
மானூர் பெரியாவுடையார் கோவில்
முகம் வெள்ளை நிறத்திலும், உடல் கருப்பு நிறத்திலும் காட்சியளிக்கும் அபூர்வ நடராஜர்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மானூர் கிராமம். இந்த கிராமத்தில் அமைந்துள்ளது பெரியாவுடையார் கோவில். 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது இந்த கோவில்.இத்தலத்து மூலவர் பெரியாவுடையாருக்கு பிரகதீஸ்வரர் என்ற திருநாமும் உண்டு. இறைவியின் திருநாமம் பெரியநாயகி. இத்தலத்து இறைவனை வழிபட்டால் ஏழு ஜன்மங்களின் பாவங்கள் கூட விலகும் என்பது ஐதீகம்.
கைலாயத்தில் ஞானப்பழம் முருகனுக்கு கிடைக்காததால், கோபம் கொண்ட முருகன் பழனி மலைக்கு வந்து விடுகிறார். முருகனைத் தேடிக்கொண்டு சிவனும் சக்தியும் பூலோகத்தில் பழனி மலைக்கு அருகில் வந்து இறங்குகிறார்கள். அப்படி இறங்கிய இடத்தின் இயற்கை எழிலை கண்ட பரமேஸ்வரன் அங்கேயே வீற்றிருந்து அருள்பாலிக்க நினைத்துவிட்டார். ஆனால் உமையவளோ தன் மகன் முருகனை காண பழனிக்கே செல்ல அனுமதிக்கும் படி சிவனிடம் வேண்ட சிவனும் சம்மதிக்கிறார். பிரிய மனமில்லாமல் நாயகி விடைபெற்றதால் அன்னை பிரியா நாயகி என்றும், விடை கொடுக்க மனமில்லாமல் சிவன் விடை கொடுத்ததால் பிரியா விடையார் என்றும் அழைக்கப்பட்டார்கள். இதுவே காலப்போக்கில் மருவி பெரியாவுடையார், பெரியநாயகி ஆனது.
இக்கோவிலில் எழுந்தருளியுள்ள நடராஜர் மிகவும் சிறப்பு வாய்ந்தவராக விளங்குகின்றார். எப்படியென்றால், அவரது உடல் மட்டும் முழுக்க கருப்பு நிறத்திலும், முகம் மட்டும் வெள்ளை வண்ணத்திலும் கூடிய நிலையில் கல்லால் அமைந்திருக்கின்றது. இப்படி இருவேறு வண்ண நிறத்தில் காட்சியளிக்கும் நடராஜர் சிலையை வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாது. இந்த நடராஜரின் அருகில் சிவகாமி அம்பாளும் கிடையாது. இவர் தனித்தே அருள்பாலிக்கிறார்.
அபூர்வ கருப்பு வெள்ளை நடராஜர்: திண்டுக்கல் அருகே உள்ள மானூர் பகுதியில் உள்ளது பெரியாவுடையார் திருக்கோயில். சுமார் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த ஆலயம் ஏழு ஜன்மங்களின் பாவங்களையும் கூட விலக்கும் தலமாக விளங்குவதாக பக்தர்கள் கூறுகின்றனர். இங்குள்ள இறைவன் பெரியாவுடையாரை, பிரகதீஸ்வரர் என்றும் அழைக்கிறார்கள். இங்குள்ள நடராஜ சுவாமியும் மிகவும் சிறப்பு வாய்ந்தவர். எப்படியெனில், உடல் முழுக்க கருப்பு வண்ணத்திலும், முகம் மட்டும் வெள்ளை வண்ணத்திலும் அமைந்த நிலையில் கல்லில் வடிக்கப்பட்டவர். நடராஜரின் அருகில் சிவகாமி அம்பாளும் கிடையாது. தனித்தே அருள்பாலிக்கிறார்.
பொதுவாக பிரதோஷ நாயனார் நான்கு கைகளுடன் நின்ற நிலையில் காணப்படுவார். ஆனால் இங்குள்ள பிரதோஷ நாயனார் தாண்டவ நிலையில், கையில் டமருகத்துடன் காணப்படுகிறார்.

