திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவில்
அம்பிகை திரிபுராசுந்தரி அம்மனுக்கு ஐப்பசி மாத பௌர்ணமியின்போது அன்னாபிஷேகம் நடைபெறும் தனிச்சிறப்பு
சென்னையிலிருந்து 42 கி.மீ. தொலைவில் உள்ள திருவள்ளூர் நகரத்தில், புகழ்பெற்ற திவ்ய தேசமான திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவிலுக்குப் பின்புறம் அமைந்துள்ளது தீர்த்தீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் திரிபுர சுந்தரி அம்மன்.
கருவறையில் திரிபுரசுந்தரி அம்மன் சாந்த சொரூபிணியாக நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார். இந்த தலத்து அம்பிகை திரிபுரசுந்தரி அம்மனுக்கு வேறு எந்த அம்பிகைக்கும் இல்லாத தனிச்சிறப்பு உண்டு. பொதுவாக எல்லா சிவன் கோவில்களிலும் ஐப்பசி மாத பௌர்ணமியின்போது சிவபெருமானுக்கு மட்டுமே அன்னாபிஷேகம் நடைபெறும். ஆனால் இக்கோவிலில் அம்பிகை திரிபுராசுந்தரி அம்மனுக்கும் ஐப்பசி மாத பௌர்ணமியின்போது அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது. இது இத்தலத்து அம்பிகை திரிபுரசுந்தரி அம்மனின் தனி சிறப்பாகும்.
நசரத்பேட்டை காசி விசுவநாதர் கோவில்
நந்தி பகவானும், பாம்பும் இணைந்து காட்சி தரும் அபூர்வ தோற்றம்
துவாரபாலகர்களின் அருகில் அதிகார நந்தி இருக்கும் அரிய காட்சி
சென்னை பூந்தமல்லியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நசரத் பேட்டை காசி விசுவநாதர் கோவில். இறைவியின் திருநாமம் விசாலாட்சி.இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. புராண காலத்தில் இவ்வூர் 'புருஷமங்களம்', 'தருமபுரி ஷேத்ரம்' முதலான பெயர்களால் அழைக்கப்பட்ட பெருமை உடையது.
காசியில் உள்ளது போல இத்தலத்து விசுவநாதரின் சிவலிங்கத் திருமேனி மிகவும் சிறியது.கருவறையின் நுழைவுவாசலின் இருபுறங்களிலும் துவாரபாலகர்கள் காட்சி தருகின்றனர். துவாரபாலகர்களின் அருகில் அதிகார நந்தி காட்சி தருவது ஒரு அரிய காட்சியாகும்.
இந்த கோவிலில் கார்கோடக மகரிஷி ஈசனை பூஜித்து வழிபட்டதாக ஐதீகம். கார்கோடக மகரிஷி காசியிலிருந்து இவரை எடுத்துவந்து இங்கு பிரதிஷ்டை செய்தார். கார்கோடக மகரிஷியின் ஜீவசமாதி அருகிலுள்ள பூந்தமல்லியில் உள்ள வைத்தியநாத சுவாமி கோவிலில் இருக்கின்றது.
இந்தக் கோவிலில் நந்தி பகவான் தனது தலையை வலது பக்கம் சற்று சாய்த்து, புன்னகை தவழும் முகத்துடன் தனது கால்களை மடித்து அமர்ந்திருக்கிறார். அவரது திருமேனியை சலங்கை மணிகளும், ஆபரணங்களும் அலங்கரிக்கின்றன. அவரது மடிந்த இடது முன் பாதத்தின் கீழ் பாம்பு ஒன்று காட்சி அளிக்கிறது. இங்குள்ள பாம்பு, இத்தலத்தில் முக்தி பெற்ற கார்கோடக மகரிஷியைக் குறிக்கின்றது. இப்படி நந்தி பகவானும், பாம்பும் இணைந்து காட்சி தருவது, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத ஒரு அபூர்வ தோற்றமாகும்.
நசரத் பேட்டை அகரம்மேல் பச்சை வாரணப் பெருமாள் கோவில்
பெருமாள் பச்சை நிற யானையாக வடிவெடுத்த தலம்
சென்னை மாநகரத்தின் ஒரு பகுதியான பூந்தமல்லியிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள நசரத் பேட்டை என்ற இடத்திற்கு அருகில், அகரம்மேல் என்னும் ஊரில் அமைந்துள்ளது பச்சை வாரணப் பெருமாள் கோவில்.தாயார் திருநாமம் அமிர்தவல்லி தாயார்.இக்கோவில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.ஸ்ரீ ராமானுஜரின் மருமகனும், அவரது இரண்டு சீடர்களில் ஒருவருமான முதலியாண்டான் (கி.பி 1027 - கி பி 1132) அவதரித்த தலம் இது. முதலியாண்டானின் இயற்பெயர் தாசரதி. இந்த கிராமம் அவரது பெயரால் தசரதி பேட்டை என்று பெயரிடப்பட்டது, பின்னர் நசரத்பேட்டை என்று மாறியது.
கருவறையில் மூலவர் பச்சை வாரணப் பெருமாள், ஸ்ரீ தேவி பூதேவியுடன் மிகப்பெரிய திருமேனியுடன் ஒரு காலை மடக்கியும், மற்றொரு காலை நீட்டியும் மிக அழகாக காட்சிதருகிறார். பெருமாளின் இந்த திருநாமம் மகாபாரத நிகழ்ச்சியுடன் தொடர்புடையது.
பாண்டவர்களில் மூத்தவரான தருமர் யாகம் செய்தபோது துஷ்டர்கள் அதை செய்ய விடாமல் தடுத்தனர். அப்போது கிருஷ்ணர் பச்சை நிற யானை வடிவெடுத்து, துஷ்டர்களை விரட்டினார். அதனால் இங்கு இறைவனுக்கு பச்சை வாரணப் பெருமாள் என்ற பெயர். பெருமாளின் இந்தப் பெயர் காரணத்திற்கு, மற்றொரு மகாபாரத நிகழ்ச்சியும் உள்ளது. மகாபாரதப் போரின் போது அஸ்வத்தாமன் என்ற யானை கொல்லப்பட்டபோது, தருமர் தனது குருவான துரோணாச்சாரியாரிடம், அவரது மகனான அஸ்வத்தாமன் கொல்லப்பட்டதாக பொய் சொன்னார். இந்தச் செய்தியைக் கேட்ட துரோணாச்சாரியார் திசை திருப்பப்பட்டு அதிர்ச்சியடைந்தார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, திருஷ்டத்யும்னரால், துரோணாச்சாரியார் தலை துண்டிக்கப்பட்டு இறந்தார். இந்தப் பாவத்திலிருந்து விடுபட, நாரத முனிவரின் ஆலோசனையின் பேரில், தருமர் இந்த இடத்தில் ஒரு யாகம் செய்தார். கிருஷ்ணர் யாகத்திலிருந்து பச்சை யானை வடிவில் தோன்றி அவரை ஆசீர்வதித்தார். எனவே, அவர் சமஸ்கிருதத்தில் ஹரித வாரண பெருமாள் (ஹரித என்றால் பச்சை மற்றும் வாரண என்றால் யானை) அல்லது தமிழில் பச்சை வாரண பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். தருமரின் பிரார்த்தனைகளை ஏற்று, பெருமாள் இத்தலத்தில் எழுந்தருளினார்
கோவில் கொடிக் கம்பத்தின் முன்னே விளக்கு கம்பம் உள்ளது. அதன் முன் சிறிய யானை சிலை உள்ளது. யானைக்கு நேராக விளக்கு கம்பத்தில் ஆஞ்சநேயரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது . இது இக்கோவிலின் சிறப்பை விளக்குகின்றது.
திருவாலங்காடு பத்ரகாளி அம்மன் கோவில்
திருவாலங்காடு சிவபெருமானை வழிபடும் முன் வணங்க வேண்டிய பத்ரகாளி அம்மன்
தேவியின் 51 சக்தி பீடங்களில் காளி பீடமாக இருக்கும் தலம்
திருவள்ளூர் மாவட்டம், அரக்கோணத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவாலங்காடு பத்ரகாளி அம்மன் கோவில். சிவபெருமானின் ஐந்து நடன சபைகளில் ஒன்றான ரத்தின சபை அமைந்திருக்கும் திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோவில் அருகில் இக்கோவில் அமைந்துள்ளது. தந்திர சூடாமணி நூல் கூறும் தேவியின் 51 சக்தி பீடங்களில், இது காளி பீடம் ஆகும்.
மிகச்சிறிய இக்கோவிலின் கருவறையில், பத்ரகாளி அம்மன் சாந்த சொரூபியாக எட்டு திருக்கரங்களுடன், முழங்கால்களில் கால்களை மடக்கி நடனமாடும் நிலையில் உள்ளார். பாதங்களை தரையில் ஊன்றி, கணுக்காலில் நடனக் கலைஞரின் மணிகளுடன் காட்சி அளிக்கிறாள்.
இந்த பத்ரகாளி அம்மன் தனி கோவில் கொண்டு எழுந்தருளியதன் பின்னணியில் ஒரு புராண நிகழ்ச்சி உள்ளது.
சும்பன், நிசும்பன் என்ற இரு அசுரர்கள் ஆலமரங்கள் அதிகமாக உள்ள காட்டில் தங்கி தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் துன்பம் விளைவித்து வந்தனர். இதனால் பாதிப்படைந்தவர்கள் சிவ பார்வதியிடம் சென்று முறையிட்டனர். பார்வதி தேவி தன் பார்வையால் காளியை தோற்றுவித்து அரக்கர்களை அழித்து விட்டு, அவளையே ஆலங்காட்டிற்கு தலைவியாக்கினாள். அரக்கர்களை அழித்து அவர்களது ரத்தத்தை உண்ட காளி, பல கோர செயல்களை புரிந்தாள். இதனால் முஞ்சிகேச கார்க்கோடக முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க சிவன் கோர வடிவம் கொண்டு ஆலங்காட்டை அடைந்தார். அவரை கண்ட காளி, "நீ என்னுடன் நடனமாடி வெற்றிபெற்றால் இந்த ஆலங்காட்டை ஆளலாம்" என்றாள். சிவனும் காளியுடன் ஊர்த்துவ தாண்டவம் ஆடினார். அப்போது தன் காதில் இருந்த மணியை கீழே விழவைத்து, பின் அதை தன் இடக்கால் பெருவிரலால் எடுத்து மீண்டும் தன் காதில் பொருத்தினார்.
இதைக்கண்ட காளி, இது போன்ற தாண்டவம் தன்னால் ஆட இயலாது என தோற்று விடுகிறாள். அப்போது காளியின் முன் இறைவன் தோன்றி, "என்னையன்றி உனக்கு சமமானவர் வேறு யாரும் கிடையாது. எனவே இத்தலத்தில் என்னை வழிபாடு செய்ய வருபவர்கள், முதலில் உன்னை வழிபாடு செய்த பின் என்னை வழிபட்டால் தான் முழு பலன் கிடைக்கும்" என்று வரமளித்தார். அன்றிலிருந்து காளி தனி கோவில் கொண்டு அருள்பாலிக்கிறாள்.
வெளியகரம் பிருத்வீச்வரர் கோவில்
முருகப் பெருமான் ஒரு முகமும், நான்கு கரங்களும் கொண்டு காட்சி அளிக்கும் திருப்புகழ் தலம்
திருத்தணியிலிருந்து 37 கி.மீ தொலைவில், கொசஸ்தலை ஆற்றின் கரையில் அமைந்த தலம் வெளியகரம் பிருத்வீச்வரர் கோவில். நகரி வழியாகவும் (63 கி.மீ) செல்லலாம். இறைவியின் திருநாமம் புவனேஸ்வரி அம்மன். இத்தலத்திற்கு வெள்ளிகரம், வள்ளிகரம் என்ற பெயர்களும் உண்டு.
இத்தலத்து முருகப் பெருமான் சுமார் மூன்றடி உயரத்தில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். அவருக்குப் பின்புறம் மயில் உள்ளது. அவர் ஒரு முகமும், நான்கு கரங்களும் கொண்டுள்ளார். பின்னிரு கரங்களில் வஜ்ர சக்தியும், முன் வலக் கரம் அபய முத்திரையிலும், முன் இடக் கரம் இடுப்பிலும் வைத்தபடி காட்சி அளிக்கிறார். இரு புறமும் வள்ளி,தேவயானை உள்ளனர்.
