பொன்விளைந்த களத்தூர் முன்குடுமீஸ்வரர் கோவில்
சிவலிங்க பாணத்தின் உச்சியில் குடுமி அமைந்துள்ள அபூர்வ தோற்றம்
செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில்,10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பொன் விளைந்த களத்தூர் என்ற கிராமம். இத்தலத்து இறைவன் திருநாமம் முன்குடுமீஸ்வரர். இறைவியின் திருநாமம் மீனாட்சி அம்மன். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில் சிவலிங்க பாணத்தின் உச்சியில் குடுமி போன்ற தோற்றம் உள்ளது.
இப்படி சிவலிங்கத் திருமேனியில், குடுமி அமைந்ததற்கு பின்னணியில் ஒரு வரலாற்று நிகழ்ச்சி உள்ளது. இப்பகுதியை ஆண்ட சோழ மன்னன் ஒருவனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அப்பாக்கியம் வேண்டி சிவனுக்கு 108 கோயில்கள் கட்டி கும்பாபிஷேகம் செய்தான். அவ்வாறு கட்டிய கோவில்களில் இதுவும் ஒன்று. ஒருசமயம் மன்னன் இக்கோவிலுக்கு சுவாமியைத் தரிசிக்க வந்தான். அவ்வேளையில் பூஜையை முடித்த அர்ச்சகர், சுவாமிக்கு அணிவித்த மாலையை வீட்டிற்கு எடுத்துச் சென்று விட்டார். மன்னர் வந்திருப்பதை அறிந்த அர்ச்சகர், மனைவிக்கு சூடிய மாலையை கோவிலுக்கு எடுத்து வந்தார்.
சிவனுக்கு அணிவித்த மாலை எனச் சொல்லி அதை மன்னனுக்கு அணிவித்தார். மன்னர் மாலையில் முடி இருந்த காரணத்தைக் கேட்டார். அர்ச்சகர் அவரிடம் 'லிங்கத்தின் சடாமுடியில் இருந்த முடியே அது!' என பொய் சொல்லிவிட்டார். மன்னன் தனக்கு சிவனிடம் முடியைக் காட்டும்படி கூறினான். அர்ச்சகர் மறுநாள் காட்டுவதாகச் சொல்லிவிட்டார். மன்னன் மறுநாள் தனக்கு அந்த தரிசனம் கிடைக்காவிட்டால், அர்ச்சகருக்கு கடும் தண்டனை கொடுக்க நேரிடும் என எச்சரித்துச் சென்றான். கலங்கிய அர்ச்சகர் அன்றிரவில் சிவனை வேண்டினார். மறுநாள் மன்னர் வந்தார். அர்ச்சகர் பயத்துடனே சிவலிங்கத்தின் முன்பு தீபாராதனை காட்டினார். என்ன ஆச்சர்யம்! சிவலிங்க பாணத்தின் முன் பகுதியில் கொத்தாக முடி இருந்தது. மன்னனும் மகிழ்ந்தான். இவ்வாறு அர்ச்சகருக்காக குடுமியுடன் காட்சி தந்ததால் இவர், 'முன்குடுமீஸ்வரர்' என்று பெயர் பெற்றார்.
      
      செங்கல்பட்டு கணையாழி ஆஞ்சநேயர் கோவில்
கையில் ராமபிரான் தந்த கணையாழியோடு (மோதிரத்தோடு) காட்சி கொடுக்கும் ஆஞ்சநேயர்
செங்கல்பட்டு நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது கணையாழி ஆஞ்சநேயர் கோவில். இத்தலத்தின் புராதான பெயர் செங்கழுநீர்பட்டு. பின்னர் இது மருவி செங்கல்பட்டு என்று ஆனது இக்கோவில் சுமார் 800 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. கருவறையில் கணையாழி ஆஞ்சநேயர், நின்ற நிலையில் இருதிருக்கரங்களுடன் வலது கரத்தில் ராமபிரான் தந்த கணையாழியையும் இடது கரத்தினை ஊரு ஹஸ்தமாகவும் கொண்டு அருள்புரிகின்றார்.
ஆஞ்சநேயர் இத்தலத்தில் கையில் கணையாழியோடு (மோதிரத்தோடு) காட்சி கொடுப்பதற்கு ராமாயணத்தின் பின்னணி உள்ளது.
