
பரமந்தூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில்
ஒரு பாதி முகம் கோபமாகவும், மறுபாதி சிரித்த முகமாகவும் காட்சி தரும் அபூர்வ ஆஞ்சநேயர்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து ஆவுடையார் கோவில் செல்லும் சாலையில் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பரமந்தூர்
ஆதிகேசவ பெருமாள் கோவில். ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் வேத வியாசரின் தந்தை பராசர மகரிஷியால் வழிபட்டதால், இத்தலம் 'பராசர க்ஷேத்திரம்' என்றும் அழைக்கப்பட்டது. 7000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.
இக்கோவில் தூணில் எழுந்தருளி இருக்கும் ஆஞ்சநேயர் மிகவும் விசேடமானவர். இவர் தெற்கு நோக்கி அருள்வதும், வாலின் நுனி தலைக்கு மேல் இருப்பதும் விசேஷ அம்சங்கள் . வயதானவர் போன்ற தோற்றம் காட்டும் இந்த ஆஞ்சநேயர், கிழக்குப்பக்கம் இருந்து தரிசித்தால் கோபமாகவும், மேற்குப்பக்கம் இருந்து தரிசித்தால் சிரித்த முகத்துடனும் காட்சியளிப்பார். இப்படி இருவேறு முக பாவங்களை கொண்ட ஆஞ்சநேயரை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

திருக்குரக்குக்கா குந்தளேசுவரர் கோவில்
ஆஞ்சநேயர் தன்னுடைய குண்டலத்தை படைத்து சிவபெருமானை வழிபட்ட தேவார தலம்
மயிலாடுதுறையில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்குரக்குக்கா. இறைவன் திருநாமம் குந்தளேசுவரர். இறைவியின் திருநாமம் குந்தளநாயகி.
ஆஞ்சநேயர் சிவபெருமானை வழிபட்ட தலம் இது. இக்கோவிலில் ஆஞ்சநேயர் சன்னதி, இறைவன் குந்தளேசுவரர் சன்னதி எதிரே அமைக்கப்பட்டுள்ளது. திருமால், ராமாவதாரம் எடுத்தபோது, அவருக்கு உதவுவதற்காக சிவபெருமானே ஆஞ்சநேயராக வந்தார். எனவே, ஆஞ்சநேயர் சிவஅம்சம் ஆகிறார். அவ்வகையில் இத்தலத்தில் சிவபெருமானே, தன்னை வழிபடும் கோலத்தில் இருப்பதாக ஐதீகம். எனவே இவரை, 'சிவஆஞ்சநேயர்' என்றும், 'சிவபக்த ஆஞ்சநேயர்' என்றும் அழைக்கிறார்கள். இந்தத் திருநாமம் உடைய ஆஞ்சநேயர் வேறு எங்கும் கிடையாது. இவரே இத்தலத்தில் பிரசித்தி பெற்ற மூர்த்தியாவார். ஒவ்வொரு அமாவாசையன்றும் இவரது சன்னதியில் ஹோமம் நடக்கிறது.
ராவணனை வதம் செய்த தோஷம் நீங்க, ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்ய எண்ணிய ராமர், சிவலிங்கம் கொண்டு வரும்படி ஆஞ்சநேயரை இமயமலைக்கு அனுப்பினார். ஆஞ்சநேயரும் சிவலிங்கம் எடுத்து வரச் இமயமலைக்குச் சென்றார். இதனிடையே ஆஞ்சநேயர் வர கால தாமதம் ஆனதால், சீதாதேவி கடல் மணலில் லிங்கம் சமைக்கவே, ராமர் அந்த லிங்கத்திற்கு பூஜை செய்தார். அதன்பின்பு லிங்கத்துடன் வந்த ஆஞ்நேயர், ராமர் சிவபூஜை செய்துவிட்டதை அறிந்து கோபம் கொண்டார். மேலும், மணல் லிங்கத்தை தனது வாலால் உடைக்க முயன்றார். முடியவில்லை.
சிவ அபச்சாரம் செய்ததால் மன்னிப்பு வேண்டிய ஆஞ்சநேயர் இத்தலத்தில் சிவபூஜை செய்தார். அப்போது சிவபெருமானுக்கு மலருடன், தான் காதில் அணிந்திருந்த குண்டலத்தையும் படைத்து வணங்கி மனஅமைதி பெற்றார். ஆஞ்சநேயர் குண்டலம் வைத்து வழிபடப்பட்டவர் என்பதால், இத்தல சிவன் 'குண்டலகேஸ்வரர்' என்றும் பெயர் பெற்றார்.
பிரார்த்தனை
இவரை வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சதுரங்கப்பட்டினம் மலைமண்டல பெருமாள் கோவில்
தலையில் குடுமியுடன் இருக்கும் அபூர்வ ஆஞ்சநேயர்
கை சுண்டு விரலில் மோதிரத்துடனும், வாயில் இரண்டு கோரை பற்களுடனும் இருக்கும் வித்தியாசமான தோற்றம்
சென்னையிலிருந்து கல்பாக்கம் செல்லும் பாதையில் கல்பாக்கத்திற்கு அருகே உள்ள சதுரங்கப்பட்டினம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது மலைமண்டல பெருமாள் கோவில். இத்தலம் சற்றே மலை போன்ற அமைப்பின் மேல் உள்ளதால் மலை மண்டல பெருமாள் என்று அழைக்கப்படுகின்றார். மலைமண்டல பெருமாளுக்கு கிரி வரதராஜப் பெருமாள் என்ற திருநாமும் உண்டு. தாயார் திருநாமம் பெருந்தேவி. இக்கோவில் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
இக்கோவிலில் 400 ஆண்டுகளுக்கு முந்தைய விஜயநகர பேரரசு காலத்திய அனுமன் சிற்பம் ஒன்று உள்ளது. கலை நுணுக்கத்தோடு செய்யப்பட்ட இந்த சிற்பத்தில், பல அதிசய அம்சங்கள் உள்ளன. இந்த ஆஞ்சநேயரின் தலையில் குடுமி அமைந்துள்ளது. அந்தக் குடுமியானது அவரின் தலையின் பின்புறம் முடிந்த நிலையில் காணப்படுகிறது. அவரின் வாலானது, உடம்பின் பின்புறத்தில் தொடங்கி தலையின் உச்சியில் போய் சுருட்டப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. இவரது வாயில் இரண்டு கோரை பற்கள் வெளியே துருத்திக்கொண்டு தெரிகின்றன. இவர் இரண்டு கைகளையும் புஷ்பாஞ்சலி அஸ்த நிலையில் (புஷ்பங்களை அர்ச்சனை செய்யும் பாவனையில்) வைத்துக் கொண்டிருக்கிறார். இவரது கை சுண்டு விரலில் மோதிரம் அமைந்திருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். திருப்பதி பெருமாளுக்கு இருப்பது போல் கால் முட்டிக்கு கீழ் ஆபரணமும், பின்புறம் திருவாசியும் (பிரபை) இருப்பது மேலும் ஒரு சிறப்பாகும்.