இத்தலத்து முருகனை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் போற்றி பாடியுள்ளார். மொத்தத் திருப்புகழ்ப் பாடல்களிலும் எட்டு விதமான சந்தங்கள் வந்துள்ள ஒரே தலப் பாடல் வெளியகரத்துக்கு மட்டுமே உரியது. வெள்ளிகரம் முருகனைப் பாடிய ஒன்பது திருப்புகழ் பாடல்களில் (நவ ரத்ன திருப்புகழ்) வள்ளி மலை, வள்ளியின் பிறப்பு, வள்ளி குருவியோட்டிய தினைப் புனம், அவள் கொடுத்த தினை மாவு, அவள் மீது மையல் கொண்டது, அவள் கரம் பிடித்தது ஆகியவற்றையும் பாடி இன்புறுகிறார்.
திருப்பாலைவனம் பாலீஸ்வரர் கோவில்
வெள்ளை நிறத்துடன், பால்வண்ண மேனியனாக காட்சி தரும் பாலீஸ்வரர்
சென்னையில் இருந்து 45 கி.மீ. தொலைவில் பழவேற்காடு செல்லும் சாலை மார்க்கத்தில் அமைந்துள்ளது திருப்பாலைவனம் என்னும் தலம். இத்தலத்து இறைவன் திருநாமம் பாலீஸ்வரர். இறைவியின் திருநாமம் லோகாம்பிகை. பழவேற்காடு அருகில், கடல் மணற்பரப்பை ஒட்டி அமைந்த தலம் என்பதாலும், பாலை மரங்கள் நிறைந்த பகுதி என்பதாலும், ‘திருப்பாலைவனம்’ என்று இத்தலத்துக்குப் பெயர் உண்டாயிற்று.
இத்தலத்து இறைவன் பாலீஸ்வரர், வெள்ளை நிறத்துடன் பால்வண்ண மேனியனாக அருள்பாலிக்கிறார், ஒரு சமயம் பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்த போது, அந்த அமுதத்தையே சிவலிங்கமாக பிடித்து வழிபட்டனர். அமுதத்தால் உண்டானவர் என்பதால் இந்த ஈசனுக்கு ‘அமுதேஸ்வரர்’ என்றும், பாலை மரத்தின் நடுவே கோயில் கொண்டதால் ‘பாலீஸ்வரர்’ என்றும் திருநாமம் ஏற்பட்டது.
காலப்போக்கில், சுற்றிலும் அரண்போல பாலை மரம் வளர்ந்து விட, வெள்ளை லிங்கம் விருட்சத்துக்குள் மறைந்து போனது. முதலாம் ராஜேந்திர சோழன் தன் படை பரிவாரங்களுடன் இந்தப் பகுதியின் வழியே வந்தபோது, ஓரிடத்தில் தங்கி ஓய்வெடுத்தார். அப்போது, அவர் படையிலிருந்த யானை மற்றும் குதிரைகளைப் படை வீரர்கள் லிங்கம் மறைந்திருந்த பாலை மரத்தில் கட்டிப் போட்டனர். சற்று நேரத்தில் அவை மயக்கமடைந்து அங்கேயே சரிந்தன. இதனைக் கேள்விப்பட்ட ராஜேந்திர சோழன்,. உடனே மரத்தை வெட்ட ஆணையிட்டார். மரத்தைப் படை வீரர்கள் வெட்டியபோது, அதன் நடுவே வெள்ளை நிற லிங்கத் திருமேனி இருந்ததைக் கண்டு வியப்படைந்தனர். சோழ மன்னன் ராஜேந்திர சோழன் பாலீஸ்வரருக்கு, அங்கே பிரமாண்டமாய் ஒரு ஆலயத்தை எழுப்பினார்.
திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரராக அருளும் இறைவனே, இங்கே அமுதேஸ்வரராக அருள்பாலிப்பதாக ஐதீகம். எனவே, இந்தத் தலத்தில் சஷ்டியப்தபூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம் ஆகியவை அதிகளவில் நடைபெறுகின்றன. அமுதேஸ்வரரை வேண்டிக் கொள்ள தம்பதியர் பூரண ஆரோக்கியத்துடன் நலம் பெற்று வாழ்வர் என்பது பக்தர்களின் நம்பிகை.
மாணிக்கவாசகர், தனது திருவாசகத்தில் இத்தல இறைவனைப் போற்றிப் பாடியுள்ளார்.
பேரம்பாக்கம் சோழீஸ்வரர் கோவில்
நரம்பு சம்பந்தமான நோய்களுக்கான பரிகார தலம்
சென்னையில் இருந்து 60 கி.மீ தொலைவில் (மப்பேடு வழி), திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தில் அமைந்துள்ளது சோழீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் காமாட்சி அம்மன். இக்கோவிலானது முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில், 1112ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
இக்கோவிலானது நரம்பு சம்பந்தமான, வலிப்பு முதலிய நோய்களுக்கு பரிகார தலமாக விளங்குகிறது . இவ்வூரில் வாழ்ந்த ஒரு பெரியவர் நரம்பு நோயால் பாதிப்படைந்தார். இந்த நோயை குணப்படுத்த நிறைய செலவு ஆகும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டதால் இவர் இக்கோவில் இறைவன் சோழீஸ்வரரை பிராத்தனை செய்தார் . சோழீஸ்வரர் அவரின் பிராத்தனைக்கு செவிமடுத்து அவரை குணப்படுத்தினார் , அந்த பெரியவர் நோய் குணப்படுத்த வைத்திருந்த பணத்தில் இக்கோவிலுக்கு கொடிக்கம்பத்தை நிறுவினார் . அதிலிருந்து இக்கோவிலுக்கு நரம்பு சம்பந்தமான நோய்களில் பாதித்தவர்கள் வந்து பிராத்தனை செய்து வருகின்றனர். ஒவ்வொரு திங்கள் கிழமையும் எல்லா ஊர்களில் இருந்தும் பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து பிராத்தனை செய்கின்றனர்.
