திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில்
ஆலயத்துளிகள் வாசகர்களுக்கு,
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!
என்னை பெற்ற தாயார் என்ற வித்தியாசமான திருநாமம் கொண்ட மகாலட்சுமி
சகல சௌபாக்கியங்களையும் தரும் வைபவ லட்சுமி
திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னையில் இருந்து 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருநின்றவூர். பெருமாளின் திருநாமம் பக்தவத்சல பெருமாள் . தாயாரின் திருநாமம் என்னை பெற்ற தாயார். மகாலட்சுமி என்னும் திருமகள் தனது தந்தையான சமுத்திர ராஜனிடம் கோபித்துக் கொண்டு நின்ற இடம் தான் திருநின்றவூர். இத்தலத்து தாயார் 'என்னைப் பெற்ற தாயார்' என்ற திருநாமம் பெற்றதற்கு பின்னணியில் ஒரு புராண வரலாறு உள்ளது.
பெருமாளிடம் கோபித்துக் கொண்டு வைகுண்டத்தை விட்டு 'திரு'வாகிய மகாலட்சுமி இங்கு வந்து நின்றதால் 'திருநின்றவூர்' ஆனது. அவளது தந்தையான சமுத்திரராஜன் அவளை சமாதானம் செய்து அழைத்துச் செல்ல வந்தான். (லட்சுமி பாற்கடலில் பிறந்தததால் சமுத்திரராஜன் தந்தையாகிறான்). மகாலட்சுமி வர மறுத்து விட்டாள். சமுத்திரராஜன் மீண்டும் வைகுண்டம் சென்று பெருமாளிடம், "பகவானே! தாங்கள் வந்து தேவியை அழைத்து வர வேண்டும்" என்றான். அதற்கு பெருமாள், "நீ முன்னே செல். நான் பின்னால் வருகிறேன்"என்கிறார். சமுத்திரராஜன் முன்னால் சென்று மகாலட்சுமியிடம், நான் உனக்கு தந்தையல்ல, நீயே "என்னைப்பெற்ற தாயார்" எனவே வைகுண்டம் வந்து ஆட்சி செய்ய வேண்டும்" என மன்றாடினான். பெருமாளும் சமாதானம் செய்யவே, மகாலட்சுமி வைகுண்டம் செல்கிறாள். பக்தன் வேண்டுகோளுக்கிணங்க பெருமாள் இங்கு வந்ததால் அவரது திருநாமம் "பக்தவத்சலன்" ஆனது. சமுத்திரராஜன் மகாலட்சுமியை "என்னைப்பெற்ற தாயே" என அழைத்ததால் அதுவே இத்தலத்தின் தாயார் பெயராகி விட்டது. சமுத்திரராஜனின் வேண்டுகோளுக்கிணங்க பெருமாளும் தாயாரும் இத்தலத்தில் திருமணக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்கள்.
ஒரு சமயம் குபேரன் தன் நிதியை இழந்து வாடியபோது, இத்தலத்து "என்னைப்பெற்ற தாயாரை"வழிபட்டு தனது இழந்த செல்வங்களை மீண்டும் பெற்றான் என்கிறது புராணம். இங்கு தாயார் சகல சௌபாக்கியங்களையும் தரும் வைபவலட்சுமியாக அருள் பாலிக்கின்றார். எனவே, இங்கு வந்து வேண்டிக்கொண்டால், சகல ஐஸ்வரியங்களையும் திருமகள் தந்தருளுவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
லட்சுமி பூஜை யந்திரம்