மஞ்சக்குடி சீனிவாச பெருமாள் கோவில்
ஆஞ்சநேயர் கண்டேன் சீதையை என இரு விரல் நீட்டிய நிலையில் இருக்கும் அபூர்வ தோற்றம்
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகாவில், திருவாரூரில் இருந்து 18 கிமீ தொலைவில் உள்ள மஞ்சக்குடி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது சீனிவாச பெருமாள் கோவில். தாயார் ஸ்ரீதேவி, பூதேவி.
ராமபிரான் வனவாசம் மேற்கொண்டபோது, அவர் பத்தினியான சீதையும் உடன் செல்கிறாள். அப்போது காட்டில் தனிமையில் இருந்த போது, ராவணனின் மாமன் மாரீசன், மான் உருவில் வந்து மாயம் செய்கிறான். மானை பிடித்து தருமாறு சீதை கேட்டபோது, ராமன் துரத்தி சென்ற நிலையில், சீதை கடத்தப்பட்டாள். ராமபிரான் தன் மனைவியை காணாமல் துயரப்படும்போது ராமனின் மோதிரத்துடன் ஆஞ்சநேயர் இலங்கைக்கு சென்று சீதை இருக்கும் இடத்தை தெரிந்து வந்த ஆஞ்சநேயர் கண்டேன் சீதையை என இரு விரல் நீட்டி காட்டிய இடம் என்பதால் அப்பகுதியினர் ஆஞ்சநேயருக்கு கோவில் அமைத்து வழிபட்டனர்.
இந்தியாவில் எந்தக் கோவிலிலும் இல்லாத வகையில் உற்சவரான ஆஞ்சநேயர் வலது கையை நீட்டி இரு விரல்களால் ‘கண்டேன் சீதையை’ என கூறிய நிலையில் அருள்பாலிப்பது இக்கோவிலின் தனி சிறப்பாகும்.
ஆஞ்சநேயரை வேண்டி ஒருபடி தயிர், நான்கு முழ புது வேஷ்டி ஆஞ்சநேயர் மேனியில் சார்த்தி வழிபாடு செய்தால் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இக்கோவிலுக்கு அருகாமையில் வடக்கே சிறப்பு மிக்க திருத்தலையாலங்காடு பாலாம்பிகா சமேத ம்ருத்யுஞ்ஜயேஸ்வரர் கோவிலும், ஆலங்குடி குருபகவான், வலங்கைமான் மகா மாரியம்மன் கோவிலும் உள்ளன.

மானந்தகுடி ஏகாம்பரேசுவரர் கோவில்
ஆஞ்சநேயர் மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாடிய தலம்
வாழ்வில் மங்களம் அருளும் மங்கள ஆஞ்சநேயர்
திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்ற ஊரில் இருந்து, 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மானந்தகுடி. இறைவன் திருநாமம் ஏகாம்பரேசுவரர். இறைவியின் திருநாமம் காமாட்சி அம்மன். முற்காலத்தில் இத்தலம் அனுமன் ஆனந்த குடி என்று அழைக்கப்பட்டது. அதுவே பின்னர் மானந்த குடி என்றானது. இதன் பின்னணியில் ஒரு புராண வரலாறு உள்ளது.
கார்த்தவீரியன் என்பவன் சிறந்த சிவபக்தன். ஒருசமயம் அவன் சிவபூஜை செய்து கொண்டிருந்தபோது, ஆஞ்சநேயர் அவனது பூஜைக்கு தொந்தரவு செய்தார். இதனால் கோபமடைந்த கார்த்தவீரியன், ஆஞ்சநேயரை சபித்துத் விட்டான். தவறை உணர்ந்த ஆஞ்சநேயர், விமோசனம் வேண்டி இத்தலத்திற்கு வந்தார். சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். சிவன் அவருக்கு அம்பிகையுடன் காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தருளினார். அந்த மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாடினார் ஆஞ்சநேயர். எனவே இத்தலம் 'அனுமன் ஆனந்த குடி' என்றழைக்கப்பட்டு, பிற்காலத்தில் 'மானந்தகுடி' என்று மருவியது.
இக்கோவிலில் ஆஞ்சநேயருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இவரிடம் வேண்டிக்கொண்டால் வாழ்வில் மங்களம் உண்டாகும் என்பது நம்பிக்கை . எனவே இவரை, 'மங்கள ஆஞ்சநேயர்' என்றே அழைக்கிறார்கள். இக்கோவிலில் ஆஞ்சநேயருக்கு, அமாவாசை மற்றும் மூல நட்சத்திரத்தன்று சிறப்பு பூஜைகள் நடக்கிறது. தெரியாமல் தவறு செய்து வருந்துபவர்கள், மன அமைதி கிடைக்க இங்கு வேண்டிக் கொள்கிறார்கள்.

தாராபுரம் காடு அனுமந்தராய சுவாமி கோவில்
இடுப்பில் பிச்சுவா கத்தியும், கிரீடத்தின் பின் புறத்தில் பட்டாகத்தியும் தாங்கிய ஆஞ்சநேயர்
ஆங்கிலேய கலெக்டரின் புற்று நோயை குணப்படுத்திய ஆஞ்சநேயர்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அமைந்திருக்கிறது காடு அனுமந்தராய சுவாமி கோவில். முற்காலத்தில் கோவில் இருந்த இடம் காட்டுப்பகுதியாக இருந்ததால் சுவாமிக்கு காடு அனுமந்தராய சுவாமி என்ற பெயர் ஏற்பட்டது. இக்கோவில், கிருஷ்ணதேவராயரின் குருவாக இருந்த துறவி ஸ்ரீ வியாசராஜ சுவாமிகளால், 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆஞ்சநேய பக்தரான இவர் நாடு முழுவதும் எழுநூற்று முப்பத்திரண்டு ஆஞ்சநேயர் கோவில்களை கட்டினார். அதில் 89வதாகக் கட்டப்பட்டது தாராபுரம் காடு அனுமந்தராய சுவாமி கோவில்.
காடு அனுமந்தராய சுவாமி ஏழு அடி உயரம், மூன்று அடி அகலத்துடன் உள்ளார். இடுப்பில் சலங்கைகள் கட்டப்பட்டுள்ளன. வலது இடுப்பில் பிச்சுவா கத்தியும், கழுத்தில் சுதர்சன சாளக்கிராம மாலைகளும் காணப்படுகிறது. வலது கை அபயஹஸ்தமாகவும், இடது கை சவுகந்திகாமலர் ஏந்திய நிலையிலும் உள்ளது. முகம் வடகிழக்கு திசை நோக்கியும், பாதங்கள் வடக்கு நோக்கியும் உள்ளன. கிரீடத்தின் பின் புறத்தில் பட்டாகத்தி இருக்கிறது. முகத்தின் வலதுபுறம் சக்கரமும், இடதுபுறம் சங்கும் உள்ளன. பின்புறத்திலுள்ள வாலானது வலது கையைத் தொட்டு முகத்தை நோக்கி மேல்நோக்கிச் சென்று பின் கீழ்நோக்கி வந்து இடது கையை தொட்டு முடிவடைகிறது. வாலில் மூன்று மணிகள் உள்ளன.
1810ல், கோவை கலெக்டராக இருந்தவர் ஆங்கிலேயரான டீலன்துரை. இவருக்கு புற்றுநோய் ஏற்பட்டது. அப்போது சிலர் நோய் நீங்க காடு அனுமந்தராய சுவாமியை வழிபடுமாறு கூறினர். கலெக்டரும் அவ்வாறே செய்ய நோய் நிவர்த்தியானது. இதற்கு நன்றிக்கடனாக கோவிலில் கர்ப்பக்கிரகத்தை பெரிதாகக் கட்டினார். கோபுரம் கட்ட முயன்ற போது, பக்தர் ஒருவரின் கனவில் அனுமந்தராய சுவாமி தோன்றி, கோபுரம் தேவையில்லை என்று கூறியதால், அந்த முயற்சி கைவிடப்பட்டது.
இந்தக் கோவில் ஆஞ்சநேயருக்குரிய தலமாக இருந்தாலும், அவரது நாதனான இராமபிரானுக்கே முதல் பூஜை நடக்கிறது. அதே போல் பிரம்மோற்சவமும் நாராயணனின் அவதாரங்களில் ஒன்றான நரசிம்மருக்கு நடத்தப்படுகிறது. இங்குள்ள இலட்மி நரசிம்மர் வெகு நாட்களாக காவிரியும், பவானியும் சங்கமமாகும் கூடுதுறையில் தண்ணீரில் ஜலவாசம் செய்து கொண்டிருந்தார். ஒருநாள் பக்தர் ஒருவருக்குத் தரிசனமளித்தார். அவர் அந்தச் சிலையைக் கொண்டு வந்து இந்தக் கோவிலில் பிரதிஷ்டை செய்தார். இவருக்கு தனிச்சன்னதி உள்ளது.

