திருக்குறுங்குடி நின்ற நம்பி பெருமாள் கோவில்
கருடன் தன் இரு கைகளிலும் ஆமை, யானை ஆகியவற்றை பிடித்துக் கொண்டிருக்கும் அபூர்வ சிற்பம்
திருநெல்வேலியில் இருந்து 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருக்குறுங்குடி நின்ற நம்பி பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இக்கோவிலில் பல அற்புதமான, நுணுக்கமான சிற்பங்கள் செதுக்கப்பட்டு இருக்கின்றது.
இக்கோவிலில் கோபுரத்தின் உள் நுழைந்ததும் வலது பக்கம், கருடன் ஆமை, யானை ஆகியவற்றை தன் இரு கைகளிலும் பிடித்துக் கொண்டு, முனிவர்களுடன் கூடிய மரக்கிளையை தன் அலகிலும் வைத்துக் கொண்டு கந்தமாதன மலையை நோக்கி பறப்பது போன்ற அழகிய புடைப்புச் சிற்பம் அமைந்துள்ளது. கருடனின் இடது கையில் ஆமையும் அதன் அருகில் ஆலமரம் ஒரு கிளை முறிந்த நிலையில் இருப்பதும், முறிந்த கிளையில் ஆல இலையின் வடிவம் தத்ரூபமாக கனி மற்றும் மொட்டுக்களோடு வடித்திருப்பதும், தலைகீழாகத் தவம் புரியும் வால்கில்ய (மிகச் சிறிய உருவம் உடையவர்கள்) முனிவர்களும், சிறகுகள் விரிந்த நிலையில் கருடன் பறப்பது போன்ற அமைப்பும், கருடனின் கால் அடியில் கடல் என்று குறிப்பிட நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் மகர மீன் செதுக்கியிருப்பதும், கந்தமாதன மலை அருகில் அமைத்திருப்பதும், அந்த மலையில் ஒரு புலியின் வடிவம் அமைதிருப்பதும் இந்த அற்புதமானதும், அரியதுமான சிற்பத்தின் சிறப்புகள் ஆகும்.
இந்த சிற்பத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் காட்சியானது, மகாபாரதத்தின் முதல் பகுதியான ஆதி பர்வத்தின் உட்பிரிவான ஆஸ்தீக பர்வத்தில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
காஞ்சிபுரம் திருக்கள்வனூர் ஆதிவராகப் பெருமாள் கோவில்
அம்மனின் சக்தி பீடத்தில் அமைந்துள்ள திவ்ய தேசம்
இக்கோவில் சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலின் உள்ளே அமைந்துள்ளது. பெருமாள் திருநாமம் கள்வப்பெருமாள் (ஆதிவராகப் பெருமாள்). தாயார் திருநாமம் அஞ்சிலை வல்லி நாச்சியார் (சவுந்தர்யலட்சுமி).
சைவக் கோவில்களுக்குள் பாடல் பெற்ற பெருமாள் கோவில் (திவ்ய தேசம்) அமைந்திருப்பது சிதம்பரம் நடராஜர் கோவிலிலும், காஞ்சிபுரத்தில் உள்ள இந்தத் தலத்திலும், ஏகாம்பரேஸ்வரர் கோவிலிலும் மட்டுமே. முதலில் காமாட்சி அம்மனின் கருவறை சுவரில் உள்ள அரூப மகாலட்சுமியை வழிபட்ட பிறகே, கள்வப் பெருமாளையும் அஞ்சிலைவல்லி நாச்சியாரையும் வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.
இந்த திவ்யதேசம் காமாட்சி அம்மன் கோவிலின் உள்ளே ஒரு தூணுக்கு இடையில் சந்நிதி போன்ற ஒரு சிறிய இடத்தில் அமைந்துள்ளது. பூஜைகளை சிவாச்சாரியார்கள் செய்து வருகின்றனர். மூலவர் ஸ்ரீ ஆதி வராகப் பெருமாள் (கள்வப்பெருமாள் ) நின்ற திருக்கோலத்தில், மேற்கு நோக்கிய அபய ஹஸ்தத்துடன் அருள்பாலிக்கிறார். தாயாருக்கு தனி சன்னதி இல்லை. ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் திரு நிலாத்திங்கள் துண்ட பெருமாள் தாயாருடன் இணைந்திருப்பதை போல், இத்தலத்திலும் தாயார் அஞ்சிலை வல்லி நாச்சியார் பெருமாளுடன் இணைந்திருக்கின்றார். முதலில் காமாட்சி அம்மனின் கருவறை சுவரில் உள்ள அரூப மகாலட்சுமியை வழிபட்ட பிறகே, கள்வப் பெருமாளையும் அஞ்சிலைவல்லி நாச்சியாரையும் வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.
மகாலட்சுமி, ஒருமுறை தனது அழகைப் பற்றி அகங்காரம் கொண்டபோது, விஷ்ணு அவளுக்கு சாபமிட்டார். சாபத்தால் தன் அழகை இழந்த மகாலட்சுமி, அதை மீண்டும் பெறுவதற்காக காமாட்சி அம்மனை நாடினாள். அப்போது, மகாலட்சுமியும் காமாட்சியும் பேசிக் கொண்டிருந்ததைக் கள்ளத்தனமாக விஷ்ணு மறைந்திருந்து கேட்டார். இதை அறிந்த காமாட்சி, விஷ்ணுவை 'கள்வன்' என்று செல்லமாக அழைத்தார். அதனால், இந்தக் கோவிலில் பெருமாள், கள்வப் பெருமாள் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
திருக்கள்வனூர் பெருமாளை வணங்குபவர்களுக்கு, இழந்த அழகு, செல்வம், கணவன்-மனைவி ஒற்றுமை ஆகியவை திரும்பக் கிடைக்கும். திருகள்வனூர் கள்வப் பெருமாளையும், காமாட்சி அம்மனையும் வேண்டிக் கொண்டால் அண்ணன் - தங்கை ஒற்றுமை சிறப்பாக அமையும் என்பத ஐதீகம். இங்கு காமாட்சி அம்மனே பிரதான தெய்வம் என்பதால், பெருமாளுக்கு விசேஷ பூஜைகள் ஏதும் கிடையாது. தனியாக விழாக்களும் கிடையாது.
திருநாவாய் முகுந்தன் கோவில்
பெருமாளின் முழங்கால்களுக்கு கீழான பகுதி பூமியில் புதைந்துள்ள தலம்
அமாவாசையன்று பித்ரு பூஜை செய்தால் அளவிடற்கரிய புண்ணியம் தரும் திவ்ய தேசம்
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருநாவாய். சென்னை - கள்ளிக்கோட்டை ரயில் மார்க்கத்தில் திருநாவாய் ரயில் நிலையம் அமைந்துள்ளது.
இத்தலத்தில் திருமாலைக் குறித்து 9 யோகிகள் தவம் செய்ததாகவும் அதனால் இத்தலம் நவ யோகித்தலம் என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் நாவாய் தலம் என்றாகி தற்போது திருநாவாய் என்று அழைக்கப்படுகிறது. பெருமாள் 'நாவாய் முகுந்தன்' என்ற பெயரில் கிழக்கு நோக்கிய திருக்கோலத்தில், முழங்காலுக்கு கீழான பகுதிகள் பூமிக்கடியில் சென்ற நிலையில், வேறெங்கும் காண முடியாத கோலத்தில் காட்சி தருகிறார். தாயார் திருநாமம் மலர்மங்கை நாச்சியார்.
இந்த நாவாய் முகுந்தன் கோவில் பித்ருக்கள் பூஜை செய்வதற்கான சிறந்த தலமாக உள்ளது. துவாரபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் இங்கு வந்து பஞ்ச பாண்டவர்களுடன் சேர்ந்து, தம் முன்னோருக்கு பித்ரு பூஜை செய்தார் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இதனால் இத்தலத்தில் பித்ரு பூஜை செய்தால் அளவிடற்கரிய புண்ணியம் கிடைக்கும் என்று கருதப்படுகிறது.
அமாவாசை நாட்களில் இத்தலத்தின் தலவிருட்சம் அடியில் பித்ருக்களுக்கு அன்னம் வைத்து வழிபடுகிறார்கள். அமாவாசையன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தலத்தின் அருகில் உள்ள பாரத புழை நதியில் நீராடி பித்ரு பூஜை செய்கின்றனர். கேரள மாநிலத்தில் பித்ரு தர்ப்பணம் கொடுப்பதில் இத்தலம் முதன்மை வகிக்கிறது.
மூலவர் நாவாய் முகுந்தன், கால்கள் பாதி உள்ளே பதிந்த நிலையில் மிக மிக அரிதான தரிசனத்தை இங்கே வழங்கி அருள்பாலிக்கிறார். இது அரிதினும் அரிதான காட்சியாகும். இதன் பொருட்டே இங்கே நேர்த்தி கடன் செலுத்தும் அன்பர்கள், முட்டியிட்டு பிரதட்சணம் செய்வது வழக்கம்.
திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்
திருமலையானுக்கு தினமும் புதிய மண் சட்டியில் நைவேத்தியமாகும் தயிர் சாதம்
திருமலை வேங்கடவன் கோவிலில் பலவிதமான பிரசாதங்கள் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன. அதில் மிகவும் சிறப்பு வாய்ந்தது திருப்பதி லட்டு. பல்வேறு வகையான பட்சணங்கள், திருமலையின் பெரிய மடைப்பள்ளியில் தயார் செய்யப்பட்டாலும், திருமலையானுக்கு நிவேதனம் செய்யப்படுவது வெறும் தயிர் சாதம் மட்டும்தான். அதுவும் மண் பாத்திரத்தில் வைக்கப்பட்டதாக இருக்கும். புத்தம் புதிய மண் பாத்திரத்தில் வைத்து எடுத்து செல்லும் தயிர் சாதம் மட்டும், குலசேகர ஆழ்வார் படியை தாண்டி திருமலையானுக்கு நிவேதனம் செய்யப்படுகிறது. திருமலையானுக்கு ஒவ்வொரு நாளும் புதிய மண் சட்டியில் பிரசாதம் நிவேதிக்கப்படுகிறது. தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும், கர்ப்பக்கிரகத்துக்கு முன்பு உள்ள குலசேகரப்படியை தாண்டிச் செல்வதில்லை. அவனுக்கு படைக்கப்பட்ட தயிர் சாதம் மற்றும் மண் சட்டி ஆகியவற்றை பிரசாதமாக பெறுவது சாதாரணமான விஷயமல்ல. அவ்வாறு கிடைப்பது வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாக பக்தர்களால் கருதப்படுகிறது. இப்படி மண்சட்டியில் தயிர்சாதம் நிவேதனம் செய்யப்படுவதன் பின்னணியில் ஒரு சுவையான நிகழ்ச்சி உள்ளது.
இங்கு பீமன் என்ற குயவன் வாழ்ந்து வந்தான். அவன் பெருமாளின் மிக தீவிர பகதர். அவன் சனிக்கிழமைகளில் விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டார். ஆனால் மிகவும் ஏழையான பீமன் விரதம் என்பதற்காக கோவிலுக்கு செல்லக் கூடிய சூழல் இல்லாமல், எப்போதும் பானை போன்ற மண்பாண்ட பொருட்களை செய்து வந்தார். அப்படியே கோவிலுக்கு சென்றாலும், பூஜை செய்ய தெரியாது. அப்படி ஒரு கோவிலுக்கு செல்லும் போது, சுவாமியைப் பார்த்து, 'நீயே எல்லாம்' என்ற வார்த்தையை மட்டும் சொல்லி விட்டு வந்து விடுவார். இந்நிலையில், கோவிலுக்கு போக நேரம் இல்லாததால், பெருமாளையே இங்கு அழைத்துவிட்டால் என்ன என எண்ணினார். அதனால், அவர் களிமண்ணால் ஒரு பெருமாள் சிலையை செய்தார். அதை பூஜிக்க பூக்கள் வாங்க கூட பணம் இல்லை. அதனால் தினமும் தன் வேலையில் மீதமாகும் சிறிதளவு களிமண்ணை வைத்து பூக்களை செய்து வந்தார். அப்படி செய்த பூக்களை கோர்த்து, மண் பூ மாலையாக செய்து பெருமாளுக்கு அணிவித்தார். அந்த நாட்டை ஆண்ட அரசன் தொண்டைமானும் பெருமாளின் தீவிர பக்தன். அவர் சனிக்கிழமைகளில் தங்கப்பூ மாலையை அணிவிப்பார். அப்படி அவர் ஒருவாரத்தில் பெருமாளுக்கு தங்க பூ மாலை அணிவித்தார். மறு வாரத்தில் சென்று பார்க்கும் போது தங்க பூ மாலைக்கு பதிலாக களிமண்ணால் செய்யப்பட்ட மாலை பெருமாள் கழுத்தில் இருந்தது. இதைப் பார்த்ததும் அங்குள்ள கோயில் அர்ச்சகர்கள், பராமரிப்பாளர்கள் மேல் சந்தேகம் அடைந்து குழப்பத்தில் ஆழ்ந்தார். அவர் கனவில் தோன்றிய பெருமாள், குயவனின் பக்தியால், அவனின் களிமண் மாலையை தான் ஏற்றுக் கொண்டதாகவும், குயவனுக்குத் தேவையான உதவியை செய்யுமாறு அரசனிடம் கூறினார். திருமாலின் ஆணைப்படி குயவன் இருக்கும் இடத்திற்கு சென்ற அரசன், அந்த பக்தரை கௌரவித்தார்.பெருமாள் மீது குயவன் வைத்திருந்த பக்தியை கௌரவிக்கும் பொருட்டு, தற்போதும் கூட திருப்பதியில் தினமுமொரு புது மண் சட்டியில்தான் நைவேத்யம் செய்யப்படுகின்றது.
புரட்டாசி சனிக்கிழமையில் தான், சனி பகவான் அவதரித்து, புரட்டாசி மாதத்திற்கு சிறப்பை கொடுத்தார். இதன் காரணமாக புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை தரிசித்தால், சனியின் கெடுபலன்களிலிருந்து நம்மைக் காப்பார்.
திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்
உலகளவில் புகழடைந்த, வைணவ குருமாரான இராமானுசரின் சீடர்களில் ஒருவர் அனந்தாழ்வான். இவர், கர்னாடகத்தின் மாண்டிய மாவட்டத்தில் சிறுப்புத்தூர் எனும் ஊரில் அனந்தன் என்னும் இயற்பெயரில் பிறந்தவர். சுவாமி இராமானுசர் மீது அளவுகடந்த பக்தி கொண்ட இவர், இராமனுசர் ஆணைப்படியே திருமலையில் எழுந்தருளியுள்ள திருவேங்கடமுடையானுக்கு நந்தவனம் அமைத்து மலர் கைங்கர்யம் செய்வதையே வாழ்க்கையின் பலனாக கொண்டு திருமலையிலேயே வாழ்ந்தவர்.
திருப்பதி திருமலைவாசனை தரிசிக்கச் செல்லும்போது, கருவறையின் பிரதான வாசலின் வலப் புறத்தில், ஒரு கடப்பாரை தொங்குவதைப் பார்க்கலாம். அந்தக் கடப்பாரை, திருமலை நந்தவனத்தின் தண்ணீர் தேவைக்காக அனந்தாழ்வான் வெட்டிய குளத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது. அந்தக் கடப்பாரைதான், திருமலைவாசனுக்கு தினமும் முகவாயில் பச்சை கற்பூரம் சார்த்தும் வழக்கம் ஏற்பட காரணமாக இருந்தது.
திருவரங்கத்தில் திருவரங்கப் பெருமானின் கைங்கர்யத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட ஶ்ரீராமாநுஜருக்கு, நீண்டகாலமாகவே ஒரு குறை இருந்துவந்தது. திருவரங்கத்தைப் போல்
நந்தவனமும், தபோவனமும் திருவேங்கடத்தில் அமைக்க முடியவில்லையே' என்பதுதான் அவருடைய ஆதங்கம். அலருடைய மனக்குறையை அறிந்த சீடர் அனந்தாழ்வான், தாம் அந்த கைங்கர்யத்தை செயவதாக தனது குருவிடம் தெரிவித்தார். ஏழுமலை ஆண்டவனுக்கு திருமாலை தொடுத்து சேவை செய்யும்பேறு தனக்குக் கிடைத்த மகிழ்ச்சியோடு தனது மனைவியுடன் அவர் திருமலைக்கு வந்து சேர்ந்தார்.
திருமலையில் நந்தவனம் அமைத்தார். மண்வெட்டியால் வெட்டி நிலத்தைப் பண்படுத்தி பூச்செடிகளை நட்டார். அந்த நந்தவனத்துக்கு தமது குருநாதரின் திருப்பெயரே நிலைக்கும்படி 'ராமானுஜ நந்தவனம்' என்று பெயரும் வைத்தார். இப்போதும் அந்த நந்தவனம் அதே பெயரிலேயே அழைக்கப்படுகிறது.
பின்னர் நந்தவனத்தின் தண்ணீர்த் தேவைக்காக குளம் வெட்டி அதில் தண்ணீரைத் தேக்க முடிவுசெய்தார். இச்சமயம் அவரது மனைவி கர்ப்பம் தரித்திருந்தார். 'நானும் உங்களுக்கு உதவுகிறேன்' என குளம் வெட்டும் பணியில் மனைவியும் சேர்ந்துகொண்டார்.
அனந்தாழ்வான் வெட்டிய மண்ணை ஒரு புறமிருந்து மறுபக்கம் கொண்டு சென்று மனைவி கொட்டிவிட்டு வந்தார். ஒரு கர்ப்பிணிப் பெண் மண் சுமந்து செல்வதைப் பார்த்த ஒரு சிறுவன், அவருக்குத் தானும் உதவுவதாகக் கூறினான். ஆனால், அனந்தாழ்வானோ, அந்தச் சிறுவனை எதற்கு சிரமப்படுத்த வேண்டும் என நினைத்து அவனை அனுப்பிவிட்டார். பெருமாளின் கைங்கர்யத்தில் தானும் தன் மனைவியும் மட்டுமே ஈடுபடவேண்டும் என்று நினைத்தார்.
ஆனாலும், கர்ப்பிணிப் பெண் கஷ்டப்பட்டு மண் சுமப்பதைப் பார்த்து அந்தச் சிறுவன் மிகவும் வருந்தினான். சற்று வளைவான பாதையில் சென்று மண்ணைக் கொண்டுபோய் கொட்ட வேண்டியிருந்ததால், மனைவி அங்கு சென்று மண்ணைக் கொட்டி விட்டு வந்தார். அனந்தாழ்வான் இந்தப் பக்கம் மண் தோண்டினார். வளைவுக்கோ அதிக தூரம் இருந்தது. அவர் போகச் சொன்ன சிறுவன் போகாமல், அந்தப்பக்கத்தில் கூடையுடன் நின்றிருந்தான்.
'தாயே, நான் மண் சுமந்தால்தானே அவர் கோபப்படுவார். அவருக்குத் தெரியாமல் உங்களுக்கு உதவுகிறேன். இந்த வளைவுக்கு இந்தப் பக்கம் நான் சுமக்கிறேன். அந்தப்பக்கம் நீங்கள் சுமந்து வாருங்கள்' 'என்றான் சிறுவன். சிறுவனின் கெஞ்சல் மொழியைக் கேட்ட பிறகு அவளால் மறுக்க இயலவில்லை.
'சரி, தம்பி' என்று கூடையை மாற்றிக் கொடுத்தாள். சற்றுநேரம் இப்படியே வேலை நடந்தது. திடீரென்று அனந்தாழ்வானுக்கு சந்தேகம் தோன்றியது. 'மண்ணைக் கொட்டிவிட்டு சீக்கிரம் சீக்கிரமாக வந்து விடுகிறாயே' என்று மனைவியைக் கேட்க, 'சீக்கிரமாகவே சென்று போட்டு விடுகிறேன் சிரமம் இல்லை' என்று பதில் சொல்லி சமாளித்தாள்.
சிறிது நேரம் சென்றதும், அனந்தாழ்வான் கரையைப் பார்க்க வந்தார். சிறுவன் கர்மசிரத்தையாக மண்ணைக் கொண்டு போய் கொட்டிக்கொண்டிருந்தான். தன்னை அவர் கவனிப்பதைக்கூட பொருட்படுத்தாமல் சிறுவன் தன் பணியைச் செய்தவாறு இருந்தான்.
இதனால், கோபம் தலைக்கேற கடப்பாரையால் சிறுவனின் கீழ்த்தாடையில் அடித்தார். சிறுவனின் தாடையில் இருந்து ரத்தம் கொட்டியது. கடப்பாரையால் அடிபட்டு ரத்தம் பெருகிய நிலையில், அந்தச் சிறுவன் ஓடிப்போய்விட்டான்.
அவசரப்பட்டுத் தான் சிறுவனை ரத்தம் வரும்படி அடித்துவிட்டோமே என்ற வருத்தத்தில் அனந்தாழ்வானுக்கும், தொடர்ந்து வேலை செய்யப் பிடிக்கவில்லை. குடிசைக்குத் திரும்பிவிட்டார்.
மறுநாள் காலை திருமலை பெருமாளுக்கு அர்ச்சனைகள் செய்ய வந்த அர்ச்சகர்கள் கதவைத் திறந்ததும் அலறினர். பெருமாளின் தாடையிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. 'அர்ச்சகரே பயப்படவேண்டாம். அனந்தாழ்வாரை அழைத்து வாருங்கள்' என ஒரு அசரீரி கேட்டது. உடனே அவரை அழைத்துவந்தனர்.
பெருமாள் தாடையில் ரத்தம் வடிவதை அனந்தாழ்வான் கண்டார். ஆனால், அவருக்கு மட்டும், தான் மண்சுமந்த கோலத்தைக் காண்பித்தார் பெருமாள்.
'சுவாமி, என்னை மன்னித்து விடுங்கள். தங்கள் தொண்டுக்கு அடுத்தவர் உதவியை நாடக்கூடாது என்ற சுயநலத்தில் சிறுவனை விரட்டினேன். அவன் வலிய வந்து மண் சுமந்ததால் வந்த கோபத்தில் அடித்தேன். அந்தச் சிறுவனாக வந்தது தாங்கள்தான் என்று தெரியாது. சுவாமி என்னை மன்னித்தருள்க' என்று விழுந்து வணங்கினார் அனந்தாழ்வான்.
'அனந்தாழ்வா, நீ மலர்மாலை நேர்த்தியாகக் தொடுத்து அணிவிப்பதில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால், கர்ப்பிணியான உன் மனைவி மண் சுமப்பதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
பக்தர்களின் கஷ்டத்தைப் போக்கத்தான் நான் இங்கு இருக்கிறேன். என் பக்தை கஷ்டப்படுவதைக் கண்டு வேடிக்கை பார்க்க என் மனம் எப்படி இடம் கொடுக்கும்' என்று அசரீரியாகக் கேட்டார்.
'கருணைக் கடலே! என்னை மன்னியுங்கள் சுவாமி' என்றார்.
'சரி. ரத்தம் வழியாமல் இருக்க என்ன செய்வது?' என்று அர்ச்சகர்கள் குழம்பினர்.'சுவாமியின் தாடையில் பச்சைக்கற்பூரத்தை வைத்து அழுத்துங்கள் ரத்தம் வழிவது நின்றுவிடும்' என்றார்.
அர்ச்சகர்களும் மூலவரின் கீழ்தாடையில் பச்சைக் கற்பூரத்தை வைக்க, ரத்தம் வழிந்தது நின்று போனது. இதைநினைவுபடுத்தும் விதமாகவே திருப்பதிப் பெருமாளின் தாடையில் பச்சைக் கற்பூரம் வைக்கும் நிகழ்ச்சி இன்றளவும் தொடர்கிறது.
திருக்காட்கரை காட்கரையப்பன் கோவில்
ஓணம் பண்டிகை முதன் முதலில் கொண்டாடப்பட்ட கோவில்
பெருமாளின் வாமன அவதாரத்திற்கு என்று அமைந்த வெகு சில கோவில்களில் இத்தலமும் ஒன்று
எர்ணாகுளத்தில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள மலையாள திவ்யதேசம் திருக்காக்கரை திருக்காட்கரையப்பன் கோவில் ஆகும். இக்கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் 67-வது திவ்யதேசம் ஆகும். பெருமாளின் தசாவதாரங்களில் ஒன்றான வாமன மூர்த்திக்கென்று வெகு சில கோவில்களே உள்ளன. அந்த வெகுசில கோவில்களில் ஒன்றுதான் திருக்காக்கரை திருக்காட்கரையப்பன் கோவில். இந்தியாவிலேயே வாமனருக்கு பிரத்யேகமாகக் கட்டப்பட்ட மிகவும் பழமையான கோவில்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது.
பெருமாள் தன் திருவடியால் உலகைத் தாவி அளந்த இடம் என்ற பொருள்பட திரு-கால்-கரை என்று இத்தலம் அழைக்கப்படுகிறது. இந்தத் தலத்தில் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்கிறார் வாமன அவதார பெருமாள். இவருக்குக் கதாயுதம் கிடையாது. தாயார் ஸ்ரீபெருஞ்செல்வநாயகி. தாயாருக்குத் தனிச் சன்னதி கிடையாது.
ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதின் பின்னணியில் உள்ள புராணம்
பெருமாளின் தசாவதாரத்தில் ஐந்தாவது அவதாரமான வாமனர் பிறந்த நாளான, ஆவணி மாத துவாதசியில் வரும் திருவோண நட்சத்திரம் அமைந்த நாள், ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் மகாபலிச்சக்கரவர்த்தி, இந்த நாளன்று திருக்காக்கரையில் உள்ள வாமனர் கோவிலில் அவரின் பிறப்பைக் கொண்டாட, பாதாள உலகத்திலிருந்து பூமிக்கு வருவதாக தலபுராணம் கூறுகின்றது.
மகாபலிச்சக்கரவர்த்தி என்பவன் கேட்டவர்க்கு கேட்டதை எல்லாம் கொடுப்பவன். இவன் அசுர குலத்தில் பிறந்தாலும் மிகவும் நல்லவன். ஆனால் தர்மம் செய்வதில் தன்னை விட தலை சிறந்தவர் யாருமில்லை என்ற அகந்தை அவனிடம் ஏற்பட்டு விட்டது. இதை உணர்ந்த மகாவிஷ்ணு, அவன் அகந்தையை வளரவிடாமல் தடுக்கவே குள்ள வடிவெடுத்து வந்தார். மகாபலியிடம் மூன்றடி நிலம் கேட்டார். தாங்கள் குள்ளமானவர். உங்கள் காலுக்கு மூன்றடி நிலம் கேட்கிறீர்களே. அது எதற்கும் பயன்படாதே, என்றான் மகாபலி. அவனது குல குரு சுக்ராச்சாரியார், வந்திருப்பது மகாவிஷ்ணு என்பதை அறிந்து தானம் கொடுப்பதை தடுத்தார். கேட்டவர்க்கு இல்லை என்று சொன்னால், இதுவரை செய்த தானம் பலனில்லாமல் போய்விடும் என நினைத்தான் மகாபலி. எனவே சம்மதித்தான். பெருமாள் விஸ்வரூபம் எடுத்தார். ஓரடியால் பூமியையும், இன்னொரு அடியால் ஆகாயத்தையும் அளந்த பெருமாள், மூன்றாவது அடிக்கு நிலம் எங்கே? என கேட்டார். அகந்தை கொண்டிருந்த மகாபலி பணிந்து, தலை வணங்கி நின்றான். பகவானே! இதோ என் தலை. இதைத்தவிர என்னிடம் வேறெதுவும் இல்லை என்றான். பெருமாள் அவனை அப்படியே பூமியில் அழுத்தி, தன்னோடு இணைத்து கொண்டார்.
