ராமகிரி வாலீஸ்வரர் கோவில்
வருடம் முழுவதும் நந்தி வாயில் இருந்து தண்ணீர் அருவியாய் பாயும் அதிசயம்
சென்னை - திருப்பதி சாலையில், சென்னையில் இருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் நாகலாபுரத்துக்கும் பிச்சாட்டூருக்கும் இடையில் உள்ளது ராமகிரி என்ற கிராமம். இத்தலத்து இறைவன் திருநாமம் வாலீஸ்வரர். இறைவியின் திருநாமம் மரகதாம்பிகை. காரியாற்றின் கரையில் உள்ளதால் இவ்வூர் காரிக்கரை என்றும் அழைக்கப்படுகிறது. சுந்தரமூர்த்தி நாயனார், தம்முடைய தேவாரத்தில் இடையாற்றுத் தொகை என்ற பதிகத்தில் இந்தத் தலத்தை, 'கடங்கள் ஊர் திருக்காரிக்கரை கயிலாயம்' என்று வைப்புத்தலமாக வைத்துப் பாடி இருக்கிறார்.
இக்கோவிலுக்கு வெளியே ஒரு தீர்த்தக் குளம் உள்ளது. இந்தத் தீர்த்தம் நந்தி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. தீர்த்தக்குளத்தின் ஒரு கரையில் இருக்கும் நந்தி சிலையின் வாயில் இருந்து தண்ணீர், தீர்த்தக் குளத்துக்குள் விழுந்துகொண்டே இருக்கிறது. நந்தியின் வாயிலிருந்து நீர் அருவியாய் பாய்கிறது .இந்த நந்தியின் வாயிலிருந்து கொட்டும் நீர் வருடம் முழுவதும் அதாவது 365 நாட்களும் அளவு மாறாமல் அதே அளவு நீர் வெளியேறுகின்றது. இந்த நீர் மிகவும் சுவை மிகுந்ததாகவும், இனிப்புத் தன்மை உடையதாகவும் இருக்கின்றது.