கோயில்பதாகை சுந்தரராஜ பெருமாள் கோவில்
தவம் செய்யும் நிலையில் அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் கருடாழ்வார்
சென்னை ஆவடியில் இருந்து, செங்குன்றம் செல்லும் வழியில் மூன்று கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கோயில்பதாகை சுந்தரராஜ பெருமாள் கோவில். தாயார் திருநாமம் சுந்தரவல்லி. இக்கோவில், 800 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
பொதுவாக பெருமாள் கோவில்களில், பெருமாள் எதிரில் கருடாழ்வார் நின்ற கோலத்தில் அஞ்சலி முத்திரையுடன் அல்லது கைகட்டி சேவகம் செய்யும் நிலையில் காட்சி அளிப்பார். ஆனால் இக்கோவிலில் கருடாழ்வார், தவம் செய்யும் நிலையில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். கருடாழ்வாரின் இந்த தோற்றத்தை, நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
ஆடி அமாவாசை கழித்து வரும் பஞ்சமி, கருட பஞ்சமி என அழைக்கப்படும். அன்று பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடாழ்வாருக்காக, கருட பஞ்சமி என்ற விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த விரதம் குழந்தைகளுக்காகவும், உடன் பிறந்தவர்களுக்காகவும் கடைபிடிக்கப்படுகிறது.
தொடுகாடு பீமேஸ்வரர் கோவில்
ஜோதிடக் கலை தொடர்புடைய முதல் படைப்பு எழுதப்பட்ட தலம்
ஒரு முருங்கைக் காய், ஒரு மாம்பழம், ஒரு தேங்காய், ஒரு வாழைப்பழம் என்று ஒற்றை எண்ணிக்கையிலே நைவேத்தியம் படைக்கப்படும் வித்தியாசமான நடைமுறை
திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து நான்கு கி.மீ. தொலைவில் தொடுகாடு என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது பீமேஸ்வரர் கோவில். பீமேஸ்வரரின் முந்தைய பெயர் வீமேஸ்வரர், காலப்போக்கில் அது பீமேஸ்வரர் ஆனது. இறைவியின் திருநாமம் நகைமுகவல்லி . இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
இக்கோவில் இறைவன் வீமேஸ்வரர் சொல்லச் சொல்ல, 63 நாயன்மார்களில் ஒருவரான ஐயடிகள் காடவர்கோன் 'வீமேஸ்வர உள்ளமுடையான்' என்னும் ஜோதிட நூலை இயற்றினார். ஜோதிடத்துடன் தொடர்புடைய முதல் படைப்பு, இந்த கோவிலில் தான் எழுதப்பட்டது என்பது இத்தலத்தின் சிறப்பாகும். எனவே இத்தலம் ஜோதிடத்தின் பிறப்பிடம் என்று கூறப்படுகிறது. இங்கு பூஜையின் போது ஒரு முருங்கைக்காய், ஒரு மாம்பழம், ஒரு தேங்காய், ஒரு வாழைப்பழம் என்று ஒற்றை எண்ணிக்கையிலேயே, தினமும் இறைவனுக்கு நைவேத்தியம் படைத்து வழிபாடு நடத்துகின்றனர். இது வேறு எந்த தலத்திலும் பின்பற்றாத வித்தியாசமான நடைமுறை ஆகும்.
இத்தலத்தில் கற்புக்கரசி நளாயினி தனது கணவரின் சாப விமோசனம் பெற வழிபாடு செய்தார். எனவே, திருமணத்தில் பிரச்சினைகள் உள்ளவர்கள் அல்லது தங்கள் மனைவியைப் பிரிந்தவர்கள், பீமேஸ்வரரை பிரார்த்தனை செய்தால், அவர்கள் ஒன்றிணைந்து மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்பது ஐதீகம். இத்தலத்து இறைவன் திருமேனியானது 16 பட்டைகள் கொண்ட சோடச லிங்கமாக விளங்குவதால், இவரை வழிபட்டால் 16 வகை செல்வங்களையும் பெறலாம்.
திருவள்ளூர் வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில்
ஆனி அமாவாசை தெப்ப உத்சவம்
பெருமாள், கனகவல்லி தாயார் மற்றும் உற்சவர் முத்தங்கி சேவை
திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவர் பெருமாள் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற திருத்தலமாகும். இங்கு அமாவாசை தினங்களில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி அமாவாசையை முன்னிட்டு மூன்று நாட்கள் பெருமாள் மற்றும் தாயார் முத்தங்கி சேவை மற்றும் தெப்ப உத்சவம் நடைபெறும். இந்த ஆண்டிற்கான ஆனி அமாவாசையான, வரும் 25 முதல் 27ம் தேதி வரை, மூன்று நாட்கள் தெப்ப உத்சவம் நடைபெற உள்ளது.
ஆனி அமாவாசை அன்று மூலவர் பெருமாள், கனகவல்லி தாயார் மற்றும் உற்சவருக்கு முத்தங்கி சேவை நடைபெறும். உற்சவர் வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய், கண்ணாடி மண்டபத்தில் முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு தரிசனம் தருவார். ஆனி மாத தெப்ப உற்சவத்தின் போது தினமும் மாலை 6 மணியளவில், உற்சவர் வீரராகவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் 'ஹிருதாபநாசினி' குளத்தில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளி, மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
இந்த தெப்ப உற்சவத்தில் கலந்து கொண்டு வழிபட்டால் தீராத நோய்கள் அனைத்தும் தீரும் என்பதோடு, சகலவிதமான சௌகரியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். இதற்காக பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்தும் வகையில் உப்பு, கரும்பு, வெல்லம், பால் போன்றவைகளை தீர்த்தக் குளத்தில் கரைத்து வழிபாடு செய்வார்கள்.
திருக்கள்ளில் சிவாநந்தீஸ்வரர் கோவில்
பைரவருக்கு மிளகாய் பொடி அபிஷேகம் செய்யும் வித்தியாசமான நடைமுறை
சென்னை - பெரியபாளயம் சாலையிலுள்ள கன்னிப்புத்தூர் (கன்னிகைப்பேர்) என்ற கிராமத்திலிருந்து 4 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத் தலம் திருக்கள்ளில். இத்தலத்தை தற்போது திருகண்டலம் என்று அழைக்கிறார்கள். இறைவன் திருநாமம் சிவாநந்தீஸ்வரர். இறைவி திருநாமம் ஆனந்தவல்லி அம்மை.
இக்கோவிலில் பைரவருக்கு மிளகாய் பொடி அபிஷேகம் செய்வது ஒரு வித்தியாசமான நடைமுறையாகும். காணாமல் போன பொருட்களை திரும்பப் பெறவும், திருமணத் தடைகள் நீங்கவும் இந்த அபிஷேகம் செய்யப்படுகிறது. மிளகாய் பொடி அபிஷேகம் என்பது ஒரு சக்தி வாய்ந்த சடங்காகும். இது எதிர்மறை சக்திகளை நீக்கி, கிரகங்களின் செல்வாக்கை எதிர்த்து, பக்தர்களுக்கு பாதுகாப்பை வழங்குகின்றது. பொருட்கள் கிடைத்தவுடன், பைரவருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். இந்த நடைமுறை பைரவரின் அருளைப் பெறவும், தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றவும் செய்யப்படுகிறது.
பூந்தமல்லி வரதராஜர் பெருமாள் கோவில்
பெருமாள் தலைக்குப் பின்னால் சூரியன் அமைந்திருக்கும் தனிச்சிறப்பு
சூரியனுக்கான பரிகார தலம்
சென்னையில் இருந்து 25 கிமீ தொலைவில் அமைந்துள்ளது பூந்தமல்லி வரதராஜர் பெருமாள் கோவில். தாயார் திருநாமம் புஷ்பவல்லி. இத்தல தாயார், மல்லிகை மலரில் அவதரித்ததால் 'புஷ்பவல்லி' என்று பெயர். இவள் பூவில் இருந்தவள் என்பதால், இந்த ஊர் 'பூவிருந்தவல்லி' என்றானது. அதுவே மருவி பூந்தமல்லி என்று அழைக்கப்படுகிறது. இக்கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது.
ராமானுஜரின் குருவான திருக்கச்சிநம்பிகளின் அவதார தலமான இந்தக் கோவிலில் திருப்பதி வெங்கடேசர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், காஞ்சி வரதராஜப் பெருமாள் சன்னதிகளும் உண்டு. மூவருக்கும் தனித்தனியாக பிரம்மோற்ஸவம் நடப்பது சிறப்பு.
இத்தலத்து மூலவரான வரதராஜப்பெருமாள், புண்ணியகோடி விமானத்தின் கீழ், பின் தலையில் சூரியனுடன் இருக்கிறார். பெருமாள் தலைக்குப் பின்னால் சூரியன் அமைந்திருப்பது ஒரு தனி சிறப்பாகும். இதனால் இக்கோவில் சூரிய தலமாகவும் கருதப்படுகிறது. இது சூரியதலம் என்பதால், ஜோதிட ரீதியாக சூரிய திசை நடப்பவர்கள், தந்தையுடன் கருத்து வேறுபாடு உள்ளவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டோர் இத்தல பெருமாளை வழிபட்டால் நலம் கிடை க்கும்.
தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், இத்தல வரதராஜப்பெருமாளுக்கு செவ்வரளி மாலை அணிவித்து, திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
பாடி திருவலிதாயநாதர் கோவில்
குரு பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ள தேவார தலம்
சிறப்பு வாய்ந்த குரு பரிகார தலம்
சென்னை மாநகரின் ஒரு பகுதியான பாடியில் அமைந்துள்ள தேவார தலம் திருவலிதாயநாதர் கோவில். இறைவன் திருநாமம் திருவலிதாயநாதர், திருவல்லீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஜெகதாம்பிகை, தாயம்மை. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.
குரு பகவான், தன்னுடைய சாப விமோசனத்திற்காக சிவபெருமானை வழிபட்ட தலம் இது. குரு பகவான், சிவ பூஜை செய்து வழிபட்ட திருத்தலம் என்பதால், இது குரு பரிகாரத் தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் குரு பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது தனிச்சிறப்பாகும். இங்குள்ள குரு பகவானுக்கு, மஞ்சள் வஸ்திரம் சாத்தி, முல்லைப் பூவைக் கொண்டு அர்ச்சனை செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்தால் சகல விதமான தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்தத் தலத்தில் அருளும் குரு பகவானுக்கு, வியாழக்கிழமை அன்று காலை மற்றும் மாலை வேளைகளிலும், குருப்பெயர்ச்சி காலத்தின் போதும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுகின்றது. இதில் கலந்து கொண்டு குரு பகவானை வணங்கினால், தோஷங்கள் அனைத்தும் நீங்கி, நற்பலன்களை அடையலாம். திருமண தடை நீங்க, நல்ல வரன் அமைய வியாழக்கிழமைகளில் இங்குள்ள குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம், கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபடுகிறார்கள்.
திருவெண்பாக்கம் (பூண்டி) ஊன்றீசுவரர் கோவில்
நந்தியின் வலது கொம்பு உடைந்த நிலையில் காணப்படும் தேவார தலம்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ள தேவார தலம் ஊன்றீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் மின்னொளியம்மை.
இக்கோவிலில் இறைவன் முன் அமர்ந்திருக்கும் நந்தியின் வலது கொம்பு உடைந்த நிலையில் காணப்படுகிறது. இதன் பின்னணியில் சுந்தரருடன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்று உள்ளது.
திருவாரூரில் பரவையாரை மணந்து கொண்ட சுந்தரர், திருவொற்றியூரில் சங்கிலியார் எனும் பெண்ணை சிவபெருமானை சாட்சியாக வைத்து, அவளைவிட்டு பிரிய மாட்டேன் என்று சத்தியம் செய்து மணந்து கொண்டார். ஆனால் அவர் சத்தியத்தை மீறி திருவொற்றியூரை விட்டு திருவாரூருக்கு கிளம்பினார். சுந்தரர் திருவொற்றியூர் தலத்தின் எல்லையை விட்டு வெளியேறியபோது, சிவபெருமான் அவரது இரண்டு கண்களையும் பறித்துக் கொண்டார். சத்தியத்தை மீறியதால் தன் கண்கள் பறிபோனதை உணர்ந்த சுந்தரர் சிவபெருமானிடம் தனக்கு கண்களை தரும்படி வேண்டினார். அவரோ கண்கள் தரவில்லை. இரண்டு கண்களும் தெரியாமல் தட்டுத்தடுமாறியபடியே திருவாரூர் செல்லும் வழியில் இத்தலம் வந்தார் சுந்தரர். இங்கு சிவபெருமானிடம் தனக்கு கண்கள் தரும்படி கேட்டார். சிவபெருமானோ அமைதியாகவே இருந்தார்.
சுந்தரர் விடவில்லை. 'பரம்பொருளாகிய நீங்கள் இங்குதான் இருக்கிறீர்களா? இருந்தால் எனக்கு கண் தருவீர்களே!' என்று சொல்லி வேண்டினார். சுந்தரரின் நிலையைக் கண்டு இரங்கிய சிவபெருமான், அவருக்கு ஒரு ஊன்று கோலை மட்டும் கொடுத்து 'நான் இங்குதான் இருக்கிறேன். நீங்கள் செல்லுங்கள்' என்றார். கோபம் அதிகரித்த சுந்தரர், சிவபெருமான் கொடுத்த ஊன்றுகோலை ஓங்கி வீசினார். அப்போது ஊன்றுகோல் அங்கிருந்த நந்தியின் மீது பட்டு விட்டது. இதனால் நந்தியின் வலது கொம்பு ஒடிந்து விட்டது. பின் சுந்தரர் தன் யாத்திரையை தொடர்ந்து, இங்கிருந்து காஞ்சிபுரம் சென்றார்.
சுந்தரருக்கு ஊன்றுகோல் கொடுத்தவர் என்பதால் இத்தல இறைவனுக்கு ஊன்றீஸ்வரர் என்று பெயர்.கருவறைக்கு முன்புறம் உள்ள நந்தியின் வலது கொம்பு ஒடிந்த நிலையில் இருப்பதை இன்றும் நாம் காணலாம். அருகில் சுந்தரர் இடது கையில் ஊன்றுகோல் வைத்தபடி காட்சி தருகிறார். கண்பார்வையை இழந்த சுந்தரர், இத்தலத்தை நோக்கி வரும்போது, அம்பாள் மின்னலைப் போன்ற ஒளி அளித்து வழிகாட்டி மறைந்தாளாம். அதனால்தான் இத்தல அம்பிகைக்கு மின்னொளியம்மை என்று பெயர்.
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில்
முத்துசாமி தீட்சிதருக்கு கற்கண்டை ஊட்டி இசை ஞானம் அளித்த திருத்தணி முருகன்
இசை மும்மூர்த்திகளில் ஒருவராகப் போற்றப்படும் முத்துசுவாமி தீட்சிதர்,அரிதான அதிகம் பாடப்படாத ராகங்களில் கூட பாடல்கள் இயற்றும் திறமை பெற்றவர். இவர் 1776 ஆம் ஆண்டு திருவாரூரில் பிறந்தார். வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முருகப்பெருமனின் திருநாமம் முத்துக்குமாரசுவாமி. அவருடைய அருளால் பிறந்த குழந்தை என்பதால் முத்துசுவாமி என பெற்றோர் பெயரிட்டனர்.
இவர் தன் தந்தையைப் போலவே வேதங்களிலும் மந்திர ஜபங்களிலும் சகல சாஸ்திரங்களிலும் வல்லவராக இருந்தார். தந்தையே இவருக்கு முதல் குரு. இனிமையாகப் பாடுவதிலும், வீணை வாசிப்பதிலும் தனித் திறமையுடன் விளங்கினார். சிதம்பரநாத யோகி என்பவரிடம் ஸ்ரீவித்யா மகாமந்திரத்தை தீட்சையாகப் பெற்று, தினமும் உச்சாடனம் செய்து வந்தார். பிறகு தன் குருவுடனேயே காசிக்குச் சென்றார். அங்கே கங்கை நதியில் இவருக்கு ஒரு வீணை கிடைத்தது. காசியில் கர்நாடக சங்கீதமும், ஹிந்துஸ்தானி சங்கீதமும் பயின்றார்.
காசியிலிருந்து திரும்பி குருவின் உத்தரவுப்படி திருத்தணி சென்று முருகப்பெருமானை தரிசித்தார். திருத்தணி மலையேறும்போது ஒரு கிழவர் எதிரில் வந்தார். முத்துசாமியை வாயைத் திறக்கச் சொல்லி, கற்கண்டை ஊட்டி விட்டு உடனேயே மயில் வாகனத்தில் இருக்கும் முருகப்பெருமானாகக் காட்சியளித்தார். திருத்தணி முருகனை கண் குளிர தரிசித்தார் முத்துசுவாமி தீட்சிதர். இந்த தரிசனத்திற்குப் பின் தன்னுடைய முதல் கிருதியை இயற்றினார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதத்தில் கீர்த்தனைக¬ளை இயற்றினார். அவருடைய பாடல்களில் அவருடைய முத்திரையாக, இறுதியில் குருகுஹ என்னும் வார்த்தை வரும்.
இவர் இயற்றிய 'வாதாபி கணபதிம் பஜே' என்னும் ஹம்சத்வனி ராகப் பாடல் மிகச் சிறந்த பாடலாக அவர் காலத்திலேயே புகழ் பெற்றது. இன்றும் சங்கீத வித்வான்களால் தங்கள் கச்சேரியில் தொடக்கப் பாடலாகப் பாடப்பெறும் பெருமை பெற்று விளங்குகிறது. முத்துசுவாமி தீட்சிதர் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலில் ஒரு பாடலை இயற்றினார் 'ஸ்ரீ காந்திமதிம் சங்கர யுவதிம்' என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடல் அபூர்வ ராகத்தில் அமைந்த அபூர்வப் பாடலாகக் கருதப்படுகிறது. இவர் எண்ணற்ற கிருதிகளை இயற்றியபோதிலும், அவற்றுள் கமலாம்பா நவாவர்ணம், அபயாம்பா நவாவர்ணம், சிவ நவா வர்ணம், நவக்கிரகக் கிருதிகள் இன்றைக்கும் எல்லா வித்வான்களாலும் பாடப்பெற்று இவரின் சிறப்பை நமக்கு உணர்த்துகின்றன. இவர் சிவன் மீது பாடிய 'ஸ்ரீ விஸ்வநாதம்' என்னும் கிருதி இவருடைய கிருதிகளுக்கெல்லாம் சிகரமாக அமைந்தது. 14 ராகங்களைக் கொண்டு ஒரே பாட்டில் சிவனின் பெருமைகளை விளக்கும் வண்ணமாக அந்த கிருதி அமைந்துள்ளது. இவருடைய படைப்பாற்றல் காரணமாக, தன்னுடைய சமகாலத்தவர்களான ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள், ஸ்ரீ ஷ்யாமா சாஸ்த்ரிகளுடன் சேர்த்து சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரகப் போற்றி வணங்கப்படுகிறார்.
இவர் எட்டையபுரத்தில் தன் கடைசி காலத்தில் வசித்தபோது அங்கு கடுமையான வறட்சி நிலவியது. அவர் உடனே அமிர்தவர்ஷிணி ராகத்தில் அம்பிகை மீது 'ஆனந்தாமிர்தகர்ஷினி' என்னும் கிருதியைப் பாடி மழை பொழிய வைத்தார். இவர் காலத்தில் நிகழ்ந்த ஒரு அற்புதம் இது. எண்ணற்ற மக்கள் பார்த்து அதிசயித்து ஆனந்தித்த காட்சி.
ஸ்ரீ முத்துசுவாமி தீட்சிதர் 1835ம் ஆண்டு தீபாவளிப் பண்டிகை அன்று தன் தம்பியும், சீடர்களும் மீனாம்பிகை பெயரில் அமைந்த "மீனலோசனி பாப மோசனி" என்ற கிருதியைப் பாடப் பாடக் கேட்டுக் கொண்டு, இரு கைகளையும் தலை மேல் குவித்து சிவே பாஹி.. சிவே பாஹி ஓம் சிவே என்றார். உடனே அவரது ஆவி ஒளி வடிவாகப் பிரிந்தது. இவரது சமாதி எட்டயபுரத்தில் அமைந்துள்ளது.
1976 ஆம் ஆண்டு இந்திய அரசு முத்துசாமி தீட்சிதரின் உருவப்படம் பொறித்த தபால் தலை வெளியிட்டு அவரை கௌரவித்தது.
பொன்னேரி திருஆயர்பாடி கரிகிருஷ்ண பெருமாள் கோவில்
அரியும் அரணும் சந்தித்துக் கொள்ளும் அபூர்வ திருவிழா
இந்தியாவிலேயே வேறு எங்கும் நடத்தப்படாத சந்திப்பு விழா
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி திருஆயர்பாடியில் ஆரணி ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது சவுந்தர்யவல்லி சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில். இக்கோவில் 1,500 ஆண்டுகள் பழமையானது. சோழமன்னன் கரிகாலன் கட்டியதால் கோவிலுக்கு கரிகிருஷ்ண பெருமாள் கோவில் என்ற பெயர் ஏற்பட்டது .
அதேபோன்று பொன்னேரியின் மையப்பகுதியில், ஆரணி ஆற்றங்கரையில் 9-ம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
கரிகிருஷ்ண பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் 5-ம் நாள் கரிகிருஷ்ண பெருமாளும், அகத்தீஸ்வரரும் சந்திக்கும் 'சந்திப்பு திருவிழா', ஆண்டுதோறும் இப்பகுதியில் பிரசித்தி பெற்ற விழாவாக நடைபெற்று வருகிறது. அகத்திய முனிவருக்கும், பரத்வாஜருக்கும் கரிகிருஷ்ண பெருமாள், அகத்தீஸ்வரர் ஒருசேர வந்து காட்சி அளித்ததை உணர்த்தும்விதமாக பொன்னேரியில் இவ்விழா நடைபெறுகிறது. அரியும் அரணும் ஒன்றே என உலகத்திற்கு உணர்த்தும் விதமாக இந்த சந்திப்பு திருவிழா நடைபெற்று வருகின்றது.
சந்திப்பு திருவிழாவின் போது ஆனந்தவல்லி தாயார், விநாயகர், முருகர் மற்றும் சண்டிகேஸ்வரருடன் அகத்தீஸ்வர பெருமான் ரிஷப வாகனத்திலும், கரிகிருஷ்ண பெருமாள் கருட வாகனத்திலும் ஒருசேர பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். இந்த சந்திப்பு விழா இந்தியாவிலேயே வேறு எங்கும் நடத்தப்படாத திருவிழாவாகும். அப்போது அங்கு கூடியிருக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் 'கோவிந்தா.. கோவிந்தா' கோஷமும், 'நமச்சிவாய.. நமச்சிவாய' கோஷமும் விண்ணை பிளக்கும்.
திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவில்
கால்கள் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் காட்சி தரும் காளி அம்மன்
திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் செல்லும் வழியில் 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தேவார தலம் திருப்பாச்சூர். இறைவன் திருநாமம் வாசீஸ்வரர். இறைவியின் திருநாமம் தங்காதலி. இத்தலம் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
இக்கோவிலில் காளி அம்மன் தனி சன்னதியில் தன் கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் காட்சி தருகிறாள். இதன் பின்னணியில் ஒரு வரலாற்று நிகழ்ச்சி உள்ளது.
ஒருமுறை குரும்பன் என்ற உள்ளூர் தலைவன், சோழ மன்னன் கரிகாலனுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தத் தவறினான். குரும்பன், காளி தேவியின் தீவிர பக்தன். நிலுவைத் தொகையை மீட்பதற்காக மன்னன் தன் பகுதிக்கு படையெடுத்த போது, அரசனையும் அவனது படையையும் தோற்கடிக்க உதவும்படி காளியிடம், குரும்பன் வேண்டிக் கொண்டான். சோழ மன்னன் கரிகாலன், சிவபக்தனாக இருந்ததால் சிவபெருமானிடம் உதவிக்காக வேண்டினான். சிவபெருமான் காளியை கட்டுப்படுத்தவும், கட்டவும் நந்தியை அனுப்பினார். நந்தி காளியை தோற்கடித்து அவளை தங்கச் சங்கிலியால் கட்டினார். இந்த சம்பவத்தை எடுத்துரைக்கும் வகையில், இந்தக் கோவில் காளி தேவியின் கால்கள் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் உள்ளன. இவள் சொர்ண காளி என்று அழைக்கப்படுகிறாள்.
நத்தம் வாலீஸ்வரர் கோவில்
பிரதோஷ நாயகர் அம்பிகையைத் தனது இடக்கரத்தால் அணைத்துக் கொண்டிருக்கும் அபூர்வத் தோற்றம்
சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பஞ்செட்டி என்ற ஊரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நத்தம் வாலீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி.
பிரதோஷ காலங்களில் கோவில் பிராகாரத்தில் வலம் வருவதற்காக அமைந்துள்ள உற்சவமூர்த்தியே பிரதோஷ நாயகர் என்று அழைக்கப்படுகின்றார். ஏறத்தாழ ஒன்றரை அடி உயரம் உடைய இந்த மூர்த்தி சந்திரசேகரரைப் போன்ற தோற்றமுடையவர்.பன்னிரு கரங்களில் மான்,மழுவும், முன்னிரு கைகளில் அபய,வரத முத்திரையும் தாங்கியவராய் நின்ற நிலையில் விளங்குகின்றார்.தலையில் ஜடாமகுடம் விளங்க,அதில் வெண்பறை,கங்கை,ஊமத்தை மலர் தரித்தவராய் மூன்று கண்களும் கருத்த கண்டமுடையவராய் எல்லையில்லா மகிழ்ச்சி பொங்கும் முகத்துடன் அமைந்துள்ளார்.அவரது இடப்புறத்தில் அம்பிகை தனது வலக் கரத்தில் நீலோற்பல மலர் ஏந்தி,இடது கரத்தைத் தொங்கவிட்ட நிலையில் நின்றவாறு காட்சியளிக்கின்றாள். பிரதோஷ தினத்தின் மாலையில் இந்தப் பிரதோஷ மூர்த்தியை இடப வாகனத்தில் வைத்து அலங்கரித்துக் கோவிலின் உட்பிராகாரத்தில் வலம் வருகின்றனர்.
இந்தத் தலத்தில் பிரதோஷ நாயகர் அம்பிகையை தனது இடது கையால் அணைத்திற்கும் தோற்றமானது ஒரு அரிய காட்சியாகும்.இதற்கு பின்னணியில் ஒரு புராண நிகழ்ச்சி உள்ளது.
ஒரு சமயம் சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்த முற்பட்ட போது, பார்வதி தேவி அஞ்சினாள். அவளுடைய பயத்தைப் போக்கும் வகையில், சிவபெருமான் அவளை அணைத்துக் கொண்டார். இந்த அடிப்படையில் சிவபெருமான் அம்பிகையைத் தனது இடக்கரத்தால் அணைத்துக் கொண்டிருப்பது போன்ற பிரதோஷ நாயகர் உருவம் அமைக்கப் பெற்றது.இந்த மூர்த்தியை உமா ஆலிங்கன மூர்த்தியென்றும், அணைத்தெழுந்த நாதர் என்றும் அழைக்கின்றனர்.
காமாட்சி விளக்கினை ஏற்றி வைத்துக்கொண்டு, பிரதோஷ நாயகருடன் வலம் வரும் திருமண தடை நீக்கும் வழிபாடு
உமா ஆலிங்கனராய் உள்ள இந்தத் தலத்து பிரதோஷ மூர்த்தியை, பிரதோஷ காலத்தில் வழிபட்டு பிரதோஷ சுவாமி புறப்பாட்டின் போது சுவாமிக்கு சுண்டல் நிவேதனம் செய்து முல்லை, நந்தியாவட்டை மலர்களால் அர்ச்சனை செய்து, திருமணம் ஆகவேண்டிய பெண்கள் கையில் காமாட்சி விளக்கினை ஏற்றி வைத்துக்கொண்டு சுவாமியுடன் மூன்று வலம் வருகையில் திருமணம் கைகூடும். இம்மாதிரி 5 பிரதோஷங்கள் செய்ய வேண்டும். திருமணமாகாத ஆண்களின் தாய், இம்மாதிரி பிரார்த்தனை செய்து வலம் வரும்போது அவர்களின் பிள்ளைகளுக்கு திருமணம் கை கூடும்.
நத்தம் வாலீஸ்வரர் கோவில்
தலை சடை விரித்த கோலத்தில் இருக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி
சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பஞ்செட்டி என்ற ஊரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நத்தம் வாலீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி.
இக்கோவிலில் இறைவன் கருவறையின் சுற்று சுவரில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தி, தன் தலை சடையை விரித்த கோலத்தில் காட்சி அளிப்பது நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத அரிய காட்சியாகும். இதற்கு பின்னணியில் உள்ள சம்பவம் என்னவென்றால், தேவர்கள் சிவபெருமானிடம் தாட்சாயணியின் மறைவுக்குப் பின் தங்களுக்கு சக்தி இல்லையே என்று வினவியபோது, சிவபெருமான் என்னிடம் கங்கா சக்தி உள்ளது என்று சடா முடியிலிருந்து கங்கையை விடுவித்து, கங்கையின் பிரவாக சக்தியைக் தேவர்களுக்கு காட்டினார். அந்தக் கோலத்தில் தான் நாம் அவரை இக்கோவிலில் தரிசிக்கிறோம்.
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில்
சூரசம்ஹாரம் நடைபெறாத முருகன் தலம்
முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடு திருத்தணி ஆகும். முருகப் பெருமான் சூரனை வதம் செய்தப் பின்னர் சினம் தணிந்து இத் தலத்தில் வந்து அமர்ந்ததால் 'திருத்தணிகை' என்று அழைக்கப்பட்டு, பிறகு மருவி 'திருத்தணி' ஆனது.
முருகப்பெருமான் திருச்செந்தூரில், அசுரர்களுடன் போரிட்டு வென்றதன் அடிப்படையில் முருகத்தலங்களில், கந்தசஷ்டியின்போது சூரசம்ஹாரம் விமரிசையாக நடத்தப்படும்.
ஆனால் திருத்தணி,முருகன், சினம் தணிந்து ஓய்வெடுத்த தலம் என்பதால் இங்கு சூரசம்ஹார பெருவிழா நடைபெறுவதில்லை. மேலும் முருகப் பெருமானின் திருக்கரத்தில் வேல் இல்லாமல் வஜ்ராயுதம் தாங்கியிருக்கிற திருக்கோலத்தை காணமுடியும். திருத்தணி கோவிலில் சூரசம்ஹாரத்தன்று முருகனைக் குளிர்விக்க புஷ்பாஞ்சலி செய்யப்படுகிறது.
திருச்செந்தூரின் இலை விபூதி போன்று திருத்தணியிலும் சிறப்பு பிரசாதம் ஒன்று உண்டு. இரண்டாம் பிராகாரத்தில் யாக சாலைக்கு எதிரில் உள்ள சந்தனக் கல்லில் அரைக்கப்படும் சந்தனமே சுவாமிக்கு சார்த்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. சர்வரோக நிவாரணியான இந்த பிரசாதத்தை 'ஸ்ரீபாதரேணு' என்கிறார்கள்.