வாமனர் மகாபலியைப் பாதாளத்திற்கு அனுப்புவதற்கு முன், மகாபலி ஒரு வரம் கேட்டான். வருடத்துக்கு ஒருமுறை தனது தேசத்து மக்களைச் சந்திப்பதற்கு அருள்செய்யுமாறு வேண்டிக்கொண்டான். விஷ்ணு பகவானும் ஏற்றுக்கொண்டார். பகவான் மகாபலிக்கு அருள்புரிந்தது ஆவணி மாதம் திருவோண நடசத்திரத் திருநாளில். இதை நினைவுகூரும் வகையில் கேரளாவில் ஓணம் பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மகாபலியும் தான் வேண்டிக் கொண்டபடி இந்த விழாவில் கலந்துகொண்டு குடிமக்களை வாழ்த்துவதாக ஐதீகம்.
இக்கோவிலின் நுழைவு வாயிலில் மகாபலியின் ஆஸ்தானம் இருந்துள்ளது. இந்த இடத்தில் தற்போது ஒரு சிம்மாசனம் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இவ்விடத்தில் விளக்கேற்றி மகாபலியை வழிபடுகின்றனர்.கேரளபாணியில் ஓடு வேய்ந்த வட்ட வடிவ கோயில் இது. முகப்பில் உள்ள மண்டபத்தில் பெருமாள் வாமனராக, குள்ள வடிவம் எடுத்து வரும் காட்சி மரத்தில் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. மூலஸ்தானத்தில் வாமன மூர்த்தி அருள்பாலிக்கிறார். இவரை மக்கள் திருக்காக்கரை அப்பன் என செல்லப் பெயரிட்டு அழைக்கிறார்கள்.
வாமனன் அவதரித்த நாளான ஆவணி-வளர்பிறை-துவாதசி-திருவோண நாளன்று, வாமனனை வழிபட்டால், அனைத்து வித நலன்களும் பெறலாம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
ஆண்டாள் கையில் இருக்கும் கல்யாண கிளியின் சிறப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் என்றால் நம் நினைவுக்கு வருவது ஆண்டாள் கோவில். அந்தக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் ஆண்டாளின் சிறப்பு அடையாளங்களாக அவரது சாய்ந்த கொண்டையும், அவரது தோளில் வீற்றிருக்கும் கிளியும் விளங்குகின்றன.
மதுரை ஸ்ரீமீனாட்சிக்கு வலத்தோளில் கிளி இருக்கும். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு இடத்தோளில் கிளி இருக்கும். ஆண்டாளின் இடது கையில் உள்ள கிளி கல்யாண கிளி என்று அழைக்கப்படுகின்றது.இந்தக் கிளி தினமும் புதிதாகச் செய்யப்படுகிறது. கிளி மூக்கு – மாதுளம் பூ, மரவல்லி இலை – கிளியின் உடல்;, இறக்கைகள் – நந்தியாவட்டை இலையும் பனை ஓலையும்;, கிளியின் வால் பகுதிக்கு வெள்ளை அரளி மற்றும் செவ்வரளி மொட்டுகள்;, கிளியின் கண்களுக்கு காக்காய்ப் பொன் என்று சொல்லப்படும் பொருளைப் பயன்படுத்துவார்கள். இவற்றை பயன்படுத்தி கிளியை உருவாக்குகின்றனர். கிளியின் கழுத்துக்கு ஆபரணமாக பனை ஓலையும், பச்சிலைகளும் சாத்தப்படுகின்றன. கிளி அமர்ந்திருக்கும் பூச்செண்டானது நந்தியாவட்டைப் பூ, செவ்வரளிப்பூ ஆகியவற்றால் ஆனது. கிளியை தினசரி மாலை 6.30. மணிக்கு நடைபெறும் சாயரட்சை பூஜையின் போது தாயார் ஆண்டாளின் இடது தோளில் சார்த்துவது வழக்கம். அந்தக் கிளி, இரவு அர்த்தசாமப் பூஜை வரை ஆண்டாளின் தோளில் வீற்றிருக்கும். அதற்குப் பிறகு ஆண்டாளுக்குச் சார்த்தப்பட்ட மாலை முதலானவற்றைக் களையும் 'படி களைதல்' எனும் நிகழ்வின்போது, கிளியும் அகற்றப்படும்.
ஆண்டாள் சுகப்பிரம்மம் என்ற ரிஷியை கிளி ரூபத்தில் ரங்கநாதரிடம் அனுப்பியதாகவும், தூது சென்று வந்த கிளியிடம், என்ன வரம் வேண்டும்? என்று ஆண்டாள் கேட்க, சுகப்பிரம்மம், இதே கிளி ரூபத்தில் உங்கள் கையில் தினமும் இருக்க அருள் புரிய வேண்டும்! என்று வேண்டிக் கொண்டார் என்றும், அதனால் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றிருப்பதாகவும் புராணம் கூறுகிறது. ஆண்டாள், பெருமாளிடம் காதல் கொண்டு, காதல் தூது சென்றதால், அந்தக் கிளிக்கு ‘கல்யாணக் கிளி’ என்றும் பெயர் உண்டு .பக்தர்கள் தங்களின் கோரிக்கைகளை கூறும் பொழுது அதைக் கேட்கும் கிளியும் அடிக்கடி ஞாபகப்படுத்தி ஆண்டாளிடம் பிரார்த்தனையை நினைவு படுத்துமாம். பக்தர்கள் ஒரு கோரிக்கை வைத்தால், அதனை கல்யாணக் கிளி செய்து முடிக்குமாம்.
திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் கோவில்
அமாவாசை தோறும் பெருமாள் சவுரி முடி அணிந்து கொண்டு, தன் நடையழகை காட்டும் திவ்ய தேசம்
நன்னிலம்-காரைக்கால் செல்லும் சாலையில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருக்கண்ணபுரம். பெருமாள் திருநாமம் நீலமேகப்பெருமாள். தாயாரின் திருநாமம் கண்ணபுர நாயகி. உற்சவரின் திருநாமம் சவுரிராஜப்பெருமாள். இந்த கோவிலில், உற்சவர் சௌரிராஜப் பெருமாள் தலையில் முடியுடன் காட்சி தருகிறார். சவுரி என்றால் முடி அல்லது அழகு என்று பொருள்.
108 திவ்ய தேசங்களுள் சிறப்புடையதாக மேலை வீடு திருவரங்கம்,வடக்கு வீடு - திருவேங்கடம் எனவும் தெற்கு வீடு -திருமாலிருஞ் சோலை(அழகர் கோயில்) எனவும் அமைந்த வரிசையுள் கீழை வீடாக திருக்கண்ணபுரம் போற்றப்படுகின்றது. சில பெருமாள் கோவில்களுக்கு தனிச் சிறப்பு வாய்ந்த சொல்வடைகள் உள்ளன. ஸ்ரீரங்கம் - நடை அழகு, ஸ்ரீவில்லிப்புத்தூர் - கோபுரம் அழகு, மன்னார்குடி - மதிலழகு,திருப்பதி - குடை அழகு என்ற வரிசையில் திருக்கண்ணபுரம் நடை அழகு என்பது தனிச்சிறப்பாகும்.
ராவண வதம் முடிந்தபின், ராமபிரான் அயோத்தி திரும்ப தயாரானார். ராவணனின் சகோதரனான விபீஷ்ணன், ராமபிரானைப் பிரிய மனமில்லாது மிகவும் வருந்தினான். விபீஷ்ணனை தம்பியாக ஏற்றுக்கொண்ட ராமபிரான், அவனுக்கு இத்தலத்தில் ஒரு அமாவாசை நாளில் பெருமாளாக நடந்து, தன் நடை அழகைக் காட்டி அருள் செய்தார். இதை உணர்த்துவது போல் இக்கோவிலில் விபீஷணனுக்கென்றே தனியாக ஒரு சந்நிதி உள்ளது. வீபிஷணர் பெருமாளிடம், 'நீ கிடந்த அழகை திருவரங்கத்திலே கண்டேன். நின் நடையழகையும் காண வேண்டும்' என்று வேண்ட, 'கண்ணபுரத்தில் காட்டுவோம் வா' என்று வீபிஷணணுக்கு இத்தலத்தில் ஒரு அமாவாசை நாளில் பெருமாளாக நடந்து, தன் நடை அழகைக் காட்டி அருள் செய்தார்.
இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் விதத்தில் ஒவ்வொரு அமாவாசை அன்றும் இக்கோவிலில், உச்சிகால பூஜையில் பெருமாள், சவுரி முடியுடன் கைத்தல சேவையில் விபீஷணனுக்கு நடந்து காட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. அப்போது சௌரிராஜப் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, சவுரிமுடி அணிவித்து புறப்பாடு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. அமாவாசையன்று சௌரிராஜப் பெருமாள் உலா செல்லும்போது மட்டுமே,அவருடைய திருமுடி தரிசனத்தை நாம் காண முடியும்.
திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோவில்
தர்ப்பணம் செய்யும் பலனை இரட்டிப்பாக்கி தரும் திவ்ய தேசம்
சென்னை - வேலூர் நெடுஞ்சாலையில், காஞ்சிபுரத்திற்கு மேற்கே 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருப்புட்குழி. பெருமாள் திருநாமம் விஜயராகவ பெருமாள். தாயார் திருநாமம் மரகதவல்லித் தாயார். திரு என்றால் மரியாதை. புள் என்றால் ஜடாயு. குழி என்றால் ஈமக்கிரியை செய்தல். ராமர் ஜடாயுவிற்கு இத்தலத்தில் ஈமக்கிரியை செய்ததால் இத்தலம் திருப்புட்குழி ஆனது. மூலவர் விஜயராகவப் பெருமாள் தன் தொடையின் மீது ஜடாயுவை வைத்துக்கொண்டு அருள்பாலிக்கிறார்.
ராவணன் சீதையை சிறை எடுத்து செல்லும் வழியில் பறவைகளின் அரசனாகிய ஜடாயு சீதையை மீட்க ராவணனுடன் போரிட்டது. அவனால் வெட்டப்பட்டு மரணத்தருவாயில் இருந்தது. சீதையை தேடி அவ்வழியே வந்த ராமலட்சுமணரிடம் சீதையை ராவணன் கடத்தி சென்ற விஷயத்தை தெரிவித்தது. மரணத்தை எதிர் நோக்கி இருக்கும் தனக்கு ராமனே ஈமக்கிரியைகள் செய்ய வேண்டும் எனவும், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக காட்சி தந்து அருள வேண்டும் எனவும் வேண்டியபடி உயிர்விட்டது. அதன்படி ஜடாயுவை தன் வலதுபக்கம் வைத்து தீ மூட்டி ஈமக்கிரியைகளை செய்தார். இதனால் ஏற்பட்ட வெப்பம் தாளாமல் வலப்புறம் இருந்த ஸ்ரீதேவி தாயார் இடப்புறமும், இடப்புறம் இருந்த பூதேவித்தாயார் வலப்புறமும் மாறி அருள்பாலிப்பதாக புராணங்கள் கூறுகிறது. எனவே தான் இங்கு மட்டும் தாயார் சன்னதி பெருமாளுக்கு இடது புறமும், ஆண்டாள் சன்னதி பெருமாளுக்கு வலதுபுறமும் அமைந்துள்ளது குறிப்படத்தக்கது. ஜடாயுவின் வேண்டுகோளின் படி ராமர், தன் அம்பினால் உண்டாக்கப்பட்ட தீர்த்தத்தில் ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்தார். எனவே இங்கு தீர்த்தம் ஜடாயு புஷ்கரிணி என அழைக்கப்படுகிறது. ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்த தலமாதலால் அதற்கு மரியாதை செய்யும் விதத்தில் கொடிமரமும், பலி பீடமும் கோவிலுக்கு வெளியில் உள்ளது.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் சிறந்த தலங்களில் இதுவும் ஒன்று. ராமபிரானே இங்கு ஈமக்கிரியைகள் செய்துள்ளதால், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்பவர்கள் அமாவாசையன்று இத்தலத்தில் செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
திருவள்ளூர் வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில்
ஆனி அமாவாசை தெப்ப உத்சவம்
பெருமாள், கனகவல்லி தாயார் மற்றும் உற்சவர் முத்தங்கி சேவை
திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவர் பெருமாள் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற திருத்தலமாகும். இங்கு அமாவாசை தினங்களில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி அமாவாசையை முன்னிட்டு மூன்று நாட்கள் பெருமாள் மற்றும் தாயார் முத்தங்கி சேவை மற்றும் தெப்ப உத்சவம் நடைபெறும். இந்த ஆண்டிற்கான ஆனி அமாவாசையான, வரும் 25 முதல் 27ம் தேதி வரை, மூன்று நாட்கள் தெப்ப உத்சவம் நடைபெற உள்ளது.
ஆனி அமாவாசை அன்று மூலவர் பெருமாள், கனகவல்லி தாயார் மற்றும் உற்சவருக்கு முத்தங்கி சேவை நடைபெறும். உற்சவர் வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய், கண்ணாடி மண்டபத்தில் முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு தரிசனம் தருவார். ஆனி மாத தெப்ப உற்சவத்தின் போது தினமும் மாலை 6 மணியளவில், உற்சவர் வீரராகவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் 'ஹிருதாபநாசினி' குளத்தில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளி, மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
இந்த தெப்ப உற்சவத்தில் கலந்து கொண்டு வழிபட்டால் தீராத நோய்கள் அனைத்தும் தீரும் என்பதோடு, சகலவிதமான சௌகரியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். இதற்காக பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்தும் வகையில் உப்பு, கரும்பு, வெல்லம், பால் போன்றவைகளை தீர்த்தக் குளத்தில் கரைத்து வழிபாடு செய்வார்கள்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்
நரசிம்மரின் யோக நிலையை கலைக்காமல் இருக்க நடுவில் சப்தம் எழுப்பும் நாக்கு இல்லாத மணிகள்
நோய்கள் நீங்குவதற்காக உப்பு, மிளகு காணிக்கை
சென்னை மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள திவ்ய தேசம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 61 வது திவ்ய தேசம். கருவறையில் மூலவர் பார்த்தசாரதி பெருமாள், தன் குடும்ப சமேதராக காட்சியளிக்கிறார். இந்தப் பெருமாள் ,அர்ஜுனனுக்கு உதவியாக வந்த கிருஷ்ணாவதாரம் என்பதால்,அருகில் ருக்மிணி தாயார் இருக்கிறாள். வலப்புறத்தில் அண்ணன் பலராமர், இடதுபுறத்தில் தம்பி சாத்யகி, மகன் பிரத்யும்னன் மற்றும் பேரன் அநிருத்தன் ஆகியோரும் இருக்கின்றனர்.
இக்கோவிலில் யோக நரசிம்மர் தனி சன்னதியில் யோக பீடத்தில் எழுந்தருளி இருக்கிறார். இவரே இத்தலத்தின் முதல் மூர்த்தியாவார். காலையில் இவருக்கே முதல் பூஜை நடக்கிறது. அத்ரி மகரிஷிக்கு காட்சி தந்த நரசிம்மர் இவர். இவரது சன்னதியில் உள்ள மணிகளில் மட்டும் சப்தம் எழுப்பும் நாக்குகள் இல்லை. நரசிம்மர் யோக நிலையில் இருப்பதால் மணி ஒலிக்கும் சப்தமும், பேச்சு சப்தமும் கேட்கக்கூடாது என்கின்றனர். எனவே, இவரது சன்னதியில் அலங்காரத்திற்காக கதவில் இருக்கும் மணிகள்கூட, நடுவில் சப்தம் எழுப்பும் நாக்கு இல்லாமல் செய்யப்பட்டிருக்கிறது. பக்தர்கள் இவரிடம் வேண்டிக் கொண்டு உப்பு, மிளகை இவரது சன்னதிக்கு பின்புறத்தில் காணிக்கையாக செலுத்துகிறார்கள். தனால் நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை.
திருவந்திபுரம் தேவநாத பெருமாள் கோவில்
ஆதிசேஷன் தன் வாலால் தரையில் அடித்து உருவாக்கிய தீர்த்தம்
உப்பு, மிளகு , வெல்லம் போட்டு பிரார்த்தனை செய்தால் வியாதிகளை குணப்படுத்தும் சேஷ தீர்த்தம்
கடலூா் நகரத்திலிருந்து பண்ருட்டி செல்லும் சாலையில் 3 கி.மீ. தூரத்தில் உள்ள திவ்ய தேசம் திருவந்திபுரம். பெருமாள் திருநாமம் தேவ நாதன்,தெய்வநாயகன்.தாயார் திருநாமம் வைகுண்ட நாயகி, ஹேமாம்புஜ வல்லித்தாயார்(பார்க்கவி). உற்சவர் திருநாமம் அச்சுதன், மூவராகிய ஒருவன்.
தேவர்களுக்கு தலைமை தாங்கியதால் பெருமாளுக்கு இங்கு தேவநாதன் என்ற திருநாமம் உண்டாயிற்று. இத்தலத்திலே ஸ்ரீமந்நாராயணன் நித்ய வாசம் செய்ய இருப்பதை அறிந்த ஆதிசேசன் இங்கு ஒரு நகரத்தை உண்டு பண்ணினான். அதுதான் திரு அஹீந்த்ர(ஆதிசேஷ)புரம் என பெயர் பெற்று விளங்கியது.
ஒரு சமயம் பெருமாளுக்கு தீர்த்த தாகம் ஏற்பட்டபோது அங்கிருந்த கருடாழ்வாரிடம் தீர்த்தம் கொண்டு வரப் பணித்தார். அவர் எடுத்து வர தாமதம் ஆனதால், ஆதிசேஷனிடம் நீர் கொண்டு வருமாறு பணித்தார். ஆதிசேஷன் தன் வாலால் தரையில் அடித்து பெருமாளுக்கு தீர்த்தம் தந்தார். அதனால் அதற்கு சேஷ தீர்த்தம் என்று பெயர் வந்தது. இது ஒரு பிரார்த்தனை கிணறு ஆகும். இது கோவிலின் உள்ளே தெற்கு பிரகாரத்தில் உள்ளது. இதில் உப்பு, மிளகு , வெல்லம் போட்டு பிரார்த்தனை செய்தால் வியாதிகள் குணமாகும். கட்டி,பால் உண்ணி ஆகியவை மறையும். சர்ப்ப தோசம் உள்ளவர்கள் இங்குள்ள சர்ப்பத்தை வழிபட்டால் தோசம் நீங்கும்
திருவந்திபுரம் தேவநாத பெருமாள் கோவில்
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூா்த்திகளை உள்ளடக்கிய பெருமான்
மும்மூர்த்திகளின் அடையாளமான தாமரை மலர், சங்கு சக்கரம்,நெற்றிக்கண் கொண்ட உற்சவ பெருமாள்
கடலூா் நகரத்திலிருந்து பண்ருட்டி செல்லும் சாலையில் 3 கி.மீ. தூரத்தில் உள்ள திவ்ய தேசம் திருவந்திபுரம். பெருமாள் திருநாமம் தேவ நாதன்,தெய்வநாயகன்.தாயார் திருநாமம் வைகுண்ட நாயகி, ஹேமாம்புஜ வல்லித்தாயார்(பார்க்கவி). உற்சவர் திருநாமம் அச்சுதன், மூவராகிய ஒருவன்.
திருவந்திபுரத்தில் அருளும் தேவநாதப் பெருமாள் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூா்த்திகளையும் உள்ளடக்கிய பெருமானாகத் திருக்காட்சியளிக்கின்றாா். முன் ஒரு காலத்தில் அசுரா்களிடமிருந்து தேவா்களைக் காக்க பெருமான் எடுத்த திருக்கோலமே மூம்மூா்த்தி வடிவம். இதனால் இப்பெருமான் 'த்ரிமூா்த்தி” என்றும் “மூவராகிய ஒருவன்” என்றும் வணங்கப்படுகின்றாா்.
தேவா்களுக்குத் தலைவனாக (நாதனாக) இருந்து எம்பெருமான் போா் புரிந்ததால் இவருக்கு தெய்வநாயகன் மற்றும் தேவநாதன் என்ற திருநாமங்கள் வழங்கலாயிற்று. தேவா்களுக்கு மும்மூா்த்திகள் வடிவில் காட்சி தந்ததால் இத்தலத்தின் உற்சவ மூா்த்திக்கு மூவராகிய ஒருவன் என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது. பிரம்மனுக்கு அடையாளமான தாமரை மலரைத் தனது திருக்கரத்திலும் மஹா விஷ்ணுவிற்கு அடையாளமான சங்கு, சக்கரங்களைத் தாங்கியும் சிவபெருமானுக்கு அடையாளமான நெற்றிக்கண்ணும் சடா முடியும் தரித்து தேவநாதப் பெருமான் திருக்காட்சி கொடுப்பதால் 'த்ரிமூா்த்தி' என்றும் 'மூவராகிய ஒருவன்' என்றும் வணங்கப்படுகின்றாா்.கருவறை விமானத் தின் கீழ், கிழக்கு திசையில் பெருமாளும், தெற்கில் ஈசனின் வடிவமான ஶ்ரீதெட்சிணாமூா்த்தியும் மேற்கு திசையில் ஶ்ரீநரசிம்மரும் வடக்கில் ஶ்ரீபிரம்மனும் அமைந்துள்ளது இத்தல பெருமான் 'மூவராகிய ஒருவன்' எனும் கூற்றினை மெய்ப்பிக்கும் வண்ணம் உள்ளது. இத்தலத்து எம்பெருமானை வழிபாடு செய்ய, மும்மூா்த்திகளையும் ஒருங்கே வழிபட்ட பேறு அன்பா்களுக்குக் கிட்டும்.
திருமலைக்கு நோ்ந்து கொண்டு செல்லமுடியாதவா்கள் தேவநாதப் பெருமானுக்கு அந்தக் காணிக்கையைச் செலுத்துகின்றனா்.
ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் கோவில்
வைகுண்ட பதவி அருளும் திவ்ய தேசம்
அமாவாசை மட்டுமின்றி எல்லா நாட்களும் முன்னோர்களுக்கு திதி கொடுக்க கூடிய தலம்
திருநெல்வேலி - திருச்செந்தூர் வழிப்பாதையில் 30 கி.மீ. தூரத்தில், தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரி. இத்தலம் பிரம்மாவுக்கு குருவாகப் பெருமாள் வந்த திருத்தலம் என்பதால் குருகூர் எனப்படுகின்றது. முதன் முதலில் பெருமாள் தோன்றி நின்ற தலம் என்பதால், பெருமாள் ஆதிநாதன் என திருப்பெயர் பெற்றார். ஆதிநாதவல்லி மற்றும் குருகூர்வல்லி என இரண்டு தாயார்கள் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலித்து வருகிறார்கள். இத்தலம் நம்மாழ்வார் அவதரித்த தலமாகும். இதனால் இத்தலம் ஆழ்வார் திருநகரி என்றழைக்கப்பட்டது. நவதிருப்பதிகளுள் குருவுக்குரிய (வியாழன்) தலமாகும்.
'குருகு' என்பதற்கு தமிழில் சங்கு என்று பொருள். இத்தல பெருமாளை சங்கன் எனும் கடலில் வாழும் சங்குகளின் அரசன் வந்து வழிபட்டு பேறு பெற்றதால் இத்தலம் குருகூர் என்று ஆனது. பின்னர் நம்மாழ்வாரால் ஆழ்வார் திருநகரி என்றானது.
முன்னொரு காலத்தில், இத்தலத்தில் ஒரு யானையும், வேடனும் போரிட்டு மடிந்தனர். இங்கு இறந்த ஒரே காரணத்திற்காக இருவரும் வைகுண்டம் சென்றனர். எனவே இத்தலத்தில் வழிபட்டால் பாவங்கள் பறந்தோடி, வைகுண்டம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. மேலும் இந்த தலத்தில் அமாவாசை மட்டுமின்றி எந்த நாளிலும் இறந்து போன நம் முன்னோர்களுக்கு திதி கொடுக்கலாம். அவ்வாறு செய்தால் நம் முன்னோர்களின் ஆன்மா நரகம் சென்றிருந்தாலும், நாம் இத்தலத்தில் திதி கொடுத்த உடனேயே விஷ்ணு தூதர்கள் வந்து அவர்களை நரகத்தில் இருந்து வைகுண்டம் அழைத்துச் செல்வார்கள் என்பதும் நம்பிக்கையாகும். மகாளய அமாவாசை அன்று ஆழ்வார் திருநகரி வந்து முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் அவர்கள் வைகுண்ட பதவி அடைவார்கள் என்பது நிச்சயம். திதி கொடுத்த பின்னர் கோபுரத்திலோ, கோபுரத்தின் அருகிலோ மோட்ச தீபம் ஏற்றலாம்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில்
தமிழகத்திலேயே மிகப்பெரிய திருமேனி உடைய சக்கரத்தாழ்வார்
108 வைணவத் திவ்ய தேசங்களில் திருவரங்கம், திருவேங்கடம் அடுத்து மிக முக்கியமான திவ்ய தேசமாக கருதப்படுவது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் ஆகும். தாயார் திருநாமம் பெருந்தேவித் தாயார்.
இக்கோவிலின் பிரதான குளத்திற்கு அனந்த சரஸ் என்று பெயர். இந்த அனந்த சரஸ் குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் சன்னதி அமைந்துள்ளது. தமிழகத்தில் எங்கும் காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார், ஏழு அடி உயரத் திருமேனியுடன் இருக்கின்றார். இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிக்கின்றார். இவரே இந்த ஆலயத்தில் பிரதான மூர்த்தியாக இருக்கிறார். இவரை வழிபட்ட பிறகே மூலவரான வரதராஜ பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள். இங்குள்ள உற்சவர் சக்கரத்தாழ்வார் மிகவும் விசேஷமானவர். இவரைச் சுற்றியுள்ள அலங்கார வளைவில் 12 சக்கரத்தாழ்வார் உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
சக்கரத்தாழ்வார் பெருமானை வணங்கினால் திருமணத்தடை நீங்கும், வழக்குகளில் வெற்றி கிடைக்கும், வாழ்வில் வளமும் நிம்மதியும் அடையலாம் என்பது ஐதீகம். சக்கரத்தாழ்வரை தரிசனம் செய்து பின்னர் ஸ்ரீவரதராஜ பெருமாளை தரிசனம் செய்து பசு வெண்ணெய்யில் சர்க்கரை கலந்து ஏழைக் குழந்தைகளுக்கு அளித்தால் அக்னியால் விளையும் ஆபத்துக்கள் தவிர்க்கப்படும்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
கையில் அன்ன உருண்டை வைத்திருக்கும் அன்னப் பெருமாள்
சுக்கிர தோஷத்தை நிவர்த்திக்கும் தானிய லட்சுமி
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திவ்ய தேசம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். இக்கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் அன்னப் பெருமாள் எழுந்தருளி இருக்கிறார். இவர் கைகளில் கலசம், தண்டம், அன்ன உருண்டை வைத்திருக்கிறார். இவரிடம் வேண்டிக்கொள்ள உணவு பஞ்சமில்லாத நிலை ஏற்படும்.