செங்கல்பட்டு கணையாழி ஆஞ்சநேயர் கோவில்
கையில் ராமபிரான் தந்த கணையாழியோடு (மோதிரத்தோடு) காட்சி கொடுக்கும் ஆஞ்சநேயர்
செங்கல்பட்டு நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது கணையாழி ஆஞ்சநேயர் கோவில். இத்தலத்தின் புராதான பெயர் செங்கழுநீர்பட்டு. பின்னர் இது மருவி செங்கல்பட்டு என்று ஆனது இக்கோவில் சுமார் 800 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. கருவறையில் கணையாழி ஆஞ்சநேயர், நின்ற நிலையில் இருதிருக்கரங்களுடன் வலது கரத்தில் ராமபிரான் தந்த கணையாழியையும் இடது கரத்தினை ஊரு ஹஸ்தமாகவும் கொண்டு அருள்புரிகின்றார்.
ஆஞ்சநேயர் இத்தலத்தில் கையில் கணையாழியோடு (மோதிரத்தோடு) காட்சி கொடுப்பதற்கு ராமாயணத்தின் பின்னணி உள்ளது.
சீதையை ராவணன் இலங்கையில் சிறை வைத்திருந்த போது ராமபிரான், சீதையை காணும் பொருட்டு, அவரது பணியாள் என்பதற்கு அடையாளமாய் தமது கணையாழியை கொடுத்து ஆஞ்சநேயரை அனுப்பி வைத்தார். ஆஞ்சநேயர் ஆகாய மார்க்கமாய் இவ்வழியே செல்லும் போது தடாகம் ஒன்றைக் கண்டார். அத்தடாகத்தில் சிறிது இளைப்பாறும் பொருட்டு வானிலிருந்து கீழிறங்கி தடாகத்தில் அமர்ந்து சிரமபரிகாரம் மேற்கொண்டார். அப்போது மோதிரத்தை இத்தலத்தில் வைத்ததாகவும், அதன்பின்னர் இலங்கையை அடைந்து சீதாப்பிராட்டியிடம் காண்பித்ததாகவும், இத்தலபுராணம் தெரிவிக்கின்றது.

திருச்சி ஓடத்துறை ஆற்றழகிய சிங்கர் கோவில்
நெற்றிக்கண் கொண்ட அபூர்வ ஆஞ்சநேயர்
ஆங்கிலேய பொறியாளரிடம் மூலவர் லட்சுமி நரசிம்மருக்கு கர்ப்பகிரகம் கட்டிக் கொடுக்கச் சொன்ன நெற்றிக்கண் ஆஞ்சநேயர்
திருச்சி, சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 10 நிமிட நடைபயணத்தில் அமைந்துள்ளது ஓடத்துறை ஆற்றழகிய சிங்கர் கோவில். கருவறையில் மூலவர் ஸ்ரீஆற்றழகிய சிங்கப்பெருமாள் கையில் செங்கோல் ஏந்தி, தன் மடியினில் மகாலட்சுமியை அமர்த்திக் கொண்டு, லட்சுமி நரசிம்மராக 'ஆற்றழகிய சிங்கர்' என்ற திருநாமத்தோடு கிழக்கு நோக்கி சேவை அருளுகிறார். இக்கோவில் மண்டபத்தில், ஆஞ்சநேயர், தனது பஞ்சலோகத் திருமேனியில், நெற்றியில் மூன்றாவது கண்ணுடன், வடக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் எழுந்தருளி இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
திருவரங்கம் தலத்துடன் தொடர்புடைய நரசிம்ம தலங்கள் மூன்று ஆகும். அவை காவேரியின் வடகரையில் காட்டழகிய சிங்கர், காவேரி தென் கரையில் ஆற்றழகிய சிங்கர், மேட்டழகிய சிங்கர் ஆகும். முற்காலத்தில் திருவரங்கத்திற்க்கு செல்ல பாலம் இல்லாத காரணத்தால், காவேரியில் ஓடம் மூலம் சென்றனர். மாதம் மும்மாரி பெய்து காவேரியில் ஏற்படும் வெள்ள பெருக்கின காரணமாக, மக்கள் அவதியுற்று ரங்கநாதரை தரிசனம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். இப்பகுதி மக்கள் வருந்தி பிரார்த்தனை செய்தததை ஏற்று, ஸ்ரீரங்கநாத பெருமாள் இத்தலத்தில் உபய நாச்சியாருடன் உற்சவராக சேவை சாதிக்கிறார். அதனால் இவ்விடம் ஓடத்துறை என பெயர் பெற்றது.
ஆங்கிலேயர் காலத்தில் இப்பகுதியின் தென் மற்றும் வடகரையை இணைக்க பாலம் அமைத்தபோது மூன்று முறையும் பாலம் இடிந்து விழுந்தது. அச்சமயம் இத்தல நெற்றிக்கண் ஆஞ்சனேயர், ஆங்கிலேய பொறியாளரின் கனவில் தோன்றி, இத்தலத்து லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு கர்ப்பகிரகம் நிர்மாணம் செய்து கொடுத்தால், பாலம் கட்டும் பணி எளிதில் முடிவடையும் என்று கூறினார். அதன்படி ஆங்கிலேய பொறியாளர் கர்ப்பகிரகம் கட்டி கொடுக்க, காவேரி ஆற்றில் பாலம் கட்டும் பணியும் முடிந்தது.

