
உத்திரமேரூர் பாலசுப்பிரமணியன் கோவில்
தலையில் ஜடாமுடியுடன் இருக்கும் முருகனின் அபூர்வ தோற்றம்
முருகனுக்கு மயிலுக்கு பதிலாக யானை வாகனமாக இருக்கும் தலம்
காஞ்சிபுரத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது உத்திரமேரூர் பாலசுப்பிரமணியன் கோவில். இக்கோவில் 1400 வருடங்களுக்கு மேல் பழமையானது. இத்தலம் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்றது.
இங்கு முருகப்பெருமான் பாலசுப்ரமணிய சுவாமி என்ற பெயருடன் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு சுயம்புவாக எழுந்தருளி இருக்கிறார். ஆறடி உயரம் கொண்ட திருமேனி உடைய அவர் தனது தலையில்,வழக்கமான கிரீடத்திற்குப் பதிலாக, ஜடாமுடியுடன் இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். இப்பெருமானின் திருமார்பில் ருத்ராட்சமணி மாலைகளும், திருக்கரங்களில் நாகாபரணமும், திருச்செவிகளில் குண்டலங்களும் இருக்கின்றன.
கருவறையில் சிவபெருமானும் திரிபுரசுந்தரியும் எழுந்தருளி இருக்கிறார்கள். முருகப்பெருமான் சூரபத்மனை அழிப்பதற்காக வேல் வேண்டி இங்கு சிவபெருமானையும் பார்வதி தேவியையும் நோக்கி தவம் இருந்தார். அதனால் அவரது வலது கீழ் திருக்கரம் பூஜை செய்யும் பாவனையில் இருக்கின்றது.
மற்ற முருகன் கோவில்கள் போல் வள்ளியும், தெய்வானையும் அவருக்கு அருகில் இல்லை. மாறாக இந்தக் கோவிலில், வள்ளியும் தெய்வ யானையும் இணைந்து கஜவள்ளியாக தனிச்சந்நதியில் இருக்கிறார்கள்.
இக்கோவிலில் முருகனுக்கு வாகனமாக மயிலுக்கு பதிலாக யானை இருக்கிறது. முருகப்பெருமானுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடந்தப்பொழுது, இந்திரன் யானையை முருகனுக்கு பரிசாக அளித்தான். முருகப்பெருமான் திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்தப் பிறகே அவருக்கு மயில் வாகனமாகவும், சேவல் கொடியும் வந்தது. எனவே, இக்கோவில் அதற்கு முன்பே உருவானது.

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில்
ஆவணித் திருவிழா-உருகு சட்டை சேவை
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று ஆவணித் திருவிழா. இந்த ஆண்டு ஆவணித் திருவிழா ஆகஸ்ட் 14-ஆம் தேதியன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறக் கூடிய இத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் முருகப் பெருமான் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலாவரும் நிகழ்ச்சி நடக்கும்.
திருச்செந்தூரில் சண்முகர் தெற்கு நோக்கிய சந்நிதியில் ஆறுமுகங்களும், பன்னிரு கரங்களும் கொண்டு நின்ற கோலத்தில் வள்ளி தெய்வானையோடு காட்சியருள்கிறார். சாதாரண நாள்களில் இவரின் இரண்டு கரங்களை மட்டுமே நாம் தரிசிக்க முடியும். மற்ற கரங்களைப் பட்டாடை இட்டு அலங்கரித்திருப்பர்.
ஆவணித் திருவிழாவின் 7-ஆம் நாள் காலை உருகு சட்டை சேவை நடைபெறும். இந்த சடங்கில் முருகப் பெருமானின் உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம் செய்யும்போது, அபிஷேக திரவியங்களால் மூர்த்தியின் திருமேனி உருகி வழிவது போல் தோன்றுவதை குறிக்கிறது. அபிஷேகம் முடிந்து சண்முகர் சன்னதியிலிருந்து எழுந்தருள்வார். மற்ற மூர்த்தங்களை எடுத்து வாகனங்களில் வைப்பதுபோல, இந்த சண்முகரை மூலத்தானத்தில் இருந்து எடுத்து வாகனத்தில் வைப்பதில்லை. மாறாக உருகுப் பலகை என்ற ஒரு பெரிய பலகையை பீடத்திலிருந்து சன்னதி வாயில் வரை போட்டு, சண்முகப் பெருமானை பலகை மீது இருத்தி சிறிது சிறிதாக அசைத்துப் பீடத்திலிருந்து கேடயத்தில் எழுந்தருள செய்வார்கள். இதுவே உருகு சட்ட சேவை என்று போற்றப்படுகிறது. மேலும் சண்முகப் பெருமான் எழுந்தருளி வீதி உலா சென்று மீண்டும் சன்னதி திரும்பும் வரை உருகு பலகையானது சன்னதியிலிருந்து வாயில் வரை நீட்டி போடப்பட்ட நிலையிலேயே இருக்கும்.
உருகு சட்டை சேவைக்கு பின்னர் சண்முகர் வெட்டி வேர் சப்பரத்தில் எழுந்தருளி, மும்மூர்த்திகளாகிய சிவன், பிரம்மா, விஷ்ணு அம்சத்தில் காட்சித் தருவார். அப்போது அவரின் பன்னிரு கரங்களையும் தரிசனம் செய்ய முடியும்.

குன்றக்குடி சண்முகநாதர் கோவில்
முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட மூவரும் தனித் தனி மயில் வாகனங்களில் அமர்ந்து காட்சி தரும் தனிச்சிறப்பு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது குன்றக்குடி சண்முகநாதர் கோவில் . ஒரு சிறிய குன்றின் மேல் அமைந்துள்ள இந்த முருகன் கோவிலுக்கு செல்ல 149 படிக்கட்டுகள் உள்ளன. முருகப்பெருமானின் சாபத்தால் மயிலே, மலையாகிப் போனதாகவும், அந்த மலை மீதுதான் முருகப்பெருமான் வீற்றிருப்பதாக தலபுராணம் கூறுகிறது. இந்த மலை மயிலின் வடிவத்தை ஒத்திருப்பதால், மயூரகிரி, மயில்மலை, அரசவரம், கிருஷ்ணநகரம் போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இக்கோவில் 1200 ஆண்டுகள் பழமையானது.
கருவறையில் ஆறுமுகமும், பன்னிரண்டு திருக்கரங்களும் கொண்ட முருகப்பெருமான், வள்ளி தெய்வானையுடன் சண்முகநாதர் என்ற பெயருடன் அருள்பாலிக்கிறார். செட்டிமுருகன், குன்றையூருடையான், மயூரகிரிநாதன், மயில்கலைக்கந்தன், குன்றைமுருகன், தேனாறுடையான் என்று பலபெயர்கள் மூலவருக்கு உண்டு.
மூலவர் சண்முகநாதர் கிழக்குத் திசையைப் பார்த்தபடி மயிலின் மீது வலது காலை மடித்தும், இடது காலைத் தொங்க விட்டவாறும் அருள்பாலிக்கின்றார். இடப்பக்கம் தெய்வானை, வலப்பக்கம் வள்ளி என இருவரும் தனித்தனி மயில்களில் அமர்ந்துள்ளனர். இப்படி முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட மூவரும் தனித் தனி மயில் வாகனங்களில் அமர்ந்து தரிசனம் தருவது இத்தலத்தின் தனி சிறப்பாகும்.
இக்கோவிலில் குடிகொண்ட முருகனை போற்றி அருணகிரிநாதர் தம் திருப்புகழிலும், பாம்பன் சுவாமிகள் தன் பாடலிலும் சிறப்பித்து பாடியுள்ளார்கள்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
ஆலயத்துளிகள் தனது ஐந்தாம் ஆண்டில் இன்று அடி எடுத்து வைக்கின்றது.
