சதுரங்கப்பட்டினம் மலைமண்டல பெருமாள் கோவில்

தலையில் குடுமியுடன் இருக்கும் அபூர்வ ஆஞ்சநேயர்

கை சுண்டு விரலில் மோதிரத்துடனும், வாயில் இரண்டு கோரை பற்களுடனும் இருக்கும் வித்தியாசமான தோற்றம்

சென்னையிலிருந்து கல்பாக்கம் செல்லும் பாதையில் கல்பாக்கத்திற்கு அருகே உள்ள சதுரங்கப்பட்டினம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது மலைமண்டல பெருமாள் கோவில். இத்தலம் சற்றே மலை போன்ற அமைப்பின் மேல் உள்ளதால் மலை மண்டல பெருமாள் என்று அழைக்கப்படுகின்றார். மலைமண்டல பெருமாளுக்கு கிரி வரதராஜப் பெருமாள் என்ற திருநாமும் உண்டு. தாயார் திருநாமம் பெருந்தேவி. இக்கோவில் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.

இக்கோவிலில் 400 ஆண்டுகளுக்கு முந்தைய விஜயநகர பேரரசு காலத்திய அனுமன் சிற்பம் ஒன்று உள்ளது. கலை நுணுக்கத்தோடு செய்யப்பட்ட இந்த சிற்பத்தில், பல அதிசய அம்சங்கள் உள்ளன. இந்த ஆஞ்சநேயரின் தலையில் குடுமி அமைந்துள்ளது. அந்தக் குடுமியானது அவரின் தலையின் பின்புறம் முடிந்த நிலையில் காணப்படுகிறது. அவரின் வாலானது, உடம்பின் பின்புறத்தில் தொடங்கி தலையின் உச்சியில் போய் சுருட்டப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. இவரது வாயில் இரண்டு கோரை பற்கள் வெளியே துருத்திக்கொண்டு தெரிகின்றன. இவர் இரண்டு கைகளையும் புஷ்பாஞ்சலி அஸ்த நிலையில் (புஷ்பங்களை அர்ச்சனை செய்யும் பாவனையில்) வைத்துக் கொண்டிருக்கிறார். இவரது கை சுண்டு விரலில் மோதிரம் அமைந்திருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். திருப்பதி பெருமாளுக்கு இருப்பது போல் கால் முட்டிக்கு கீழ் ஆபரணமும், பின்புறம் திருவாசியும் (பிரபை) இருப்பது மேலும் ஒரு சிறப்பாகும்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்

1. மூன்று சிங்கங்கள் உள்ள பீடத்தில் தாயார் அமர்ந்திருக்கும் அபூர்வ காட்சி (30.05.2025)

https://www.alayathuligal.com/blog/sadurangappattinam30052025

2. சர்ப்ப தோஷத்தை நிவர்த்தி செய்யும் அஷ்ட நாக கருடாழ்வார் (21.05.2025)

கருடாழ்வாருக்கு பால் அபிஷேகம் செய்யும் போது நீல நிறமாகும் அதிசயம்

https://www.alayathuligal.com/blog/sadurangappattinam21052025

தகவல் உதவி : திரு. ஸ்ரீதர் பட்டர், ஆலய அர்ச்சகர்

வாசகர்களின் கவனத்திற்கு

இப்பதிவில் வரைபடத்திற்கு (Map) கீழ் இடம் பெற்றுள்ள 'நுணுக்கமான சிற்பம்' என்று குறி சொல்லை கிளிக் செய்தால், முந்தைய பதிவுகளில் வெளியான நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கோவில்களை பற்றிய தகவல்களைப் படிக்கலாம்.

புஷ்பாஞ்சலி அஸ்த நிலை

ஆஞ்சநேயரின் தலையில் குடுமி

கால் முட்டிக்கு கீழ் ஆபரணம்

வாயில் இரண்டு கோரை பற்கள்

 
Next
Next

திருபுவனை தோத்தாத்திரி பெருமாள் கோவில்