தஞ்சாவூர் பிரதாப வீரஆஞ்சநேயர் (மூலை அனுமார்) கோவில்
மூல நட்சத்திர நாட்களில் வழிபட்டால் படிப்பில் தடை, திருமணத் தடை ஆகியவற்றை தகர்த்தெறியும் மூலை அனுமார்
ஆஞ்சநேயர் குழந்தையாக தன் தாயின் மடியில் அமர்ந்திருக்கும் அபூர்வ சிற்பம்
தஞ்சை பெரியகோவிலில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில், மேல வீதியும் வடக்கு ராஜ வீதியும் இணையும் இடத்தில் அமைந்துள்ளது, பிரதாப வீரஆஞ்சநேயர் (மூலை அனுமார்) கோவில். மராட்டிய மன்னர் பிரதாப சிம்மனின் (கி.பி.1739-1763) காலத்தில், அவரால் இக்கோவில் கட்டப்பட்டது. கோவில் அமைந்த மேல வீதியும், வடக்கு ராஜவீதியும் இணையும் இடம், வடமேற்கு வாயுமூலை ஆகும். வாயுவின் மைந்தன் அனுமன், வடமேற்கு வாயுமூலையில் நின்றபடி அருள்பாலிப்பதால், இந்த அனுமனை மூலை அனுமார் என்று சொல்கிறார்கள்.
தஞ்சாவூர் மன்னன் பிரதாபசிம்மன், பிரதாப வீரஆஞ்சநேயரை தன் இஷ்ட தெய்வமாக வழிபட்டு வந்தான். ஒருமுறை எதிரிப் படையினர் நாட்டை முற்றுகையிட்டபோது, பிரதாப சிம்மராஜா மூலை அனுமாரை வேண்டினார். ஆஞ்சநேயர் வானர சேனைகளை உருவாக்கி எதிரிநாட்டு படையை ஓட ஓட விரட்டினார். தன் வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் பிரதாபசிம்மன் ஆஞ்சநேயருடன் ஐக்கியமானான். எனவேதான் இவருக்கு பிரதாப வீரஆஞ்சநேயர் என்ற பெயர் ஏற்பட்டது.
முகலாய படையெடுப்பின் போது காஞ்சிபுரத்தில் இருந்த பங்காரு காமாட்சி அம்மன் சிலை தஞ்சைக்கு எடுத்து வரப்பட்டது. சிலைக்கு அடைக்கலம் தர அனைவரும் பயந்தபோது, இந்த தலத்திலேயே சிலையை மறைத்து வைத்திருந்தனர். இராம பக்தர்களின் கனவில் தோன்றிய அனுமான், பங்காரு காமாட்சி அம்மனுக்கு தன் கோவில் அருகிலேயே கோவில் அமைக்கும்படி ஆணையிட்டார்.
படிப்பில் தடை, திருமணத்தடை, வியாதிகள், தொடர்ந்து துன்பங்கள் நேர்ந்தால் மூலை அனுமாரை, மூல நட்சத்திர நாட்களில் வழிபடுவது சிறப்பு. அன்று 18 அகல் விளக்குகள் ஏற்றி 18 முறை மவுனமாக கோவிலை வலம் வந்தால், குறைகள் விலகி நலம் பயக்கும்.
18 அமாவாசைகள் 18 முறை வலம் வந்து மூலவருக்கு 18(அ)56(அ)108 எலுமிச்சை பழங்களான மாலையை சாற்றி வழிபட்டால் எப்பேர்ப்பட்ட கிரக தோஷமும் வாஸ்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். மார்கழி மாதம் 108 முறை வலம் வந்து, மூலை அனுமாரை வழிப்பட்டால் நினைத்த காரியங்கள் யாவும் கைகூடும்.
இக்கோவிலில் அனுமன் ஜெயந்தி அன்று 18 அபிஷேகப் பொருட்களை பக்தர்கள் கொண்டு வந்து கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அனுமன் ஜெயந்தி அன்று பக்தர்கள் அவரவர் இல்லத்தில் பிரார்த்தனை செய்து எடுத்து வந்த மஞ்சள் பூசிய தேங்காயை, கோவில் உட்பிரகாரத்தில் தீபமேற்றி வழிபடும் இடத்தில் உள்ள அனுக்கிரக ஆஞ்சநேயர் முன் வேண்டி சிதறு தேங்காய் எறிந்து பிரார்த்தனை காணிக்கையாக ரூ.18 உண்டியலில் செலுத்தி வழிபாடு செய்தால், எண்ணியவை எண்ணியபடி நடைபெறும் என்பது ஐதீகம்.
இக்கோவிலில் மூலை அனுமாரின் வாலில் சனீஸ்வரபகவான் உட்பட நவக்கிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம். சனி தோஷம் உட்பட நவக்கிரகங்கள் தோஷங்கள் மற்றும் வாஸ்து தோஷங்கள் ஆகியவற்றை இவர் நீக்குகிறார்.
ஆஞ்சநேயர் குழந்தையாக இருந்த போது, தன் தாயின் மடியில் அமர்ந்திருந்த சிற்பம் இந்தக் கோவில் கோபுரத்தில் அமைந்துள்ளது. இது நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாத அபூர்வ சிற்பமாகும்.
இது தவிர, 12 ராசிகள் அடங்கிய ராசி மண்டல சிற்பமும் இருக்கிறது. அவரவர் ராசி முன்பு நின்று மூலை அனுமாரிடம் மனமுருகி பிரார்த்தனை செய்தால், பிரார்த்தனைகள் நிறைவேறும்.

இடுகம்பாளையம் ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோவில்
பிரமாண்ட திருமேனியுடன் நம்மை நேர்பார்வை கொண்டு ஆசீர்வதிக்கும் அபூர்வ ஆஞ்சநேயர்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில், இடுகம்பாளையத்தில் அமைந்துள்ளது ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோவில். இக்கோவில் 700 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இந்தக் கோவிலுக்கு 'ஸ்ரீ அனுமந்தராயசாமி கோயில்' என்ற பெயரும் உண்டு. கிருஷ்ணதேவராயரின் ராஜகுருவான ஶ்ரீவியாசராய தீர்த்தர் இந்த இடத்துக்கு வருகை புரிந்தபோது, இங்கிருந்த பாறையொன்றில் ஆஞ்சநேயர் தியானம் செய்வது போன்ற காட்சி தெரிந்தது. எனவே, அந்தப் பாறையில் ஜெயமங்கள ஆஞ்சநேயரின் திருவுருவத்தைத் தாமே பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
இக்கோவிலில், ஜெயமங்கள ஆஞ்சநேயர் வேறெங்கும் காண இயலாத அபூர்வத் தோற்றத்தில் காட்சி தருகிறார். ஜெயமங்கள ஆஞ்சநேயர். எட்டு அடி உயரம் கொண்ட பாறையில் புடைப்புச் சிற்பமாக, ஆறு அடி உயரமும், ஐந்து அடி அகலமும் கொண்டு மிக பிரமாண்டமாக, நம்மை நேருக்கு நேர் பார்த்து ஆசீர்வதிக்கும் கோலத்தில் கம்பீரமாகக் காட்சிதருகிறார்.
ஆஞ்சநேயரின் திருவடிகளில் தாமரை மலர் போன்ற தண்டை அணிந்தும், வலக் கரத்தில் சுதர்சன சக்கரம் பொறிக்கப்பட்டு ஆசீர்வாதம் செய்யும் நிலையிலும், இடக் கரத்தில் சவுகந்திக மலரை ஏந்தியபடி தொடையில் ஊன்றிக் காட்சி தருகிறார். ஆஞ்சநேயரின் வால், ஆஞ்சநேயரின் தலைப்பகுதிக்குப் பின்புறம் இடப்புறமாக மேல் நோக்கி நீண்டிருக்க, வாலின் நுனியில் மணி கட்டப்பட்டிருக்கிறது. ஆஞ்சநேயரின் வாலுக்கு நவகிரகங்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக ஐதீகம். வாலின் நுனியில் உள்ள மணியை மானசீகமாக வழிபட்டு வேண்டிக்கொண்டால், நவகிரக தோஷங்கள் விலகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஜெயமங்கள ஆஞ்சநேயரை புத்திரப்பேறு கிடைக்கவும், திருமணத் தடை நீங்கவும் பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

