பூந்தோட்டம் அகத்தீஸ்வரர் கோவில்

12 ராசிகள், நந்தி பகவான் அமைந்த பீடத்தின் மேல் எழுந்தருளிருக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி

தட்சிணாமூர்த்திக்கு மேலே விதானத்தில் விநாயகர் இருக்கும் சிறப்பு

திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில், திருவாரூரில் இருந்து  21 கி.மீ தொலைவில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரில் அமைந்துள்ளது அகத்தீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் தர்மசம்வர்த்தினி.

இந்தக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தி மிகவும் சிறப்புக்குரியவர். இவருக்கு ராசி மண்டல குருபகவான் என்ற பெயரும் உண்டு. அவர் தெற்கு முகம் நோக்கி கும்ப ராசியைப் பீடமாகக் கொண்டு வீற்றிருக்கிறார்.

இவர் அமர்ந்திருக்கும் பீடத்தில் 12 ராசி சின்னங்களும், அதற்கு மேல் நந்தி பகவானும் இடம் பெற்றிருக்கிறார்கள். தட்சிணாமூர்த்தி, முழந்தாளிட்ட நிலையில் இருக்கும் நந்தி பகவானின் மேல் தனது இடது கையை வைத்த வண்ணம் காட்சி அளிக்கிறார்.

வழக்கமாக தட்சிணாமூர்த்தி சனகாதி முனிவர்களுடன் இருப்பார்.  ஆனால் அவர்களுக்கு பதிலாக இங்கு, அகத்திய முனிவரும், கோரக்க சித்தரும் உடன் இருப்பது ஒரு வித்தியாசமான தோற்றமாகும்.

தட்சிணாமூர்த்திக்கு மேலே விதானத்தில் விநாயகர் இருக்கும் சிறப்பு

தட்சிணாமூர்த்திக்கு மேலே விதானத்தில் விநாயகர் எழுந்தருளி இருக்கிறார். இப்படி விநாயகர் தட்சிணாமூர்த்தியின் மேலே எழுந்தருளி இருப்பது ஒரு அரிய காட்சியாகும்.

தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் இருக்கும் கோலம் வேறு எந்த கோவிலிலும் நாம் காண முடியாத அரிய காட்சியாகும்.

ஆலங்குடி குரு பரிகார தலத்துக்குச் சமமான தலம்

இக்கோவிலில் தினமும் குரு ஹோரையின் போது சிறப்பு பூஜைகள் நடைபெறும். இக்கோவில் ஆலங்குடி குரு பரிகார தலத்துக்குச் சமமானது.

இந்த ராசி மண்டல குருபகவானை பிரதோஷ காலத்தில் வழிபட சகல விதமான நன்மைகள் கிடைக்கும். இவரை வணங்கினால் கிரகப்பெயர்ச்சிகள் மூலம் ஏற்படும் தீமைகளில் இருந்து விடுபடலாம். ஜோதிட ரீதியாக குரு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

குருபெயர்ச்சியின்போது, அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரக்காரர்களுக்கும் சிறப்பு ஹோமங்களும், பரிகாரபூஜைகளும் இங்கு நடத்தப்படுகின்றன.

இக்கோவிலுக்கு அருகில் இருக்கும் சில முக்கியமான தலங்கள் திருவீழிமிழலை, திருமீயச்சூர், திருச்சிறுப்புலியூர், முடிகொண்டான், கூத்தனூர் சரஸ்வதி கோயில் ஆகியவை ஆகும்.

Newly added photo

தட்சிணாமூர்த்திக்கு மேலே விதானத்தில் விநாயகர்

குருபெயர்ச்சி பூஜை (newly added)

 

திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில், திருவாரூரில் இருந்து  21 கி.மீ தொலைவில் உள்ளது பூந்தோட்டம்.

Previous
Previous

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில்

Next
Next

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்