திருமால்பாடி ரங்கநாதர் கோவில்

சிறிய குன்றின் மேல் அருள் பாலிக்கும் ரங்கநாதர்

வேலையில் இடமாற்றம் சம்பந்தமான பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் 'டிரான்ஸ்ஃபர் பெருமாள்'

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தேசூர் (வந்தவாசி - சேத்பட் வழி) என்னும் சிறிய கிராமத்தின் அருகே உள்ளது திருமால்பாடி ரங்கநாதர் கோவில். சிறிய குன்றின் மேல் அமைந்திருக்கும் இக்கோவிலுக்கு செல்ல 108 படிகள் உள்ளன. பெருமாளின் திருநாமம் ரங்கநாதர்.தாயார் திருநாமம் வேதநாயகி. வேத வியாசரின் மகனான சுகப்பிரம்ம ரிஷி அவர்களால், பெருமாளின் கட்டளைப் படி நிர்மாணிக்கப் பட்டது இக்கோவில்.

கருவறையில் 15 அடி நீளமுள்ள ஐந்து தலைகள் கொண்ட ஆதிசேஷன் மீது ஸ்ரீ ரெங்கநாதர், சயன திருக்கோலத்தில் தரிசனம் தருகிறார். விண்ணுலகம், மண்ணுலகம் என அளந்துவிட்டு மூன்றாவது அடியாக மகாபலிச் சக்கரவர்த்தியின் தலையின் மீது தன் அடியை வைத்து அளந்ததற்கு அடையாளமாக தனது மூன்று விரல்களைக் காட்டியவாறு, ஆதிசேஷன் மீது சயனித்தபடி, தலைக்கு மரக்கால் வைத்து, தனது திருவடியை தாமரை மலர் மீது வைத்து தரிசனம் தருகிறார். அருகே பூதேவி - அமிர்தவல்லியாகவும், ஸ்ரீதேவி - ஸ்ரீ வேதவல்லியாகவும் காட்சி தருகின்றனர்.

வேலையில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் சம்பந்தமான பிரச்சினைகளை இத்தலத்து ஸ்ரீ ரெங்கநாதர் தீர்த்து வைப்பார். இதனாலேயே இக்கோவிலில் உள்ள பெருமாளுக்கு, 'டிரான்ஸ்ஃபர் பெருமாள்' (Transfer Perumal) என்ற சிறப்பு பெயரும் உண்டு. அயல்நாட்டு வேலை வாய்ப்பும் இத்தல அரங்கனின் அருளால் பலருக்கும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 
Previous
Previous

கூகலூர் அதிசய ஆஞ்சநேயர் கோவில்

Next
Next

மணிமங்கலம் தர்மேசுவரர் கோவில்