ராவத்தநல்லூர் ஶ்ரீ சஞ்சீவிராய ஆஞ்சநேயர் பெருமாள் கோவில்
இருவேறு திசை நோக்கி அருள் பார்வை புரியும் அபூர்வ ஆஞ்சநேயர்
கோரிக்கைகள் நிறைவேற, ஞாயிற்றுக்கிழமைதோறும் எமகண்ட நேரத்தில் நடைபெறும் அபிஷேக ஆராதனை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் நெடுஞ்சாலையில் சங்கராபுரம் அருகாமையில் புதூர் என்ற கிராமத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ராவத்தநல்லூர் ஶ்ரீ சஞ்சீவிராய ஆஞ்சநேயர் பெருமாள் கோவில். 750 வருட பழமை வாய்ந்த சிறப்புமிக்க ராமாயண காலத்தின் வரலாற்று பெருமை கொண்ட கோவில் இது. ராமாயணம் காலத்தில் ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கி செல்லும்போது, ராவத்தநல்லூரில், சஞ்சீவி மலையின் ஒரு சில பகுதிகள் கீழே விழுந்தன.
மூலவர் சஞ்சீவராய ஆஞ்சநேயர், 11 அடி உயரத் திருமேனியுடன் தெற்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறார். அவரது இடது கண் கிழக்கு திசை நோக்கியும், வலது கண் மேற்கு திசை நோக்கியும் அருள் பார்வை புரிவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இப்படி இருவேறு திசை நோக்கி ஆஞ்சநேயரின் அருட்பார்வை இருப்பது ஒரு அரிய காட்சியாகும்.
இக்கோவிலில் பிரதி ஞாயிறு தோறும், எமகண்ட நேரத்தில் சிறப்பு அபிஷேக வழிபாடு நடைபெறுகின்றது. இதில் கலந்து கொண்டு தங்கள் வேண்டுதல்களை வைக்கும் பக்தர்களுக்கு, அவர்களின் கோரிக்கைகள் 48 நாட்களுக்குள் நிறைவேறுகின்றது. இந்தக் கோவிலில் எமகண்ட நேரத்தில் செய்யப்படும் அபிஷேக ஆராதனை வேறு எந்த கோவிலிலும் இல்லாத நடைமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றினால் திருமணத்தடை நீங்கி திருமணம் கைகூடும். வெண்ணெய் சாற்றினால் மழலைச் செல்வம் கிடைக்கும்.

ஆதனூர் வீர சுதர்சன ஆஞ்சநேயர் கோவில்
தலைக்கு மேல் சுதர்சன சக்கரத்தை தாங்கி இருக்கும் அபூர்வ ஆஞ்சநேயர்
கும்பகோணத்திலிருந்து சுமார் 8 கிமீ தொலைவில் உள்ள திவ்யதேசம் ஆதனூர். இந்த திவ்ய தேசத்தில், 20 அடி நீளம், 10 அடி அகலம் கொண்ட சிறிய மண்டபத்தில், வீர சுதர்சன ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. மண்டபத்திற்கு சற்று வெளியே ஸ்ரீராமரின் பாதம் பதித்த ஒரு கல் உள்ளது. சன்னதிக்குள் நுழையும் முன், பக்தர்கள் தங்கள் பிரார்த்தனையை ஸ்ரீராமரிடம் செலுத்துகிறார்கள். மண்டபம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, முன்புறப் பாதி பக்தர்கள் தரிசிக்கும் இடமாகவும், பின்புறப் பாதி ஆஞ்சநேயரின் கர்ப்பக் கிரகமாகவும் உள்ளது.
கருவறையில், வீர சுதர்சன ஆஞ்சநேயர் ஏழடி உயர திருமேனி உடையவராய், கிழக்கு நோக்கியவாறு வடக்கு நோக்கி நடக்கும் கோலத்தில் காட்சி அளிக்கிறார். ஆஞ்சநேயரின் வால் தலைக்கு மேல் சுருள் வடிவில் உயர்த்தி காணப்படுகிறது. வால் சுருளின் மையத்தில் பன்னிரண்டு இதழ்கள் கொண்ட ஒரு சக்கரம் அமைந்திருக்கின்றது. இப்படி தலைக்கு மேல் சுதர்சன சக்கரத்தை கொண்டிருக்கும் ஆஞ்சநேயரை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. அவரது தலையின் மேல், நேர்த்தியாகக் கட்டப்பட்ட கேசத்தின் உச்சியில் 'ரக்கொடி' எனப்படும் ஒரு ஆபரணத்தை அணிந்திருக்கிறார். இரு காதுகளிலும் தோள்களைத் தொடும் அளவு, நீளமான குண்டலங்களை தரித்திருக்கிறார். வலது கையை உயர்த்தி அபய முத்திரையுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

ஆவூர் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில்
கருவறை விமானத்து கலசம் கருங்கல்லால் அமைந்திருக்கும் அபூர்வ அமைப்பு
கும்பகோணத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவிலுள்ள கிராமம் ஆவூர். இங்குள்ள லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் பழமை மிக்கது. தேவலோகப் பசுவான காமதேனு தனது பெண் நந்தினியுடன் இத்திருத்தலத்தில் தங்கி இங்கு எழுந்தருளி அற்புத சேவை சாதிக்கும் ஸ்ரீ லஷ்மிநாராயணப் பெருமாளைக் குறித்து நீண்ட காலம் தவம் இயற்றியதால், இத்தலத்திற்கு 'ஆ'வூர் என்ற காரணப் பெயர் ஏற்பட்டது எனத் தல வரலாறு கூறுகிறது. 'ஆ'என்றால் 'பசு' என்று பொருள். கருவறையில் லட்சுமி நாராயணப் பெருமாள் தனது இடது கரத்தால் தாயாரை அரவணைத்து, வலது கரத்தால் பக்தர்களுக்கு அபயம் அருள் பாலிக்கிறார். பொதுவாக கோவில் கருவறை விமானத்தின் கலசங்கள் தாமிரம், தங்கம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்டிருக்கும். ஆனால் இக்கோவில் கருவறை விமான கலசம் கருங்கல்லால் அமைந்திருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். இத்தகைய அமைப்பை நாம் காண்பது அரிது.
வரப்பிரசாதியான ஜெயவீர ஆஞ்சநேயர்
மந்திராலயம் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் முந்தைய அவதாரமாகப் பூஜிக்கப்படும் ஸ்ரீ வியாஸராஜ தீர்த்தர், புகழ்பெற்ற விஜயநகர சாம்ராஜ்யத்தின மன்னராக விளங்கிய ஸ்ரீ கிருஷ்ணதேவராயரின் ராஜகுருவாக இருந்த அவதார புருஷர் ஆவார். பீஜப்பூர், கோல்கொண்டா, அஹமது நகர் ஆகிய மூன்று கல்தான்களுக்கும். விஜயநகர சாம்ராஜ்யத்திற்கும் நடந்த மிகப் பெரிய போரில், சூழ்ச்சிகளால் விஜயநகரப் பேரரசு தோல்வியுற்றது. பின்னர் ஸ்ரீ வியாஸராஜ தீர்த்தர் பாரத தேசம் முழுவதும் பயணித்து 700க்கும் மேற்பட்ட ஆஞ்சநேயர் விக்ரகங்களை பிரதிட்டை செய்தார். அவர் பிரதிட்டை செய்தது தான் இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் ஜெயவீர ஆஞ்சநேயர். சுமார் நான்கரை அடி உயரம் கொண்ட இந்த ஜெயவீர ஆஞ்சநேயர் வாலில் மணி கட்டிய கோலத்தில், தெற்கு நோக்கி காட்சியளிக்கிறார். வலது கரம் பக்தர்களுக்கு அபயம் அளிப்பதாகவும், இடது கரத்தில் சௌகந்திகா மலரை ஏந்திக் காட்சியளிக்கிறார். பகைவர்களால் ஸ்ரீ அனுமனின் சிலா திருமேனிக்கு எவ்வித தீங்கும் ஏற்படாமல் இருப்பதற்காக அந்த மணியில் அதர்வண வேத மந்திரம் பிரயோகத்தையும் செய்தருளியுள்ளார் ஸ்ரீ வியாஸராஜ தீர்த்தர்.
பொதுவாக வாலில் மணி கட்டிய அனுமனை வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாகும். தெற்கு நோக்கியபடி வீற்றிருக்கும் இந்த அனுமனை வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. விரும்பிய வரங்களை தரும் சிறந்த வரப்பிரசாதியாக இவர் திகழ்கின்றார்.

ராமேசுவரம் அபய(வாலறுந்த) ஆஞ்சநேயர் கோவில்
பக்தர்களின் பயத்தைப் போக்கும் வாலறுந்த ஆஞ்சநேயர்
ராமேசுவரத்தில் ராமநாதசுவாமி கோவிலில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அபய ஆஞ்சநேயர் கோயில். 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவில் இது. பக்தர்களின் பயத்தைப் போக்கி காத்தருள்பவர் என்பதால் அபய ஆஞ்சநேயர் என்று பெயர் பெற்றார். இக்கோவிலின் மூலஸ்தானத்தில் அபய ஆஞ்சநேயர், வால் அறுந்த ஆஞ்சநேயர் என்று இரண்டு மூர்த்திகள் உள்ளனர். சிவலிங்கத்தை உடைக்க முயன்று வால் அறுந்ததால் இங்குள்ள ஆஞ்சநேயர் வால் அறுந்த கோலத்திலேயே காட்சியளிக்கிறார். இந்த ஆஞ்சநேயர் கடல் மணலில் உருவான ஒரு சுயம்பு ஆஞ்சநேயர் என்பது கூடுதல் சிறப்பு. அபய ஆஞ்சநேயர் பீடத்திற்கு கீழே கோடி ராமாரக்ஷச மந்திர எழுத்துகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஆஞ்சநேயருக்கு முன்புறம் ராமர் பாதம் இருக்கிறது.
ராவணனை வென்று சீதையை மீட்டு வந்த ராமபிரானுக்கு தோஷம் பிடித்தது, இந்த தோஷம் நீங்க ராமர் அக்னி தீர்த்தம் கடற்கரையில் சிவலிங்க பூஜை செய்ய லிங்கம் எடுத்து வர, ஆஞ்சநேயர் கைலாயம் சென்றார். கைலாயம் சென்ற ஆஞ்சநேயர் திரும்பி வர தாமதமானதால் சீதாப்பிராட்டி மணலினால் ஆன லிங்கம் பிடித்து பூஜை செய்து வழிபட்டனர். அதன் பிறகு வந்த ஆஞ்சநேயர் அதனை கண்டு கோபமுற்றார். கோபமடைந்த ஆஞ்சநேயர் தனது வாலால் லிங்கத்தை சுற்றி அதனை பெயர்த்து எடுக்க முற்பட்டார், அதனால் அவரது வால் அருந்ததுதான் மிச்சம். லிங்கத்தை அசைக்க கூட முடியவில்லை. தான் செய்த தவறை உணர்ந்த ஆஞ்சநேயர் சிவ அபச்சாரம் செய்த குற்றம் நீங்க இவ்விடத்தில் தீர்த்தம் உருவாக்கி சிவனை வழிபட்டார். இதனால் இந்த ஆலயத்தின் ஆஞ்சநேயர் வாலறுந்த நிலையில் மூலவராக காட்சி அளிக்கிறார். இதற்காக வாலறுந்த ஆஞ்சநேயர் கோவில் என்று பெயர் வைக்கப்பட்டது. ஆஞ்சநேயர் உருவாக்கிய 'அனுமன் தீரத்தம்' கோவிலின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கோவிலில் கடல் மண்ணில் உருவான சுயம்பு மூர்த்தியாக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இவருக்கும் வால் கிடையாது. இந்த ஆஞ்சநேயர் சிலை, கடலில் கிடைக்கும் சிப்பி பதிந்த நிலையில் இருப்பது வேறெங்கும் காணக்கிடைக்காத அதிசயம்.
பிரார்த்தனை
இக்கோயிலில் இருக்கும் தல விருட்சமான அத்தி மரத்தில் இளநீரை கட்டி ஆஞ்சநேயரை வேண்டிக்கொள்கின்ற வழக்கம் பின்பற்றப்படுகிறது. உக்கிரமடைந்து சிவலிங்கத்தை உடைக்க முயன்ற ஆஞ்சநேயர் என்பதால் இவரை குளிர்விக்கும் விதமாக இவ்வாறு இளநீர் கட்டி வைத்து வேண்டிக்கொள்கின்றனர். குழந்தை பாக்கியம், பயம் மற்றும் மனக்குழப்பம் நீங்க, ஆபத்துகளிலிருந்து காத்து கொள்ள போன்ற பல காரணங்களுக்காக பக்தர்கள் இங்கு வழிபட்டு பலனடைகின்றனர்.

திருக்குரக்குக்கா குந்தளேசுவரர் கோவில்
ருத்ராட்ச மாலையணிந்து காட்சி தரும் சிவபக்த ஆஞ்சநேயர்
மயிலாடுதுறையில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்குரக்குக்கா.இறைவன் திருநாமம் குந்தளேசுவரர். இறைவியின் திருநாமம் குந்தளநாயகி.
ஆஞ்சநேயர் சிவபெருமானை வழிபட்ட தலம் இது. அவருடைய திருநாமம் சிவபக்த ஆஞ்சநேயர். இந்தத் திருநாமம் உடைய ஆஞ்சநேயர் வேறு எங்கும் கிடையாது. மூலவர் குந்தளேசுவரர் சன்னதி எதிரில் கூப்பிய கரங்களுடன் ருத்ராட்ச மாலையணிந்து அடக்கமே உருவாக ஆஞ்சனேயர் காட்சி யளிக்கிறார். திருமால் ராம அவதாரம் எடுத்தபோது, அவருக்கு உதவுவதற்காக சிவனே ஆஞ்சநேயராக வந்தார். எனவே, ஆஞ்சநேயர், சிவஅம்சம் ஆகிறார் அவ்வகையில் இத்தலத்தில் சிவனே, தன்னை வழிபடும் கோலத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். எனவே இவரை. 'சிவஆஞ்சநேயர்' என்றும் 'சிவபக்த ஆஞ்சநேயர்' என்றும் அழைக்கிறார்கள்.
பிரார்த்தனை
இவரை வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை

தென்குடி திட்டை நவநீத கிருஷ்ணன் கோவில்
அபிஷேகம் செய்யும் பொழுது திருமுகம் செந்தூர நிறத்திற்கு மாறும் அபூர்வ ஆஞ்சநேயர்
தஞ்சாவூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது தென்குடி திட்டை நவநீத கிருஷ்ணன் கோவில். இக்கோவில், தென்குடி திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலின் (குரு பரிகார தலம்) அருகில் உள்ளது. இந்தக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் ராம பக்த காரிய ஆஞ்சநேயர், மிகவும் பிரசித்தி பெற்றவர். இத் தலத்தில், வெகு அபூர்வமாக வடக்கு நோக்கிய திருமுகம் கொண்டு இவர் காட்சி தருகின்றார். இவருக்கு அபிஷேகம் செய்யும் பொழுது திருமுகம் படிப்படியாய் செந்தூர நிறத்திற்கு மாறுவதை காணலாம். அப்போது அவர் முகத்தில் ஓடும் நரம்புகளையும் நாம் தெள்ளத்தெளிவாக தரிசிக்க முடியும்.
வேண்டும் வரம் உடனடியாக அருளும் ஆஞ்சநேயர்
மட்டை உரிக்காத தேங்காயை துணி கொண்டு, இந்த ஆஞ்சநேயரின் சன்னதியில் கட்டி விட்டு வந்தால் வேண்டுபவரின் காரியங்கள், இனிதே நிறைவேறும். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு உடனடியாக வரம் அளிப்பதில் , பிரசித்தி பெற்றவராக இந்த ஆஞ்சநேயர் அருள் பாலிக்கிறார். மிக முக்கியமான விஷயமாக , இங்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு நீண்ட நாட்களாக,நிறைவேறாமல் தடைபட்டு வரும் திருமணப் பிரச்னை , உடனடியாக தீர்ந்து விடுகிறது. கோவிலில் நுழையும்போதே, ஒரு சில பக்தர்களுக்கு அருள் வாக்கு சொல்வது போல , அர்ச்சகர் , நீங்கள் வந்த காரியத்தை கூறி திகைப்பில் ஆழ்த்தி விடுகிறார். உங்கள் காரியம் ஜெயம் உண்டாகட்டும் என்று மனமார வாழ்த்தி , ஆஞ்சநேயரை மனமுருக துதிக்கிறார்.

கிருஷ்ணாபுரம் அபய ஹஸ்த ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில்
ஆறடி உயர திருமேனியுடன், கண்களில், ஒளிர் விடும் பிரகாசத்துடன் தோற்றமளிக்கும் ஆஞ்சநேயர்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகிலுள்ள கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ளது அபய ஹஸ்த ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில். . இராமர் இத்தலத்தில் யாகம் செய்ததால், இத்தலத்தில் எங்கு தோண்டினாலும் வெண் சாம்பல் போன்ற திருமண் கிடைக்கிறது. இக்கோவிலில் தனிச் சன்னதியில் ஆறடி உயர திருமேனியுடன் அபய ஹஸ்த ஆஞ்சநேயர் மிக கம்பீரமாக எழுந்தருளி இருக்கிறார். அவரது திருப்பாதங்கள் பக்தர்களை நோக்கி ஆசிகள் வழங்க வருவது போல் உள்ளது. வலது திருக்கரம் 'அபய முத்திரை' காட்டி, பக்தர்களுக்கு பயத்தை போக்குகிறது. இடுப்பின் இடதுபுறத்தில் அவரது இடது திருக்கரம் பதிந்துள்ளது. மார்பினை மூன்று மணிமாலைகள் அலங்கரிக்கின்றன. அவற்றில் ஒன்றில் பதக்கம் உள்ளது. காதுகளை மணிகுண்டலங்களும், காதில் மேல்பகுதியில் அணிகலமும் அணிந்திருக்கிறார். அவரது வால் தலைக்கு மேல் சென்று, நுனி சற்றே வளைந்து, சிறிய மணியுடன் காணப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அவரது கண்களில், ஒளிர் விடும் பிரகாசம், தரிசிப்பவரை பரவசத்தில் ஆழ்த்தும்.
பிரார்த்தனை
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்குள்ள குளத்தின் படியில் படிப்பாயாசம் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம்.

திண்டுக்கல் அபயவரத ஆஞ்சநேயர் கோவில்
மார்பில் சிவலிங்கமும், கால்களில் பாதரட்சையும், இடுப்பில் கத்தியும் கொண்டு காட்சி தரும் அபூர்வ ஆஞ்சநேயர்
திண்டுக்கல் நகரில், மலைக்கோட்டையின் ஒரு பகுதியாக, 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அபயவரத ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. மூலவர் அபயவரத ஆஞ்சநேயரின் இதயப் பகுதியில் சிவலிங்கம் செதுக்கப்பட்டுள்ளது. கால்களில் பாதரட்சை அணிந்து, இடுப்பில் கத்தி செருகிக் கொண்டு போர்க்கோலத்தில் இவர் காட்சியளிக்கிறார்.
முற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட சிற்றரசன் ஒருவன் ஆஞ்சநேயரின் பக்தனாக இருந்தான். போருக்குச் செல்லும் போது இந்த ஆஞ்சநேயரை வழிபட்டு அவர் செல்வார். அவருக்கு இங்கு ஆஞ்சநேயர் கோயில் கட்ட வேண்டும் என்கிற ஆசை நீண்ட நாட்களாக இருந்தது. ஆனால் கோயில் கட்டுவதற்கான சரியான இடம் எது என்பது தெரியாமல் தவித்தார். அந்த மன்னரின் கனவில் தோன்றிய ஆஞ்சநேயர் இந்த மலைக் கோட்டையை பகுதியை சுட்டிக் காண்பித்து, அங்கு தனக்கு கோயில் கட்டுமாறு கூற, அதன்படி மன்னன் இங்கு கோயில் கட்டி ஆஞ்சநேயருக்கு சிலை வடித்து, இங்கே பிரதிஷ்டை செய்தார்.
ராமாவதாரத்தின் போது, விஷ்ணுவின் அவதாரமான ராமருக்கு சிவபெருமானே ஆஞ்சநேயர் உருவில் அவதரித்து, சேவை செய்தார். இதை உணர்த்தும் விதமாக இங்கிருக்கும் ஆஞ்சநேயர் சிலையின் இதயப் பகுதியில் சிவலிங்கம் செதுக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஆஞ்சநேயர் வழிபாட்டிற்குரிய சிறந்த தினமாக சனிக்கிழமை கருதப்படுகிறது. ஆனால் இங்கிருக்கும் ஆஞ்சநேயர் சிவபெருமானின் அம்சம் என்பதால் வியாழக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி, தயிர் சாதம் படைத்து வழிபடுகிறார்கள். தட்சணாமூர்த்தி சிவபெருமானின் ஒரு வடிவம் என்பதாலும் இத்தகைய வழிபாடு செய்யப்படுகிறது.
கிரக தோஷ நிவர்த்திக்காக இளநீர் கட்டி வழிபாடு
தை அமாவாசையன்று சுவாமிக்கு செந்தூரக்காப்பு செய்யப்பட்டு, விசேஷ பூஜை செய்யப்படுகிறது. பல ஆஞ்சநேயர் கோயில்களில் மட்டைத் தேங்காய் கட்டி வழிபாடு செய்யும் முறை இருக்கிறது. இங்கே ஜாதகத்தில் கிரக தோஷ நிவர்த்திக்காக, இளநீர் கட்டி வேண்டும் முறை கடைபிடிக்கப்படுகிறது. இளநீரின் மேற் பகுதியில் ஜாதகரின் பெயர், நட்சத்திரம் மற்றும் ராசியை குறிப்பிட்டு அர்ச்சகரிடம் கொடுத்து விடுகின்றனர். அர்ச்சகர் அந்த இளநீரை அபயவரத ஆஞ்சநேயரின் வாலில் கட்டி விடுகிறார். ஆஞ்சநேயருக்கு வாலில் வலிமை அதிகம். தனது தாயாக கருதும் சீதைக்கு துன்பம் விளைவித்த ஒரு ஊரையே ஆஞ்சநேயர் எரித்தது போல், நமக்கு ஏற்படும் கிரக தோஷங்களையும் தனது வாலால் பொசுக்கி விடுவதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் சிறப்புகள்
தமிழகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில். 1500 ஆண்டுகள் பழமையானது. நாமக்கல் கோட்டைக்கு கீழே, நரசிம்மர், நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரே ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆஞ்சநேயர் விக்கிரகங்களில் இதுவும் ஒன்று. அவரது திருமேனி, பீடத்திலிருந்து 22 அடியும், பாதத்திலிருந்து 18 அடியும் உயரம் கொண்டதாக உள்ளது. இந்த ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. வெட்டவெளியில் மழையிலும், வெயிலிலும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
ராமாயண காலத்தில், சஞ்சீவி மலையில் உள்ள மூலிகையைப் பெறுவதற்காக ஆஞ்சநேயர், இமயத்தில் இருந்து மலையைப் பெயர்த்து எடுத்து வந்தார். பணி முடிந்ததும் மலையை அதே இடத்திலேயே வைத்துவிட்டு திரும்பினார். அவ்வாறு வருகையில் அங்கிருந்து ஒரு பெரிய சாளக்கிராமத்தை பெயர்த்து எடுத்து வந்தார். அந்த நேரத்தில் சூரியன் உதயமானதால் வான்வழியாக வந்துகொண்டிருந்த ஆஞ்சநேயர், தமது கையில் இருந்த சாளக்கிராமத்தை கீழே வைத்துவிட்டு சூரிய நமஸ்காரம் செய்தார். மீண்டும் வந்து சாளக்கிராமத்தைத் தூக்க முயற்சித்தார். ஆனால் அதைத் தூக்க அவரால் முடியவில்லை. அப்போது ராமனுக்கு செய்ய வேண்டிய உதவிகளை செய்து முடித்துவிட்டு பிறகு வந்து என்னை எடுத்துச் செல் என்று அசிரீரி ஒலி கேட்க, ஆஞ்சநேயரும் அங்கேயே விட்டு விட்டு கிளம்பினார். ராமன் போரில் வென்று சீதையை மீட்ட பிறகு ஆஞ்சநேயர் மீண்டும் அங்கே வந்தார். ஆஞ்சநேயர் விட்டுப் போன சாளக்கிராமம் நரசிம்ம மூர்த்தியாக வளர்ந்து நிற்க, ஆஞ்சநேயர் நரசிம்மரை வணங்கியவாறு நின்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
குழந்தைகள் நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட்டால் அவர்களுக்கு அறிவு, வீரம், ஞாபகசக்தி, சுறுசுறுப்பு, நல்ல ஒழுக்கம், நற்பண்புகள் ஆகிய நற்பலன்கள் கிடைக்கும்.

