திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவில்
ராகு – கேது தோஷம் நீக்கும் தேவாரத் தலம்
மயிலாடுதுறை – திருவாரூர் சாலையில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 7 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருப்பாம்புரம். இத்தலத்து இறைவன் சேஷபுரீஸ்வரர், பாம்புரநாதர். இறைவி பிரமராம்பிகை.
ஆதிசேஷன் வழிபட்ட தலம்
கைலாயத்தில் ஒருமுறை விநாயகர் சிவபெருமானை வழிபடும் போது, இறைவன் கழுத்திலிருந்த பாம்பு விநாயகர் தன்னையும் வணங்குவதாக எண்ணி கர்வமடைந்தது. அதனால் கோபமடைந்த சிவன் நாக இனம் முழுவதும் தன் சக்தி அனைத்தும் இழக்கும்படி சாபமிட்டார். அதனால் உலகைத் தாங்கும் ஆதிசேஷனும், இராகு, கேது மற்ற நாக இனங்களும் தங்கள் சக்தி அனைத்தும் இழந்து அல்லல் பட்டன. சாப விமோசனம் வேண்டி ஈசனைத் துதிக்க இறைவனும் மனமிரங்கி பூவுலகில் சேஷபுரி எனப்படும் திருப்பாம்புரம் தலத்தில் சிவராத்திரி நாளன்று தம்மை தொழுதால் சாப விமோசனம் கிட்டும் என அருளினார்.
அவ்வாறே ஆதிசேஷன் தலைமையில் நாகங்கள் சிவராத்திரி முதல் சாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் சாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாதரையும், மூன்றாம் சாமத்தில் திருப்பாம்புரம் பாம்புர நாதரரையும், நான்காம் சாமத்தில் நாகூர் நாகநாதரையும் வழிபட்டு சாப விமோசனம் பெற்றனர்.
விஷம் தீண்டாப் பதி
ஆதிசேஷன் வழிபட்ட கோவில் ஆதலால் இன்றும் இக்கோவிலுக்கே உரிய அதிசயமாக வாரத்தின் மூன்று தினங்களில் கோவிலின் கர்ப்ப கிரகங்களில் நாக பாம்புகள் வந்து இறைவனை தரிசிப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.ஞாயிறு, செவ்வாய், வெள்ளிகிழமைகளில் திருப்பாம்புரம் கோவிலுக்குள் மல்லிகையின் மணமோ, தாழம்பூவின் மணமோ வீசுவதாகவும் அச்சமயம் பாம்பு கோவிலுக்குள் எங்கேனும் உலாவிக் கொண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. இத்தலத்தில் பாம்புகள் யாரையும் கடிப்பது இல்லை என்கிறார்கள். விஷம் தீண்டாப் பதி என்ற சிறப்பு இத்தலத்திற்கு உள்ளது.
ராகு கேது பரிகார தலம்
திருப்பாம்புரம் ஒரு ராகு கேது நிவர்த்தி தலம். குடந்தை, நாகூர், திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, கீழப்பெரும்பள்ளம் ஆகிய நாக தோஷ பரிகார தலங்கள் அனைத்தையும் தரிசித்த பலன் திருப்பாம்புரம் ஒன்றை மட்டும் தரிசித்தாலே போதும் என்கிறது தல மகாத்மியம். ராகுவும் கேதுவும் ஏக சரீரியாக அதாவது ஓருடலாக இருந்து தன் நெஞ்சில் சிவபெருமானை வைத்து வழிபட்டதால் இத்தலம் ராகு கேது பரிகாரத் தலமாக விளங்கிகிறது.
நாகதோஷத்தால் பாதிக்கப்பட்டு புத்திர பேறின்மை மற்றும் திருமணமாகா நிலையிலிருப்பவர்கள் இங்கு வந்து பூஜைகள் செய்து வழிபட அந்த தோஷங்கள் தீரும் அதோடு வாழ்வில் இருந்து வந்த காரிய தடைகள் விலகும். ஜாதகத்தில் ராகு- கேது கிரக நிலை சரியில்லாமல் இருப்பவர்கள், அந்த கிரகங்களின் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரே நாளில் காலையில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் வழிபட்டு, மதியம் திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலிலும், மாலை திருப்பாம்புரம் கோவிலில் வழிபட்டு, இரவு நாகூர் நாகேஸ்வரர் கோவிலில் தங்களின் வழிபாட்டை முடிக்க ராகு-கேது கிரகங்களால் தீமையான பலன்கள் ஏதும் ஏற்படாமல் காக்கும்.
போதை பழக்கம் விடுபட, வழிபட வேண்டிய தலம்
போதை பழக்கம் உள்ளவர்கள் ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 - 6 ராகு காலத்தில் இத்தல இறைவனுக்கு அர்ச்சனை செய்து வழிப்பட்டால் தீய பழக்கங்களில் இருந்து விடுபடலாம். இவ்வாறு செய்து வந்தால் 264 வகையான பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.
திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவில்
எமனுக்கே பாபவிமோசனம் கிடைக்கச் செய்த தேவாரத் தலம்
திருவாரூரிலிருந்து 15 கி.மீ. தூரத்திலுள்ள தேவாரத் தலம் ஸ்ரீவாஞ்சியம். இறைவன் திருநாமம் வாஞ்சிநாதர். இறைவி மங்களநாயகி.
ஒரு சமயம் எமதர்மராஜா, எத்தனையோ நல்ல பதவிகள் இருக்கும் போது, தனக்கு மட்டும் ஏன் உயிர்களை எடுக்கும் பதவியை சிவபெருமான் கொடுத்துள்ளார் என மிகவும் வருந்தினார். திருவாரூர் சென்று தியாகராஜரிடம் தனது குறைபாட்டை தெரிவித்தார். உயிர்வதை தொழிலை செய்யும் தனக்கு பிரம்மஹத்தி தோஷம் பீடித்துள்ளதாகவும், தன்னைக் கண்டு உயிர்கள் அனைத்தும் பயம் கொள்வதாகவும் திருவாரூர் தியாகராஜ பெருமானைக் கண்டுப் புலம்பினார். அதற்கு அப்பெருமான் ஸ்ரீவாஞ்சியம் சென்று வாஞ்சிநாதரை வழிபட்டு உனது தோஷத்தில் இருந்து விடுபட்டுக் கொள் எனக் கூறினார். அவ்வாறே எமதர்மன் ஸ்ரீவாஞ்சியம் தலத்திற்கு வந்து நெடுங்காலம் கடுந்தவம் புரிந்து வாஞ்சிநாதரை வழிபட்டு தனது தோஷத்தில் இருந்து விடுபட்டார். இங்கு எமதர்மராஜன் யோக நிலையில் காட்சி தருகிறார். ஸ்ரீவாஞ்சிநாதர் இத்தலத்தில் முதலில் எமதர்மராஜனை தரிசித்த பின்னரே தன்னை வந்து பக்தர்கள் தரிசிப்பர் எனும் பெரும்பேற்றை எமதர்மனுக்கு வழங்கினார். அதன்படியே இங்கு எமதர்மனுக்கே முதல் வழிபாடு நடைபெறுகிறது.
இங்கு எமதர்மராஜன் யோக நிலையில் காட்சி தருகிறார். அதனால் இங்கு வந்து தரிசனம் செய்பவர்களுக்கு மரண பயம் நீங்கும். தெற்கு நோக்கிய சன்னதியில் எமதர்மன் நான்கு கரஙகளுடன் பாசம், கதை, சூலம் ஏந்தி இடது காலை மடித்து வலது காலைத் தொங்கவிட்டு பாதக்குறடுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இங்கு எமதர்மனுக்கு வடை மாலை சாற்றி வழிபடுவது சிறப்பு. எமதர்மனை சாந்தி செய்யும் விதத்தில், இங்கு ஆயுள் ஹோமம், சஷ்டியப்தபூர்த்தி செய்து வழிபட்டால் நீண்ட ஆயுள் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருவாரூர் தியாகராஜர் கோவில்
எமதர்மனுக்கு புதிய வேலைக் கிடைத்த தேவாரத் தலம்
பொதுவாக எல்லா சிவாலயங்களிலும் ஒரு சண்டிகேசுவரர் மட்டுமே இருப்பார். ஆனால் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் இரண்டு சண்டிகேசுவரர்கள் இருக்கிறார்கள். ஒருவர் ஆதி சண்டிகேசுவரர். மற்றொருவர் எம சண்டிகேசுவரர்.
பிறக்க முக்தி எனும் சிறப்புடையது திருவாரூர் தலம். அதனால் இத்தலத்தில் பிறந்தவரகள் அனைவரும் சிவ கணங்கள் என்னும் தகுதியைப் பெறுகிறார்கள். இக்காரணத்தினால் எமதர்மன் அவர்களை நெருங்க முடியாது. இறைவனே முக்தி பேறு தந்து அவர்களை அழைத்துச் செல்வதால், இத்தலம் முக்தித் தலம் என்றழைக்கப்படுகிறது.ஆதலால் திருவாரூரில் தனக்கு வேலை இல்லையே என்று எமதர்மன் சிவபெருமானிடம் முறையிட்டான். அவன் மனக்குறையைப் போக்குவதறகாக, சிவபெருமான் அவனுக்கு சண்டிகேசுவரர் பதவி கொடுத்தார். இக்கோவிலில் இரண்டாம் பிரகாரத்தில் எமதர்மன் ஒரு காலை ஊன்றி கையில் முகத்தைத் தாங்கி நமக்குக் காட்சி தருகிறார். எமதர்மன் இறைவனை வேண்டி, சண்டிகேசுவரர் பதவி பெற்று தனது வேலையைக் காப்பாற்றிக் கொண்டதால், எமபயமுள்ளவர்கள் இத்தலத்துக்கு வந்து வழிபட்டால் நன்மை பயக்கும்.
மணக்கால் அய்யம்பேட்டை சேஷபுரீஸ்வரர் கோவில்
அம்பிகையின் அந்தப்புரமாக விளங்கிய தலம்
வேறு எந்த தலத்திலும் இல்லாத அம்பிகையின் சிறப்பு திருநாமம்
திருவாரூர்-கும்பகோணம் பேருந்து சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள மணக்கால் அய்யம்பேட்டை என்னும் ஊரில் அமைந்துள்ளது சேஷபுரீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் அந்தப்புர நாயகி. இத்தலம் முற்காலத்தில் சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது, நான்கு (சதுர்) வேதங்களைப் படித்த வேத பண்டிதர்கள் நிறைந்த ஊர் என்பதால் இப்பெயர் ஏற்பட்டது.
சிவபெருமான் பார்வதி திருமணத்தோடு இத்தலம் தொடர்புடையது. சிவபெருமானுடன் மீண்டும் இணைவதற்காக, பார்வதி, இத்தலத்துக்கு மிக அருகில் உள்ள பெருவேளூரில் தவம் மேற்கொண்டார். இறுதியில் கரவீரம் என்னும் தலத்தில் சிவபெருமானை மணந்து கொண்டார். சிவன் மற்றும் பார்வதியின் திருமணத்தை இத்தலத்து வேத பண்டிதர்கள் நடத்தினார்கள். திருமணத்திற்குப் பிறகு, அடுத்த நாள் காலை கைலாசத்திற்குச் செல்வதற்கு முன், இத்தலத்திலுள்ள அந்தப்புரத்தில் பார்வதி தங்கினார், எனவேதான் பார்வதிதேவி அந்தப்புர நாயகி என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் எழுந்தருளி உள்ளார். அம்பிகையின் இந்த திருநாமம் தனிச்சிறப்பு உடையது. வேறு எந்த தலத்திலும் அம்பிகைக்கு இந்த திருநாமம் கிடையாது.
பிரார்த்தனை
சிவபெருமான்-பார்வதி திருமணத்துடனான தொடர்பு காரணமாக, திருமணம் செய்ய விரும்புபவர்களுக்கும், குழந்தைகளைப் பெற விரும்புபவர்களுக்கும் இது ஒரு பிரார்த்தனை தலமாகும்.
திருத்தங்கூர் வெள்ளிமலைநாதர் கோவில்
உமாதேவிக்கு மிகவும் பிடித்தமான தேவார தலம்
மகாலட்சுமி சிவபூஜை செய்த தலம்
திருவாரூரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருத்தங்கூர். இறைவன் திருநாமம் வெள்ளிமலைநாதர், ரஜதகீரிஸ்வரர். இறைவியின் திருநாமம் பெரியநாயகி.
ஒரு சமயம் உலகம் முழுக்க பிரளயம் எழும்பி கடல்நீர் பூவுலகம் முழுவதையும் மூழ்கடித்துக் கொண்டிருந்தது. இத்தலத்தில் விருப்பமாக எழுந்தருளியிருந்த உமாதேவி சிவபெருமானிடம் தனக்கு மிகவும் விருப்பமானதும், அடியார்கள் நிரம்பியுள்ளதுமான இத்தலத்தை மட்டும் பிரளயம் விழுங்காமல் காத்தருள வேண்டும் என்று விண்ணப்பித்தாள். சிவபெருமானும் உமையின் விருப்பத்திற்கிணங்க இத்தலத்தின் பெருமையை உலகறியும் பொருட்டு காத்தருளினார். அதன்படி உலகம் முழுக்க கடல் நீரால் கொள்ளப்பட்டும் இத்தலத்தில் மட்டும் தெளிந்த நீர் தேங்கி நின்றதால் இத்தலம் திருத்தேங்கூர் என்று பெயர் பெற்றது.
உமாதேவியின் விருப்பப்படி பிரளயத்தில் மூழ்காமல் இருந்த இத்தலத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட மகாலட்சுமி இத்தலத்திற்கு வந்து சிவபூஜை செய்து நிரந்தரமாக இங்கேயே தங்கினாள். திரு என்னும் லட்சுமி வந்து தங்கியதால் இத்தலத்திற்கு திருத்தங்கூர் என்ற பெயர் ஏற்பட்டது.
சிவபெருமானின் சடையை அலங்கரிக்கும் கங்காதேவி, இக்தலத்தில் சிவகங்கை தீர்த்தம் என்ற தீர்த்தத்தை உருவாக்கி, சிவபூஜை செய்து தனது பாவத்தை போக்கிக் கொண்டாள்.
திருத்தங்கூர் வெள்ளிமலைநாதர் கோவில்
நவக்கிரகங்கள் சிவலிங்கம் நிறுவி வழிபட்ட தேவாரத் தலம்
திருவாரூரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருத்தங்கூர். இறைவன் திருநாமம் வெள்ளிமலைநாதர், ரஜதகீரிஸ்வரர். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. தென்னை மரங்கள் வளம் பெற்ற ஊராதலின் 'தெங்கூர்' என்று இத்தலத்திற்கு பெயர் வந்தது. அதற்கேற்ப தென்னை மரமே இத்தலத்தின் தலவிருட்சமாகும்.
ஒரு சமயம் சுக்கிரன் மகாவிஷ்ணுவின் சாபம் பெற்று ஒற்றைக் கண்ணுடன் மறைந்து வாழ்ந்து வந்தார். மகாவிஷ்ணுவின் சாபத்திலிருந்து விடுபட சிவனை வழிபடுவதே சிறந்தது என்று எண்ணி சுக்கிரன் இத்தலம் வந்து சிவபெருமானை ஒரு லிங்கம் நிறுவி வழிபட்டார். வெள்ளிமலைநாதர், அம்பாள் பெரியநாயகியுடன் சுக்கிரனுக்கு காட்சி தந்து வேண்டய வரத்தை அருளினார். சுக்கிரனுக்கு அருள் கிடைத்ததைக் கண்ட மற்ற எட்டு கிரகங்களும் தங்களது பெயர்களில் சிவலிங்கம் நிறுவி வழிபட்டனர். பலவித அளவுகளில் அந்தந்த நவக்கிரகங்களின் பெயர்களாலேயே வழங்கப்படும் ஒன்பது சிவலிங்கங்களையும் தரிசித்து வழிபடுவோர் சகல நவக்கிரக தோஷங்களில் இருந்தும் விடுபடுவர் என்பது ஐதீகம்.
திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோவில்
சனி பகவான் பொங்கு சனீஸ்வரராக இரண்டாவது அவதாரம் எடுத்த தலம்
கைகளில் ஏர் கலப்பை, காகக் கொடி ஏந்திய சனி பகவானின் அரிய தோற்றம்
திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில், 22 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருக்கொள்ளிக்காடு. இறைவன் திருநாமம் அக்னீஸ்வரர். இறைவியின் திருநாமம் பஞ்சின் மெல்லடியம்மை, மிருதுபாத நாயகி. சனி பகவானின் தந்தையான சூரிய பகவான் இத்தலத்து இறைவன் அக்னீஸ்வரரை வழிபட்டு தோஷ நிவர்த்தி பெற்றான்.
சனி பகவான் உலகத்திற்கே நீதிபதியாக இருந்து, பாரபட்சம் பார்க்காமல் நமது பாவ புண்ணிய வரவு செலவு கணக்குப்படி, நமக்கு நற்பலன்களையோ அல்லது தண்டனையோ அளிப்பார். நமது பூர்வ ஜென்ம ஜென்ம புண்ணியம் மிகுந்திருந்தால் அளவற்ற நன்மைகளையும், சிறந்த முன்னேற்றத்தையும் அளிப்பார். செய்த பாவம் அதிகமாக இருந்தால், நாம் செய்யும் தவறுகளுக்கு தகுந்தபடி தண்டனை கொடுப்பார்.இப்படி கொடுக்கப்படும் தண்டனை மூலம் நமது பாவத்தைப் போக்கி புண்ணியம் கிடைத்திட வழிவகுப்பார்.ஆனால் நமது பாவத்தினால் ஏற்பட்ட துன்பங்களுக்கு சனி தோஷம் தான் காரணம் என்று சனிபகவானை குறிப்பிடுவது அவருக்கு மிகுந்த மன உளைச்சலை கொடுத்தது.
சனி பகவான் தனது அவப் பெயரை போக்கிக் கொள்வதற்காக, தனது தந்தை சூரிய பகவான் வழிபட்ட இத்தலத்திற்கு வந்து சிவபூஜை செய்தார். சிவன் அருளால் சனி பகவான் இத்தலத்தில் அனுக்கிரக மூர்த்தியாக, இரண்டாவது அவதாரம் எடுத்தார். இங்கு நற்பலன்களை மிகுந்து அளிப்பதால் அவருக்கு பொங்கு சனீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. இந்த பொங்கு சனீஸ்வரர் நிறைந்த செல்வங்களையும், நீண்ட ஆயுளையும் தந்து அருளுகின்றார்
இங்கு பொங்கு சனீஸ்வரர் தனி சன்னதியில் கைகளில், ஏர் கலப்பை, காகத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி, அபய ஊரு முத்திரையுடன் காட்சி தருகிறார். உழைப்பின் பெருமையை உணர்த்துவதற்காக அவர் தனது கையில் ஏர் கலப்பையை ஏந்தி இருக்கிறார். இப்படி கைகளில் ஏர் கலப்பை, காகக் கொடி ஏந்திய சனி பகவானை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
நவக்கிரக மண்டலத்தில் சனியின் திசை மேற்கு. அதே போல் இத்தலமும் மேற்கு பார்த்து அமைந்துள்ளது. சனி சம்பந்தப்பட்ட தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து அக்னீஸ்வரரை வழிபாடு செய்து, சனி பகவானை வழிபட்டால் தோஷம் விலகும் என்பது ஐதீகம்.
திருவாரூர் தியாகராஜர் கோவில்
திருவாரூர் கமலாம்பிகை
தவக்கோலத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் கமலாம்பிகை
திருவாரூர் கமலாம்பிகை, முப்பெரும் தேவியரும் இணைந்த அம்சமாகும். கமலாம்பிகை திருநாமத்தில் உள்ள க- கலைமகளையும், ம- மலைமகளையும், ல- அலைமகளையும் குறிக்கின்றது. இந்த அம்பிகையின் சிறப்புகளாலேயே, திருவாரூருக்கு ஸ்ரீபுரம், கமலாபுரி, கமலா நகரம், கமலாலயம் என்ற பெயர்களும் உண்டு.
கமலாம்பாள் ஆலயம், அம்பிகையை பெண்ணின் ஐந்து பருவ நிலைகளில் வைத்து வணங்கப்படும் ஐந்து அக்ஷித்தலங்களுள், இளம் பெண் பருவத்தினைக் குறிக்கின்றது.
திருவாரூர் தியாகராஜர் கோவிலில், தனிக்கோயில் கொண்டு, கமலாம்பிகை அருள்பாலிக்கிறார். அர்த்த மண்டபத்தில் ராஜமாதங்கியும், நின்றகோலத்தில் சாமரம் வீசும் அலைமகள், கலைமகள் சிற்ப வடிவில் காட்சியளிக்கிறார்கள். சங்கநிதி, பதுமநிதியே இங்கு துவார பாலகர்களாக இருக்கிறார்கள்.
தவக்கோலத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் கமலாம்பிகை
கருவறையில் கமலாம்பிகை ஆத்ம தத்துவம், வித்யா தத்துவம், சிவ தத்துவம் என்ற மூன்றடுக்கு பீடத்தின் மேல் அமர்ந்துள்ளாள். அம்பிகை, இந்த மூன்றடுக்கு பீடத்தின் மேல் இடக்கால் மீது வலக்காலை அமர்த்தி, யோகினியாக தவக்கோலத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.
இடக்கரம் ஊரு ஹஸ்தமாய் விளங்க, நீலோத்பல மலரை வலக்கரத்தில் பற்றி, வளர்பிறை சந்திரனையும் கங்கையையும் சிரசில் கரண்ட மகுடத்தில் தரித்து, தவ யோக நிலையில், அமர்ந்த கோலத்தில் காட்சித் தருகிறார்.
தர்மம் தழைத்தோங்கவும், சரஸ்வதி, சசிதேவி எனும் இந்திராணி, மகாலக்ஷ்மி, பூதேவி போன்ற தெய்வங்களும் தேவதைகளும் சர்வ மங்கள செளபாக்கியங்களுடன் வாழவும், சகல உயிர்கள் அனைத்தும் இன்புறவுமே கமலாம்பிகை தவக்கோலம் பூண்டு இருக்கிறார்.
இக்கோவிலில் உள்ள அக்ஷர சக்தி பீடம் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இப்பீடத்தின் பிரபையில் முன்னும், பின்னும் 51 அக்ஷரங்களும், பீடத்தின் மத்தியில் ஹ்ரீம் எனும் புவனேஸ்வரி பீஜமும் பொறிக்கப்பட்டுள்ளன
லலிதா ஸஹஸ்ரநாமம் பல இடங்களில் கமலாம்பிகையை துதித்துப் போற்றுகின்றது. ஸ்ரீவித்யா எனும் உபாசனையின் யந்திர நாயகி இத்தேவியே ஆவார். லலிதா சகஸ்ரநாமத்தின் மொத்த வடிவமாகவும், ஸ்ரீ வித்யா உபாசனையின் யந்திர நாயகியாகவும், கமலாம்பிகை போற்றப்படுகிறாள். முத்துசுவாமி தீட்சிதர் அன்னை கமலாம்பாளைத் துதித்து நவாவரண கீர்த்தனைகளை பாடியிருக்கிறார்.
இங்குள்ள அம்பிகையை தரிசித்தால் பாரெங்கும் உள்ள 51 சக்தி பீடங்களை தரிசித்த முழு பலனும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சக்தி பீடங்களில், கமலாம்பிகை அருள் பாலிக்கும் திருவாரூர், கமலை பீடம் ஆகும்.
மானந்தகுடி ஏகாம்பரேசுவரர் கோவில்
நவக்கிரகங்கள் மனைவியருடன் எழுந்தருளி இருக்கும் அரிய காட்சி
நவக்கிரகங்கள் ஒவ்வொருவருக்கும் திருவாசி இருக்கும் அபூர்வ அமைப்பு
திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்ற ஊரில் இருந்து, 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மானந்தகுடி. இறைவன் திருநாமம் ஏகாம்பரேசுவரர். இறைவியின் திருநாமம் காமாட்சி அம்மன். ஆஞ்சநேயர் இத்தலத்தில் வழிபட்டு சாப விமோசனம் பெற்றதால், இத்தலம் 'அனுமன் ஆனந்த குடி' என்றழைக்கப்பட்டு, பிற்காலத்தில் 'மானந்தகுடி' என்று மருவியது.
இக்கோவிலில், ஆஞ்சநேயர் சன்னதிக்கு நேர் எதிரே நவக்கிரக சன்னதி உள்ளது. நவக்கிரகங்கள் மனைவியருடன் இங்கே எழுந்தருளி இருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். மேலும் இந்த நவக்கிரகங்கள் ஒவ்வொருவருக்கும், தனித்தனியாக திருவாசி அமைந்திருப்பது மேலும் ஒரு சிறப்பாகும்.
ஆஞ்சநேயர், நவக்கிரகங்களை தனது வாலில் கட்டியிருப்பதாக ஐதீகம். ஆஞ்சநேயரது நேரடிப்பார்வையில் நவக்கிரகங்கள் குடும்பநிலையில் இருப்பதால், இங்கு கிரக தோஷங்கள் நிவர்த்தியாவதாக நம்பிக்கை இருக்கிறது. ஜாதக, கிரக தோஷம் உள்ளவர்கள் நவக்கிரக சன்னதியில் மட்டை தேங்காய் கட்டி வேண்டிக் கொள்கின்றனர்.
தேவர் கண்ட நல்லூர் குமாரசாமி கோவில்
திருமணத்தடை, புத்திரபாக்கியம், பதவி உயர்வு உள்ளிட்டவைக்கான பரிகார தலம்
திருவாரூரில் இருந்து 8 கி.மீ. தொலைவில் குடவாசல் தாலுகாவில் அமைந்துள்ளது தேவர் கண்ட நல்லூர் குமாரசாமி கோவில். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில். இத்தலத்தில் தேவர்கள் இருப்பதை முனிவர்கள் கண்டு வணங்கியதால் தேவர்களை கண்ட ஊர் என்பதே பின்னாளில் தேவர் கண்ட நல்லூர் என மருவியது.
இக்கோவில் உருவானதற்கு பின்னணியில் ஒரு புராண வரலாறு உண்டு. முன்னர் காலத்தில் இப்பகுதியை ஆண்ட வல்லால மகாராஜன் என்ற அரசனது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். அப்போது அவள் வயிற்றில் வளர்ந்த குழந்தை மண்ணில் பிறந்து விழுந்தால் நாட்டிற்கு மிகுந்த பாதிப்பு ஏற்படும் என்பதால் குழந்தை கீழே விழாமல் குறிப்பாக உயிருடன் பிறக்காமல் இருக்க வேண்டும் என தேவர்கள் முனிவர்கள் பார்வதி தேவியிடம் வரம் கேட்டனர். அப்போது அந்த குழந்தை உயிருடன் பிறக்காமல் அழிக்க மருத்துவச்சி வேடம் பூண்டு பார்வதி தேவி நடந்து வருகிறார். அப்போது வல்லால மகாராஜன் அவரை அழைத்து வந்து தன்மனைவிக்கு மருத்துவம் பார்க்க கேட்கிறான். இதை சாதகமாக பயன்படுத்தி குழந்தையை அழித்து, ஒரு சொட்டு ரத்தம் கூட கீழே விழாமல் பார்வதி தேவி காத்தார். தன் பிள்ளையை மருத்துவச்சி கொன்று விட்டார் என்ற தகவலறிந்த வல்லால மகாராஜன் வாளால் வெட்ட முயன்ற நேரத்தில் ஆக்ரோஷமாக மாறிய பார்வதி தேவி அந்த மகாராஜா தலையை வெட்டி விடுகிறார். பார்வதி தேவியாரின் ஆக்ரோஷத்தை போக்க பெருமாள் பெத்தரான்ய ஈசனாகவும், ஈசன் உத்தராண்ட ராயராகவும், பல்வேறு தேவதைகள் உருமாற்றம் கொண்டு தேவியரின் ஆக்ரோஷத்தை தீர்த்தார்கள். இருப்பினும் தேவியார் ஆக்ரோஷம் அடங்காத நிலையில் முருகன் நேரில் சென்று தாயாரிடம் ஆக்ரோஷம் தீர்த்ததால் பின்நாளில் இத்தலத்தில் குமரன் கோவில் அமைத்துள்ளனர்.
திருமணத்தடை, புத்திரபாக்கியம், பதவி உயர்வு உள்ளிட்டவைக்கு சிறந்த பரிகார தலமாக, இப்பகுதியில் இந்த கோவில் விளங்குகின்றது.
மானந்தகுடி ஏகாம்பரேசுவரர் கோவில்
சனகாதி முனிவர்களுடனும், சப்த ரிஷிகளுடனும் இருக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி
திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்ற ஊரில் இருந்து, 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மானந்தகுடி. இறைவன் திருநாமம் ஏகாம்பரேசுவரர். இறைவியின் திருநாமம் காமாட்சி அம்மன். முற்காலத்தில் இத்தலம் அனுமன் ஆனந்த குடி என்று அழைக்கப்பட்டது. அதுவே பின்னர் மானந்த குடி என்றானது.
இக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தி, மற்ற தலங்களை விட மிகவும் விசேஷமான கோலத்தில் காட்சி அளிக்கிறார். இவரது பீடத்தில் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நான்கு சீடர்களும், ரிஷிகளும் இருக்கின்றனர். மேலும் நந்தியும் இந்த பீடத்தில் இடம் பெற்றிருக்கின்றது. தட்சிணாமூர்த்தியின் இத்தகைய கோலத்தை மற்ற தலங்களில் நாம் காண்பது அபூர்வம்.
மானந்தகுடி ஏகாம்பரேசுவரர் கோவில்
ஆஞ்சநேயர் மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாடிய தலம்
வாழ்வில் மங்களம் அருளும் மங்கள ஆஞ்சநேயர்
திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்ற ஊரில் இருந்து, 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மானந்தகுடி. இறைவன் திருநாமம் ஏகாம்பரேசுவரர். இறைவியின் திருநாமம் காமாட்சி அம்மன். முற்காலத்தில் இத்தலம் அனுமன் ஆனந்த குடி என்று அழைக்கப்பட்டது. அதுவே பின்னர் மானந்த குடி என்றானது. இதன் பின்னணியில் ஒரு புராண வரலாறு உள்ளது.
கார்த்தவீரியன் என்பவன் சிறந்த சிவபக்தன். ஒருசமயம் அவன் சிவபூஜை செய்து கொண்டிருந்தபோது, ஆஞ்சநேயர் அவனது பூஜைக்கு தொந்தரவு செய்தார். இதனால் கோபமடைந்த கார்த்தவீரியன், ஆஞ்சநேயரை சபித்துத் விட்டான். தவறை உணர்ந்த ஆஞ்சநேயர், விமோசனம் வேண்டி இத்தலத்திற்கு வந்தார். சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். சிவன் அவருக்கு அம்பிகையுடன் காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தருளினார். அந்த மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாடினார் ஆஞ்சநேயர். எனவே இத்தலம் 'அனுமன் ஆனந்த குடி' என்றழைக்கப்பட்டு, பிற்காலத்தில் 'மானந்தகுடி' என்று மருவியது.
இக்கோவிலில் ஆஞ்சநேயருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இவரிடம் வேண்டிக்கொண்டால் வாழ்வில் மங்களம் உண்டாகும் என்பது நம்பிக்கை . எனவே இவரை, 'மங்கள ஆஞ்சநேயர்' என்றே அழைக்கிறார்கள். இக்கோவிலில் ஆஞ்சநேயருக்கு, அமாவாசை மற்றும் மூல நட்சத்திரத்தன்று சிறப்பு பூஜைகள் நடக்கிறது. தெரியாமல் தவறு செய்து வருந்துபவர்கள், மன அமைதி கிடைக்க இங்கு வேண்டிக் கொள்கிறார்கள்.
திருவாரூர் தியாகராஜர் கோவில் - திருவாரூர் அரநெறி
தஞ்சாவூர் பெரிய கோவில் விமானத்துக்கு மாதிரியாக திகழ்ந்த சன்னதி விமானம்
நமிநந்தி அடிகள் நாயனாருக்காக, சிவபெருமான் தண்ணீரில் விளக்கெரிய செய்த அற்புதம்
தேவாரப் பாடல் பெற்ற 276 தலங்களில், மூன்று தலங்களில் மட்டும் தான் இரண்டு சன்னதிகள் தனித்தனியே தேவார பாடல்கள் பெற்றுள்ளன. அவை திருவாரூர், திருப்புகலூர், திருமீயச்சூர் ஆகியவை ஆகும். திருவாரூர் தியாகராஜர் கோவிலில் புற்றிடம் கொண்ட நாதர் சன்னதியும், அசலேசுவரர் சன்னதியும் தனித்தனியே தேவாரப் பாடல்களில் போற்றப்பட்டுள்ளன. ஒரு மன்னருடைய வேண்டுகோளின்படி இறைவன் சலியாது எழுந்தருளி இருப்பதால், அசலேசுவரர் எனப் பெயர் பெற்றார்.
இந்த அசலேசுவரர் சன்னதி தியாகராஜர் கோவில் வளாகத்தின் அக்னி மூலை (தென்கிழக்கு) பகுதியில் அமைந்துள்ளது. அசலேசுவரர் கருவறை, அர்த்த மண்டபம், வெளியிலுள்ள கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகிய பகுதிகளே திருவாரூர் அரநெறி என்ற தேவாரத் தலமாக கருதப்படுகிறது. இந்த சன்னதியின் விமானம் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் கோபுரத்தை போன்ற கட்டட அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த விமானத்தின் கட்டிட வடிவமைப்பை மாதிரியாக கொண்டுதான், பிரகதீஸ்வரர் கோவில் விமானம் அமைக்கப்பட்டது. அசலேசுவரர் கோயில் மூலஸ்தானத்தின் நிழல் கிழக்கு திசையில் மட்டும் விழும். மற்ற திசைகளில் விழாது.
நமிநந்தியடிகள் நாயனார் என்பவர், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். சிவபெருமானின் தீவிர பக்தர். அனுதினமும் திருவாரூர் கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடுவார்.
ஒரு நாள் அவர் இக்கோவிலுக்குச் சென்றபோது, அதில் எண்ணெய்/நெய் இல்லாததால் விளக்குகள் அணையப் போவதைக் கண்டார். தொலைவில் வசிப்பதால், விளக்கு எரிய வைக்க எண்ணெய்க்காக பக்கத்து வீடுகளை அணுகினார். அக்கம்பக்கத்தினர், வித்தியாசமான சமய நம்பிக்கை கொண்டவர்கள். உங்களுடைய சிவபெருமான் பெரிய கடவுளாக இருந்தால் இந்த விளக்குகளை தண்ணீர் கொண்டு எரிய வைக்க முடியும் என்று கேலி செய்தார்கள். ஏமாற்றமடைந்த நமிநந்தியடிகள் மீண்டும் கோவிலுக்குச் சென்று, இறைவன் முன் கதறி அழுதார். சிவபெருமான், நமிநந்தியடிகள் முன் தோன்றி, கோவில் குளத்திலிருந்து தண்ணீரை எடுத்து விளக்கேற்றச் சொன்னார். அடிகளார் அவ்வாறு தண்ணீரை நெய்க்குப் பதிலாகப் பயன்படுத்தியபோது, முன்னெப்போதையும் விட கோவில் விளக்குகள் பிரகாசித்தன. இச்சம்பவத்தையும், அடிகளாரின் பக்தியையும் கேள்விப்பட்ட சோழ மன்னன், அடிகளாரை ஆலய நிர்வாகத் தலைவராக்கியதுடன், இக்கோவிலுக்கு ஆதரவாக பல மானியங்களையும் வழங்கினார்.
நமிநந்தி அடிகள் நாயனார் இத்தலத்தில் தண்ணீரால் விளக்கேற்றிய செய்தியை தனது தேவாரத்தில் திருநாவுக்கரசர் குறிப்பிட்டுள்ளார்.
திருப்பனையூர் சௌந்தரேஸ்வரர் கோவில்
துணையிருந்த விநாயகர் (கரிகால சோழன், தன் அரசினை மீட்க உதவிய விநாயகர்)
திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் உள்ள ஆண்டிப்பந்தலில் இருந்து கிழக்கே 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருப்பனையூர். திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 145-வது தலம் இதுவாகும். இறைவன் திருநாமம் சௌந்தரேஸ்வரர், அழகியநாதர். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. இத்தலம் தாலவனம், தளவனேஸ்வரம், இராஜேந்திர சோழப்பனையூர் எனப் பழங்காலத்தில் அழைக்கப்பட்டது. பனைமரங்களை மிகுதியாக கொண்ட மணற்பாங்கான ஊர் என்பதால் இதற்கு ."தாலவனம் " என்ற பெயர் வந்தது. தாளம் என்பதற்கு பனை என்ற பொருள். இக்கோவில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
இக்கோவிலில் தனிச்சன்னதியில் துணை இருந்த விநாயகர் எழுந்தருளி இருக்கிறார். இந்த விநாயகர் இப்பெயரை பெறுவதற்கு பின்னால், சோழ நாட்டு வரலாற்று நிகழ்ச்சி ஒன்று உள்ளது.
முற்காலச் சோழர்களில் மிகவும் புகழ் பெற்றவன் கரிகாலச் சோழன். இவன் சிறியவனாக இருக்கும்போது தாயாதிகளின் சூழ்ச்சியால் அவனது தந்தை கொல்லப்பட்டார். தந்தையை கொன்ற தாயாதிகள் கரிகாலனையும் கொன்று சோழ நாட்டைக் கைப்பற்ற முனைந்தபோது. அவனது தாய்மாமன் 'இரும்பிடர்த்தலையார்' என்னும் சங்கப் புலவர், பிறர் அறியாமல், குழந்தையையும் தாயையும் பனையூருக்கு அனுப்பிவைத்தார். அரசி, தன் மகனுடன் இவ்வூருக்கு வந்து, இங்கு அமைந்துள்ள சௌந்தரேஸ்வரர் கோவிலில் அடைக்கலம் புகுந்து, இத்தலத்து விநாயகரிடம் முறையிட, விநாயகரின் துணையால் கரிகாலன் எட்டு ஆண்டுகள் இத்தலத்தில் பாதுகாப்பாக இருந்தான்.
பங்காளிகளுக்குப் பயந்து தன் தாயோடு இளவயதில் இவ்வூரில் தலைமறைவாகத் தங்கி வளர்ந்து வந்த கரிகால் சோழனுக்குத் துணையாய் இருந்து அருளி அவனைப் பேரரசனாக்கினார். கரிகாலச் சோழனுக்குத் துணையிருந்ததனால் இத்தல விநாயகர் 'துணையிருந்த விநாயகர்' என்னும் பெயர் பெற்றார்.
இக்கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் திருமேனி புதுமையான அமைப்பாக - இடக்கையில் பழம் ஒன்றை ஏந்திய வண்ணம் இருப்பது ஒரு அரிய காட்சியாகும்.
பூந்தோட்டம் அகத்தீஸ்வரர் கோவில்
12 ராசிகள், நந்தி பகவான் அமைந்த பீடத்தின் மேல் எழுந்தருளிருக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி
தட்சிணாமூர்த்திக்கு மேலே விதானத்தில் விநாயகர் இருக்கும் சிறப்பு
திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில், திருவாரூரில் இருந்து 21 கி.மீ தொலைவில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரில் அமைந்துள்ளது அகத்தீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் தர்மசவர்த்தினி.
இந்தக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தி மிகவும் சிறப்புக்குரியவர். இவருக்கு ராசி மண்டல குருபகவான் என்ற பெயரும் உண்டு. அவர் தெற்கு முகம் நோக்கி கும்ப ராசியைப் பீடமாகக் கொண்டு வீற்றிருக்கிறார். இவர் அமர்ந்திருக்கும் பீடத்தில் 12 ராசி சின்னங்களும், அதற்கு மேல் நந்தி பகவானும் இடம் பெற்றிருக்கிறார்கள். தட்சிணாமூர்த்தி, முழந்தாளிட்ட நிலையில் இருக்கும் நந்தி பகவானின் மேல் தனது இடது கையை வைத்த வண்ணம் காட்சி அளிக்கிறார்.
வழக்கமாக தட்சிணாமூர்த்தி சனகாதி முனிவர்களுடன் இருப்பார். ஆனால் அவர்களுக்கு பதிலாக இங்கு, அகத்திய முனிவரும், கோரக்க சித்தரும் உடன் இருப்பது ஒரு வித்தியாசமான தோற்றமாகும். தட்சிணாமூர்த்திக்கு மேலே விதானத்தில் விநாயகர் எழுந்தருளி இருக்கிறார். இப்படி விநாயகர் தட்சிணாமூர்த்தியின் மேலே எழுந்தருளி இருப்பது ஒரு அரிய காட்சியாகும்.
தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் இருக்கும் கோலம் வேறு எந்த கோவிலிலும் நாம் காண முடியாத அரிய காட்சியாகும்
இக்கோவிலில் தினமும் குரு ஹோரையின் போது சிறப்பு பூஜைகள் நடைபெறும். இக்கோவில் ஆலங்குடி குரு பரிகார தலத்துக்குச் சமமானது. இந்த ராசி மண்டல குருபகவானை பிரதோஷ காலத்தில் வழிபட சகல விதமான நன்மைகள் கிடைக்கும். இவரை வணங்கினால் கிரகப்பெயர்ச்சிகள் மூலம் ஏற்ப்படும் தீமைகளில் இருந்து விடுபடலாம். ஜோதிட ரீதியாக குரு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
குரு பெயர்ச்சியின் போது, அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரக்காரர்களுக்கும் சிறப்பு ஹோமங்களும், பரிகார பூஜைகளும் இங்கு நடத்தப்படுகின்றன.
அம்பல் பிரம்மபுரீசுவரர் கோவில்
மூலவருக்கு பின்புறம் சோமாஸ்கந்தமூர்த்தி அமைந்திருக்கும் அரிய காட்சி
மயிலாடுதுறை - திருவாரூர் சாலை மார்க்கத்தில் 23 கி.மீ. தொலைவில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தேவார தலம் அம்பல் பிரம்மபுரீசுவரர் கோவில். இத்தலத்திற்கு திருஅம்பர்ப் பெருந்திருக்கோயில் என்ற பெயரும் உண்டு. இறைவியின் திருநாமம் பூங்குழல்நாயகி, சுகந்த குந்தளாம்பிகை.
அம்பன், அம்பரன் என்ற இரு அசுரர்கள் இத்தல இறைவனை பூசித்து இறவா வரம் பெற்றனர். அவர்கள் வழிபட்டதால் இத்தலம் அம்பர் எனப் பெயர் பெற்றது. பிரம்மா, இத்தல இறைவனை வழிபட்டு தான், அன்ன வடிவம் பெற்ற சாபத்தை நீங்க பெற்றார். அதனால் இத்தல இறைவனுக்கு பிரம்மபுரீசுவரர் என்ற திருநாமம் ஏற்பட்டது. நாயன்மார்களில் ஒருவரான சோமாசிமாற நாயனார் அவதரித்த திருத்தலம் இது.
பொதுவாக சிவாலயங்களில், சிவபெருமான் கருவறையில் லிங்க வடிவில் எழுந்தருளி இருப்பார். சில தலங்களில் சிவபெருமானும், பார்வதியும் மூலவருக்கு பின்புறம் திருமணக் கோலத்தில் எழுந்தருளி இருப்பார்கள். இத்தலத்தில், கர்ப்ப கிரகத்தில் சுயம்பு மூர்த்தியாக விளங்கும் பிரம்மபுரீசுவரருக்குப் பின்னால், சோமாஸ்கந்தமூர்த்தி (சிவன் + முருகன் + பார்வதி) அமைந்திருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இத்தகைய காட்சியை நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாது.
திருவாரூர் தியாகராஜர் கோவில்
திருவாரூர் கமலாம்பிகை
திருவாரூர் கமலாம்பிகை, முப்பெரும் தேவியரும் இணைந்த அம்சமாகும். கமலாம்பிகை திருநாமத்தில் உள்ள க- கலைமகளையும், ம- மலைமகளையும், ல- அலைமகளையும் குறிக்கின்றது. இந்த அம்பிகையின் சிறப்புகளாலேயே, திருவாரூருக்கு ஸ்ரீபுரம், கமலாபுரி, கமலா நகரம், கமலாலயம் என்ற பெயர்களும் உண்டு.
திருவாரூர் தியாகராஜர் கோவிலில், தனிக்கோயில் கொண்டு, கமலாம்பிகை அருள்பாலிக்கிறார். கமலாம்பாள் ஆலயம், அம்பிகையை பெண்ணின் ஐந்து பருவ நிலைகளில் வைத்து வணங்கப்படும் ஐந்து அக்ஷித்தலங்களுள், இளம் பெண் பருவத்தினைக் குறிக்கின்றது. கருவறையில் கமலாம்பிகை, மூன்றடுக்கு பீடத்தின் மேல் இடக்கால் மீது வலக்காலை அமர்த்தி, இடக்கரம் ஊரு ஹஸ்தமாய் விளங்க, நீலோத்பல மலரை வலக்கரத்தில் பற்றி, வளர்பிறை சந்திரனையும் கங்கையையும் சிரசில் கரண்ட மகுடத்தில் தரித்து, தவ யோக நிலையில், அமர்ந்த கோலத்தில் காட்சித் தருகிறார். தர்மம் தழைத்தோங்கவும், சரஸ்வதி, சசிதேவி எனும் இந்திராணி, மகாலக்ஷ்மி, பூதேவி போன்ற தெய்வங்களும் தேவதைகளும் சர்வ மங்கள செளபாக்கியங்களுடன் வாழவும், சகல உயிர்கள் அனைத்தும் இன்புறவுமே கமலாம்பிகை தவக்கோலம் பூண்டு இருக்கிறார். இக்கோவிலில் உள்ள அக்ஷர சக்தி பீடம் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இப்பீடத்தின் பிரபையில் முன்னும் பின்னும் 51 அக்ஷரங்களும், பீடத்தின் மத்தியில் ஹ்ரீம் எனும் புவனேஸ்வரி பீஜமும் பொறிக்கப்பட்டுள்ளன
லலிதா ஸஹஸ்ரநாமம் பல இடங்களில் கமலாம்பிகையை துதித்துப் போற்றுகின்றது. ஸ்ரீவித்யா எனும் உபாசனையின் யந்திர நாயகி இத்தேவியே ஆவார். முத்துசுவாமி தீட்சிதர் அன்னை கமலாம்பாளைத் துதித்து நவாவரண கீர்த்தனைகளை பாடியிருக்கிறார்.
சக்தி பீடங்களில், கமலாம்பிகை அருள் பாலிக்கும் திருவாரூர், கமலை பீடம் ஆகும்.
திருச்சேறை சாரநாத பெருமாள் கோவில்
பெருமாளுக்கு மிகவும் பிரியமான திவ்ய தேசம்
காவிரியில் 108 முறை நீராடிய பலன் தரும் தலம்
கும்பகோணம் - திருவாரூர் சாலையில் 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திவ்யதேசம், திருச்சேறை. மூலவரின் திருநாமம் சாரநாதப் பெருமாள். தாயாரின் திருநாமம் சாரநாயகித் தாயார், பஞ்சலக்ஷ்மித் தாயார். இத்தலத்து மண் மிகவும் சத்து (சாரம்) நிறைந்ததால், இத்தலத்தின் மூலவர் சாரநாதப் பெருமாள் என்று அழைக்கப்பட்டு இத்தலமும் திருச்சாரம் என்று பெயர் பெற்றது. இதுவே காலப்போக்கில் மருவி திருச்சேறை ஆனது. தனக்கு மிகவும் பிரியமான க்ஷேத்ரம் என்று திருமாலால் அருளப்பட்ட தலம் இது. இத்தலத்து தீர்த்தம் சார தீர்த்தம். இந்தப் புஷ்கரணியின் மேற்குக் கரையில், காவிரித்தாய், ஸ்ரீபிரம்மா, அகத்தியமுனி ஆகியோருக்குச் சந்நிதிகள் அமைந்துள்ளன.
இத்தலத்தில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி என்று 5 தேவியருடன் அருள்பாலிக்கிறார். மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு இடது பக்கம் காவிரித் தாய் காட்சி அளிக்கிறாள். இதற்கான பின்னணியை தல வரலாறு விவரிக்கின்றது.
ஒரு முறை காவிரித் தாய், திருமாலிடம், கங்கைக்கு கிடைக்கும் பெருமை தனக்கும் கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து சார புஷ்கரிணியில் மேற்கு கரை அரச மரத்தடியில் தவம் இருந்தாள். காவிரித் தாயின் தவத்தை மெச்சி, திருமால் ஒரு குழந்தையின் வடிவில் காவிரித்தாயிடம் வந்து, அவளின் மடியில் அமர்ந்தார். தனக்கு இந்த பெருமை மட்டும் போதாது என்று காவிரித் தாய் கூறியதும், கருட வாகனத்தில் சங்கு சக்கரதாரியாக ஐந்து லட்சுமிகளுடன் தோன்றி திருமால் அருள்பாலித்தார். மேலும் வேண்டும் வரம் அளிப்பதாகவும் உறுதி அளித்தார். காவிரித் தாய் திருமாலிடம், 'தாங்கள் எப்போதும் இதே கோலத்தில் இத்தலத்தில் அருள்பாலிக்க வேண்டும். மேலும் கங்கையிலும் மேன்மையை எனக்கு தந்தருள வேண்டும்' என்று வேண்டினாள். திருமாலும் அவ்வண்ணமே செய்தார். அன்று முதல், கங்கைக்கு நிகராகக் காவிரியும் போற்றப்படலானாள்.
காவிரித் தாய்க்கு பெருமாள் காட்சியளித்த தைமாதம் பூச நட்சத்திரம், இங்கே விமரிசையாகக் கொண்டாடப்பெறுகிறது.
திருச்சேறை பெருமாளை ஒருமுறையேனும் வழிபட்டால், காவிரியில் 108 முறை நீராடிய பலன் கிடைக்கும் என்றும், நம் பாவங்களெல்லாம் தொலையும் என்றும் ஆச்சார்யர்கள் சொல்கிறார்கள்.
மணக்கால் அய்யம்பேட்டை சேஷபுரீஸ்வரர் கோவில்
அம்பிகையின் அந்தப்புரமாக விளங்கிய தலம்
திருவாரூர்-கும்பகோணம் பேருந்து சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள மணக்கால் அய்யம்பேட்டை என்னும் ஊரில் அமைந்துள்ளது சேஷபுரீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் அந்தப்புர நாயகி. இத்தலம் முற்காலத்தில் சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது, நான்கு (சதுர்) வேதங்களைப் படித்த வேத பண்டிதர்கள் நிறைந்த ஊர் என்பதால் இப்பெயர் ஏற்பட்டது.
சிவபெருமான் பார்வதி திருமணத்தோடு இத்தலம் தொடர்புடையது. சிவபெருமானுடன் மீண்டும் இணைவதற்காக, பார்வதி, இத்தலத்துக்கு மிக அருகில் உள்ள பெருவேளூரில் தவம் மேற்கொண்டார். இறுதியில் கரவீரம் என்னும் தலத்தில் சிவபெருமானை மணந்து கொண்டார். சிவன் மற்றும் பார்வதியின் திருமணத்தை இத்தலத்து வேத பண்டிதர்கள் நடத்தினார்கள். திருமணத்திற்குப் பிறகு, அடுத்த நாள் காலை கைலாசத்திற்குச் செல்வதற்கு முன், இத்தலத்திலுள்ள அந்தப்புரத்தில் பார்வதி தங்கினார், எனவேதான் பார்வதிதேவி அந்தப்புர நாயகி என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் எழுந்தருளி உள்ளார். அம்பிகையின் இந்த திருநாமம் தனிச்சிறப்பு உடையது. வேறு எந்த தலத்திலும் அம்பிகைக்கு இந்த திருநாமம் கிடையாது.
பிரார்த்தனை
சிவபெருமான்-பார்வதி திருமணத்துடனான தொடர்பு காரணமாக, திருமணம் செய்ய விரும்புபவர்களுக்கும், குழந்தைகளைப் பெற விரும்புபவர்களுக்கும் இது ஒரு பிரார்த்தனை தலமாகும்.
மணக்கால் அய்யம்பேட்டை சேஷபுரீஸ்வரர் கோவில்
பாம்பு ஊர்ந்த தழும்பு கொண்ட சிவலிங்கத் திருமேனி
திருவாரூர்-கும்பகோணம் பேருந்து சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள மணக்கால் அய்யம்பேட்டை என்னும் ஊரில் அமைந்துள்ளது சேஷபுரீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் அந்தப்புர நாயகி. 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தலம். அப்பர் பாடிய தேவார வைப்புத்தலம்.
ஒரு சமயம், திருப்பாற்கடலில் மகாவிஷ்ணுவின் படுக்கையாக இருக்கும் ஆதிசேஷன், தனது சாப விமோசனத்திற்காக இத்தலத்து இறைவனான சேஷபுரீஸ்வரரை வணங்கி, விஷேச பூஜைகள் செய்து கடும் தவம் புரிந்து சாபம் நீங்கப் பெற்றான். அதன் காரணமாக இங்குள்ள சிவலிங்கத்தின் பாணத்தில் பாம்பு ஊர்ந்த தழும்பை இன்றும் காணலாம்.
ஆதிசேஷன் வழிபட்ட தலம் என்பதால் ராகு கேது தோஷ நிவர்த்திக்காகவும், நாக தோஷ நிவர்த்திக்காகவும் இத்தலத்தில் பிரார்த்திக்கிறார்கள். இத்தலத்துக்கு வந்து வழிபட்டால், திருமணத் தடை நீங்கும். புத்திர பாக்கியம் கிட்டும்.