வாசகர்களின் ஆதரவிற்கு எங்கள் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
சுகுமார் & பல்லவி
அருணகிரிநாதருக்கு நடராசர் போல திருத்தாண்டவம் ஆடிக்காட்டிய செந்தில் ஆண்டவன்
ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாக்களில், ஏழாம் நாளன்று நடைபெறும் 'சிவப்புச் சாத்தி' உற்சவம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. திருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என்று இரண்டு மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள்.
திருப்புகழ் பாடல் இயற்றிய அருணகிரிநாதர் 800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். இவர் எழுதிய 'திருப்புகழ்' தேவாரத்திற்கு இணையாகவும், 'கந்தர் அலங்காரம்' திருவாசகத்திற்கு இணையாகவும், 'கந்தர் அனுபூதி' திருமந்திரத்திற்கு இணையாகவும் முருக பக்தர்களால் போற்றப்படுகின்றன. ஒரு சமயம் அருணகிரிநாதர், திருப்பரங்குன்றம் தலத்திற்கு வந்து முருகனை வழிபட்டார். பின்பு திருச்செந்தூர் புறப்பட்டார்.வழி எல்லாம் ஒரே காடாக இருந்தபடியால் அருணகிரிநாதர் வழி தெரியாமல் திகைத்து நின்றார்.அந்நேரம் மயில் ஒன்று காட்சி தந்து,வழிகாட்டி அருணகிரிநாதரை திருச்செந்தூருக்கு அழைத்து வந்தது. திருச்செந்தூரில், முருகப்பெருமான் வடிவில் சிவபெருமானைக் கண்ட அருணகிரிநாதர் 'கயிலை மலையனைய செந்தில்' என்று சிறப்பித்துப் பாடினார்.செந்திலாண்டவனை தம்முடைய தந்தையைப் போல ஆடிக் காட்ட அழைத்தார்.முருகப்பெருமானும், அருணகிரிநாதருக்கு நடராசர் போல திருத்தாண்டவம் ஆடிக் காட்டினார்.
இந்தக் காட்சியை தற்போதும் நினைவு கூறும் வகையில், திருச்செந்தூர் கோவிலில் நடைபெறும் ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாக்களில், ஏழாம் நாளன்று 'சிவப்புச் சாத்தி' செய்யப்படும் நாளில், ஆறுமுகப்பெருமான் எழுந்தருளும் சப்பரத்தின் பின்பகுதியில் முருகப் பெருமான் நடராசர் போல ஆடல் காட்சி தருகிறார். சிவப்பு சாத்தி' என்பது திருச்செந்தூர் முருகப் பெருமானின் மாசித்திருவிழாவின் ஏழாம் நாளில் சுவாமி சண்முகப்பெருமான் அணிந்து கொள்ளும் அலங்காரத்தைக் குறிக்கிறது. ஏழாம் நாளன்று இங்கு சுவாமி சிவப்பு நிற பட்டுத் துணிகளால் அலங்கரிக்கப்பட்டு, சிவப்பு மலர்களால் மலர்மாலைகள் சூடப்பட்டு, தங்கச் சப்பரத்தில் நடராசர் போல ஆடும் திருக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருவார். இந்த நாளில் முருகப்பெருமான் சிவபெருமானின் அம்சமாக காட்சி தருவதாக ஐதீகம். இவ்வாறு, முருகப்பெருமான் நடராசராக காட்சி தருவது, திருச்செந்தூர் முருகனின் திருவிழாக்களில், முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகும்.

திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோவில்
திருச்சிராப்பள்ளி நகரில் அமைந்துள்ள தேவாரத் தலமான திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோவில் பஞ்சபூதத் தலங்களில் அப்புத்(நீர்) தலமாகும். இறைவன் திருநாமம் ஜம்புகேஸ்வரர் . இறைவியின் திருநாமம் அகிலாண்டேசுவரி. இத்தலத்து முருகனை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் போற்றிப் பாடியுள்ளார்
இத்தலத்தில் முருகப்பெருமான் ஜம்பு தீர்த்தக்கரையில், தன் காலடியில் அசுரனை அடக்கும் கோலத்தில் காட்சி தருகிறார். இத்தலத்துக்கு வந்த அருணகிரியார், தனக்கு காமம் என்னும் எதிரியால் தொந்தரவு உண்டாகக்கூடாது என்று முருகனிடம் வேண்டிக் கொண்டார். முருகனும், காமத்தை அசுரத்தன்மைக்கு ஒப்பிடும் வகையில், ஒரு அசுரனாக்கி, காலின் அடியில் போட்டு அடக்கிய நிலையில் காட்சி தருகிறார். முருகப்பெருமானின் இத்தகைய தோற்றத்தைக் காண்பது அபூர்வம்.

திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோவில்
முருகன் வலது கையில் கல்லான வேலையும், இடது கையில் சேவலையும் பிடித்திருக்கும் அபூர்வ காட்சி
முருகனின் தோளுக்கு மேல் வேல் அமைந்திருக்கும் அபூர்வமும், சக்தியும் வாய்ந்த அமைப்பு
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகரின் தென் கிழக்குப் பகுதியில் மலை மீது அமைந்துள்ளது, அர்த்தநாரீசுவரர் கோவில். இம்மலை, ஒருபுறம் இருந்து பார்த்தால் ஆண் போன்ற தோற்றமும், வேறு ஒரு புறம் இருந்து பார்த்தால் பெண் போன்ற தோற்றமும் அளிப்பது சிறப்பாகும். 2000 ஆண்டுகள் பழமையான இம்மலை கோவிலுக்கு செல்ல 1200 படிக்கட்டுகள் உள்ளன. வாகனங்கள் செல்ல சாலை வசதியும் உண்டு. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
இக்கோவிலில் அர்த்தநாரீசுவரர், செங்கோட்டு வேலவர், ஆதிகேசவப் பெருமாள் என மூன்று தெய்வங்களின் சன்னிதிகள் இருக்கின்றது.
சிவத்தலமாகயிருப்பினும், இது முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த தலம். பொதுவாக எல்லா கோவில்களிலும் முருகனின் கையிலிருக்கும் வேல் தனியாக செய்யப்பட்டு பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் திருச்செங்கோட்டில், செங்கோட்டு வேலவர் தனது வலது கையில் கல்லாலான வேலைப் பிடித்தபடி இருப்பது நாம் வேறு எங்கும் காண முடியாத காட்சியாகும். இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், முருகன் கையில் சேவற்கொடியைப் பிடித்தபடி இருப்பார். ஆனால் இக்கோவிலில், செங்கோட்டு வேலவர் தன்னுடைய இடது கையில் சேவலையே பிடித்திருப்பார். அபிஷேக நேரத்திலேதான் நாம் இந்தக் காட்சியைத் தெளிவாகப் பார்க்க முடியும். முருகனின் தோளுக்கு மேல் வேல் அமைந்திருப்பது மிக அபூர்வமும், சக்தி வாய்ந்ததும் ஆகும்.
