மணக்கால் அய்யம்பேட்டை சேஷபுரீஸ்வரர் கோவில்

அம்பிகையின் அந்தப்புரமாக விளங்கிய தலம்

வேறு எந்த தலத்திலும் இல்லாத அம்பிகையின் சிறப்பு திருநாமம்

திருவாரூர்-கும்பகோணம் பேருந்து சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள மணக்கால் அய்யம்பேட்டை என்னும் ஊரில் அமைந்துள்ளது சேஷபுரீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் அந்தப்புர நாயகி. இத்தலம் முற்காலத்தில் சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது, நான்கு (சதுர்) வேதங்களைப் படித்த வேத பண்டிதர்கள் நிறைந்த ஊர் என்பதால் இப்பெயர் ஏற்பட்டது.

சிவபெருமான் பார்வதி திருமணத்தோடு இத்தலம் தொடர்புடையது. சிவபெருமானுடன் மீண்டும் இணைவதற்காக, பார்வதி, இத்தலத்துக்கு மிக அருகில் உள்ள பெருவேளூரில் தவம் மேற்கொண்டார். இறுதியில் கரவீரம் என்னும் தலத்தில் சிவபெருமானை மணந்து கொண்டார். சிவன் மற்றும் பார்வதியின் திருமணத்தை இத்தலத்து வேத பண்டிதர்கள் நடத்தினார்கள். திருமணத்திற்குப் பிறகு, அடுத்த நாள் காலை கைலாசத்திற்குச் செல்வதற்கு முன், இத்தலத்திலுள்ள அந்தப்புரத்தில் பார்வதி தங்கினார், எனவேதான் பார்வதிதேவி அந்தப்புர நாயகி என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் எழுந்தருளி உள்ளார். அம்பிகையின் இந்த திருநாமம் தனிச்சிறப்பு உடையது. வேறு எந்த தலத்திலும் அம்பிகைக்கு இந்த திருநாமம் கிடையாது.

பிரார்த்தனை

சிவபெருமான்-பார்வதி திருமணத்துடனான தொடர்பு காரணமாக, திருமணம் செய்ய விரும்புபவர்களுக்கும், குழந்தைகளைப் பெற விரும்புபவர்களுக்கும் இது ஒரு பிரார்த்தனை தலமாகும்.

படம் உதவி : திரு. பாலகிருஷ்ணன் குருக்கள், ஆலய அர்ச்சகர்

இறைவி அந்தப்புர நாயகி

 
Next
Next

திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில்