திருவண்ணாமலை வடக்குவீதி ஆதி காமாட்சியம்மன் கோவில்

திருக்கார்த்திகை தீபத்திருவிழா தோன்ற மூல காரணமாக அமைந்த காமாட்சியம்மன்

காமாட்சியம்மன் தமது வலது கரத்தில் சிவலிங்கம் தாங்கியபடி, அக்னி குண்டத்தின்மீது நின்றவாறு தவக்கோலத்தில் இருக்கும் அபூர்வ காட்சி

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு வடக்கு புறத்தில் அமைந்துள்ள வடக்கு வீதியில் அமைந்திருக்கின்றது ஆதி காமாட்சி அம்மன் கோவில். இத்தலம் அருணாசலேஸ்வரர் கோவிலுடன் இணைந்த கோவிலாகும்.

திருக்கார்த்திகை தீபத்திருவிழா தோன்ற மூல காரணமாக அமைந்த, புராதன வரலாற்று சிறப்புமிக்க பழமையும் பெருமையும் வாய்ந்த இக்கோவிலில், மூலவராக ஸ்ரீ காமாட்சியம்மன் தமது வலது கரத்தில் சிவலிங்கம் தாங்கியபடி அக்னி குண்டத்தின்மீது நின்றவாறு தவக்கோலத்தில் காட்சியளிப்பது உலகில் வேறெங்கும் காண இயலாத அபூர்வமான திருக்கோலமாகும். ஸ்ரீலலிதா ஸகஸ்ர நாமத்தில் நிறைவாக கூறியுள்ளது போல, ஸ்ரீசிவா சிவசக்தி ஐக்கிய ரூபினி லலிதாம்பிகா என்ற வாக்கியப்படி, சக்திக்குள் சிவம் ஒடுங்கி, சிவ ஜோதியுள் சக்தி இரண்டறக் கலந்தது இங்குதான். ஆகையால் ஸ்ரீவித்யா உபாசகர்கள் அனைவரும் வந்து தரிசிக்க வேண்டிய முக்கிய பீடம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

திருக்கயிலாயத்தில் சிவபெருமானின் கண்களை மூடிய பாவம் போக்க, பார்வதி தேவி காஞ்சி மாநகரில் காமாட்சியாக அவதரித்தார். காஞ்சிபுரத்தில் பார்வதி தேவி கம்பை நதிக்கரையில் மணலில் லிங்கம் அமைத்து சிவ பூஜை செய்து வந்தார். அம்பிகை பார்வதியின் தவப் பெருமையை உலகுக்கு உணர்த்த, சிவபெருமான் கம்பா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்படிச் செய்தார். வெள்ளத்தில் மணல் லிங்கம் அடித்துச் செல்லாதபடி, லிங்கத்தை அம்பிகை தழுவிக் கட்டிக்கொண்டார். அம்பிகையின் இந்த செயலால் மகிழ்ந்த சிவபெருமான், பார்வதி தேவியின் பாவத்தை போக்கி அருளினார். அப்பொழுது பார்வதி தேவி 'உம்மை எப்பொழுதும் பிரியாமலிருக்க உமது மேனியில் இடப்பாகம் அளிக்க வேண்டும்' என சிவபெருமானிடம் வேண்டினார். சிவபெருமான் 'திருவண்ணாமலை சென்று என்னை நோக்கி தவமிரு. அங்கே உமக்கு இடப்பாகம் அளிப்போம்' எனக் கூறி மறைந்தார். திருவண்ணாமலைக்கு வரும் வழியில் காமாட்சி அம்மையார், தவம் செய்ய ஏதுவாக மைந்தனாகிய முருகன், தன் தாய்க்காக வாழை இலை கொண்டு பந்தலமைத்தார். சேயாறு எனப்படும் செய்யாறை உருவாக்கினார். (இன்று கூட அந்த ஊர் வாழைப்பந்தல்” என்றழைக்கப்படுகிறது) பின்னர் திருவண்ணாமலை வந்தடைந்த காமாட்சியம்மன் வடக்கு வீதியில் நுழைந்து. கௌதம மகரிஷியின் ஆசிரமத்தை (பவழக்குன்று) வந்தடைந்தர். கௌதம மகரிஷியின் ஆலோசனையின்படி மலைக்கு நேர்கிழக்கு திசையில் பர்ணசாலை அமைத்து தவமியற்றினார்.