அன்னப்பெருமாள் கோவில் பிரகாரத்தில் தானிய லட்சுமிக்கு சன்னதி இருக்கிறது. தானிய லட்சுமிக்கு வலப்புறம் கிருஷ்ணர், இடதுபுறம் நரசிம்மர் இருப்பது வித்தியாசமான அமைப்பு. சுக்கிர கிரகத்தால் பாதிக்கப்படும் ஜாதகதாரர்கள் இவளுக்கு வெண் பட்டு, வெள்ளை மலர் அணிவித்து, வெண் மொச்சை தானியம் படைத்து வழிபடுகிறார்கள். ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவங்களின் போது, ஏழாம் திருநாளன்று நம்பெருமாள் வருஷத்துக்கு ஏழு தடவை ஸ்ரீதேவி - பூதேவி துணைவர தானிய லட்சுமி சன்னதி அருகில் எழுந்தருளி நெல் அளக்கும் வைபவம் காண்கிறார்.
திருஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோவில்
பாவங்களை நீக்கும், திருமண வரம் அருளும் மோட்சத் தூண்கள்
கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தூரத்திலும் ,சுவாமிமலையிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள திவ்ய தேசம் திருஆதனூர். பெருமாளின் திருநாமம் ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன். தாயாரின் திருநாமம் பார்க்கவி.
கருவறையில் ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நாபிக்கமலத்தில் பிரம்மாவுடன் பள்ளிக்கொண்ட கோலத்தில் அருள்பாலிக்கிறார். மரக்காலை தலைக்கு வைத்து, இடது கையில் எழுத்தாணி மற்றும் ஏடுடன் அருள்பாலிக்கிறார். பெருமாளின் பாதத்தருகே காமதேனு,காமதேனுவின் மகள் நந்தினி, சிவபெருமான், பிருகு மகரிஷி, திருமங்கையாழ்வார் உள்ளனர்.
கைகளில் ஏடு (ஓலைச் சுவடி), எழுத்தாணி, தலைக்கு மரக்காலை வைத்து, ஜீவாத்மாக்களின் நல்ல மற்றும் தீய செயல்களை கணக்கிட்டு அவர்களை ஆள்வதால், திருமால் 'ஆண்டு அளக்கும் ஐயன்' என்று அழைக்கப்படுகிறார். தன்னை நாடி வருவோரின் தகுதிக்கேற்ப, அளந்து அருள் வழங்கும் வள்ளலாக வீற்றிருப்பதால், இத்தல இறைவனுக்கு 'ஆண்டளக்கும் ஐயன்' என்பதே திருநாமமாக விளங்குகிறது. திருமாலை வேண்டி காமதேனு (ஆ) தவம் செய்த ஊர் என்பதால் (ஆ,தன்,ஊர்) ஆதனூர் என்ற பெயர் இவ்வூருக்கு கிட்டியது.
இக்கோவிலில், கருவறைக்கு முன்புறம் அர்த்தமண்டபத்தில் பெருமாளின் பாதம், தலைக்கு நேரே இரண்டு தூண்கள் உள்ளன. இந்தத் தூண்களை வலம் வந்து, அவற்றைப் பிடித்துக் கொண்டு, பெருமாளின் பாதம், முகத்தை தரிசனம் செய்தால் மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம். இத்தூண்கள் மோட்சத் தூண்கள் என்று அழைக்கப்படுகின்றன. பரமபதத்தில் இருக்கும் மகாவிஷ்ணுவிற்கு முன்புறம் இரண்டு தூண்கள் இருக்கும். ஜீவன்கள் மேலே செல்லும்போது, இந்த தூண்களைத் தழுவிக் கொண்டால் பாவங்களில் இருந்து விடுபட்டு மோட்சம் கிடைக்கும். அதே போல இத்தலத்து மோட்சத் தூண்களை இரட்டைப்படை எண்ணிக்கையில் வலம் வந்து, இந்த தூண்களை பிடித்துக்கொண்டு சுவாமியின் திருமுகம் மற்றும் திருப்பாதத்தை தரிசனம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்பதும், திருமணமாகாதவர்கள் தூண்களை தழுவி வணங்கினால் அப்பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. பெருமாள் கோவில்களில், இத்தலத்திலும் ஸ்ரீரங்கத்திலும் தான் மோட்சத் தூண்களைக் நாம் காண முடியும்.
வைணவ நவக்கிரக தலங்களில் இத்தலம் குரு பரிகார தலமாகக் கருதப்படுகிறது.
ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் கோவில்
சங்கின் ஒலியும், எக்காள ஒலியும் எழுப்பும் அபூர்வ இசைத் தூண்
ஒரு சாண் உயரத்தில் செதுக்கப்பட்ட நுணுக்கமான கிருஷ்ணன் சிற்பம்
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் அமைந்துள்ள திவ்ய தேசம் ஆழ்வார் திருநகரி. இத்தலம் பிரம்மாவுக்கு குருவாகப் பெருமாள் வந்த திருத்தலம் என்பதால் குருகூர் எனப்படுகின்றது. முதன் முதலில் பெருமாள் தோன்றி நின்ற தலம் என்பதால், பெருமாள் ஆதிநாதன் என திருப்பெயர் பெற்றார். ஆதிநாதவல்லி மற்றும் குருகூர்வல்லி என இரண்டு தாயார்கள் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலித்து வருகிறார்கள். இத்தலம் நம்மாழ்வார் அவதரித்த தலமாகும். இதனால் இத்தலம் ஆழ்வார் திருநகரி என்றழைக்கப்பட்டது. நவதிருப்பதிகளுள் குருவுக்குரிய (வியாழன்) தலமாகும்.
இக்கோவில் சிற்பக்கலையிலும் சிறந்து விளங்குகிறது. அற்புதமான கற்சிலைகள் ஆலயம் முழுவதும் நிறைந்துள்ளன. கை விளக்கேந்திய பெண் சிற்பங்கள், பல வித குரங்குகள், யாளி உருவம் அமைந்த தூண்கள் ஆகியவற்றை இக்கோவிலில் காணலாம். நம்மாழ்வார் சன்னதியில் உள்ள இராமாயண சிற்பங்கள் மிகவும அருமை. ஒரு சாண் உயரத்தில் செதுக்கப்பட்ட கிருஷ்ணன் சிற்பத்தின் நுணுக்கம் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்தும்.
தூண் புடைப்புச் சிற்பங்களாக யானை, காளையை அடக்கும் வீரன், சிம்மம் போன்ற அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோவிலில் சிற்பக் கலைக்கு மகுடம் வைத்தாற்போல் குழல் தூண்களும், கல் நாதஸ்வரமும், கல் படிமங்களும், இசைத் தூண்களும்உள்ளன.
இந்த ஆலயத்தில் இரண்டு இசைத் தூண்கள் உள்ளன. அதில் ஒன்றை தட்டினால் மூன்று சுரங்களை எழுப்புகிறது . மற்றதில் இரண்டு துவாரங்கள் போடப்பட்டுள்ளன. இந்தத் இசைத் தூணின் இரு பக்கமும் இருவர் நின்று கொண்டு, மாறி மாறி ஊதினால் ஒன்றில் சங்கின் ஒலியும், மற்றதில் எக்காள ஒலியும் கேட்கிறது.
இக்கோவிலில் கல்லால் ஆன நாதஸ்வரம் ஒன்று உள்ளது. நாதஸ்வரத்தின் அடிபாகத்தில் பித்தளைப்பூண் போடப்பட்டுள்ளது. இந்த இசைக்கருவி சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னதாக கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் கோவிலுக்குக் கொடுக்கப்பட்டது. கோவில் சிற்பம், இசை, கட்டிடக்கலையில் மட்டுமல்ல ஓவியத்திலும் சிறந்து விளங்குகிறது. ஸ்ரீ நம்மாழ்வார் தனிக் கோவிலைச் சுற்றி உள்ள பிரகாரச் சுவர்களில் 108 திவ்யதேசப் பெருமாள்களின் உருவங்கள் ஓவியங்களாய்த் தீட்டப் பட்டுள்ளன. பல் வேறு வரலாற்றுக் கதைகளும் ஓவியங்களாய்த் வரையப்பட்டுள்ளன.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
ஸ்ரீரங்கம் நெல் அளவைத் திருநாள்
நெல் அளவை கணக்கிட, படியளக்கும் பெருமாள்
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திவ்ய தேசம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். உலகத்து உயிர்களை காத்து ரட்சிப்பவர் பெருமாள். இதைத்தான் 'பகவான் எல்லோருக்கும் படி அளக்கிறான்' என்று வழக்கத்தில் சொல்வார்கள். ஆனால், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் நிஜமாகவே, வருஷத்துக்கு ஏழு தடவை படியளக்கிறார். சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி ,தை ,மாசி மற்றும் பங்குனி என ஏழு மாதங்களில் நெல் அளவை திருநாள், ஸ்ரீரங்கத்தில் நடைபெற்று வருகிறது.மாதங்களின் பிரம்மோற்சவ காலங்களில் அதன் ஏழாம் திருநாளன்று, நெல் அளவைக் கண்டருளப்படுகிறது.
நெல் அளவைத் திருநாள் அன்று, கருவறையிலிருந்து, ஸ்ரீதேவி - பூதேவி துணைவரக் கிளம்புகிறார் நம்பெருமாள்.
