ராவத்தநல்லூர் ஶ்ரீ சஞ்சீவிராய ஆஞ்சநேயர் பெருமாள் கோவில்
இருவேறு திசை நோக்கி அருள் பார்வை புரியும் அபூர்வ ஆஞ்சநேயர்
தேங்காய் உருட்டி செய்யப்படும் வித்தியாசமான வழிபாடு
கோரிக்கைகள் நிறைவேற, ஞாயிற்றுக்கிழமைதோறும் எமகண்ட நேரத்தில் நடைபெறும் அபிஷேக ஆராதனை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் நெடுஞ்சாலையில் சங்கராபுரம் அருகாமையில் புதூர் என்ற கிராமத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ராவத்தநல்லூர் ஶ்ரீ சஞ்சீவிராய ஆஞ்சநேயர் பெருமாள் கோவில். 750 வருட பழமை வாய்ந்த சிறப்புமிக்க ராமாயண காலத்தின் வரலாற்று பெருமை கொண்ட கோவில் இது. ராமாயணம் காலத்தில் ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கி செல்லும்போது, ராவத்தநல்லூரில், சஞ்சீவி மலையின் ஒரு சில பகுதிகள் கீழே விழுந்தன.
மூலவர் சஞ்சீவராய ஆஞ்சநேயர், 11 அடி உயரத் திருமேனியுடன் தெற்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறார். அவரது இடது கண் கிழக்கு திசை நோக்கியும், வலது கண் மேற்கு திசை நோக்கியும் அருள் பார்வை புரிவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இப்படி இருவேறு திசை நோக்கி ஆஞ்சநேயரின் அருட்பார்வை இருப்பது ஒரு அரிய காட்சியாகும்.
தேங்காய் உருட்டி செய்யப்படும் வித்தியாசமான வழிபாடு
இப்பகுதி மக்கள் திருமணம் செய்வது, வீடு வாகனங்கள் வாங்குவது உட்பட எல்லா நிகழ்வுகளுக்கும் கோவிலுக்கு வந்து ஆஞ்சநேயரிடம் உத்தரவு பெற்று செல்கின்றனர். மேலும் ஆஞ்சநேயரை வழிபட வரும் பக்தர்கள் சிதறு தேங்காயை உடைப்பதில்லை .அதற்கு பதிலாக ஆஞ்சநேயரின் சன்னதியில் இருந்து தேங்காயை உருட்டி விடுகின்றனர் .அது ஆஞ்சநேயரின் பாதத்தைச் சென்று சேர்கிறது. தங்கள் பிரச்சனைகளை ஆஞ்சநேயரின் பாதத்தில் சமர்ப்பித்து விட்டால் இனி அவர் பார்த்துக்கொள்வார் என்ற நிம்மதியோடு செல்கிறார்கள் .பக்தரகள் இப்படி தேங்காய் உருட்டி வழிபாடு செய்யும் வித்தியாசமான நடைமுறை இக்கோவிலில் தான் கடைபிடிக்கப்படுகின்றது.
ஞாயிறுதோறும் எமகண்ட நேரத்தில் நடைபெறும் அபிஷேக வழிபாடு
இக்கோவிலில் பிரதி, ஞாயிறு தோறும் எமகண்ட நேரத்தில் சிறப்பு அபிஷேக வழிபாடு நடைபெறுகின்றது. இதில் கலந்து கொண்டு தங்கள் வேண்டுதல்களை வைக்கும் பக்தர்களுக்கு, அவர்களின் கோரிக்கைகள் 48 நாட்களுக்குள் நிறைவேறுகின்றது. இந்தக் கோவிலில் எமகண்ட நேரத்தில் செய்யப்படும் அபிஷேக ஆராதனை வேறு எந்த கோவிலிலும் இல்லாத நடைமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றினால் திருமணத்தடை நீங்கி திருமணம் கைகூடும். வெண்ணெய் சாற்றினால் மழலைச் செல்வம் கிடைக்கும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் நெடுஞ்சாலையில் சங்கராபுரம் அருகாமையில் புதூர் என்ற கிராமத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ராவத்தநல்லூர்