காஞ்சிபுரம் திருத்தண்கா விளக்கொளி பெருமாள் கோவில்
திருமால் ஒளி வடிவில் காட்சி தந்த திவ்ய தேசம்
கார்த்திகை தீபத் திருநாளன்று பக்தர்கள் பெருமாளுக்கு விளக்குகள் ஏற்றி வழிபடும் தலம்
திருவண்ணாமலையில் சிவபெருமான் ஜோதி சொரூபமாக எழுந்தருளினார். அது போல வைணவ மரபில், காஞ்சிபுரத்தில் பெருமாள் விளக்கொளி பெருமாளாக (ஒளி வடிவிலான பெருமாளாக) அவதரித்தார். அவருக்கு தீபப் பிரகாசர் என்ற பெயரும் உண்டு. தர்ப்பை வளர்ந்த பகுதியாக இருந்த காட்டில் திருமால் ஒளி வடிவில் காட்சி தந்ததால், இப் பகுதிக்கு தூப்புல் எனவும், திருத்தண்கா எனவும் பெயர்.இங்கு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். தாயார் திருநாமம் மரகதவல்லி.
108 திவ்ய தேசங்களில் இத்தலமும் ஒன்று. திருமங்கை ஆழ்வார் இரண்டு பாசுரங்களால் இத்தலத்தை மங்களாசாசனம் செய்திருக்கிறார். வைணவ ஆச்சாரியர்களில் ஒருவரான வேதாந்த தேசிகரின் அவதாரத் தலம் இது.
இத்தலத்தில் பெருமாள் ஒளியாகக் காட்சி தந்ததன் பின்னணியில் ஒரு புராண வரலாறு உள்ளது. படைத்தல் கடவுளான பிரம்மதேவர், தனக்கு பூலோகத்தில் கோவில் ஏதும் இல்லை என்ற காரணத்தால் வருத்தப்பட்டு, சிவனை நோக்கி பிரம்மாண்ட யாகம் ஒன்றை நடத்தினார். ஆனால், அந்த யாகத் திற்கு தன் மனைவி சரஸ்வதி தேவியை அழைக்கவில்லை. கோபம் கொண்ட சரஸ்வதி, பிரம்மா நடத்தும் யாகம், வெளிச்சம் இல்லாமல் இருண்டு போய் தடைபடட்டும் என சாபம் இட்டாள். பிரம்மா காக்கும் கடவுள் விஷ்ணுவிடம், தனது யாகம் தடைபடாமல் இருக்க வேண்டினார். விஷ்ணுவும் பிரம்மனின் கோரிக்கையை ஏற்று ஜோதி வடிவில் காட்சி தந்து பிரம்மனின் யாகம் சிறப்பாக நடக்க அருள்புரிந்தார். இதனால் தான் இங்குள்ள பெருமாள் 'விளக்கொளி பெருமாள்' என்றும் 'தீபப்பிரகாசர்' என்றும் அழைக்கப்படுகிறார். சரஸ்வதியையும் சமாதானம் செய்தார்.
இந்தப் புராண நிகழ்வை முன்னிட்டுத்தான், கார்த்திகை தீபத் திருநாளன்று, பக்தர்கள் திருத்தண்கா (தூப்புல்) பகுதியில் அமைந்துள்ள விளக்கொளி பெருமாள் (தீபப் பிரகாசர்) கோவிலுக்கு வருகை தருகின்றனர். அங்கு அவர்கள் பெருமாளுக்கு விளக்குகள் ஏற்றி வழிபடுகிறார்கள்.