திருப்பாலைவனம் பாலீஸ்வரர் கோவில்
வெள்ளை நிறத்துடன், பால்வண்ண மேனியனாக காட்சி தரும் பாலீஸ்வரர்
சென்னையில் இருந்து 45 கி.மீ. தொலைவில் பழவேற்காடு செல்லும் சாலை மார்க்கத்தில் அமைந்துள்ளது திருப்பாலைவனம் என்னும் தலம். இத்தலத்து இறைவன் திருநாமம் பாலீஸ்வரர். இறைவியின் திருநாமம் லோகாம்பிகை. பழவேற்காடு அருகில், கடல் மணற்பரப்பை ஒட்டி அமைந்த தலம் என்பதாலும், பாலை மரங்கள் நிறைந்த பகுதி என்பதாலும், ‘திருப்பாலைவனம்’ என்று இத்தலத்துக்குப் பெயர் உண்டாயிற்று.
இத்தலத்து இறைவன் பாலீஸ்வரர், வெள்ளை நிறத்துடன் பால்வண்ண மேனியனாக அருள்பாலிக்கிறார், ஒரு சமயம் பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்த போது, அந்த அமுதத்தையே சிவலிங்கமாக பிடித்து வழிபட்டனர். அமுதத்தால் உண்டானவர் என்பதால் இந்த ஈசனுக்கு ‘அமுதேஸ்வரர்’ என்றும், பாலை மரத்தின் நடுவே கோயில் கொண்டதால் ‘பாலீஸ்வரர்’ என்றும் திருநாமம் ஏற்பட்டது.
காலப்போக்கில், சுற்றிலும் அரண்போல பாலை மரம் வளர்ந்து விட, வெள்ளை லிங்கம் விருட்சத்துக்குள் மறைந்து போனது. முதலாம் ராஜேந்திர சோழன் தன் படை பரிவாரங்களுடன் இந்தப் பகுதியின் வழியே வந்தபோது, ஓரிடத்தில் தங்கி ஓய்வெடுத்தார். அப்போது, அவர் படையிலிருந்த யானை மற்றும் குதிரைகளைப் படை வீரர்கள் லிங்கம் மறைந்திருந்த பாலை மரத்தில் கட்டிப் போட்டனர். சற்று நேரத்தில் அவை மயக்கமடைந்து அங்கேயே சரிந்தன. இதனைக் கேள்விப்பட்ட ராஜேந்திர சோழன்,. உடனே மரத்தை வெட்ட ஆணையிட்டார். மரத்தைப் படை வீரர்கள் வெட்டியபோது, அதன் நடுவே வெள்ளை நிற லிங்கத் திருமேனி இருந்ததைக் கண்டு வியப்படைந்தனர். சோழ மன்னன் ராஜேந்திர சோழன் பாலீஸ்வரருக்கு, அங்கே பிரமாண்டமாய் ஒரு ஆலயத்தை எழுப்பினார்.
திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரராக அருளும் இறைவனே, இங்கே அமுதேஸ்வரராக அருள்பாலிப்பதாக ஐதீகம். எனவே, இந்தத் தலத்தில் சஷ்டியப்தபூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம் ஆகியவை அதிகளவில் நடைபெறுகின்றன. அமுதேஸ்வரரை வேண்டிக் கொள்ள தம்பதியர் பூரண ஆரோக்கியத்துடன் நலம் பெற்று வாழ்வர் என்பது பக்தர்களின் நம்பிகை.
மாணிக்கவாசகர், தனது திருவாசகத்தில் இத்தல இறைவனைப் போற்றிப் பாடியுள்ளார்.