நல்லாட்டூர் வீர மங்கள ஆஞ்சநேயர் கோவில்
குழந்தை வடிவில் இருக்கும் ஆஞ்சநேயர்
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுகாவில் உள்ள நல்லாட்டூர் கிராமத்தில், குசஸ்தலை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது வீர மங்கள ஆஞ்சநேயர் கோவில். இக்கோவில் பால ஆஞ்சநேயர் கோவில் என்று பிரசித்தி பெற்றுள்ளது. கிருஷ்ணதேவராயரின் குருவாக இருந்த துறவி ஸ்ரீ வியாசராஜ சுவாமிகளால், 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இவர் எழுநூற்று முப்பத்திரண்டு ஆஞ்சநேயர் கோவில்களை தென்னிந்தியாவின் பல பகுதிகளில் கட்டியுள்ளார்.
ஒரு சமயம், துறவி ஸ்ரீ வியாசராஜ சுவாமிகள், தனது வியாச பூஜை மற்றும் சதுர் மாச விரதத்தைக் கடைப்பிடிப்பதற்காக திருப்பதிக்குச் சென்று கொண்டிருந்தார். அங்கு வீர ஆஞ்சநேயர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்காக, தன்னுடன் அந்த சிலையை எடுத்துச் சென்றார். ஆனால் குசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அவரால் ஆற்றைக் கடக்க முடியவில்லை. அதனால், ஸ்ரீ வியாசராஜ சுவாமிகள் நல்லாட்டூர் கிராமத்தில், குசஸ்தலை ஆற்றின் கரையில் ஸ்ரீ வீர ஆஞ்சநேய சிலையை நிறுவினார்,
கருவறையில் எழுந்தருளி இருக்கும் மூலவர், வீர மங்கள ஆஞ்சநேயரின் தோற்றம், சிறு குழந்தையின் உருவத்தை ஒத்திருப்பதால் அவர் பால ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படுகிறார். அவர்,திருப்பதி வேங்கட நாதன் வீற்றிருக்கும் வடக்கு திசையை நோக்கி நடக்கும் பாவனையில் இருக்கின்றார். அவரது வலதுகரம் அபயமுத்திரை தாங்கியும், இடது கரம் தாமரை மலர் ஏந்தியும் காணப்படுகிறது. நரசிம்மரைப் போல் இவருக்கும் கோரப்பற்கள் உள்ளன. தலைக்கு மேல் செல்லும் அவரது வாலின் முனையில் ஒரு மணி தொங்குகிறது.
ஓட்டல் நிர்வாகியின் மூலம் தன் கோவிலை சீரமைத்த ஆஞ்சநேயர்
துறவி ஸ்ரீ வியாசராஜ சுவாமிகளால் நிர்மாணிக்கப்பட்ட இக்கோவில், பல ஆண்டுகளுக்குப் பின்னர் சிதிலமடைந்தது. 1997-ம் ஆண்டு, தென்னகத்தில் பிரபலமாக விளங்கும் ஒரு ஹோட்டல் குழுமத்தின் நிர்வாகியின் கனவில் ஆஞ்சநேயர் தோன்றி, கோவிலை சீரமைக்கும்படி உத்தரவிட்டார். தன் நிர்வாகப் பணியிலே கவனம் செலுத்தி வந்த அவருக்கு ஆன்மீகத்தில் அதிக நாட்டம் இல்லாமல் இருந்தது. ஆனால் ஆஞ்சநேயரின் இந்த உத்தரவு அவருக்கு வியப்பளித்தது. அவருடைய முயற்சியால் கோவில் சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கோவிலின் முகப்பில் ஆஞ்சநேயரின் மிகப்பெரிய சுதை சிற்பம் நிறுவப்பட்டது.
பிரார்த்தனை
இந்த ஆலயத்தின் நடைபெறும் வருடாந்திர ஸ்ரீ சீதா திருக்கல்யாண உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த வைபவத்தின் பிரதான அம்சமே ராமர்- சீதை இருவரும் தம்பதி சமேதகர்களாக காப்புக் கயிறு கட்டிக் கொள்வதுதான். திருமணம் ஆகாத ஆண், பெண் இருபாலாரும் இங்கு வந்து ராம-சீதை திருமணத்தன்று வழங்கப்படும் காப்புக் கயிற்றைக் கட்டிக் கொண்டால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நீண்ட கால நம்பிக்கை ஆகும்.