நெல் அளவைத் திருநாள் அன்று, கருவறையில் இருந்து நம்பெருமாள் இந்தப் பட்டத்துக்கு தானிய வரவு எவ்வளவு?; செலவு எவ்வளவு? மீதி இருப்பு எவ்வளவு?... என்று கணக்கிட்டுப் பார்க்க, ஸ்ரீதேவி பூதேவி சகிதமாகக் கிளம்புகிறார். கணவரின் சரிபங்கான மனைவிக்கு எல்லா விஷயமும் தெரிந்திருக்க வேண்டும். தம்பதிகளிடையே எந்த ஒளிவு மறைவும் கூடாது என்று நமக்கு உணர்த்துவதற்காகத்தான், நெல் அளவைத் திருநாள் அன்று பூதேவி ஸ்ரீதேவி சகிதமாக எழுந்தருளுகிறார்.
நம்பெருமாள். ஆரியபட்டாள் வாசல் வழியே வந்து செங்கமலத் தாயார் சன்னிதி எனப்படும் திருக்கொட்டாரம் முன்பு நாலு கால் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அப்போது பாசிப்பயறும் பானகமும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகின்றன. செங்கமலத் தாயார் சன்னிதி பூஜை பரிசாரகம் செய்பவர் ஒரு தட்டில் வெற்றிலைப் பாக்கு வைத்து நம் பெருமாளை எதிர் சென்று வணங்கி வரவேற்கிறார். அவருக்கு மரியாதை செய்யப்படுகிறது.
பெருமாள் அருகில் இருக்கும் ஸ்தானிகர் அருளிப்பாடி, கார் அளப்பானை அழைக்கிறார். ஸ்தானிகர் குரல் கேட்டு, 'ஆயிந்தேன் ஆயிந்தேன்' எனச் சொல்லி விரைந்து சென்று பெருமாள் முன்பு மிகப் பணிவாக நிற்கிறார் அளவைக்காரர். அவருக்கு தீர்த்தம், சந்தனம், மஞ்சள்பொடி அளித்து, பரிவட்டம் கட்டி, சடாரி சாத்தி மரியாதை செய்யப்படுகிறது. பெருமாள் பாதமான சடாரி சாத்தினாலே அளவைக்காரருக்கு உத்தரவு வந்துவிட்டது என்று பொருள். உடனே கார் அளப்பான் எனப்படும் அளவைக்காரர், பித்தளை மரக்கால் கொண்டு நெல்லை அளக்கத் தொடங்குகிறார். திருவரங்கம் என சொல்லி முதல் மரக்கால் நெல்லை அளந்து போடுகிறார். அடுத்து பெரிய கோயில் எனக் கூறி இரண்டாவது மரக்கால் நெல்லை அளந்து போடுகிறார். அதன் பின்னர் வரிசையாக மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு என அளக்கப்படுகிறது. ஒன்பது என அளக்கும்போது எங்கிருந்தோ அசரீரியாக ஒரு குரல் கேட்கிறது. ‘நிரவி விட்டு அள’ என்று ஸ்தானிகர்தான் குரல் கொடுக்கிறார். ‘சரியாக அளந்து போடு’ என்று பெருமாளை கட்டளையிடுவதாக இது ஐதீகம்.
அந்தக் காலத்தில் இருந்து எல்லாமே எம்பெருமானின் நேரடி பார்வை நடைபெற்று வந்துள்ளதாக நம்பிக்கை. தெய்வ காரியங்களுக்கு வேண்டிய அனைத்து பொருட்களும் திருக்கொட்டாரத்தில் இருந்து எடுத்து அனுப்பப்படுகிறது. அந்த வகையில் திருக்கொட்டாரம் ஒரு பொக்கிஷம். அங்கு ஆறு தானிய சேமிப்புக் கிடங்குகள் அமைந்துள்ளன. நாடு செழிக்கவும் மக்கள் ஆரோக்கியமும், தானிய உற்பத்தி சேமிப்பும் மிக மிக முக்கியம். தற்போதும் அதை வலியுறுத்தி வருகிறது ஸ்ரீரங்கம் கோயிலின் நெல் அளவைத் திருநாள்.
உலகம் யாவுக்கும் படி அளப்பவர் பெருமாள். ஒவ்வொன்றாக எண்ணிப் போட்டால் எந்தக் காலத்தில் எண்ணி முடிப்பது? அதனால் அதன் பின்னர் ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம், லட்சம், பத்து லட்சம், கோடி, கோடியோ கோடி என அளந்து போடப்படுகிறது. தனது நேரடிப் பார்வையில் 'நெல் அளவை' கண்ட நம்பெருமாள், அதன் பிறகு ஸ்ரீதேவி பூதேவியுடன் இணைந்து பூந்தேரில் எழுந்தருளி வீதி உலா வருகிறார், உலகிற்கெல்லாம் படியளக்கும் பெருமாள். இப்படியாக, ஸ்ரீரங்கத்தில் நெல் அளவை திருநாள் கொண்டாடப்படுகிறது .
மகாபலிபுரம் தலசயனப் பெருமாள் கோவில்
உற்சவப்பெருமாள் கையில் தாமரை மலருடன் நிற்கும் ஒரே திருத்தலம்
மாசி மகத்தன்று நீராடுவது, ராமேஸ்வரத்தில் நீராடிய பலனைத் தரும் திவ்ய தேசம்
மகாபலிபுரத்தில் அமைந்திருக்கும் திவ்ய தேசம் தலசயன பெருமாள் கோவில். மூலவர் தலசயனப் பெருமாள், வலது திருக்கரத்தை தன் மார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்துள்ளார். இவரை வியாழக்கிழமைகளில் வழிபட குருவருளும், திருவருளும் கிட்டும். கல்விக் கேள்விகளில் சிறந்து விளங்கலாம். மேலும் கருவறையில் மூலவரின் பாதத்தின் அருகில் புண்டரீக மகரிஷி, பெருமாளை வணங்கிய நிலையில் உள்ளார்.
இத்தல உற்சவரின் திருநாமம் 'உலகுய்ய நின்றான்' என்பதாகும். இந்தக் கோவிலை எழுப்பிய மன்னன் பாராங்குசன், பாம்பு புற்றினுள் மறைந்திருந்த இந்த உற்சவரைக் கோவிலில் எழுந்தருள்வித்தான். கலிகாலத்தில் நம்மை எல்லாம் காத்து இந்தப் புவியை உய்விக்க வந்தவர் இந்த பெருமாள். இந்த உற்சவரின் கையில் புண்டரீகரின் தாமரை மலர் மொட்டு உள்ளது. அதனை உற்சவர், மூலவரின் பாதங்களில் சேர்ப்பிப்பதாக ஐதீகம். உற்சவப்பெருமாள் கையில் தாமரை மலருடன் நிற்கும் ஒரே திருத்தலம் தலசயனப் பெருமாள் கோவில் தான்.
பெருமாள் கையில் தாமரை மலருடன் இருப்பதற்குக் காரணமானவர் புண்டரீக மகரிஷிதான். புண்டரீக மகரிஷி இத்தல பெருமாளின் திருவடியில் தாமரை மலர்களை வைத்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பெருமாளின் காலடியில் அன்றலர்ந்த தாமரை மலரை வைத்து வணங்க வேண்டும் என்ற ஆவலில் இவர் மாமல்லை கடற்கரையில் தாமரை மலரை வைத்துவிட்டு, பாற்கடலுக்கு வழி ஏற்பாடு செய்ய முயற்சித்தார். அதற்காக கடல்நீரை தொடர்ந்து இரைத்துக் கொண்டிருந்தார். இவரின் தளரா முயற்சியையும் தாளாத பக்தியையும் கண்ட திருமால் ஒரு முதியவராக உருக்கொண்டு முனிவரிடம் வந்து, எனக்கு பசியும் களைப்புமாக உள்ளது. ஊருக்குள் சென்று உணவு வாங்கி வாருங்கள். அதுவரை நானே கடல்நீரை உமக்காக இரைக்கிறேன் என்று அனுப்பினார். முனிவரும் உணவு வாங்கிவந்து பார்த்தபோது கடல் உள்வாங்கி இருந்தது. முதியவரைக் காணோம். அப்போது ஒரு குரல் கேட்டது. முனிவர் அவ்விடத்தைப் பார்க்க, தான் வைத்த தாமரை மலரை பாதங்களில் வைத்துக்கொண்டு திருமால் தரையில் பள்ளிகொண்டு ரிஷிக்கு காட்சி தந்தார். பெருமாள் நீர் இரைத்த இந்த கடல் பகுதி அர்த்தசேது என்று அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் மகம் நட்சத்திரம் அன்று, கடல், நதி மற்றும் குளங்களில் நீராடுவது மிக விசேஷமாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் மாசி மகத்தன்று அந்த நீர் நிலைகளில்கூட, புண்ணிய நதியாகிய கங்கையும் கலந்திருப்பதாக கருதப்படுகிறது. இத்தலம் தீர்த்தவாரிக்கு பெயர் பெற்றது. ஸ்ரீமன் நாராயணனே தன் திருக்கரத்தால் நீர் இரைத்த இந்த அர்த்தசேது கடலில், மாசி மகத்தன்று நீராடுவது பெரும் புண்ணியம். இந்த இடத்தில் மாசி மகம் அன்று நீராடுவது, வருடம் முழுவதும் செய்த பாவத்தை நீக்கும். இங்கு மாசி மகத்தன்று நீராடுவது ராமேஸ்வரத்தில் நீராடிய பலனைத் தரும்.