சீதையை ராவணன் இலங்கையில் சிறை வைத்திருந்த போது ராமபிரான், சீதையை காணும் பொருட்டு, அவரது பணியாள் என்பதற்கு அடையாளமாய் தமது கணையாழியை கொடுத்து ஆஞ்சநேயரை அனுப்பி வைத்தார். ஆஞ்சநேயர் ஆகாய மார்க்கமாய் இவ்வழியே செல்லும் போது தடாகம் ஒன்றைக் கண்டார். அத்தடாகத்தில் சிறிது இளைப்பாறும் பொருட்டு வானிலிருந்து கீழிறங்கி தடாகத்தில் அமர்ந்து சிரமபரிகாரம் மேற்கொண்டார். அப்போது மோதிரத்தை இத்தலத்தில் வைத்ததாகவும், அதன்பின்னர் இலங்கையை அடைந்து சீதாப்பிராட்டியிடம் காண்பித்ததாகவும், இத்தலபுராணம் தெரிவிக்கின்றது.
      
      அனுமந்தபுரம் அகோர வீரபத்திர சுவாமி கோவில்
நெற்றியில் சிவபெருமானின் லிங்க வடிவம் தாங்கிய அகோர வீரபத்திரர்
மனநோய்க்கான பரிகார தலம்
தாம்பரம் - செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில், சிங்கப்பெருமாள் கோவிலிலிருந்து 10 கி.மீ. தொலைவில், அனுமந்தபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது அகோர வீரபத்திர சுவாமி கோவில். இறைவியின் திருநாமம் பத்ரகாளி, காளிகாம்பாள். 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.
சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களுள் ஒருவர் வீர பத்திரர். சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவா். வீரம் என்பதற்கு அழகு என்றும், பத்திரம் என்பதற்குக் காப்பவன் என்றும் பொருள் கொண்டு, வீரபத்திரர் என்பதற்கு அழகும், கருணையும் கொண்டு அன்போடு காப்பவர் என்று பொருள். அகோர மூர்த்தியான வீரபத்திரர் மாசி மாதத்தில் கிருஷ்ணபட்சத்தில், பூர நட்சத்திரம் கூடிய பிரதமை திதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணிக்கு அவதரித்தார். இதனால் பூர நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது மிகவும் விசேஷம்.
கருவறையில் சுயம்பு மூர்த்தியாக சிவபெருமானின் அம்சமான அகோர வீரபத்திர சுவாமி, ஏழடி உயர திருமேனியுடன் எழுந்தருளியுள்ளார். சுவாமி நெற்றியில் சிவபெருமானின் லிங்க வடிவமும் பொருந்தி, ஒரு கையில் கத்தியும் கேடயமும் மற்றொரு கையில் வில், அம்பு ஏந்தியும், தாமரை பீடத்தில் நின்ற கோலத்தில் கம்பீரமாக காட்சியளிக்கின்றார். அகோர வீரபத்ர சுவாமியின் அருகே, தட்சன் ஆட்டுத் தலையுடன் கரம் கூப்பியபடி நின்ற கோலத்தில் காட்சி அளிக்கின்றான்.
பிரார்த்தனை
அகோர வீரபத்திரர் வெற்றிலை தோட்டத்தில் அவதரித்தவர். ஆதலால் அர்ச்சனை தட்டுடன், அவருக்கு வெற்றிலை மாலையும் பக்தர்கள் வாங்கிச்செல்கிறார்கள். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், இக்கோவிலுக்குச் சென்றால் அகோர வீரபத்திரர் அவர்கள் மனநோயிலிருந்து விடுபட அருள்பாலிப்பதாக ஐதீகம்.
பக்தர்கள் திருமணத்திற்குப் பிறகு வீரபத்ரருக்கு 108 அல்லது 1008 வெற்றிலைகளைச் சமர்ப்பித்து மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்காகவும், குழந்தை வரத்திற்காகவும் இங்கு வருகை தருகின்றனர். மன அழுத்தம், நரம்பு கோளாறுகள், கவலை, மனச்சோர்வு போன்றவற்றில் இருந்து நிவாரணம் பெற பக்தர்கள் வீரபத்திரரை இங்கு வழிபடுகின்றனர். மாந்திரீகம் மற்றும் சூனியம், செவ்வாய் தோஷங்களில் இருந்து நிவாரணம், வேலை வாய்ப்புகள் மற்றும் பதவி உயர்வுகள் மற்றும் தொழில் வளர்ச்சிக்காகவும் பக்தர்கள் இங்கு வழிபடுகின்றனர். எதிரிகளால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபட பக்தர்கள் இங்கு பத்ர காளியை வழிபடுகின்றனர். பக்தர்கள் பௌர்ணமி, அமாவாசை போன்ற தினங்களில் இரவு தங்கி, காலை செல்வது வழக்கமாகும்.