செங்கோட்டு வேலவரை அருணகிரிநாதர் தனது திருப்புகழ், கந்தர் அலங்காரம் மற்றும் கந்தரனுபூதியிலும் பாடியுள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
கடத்தப்பட்ட தன் விக்ரகத்தை கடலில் கண்டெடுக்க உதவிய கந்தப் பெருமான்
திருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என்று இரண்டு மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள். மூலவர் பாலசுப்பிரமணியருக்கு தினமும் தூய வெள்ளை நிற ஆடையும் சண்முகருக்கு சிறப்பு பச்சை நிற ஆடையும் அணிவிக்கப்படுகிறது.சுமார் 370 ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலியை, வடமலையப்பப் பிள்ளை என்பவர் திருமலை நாயக்கரின் பிரதிநிதியாக இருந்து நிர்வகித்து வந்தார். 1648 ஆம் ஆண்டு நம் நாட்டிற்கு வந்த டச்சுக்காரர்கள், நம் கோவில்களில் உள்ள ஐம்பொன் விக்கிரங்களை கடத்திச் சென்றால் அதிக பொருள் ஈட்டலாம் என்று திட்டமிட்டனர். அவர்கள் திருநள்ளாறு தலத்திற்குச் சென்று அங்குள்ள நடராஜர் விக்கிரகத்தை எடுத்துக்கொண்டு கப்பல் மூலம் கடல் வழியாகத் திருச்செந்தூர் வந்தனர். திருச்செந்தூர் கோவிலுக்கு வந்து சண்முகர் விக்கிரகத்தை கடத்திக்கொண்டு தங்கள் நாட்டுக்குக் கப்பல் மூலம் செல்ல ஆரம்பித்தனர். அந்த நேரம், கடல் கொந்தளித்து, கப்பல் மூழ்கும் அபாயம் ஏற்பட்டது. கப்பலில் இருந்த டச்சுக்காரர்கள் 'நாம் இந்த சிலைகளைத் திருடிக் கொண்டு வந்ததால்தான் கடல் கொந்தளிக்கிறது. எனவே சிலைகளைக் கடலில் போட்டு விடுவோம்' என்ற முடிவுக்கு வந்தனர். சிலைகளைக் கடலில் வீசிவிட்டு சென்றுவிட்டனர்.வடமலையப்ப பிள்ளை, சண்முகர் விக்கிரகம் களவு போன செய்தியை அறிந்து மனம் வருந்தினார். திருச்செந்தூரில் முருகன் சிலை இல்லை என்பதால் மனம் கலங்கி சாப்பிடாமல் பல நாட்கள் இருந்தார். மேலும் புதிதாக முருகன் விக்கிரகம் ஒன்றை செய்து அதனைத் திருச்செந்தூர் கோவிலில் வைக்கவும் ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார். அப்போது வடமலையப்ப பிள்ளையின் கனவில் முருகப் பெருமான் தோன்றினார். 'வடமலையப்பரே! என்னைக் காணவில்லை என நீர் வருத்தப்பட வேண்டாம். நான் திருச்செந்தூர் கோவிலுக்குச் சற்று தொலைவில் கடலுக்குள்தான் உள்ளேன். நீர் படகின்மூலம் கடலில் பயணம் செய்தால் கடலில் ஓர் எலுமிச்சம்பழம் மிதந்து கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அந்த இடத்தில் கடலுக்கடியில் நான் இருக்கிறேன். எலுமிச்சம்பழம் மிதக்கும் இடத்திற்குமேல் ஒரு கருடன் வட்டமிடும். அந்தக் கருடன் பறக்கும் இடத்தை வைத்தே நீர் என்னைக் கண்டுகொள்ளலாம்” - எனக் கூறினார்.வடமலையப்ப பிள்ளை தன்னுடன் ஆட்களை அழைத்துக்கொண்டு, ஒரு சிறிய படகில் கடலுக்குள் சென்றார். முருகப் பெருமான் கூறியபடி கருடன் வானத்தில் வட்டமடித்தது. அந்தக் கருடன் பறக்கும் இடத்திற்குக் கீழே கடலில் ஒரு எலுமிச்சம்பழம் மிதந்தது. அந்த இடத்தில் கடலுக்குள் குதித்து சண்முகர் விக்கிரகத்தை தேடினார்கள். முதலில் திருநள்ளாறு நடராஜர் விக்கிரகமும், பின்னர் சண்முகர் விக்கிரகமும் கிடைத்தது. பின்னர் 1653ஆம் ஆண்டு தை 29ஆம் தேதி சண்முகர் விக்கிரகத்தை கோவிலில் பிரதிஷ்டை செய்தார்கள். கடலில் சிலகாலம் இந்த விக்கிரகம் இருந்ததால், கடல் நீர் அரித்த நிலையை இன்றும் சண்முகரின் முகத்தில் காணலாம். எம் ரென்னல் எனும் பிரெஞ்ச் எழுத்தாளர் தன்னுடைய நூலில், சண்முக விக்கிரக கொள்ளையில் சம்மந்தப்பட்ட டச்சுக்காரர் ஒருவரே தன்னிடம் இந்த தகவலை கூறியதாக பதிவு செய்துள்ளார்

சிக்கல் நவநீதேசுவரர் கோவில்
முருகப்பெருமான் முகத்தில் வேர்வை துளிர்க்கும் அதிசயம்
ஐப்பசி மாதம் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழாவில், ஐந்தாம் நாளன்று முருகப்பெருமான் தன் அன்னையிடம் வேல் வாங்கும் திருவிழாவும், அவர் ஆறாம் நாளன்று சூரசம்ஹாரம் செய்வதும் மிகவும் பிரசித்தமானது. நாகப்பட்டினத்தை அடுத்த சிக்கலில், முருகப்பெருமான் அத்தலத்து இறைவியான, வேல் நெடுங்கண்ணி அம்மனிடம் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் செய்தார். இதனைத்தான் சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் என்று கூறுவார்கள்.சிக்கல் தலத்து முருகப் பெருமானின் திருநாமம் சிங்கார வேலர். இவரது உற்சவத் திருமேனி ஐம்பொன்னால் ஆனது. சூரனை வதம் செய்வதற்காக முருகப்பெருமான் வேல் நெடுங்கண்ணி அம்மனிடம் ஆசி பெறச் சென்றபோது, அம்மன், தன் தவ வலிமையால் சக்தி வேல் ஒன்றை உருவாக்கி முருகனுக்கு அளித்தார். இந்த சக்திவேல், மிகுந்த வீரியம் மிக்கது.அதனால் சிங்காரவேலன் வேல் வாங்கும் நேரம் அவரது முகத்தில் வேர்வை துளிகள் அரும்பி ஆறாய் வழிந்து ஓடும். இப்படி பொங்கிப் பெருகும் வேர்வை துளிகளை, கோவில் அர்ச்சகர்கள் ஒரு பட்டுத் துணியால் தொடர்ந்து துடைத்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் இந்த வேர்வைப் பெருக்கானது, சிங்காரவேலன் தன் சன்னதிக்கு திரும்பும் வரை இருந்து கொண்டே இருக்கும். இப்படி ஐம்பொன்னாலான உற்சவர் திருமேனியிலிருந்து வேர்வைப் பெருகுவது ஒரு அதிசய நிகழ்வாகும்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
ஆதி சங்கரரின் காச நோயை குணப்படுத்திய திருச்செந்தூர் முருகன்
ஒரு சமயம், ஆதிசங்கரர் வடநாட்டு திக்விஜயத்தை மேற்கொண்டபோது அபிநவகுப்தர் என்பவர் ஆதி சங்கரருடன் வாதம் செய்து தோல்வியுற்றார்.வாதங்களில் தோற்ற அபிநவகுப்தர், அபிசார வேள்வி செய்து, ஆதிசங்கரருக்குக் காச நோயை உண்டாக்கினான். ஆதிசங்கரர் தீராத காச நோயால் அல்லல்பட்டார். ஆதிசங்கரர் திருக்கோகரணத்தில் சிவபெருமானை வழிபடும்போது, 'என் குமாரன் ஷண்முகன் குடியிருக்கும் புண்ணியத் தலமான ஜெயந்திபுரம் எனும் திருச்செந்தூர் சென்று அவனைத் தரிசித்தால் உன் நோய் முற்றிலுமாக நீங்கப் பெறுவாய்' என சிவபெருமான் உணர்த்தினார். பிறகு, ஆதிசங்கரர் சிவபெருமானின் கட்டளைப்படி, ஆகாய மார்க்கமாக திருச்செந்தூர் வந்து சேர்ந்தார். திருச்செந்தூரில் ஆதிசேஷனான பாம்பு முருகனை பூஜிப்பது கண்டு வியப்படைந்தார். பாம்பொன்று ஊர்ந்து செல்லும் விதமான நடையில், 32 பாடல்கள் கொண்ட சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகங்களை இயற்றி, முருகன் அருளால் காச நோய் நீங்கப் பெற்றார். அதில் 25வது பாடலில் இலை விபூதியின் மகிமை பற்றி நெக்குருகி பாடியுள்ளார். 'சுப்பிரமண்யா! நின் இலை விபூதிகளை கண்டால் கால் கை வலிப்பு, காசம், கயம், குட்டம் முதலிய நோய்கள் நீங்கும். பூதம், பிசாசு, தீவினை யாவும் விட்டு விடும்' என்று சுப்பிரம்மண்ய புஜங்கத்தில் ஆதிசங்கரர் இலை விபூதியின் பெருமையை சொல்லி இருக்கிறார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
இஸ்லாமிய பக்தரின் கடனை அடைத்த செந்திலாண்டவன்
திருச்செந்தூர் அருகே இருக்கும், 'காலன் குடியிருப்பு' என்னும் ஊரில் மீராக் கண்ணு என்ற இஸ்லாமிய புலவர் வாழ்ந்து வந்தார். திருச்செந்தூர் முருகன் மீது பக்தி கொண்டவர். இவரை வறுமை மிகவும் வாட்டியது. அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே மிகவும் சிரமம் ஏற்பட்டதால், மதுரையில் இருந்த வணிகர் ஒருவரிடம், வட்டிக்கு கடன் பெற்று இருந்தார்.
