திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோவில்

திருமணத்தடை நீங்க வாழை மரத்திற்கு தாலி கட்டும் பரிகார பூஜை

எமதர்மன் குழந்தை வடிவில் இருக்கும் அபூர்வ தோற்றம்

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 21 கி.மீ. தொலைவிலும், மண்ணச்சநல்லூரிலிருந்து 7 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள தேவாரத் தலம் திருப்பைஞ்ஞீலி. இறைவனின் திருநாமம் ஞீலிவனேஸ்வரர். இக்கோவிலில் அம்மன் சன்னதி இரண்டு உள்ளது. ஒரு சன்னதியில் நீள்நெடுங்கண் நாயகியும், மற்றொரு சன்னதியில் விசாலாட்சி அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளிக்கின்றனர்.

ஞீலி என்பது மனிதர்கள் உண்ண இயலாத இறைவனுக்கு மட்டுமே படைப்பாகிற ஒரு வகைக் கல்வாழை. பைஞ்ஞீலி என்பது பசுமையான வாழையைக் குறிக்கும். பசுமையான ஞீலி வாழையை தல விருட்சமாக பெற்றதால் திருப்பைஞ்ஞீலி என்று இத்தலம் பெயர் பெற்றது.

சப்த கன்னியர் வாழை மர வடிவில் எழுந்தருளி இருக்கும் தலம்

பிராம்மி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த கன்னிகளும் தங்களது திருமணத்திற்கு முன்பு இத்தலம் வந்து அம்பாளின் தரிசனம் வேண்டித் தவம் செய்தனர். அவர்களுக்கு அம்பாள் காட்சி தந்து, தகுந்த காலத்தில் நல்ல வரன்கள் அமையப் பெற்று சிறப்புடன் வாழும்படி வரம் தந்தாள்.

சப்த கன்னிகள் அம்பாளை இங்கே எழுந்தருளும்படி வேண்டினர். எனவே அம்பாள் இங்கே எழுந்தருளினாள். அவள் சப்த கன்னிகளிடம், 'நீங்கள் வாழை மரத்தின் வடிவில் இருந்து நீண்டகாலத்திற்கு என் தரிசனம் காண்பீர்கள்' என்றாள். அதன்படி சப்த கன்னிகள் வாழை மரங்களாக மாறி இங்கேயே தங்கினர்.

வாழை மரத்திற்கு தாலி கட்டும் பரிகார பூஜை

இந்த ஆலயத்துக்கென்றே விசேஷ வழிபாடான கல்(யாண) வாழைகளுக்கு முன்னே அமர்ந்து, செய்து கொள்ளும் பரிகார பூஜை மற்றும் தோஷ நிவர்த்தி பூஜை அதிசயமானது. திருமண தோஷம் உள்ளவர்கள் வாழை மரத்திற்கு தாலி கட்டிப் பரிகார பூஜைகள் செய்கின்றனர். இவ்வாறு செய்வதால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.

திருப்பைஞ்ஞீலி ஞீலிவனநாதர் கோவிலுக்கு வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை தினங்களில் பரிகாரம் செய்ய செல்வது சிறந்தது. இங்கு காலையும் மாலையும் வாழை பரிகார பூஜை செய்யப்படுகிறது. இதனால் நாகதோஷ நிவர்த்தி, திருமணத்தடை விலகுதல், பூரண ஆயுள் போன்ற மங்கலங்கள் நிறைவேறுமாம். பிற மதத்தினரும் இந்த கல்வாழை பரிகார பூஜையில் கலந்து கொள்வது தனிச்சிறப்பாகும்.

எமதர்மன் குழந்தை வடிவில் இருக்கும் அபூர்வ தோற்றம்

இத்தலத்தில் அருளும் யமதர்மராஜனை சனிக்கிழமைகளில் வழிபட, சனி பகவான் அருள் கிட்டும்.

இத்தலத்தில் எமதர்மனுக்கு என்று அமைந்துள்ள தனிச் சன்னதி, ஒரு குடைவரைக் கோவிலாகும். பூமிக்கு அடியில் சற்று பள்ளத்தில் உள்ள இந்த குடைவரைக் கோவிலில் புடைப்பு சிற்பமாக சோமஸ்கந்தர் ரூபத்தில் சிவன் அம்பாள் இருவருக்கும் இடையே முருகன் அமர்ந்திருக்க, சுவாமியின் பாதத்தின் கீழே குழந்தை வடிவில் எமதர்மன் இருக்கிறார்.

இறைவன் பெயர் மிருத்யுஞ்சயர் , தாயார் தாட்சாயணி. மிருத்யுஞ்சயர் என்றால் எம பயம் போக்குபவர் என்று அர்த்தம். அதனால் இந்த சன்னதி முன்பு திருக்கடவூரில் செய்வது போல சஷ்டியப்தபூர்த்தி, ஆயுள்விருத்தி ஹோமம் ஆகியவை நடத்துகின்றனர்.

திருக்கடவூர் தலத்தில், மார்க்கண்டேயனுக்காக எமதர்மனை காலால் உதைத்து சம்ஹாரம் செய்தார் சிவபெருமான். இதனால் உலகில் இறப்பு என்பதே இல்லாமல் போக பூமியின் பாரம் அதிகரித்தது. பாரம் தாங்காத பூமிதேவி சிவபெருமானிடம் முறையிட்டாள்.

சிவபெருமான் அதற்கிணங்கி தைப்பூச நாளன்று மீண்டும் எமதர்மனை இத்தலத்தில் தன் பாதத்தின் அடியில் குழந்தை உருவில் எழும்படி செய்து, தர்மம் தவறாமல் நடந்து கொள்ளும்படி அறிவுரை கூறி மீண்டும் தன் பணியை செய்து வரும்படி அருள் செய்தார்.

எமதர்மன் சனி பகவானுக்கு அதிபதி என்பதாலும், எமனுக்கு இத்தலத்தில் தனி சன்னதி உள்ளதாலும், இத்தலத்தில் நவக்கிரக சன்னதி இல்லை. இத்தலத்தில் அருளும் யமதர்மராஜனை சனிக்கிழமைகளில் வழிபட, சனி பகவான் அருள் கிட்டும். அதனால் சனிபகவானின் பாதிப்புக்கு உள்ளானவர்கள் இக்கோவிலுக்கு வந்து பிராத்தனை செய்கின்றனர். 

 

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருப்பைஞ்ஞீலி.

Previous
Previous

வன்னிவேடு அகத்தீசுவரர் கோவில்

Next
Next

சாக்கோட்டை (கலயநல்லூர்) அமிர்தகலசநாதர் கோவில்