மானூர் பெரியாவுடையார் கோவில்
முகம் வெள்ளை நிறத்திலும், உடல் கருப்பு நிறத்திலும் காட்சியளிக்கும் அபூர்வ நடராஜர்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மானூர் கிராமம். இந்த கிராமத்தில் அமைந்துள்ளது பெரியாவுடையார் கோவில். 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது இந்த கோவில்.
இத்தலத்து மூலவர் பெரியாவுடையாருக்கு பிரகதீஸ்வரர் என்ற திருநாமும் உண்டு. இறைவியின் திருநாமம் பெரியநாயகி. இத்தலத்து இறைவனை வழிபட்டால் ஏழு ஜன்மங்களின் பாவங்கள் கூட விலகும் என்பது ஐதீகம்.
கோவில் வரலாறு
விராட மன்னன் மான் வேட்டையாடச் சென்றபோது, இறைவன் அழகிய மான் வடிவில் தோன்றி மறைந்து புதருக்குள் சிவலிங்கமாக மாறினாராம்.
மன்னன் எய்த அம்பு லிங்கத்தின் மீதுபட்டு இரத்தம் கசிந்ததாகவும், பின்னர் மன்னன் தவறை உணர்ந்து மன்னிப்புப் கோரி இக்கோவிலைக் கட்டியதாகவும் வரலாறு கூறுகிறது. அபிஷேகத்தின் போது லிங்கத்தில் அம்பு பட்ட தழும்பு தெரியும் என்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.
இறைவன் மானாக (மான் + ஊர் = மானூர்) உருவெடுத்ததால் இப்பகுதி மானூர் எனப் பெயர் பெற்றது.
இறைவன், இறைவிக்கான பெயர் காரணம்
கைலாயத்தில் ஞானப்பழம் முருகனுக்கு கிடைக்காததால், கோபம் கொண்ட முருகன் பழனி மலைக்கு வந்து விடுகிறார். முருகனைத் தேடிக்கொண்டு சிவனும் சக்தியும் பூலோகத்தில் பழனி மலைக்கு அருகில் வந்து இறங்குகிறார்கள். அப்படி இறங்கிய இடத்தின் இயற்கை எழிலை கண்ட பரமேஸ்வரன் அங்கேயே வீற்றிருந்து அருள்பாலிக்க நினைத்துவிட்டார்.
ஆனால் உமையவளோ தன் மகன் முருகனை காண பழனிக்கே செல்ல அனுமதிக்கும்படி சிவனிடம் வேண்ட சிவனும் சம்மதிக்கிறார். பிரிய மனமில்லாமல் நாயகி விடைபெற்றதால் அன்னை பிரியா நாயகி என்று பெயர் பெற்றார்.
விடை கொடுக்க மனமில்லாமல் சிவன் விடை கொடுத்ததால், இறைவன் பிரியா விடையார் என்று அழைக்கப்பட்டார். இதுவே காலப்போக்கில் மருவி பெரியாவுடையார், பெரியநாயகி என்று ஆனது.
முகம் வெள்ளை நிறத்திலும், உடல் கருப்பு நிறத்திலும் காட்சியளிக்கும் அபூர்வ நடராஜர்
இக்கோவிலில் எழுந்தருளியுள்ள நடராஜர் மிகவும் சிறப்பு வாய்ந்தவராக விளங்குகின்றார். எப்படியென்றால், அவரது உடல் மட்டும் முழுக்க கருப்பு நிறத்திலும், முகம் மட்டும் வெள்ளை வண்ணத்திலும் கூடிய நிலையில் கல்லால் அமைந்திருக்கின்றது.
இப்படி இருவேறு வண்ண நிறத்தில் காட்சியளிக்கும் நடராஜர் சிலையை வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாது. இந்த நடராஜரின் அருகில் சிவகாமி அம்பாளும் கிடையாது. இவர் தனித்தே அருள்பாலிக்கிறார்.
பழனியில் இருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மானூர் பெரியாவுடையார் கோவில்.