சிதம்பரம் நடராஜர் கோவில்
நடராஜப் பெருமானின் குஞ்சிதபாதம்
தீராத வியாதிகளைத் தீர்க்கும் குஞ்சிதபாத தரிசனம்
சிதம்பரத்தில் நடராஜப் பெருமான், தனது இடது பாதத்தை வளைந்து தூக்கித் திருநடனம் ஆடும் கோலத்தில் நமக்கு காட்சி தருகிறார். நடராஜப் பெருமானின் தூக்கிய திருவடிக்கு குஞ்சிதபாதம் என்று பெயர்.
சிவபெருமான் தனது இடது பாகத்தை, தன் மனைவி பார்வதி தேவிக்கு கொடுத்து விட்டார். சிவபெருமானே, நடராஜர் என்னும் பெயரில் நடனம் ஆடுகிறார். அவர் நடனம் ஆடும் போது, மனைவிக்குரிய இடது பாதம், தரையில் பட்டால் அவளுக்கு வலிக்குமே என, இடது காலை உயர்த்திக் கொண்டார்.
எமதர்மராஜன், மார்க்கண்டேயனைத் துரத்திப் பாசக்கயிற்றை வீசிய போது மார்க்கண்டேயன், சிவலிங்கத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டான். அப்போது எமனின் பாசக்கயிறு சிவலிங்கத்தின் மேல் பட்டது. இதனால் சிவபெருமான் கோபம் அடைந்து, எமனை இடது காலால் எட்டி உதைத்தார். தாயும்-தந்தையுமான சிவ-சக்தியை மார்க்கண்டேயன் சரண் அடைந்ததால் சிவபெருமான், சக்தி தேவியின் அம்சமான தனது இடது பாகத்தில் உள்ள பாதத்தால் எமனை எட்டி உதைத்தார். அந்த இடது கால் சக்தி தேவியின் அம்சம் என்கிறது புராணம்.
அதனால் நடராஜப் பெருமானைத் தரிசிக்கும் போது கண்டிப்பாக அவரது இடது காலைத் தரிசிக்க வேண்டும். நடராஜப் பெருமானின் குஞ்சிதபாதத்தை தரிசனம் செய்தால், தீராத வியாதியும் நீங்கும். செய்வினை பாதிப்பு, சனீஸ்வரால் ஏற்படும் தொல்லை மற்றும் பொதுவாக ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள் நீங்கும். மோட்சம் கிடைக்கும். உடல் வலிமை பெறும் என்கிறது சாஸ்திரம்.
குஞ்சிதபாதம் என்பதற்கு மற்றொரு பொருளும் உண்டு. மூலிகை வேர்களால் செய்யப்பட்ட ஒரு மாலை நடராஜரின் தூக்கிய பாதத்திற்கு அணிவிக்கப்படும்போது, அந்த மாலைக்கு 'குஞ்சிதபாதம்' என்று பெயர். மேலும், இந்த மாலையை நடராஜரின் பாதங்களில் அணிவிப்பது ஒரு சிறப்பு பூஜையாக கருதப்படுகிறது.

செப்பறை அழகிய கூத்தர் கோவில்
உலகில் முதல் முதலில் செய்யப்பட்ட நடராஜர் சிலை
சிதம்பரத்திற்கு அடுத்து நடராஜ பெருமான் தேரோட்டம் நடைபெறும் ஒரே தலம்
திருநெல்வேலி மாநகரிலிருந்து 33 கி.மீ. தொலைவில் (ராஜவல்லிபுரம் கிராமம் வழியாக) அமைந்துள்ளது செப்பறை அழகிய கூத்தர் கோவில். மூலவர் திருநாமம் நெல்லையப்பர். இறைவியின் திருநாமம் காந்திமதி. உற்சவர் அழகிய கூத்தர் (நடராஜர்).
