திருக்கருக்காவூர் முல்லைவனநாதர் கோவில்

திருக்கருக்காவூர் கர்ப்பரட்சாம்பிகை

கருவை பாதுகாத்து சுகப்பிரசவம் அருளும் அம்பிகை

தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பாபநாசம் என்ற ஊரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் (தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் ஆகிய இரு இடங்களிலிருந்தும் 20 கிலோமீட்டர்) அமைந்துள்ள தேவார தலம் திருக்கருக்காவூர். இறைவன் திருநாமம் முல்லைவனநாதர். இறைவியின் திருநாமம் கர்ப்பரட்சாம்பிகை. இத்தலத்து அம்பிகையை வணங்கினால் வயிற்றில் இருக்கும் கருவுக்கு பாதுகாப்பாக இருந்து கருசிதைவு ஏற்படாமல் காத்திடுவாள். அதுமட்டுமல்ல பல வருடம் குழந்தை செல்வம் இல்லாத ,டாக்டர்கள் கைவிரித்த தம்பதிகளுக்கும் குழந்தை செல்வம் அருளுபவள் இத்தல அம்பிகை. எனவே இந்த அம்பிகைக்கு 'கரு காத்த நாயகி' என்று பெயர். வடமொழியில் 'கர்ப்பரட்சாம்பிகை' எனப் பெயர். சுருங்கச் சொன்னால், இத்தலம் கரு,கருகாத ஊர் ஆகும்.

நிருத்துருவமுனிவரின் பத்தினி வேதிகை, கர்ப்பகாலத்தில் நேர்ந்த அயர்ச்சியால், அங்கு வந்த ஊர்த்துவபாத முனிவரை உபசரிக்க  இயலாமல் போகவே, கோபம் கொண்ட முனிவர், அவளது கர்ப்பம் சிதையுமாறு சபித்தார். அதனால் துயரமுற்ற தம்பதியர்,இத்தலத்து இறைவனையும் இறைவியையும் சரணடைந்து துதிக்கவே, வேதிகையின் கரு சிதையாமல் அம்பாள் காத்து ரட்சித்தபடியால் கர்ப்பரட்சாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள். கருச்சிதைவுற்று மகப்பேறின்றி இருப்போர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு மகப்பேறு அடைகின்றனர். அம்பாள் கர்ப்பரட்சாம்பிகையிடம் திருமணம் கூடிவர, குழந்தைப் பாக்கியம் உண்டாக, சுகப்பிரசவம் ஏற்பட பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள்.

குழந்தைப் பாக்கியம் கிடைக்க செய்யப்படும் பிரார்த்தனை

இத்திருக்கோவில் அம்பாள் சன்னதியில், நெய்யினால் படிமெழுகி கோலமிட்டு மீதமுள்ள நெய்யை அம்பாள் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து கொடுப்பார்கள். இந்த நெய் பிரசாதத்தை 1/2 கிலோ நெய்யுடன் கலந்து தம்பதியர் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். இக்கோயில் சோமாஸ்கந்தர் அமைப்பில் உள்ளதால், இத்திருக்கோயில் பிரகாரத்தை ஒரு சேர மூன்று முறை வலம் வரும் தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது வரலாறு.

சுகப்பிரசவம் ஏற்பட

கர்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவம் அடைவதற்காக அம்பாள் திருவடியில் வைத்து, மந்திரித்து விளக்கெண்ணெய் தரப்படுகிறது. பிரசவ வலியேற்படும் காலத்தில் இதை வயிற்றில் தடவிவர, எந்தவிதமான கோளாறும் இல்லாமல் சுகப்பிரசவமாகும். கர்ப்பம் அடைந்தவர்களுக்கு எப்போதாவது அசாதாரண வலி தோன்றினால், அப்போது மந்திரித்த விளக்கெண்ணெய்யை வயிற்றில் தடவினால் வலி நின்று நிவாரணம் கிடைக்கும்.

தங்கத் தொட்டில் பிரார்த்தனை

குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கும், குழந்தைப் பேறு பெற்றவர்களுக்கும் நாட்டிலேயே முதல் முறையாக தங்கத் தொட்டில் பிரார்த்தனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தை வரம் வேண்டுபவர்கள் நெய் மந்திரிக்கும்போது அம்பாள் பாதத்தில் உள்ள ஸ்கந்தரை தம்பதியர் பெற்றுத் தங்கத் தொட்டிலில் இடுவதும், குழந்தை வரம் பெற்றவர்கள் தங்கள் குழந்தையைத் தங்கத் தொட்டிலில் இடுவதும் இங்கு முக்கிய பிரார்த்தனையாகும்.

 
Next
Next

சிதம்பரம் நடராஜர் கோவில்