மீராக் கண்ணு நீண்ட நாட்களாகியும் வாங்கிய பணத்தைத் திருப்பித் தராததால் வணிகர் பலமுறை வலியுறுத்தினார். ஆனால், மீராக் கண்ணுவால் பணத்தைத் திரும்பத் தர முடியவில்லை. இதனால், கோபமடைந்த வணிகர், சேவகர்னை அனுப்பி மீராக்கண்ணுவைச் சிறைப் பிடித்து வரச்சொன்னார். சேவகன் மாலையில் வந்து சேதியைச் சொன்னதும் மீராக்கண்ணு உறக்கமில்லாமல், இரவு முழுவதும் திருச்செந்தூர் முருகனை மனதில் எண்ணி, பதிகம் பாடி உருகினார். இரவு முழுவதும் தூங்காத களைப்பில் விடியற்காலையில் உறங்கிப்போனார். அப்போது முருகப்பெருமான் அவரது கனவில் தோன்றி, 'நாளை உமது கடனை வட்டியும் முதலுமாக யாமே அடைப்போம்' என்று கூறி மறைந்தார். இதே போல் சேவகனின் கனவில் தோன்றிய முருகப்பெருமான், 'கோயிலில் சுவாமிதரிசனம் செய்து முடித்து வந்ததும் தங்கள் பணம் உங்கள் கைக்கு வந்துசேரும்' என்று கூறி மறைந்தார்.
அப்போது திருச்செந்தூர் பகுதியை உள்ளடக்கிய குலசேகரப்பட்டனத்தை ஆண்ட குறுநில மன்னர் கனவில் செந்திலாண்டவர் தோன்றி, 'என்னுடைய பக்தன் மீராக்கண்ணு மிகவும் கஷ்டத்தில் இருக்கின்றான். நாளை காலையில் திருச்செந்தூர் கோவில் உண்டியலைத் திறந்து அதிலிருக்கும் பணத்தை அப்படியே அவனுக்கு வழங்கி அவனது கடனை அடைத்துவிடுங்கள்' எனக் கூறிச் சென்றார்.
பொழுது புலர்ந்ததும் புலவர் மீராக்கண்ணு, சேவகன் இருவரும் திருச்செந்தூர் கோயிலுக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களுக்கு முன்னதாகவே அங்கு வந்து மன்னர் காத்திருந்தார். பரஸ்பரம் மூவரும் சந்தித்துக்கொண்டனர்.
இறைவன் கனவில் கூறியபடியே எல்லாம் சிறப்பாக நிகழ்ந்தன. இதில் குறிப்பிடப்படவேண்டிய ஆச்சர்யமான விஷயம், புலவர் வணிகருக்குச் செலுத்த வேண்டிய தொகையை மீறி அதில் ஒரு பைசாவும் மீதம் இல்லை என்பதுதான். திருச்செந்தூர் ஆண்டவன் செந்திலாண்டவனின் கருணையை எண்ணி ஆலயத்துக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருமே கசிந்துருகினர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் திருச்செந்தூர் இராஜகோபுரம்
முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்ட பின்பு, தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகக் சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலக்கையில் தாமரை மலருடன் அருளுகிறார். தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார்.
திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் இராஜகோபுரம் இருக்கிறது. இந்த இராஜகோபுரம் முருகப்பெருமானுக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹாரம் முடிந்ததும் தெய்வானை திருமண நாளில், நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த இராஜகோபுரம் வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.
157அடி உயரமும், 9 நிலைகளையும் கொண்ட ராஜகோபுரத்தைக் கட்டியவர் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த தேசிகமூர்த்தி சுவாமிகள். இவர் கோபுரம் கட்டும்போது, பணியாளர்களுக்கு கூலியாக பன்னீர் இலை விபூதி தருவார். இலையைப் பிரித்துப் பார்த்தால், அதில் வேலைக்குரிய கூலி இருக்குமாம். ஒரு நாள் இந்த அதிசயம் நடப்பது நின்று போனது. தேசிக சுவாமிகள் முருகனிடம் முறையிட்டார். அவரது கனவில் தோன்றிய முருகன், 'காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதியிடம் சென்று உதவி பெற்று கோபுரத்தைக் கட்டி முடி' என்றார். சுவாமிகள் சீதக்காதியைச் சந்தித்தார். அவர் ஒரு மூட்டை உப்பு கொடுத்தார். அதைக் கோவிலுக்குக் கொண்டு வந்து பிரித்துப் பார்த்தபோது தங்கக் காசுகளாக மாறிவிட்டிருந்தன. கோபுர வேலையும் இனிதே முடிந்தது.
தீராத வயிற்றுவலி உடையவர்கள் திருச்செந்தூர் முருகன் சந்நிதியில் கந்தசஷ்டி கவசம் பாடினால் குணமாகும் என்று பால தேவராய சுவாமிகள் கூறியிருக்கிறார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
திருச்செந்தூர் முருகன் கோவில் பன்னீர் இலை விபூதியின் சிறப்பு
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீராக திகழ்வது திருச்செந்தூர். முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்த தலம் இது.
ஒவ்வொரு கோவிலுக்கு என்று தனி சிறப்பு உண்டு. அது அங்கு வீற்றிருக்கும் இறை சக்தி முதற்கொண்டு அங்கு வழங்கப்படும் பிரசாதங்கள் வரை அடங்கும். இதே போல் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கும் ஒரு சிறப்பு உண்டு. வேறு எந்த கோவிலிலும் இல்லாத தனி சிறப்பாக, திருச்செந்தூரில் முருகன் சன்னதியில் விபூதி, சந்தனப் பிரசாதத்தை பக்தர்களுக்குத் தரும்போது, பன்னீர் இலையில் தான் தருவார்கள். இந்த பன்னீர் இலை விபூதி பிரசாதம், தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின் போது சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
திருச்செந்தூரில் சூரபத்மாதியர்களை வதம் செய்து விட்டு,வெற்றி வீரனாக, தேவ சேனாதிபதியாக நின்ற முருகப் பெருமானின் பெருமைகளை துதித்த வேதங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து செந்திலாண்டவரின் மகிமையை விளக்கும் பன்னீர் மரங்களாக தோன்றின. எனவே இவற்றின் இலைகளும், வேத மந்திர சக்தியை உடையவை என்கிறது புராணம். பன்னீர் இலையில் பத்திரப்படுத்தப்படும் விபூதியிலும் இந்த வேத மந்திர சக்திகள் நிறைந்து இருக்கிறது என்பது நம்பிக்கை.
முருகன் ஒருபக்கத்திற்கு ஆறு கரங்கள் என 12 கரங்கள் கொண்டவன். அது போலவே பன்னீர் மரத்தின் இலைகளிலும், ஒரு பக்கத்திற்கு ஆறு நரம்புகள் என பனிரெண்டு நரம்புகள் இருக்கும். பன்னிருக்கரத்தான் முருகனை சென்று வணங்கும் பக்தர்களுக்கு அவன் தனது பன்னிருத் திருக்கரங்களாலேயே இங்கு விபூதி, சந்தன பிரசாதத்தை வழங்குவதாக ஐதீகமாகும். அதனால் இது பன்னீர் செல்வம் என்று பக்தர்களால் சொல்லப்படுகிறது. இந்த இலையை நேராக வைத்து பார்த்தால் முருக பெருமானின் வேல் போன்று காட்சி அளிக்கும்.

திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோவில்
தேரினை ஆமை இழுத்துச் செல்லும் வடிவமைப்பு - வியக்க வைக்கும் கலைப்படைப்பு
சுழலும் தேங்காய்
தனித்தனியாக சுற்றும் வளையங்களால் இணைக்கப்பட்ட கிளிகள்
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகரின் தென் கிழக்குப் பகுதியில், மலை மீது அமைந்துள்ளது, அர்த்தநாரீசுவரர் கோவில். கொங்கு நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற ஏழு தலங்களில் இதுவும் ஒன்று. அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற தலம். இத்தலம் அமைந்துள்ள மலையானது ஒரு புறம் பார்க்கும் பொழுது ஆணாக தோற்றமளிக்கிறது. வேறு இடத்தில் பெண் போல தோற்றம் அளிக்கிறது. இக்கோவிலில் அர்த்தநாரீசுவரர், செங்கோட்டுவேலன், ஆதிகேசவ பெருமாள் என மூன்று தெய்வங்களுக்கும் தனித்தனிச் சன்னதிகள் அமைந்துள்ளன.
இக்கோவிலில் உள்ள எல்லா சன்னதிகளின் முன்பாக உள்ள மண்டபங்களில், பல்வேறு விதமான அழகிய மற்றும் நுணுக்கமான வேலைப்பாடு உள்ள சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. இத்தலத்தில் எழுந்தருளில் உள்ள முருகப்பெருமானின் திருநாமம் செங்கோட்டு வேலவர். அவர் சன்னிதி முன்னுள்ள மண்டபத்தில் ஒரு தேர் போன்ற வடிவம் உள்ளது. அதன் கீழ் ஆமை வடிவம் ஒன்று செதுக்கப்பட்டு, அந்தத் தேரினை ஆமை இழுத்துச் செல்வது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வேறு எந்த கோவில்களிலும், நாம் காண முடியாத வியக்க வைக்கும் கலை படைப்பாகும்.
இந்த செங்கோட்டு வேலவரது சன்னதியின் முன்னே அமைந்துள்ள மண்டபத்திலும் மற்ற மண்டபங்களிலும் அமைந்துள்ள எல்லா தூண்களிலும் செதுக்கப்பட்ட சிற்பங்கள், அக்காலத்திய சிற்பக்கலையின் உன்னதத்தை நமக்கு விளக்குகின்றன. ஒவ்வொவொரு சிற்பத்தின் நுண்ணிய அழகிய வேலைப் பாட்டினையும், ஒவ்வொரு சிற்பத்திலும் காணப்படும் கற்பனை வளத்தினையும், இந்த சிற்பங்களை செதுக்கியவர்கள் எத்தனைப் பொறுமையாக, நிதானமாக, அறிவுக் கூர்மையுடன் இவற்றை செதுக்கி இருப்பார்கள் என்று நம்மை எண்ண வைக்கிறது. குதிரை மீது அமர்ந்திருக்கிற போர் வீரர்களின் சிற்பங்கள் மண்டபத் தூண்களில் கம்பீரத்துடன் திகழ்கின்றன. குதிரைகளின் உடலும் வாளேந்திய வீரர்களின் ஆவேசம் கூடிய மிடுக்கும், இடையிடையே அமைந்த தெய்வத் திருமேனிகளும் விலங்குகளும் பறவைகளுமாக நுட்பத்துடன் வடிக்கப்பட்டிருக்கின்றன.
இந்தக் கோவிலின் மண்டப மேற்கூரையில் எட்டுக்கிளிகள் வட்டத்திற்கு வெளியே அமைந்தது போலவும், நடுவிலே ஒரு தேங்காய் சிற்பமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேங்காயை நாம் கைகளால் சுழற்ற முடியும். இதில் உள்ள கிளிகளின் மூக்கில் வளையம், காலில் வளையம், வால்களில் வளையம் என்று அமைத்து, இவை அனைத்துமே தனித்தனியாக சுற்றுவது போல அமைக்கப்பட்டுள்ளது, நம்மை வியப்பில் ஆழ்த்தும். இந்த சிற்பத்தில், மேலிருந்து தொங்கும் சங்கிலிகள்,தொங்கும் தாமரைப்பூ,அதன் இதழ்களில் அமர்ந்து,மகரந்தத்தை ருசிக்கும் எட்டு கிளிகள், கிளிகளுக்கு காவலாக வெளியில் நான்கு பாம்புகள் ஆகிய எல்லாமே ஒரே கல்லால் வடிக்கப்பட்டது என்று அறியும் போது நம்மை வியப்பின் உச்சத்துக்கே இட்டுச் செல்லும்.
இந்த கோவிலின் சிற்பங்களை பார்த்து ரசிப்பதற்கு ஒரு நாள் போதாது. சிற்பக் கலையின் உன்னதத்தை உணர்த்தும் எண்ணற்ற நம் கோவில்களில், இக்கோவில் தனக்கென்று தனி இடத்தை பெற்று திதழ்கின்றது

திருவையாறு ஐயாறப்பர் கோவில்
குகனுக்காக, வில்லும் அம்பும் ஏந்தி ராமராக காட்சியளித்த முருகப்பெருமான்
தஞ்சாவூரிலிருந்து 16 கி.மீ. தொலைவில் காவிரிக் கரையில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருவையாறு. இறைவன் திருநாமம் ஐயாறப்பர். இறைவியின் திருநாமம் தர்ம சம்வர்த்தினி.
இக்கோவிலில் அமைந்துள்ள வேலவன் கோட்டம் என்ற சன்னதியில் முருகப்பெருமான் வில்லும் அம்பும் ஏந்தி, தனுசு சுப்பிரமணியயராக வள்ளி தெய்வானையுடன் காட்சியளிக்கிறார். இப்படி இவர் ராமர் போல், வில்லும் அம்பும் ஏந்தி காட்சி அளிப்பதற்கு, இராமாயண காலத்து நிகழ்ச்சி ஒன்றுதான் காரணம். ராவணனிடம் இருந்து சீதையை மீட்டு அயோத்தி திரும்பிய ராமர், அங்கு பட்டாபிஷேகம் செய்து கொண்டு அயோத்தியை ஆளத் துவங்கினார். அப்போது தன்னுடைய சொந்த ஊரான சிருங்கிபேரபுரத்தில் தங்கி இருந்த குகனுக்கு, ராமருடைய பிரிவை தாங்கிக் கொள்ள முடியவில்லை. ராமரைக் காண வேண்டும் என்று முருகரிடம் குகன் பிரார்த்திக்க, முருகர் கோதண்ட ராமனாகவும், வள்ளி சீதையாகவும், தெய்வயானை லட்சுமணராகவும் காட்சி கொடுத்தனராம்.
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழில் போற்றிப் பாடியுள்ளார்.

திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோவில்
அர்த்தநாரீசுவரர் மூலவராக இருக்கும் தேவாரத் தலம்
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகரின் தென் கிழக்குப் பகுதியில் மலை மீது அமைந்துள்ளது, அர்த்தநாரீசுவரர் கோவில். திருச்செங்கோடு என்பதற்கு 'அழகிய இறைத்தன்மை பொருந்திய செந்நிற மலை' என்றும், 'செங்குத்தான மலை' என்றும் பொருள். மலையின் பெயரே ஊருக்கு அமைந்து விட்டது. இம்மலை, ஒருபுறம் இருந்து பார்த்தால் ஆண் போன்ற தோற்றமும், வேறு ஒரு புறம் இருந்து பார்த்தால் பெண் போன்ற தோற்றமும் அளிப்பது சிறப்பாகும். 2000 ஆண்டுகள் பழமையான இம்மலை கோவிலுக்கு செல்ல 1200 படிக்கட்டுகள் உள்ளன. வாகனங்கள் செல்ல சாலை வசதியும் உண்டு. கொங்கு நாட்டின் தேவாரப் பாடல் பெற்ற ஏழு தலங்களுள் இத்தலமும் ஒன்றாகும்.
கருவறையில் மூலவராகிய அர்த்தநாரீசுவரர், ஆண்பாதி பெண்பாதி வடிவம் கொண்டு மாதொருபாகனாகக் காட்சியளிக்கிறார். இப்படி சிவனும் (வலதுபுறம்), சக்தியும் (இடதுபுறம்) சேர்ந்த ஒரே உருவாய், மாதொரு பாகனாய் அர்த்தநாரீசுவரர் எழுந்தருளி இருப்பது இக்கோவிலின் தனிச் சிறப்பாகும். இப்படி இறைவன் மூலவராக, அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் எழுந்தருளி இருப்பது ஒரு அரிய காட்சியாகும். இந்த விக்ரகம் ஒருவகை பாஷாணத்தால் உருவானது. வலது கையில் தண்டாயுதம் தாங்கிய வண்ணம் வீற்றிருக்கிறார் அம்மையப்பன். இந்த அர்த்தநாரீசுவரர் தோற்றத்தை மணிவாசகப் பெருமான், ‘தொன்மைக்கோலம்’ என்று அழைக்கிறார்.
வைகாசி விசாக திருக்கல்யாணம் - அர்த்தநாரீசுவரருக்கு அணிவிக்கப்படும் தாலி
அர்த்தநாரீசுவரர். மாதொரு பாகர் என்று அழைக்கப்படும் இத்தல மூலவர். சுமார் 6 அடி உயரம் உள்ள உளி படாத சுயம்புத் திருமேனியாக பாதி ஆணாகவும். பாதி பெண்ணாகவும் மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். தலையில் ஜடாமகுடம் தரித்து. பூரண சந்திரன் குடி, கழுத்தில் ருத்ராட்சம், தாலி அணிந்து, கையில் தண்டாயுதம் வைத்திருக்கிறார். அம்பிகையின் அம்சமாக உள்ள இடது பாக காலில் கொலுசு உள்ளது. சிவன். சக்தி சேர்ந்த வடிவம் என்பதால் வலதுபுறம் வேட்டியும். இடப்புறம் சேலையும் அணிவிக்கிறார்கள். மூலவரின் காலடியில் இருக்கும் தேவதீர்த்தம், எக்காலத்திலும் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கும், மூலவரை தரிசிக்க வருபவர்களுக்கு இந்த தீர்த்தம் வழங்கப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று இவருக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கும். அப்போது அர்த்தநாரீசுவரருக்கு அர்ச்சகர்கள் தாலி அணிவிப்பார்கள். அம்பிகை தனியே இல்லாததால் இவ்வாறு செய்கிறார்கள்.
பிரார்த்தனை
அர்த்தநாரீசுவரர் திருவுருவப் படத்தை வைத்து வேண்டிக்கொண்டால்,. கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். அர்த்தநாரீஸ்வர ஸ்லோகம் பாராயணம் செய்து, மனதார பிரார்த்தனை செய்துகொண்டால், மங்கல காரியங்கள் தடையின்றி நடந்தேறும்.
அர்த்தநாரீஸ்வர மந்திரம் :
ஓம் ஹும் ஜும் சஹ
அர்த்தநாரீஸ்வர ரூபே
ஹ்ரீம் ஸ்வாஹா
திங்கட்கிழமை, அமாவாசை, பெளர்ணமி முதலான நாட்களில் வீட்டில் விளக்கேற்றி அர்த்தநாரீஸ்வர ஸ்லோகம் பாராயணம் செய்து வழிபட்டால் பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள் என்பது நம்பிக்கை. நாகதோஷம், ராகு-தோஷம், கால சர்ப்ப தோஷம், களத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர்.

காவலூர் சண்முகசுப்பிரமணியசுவாமி கோவில்
திருச்செந்தூருக்கு இணையான திருப்புகழ் தலம்
தஞ்சாவூரில் இருந்து 18 கி.மீ. தொலைவில், பெருமாக்கநல்லூர் அருகே உள்ள காவலூர் கிராமத்தில் அமைந்துள்ளது சண்முகசுப்பிரமணியசுவாமி கோவில். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மிகவும் பழமையான முருகன் கோவில்களில் இதுவும் ஒன்று. அருணகிரிநாதர் இக்கோவில் முருகன் மீது திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார். இக்கோவிலுக்கு அருகில் ஓடும் வெட்டாறு, தெற்கில் இருந்து வடக்கு திசை நோக்கிப் பாய்வதால், உத்திர வாஹினி என்று கருதப்படுகிறது. எனவே இத்தலம் காசிக்குச் சமமாக கருதப்படுகிறது. அதனால் காசிக்குப் போக வேண்டாம், காவலூர் சென்றாலே போதும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.
இந்தக் கோவில் மாடக்கோவில் வகையைச் சேர்ந்ததாகும். கோவிலை அடைவதற்கு 12 படிக்கட்டுகள் உள்ளன. இந்த 12 படிகள் 12 ராசிகளைக் குறிக்கும். கருவறையில் ஆறு முகங்களுடன் 12 கைகளுடன் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக மயில் வாகனத்துடன் காட்சியளிக்கிறார். இங்குள்ள முருகன், திருச்செந்தூர் முருகனுக்கு இணையானவராகக் கருதப்படுகிறார்.
பிரார்த்தனை
செவ்வாய் தோஷம் நீங்கவும், திருமண தடைகள் நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், செவ்வாய் கிரகத்துக்கான தெய்வமாக முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். திருக்கருகாவூர் கோவிலுக்கு செல்லும் முன் பக்தர்கள் இக்கோவிலின் முருகப் பெருமானை வழிபடுவது வழக்கம். காசிக்கு இணையான தலம் என்பதால், இக்கோவில் பித்ரு தோஷ நிவர்த்திக்கும் புகழ்பெற்றது.