.சிதம்பரத்தை ஆட்சி செய்த சிங்கவர்மன் என்னும் மன்னன், நமச்சிவாயமூர்த்தி என்ற சிற்பியைக் கொண்டு நடராஜர் சிலையை உருவாக்க ஆணையிட்டான். அதன்படி சிற்பியும் மிக நேர்த்தியாக நடராஜர் சிலையை செய்துமுடித்தார். அந்த நடராஜர் சிலை தாமிரத்தால் செய்யப்பட்டு பிரமிக்கவைக்கும் அழகில் தோன்றினாலும், அதற்கு பதிலாக தங்கத்தினால் சிலையைச் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் எனக் கருதி தங்கத்தால் மற்றொரு நடராஜர் சிலையைச் செய்ய ஆணையிட்டான். சிற்பி அதனையும் சிறப்பாக செய்து முடித்தார். ஆனால் மன்னன் வந்து காணும்போது அந்த தங்க நடராஜர் சிலை மீண்டும் தாமிரச் சிலையாகவே மாறி காட்சியளித்தது. இதனால் வருந்திய மன்னரின் கனவில் தோன்றிய சிவபெருமான், நான் உன் கண்களுக்கு மட்டுமே தங்கமாகத் தெரிவேன். பிறர் கண்ளுக்குத் தாமிரமாகவே தெரிவேன் என்று கூறியருளினார். இதனால், மகிழ்ந்த மன்னர் அந்த இரண்டாவதாக செய்யப்பட்ட நடராஜரையே சிதம்பரத்தில் நிறுவினான்.
முதலில் செய்யப்பட்ட தாமிரச்சிலையை வைத்திருந்த சிற்பியின் கனவில் தோன்றிய சிவபெருமான் அந்தச் சிலையை எடுத்துக்கொண்டு தென்னாட்டுக்குச் செல்லுமாறு அவனுக்கு ஆணையிட்டார். அதன்படி அவன் கொண்டுவந்த முதல் தாமிர நடராஜர் சிலையே பின்னர் இங்கு செப்பறையில் அழகிய கூத்தராக அமர்ந்தார்.
கோவில் அமையப்பெற்றுள்ள இப்பகுதியை மணப்படைவீடு என்னும் நகரை தலைநகராகக் கொண்டு ராமபாண்டியன் என்னும் மன்னனர் ஆட்சி செய்து வந்தார். ராமபாண்டிய மன்னர் திருநெல்வேலியில் உறையும் சுவாமி நெல்லையப்பர் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தார். அதன் காரணமாக தினமும் திருநெல்வேலி சென்று சுவாமி நெல்லையப்பரை தரிசித்த பிறகே உணவருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருமுறை தாமிரபரணியில் பெரும் வெள்ளம் வந்துவிட்டதனால் அவரால் ஆற்றைக் கடந்து திருநெல்வேலிக்கு செல்லமுடியவில்லை. அன்று முழுவதும் ராமபாண்டியன் மனம்வருந்தி உணவருந்தாமலே இருந்தார். அன்று இரவில் மன்னரின் கனவில் சுவாமி நெல்லையப்பர் தோன்றி,'இனிமேல் உன் மாளிகைக்கு அருகிலேயே நான் கோவில் கொள்ள முடிவு செய்துள்ளேன் என கூறியதுடன், சிதம்பரத்திலிருந்து சிற்பி ஒருவன் தனது நடனம் புரியும் வடிவமுடைய விக்ரகத்துடன் வருவான். அந்த விக்ரகத்தை உன் மாளிகையின் அருகில் பிரதிஷ்டை செய்து கோவில் கட்டு. கோவில் கட்டுமிடத்தின் அருகே குழிக்குள் எறும்புகள் ஊர்ந்துசெல்லும். அந்த இடத்தில் லிங்கம் ஒன்றையும் பிரதிஷ்டை செய்துவிடு, என திருவாய் மலர்ந்தருளினார்.
