திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
ஆலயத்துளிகள் தனது ஐந்தாம் ஆண்டில் இன்று அடி எடுத்து வைக்கின்றது.
வாசகர்களின் ஆதரவிற்கு எங்கள் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
சுகுமார் & பல்லவி
அருணகிரிநாதருக்கு நடராசர் போல திருத்தாண்டவம் ஆடிக்காட்டிய செந்தில் ஆண்டவன்
ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாக்களில், ஏழாம் நாளன்று நடைபெறும் 'சிவப்புச் சாத்தி' உற்சவம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. திருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என்று இரண்டு மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள்.
திருப்புகழ் பாடல் இயற்றிய அருணகிரிநாதர் 800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். இவர் எழுதிய 'திருப்புகழ்' தேவாரத்திற்கு இணையாகவும், 'கந்தர் அலங்காரம்' திருவாசகத்திற்கு இணையாகவும், 'கந்தர் அனுபூதி' திருமந்திரத்திற்கு இணையாகவும் முருக பக்தர்களால் போற்றப்படுகின்றன. ஒரு சமயம் அருணகிரிநாதர், திருப்பரங்குன்றம் தலத்திற்கு வந்து முருகனை வழிபட்டார். பின்பு திருச்செந்தூர் புறப்பட்டார்.வழி எல்லாம் ஒரே காடாக இருந்தபடியால் அருணகிரிநாதர் வழி தெரியாமல் திகைத்து நின்றார்.அந்நேரம் மயில் ஒன்று காட்சி தந்து,வழிகாட்டி அருணகிரிநாதரை திருச்செந்தூருக்கு அழைத்து வந்தது. திருச்செந்தூரில், முருகப்பெருமான் வடிவில் சிவபெருமானைக் கண்ட அருணகிரிநாதர் 'கயிலை மலையனைய செந்தில்' என்று சிறப்பித்துப் பாடினார்.செந்திலாண்டவனை தம்முடைய தந்தையைப் போல ஆடிக் காட்ட அழைத்தார்.முருகப்பெருமானும், அருணகிரிநாதருக்கு நடராசர் போல திருத்தாண்டவம் ஆடிக் காட்டினார்.
இந்தக் காட்சியை தற்போதும் நினைவு கூறும் வகையில், திருச்செந்தூர் கோவிலில் நடைபெறும் ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாக்களில், ஏழாம் நாளன்று 'சிவப்புச் சாத்தி' செய்யப்படும் நாளில், ஆறுமுகப்பெருமான் எழுந்தருளும் சப்பரத்தின் பின்பகுதியில் முருகப் பெருமான் நடராசர் போல ஆடல் காட்சி தருகிறார். ‘சிவப்பு சாத்தி' என்பது திருச்செந்தூர் முருகப் பெருமானின் மாசித்திருவிழாவின் ஏழாம் நாளில் சுவாமி சண்முகப்பெருமான் அணிந்து கொள்ளும் அலங்காரத்தைக் குறிக்கிறது. ஏழாம் நாளன்று இங்கு சுவாமி சிவப்பு நிற பட்டுத் துணிகளால் அலங்கரிக்கப்பட்டு, சிவப்பு மலர்களால் மலர்மாலைகள் சூடப்பட்டு, தங்கச் சப்பரத்தில் நடராசர் போல ஆடும் திருக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருவார். இந்த நாளில் முருகப்பெருமான் சிவபெருமானின் அம்சமாக காட்சி தருவதாக ஐதீகம். இவ்வாறு, முருகப்பெருமான் நடராசராக காட்சி தருவது, திருச்செந்தூர் முருகனின் திருவிழாக்களில், முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகும்.
முருகப்பெருமான் நடராசராக காட்சி தரும் 'சிவப்புச் சாத்தி' உற்சவம்