வேலாயுதம்பாளையம் பாலசுப்ரமணியசுவாமி கோவில்
முருகனுக்கு வேலை நேர்த்திக்கடனாக செலுத்தும் திருப்புகழ் தலம்
கரூரில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது புகழூர். இங்கிருந்து 4 கி.மீ. தொலைவிலுள்ள, வேலாயுதம்பாளையம் என்ற ஊரில் இருக்கும் புகழிமலையின் மேல் அமைந்துள்ளது, பாலசுப்ரமணியசுவாமி கோவில். கோவிலுக்கு செல்ல 315 படிக்கட்டுகள் உள்ளன. இக்கோவில் அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் பெற்ற தலமாகும். சமணர்களுக்குப் புகலிடம் தந்த காரணத்தால் இந்த மலை புகலி மலை என்று அழைக்கப்பட்டு, புகழி மலை என மாறிப் பின்னர் புகழூர் என பெயர் பெற்றது. இம்மலை மைசூர் எல்லையாக இருந்த காலகட்டத்தில்தான், இக்கோவில் கட்டப்பட்ட தாகவும், அதன் அடிப்படையிலேயே இங்கு மைசூர் கோவில்களின் கட்டட பாணியில் கோபுரம் அமைந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
கருவறையில்,பாலசுப்ரமணிய சுவாமி கையில் வேலேந்தி நின்ற கோலத்தில் காட்சிதருகிறார். ஒரு கையில் வேலும் மற்றொரு கையில் சேவல் கொடியும் கொண்டு, நின்ற கோலத்தில் அருள்புரிகிறார். வஜ்ஜிரம், சக்தி ஆகிய படைக்கலன்களையும் அபயம், வரதம் ஆகிய நான்கு கரங்களுடன் பாலசுப்பிரமணியராக காட்சி நல்குகிறார். முருகனுக்குப் பின்புறம் இடது புறம் தலை சாய்த்தபடி தேவ மயில் உள்ளது. மற்ற திருக்கோயில்களில் உள்ளதைப் போன்று இல்லாமல், இந்தக் கோவிலின் மயில் வாகனத்தின் தலை இடப்புறமாகவும், தோகை வலப்புறமாகவும் திகழ்கிறது. இத்தகைய அமைப்பு சூரசம்ஹாரத்துக்கு முற்பட்ட முருகனின் திருக்கோலத்தை குறிக்கும். இதிலிருந்து இந்தக் கோவிலின் புராதனத்தை அறியமுடிகிறது.
பிரார்த்தனை
இங்கே முருகனுக்கு நேர்த்திக்கடனாக வேல் செலுத்தி வழிபடும் வழக்கம் பிரசித்தம். தொடர்ந்து 12 வாரம் செவ்வாய்க்கிழமைகளில் செவ்வரளிப் பூ மற்றும் செவ்வாழைப் பழம் படைத்து வழிபட்டால், திருமணத்தடை விலகி இல்லற வாழ்க்கை விரைவில் கைகூடும். சஷ்டி விரதமிருந்து முருகப் பெருமானைத் தரிசித்தால், குழந்தை பாக்கியம் கிட்டும். இத்தலத்து விஷ்ணு, துர்க்கையை 12 வாரம் வேண்டிக்கொண்டு எலுமிச்சம்பழ விளக்கு ஏற்றி வணங்கினால் கல்யாணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்
கந்த சஷ்டி கவசம் இயற்ற அருளிய செந்தில் முருகன்
நோய்,நொடி இல்லாமலும், அழிவு நேராமலும் காக்க வேண்டும் என்று உடலின் ஒவ்வொரு உறுப்பின் பெயராகச் சொல்லி 'காக்க' இறைவனை வேண்டுவது காப்புக் கவசமாகும். இறைவனைத் தலையால் வணங்குவது முறையாதலால், உறுப்புக்கள் தலையிலிருந்து வரிசைப்படுத்தப்பட்டு இவ்வேண்டுதல் அமையும். இவ்வாறு பாடி இறைவனை வேண்டும் கவசங்கள் ஆறு 1. சிவ கவசம். 2. கந்த சஷ்டி கவசம், 3. சண்முக கவசம், 4. சத்தி கவசம், 5. விநாயகர் அகவல் 6. நாராயண கவசம். இந்தக் கவசங்களில் உலகம் முழுமைக்கும் உள்ள ஆன்மீக அன்பர்கள் பெரிதும் பாடி, வேண்டும் கவசம் கந்த சஷ்டி கவசமாகும். இதனை இயற்றியவர் பால தேவராய சுவாமிகள் என்ற ஒரு தமிழ் புலவர். இவர் 1857 இல் தொண்டை நாட்டு வல்லூரில் வாராச்சாமி பிள்ளை என்பவருக்கு மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் தேவராயன். இவர் கணக்கர் வேலை பார்த்துவந்தார்.
பால தேவராய சுவாமிகள் ஒரு சமயம் தீராத வயிற்று வலியால் அவதிபட்டார். எவ்வளவு மருத்துவ சிகிச்சை செய்தும் வயிற்றுவலி குணமாகாததால், கடைசியாக திருச்செந்தூர் முருகனிடம் வேண்டிவிட்டு சாகலாம் என முடிவெடுத்து, திருச்செந்தூர் வந்தார். திருச்செந்தூரில் முருகப்பெருமான் அவருக்கு காட்சி அளித்து ஒரு பதிகம் இயற்றுமாறும், அது அவர் நோயினை மட்டுமல்ல, உலக மக்கள் அனைவருடைய நோயினையும் தீர்க்கும் பாடலாக அமையும் என்றும், யாரெல்லாம் அந்தப் பதிகத்தைபடிக்கின்றார்களோ அவர்கள் நோயும், அவர்கள் வேண்டுவோரின் நோயும் தீரும் என்று அருளாசி தந்தார்.
அப்போது திருச்செந்தூர் கோவிலில் பால தேவராய சுவாமிகள் மட்டுமல்ல, இன்னும் ஏகப்பட்ட நோயாளிகள் இருந்தனர். தேவராயருக்கு வயிற்றில் வலி என்றால், மற்ற ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோய். தலையில் கட்டி, கன்னத்தில் புற்று, கழுத்தில் கழலை, எலும்புருக்கி நோய், வயிற்றுவலி, மூலம், தொடையில் புண் , கணுக்கால் வலி என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோய். இது போல பேய் , பில்லி சூன்யம், சித்தபிரம்மை, வறுமை இவற்றால் பாதிக்கப்பட்டோரும் அங்கு இருந்தனர். அந்த மொத்த மக்களின் குரலாக, முருகனிடம் எல்லா பிணிகளும், நோய்களும் தீர முருகன் சொன்னபடி பாலதேவராயர் பாடினார். எல்லா பக்தரையும் முருகன் எக்காலமும் காக்கும்படி பாடினார்.
பால தேவராயர்,திருச்செந்தூர் முருகன் சன்னதியில் இருந்து பாட தொடங்கினார். அவர் பாடி முடிக்கவும், அவரின் கொடும் நோய் அகன்றது, அந்த மகிழ்ச்சியில் அறுபடை வீடெல்லாம் சென்று அந்தப் பாடலை தொகுத்து முடித்தார். அதுதான் கந்த சஷ்டி கவசம்.
சஷ்டி என்றால் ஆறு, கவசம் என்றால் பாதுகாப்பு. நோய், பில்லி சூன்யம், வறுமை, வம்ச விருத்தி சிக்கல், மனநலம், தீரா கவலை உட்பட 6 வகையான கொடும் பிணிகளில் இருந்து கந்தன் மக்களை காக்கும் பாடலாக அது கொள்ளப்பட்டது. அக்காலத்தில் நோய்கள் பரவும் காலத்தில் இல்லம் தோறும், ஆலயம் தோறும் அதைப் பாடுவார்களாம்.
ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு வேல் பெயரை சொல்லி, காவல்தேடும் பாடல் அது. ஒவ்வொரு வரியும், ஒவ்வொரு உறுப்பையும் அதன் இயக்கத்தையும் காத்தருள வேண்டும் பாடலாக உள்ளது.
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேலிரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவியிரண்டும் வேலவர் காக்க
நாசிகளிரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத்திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங்கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்தின வடிவேல் காக்க……

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்
செந்தில் ஆண்டவருக்கு எதிரே நந்தியும், இரண்டு மயில்களும் நிற்கும் அபூர்வ காட்சி
முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. ஆறுமுகமும் 12 கரங்களும் கொண்ட முருகனின் திருக்கோலத்தை சஷ்டி விழாவின்போது மட்டுமே திருச்செந்தூரில் முழுதாகத் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் அங்கவஸ்திரத்தால் மூடி விடுவார்கள்.