அதன்படியே, சிற்பி ஒருவர் வடதிசையிலிருந்து நடராஜரின் விக்ரகம் ஒன்றை சுமந்து வந்தார். வழியில் ஓரிடத்தில் சிலை மிகவும் கனத்தது. அதற்கு மேல் அவரால் சிலையை சுமக்க முடியவில்லை. எனவே சற்று நேரம் இளைப்பாறும் பொருட்டு, அச்சிலையை அவர் ஒரு இடத்தில் இறக்கி வைத்துவிட்டு, களைப்பினால் தூங்கி விட்டார். கண்விழித்து பார்த்தபோது சிலையை காணவில்லை. அவர் பதைபதைத்து மன்னனிடம் முறையிட்டார். ராமபாண்டியன் அதிர்ச்சியடைந்து சிலையை தேடிச்சென்றார். அப்பொழுது ஓரிடத்தில் (தற்பொழுது கோவில் அமையபெற்றுள்ள இடத்தில்) சலங்கை ஒலியும், யாரோ நடனமாடும் சப்தமும் கேட்டது. அந்த இடத்தில் மன்னர் சென்று பார்த்தபோது, நடராஜரின் சிலை இருப்பதனையும், . அதன் பக்கத்திலேயே ஒரு குழியில் எறும்புகள் ஊர்ந்து சென்று கொண்டிருப்பதையும் கண்டார். உடனே ராமபாண்டியன் மகிழ்வடைந்து லிங்கம் ஒன்றை எறும்புகள் ஊர்ந்த குழியின் மீது, சுவாமி உத்தரவிட்டபடியே பிரதிஷ்டை செய்தார். நடராஜருக்கும் செப்பு தகடுகளால் வேயப்பட்ட நடன சபை ஒன்றை உருவாக்கி தனி சன்னதி அமைத்தார். இவர் நெல்லையப்பரின் மீது கொண்டிருந்த பக்தியால் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கத்திற்கு ஸ்ரீ நெல்லையப்பர் என்றும், அம்மைக்கு ஸ்ரீ காந்திமதி என்றும் திருநெல்வேலி திருக்கோவிலின் பெயரையே சூட்டிமகிழ்ந்தார்.
செப்பு தகடுகளால் வேயப்பட்ட தாமிரசபைக்குள் சிவகாமி அம்மை உடனாய அழகியகூத்தர் எழுந்தருளியுள்ளார். இங்குள்ள அழகியகூத்தப்பெருமானுக்கு,. நடைபெறும் ஆனி உத்திரம் மற்றும் மார்கழி திருவாதிரை அபிஷேகத்திற்கு வருடந்தோறும் பழனியில் இருந்து பஞ்சாமிர்தம் வரவழைக்கப்படுகிறது. மார்கழி மாதம் திருவாதிரைக்கு முதல் நாள் நடராஜ பெருமான் திருத்தேரில் உலா வருவார். சிதம்பரம் தலத்திற்கு அடுத்தபடியாக இங்கு தான் நடராஜ பெருமானுக்கு என தனித்தேர் உள்ளது என்பது தனிச்சிறப்பாகும்.

திருச்சுழி திருமேனிநாதர் கோவில்
பச்சிலை மூலிகையால் உருவாக்கப்பட்ட அபூர்வ நடராஜர்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை என்ற ஊரிலிருந்து, 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருச்சுழி. பாண்டிய நாட்டில் உள்ள 14 தேவார தலங்களில் இத்தலமும் ஒன்று. இறைவன் திருநாமம் திருமேனிநாதர். இறைவியின் திருநாமம் துணைமாலையம்மை. இத்தலத்தில் பிரளய வெள்ளம் ஏற்பட்டபோது, ஒரு அம்பினால் சுழித்து அந்த வெள்ளத்தை பாதாளத்திற்குள் செலுத்தியதால், இந்த ஊர் 'திருச்சுழியல்' என்று அழைக்கப்பட்டது. ரமண மகிரிஷி பிறந்த இடம் இது.
இந்தத் தலத்தில் உள்ள நடராஜரின் திருமேனி கொள்ளை அழகுடன் திகழ்கின்றது. மிக மிக தத்ரூபமாக வடிக்கப்பட்ட இந்த நடராஜரின் விக்கிரகம் பச்சிலை மூலிகையால் உருவாக்கப்பட்டது என்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு. இப்படிப்பட்ட பச்சிலை மூலிகையால் உருவான நடராஜரை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்
கால் மாற்றி ஆடும் நடராஜப் பெருமான்
நடராஜப் பெருமான் பொதுவாக தன் வலது காலை முயலகன் மீது ஊன்றி இடது காலைத் தூக்கி ஆடும் கோலத்தில் தான் எல்லா சிவாலயங்களிலும் காட்சி தருவார்.ஆனால் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், ஒரு பாண்டிய மன்னன் ஒரே காலில் நிற்பது நடராஜப் பெருமானுக்கு வலிக்குமே என்று ஆதங்கப் பட்டதால்,தன் இடது காலை முயலகன் மீது ஊன்றி வலது காலைத் தூக்கி ஆடும் கோலத்தில், வெள்ளியம்பலத்தில் காட்சி தருகிறார்.