அன்னையின் தவத்தை கலைக்க முயன்ற மகிஷாசூரனை எதிர்த்து சப்தமாதர்களும், அஷ்டபைரவர்களும், காளியும், துந்துமியும், அருனைநாயகியும் கடும்போர்புரிந்தனர். ஆனாலும் எருமைதலை கொண்ட மகிஷாசூரனை அழிக்க இயலவில்லை. பின்னர் மகாசக்தி துர்க்கையம்மன், மகிடன் தலையை தனது வாளால் வெட்டி வீழ்த்தி, தனது காலால் அவனது தலையை மிதித்த பின்னர் மகிடன் உயிர் பிரிந்தது. உயிர் பிரிந்து தலையற்று கிடந்த மகிஷாசூரனுடைய அறுபட்ட கழுத்தில் ஒரு சிவலிங்கம் இருந்தது. கொடிய அரக்கணுடைய கண்டத்தில் ஒரு சிவலிங்கமா என ஆச்சர்யத்துடன் அதனைக் கொண்டு வந்து காமாட்சி தேவியிடம் கொடுத்தாள் துர்க்கை. தேவியாரின் திருக்கரத்திலேயே ஓட்டிக்கொண்டுவிட்டது அந்த லிங்கம். தன் கையோடு சிவலிங்கம் ஒட்டிக் கொண்டதற்கான காரணம் என்னவென்று கௌதம மகரிஷியிடம் கேட்டார் காமாட்சி தேவியார். பல காலமாக மகிஷாசூரனுடைய கண்டத்தில் சிவலிங்கம் இருந்தபடியாலும், அவன் சிவகடாட்சபதவியை அடைந்தவன் என்பதாலும் அவனை கொன்ற இந்த பாவம் நிகழ்ந்தது.

பாவம் தீர நவதீர்த்தங்களில் நீராட்சி சிவபூஜை செய்ய வேண்டு என்று விவரித்தார் கௌதமர். துர்க்கையால் உருவாக்கப்பட்ட கட்க தீர்த்தத்தில் நீராடிய பின்னர் கையில் ஒட்டியிருந்த சிவலிங்கம் விடுபட்டது. அதனை கரை மீது பிரதிஷ்டை செய்து பாபவிநாசகர் என்று பெயரிட்டு பூஜித்து வந்தார்.பின்னர் கார்த்திகை மாதம் பௌர்ணமியும் கிருத்திகையும் சேரும்நன்நாளில் மலைமேல் ஓரு பிரகாசம் உண்டாகி 'பெண்ணே இம்மலையை இடமிருந்து வலமாக சுற்றி நடந்து வா' என்று சொல்லி அக்கணமே மறைந்தது. அவ்வாறே அம்மனும் கிரிவலம் சென்று அதே இடம் வந்தடைந்தபோது சிவபெருமான். பார்வதியை அழைத்து தனது மேனியில் இடப்பாகம் அளித்து அர்த்தநாரிஸ்வரராக ஜோதி ரூபமாக காட்சியளித்தார்.

இன்று கூட கார்த்திகை தீபத்திருநாளில் காமிக, ஆகம விதிப்படி கார்த்திகை மாதம் பௌர்ணமியும் கிருத்திகையும் சேரும் நன்நாளில் சரியாக மாலை 6-00 மணிக்கு அருணாச்சலேஸ்வரர் சன்னதியில் கொடிமரத்திற்கு முன்னதாக ஸ்ரீஅர்த்தநாரிஸ்வரர் எழுந்தருளிய பின்னரே மலைமீது தீபஜோதி ரூபமாக காட்சி அளிக்கின்றார். அகிலமே போற்றும் கார்த்திகை தீபப்பெருவிழா தோன்ற காரணமாகஅமைந்த இந்த வரலாற்று நிகழ்வுகள் அனைத்தும் நடைபெற்றது, இந்த வடக்குவீதி ஸ்ரீகாமாட்சியம்மன் ஆலய வளாகத்தில் தான் என்று ஸ்காந்தபுராணம் மற்றும் அருணாச்சலபுராண நூல்கள் சான்றளிக்கின்றன.

இந்த அம்மனை கணவனோடு கருத்தொற்றுமை வேண்டுகிற பெண்கள், கணவனது நலம் மேம்பட விரும்பும் பெண்கள் மற்றும் திருமணமாகாத கன்னிப்பெண்கள் இத்தலத்திற்கு வந்து தொடர்ந்து 5 வாரம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம்.

 
Previous
Previous

காஞ்சிபுரம் திருத்தண்கா விளக்கொளி பெருமாள் கோவில்

Next
Next

ராமகிரி வாலீஸ்வரர் கோவில்