செவ்வாய்தோஷம் உள்ளவர்கள், உடல் நிலையில் கோளாறு உடையவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் ஐந்து அமாவாசை அல்லது ஐந்து பௌர்ணமி வந்து எதிரில் உள்ள குளத்தில் நீராடி, சுவாமி தரிசனம் செய்து வேண்டி கொள்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும் வெற்றிலை மாலை சார்த்தி, முடிகாணிக்கை செலுத்தி வழிபாடு செய்கிறார்கள்.
வெற்றிலைப் படல் சாற்றும் பிரார்த்தனை
இவருக்கு வெற்றிலைப் படல் சாற்றுவது மிக விசேஷமான பிரார்த்தனையாகக் கருதப் படுகிறது. வெற்றிலைப்படல் என்பது, சுவாமியைச் சுற்றி அதற்கென உள்ள பிரபையில் வெற்றிலைகளை கொண்டு அலங்கரிக்க படுகின்றது. அரை வெற்றிலைப் படலுக்கு 6400 வெற்றிலைகளும், முழுப்படலுக்கு 12800 வெற்றிலைகளும் பயன் படுத்தப் படுகின்றன. வெற்றிலைப் படல் பிரார்த்தனை செய்வதாக நேர்ந்து கொண்டால், அனைத்து பிரச்னைகளும் தீர்வாகின்றன. (வெற்றியைக் குறிக்கும் இலையே வெற்றிலையாகும்) வெற்றிலை மாலையை ஆடிப்பூரத்தன்று சாத்துவதும் விசேஷ பலன்களைத் தரும்.
வெண்ணெய் மற்றும் சந்தனக் காப்பு வழிபாடு இங்கு சிறந்த பிரார்த்தனையாகும். வீரபத்ரர் உக்ரமூா்த்தி என்பதால் அவருடைய இன்னருளைப் பெற வெண்ணெய்க் காப்பு சாற்றியும், சந்தனக் காப்பு சாற்றியும் பக்தா்கள் வழிபடுகின்றனா்.
      
      மெய்யூர் சுந்தரராஜப்பெருமாள் கோவில்
திருமணம் கை கூடுவதற்காக பெருமாளுக்கு கல்யாண உற்சவம் நடத்தப்படும் தலம்
செங்கல்பட்டு- மதுராந்தகம் சாலையில் அமைந்துள்ள பாலாற்று பாலத்திலிருந்து மூன்று கி.மீ. தொலைவில் உள்ளது மெய்யூர் சுந்தரராஜப்பெருமாள் கோவில். தாயார் திருநாமம் சுந்தரவல்லி. இவ்வூர் பல நூற்றாண்டுகளுக்கு முன் சத்யபுரி ஷேத்திரம் என்று அழைக்கப்பட்டது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மெய்யூருக்கு அருகில் இருந்த பாலாற்றில், நீருக்கடியில் பெருமாள், தாயார், ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள் ஆகியோரது பஞ்சலோக விக்கிரகங்களும் கிடைக்கப்பெற்றன. அவை அனைத்தும் நாகை சவுந்திரராஜப் பெருமாள் கோவிலுக்குச் சொந்தமானவை என்பதும், படையெடுப்பு மற்றும் விக்கிரக கடத்தல் செயல்களின் காரணமாக பாலாற்றில் வந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மெய்யூரில் உள்ள பெருமாளுக்கு சுந்தரராஜப் பெருமாள் என்று பெயர் சூட்டப்பட்டது. நாகைப்பெருமாளே இத்தலத்தில் சுந்தரராஜப் பெருமாளாக எழுந்தருளியுள்ளதால், மெய்யூரில் வாழ்ந்து வந்த வைணவப் பண்டிதர்கள், நாகைத் தலப் பெருமாள் பாசுரங்களையே இத்தல பெருமாளுக்கும் பாடி வழிபாடு செய்கிறார்கள்.
கருவறையில் புன்னகை தவழும் முகத்துடன், நின்ற கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் பெருமாள் காட்சி தருகிறார். இரு கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியும், வலது கையில் அபயம் அளிக்கும் வண்ணமும், இடது கையை மடக்கிய வண்ணமும் காணப்படுகிறார். இவருக்கு வலது மற்றும் இடதுபுறம் ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள்.
இத்தலத்தில் திருக்கல்யாண உற்சவ வைபவம் விசேஷமானதாகும். சுந்தரராஜப் பெருமாளுக்கும், சுந்தரவல்லி தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவ வைபவம் நடத்தி வழிபட்டால், ஒரு மண்டல காலத்திற்குள் பலன் கிடைக்கும். திருமணம் கைகூடியவர்கள், தம்பதி சமேதராய் வந்து பெருமாளையும், தாயாரையும் வணங்கி விட்டுச் செல்கின்றனர். இதே போல் குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் குழந்தையோடு வந்து பெருமாளையும், தாயாரையும் வணங்கிச் செல்கிறார்கள்.