ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு 365 வஸ்திரங்கள் போர்த்தும் வைபவம்
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுக்கு 365 நாட்களில், சுமார் 322 நாட்களுக்கு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இக்கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவதால், இக்கோவிலுக்கு திருவிழா கோவில் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படும் முக்கியமான விழா கைசிக ஏகாதசி ஆகும். கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி, கைசிக ஏகாதசி எனப்படும். இது வைகுண்ட ஏகாதசிக்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன் மிகச் சிறப்பாக நடைபெறும் விழாவாகும்.
கைசிக ஏகாதசி சிறப்பம்சங்கள்
கைசிக ஏகாதசி அன்று இரவு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், உற்சவ மூர்த்தியான நம்பெருமாளுக்கு 365 வஸ்திரங்கள் ஒவ்வொன்றாய் போர்த்தும் வைபவம் விடிய விடிய நடைபெறும். பெருமாளுக்கு தினமும் அணிவிக்கும் வஸ்திரங்களில் ஏதேனும் குறை இருந்தால் அதை நிவர்த்தி செய்யும் பரிகாரமாக இந்த வைபவம் நடைபெறுகிறது. மேலும் கார்த்திகை, மார்கழி குளிர் மாதங்கள் என்பதால் பெருமாளின் மீதுள்ள அன்பின் காரணமாக இந்த வஸ்திரங்கள் போர்த்தப்படுகின்றன. அத்துடன், ஒவ்வொரு வஸ்திரம் சாற்றியவுடனும் வேளையம் என்று அழைக்கப்படும் வெற்றிலை, பாக்கு, கற்பூர ஆரத்தி ஆகியவையும் நம்பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து நம்பெருமாளுக்கு செய்யப்படும் வஸ்திர மரியாதை
கி.பி 1320 முதல் 1370 வரையிலான ஆண்டுகளில் முஸ்லிம் படையெடுப்பின் போது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சூறையாடப்பட்ட நிலையில், உற்சவ மூர்த்தியான நம்பெருமாள் திருப்பதி திருமலையில் சுமார் 50 ஆண்டு காலம் எழுந்தருளியிருந்தார். இதனை நினைவுகூறும் வகையில், ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து ஆண்டுதோறும் கைசிக ஏகாதசியன்று ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு வஸ்திர மரியாதை செய்யும் வைபவம் நடத்தப்பட்டு வருகிறது.
கைசிகப் புராணம்
கைசிக ஏகாதசி அன்று , நம்பாடுவான் என்ற பக்தனின் கதையை நினைவு கூரும் வகையில் பராசர பட்டர் பரம்பரையினர் கைசிகப் புராணத்தை நம்பெருமாள் முன் வாசிப்பார்கள். கைசிகப் புராண வாசிப்பு நிகழ்ச்சியானது விடிய, விடிய நடைபெறும்.
கற்பூரப் படியேற்றச் சேவை
மறுநாள் துவாதசி அதிகாலையில் நம்பெருமாள் மூலஸ்தானத்திற்குத் திரும்பும்போது கற்பூர ஆராதனை மற்றும் படியேற்றச் சேவை நடைபெறும்.
கைசிக ஏகாதசி (2023)