புன்னைநல்லூர் கோதண்டராமர் கோவில்

ஆஞ்சநேயர் சன்னதி மண்டபத்தில் கூரையின் உட்புறத்தில் செதுக்கப்பட்ட பன்னிரண்டு ராசிகளின் அரிய காட்சி

பக்தர்கள், தரையில் வரையப்பட்ட, தங்கள் ராசி தொடர்பான வண்ண கட்டத்தில் நின்று ஆஞ்சநேயரை பிரார்த்திக்கும் முறை

தஞ்சாவூரில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் 6 கி.மீ. தொலைவில் உள்ளது புன்னைநல்லூர். இந்த ஊரில் மிக பிரசித்திப் பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகில், சுமார் 500 வருடப் பழைமை வாய்ந்த கோதண்டராமர்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் உள்ள மூலவர் ஸ்ரீகோதண்டராமர், சீதா, லட்சுமணர், சுக்ரீவரோடு நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். கருவறையில் உள்ள விக்ரகங்கள் அனைத்தும் சாளக்கிராமக் கல்லினால் ஆன சிலைகள். இத்தகைய விக்ரகத்தை வேறெங்கும் காண்பது அரிது.

இக் கோவிலில் தனி அலங்கார மண்டபத்தில் ஸ்ரீ ஜயவீர ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளார்’. ’வீர’ செயல் பல செய்து இலங்கை சென்று, அண்ணல் ஸ்ரீராமனின் மோதிரத்தை அன்னை ஸ்ரீசீதாப்பிராட்டியிடம் கொடுத்து தாயாரின் துயர் துடைத்தவர் ஸ்ரீஆஞ்சநேய ஸ்வாமி. பின்பு அன்னையைக் கண்ட ’ஜய’ செய்தியினை ஸ்ரீராமபிரானிடம் கூற வருபவர் ஸ்ரீ ஜயவீர ஆஞ்சநேயர்.

ஸ்ரீ ஜயவீர ஆஞ்சநேயர் தூக்கிய வலக்கையும், வெற்றிச் சின்னமாகிய தாமரை ஏந்திய இடக்கையுமாக விசுவ ரூபமாக, நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். சாதிக்க முடியாதையும் சாதித்தவர் (அன்னையை காண கடலை தாண்டியவர்), வீரன் (எதிரியாம் இராவணனின் இலங்கையில் புகுந்தவர்), ஜயம் கொண்டவர்- கொடுப்பவர் (கடலை தாண்டி, எதிரியாம் இராவணனின் இலங்கையில் அன்னையை கண்டவர்).

இந்த ஜெய்வீரர் ஆஞ்சநேயர் சன்னதியின் எதிரில், கூரையின் உட்புறத்தில் முழுமையான ராசி மண்டலம், அதாவது ஜாதகக் கட்டத்தில் காணப்படும் பன்னிரண்டு வீடுகள் செதுக்கப்படுள்ளது. இந்த பன்னிரண்டு வீடுகளுக்கு சரியாக ஒத்திருக்கும் வகையில், தரையில் கீழே மற்றொரு விளக்கப்படம் உள்ளது. இந்த விளக்கப்படத்தில் பன்னிரண்டு வீடுகளும் வெவ்வேறு வண்ண கட்டங்களில் சித்தரிக்கப்பட்டுள்ள. அந்தந்த ராசிக்கான வண்ணங்கள் அந்த விளக்கப்படத்தில் உள்ளன. ஸ்ரீஜயவீர ஆஞ்சநேய மூர்த்தியிடம் பிரார்த்தனை செய்யும் போது, பக்தர்கள் தங்கள் ராசி தொடர்பான வண்ண கட்டத்தில் நின்றால், அவர்களின் விருப்பம் நிறைவேறும் என்பது ஐதீகம்.

இந்த பன்னிரண்டு ராசி மண்டல கட்டம் வேறு எந்த பெருமாள் கோவிலிலும் நாம் தரிசிக்க முடியாது.

 
Previous
Previous

கோவிலூர் மந்திரபுரீசுவரர் கோவில்

Next
Next

திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோவில்