செங்கல்பட்டு கணையாழி ஆஞ்சநேயர் கோவில்

கையில் ராமபிரான் தந்த கணையாழியோடு (மோதிரத்தோடு) காட்சி கொடுக்கும் ஆஞ்சநேயர்

சனியின் தாக்கத்தை குறைக்கும் ஆஞ்சநேயர்

செங்கல்பட்டு நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது கணையாழி ஆஞ்சநேயர் கோவில். இத்தலத்தின் புராதான பெயர் செங்கழுநீர்பட்டு. பின்னர் இது மருவி செங்கல்பட்டு என்று ஆனது. இக்கோவில் சுமார் 800 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது.

மழைக்காலங்களில் செங்கழுநீர்ப்பூ அதிகம் பூக்கும் பகுதியாக இத்தலம் விளங்கியதால், செங்கழுநீர்பட்டு என்றழைக்கப்படும் செங்கல்பட்டு பகுதியை, திம்மராஜன் என்ற மன்னன் ஆட்சிப் புரிந்ததால் ஆலயம் இருக்கும் இப்பகுதியானது இன்றளவும் “திம்மராஜபுரம்” என்றே அழைக்கப்படுகின்றது.

கருவறையில் கணையாழி ஆஞ்சநேயர், நின்ற நிலையில் இருதிருக்கரங்களுடன் வலது கரத்தில் ராமபிரான் தந்த கணையாழியையும் இடது கரத்தினை ஊரு ஹஸ்தமாகவும் கொண்டு அருள்புரிகின்றார். சகல ஆடை ஆபரணங்களுடன் சிவந்த வாயினையும் தலையில் கிரீட மகுடத்துடன் சம திருஷ்டியுடன் அருட்பார்வையுடன் காட்சி தருகின்றார்.

ஆஞ்சநேயர் இத்தலத்தில் கையில் கணையாழியோடு (மோதிரத்தோடு) காட்சி கொடுப்பதற்கு ராமாயணத்தின் பின்னணி உள்ளது.

சீதையை ராவணன் இலங்கையில் சிறை வைத்திருந்த போது ராமபிரான், சீதையை காணும் பொருட்டு, அவரது பணியாள் என்பதற்கு அடையாளமாய் தமது கணையாழியை கொடுத்து ஆஞ்சநேயரை அனுப்பி வைத்தார்.

ஆஞ்சநேயர் ஆகாய மார்க்கமாய் இவ்வழியே செல்லும் போது தடாகம் ஒன்றைக் கண்டார். அத்தடாகத்தில் சிறிது இளைப்பாறும் பொருட்டு வானிலிருந்து கீழிறங்கி தடாகத்தில் அமர்ந்து சிரமபரிகாரம் மேற்கொண்டார். அப்போது மோதிரத்தை இத்தலத்தில் வைத்ததாகவும், அதன்பின்னர் இலங்கையை அடைந்து சீதாப்பிராட்டியிடம் காண்பித்ததாகவும், இத்தலபுராணம் தெரிவிக்கின்றது.

சனியின் தாக்கத்தை குறைக்கும் ஆஞ்சநேயர்

சிறந்த ராம பக்தியினால் ராமசந்திர மூர்த்தியின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் அனுமன். ஓழுக்கத்தின் பிம்பமாக இருப்பவர். ராமர் மீதுள்ள பேரன்பின் அடையாளமாக தன் உடல் முழுவதும் செந்தூரத்தை பூசிக் கொண்டவர்.

இவரை, சனிபகவானால் பிடிக்க இயலாத வரத்தைப் பெற்றுள்ளதால் இவரை வணங்கும் பக்தர்களுக்கும் சனியின் தாக்கம் குறைவதாக ஐதீகம் உள்ளது. ஆஞ்சநேயரை வணங்குவோருக்கு நற்குணங்களும் நல்வாழ்வும் கிடைக்கும்.

 

செங்கல்பட்டு நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது கணையாழி ஆஞ்சநேயர் கோவில்.

Previous
Previous

திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவில்

Next
Next

அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில்