாயனார் வழிபட்ட தலமாதலால் சாக்கோட்டை எனப்பட்டது. காஞ்சிபுரம் அருகே சங்கமங்கையில் மார்கழி மாதம் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர் சாக்கிய நாயனார். இவர் சிவனிடமும் அவரது அடியார்களிடமும் மிகவும் அன்பு கொண்டிருந்தார். பிறவிப் பெருங்கடலை கடக்க சிவநெறியே உயர்ந்தது என்பதை உணர்ந்தார். சாக்கியர் கோலத்தில் இருந்தாலும் எப்போதும் மனதில் சிவ சிந்தனையுடன், யாரும் அறியாமல் சிவபூஜையும் செய்து வந்தார்.

எப்போதும் சிவபூஜை முடித்த பின்பு தான் சாப்பிடும் வழக்கம் கொண்டிருந்த இவர், ஒரு நாள் வெளியே சென்றார். வழியில் ஒரு லிங்கம் வழிபாடு ஏதும் இன்றி இருப்பதைக் கண்டு மனம் வருந்தினார். லிங்கத்தை நீராட்டி, மலர் போட்டு, பூஜை செய்ய ஆசைப்பட்டார். ஆனால் அந்த இடத்தில் எதுவும் இல்லை. இவரது நல்ல மனம் மட்டுமே இருந்தது. சிவனின் மீது கொண்ட அன்பால் அருகே கிடந்த சிறு கல்லை எடுத்து "நமசிவாய” மந்திரத்தை உச்சரித்து லிங்கத்தின் மீது போட்டார். இவரது அன்பால் கட்டுப்பட்ட இறைவன், வீசிய கல்லை மலராக ஏற்றுக் கொண்டார்.

இதே போல், தினமும் லிங்கத்தின் மீது கல்லெறிந்து வழிபாடு செய்து அதன் பின் உணவருந்தி வந்தார். இவர் சாக்கியர் கோலத்தில் இருந்ததால், பார்ப்பவர்களுக்கு இவர் சிவன் மீது கோபத்தில் கல் எறிகிறார் என நினைப்பார்கள். ஆனால் சிவன் ஒருவருக்கு மட்டும்தான் அன்பால் செய்கிறார் என்பது புரியும். இந்நிலையில் ஒருநாள் சாக்கிய நாயனார், சிவ சிந்தனையிலேயே மூழ்கியிருந்ததால், சிவபூஜை செய்யாமல் சாப்பிட அமர்ந்தார். திடீரென நினைவு வந்ததும், தான் எவ்வளவு பெரிய சிவத் துரோகம் செய்து விட்டோம் என வருந்தி ஓடி சென்று கல் எறிந்து சிவபூஜை செய்தார்.

சிவபக்தியுடன் இவர் எறிந்த கல் கயிலையில் பார்வதியுடன் அமர்ந்திருந்த சிவனின் பாதத்தில் பொன் மலராக விழுந்தது. மகிழ்ந்த இறைவன் பார்வதிதேவியுடன் இவருக்கு காட்சி கொடுத்து நாயன்மார்களில் ஒருவராக்கினார். 

 

கும்பகோணம் - நீடாமங்கலம் சாலையில், கும்பகோணத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் சாக்கோட்டை.

Previous
Previous

திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோவில்

Next
Next

பாடகச்சேரி கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள் கோவில்