கருவறையில் முருகன் இடது கையில் தாமரை மலருடன் ஜடாமுடி கொண்டு சிவயோகி போல காட்சிதருகிறார். முருகனின் சிலைக்கு பின்னால் இடதுபுற சுவரில் போரில் வெற்றிபெற்று வந்த முருகன் பூசை செய்ததாக சொல்லப்படும் லிங்கம் ஒன்று இருக்கிறது. அதற்கு முதலில் பூசை செய்தபிறகே முருகனுக்கு பூசை செய்யப்படுகிறது. திருச்செந்தூர் கடற்கரையில் சூரபத்மனை அழித்த போது, முருகப்பெருமானுக்கு பிரம்மகத்தி தோஷம் பிடிக்கிறது. அப்போது அகத்தியர் வழிகாட்டுதலின் கீழ், பஞ்ச லிங்கங்களை மணலிலே பிடித்து வழிபாடு செய்து தோஷங்கள் நீங்க பெறுகிறார். இந்த அபூர்வமான வழிபாட்டிற்கு பார்த்திபலிங்க பூஜை என்று பெயர்.
முருகனுக்கு மூன்று மயில்கள் உண்டு. மாங்கனி வேண்டி உலகைச் சுற்றி வர உதவிய மயில், மந்திர மயில். சூரசம்ஹாரத்திற்கு முன்புவரை இந்திரனே முருகனுக்கு மயில் வாகனமாக இருந்தான். சூரசம்ஹாரத்தின்போது இந்திரன் மயிலாகி முருகனைத் தாங்கினான். இது தேவ மயில். பின் சூரனை இருகூறாக்கியதில் வந்த மயில்தான் அசுர மயில். ஏற்கனவே இருந்த மயிலோடு, இந்த மயிலும் (சூரன்) சேர்ந்து வந்து திருச்செந்தூரில் இரண்டு மயில்களாக நின்றுவிட்டன. முருகன் சூரனை வென்றபின் இந்திரனுக்கு தேவலோக தலைமை பதவியை கொடுத்து அனுப்பிவிட்டு, மயிலாக மாறிய சூரனையே தன் வாகனமாகக் கொண்டார். பஞ்சலிங்ககளை வைத்து முருகன் பூஜை செய்யும் கோலத்தில் சிவனுடன் இருக்கிறார். எனவே, சிவனுக்குரிய நந்தி, இரண்டு மயில்களுடன் சேர்ந்து கருவறைக்கு எதிரே இருக்கிறது. இப்படி ஒரு அமைப்பை, நாம் வேறு எந்த முருகத் தலத்திலும் காண முடியாது.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்
உற்சவர் சண்முகருக்கு முகத்தில் ஏற்பட்ட அம்மைத் தழும்பு
திருச்செந்தூர் உற்சவமூர்த்தி சண்முகர் முதலில் திருவனந்தபுரத்தில் தான் எழுந்தருளி இருந்தார். திருவனந்தபுரத்தில் மார்த்தாண்ட மகாராஜா அரசாண்ட சமயம் அது. திருச்செந்தூரில் வசித்து வந்த திரிசுதந்திர முக்காணி பிரமணர்களுக்கும், திருவனந்தபுரம் முக்காணி பிராமணர்களுக்கும், திருமண வழியில் நெருங்கிய உறவு இருந்தது. அதனால் திருவனந்தபுரம் சென்று வந்து கொண்டிருந்த திருச்செந்தூர் திருசுதந்திரர்கள் சண்முகரை அங்கு கண்டனர் . அவர்களுக்கு சண்முகரை எப்படியாவது திருச்செந்தூர் கோவிலுக்கு எடுத்துச் சென்று உற்சவமூர்த்தி ஆக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. முருகப்பெருமானும், தன்னுடைய சண்முகர் திருமேனியை திருச்செந்தூருக்கு எடுத்துச் செல்ல அவர்களுக்கு உத்தரவிட்டார். இந்தக் காரியத்தை நிறைவேற்ற திருசுதந்திரர்கள், அப்போது திருவனந்தபுரத்தில் வியாபாரத்தில் மிகவும் செல்வாக்கு பெற்ற பரக்க செட்டிமார் உதவியை நாடினார்கள். அவர்கள் மகிழ்வுடன் உதவ முன் வந்தனர். ஓர் இரவு சண்முகரின் விருப்பதிற்கிணங்க முருகரை எடுத்து இரவோடு இரவாக ஒரு மூங்கில் கம்பில் துணியை கட்டி ஊஞ்சல் பல்லக்கு செய்து அதில் சண்முகரை கிடத்தி, துணியை வைத்து மூடி திருச்செந்திலம்பதி எனும் திருச்செந்தூரை நோக்கி புறப்படலாயினர். அவர்களும் மகிழ்வுடன் உதவ முன் வந்தனர். ஓர் இரவு சண்முகரின் விருப்பதிற்கிணங்க, முருகரை எடுத்து இரவோடு இரவாக ஒரு மூங்கில் கம்பில் துணியை கட்டி ஊஞ்சல் பல்லக்கு செய்து அதில் சண்முகரை கிடத்தி, துணியை வைத்து மூடி திருச்செந்தூரை நோக்கி புறப்படலாயினர். சண்முகத்தை தூக்கிக்கொண்டு சென்ற திரிசுதந்திர்களையும், பரக்கசெட்டிமார்களையும் வழியில் திருவிதாங்கூர் சுங்கச்சாவடியில் காவலர்கள் தடுத்தனர். அவர்களிடம் குழந்தைக்கு அம்மை போட்டு இருக்கிறது. அதனால் பாண்டி நாட்டுக்கு வைத்தியம் பாக்க கொண்டு போகிறோம் என்று கூறினார்கள். காவலர்கள் அம்மை என்ற உடன் திறந்து பார்க்கக்கூட அச்சப்பட்டு, அந்த கூட்டத்தை காவலர்கள் விரைவில் அனுப்பி விட்டார்கள். காவலரிடம் இருந்து தப்பித்த அடியவர்கள் மேலும் விரைவாக நடக்கலாயினர் .
அதேசமயம் சண்முகர் சிலையை காணவில்லை என்று திருவனந்தபுரத்தில் மார்த்தாண்ட மகாராஜா மிகவும் பதட்டம் அடைந்தார். நாலாபுறமும் ஆட்களை அனுப்பி சிலையை தேட உத்தரவிட்டார். அன்று இரவு மகாராஜா கனவில் வந்த சண்முகர், என் குழந்தைகள் என் விருப்பப்படி தான் என்னை திருச்செந்தூருக்கு அழைத்து செல்கிறார்கள். எனவே, நீ பதட்டப்பட வேண்டாம். என்னைக் காண இனி திருச்செந்தூர் வா என்று கட்டளை இட்டார்.
சண்முகரை சுமந்து செல்லும் அடியவர்கள், கடற்க்கரை ஒட்டிய வனாந்திர காட்டுப்பகுதிக்கு வந்தபோது, காலைப்பொழுது விடிந்துவிட்டது. அந்த இடத்தில் சண்முகருக்கு ஜல அபிஷேகம் செய்து, அவர் பசிக்கு நிவேதனம் செய்ய ஏதாவது கிடைக்குமா என்று தேடினார்கள். அந்தக் காட்டுப் பகுதியில், குடிசையில் ஒரு வயதான பெண் வசித்து வந்தாள். அவள் காலை உணவு தயாரிக்க புளித்த மாவும், பயறு கஞ்சியும் வைத்திருந்தாள். உடனே இந்த சண்முகரின் அடியவர் கூட்டம் அந்த பெண்மணியிடம் வேண்டி, சண்முகருக்கு புளித்த தோசையும், கஞ்சியும் நைவேத்தியமாக படைத்து பூஜை செய்தார்கள். அந்த நிவேதனம்தான், திருச்செந்தூர் கோவில் உதயமார்தாண்ட கட்டளையில், இன்று வரை ஒரு நாள் முன்பே அரைத்த புளித்த தோசை, பயறு கஞ்சி என சண்முகருக்கு தினமும் நிவேதனம் செய்கிறார்கள். அந்த அம்மைத் தழும்புதான் இன்றும் உற்சவர் சண்முகர் முகத்தில் உள்ளது.